Wednesday, 31 December 2025

நல் வழி - 15

 பாடல்:15

********************

சிவாய நமஎன்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்.

***************************

மனிதர்களே .

உங்களுடைய முன் வினையை நீங்கள் அறிய முடியாது. அதுவே உங்களை விரட்டுகிறது. இந்நிலையில் சிவனின் நாமம் ( ஐந்தெழுத்தாகிய) “சிவாயநம” என்பதை அகத்தில் சிந்திக்க   செய்ய வேண்டிய செயலை செய்துகொண்டே நினைத்துக்கொண்டே இருப்பதனால் முன்வினையின் துன்பம் ஒரு நாளும் உங்களுக்கு இல்லையாகும். இது ஒரு உபாயம். வழி. தந்திரம். அதுவே அறிவுமாகும்.

அப்படி இல்லையென்றால் முன்வினையின் வழியே ( விதியே) உங்கள் மதியாகிவிடும். 

சிறுவயதில் இருள்பயம் அச்சம் காரணமாக மகாத்மா காந்தியடிகள் பயந்தபோது அவரை அழைத்துச் செல்லும் பணிப்பெண், “ராம ராம” என்று சொல்லச் சொன்னதாக சத்திய சோதனை நூலில் எழுதியுள்ளார்.

கடைசி மூச்சுவரை “ஹேராம்” வரையில் அவரது வாழ்வை அந்நாமம் காப்பாற்றியது.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை , சிவாயநம எனும் ஐந்தெழுத்தின் மகிமை  எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.

**


Tuesday, 30 December 2025

நல் வழி - 14

 பாடல்:14   

**********************

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்

இச்சைபல சொல்லி இடித்து உண்கை - சிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர் விடுகை சால உறும்.


மனிதர்களே

பிச்சை எடுக்கும் வாழ்க்கை நிலையில்  ஒருவன் என்ன செய்கிறான்? பிச்சையெடுப்பதில் “மூத்த” நீண்ட நிலையை அடைகிறான். அதனை குடி வாழ்க்கை என்றும் சொல்கிறான். 

“பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை”யில் அவன் ஆற்றும் காரியம் என்ன? பிறர் இச்சை கொள்ளும்படி ( விரும்பும்) பல வார்த்தைகளைப் பேசுகிறான். வற்புறுத்தி ( இடித்து) வயிறு வளர்க்கிறான். உணவு உண்கிறான். 

சீச்சீ! என்ன ஒரு மோசமான நிலை! இப்படி வயிறு வளர்ப்பதற்கு பதிலாக மானம் அழியாமல்( பெருமை குறையாமல்) உயிரை விட்டு விடுதல் சிறந்தது என ஒளவை நான் கூறுவேன்.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை , மானம் மிகு வாழ்வின் நிலை பற்றிய அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.


*********


நல் வழி - 13

 பாடல்:13

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்

சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல்

ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்

மெய் அம் புவியதன்மேல்.


மனிதர்களே.

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் அழகிய உண்மையான இந்த உலகில் ( அம்:- அழகிய)நன்றாக வாழ்பவரை யாரால் அழிக்க முடியும்? யாராலும் முடியாது. அவர் கெடுப்பார், இவர் கெடுக்கிறார், இவர் என் முதுகு பின்னே பொறாமைப்பட்டு பின்னுக்கு இழுக்கிறார் என்பதெல்லாம் உங்களை ஒன்றும் செய்ய முடியாது என அறியுங்கள். இன்றைய தேதியில் நீங்கள் நன்றாக நிச்சயம் வாழ நீங்களே காரணம்.

இன்னொன்று சொல்கிறேன். நன்றாக வாழ்வாரை எப்படித் தடுக்க முடியாதோ அதுபோல் ; சாகவேண்டியவரை யாரால் தவிர்க்க முடியும்? யாராலும் முடியாது. அவரது விதி நாட்கள் தாண்டி அவரை வாழ வைக்க எந்த மருத்துவராலும் இயலாது.

மூன்றாவதாக ஒன்று சொல்கிறேன். எப்போதும் பிச்சை எடுத்தே வாழ வேண்டிய விதி இருந்தால் யாரால் விலக்க முடியும்? அதுவும் இயலாது.

அழகிய பூமி இது. உண்மையான உலகம் இது.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வின் நிலை பற்றிய அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.

***

நல் வழி *** பாடல்:12

 நல் வழி

*****************

பாடல்:12

*******************

ஆற்றங் கரையின் மரமும் அர(சு) அறிய

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு.


மனிதர்களே

வாழ்வுக்காக இருத்தலுக்காக மனித சமூகம் எவ்வளவோ தொழில்களை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தொழில் உயர்வு என்று உயர்வு சொன்னவர்கள் சிறிது காலத்தில் அதுவே தாழ்வு என்பார்கள். ஐ.டி. தொழில் உயர்வு என்பதற்கு முன்பு கம்ப்யூட்டர் என் ஜினியரிங் தொழில் நுட்பம் போற்றப்பட்டது. அதற்கும்முன் சிவில் தொழில்நுட்பம் போற்றப்பட்டது. உண்மை எது? அதனை நான் சொல்லுகிறேன். 

ஆற்றங்கரையில் வாழ்ந்த பெரிய மரம் விழுந்து இறப்பதைக் கண்டீர்கள். அரசனே பாராட்டும் அளவுக்கு பெருமையோடு வாழ்ந்த வாழ்வு கொண்ட ஒருவனும் வீழ்வதை அறிவீர்கள். மற்ற மற்ற தொழில்களில் பணிகளில் பழுது வரும் . தாழ்வு வரும். அல்லது ஒரேயடியாக அழிவு வரும். 

அழியாத தொழில் ; ஏற்றம் மட்டுமே கொண்ட தொழில் உழுது வாழும் விவசாயம் ஒன்றுதான். அதற்கு ஒப்பான சமமான மற்ற தொழில் இல்லை. 

உழுது சாப்பிட்டு வாழ்பவனே உரிமையோடு வாழ்பவன். மற்றவர்கள் உணவுக்காகப் பிறரைத் தொழுது சாப்பிடுகிறார்கள். அவர்கள் பின்பு செல்கிறார்கள்.

 குறள்: 1033/ உழவு 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ; மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர்.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் தொழில் பற்றிய அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.

**



Monday, 29 December 2025

நல் வழி - 11

 ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்

என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது.


மனிதர்களே.

உலகில் கண் இல்லாத மனிதர்களைப் பார்க்க முடியும். செவிகள் இல்லாத மனிதர்கள் இருப்பார்கள். மூக்கு, வாய், கைகள், கால்கள் இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயிறு இல்லாத மனிதர்கள் உலகில் இருப்பதே இல்லை. 

இடும்பை ( துன்பம்) கூர் ( மிகுந்த) என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது. காலம் தள்ளுவதே கஷ்டமாயிருக்கிறது. 

வயிறே உன்னிடம் என்ன கேட்டேன்? ஒரு நாள் சாப்பாட்டை ஒழி ( விட்டுவிடு) என்றேன். நீ கேட்கவில்லை. பசிக்கிறது என்கிறாய். 

சரி. 

இரண்டு நாட்களுக்கு சேர்த்து உணவு ஏற்றுக்கொள் ( ஏலாய்) என்றேன். அதையும் கேட்க மறுக்கிறாய்.

ஒரு ஒரு நாளாக ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு வேளையாக உனக்கு உணவு செலுத்த வேண்டி யிருக்கிறது.

வயிறே ! ஒரு நாளும் நீ என் நோவு அறியாய். பசியினால் நான் அடையும் கஷ்டம் ( நோவு) நீ அறிந்து கொள்ளாத ஒன்று.

உணவு கொடுத்தும் திருப்தி இல்லை. உணவு கொடுக்காவிடினும் திருப்தி இல்லை. எப்படிப்பட்ட இம்சை!

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் வயிறு பற்றிய அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.


**


Thursday, 25 December 2025

நல்வழி ( 1 - 10)

 நல்வழி


கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும்பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா.


அழகிய ஆனை முகம் கொண்ட பெருமானே. தூய மாணிக்க மணி போன்றவனே.ஆனைமுகப் பெருமானே எனக்கு இயல் தமிழைக் கொடு. இசைத்தமிழைக் கொடு. நாடகத்தமிழைக் கொடு.  நான் உனக்கு பாலும், தெளிந்த தேனும், வெல்லப்பாகும் , பருப்பும் கலந்து உனக்கு நான் படைக்கிறேன். 

தன்னிடம் இருக்கும் தமிழைத் தருவதற்குக் காத்திருக்கும் விநாயகப் பெருமானை ஒளவை வழிபட்ட நல் வழியின் முதல் பாடலால், நாமும் தினமும் பிள்ளையாரை வழிபடுவது நம் கடமை ஆகும்.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நம் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம் .


*********************************************************************************************************************************************




பாடல்:1


புண்ணியம் ஆம் பாவம்போம் போனநாள் செய்த அவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்- எண்ணுங்கால்

ஈதுஒழிய வேறுஇல்லை எச்சமயத்தார் சொல்லும்

தீது ஒழிய நன்மை செயல்.


மனிதர்களே!

நன்மையா?( புண்ணியம்) உடனே ஓடிப் போய் செய்யுங்கள். நல்ல வார்த்தையா? உடனே பேசுங்கள். ஆம். அதுவே செய்ய வேண்டியது. பாவமா? பாவமான செயலா? எண்ணமா? வார்த்தையா?போம்! என்று விரட்டுங்கள். அவை போக வேண்டியன. விலக்க வேண்டியன. 

மண்ணில் ( இந்த உலகில்) பிறந்தவருக்கு வைத்த பொருள் ( தேடி வைத்த பொருள்) என்ன தெரியுமா? போன நாள் ( போன பிறவியில் ) செய்த புண்ணிய பாவங்கள் மட்டுமே.புண்ணியமோ பாவமோ அவை நம் கணக்கில் உள்ளன. அவையே நம்மை இயக்குகின்றன.

ஆராய்ந்து பார்த்தால் ( எண்ணுங்கால்) இதைதவிர வேறொன்றுமில்லை. 

எந்த சமயத்தைச் சேர்ந்தவரும் அறிவுறுத்துவது ஒன்றேதான். 

அது என்ன? தீமை ஒழிய வேண்டுமானால் நன்மை செய்யுங்கள் என்பதே.

ஆம். தீமை நம்மைவிட்டு தானே விலகுவதில்லை. நன்மை செய்தால்தான் விலகும்.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நம் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம்.



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>***


பாடல் :2


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.


மனிதர்களே! நீதியின் (அறம்)  விதிகளை ஆராய்ந்து பார்த்தால் என்ன தெரிகிறது? நிச்சயம் ஒன்று தெரிய வரும்.

அது என்னவென சொல்லப் போனால், ( சாற்றுங்கால்: சொல்லப் போனால்)   இவ்வுலகில் இரண்டு சாதிகள் மட்டுமே இருக்கின்றன என்பது தெரிய வரும். வேறு எதுவும் இல்லை. 

ஆச்சரியப்படுகிறீர்களா? எத்தனை கோடி சாதிகள் பிரிவுகள் இருந்தால் என்ன? எல்லோரையும் உலக மக்கள் பிரிவினர் அனைவரையும் இரண்டே பிரிவில் அடங்கிவிடுவர்.

ஆம். அந்த இரண்டி சாதி இவைதான்:- உயர்ந்த சாதி ; தாழ்ந்த சாதி 

உய்ர்ந்த சாதிக்காரர்கள் யார்? எளியவருக்கு கொடுத்து உதவுவோர்  உயர்ந்த சாதி. எளியவருக்கு எதுவும் கொடுக்காதவர் தாழ்ந்த சாதி. இதுவே உண்மையும் ஆகும்.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நம் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம்.



*************************************************************************************************************************************


பாடல்: 3


இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இது அன்றே

இடும்பொய்யை மெய்யென்று இராதே - இடுங்கடுக 

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலி நோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

மனிதர்களே!

உடம்பு பற்றி என்னென்னவோ நினைக்கிறீர்கள். நிரந்தரம் என்று நினைத்துள்ளீர்கள். உணவு, ஆடை, அணிகலன் என எப்போதும்  உடம்பையே நினைத்துள்ளீர்கள்.

நான் சொல்கிறேன் கேளுங்கள். உடம்பு என்பது பை.

துன்பங்களை எல்லாம் போட்டு வைக்கும் பையாகும். Carry Bag. இந்தப்பையை இடும்பை என அழைப்பீர்களாக.

ஆம். இடும்பை என்றால் துன்பம். துன்பத்தை இடும் - பை -தான் இந்த உடம்பு என அறிந்துகொள்ளுங்கள்.

 உணவை இட்டு வைக்கும் இந்த பொய்யான உடம்பை உண்மை என்று ( மெய் என்று) நினைக்காதீர்கள்.

எளியவருக்கு கொடுத்து உதவும் குணம் உங்களிடம் உண்டானால், முன்வினை ( ஊழில்) முற்பிறப்பு பாவங்கள் தரும் தீமைகள் எல்லாம் விலகிவிடும்.

முற்பிறப்பு வினை நீங்கிய நிலையில் விடுபடும் அவரை ( விண்டாரை) மோட்ச வீடு ( முக்தி) வரவேற்கும்.

ஆகவே முக்தி பெறுவதற்கு வழி என்னவெனில் ஏதுமற்ற எளியோருக்கு உதவுதலே ஆகும்.

துன்பத்தை இட்டு வைக்கும் இந்த Carry Bag மூலமாக வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்து மோட்சம் ஆகிய ஈசன் திருவடிப் பேறு பெறலாமே. வீசி எறியப்பட்ப் போகும் இந்தத் துன்பப் பையினால் அடையும் பயன் இல்லாதொருக்கு உதவுதல் ஒன்றே.

  ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நம் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம்.


***************************************************************************************************************************************************************



பாடல்:4

எண்ணி ஒருகருமம் யார்க்கும் செய்யொண்ணாது

புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணில்லான்

மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே

ஆங்காலம் ஆகும் அவர்க்கு.


மனிதர்களே!

நீங்கள் நினைக்கிறீர்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து நீங்களே முடித்துவிட்டதாக. அது நடக்காதபோது மனதால் துடிக்கிறீர்கள். என்ன முயற்சி செய்தும் நடக்கவில்லையே என்று. 

சில காலம் செல்கின்றது. அப்போது நீங்கள் நினைத்த காரியம் நடக்கின்றது. அப்போது ஆச்சர்யம் அடைகின்றீர்கள். நான் முயற்சி செய்தேன் அதன் பலன் இப்போது கிடைத்தது என்று சொல்வீர்கள்.மகிழ்வீர்கள். உண்மையில் நடந்தது என்ன? 

உண்மையில் அந்த காரியம் ஈடேற ( நடந்திட) ஊழ்வினைப் புண்ணியம் இருந்தால் அது நடக்கிறது. நிறைவேறுகிறது. 

அவ்வாறு இல்லையெனில், கண்பார்வை இல்லாதவன் மாங்காயைப் பறிக்க தன் ஊன்றுகோலை எறிந்தது போல முயற்சிகள் வீணாகப் போகின்றது. அதுவரையில் அந்த முயற்சிகள் வீணாகி நிறைவேறாமல் போகும். புண்ணிய பலம் கூடி, கை கூட வேண்டிய நேரத்தில் தான் அந்த செயல் கைகூடும். 

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நல் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம்.

**************************************************************************************************************************************************

 

பாடல்: 5


வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.


மனிதர்களே!

உங்கள் வருத்தம் எப்போதும் உங்களைத் துரத்துகிறது. நிறைவேறாத ஆசைகள் இன்று வருத்த முடிச்சுகளாய் உள்ளன. அவை எது சார்ந்தவையாக இருந்தாலும் சரி.

அதிலிருந்து தப்பிக்க மூச்சு இரைக்க இரைக்க ஓடுகிறீர்கள். வருத்தம் தவிர்க்க வேண்டும், துன்பம் தவிர்க்க வேண்டும் என்று முயற்சி செய்த படியே இருக்கிறீர்கள். அது உங்கள் மன வீட்டின் வாசல்படியிலேயே விரட்டி அடித்தும் பழகிய நாய்க்குட்டி போல வாலைக் குழைத்து உட்கார்ந்திருக்கிறது. 

மீண்டும் வருத்தம், ஓர் அடர்ந்த புகையாக உங்களை சட்டெனக் கவ்விக் கொள்கிறது.

நான் நடக்க வேண்டும் என்று விரும்பிய விஷயங்கள் வருத்தப்பட்டும் நடக்கவில்லையே வருந்தி வருந்தி அழைத்தேனே அவை நடக்கவில்லையே என்று  நினைக்கிறீர்கள். நடக்காத அந்த விஷயங்களைப் போங்கள் போய்விடுங்கள் என்கிறீர்கள். அவை போவதில்லை.

வரகூடாதது வரப் போவதில்லை. வந்து சேர்வதை நிறுத்த முடிவதில்லை என்ற உண்மையை அறிய மறுக்கிறீர்கள். 

இருக்கும் வருத்த எண்ணங்களால் நெஞ்சம் நீள நீள அப்படி இருந்தேனே இப்படி இருந்தேனே என நெடுந்தூரம் நினைத்துப் புண் ஆகிறீர்கள். புண்பட்ட நெஞ்சோடு இருந்து ஒரு நாள் இறந்தும் போகிறீர்கள். இதைச் செய்யாத மனிதன் ஒருவரும் இல்லை.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் எச்சரிக்கை மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.


**************************************************************************************************************************************************************


பாடல் : 6


உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர்சுகம்

கொள்ளக் கிடையா(து) குவலயத்தில் - வெள்ளக்

கடலோடி மீண்டு கரையேறினால் என்(ன)

உடலோடு வாழும் உயிர்க்கு.


மனிதர்களே!

அவன் அப்படி ஓஹோ என இருக்கிறானே இவன் இப்படி நாலு பேர் போற்ற  பணம் புகழ் சுற்றம் பதவி சுற்றுலா ப்ரமோஷன் வீடு ப்ளாட் என்று சந்தோஷமாய் இருக்கிறானே; அவன் அந்தப்பெண்ணை நினைத்ததுபோல் திருமணம் செய்து கொண்டானே; அவன் நினைத்தபடி அந்த வேலைக்கே போய்விட்டானே என மற்றவர்கள் அதிக சுகத்தில் இருப்பதாகவும் அதிக புகழுடன் இருப்பதாகவும் நினைக்கிறீர்கள். 

ஏற்கெனவே உள்ள சுகத்தைத் தவிர ஒரு மனிதருக்கு இன்னொருவர் சுகமும் கூடுதலாகச் சேர்த்து யாருக்கும் கிடைப்பதில்லை என்பதைத் தெளிவாக மறக்காமல் அறிந்து கொள்ளுங்கள். 

வெள்ள நீர் நிரம்பியுள்ள கடலின் வழியே பயணம் சென்றாலும் கரையில் உள்ள தம் ஊருக்கே மீண்டும் அடைந்த போது, சென்ற நெடும் பயணத்தால் பயன் என்பது என்ன? நீங்கள் சொல்லுங்கள். ஒன்றுமில்லை அல்லவா? 

அதுபோல் இந்தக் குவலயத்தில் ( உலகில்) உடலுடன் கூடி வாழும் மனித உயிருக்கு, வெளி இன்பங்களால் ஒரு பயனுமில்லை.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் எச்சரிக்கை மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.


****************************************************************************************************************************************************************************

பாடல்:7


எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்

அறிந்திருப்பார் ஆதலின் ஆம்;கமல நீர்போல்

பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.


மனிதர்களே! 

நீங்கள் உங்கள் உடம்பைப் பற்றி பேசாத நாள் கிடையாது. பராமரிக்க செய்து கொண்டே இருக்கும் முயற்சிகளோ தீராது. இது போதாதென்று இந்த உடம்பையே “நான்” என்று நினைக்கவும் ஆரம்பித்துவிட்டீர்கள். 

உங்கள் உடம்பு; என் உடம்பு; பெண் உடம்பு; ஆண் உடம்பு ;மிருக உடம்பு என அத்தனை உடம்புகளையும் எல்லா வகையாலும் நினைத்துப் பாருங்கள். 

எந்தப் பட்டினால் என்ன உடை உடுத்தினாலும்; குளிருக்கும் வெல்லிலுக்கும் காப்பாற்றினாலும் ; என்ன சத்தான  உணவு போஷாக்கு அளித்தாலும்;  இந்த உடம்பு கொடிய புழுக்கள் மலிந்த நோய்களுக்கு இடமான தாழ்ந்த குடிசை போன்றது என்பதை மறுக்க முடியுமா? 

நான் சொல்கிறேன் இவ்வுடம்பு என்பது :  “பொல்லாப் புழுமலி நோய் புன் குரம்பை”

குரம்பை என்பது குடிசை எனப் பொருள் படும். 

ஆகவே இதனைப் புரிந்த நல்லோர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தாமரை இலையின் தண்ணீர் போல் உடல் மீது பற்றில்லாமல் வழ்வார்கள். பிறரிடம் உடம்பு பற்றி பெருமையாகப் பேசவும் மாட்டார்கள்.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் எச்சரிக்கை மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.



*****************************************************************************************************************************************************

பாடல்:8


ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்

கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்

மரியாதை காணூம் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்.


மனிதர்களே!

பணம் தேடுவதற்காக உங்கள் முயற்சிகள் பலவாக உள்ளது. சரியாக சாப்பிடாமல் தூங்காமல் ஓயாமல் பணம் பணம் என்று அலைந்து தேடுகிறீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு எண்ணிக்கையே வைக்க முடியாத அளவுக்கு காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை பணம் தேடுகிறீர்கள். சிலர் உறக்கத்திலும் பணம் தேடுகிறார்கள்.

உங்கள் ஒளவை நான் ஒன்று சொல்கிறேன். முன் செய்த வினை ( ஊழ்வினை) என்ற ஒன்றை மறக்காதீர்கள். அந்த வினையின்படியே உங்களுக்கு செல்வம் சேரும். அது இல்லையென்றால் பணம் சேராது.

உலகத்தவரே! நீங்கள் தேட வேண்டியது மரியாதை என்ற ஒன்றே ஆகும்

“தேட்டம் மரியாதை காணும்”

நன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள் நீங்கள் பாய்ந்து பாய்ந்து தேடிய பணம் நிற்கப் போவதில்லை. நிலையில்லாத செல்வம் உங்களுடன் வரப்போவதில்லை. ஆதலால் நிலைத்த மரியாதை ஒன்றையே தேடுங்கள்.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் எச்சரிக்கை மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.


******************************************************************************************************************************************************


பாடல்:9

ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு

ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லையென மாட்டார் இசைந்து.

மனிதர்களே.

நதியை கவனியுங்கள். அந்த நதி என்ன செய்தது? தனது வாழ்நாளெல்லாம் மக்கள், கால் நடைகள் குளிக்க வாழ என பல முனை உதவிகளைச் செய்து வந்தது. 

கால மாற்றத்தால் கொடிய கோடை வந்தது. நீரில்லை. சுடுகின்றது மணல் உங்கள் காலடிகளை. நீர் கிடைக்காது என்று ஏமாற்றத்துடன் திரும்பிப் போக நினைத்தீர்கள்.

“இங்கே வாருங்கள் என்னை நோண்டுங்கள் தோண்டுங்கள் நீர் வாரிப் பருகுங்கள்” என்று அந்த நதி உங்களுக்கு நீர் தருகிறது அல்லவா?

நல்ல குடியில் சிறந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை எய்தினாலும் இல்லை என்று சொல்ல அவர்களுக்கு மனம் வருவதில்லை. வராது. 

தன்னால் இயன்ற உதவியை, தாங்கள் இருக்கும் வரை செய்வார்கள், அந்த நதியின் ஊற்று நீர் போல.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் உணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.

*** *******************************************************************************************************************************************************************

பாடல்:10

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா

நமக்கு அது வழியே நாம்போம் அளவும்

எமக்கென்னென்று இட்டு உண்டு இரும்.


மனிதர்களே.

நீங்கள் இந்த மிகப்பெரிய ( மா) நிலத்தில் பிறந்த ஆறறிவு மக்கள். உங்கள் தாயோ தந்தையோ நண்பரோ சுற்றமோ குழந்தையோ உங்களைவிட்டு இறந்து போகிறார்கள்.அழுகிறீர்கள். ஒரு நாள் , இரண்டு நாள், ஒரு வாரம், பல வாரம், கடைசியில் அந்த ஆண்டே முடிந்து விடுகிறது. அழுதுகொண்டே இருக்கிறார்.அவர் கண்கள் வறண்டன.

அவரிடம் ஒளவையாகிய நான் போனேன்.

இந்த வருஷம் மட்டுமல்ல அடுத்த வருஷமும் அழுதாலும் அல்லது இன்னும் பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர்கள் திரும்பவும் வரப் போவது இல்லை. அப்படி இருக்க ஏன் அழுகை? எதற்கு அழுகை? 

நமக்கும் அதுதான் வழி. நாமும் அவர்கள் சென்ற இடத்திற்கு போகும் வரையிலும்நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது என இருந்துவிடாதீர்கள். ஒன்றுமில்லை என விரக்தி அடையாமல் வாழுகின்ற உங்கள் காலத்தில் பிச்சையிடுங்கள். தருமம் செய்யுங்கள். பிறகு உண்ணுங்கள்.

தருமம் செய்த  பின் உண்டு மகிழ்ச்சியாக இருங்கள். 

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.

*******************************************************************************************************************************************************************************



நான் ஒளவை பேசுகிறேன் தொடர் முடிவு

 நான் ஒளவை பேசுகிறேன் தொடர் முடிவு

**************************************************

பாடல்:26

**************


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையோன் - மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

*****

மனிதர்களே!

நாடு பெரிது. உண்மைதான். 

நாடாளும் மன்னன் பெரியவன். உண்மைதான். 

அதிகாரம் உண்டு. ஆள்படை உண்டு. சட்டம் இயற்ற முடியும்.  

ஆயிரக்கணக்கான மக்கள் மன்னனை ,மதித்து வணங்குவர். இதனால் அந்த மன்னன் மாசில்லாமல் ( குற்றமில்லாமல்) கற்றவனை விட சிறப்புடையவன் என்று சொல்ல முடியுமா? முடியாது. 

மாசில்லாமல் கற்றவனே மன்னவனை விட சிறந்தவன். ஏன்? 

மன்னனுக்கு அவன் ஆளும் தேசம் மட்டுமே மதிப்பு தரும். 

கற்றவனுக்கோ செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



************************************************************************************************ ************************************************************************************


பாடல்: 27


கல்லா மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்

அல்லாத மாந்தர்க்கு அறம்கூற்றம் - மெல்லிய

வாழைக்குத் தான் ஈன்ற காய்கூற்றம்; கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

************


மனிதர்களே.

வாழ்வின் கடைக்காலத்தில் வருபவர் மட்டுமே எமன் அல்ல.

கூற்றம் என்றால் எமன். அவன் அழிப்பான், முடிவுக்கு கொண்டு வருபவன். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் குறிப்பிடும்படியாக மூன்று எமன்கள் உண்டு.

எமன்:1

கல்லாத மனிதர்களுக்கு - கல்வி அறிவில்லாதவர்களுக்கு - நல்ல நூல்களைக் கற்று உணர்ந்தவர் வாக்கு , எமனைப் போல துன்பம் தரும்.ஆதலால் நீதி நெறிப்படி வாழாத மாந்தர்க்கு நீதியே ( அறம்) எமனாகும்.

எமன் :2

மென்மையான வாழை மரத்துக்கு, அது ஈன்ற வாழைக்குலையே எமனாகும்.

எமன்: 3

இல்லறத்தின் நல்ல குணங்களைப் கடைப்பிடிக்காத பெண் அந்தக் குடும்பத்திற்கு எமன்.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



***************************************************************************************************************************************************************************

பாடல்: 28

சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும்

கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்

தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று. 

********

மனிதர்களே. 

சந்தன மரம் காட்டில் எங்கோ இருக்கும். அதனைப் பார்க்காதவர்கள் பலர் இருக்கலாம். அது ஒரு மெல்லிய கட்டையாக தேய்ந்து சிறிய துண்டாக கடைசி மிச்சத்தில் இருக்கும்போதும் அதன் வாசம் அது மரமாக இருந்தபோது எந்த அளவு இருந்ததோ அதே அளவு இருக்குமே தவிர; தன் தேய்மானம் அளவுக்கு தன் வாசத்தைக் குறைத்துக் கொள்ளாது அல்லவா?

பூமியை ஆண்ட மன்னர் வாழ்வு நிலை சரிந்து பொருளாதார சூழல் மங்கியபோதும் அவர்கள் தனது தருமத்தையோ நல்ல செயல்களையோ குறைத்துக்கொள்ள மாட்டார்கள். ஏன்? அவர்கள் கொடை உள்ளம்  விரிந்துள்ளது.

ஆகவே கொடுப்பதற்கு மனம் இருப்பதே முக்கியம். தனம் இரண்டாம் பட்சம்.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.


*** *************************************************************************************************************


பாடல்: 29


மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை 

ஆம்போ(து) அவளோடும் ஆகும் ; அவள் பிரிந்து

போம்போ(து) அவளோடும் போம்.

***


மனிதர்களே 

தனலஷ்மியும் மூதேவியும் வந்தார்கள். தங்களில் யார் அழகு என்றனர். கடவுள் சொன்னாராம்: “தனம் தரும் லஷ்மி நீ வரும்போது அழகு! மூதேவியே நீ  செல்லும்போது அழகு!”

ஒருவனுக்கு அவனது பூர்வ புண்ணியத்தின் பயனாய் திருமகளின் அருளால் செல்வம் சேரும்.

அந்த நேரத்தில் செல்வம் மட்டுமல்ல, இனிய சுற்றத்தார் அமைகின்றனர். அவர்கள் மருவ இனியவர்கள்.

சுற்றத்தார் மட்டுமல்ல, மேலான செல்வம் சேரும். ( வான் பொருள்)

செல்வம் மட்டுமா? நல்ல அழகிய உருவம் ஏற்படும் ( personality)

அழகிய உருவம் மட்டுமா? உயர் குடி பிறப்பு ( குலம்) அமையும்.

திருமகள் நீங்கிப் போகும்போது அவளுடன் எல்லாமும் அவனைவிட்டு நீங்கிவிடும்.

ஆவதும் போவதும் லஷ்மி தேவி அருளாலே.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.


****************************************************************************************************************************

 பாடல்:30


சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் 

குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.

***


மனிதர்களே!

அறிவு என்பதற்கும் அறிவுடையோர் என்பதற்கும் நீங்கள் நினைக்கும் அர்த்தம் என்ன?

நல்ல பல்கலைக் கழகத்தில் டிகிரி குவிப்பது; உயர் வேலையில் அமர்வது; சம்பாதிப்பது; வசதி வாகனங்களில் செல்வது ; செல்போன் இன்ஸ்டாவில் இருப்பது என்று நினைக்கிறீர்கள்.

அது அர்த்தம் அல்ல. அல்லவே அல்ல.

அறிவுடையோர் செய்யும் செயல் ஒன்றே ஒன்றுதான். 

சாகும் வரையில் தனக்கு ஒருவர் தீய செயல்களைச் செய்துகொண்டே இருந்தாலும் அவர்களை தங்களால் இயன்றவரையில் அறிவுள்ளோர் காப்பாற்றுவார்கள். இதுவே அறிவுடையோர் செயல். 

ஒதுங்கிப் போவது அறிவு அல்ல. தீமையால் அழியும் அவர்களைக் கண்டும் காணாமல் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போவது அறிவுள்ளோர் செயல் அல்ல. அது சுயநலம். 

சாலையில் இருபது முப்பது வருடமாக பெயர் தெரியாத அகல விரிந்த அழகிய நிழல் பரப்பும் அந்த மரத்தினை கிளை கிளையாக துண்ண்டு துண்டாக அரிவாளை வைத்து ஒருவர் வெட்டிக்கொண்டிருந்தார். 

மதியம் ஒருமணி ஆகிவிட்டது. நல்ல வெய்யில். இன்னும் இரண்டு மூன்று கிளைகள் மட்டுமே பாக்கி. அப்போதும் அந்த மரம் தன்னை வெட்டுகிறவர் மீது குளிர் நிழலைத் தந்து அவரைக் காப்பாற்றிக் கொண்டுதான் இருந்தது.

அறிவுடைய அந்த மரம் கடைசி வரை நிழல் தருவது போலவே, நல்ல மனிதர்கள் நடந்து கொள்வார்களே தவிர தீமை செய்கிறான் என்பதற்காக ஒதுங்குவதோ ஒதுக்குவதோ உதவி நிறுத்துவதோ செய்ய மாட்டார்கள்.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.


**** *****************************************************************************************************************************



பாடல்: 21 - 25

 பாடல்: 21

*****************

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் அவ் இல்

புலிகிடந்த தூறுஆய் விடும்.


மனிதர்களே!

வாழ்வில் மனிதன் உயர, மனைவியின் பங்கு மிக முக்கியம். 

“இல்லாள்” என்பவள் எதையும் இல்லை என்று சொல்லாதவள் ஆகி, உயர் பண்புகள் கொண்டவளாக அமைந்துவிட்டால் ;அந்த மனிதனின் வாழ்வில் இல்லாததே இல்லை. ஆம். எல்லாம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவேளை அப்படி அமையாமல் கணவனை எதிர்த்து எதிர்த்து கடுமையான சொற்களைப் பேசுபவளாகவும் அமைந்துவிட்டால் ?

அந்த மனிதனுடைய வீட்டை வீடு என்று நான் சொல்ல மாட்டேன். புலிதங்கும் புதர் என்றுதான் கூறுவேன்.

ஏனெனில் புலியின் புதருக்குள் குடியிருக்கும் ஒருவன், புலியால் எந்தக் கணமும் வீழ்த்தப் படலாம்.   

மனைவி என்பவள் எதிர்த்து எதிர்த்துப் பேசுவது, புலியின் தாக்குதல் போல் ஒரு மனிதனுக்குத் துன்பமாகும். 

தாக்கிப் பேசிவிட்டு, புலி புதருக்குள் செல்லும். மீண்டும் தாக்கிட எழுந்து வரும். இதுவே புலி கிடந்த தூறு .

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



*********************************************** ****************************************************

  

பாடல்: 22


எழுதியவாறே காண் இரங்கு மடநெஞ்சே

கருதியவா(று) ஆமோ கருமம் ? - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முற்பவத்திற் செய்த வினை.


**

மனிதர்களே

நீங்கள் நினைக்கிறீர்கள். நினைத்து ஒரு செயல் நடக்கவும்; அச்செயல்  நடக்காமல் போகவும் நீங்கள் செய்யும் செயல்களே காரணம் என்று. 

அப்படி அல்ல. உங்களுக்கு பிரம்மன் எழுதியதே நடக்கிறது.

உங்கள் மட நெஞ்சுக்கு நினைவூட்டிச்  சொல்லுங்கள், நினைத்தது எல்லாம் நடப்பதில்லை என்றும் அதற்காக வருந்திப் பயனில்லை என்றும் சொல்லிக் கொடுங்கள். 

முன்பிறப்பில் செய்த பாவ புண்ணியமே இந்தப்பிறவியில் நமக்கு அமைகிறது. 

நினைத்த எல்லாம் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழேயே போய் நின்று கொண்டு கேட்டாலும் முன்பிறப்பு விதியால் கசப்பு மிகுந்த எட்டிக்காய்தான் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதுதான் கிடைக்கும். அதுதான் அவன் விதி.

எழுதிய விதியை யாரால் மாற்ற முடியும்?

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



***************************************************************************************************************************

பாடல்:23

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - வில்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீர் ஒழுகு சான்றோர் சினம்.


மனிதர்களே!

வாழ்வில் அடிக்கடி சந்திக்கிறோம் கோபம் என்ற உணர்ச்சியை. 

ஆனால் கோபப்பட்டு முடித்த உடன், சிந்திப்பீர்களா  எப்படிப்பட்ட கோபம் வந்தது என்று.

கோபப்பட மட்டும்தான் தெரியும், அதற்குப்பிறகு எதிராளி கோபம் கொண்டு இன்னும் பெரிதாவதுதான் தெரியும் என்கிறீர்களா.

என் மூதுரையைக் கேளுங்கள்.

மூன்று வகை கோப வகை உண்டு.

கல் கோபம், தங்கக் கோபம், நீர்கோபம்.

அவை என்ன? சொல்கிறேன். 

தீயவர்கள், மூடர்கள் கொள்ளும் கடும் கோபம் கல் பிளந்தது போல மீண்டும் ஒட்ட முடியாத பிரிவை உண்டாக்கும். இணைப்புக்கு சாத்தியமில்லாத கோபம் , கல் கோபம்.

சமமான, சற்று உயர்ந்த (நடுத்தரமானவர்களின் கோபம்) கோபம், பொன்னில் ஏற்பட்ட  பிளவு போன்றது. தானாக இணையாவிட்டாலும் அதனை உருக்கி மீண்டும் இணைக்க வாய்ப்பு உள்ளது என்பதுபோல சிலர் முயற்சியால் அவர்கள் இணைவார்கள். இது தங்கக் கோபம்.

நீர்க்கோபம் என்றால் என்ன? பெரிய வில்லில் அம்பைப் பொருத்தி குளத்து நீரில் அல்லது நீர் நிலையில் அந்த நீர் கிழிவது போல அம்பு விடுங்கள். என்ன ஆகிறது? நீரில் உண்டாகும் அப்பிளவு சற்று நேரம் கூட நீடிப்பதில்லை. பிறர் நல்லகுணங்களைப்  போற்றி வாழும் பெருமை மிக்க சான்றோர் மனம் கொள்ளும் கோபம் உடனே மாறிவிடும் தன்மை கொண்டது. இதுவே நீர்க் கோபம்.

செய்ந்நன்றி அதிகாரத்தில் (குறள்:109 ல் இல்லறவியல்) ஒரு குறள் இவ்வாறு பேசுகிறது:

கொன்றன்ன இன்னாசெய்யினும் அவர் செய்த ஒன்று

நன்று உள்ளக்கெடும்.

முன்பு ஒருவர் நன்மை செய்தார். இப்போது கொன்றது போன்ற தீமையைச் செய்கிறார்.இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்துப்பார்த்தாலும் போதும். அந்த நிமிடமே அவர் செய்த துன்பம் மறைந்துவிடும்.

நீர்க்கோப நிலைக்கு அதாவது அவ்வப்போது கோபம் மறக்கும் நிலைக்கு நம் மனதை நாம் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.

*** ****************************************************************************************************************************************

பாடல்:24


நல்தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்புஇல்லா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்

காக்கை உசுக்கும் பிணம்.

மனிதர்களே!

முதுகாடு என்றால் சுடுகாடு. அங்கு ஒரு காகம் கண்டேன். அது பிணத்தைக் கொத்திக்கொண்டிருந்தது ஆவலாக. அது ஏன் அப்படிச் செய்கிறது? ஏன் அது வேறு இடத்திற்குப் பறந்து செல்லவில்லை? என்று தோன்றியது. 

அப்போது அந்த வழியில் குடி போதை கொண்ட முரடர்கள் இருவர் நெருங்கி தோள் மேல் கை போட்டு நடந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டேன். அவர்கள் ஏன் நெருங்கிப் பழகிக் கொள்கிறார்கள்? என்று யோசிக்கத் தோன்றியது. 

மூர்க்கத்தன்மை ( முட்டாள்தன்மை) உடையவர் அதேபோன்ற ஒருவரைத்தான் விரும்புவார்கள் ( முகப்பர்) என்பது புரிந்தது. உயிருள்ளவர்களை சிநேகிதம் கொள்வதைவிட்டு விட்டு பிணம் உசுக்கும் ( விரும்பும்) காகம் போன்றதே அந்த இரண்டு மூடர்கள் நட்பு என்பதை விட என்ன சொல்ல முடியும்?

யோசித்துக்கொண்டே வந்தேன். 

தாமரைக்குளம் ஒன்று அழகிய தோற்றத்தில் இருக்க அங்கே ஒரு அன்னப்பறவை வந்து சேர்ந்ததும் அவை இரண்டும் நட்பு பாராட்டிப் பழகுவதைக் கண்டேன்.

 பல நூல்கள் கற்றவரை அதேபோல கல்வி கற்றவர்களே விரும்புவார்கள் என்பதும் புலப்பட்டது.

இருளால் ஒளியை விரும்ப முடியாது. இருள் இருளையே நட்பு கொள்ளும். ரர்க்கரும் கற்றவரும் நட்பு கொள்ள இயலாது. நேர்ந்தாலும் நிலைக்காது.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.


**************************************************************************************************************************


பாடல்:25

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம்கரந்து உறையும்

அஞ்சாப் புறம்கிடக்கும் நீர்ப்பாம்பு- நெஞ்சில்

கரவு உடையார் தம்மைக் கரப்பர்; கரவார்

கரவு இலா நெஞ்சத்தவர்.


மனிதர்களே!

 இரண்டுவகை நெஞ்சங்கள் காண்கிறேன். 

தன் உள்ளத்தை வெளிப்படுத்தாமல் ( கரவு - மறைத்தல் )வாழும் நெஞ்சம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? விஷம் உள்ள பாம்பு தன்னிடம் விஷம் இருப்பதை மறைத்துக்கொள்ள தன்னைச் சுற்றி புற்று அமைத்துக்கொள்கிறது போல விஷயத்தை மறைத்துவைக்கிறவர்கள்.

இன்னொரு வகை நெஞ்சமோ எல்லா நேரமும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு வகை நெஞ்சம். கரவா ( மறைக்காத) நெஞ்சம்.

தன்னிடம் விஷம் இல்லாத தண்ணீர்ப்பாம்பு தண்ணீரின் மேல்பகுதியில் உலவிக்கொண்டிருப்பது போல அவர்கள் வெளிப்படையாகவே நடந்துகொள்வார்கள்.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



**************************************************************************************************************************


   


பாடல் : 18 - 20

 பாடல் : 18

*************** 

சீரியர் கெட்டாலும் சீரியர் சீரியரே

அல்லாதார் கெட்டாலும் அல்லாதார்- அல்லாதார்

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என் ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால்.


மனிதர்களே

சீர் என்றால் பெருமை. பெருமையுடையவர்கள் தாழும்காலத்திலும் பெருமையுடையவர்களாகத்தான் இருப்பார்கள்.

மேன்மக்கள் செல்வத்தில் தாழ்ந்துபோனாலும் பெருமையில் உயர்ந்தவராகவே கருதப்படுவார்கள். அவர்களால் சமூகத்துக்குப் பயன் இருக்கும்.

ஆனால், கீழோர்கள் செல்வத்தில் தாழ்ந்து போனால் தாழ்ந்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள். பிறருக்குப் பயன் பட மாட்டார்கள். 

உதாரணம் சொல்கிறேன். 

பொன் குடம் உடைந்தால் அதுவும் பொன்தானே? விலை உயர்ந்ததுதானே?

ஆனால் , மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்தால், அதற்கு முன்பு என்ன மதிப்பு ? அதைக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. யாருக்கும் பயனில்லை.

ஆகவே, தாழும் காலத்திலும் பெருமை குறையாமல் வாழ முடிவது மேன்மக்களுக்கு சாத்தியம். 

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



*** 


பாடல் : 19 

*************

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நால் நாழி - தோழீ

நிதியும் கணவனும் நேர்படினும் தம் தம்

விதியின் பயனே பயன்.

*****

 மனிதர்களே!

சிந்தித்துப் பாருங்கள். 

அழகான பெரிய கடலில் ஒரு நாழியால் ( படி போன்ற அளவை) முகந்து ஆழமாக அமுக்கி எடுத்தாலும் அது ஒரு நாழி நீர்தான் கொள்ளுமே தவிர, நாலு நாழி நீரைக் கொள்ளாது அல்லவா?

ஒரு பெண்ணுக்கு நல்ல செல்வமும் நல்ல கணவனும் அமைந்தாலும் கூட, அந்தப்பெண்ணுக்கு அவள் விதிப்படி (முற்பிறப்பு பாவ புண்ணியங்கள்) பொறுத்தே கிடைக்கவேண்டிய பயன்  கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.

தம் தம் விதியின் பயனே பயன் என்பதை மீறி வாழ்பவர் எவருமில்லை. முற்பிறப்பு பாவ புண்ணியம் தொடரும் என்பதை உணர்ந்தாக வேண்டும்.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.


**


பாடல் : 20   

***********

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா

உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு.

*********

மனிதர்களே!

ஒரு உண்மை தெரியுமா?

நீங்கள் நினைக்கிறீர்கள். நமக்கு ஒரு அவசரமென்றால் ஆபத்தென்றால் உடன்பிறந்தவர்கள்தான் உதவுவார்கள். சுற்றத்தார்தான் உதவுவார்கள் என்று. அது  தவறு. 

வியாதிகூடத்தான் நாம் பிறக்கும்போதே உடம்புடன் பிறக்கிறது. அது  கொல்வதைத் தவிர நமக்கு வேறு உதவி எதுவும் செய்வதில்லை அல்லவா?

   உடன் பிறக்காவிட்டாலும் எங்கோ தொலைவில் உள்ள பெரிய மலையின் மருந்து உடல் நோயைத் தீர்க்கிறது என்பதை சற்று நினைத்துப் பாருங்கள். 

அப்படிப்பட்ட மனிதர்களும் , நமக்கு உதவி செய்ய  உலகில் இருக்கிறார்கள்.

நம்புங்கள். இது உண்மை.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



***

 


பாடல் : 17

*****************

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.

******************************


மனிதர்களே !

உங்களுக்கு எவர் உறவு என்று சொல்லுகிறேன் கேளுங்கள். 

குளத்தில் தளும்பத் தளும்ப நீர் இருந்தபோது எத்தனை எத்தனை கொக்குகள் பறந்து வந்து அமர்ந்தன! விளையாடி மீன்கள் உண்டன. குளித்தன. உடல் நனைந்து சில்லிட்டு நீந்தின!

அந்தக்குளத்துக்கு கோடையில் துன்பம் வருகிறது. கோடைக் காலம்.

வற்றிய குளத்தை விட்டு அறுத்துக்கொண்டு வேறு குளம் நோக்கிப் பறந்து விடுகின்றன நீர்ப்பறவைகள்.

ஆனால் இன்னொன்று கவனித்தீர்களா!  

வற்றிய அதே குளத்தில் கொட்டிப் பூண்டும் ( கொட்டி) ஆம்பல் கொடியும் , நெய்தல் கொடியும் (நெய்தல்) குளத்திலேயே  இருக்கின்றன.

 அவையும் வாடுகின்றனவே குளத்தைக் கைவிட்டு  வேறு இடம் போவதில்லை.

குளத்தின் துன்பத்தை அவையும் அனுபவிக்கின்றன.

வறுமை நிலையிலும் பிரியாமல்  உறவுகள் அருகில் இருப்பதே உறவு.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



Saturday, 20 December 2025

 பாடல்:23

******************************

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - வில்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீர் ஒழுகு சான்றோர் சினம்.


மனிதர்களே!

வாழ்வில் அடிக்கடி சந்திக்கிறோம் கோபம் என்ற உணர்ச்சியை. 

ஆனால் கோபப்பட்டு முடித்த உடன், சிந்திப்பீர்களா  எப்படிப்பட்ட கோபம் வந்தது என்று.

கோபப்பட மட்டும்தான் தெரியும், அதற்குப்பிறகு எதிராளி கோபம் கொண்டு இன்னும் பெரிதாவதுதான் தெரியும் என்கிறீர்களா.

என் மூதுரையைக் கேளுங்கள்.

மூன்று வகை கோப வகை உண்டு.

கல் கோபம், தங்கக் கோபம், நீர்கோபம்.

அவை என்ன? சொல்கிறேன். 

தீயவர்கள், மூடர்கள் கொள்ளும் கடும் கோபம் கல் பிளந்தது போல மீண்டும் ஒட்ட முடியாத பிரிவை உண்டாக்கும். இணைப்புக்கு சாத்தியமில்லாத கோபம் , கல் கோபம்.

சமமான, சற்று உயர்ந்த (நடுத்தரமானவர்களின் கோபம்) கோபம், பொன்னில் ஏற்பட்ட  பிளவு போன்றது. தானாக இணையாவிட்டாலும் அதனை உருக்கி மீண்டும் இணைக்க வாய்ப்பு உள்ளது என்பதுபோல சிலர் முயற்சியால் அவர்கள் இணைவார்கள். இது தங்கக் கோபம்.

நீர்க்கோபம் என்றால் என்ன? பெரிய வில்லில் அம்பைப் பொருத்தி குளத்து நீரில் அல்லது நீர் நிலையில் அந்த நீர் கிழிவது போல அம்பு விடுங்கள். என்ன ஆகிறது? நீரில் உண்டாகும் அப்பிளவு சற்று நேரம் கூட நீடிப்பதில்லை. பிறர் நல்லகுணங்களைப்  போற்றி வாழும் பெருமை மிக்க சான்றோர் மனம் கொள்ளும் கோபம் உடனே மாறிவிடும் தன்மை கொண்டது. இதுவே நீர்க் கோபம்.

செய்ந்நன்றி அதிகாரத்தில் (குறள்:109 ல் இல்லறவியல்) ஒரு குறள் இவ்வாறு பேசுகிறது:

கொன்றன்ன இன்னாசெய்யினும் அவர் செய்த ஒன்று

நன்று உள்ளக்கெடும்.

முன்பு ஒருவர் நன்மை செய்தார். இப்போது கொன்றது போன்ற தீமையைச் செய்கிறார்.இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்துப்பார்த்தாலும் போதும். அந்த நிமிடமே அவர் செய்த துன்பம் மறைந்துவிடும்.

நீர்க்கோப நிலைக்கு நம் மனதை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இது ஒளவைப்பாட்டியின் மூதுரை.

 பாடல்: 21

**********************

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் அவ் இல்

புலிகிடந்த தூறுஆய் விடும்.


மனிதர்களே!

வாழ்வில் மனிதன் உயர, மனைவியின் பங்கு மிக முக்கியம். 

“இல்லாள்” என்பவள் எதையும் இல்லை என்று சொல்லாதவள் ஆகி, உயர் பண்புகள் கொண்டவளாக அமைந்துவிட்டால் ;அந்த மனிதனின் வாழ்வில் இல்லாததே இல்லை. ஆம். எல்லாம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவேளை அப்படி அமையாமல் கணவனை எதிர்த்து எதிர்த்து கடுமையான சொற்களைப் பேசுபவளாகவும் அமைந்துவிட்டால் ?

அந்த மனிதனுடைய வீட்டை வீடு என்று நான் சொல்ல மாட்டேன். புலிதங்கும் புதர் என்றுதான் கூறுவேன்.

ஏனெனில் புலியின் புதருக்குள் குடியிருக்கும் ஒருவன், புலியால் எந்தக் கணமும் வீழ்த்தப் படலாம்.   

மனைவி என்பவள் எதிர்த்து எதிர்த்துப் பேசுவது, புலியின் தாக்குதல் போல் ஒரு மனிதனுக்குத் துன்பமாகும். 

தாக்கிப் பேசிவிட்டு, புலி புதருக்குள் செல்லும். மீண்டும் தாக்கிட எழுந்து வரும். இதுவே புலி கிடந்த தூறு .

இது ஒளவைப்பாட்டியின் மூதுரை.


****

 எழுதியவாறே காண் இரங்கு மடநெஞ்சே

கருதியவா(று) ஆமோ கருமம் ? - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முற்பவத்திற் செய்த வினை.


மனிதர்களே

நீங்கள் நினைக்கிறீர்கள். நினைத்து ஒரு செயல் நடக்கவும்; அச்செயல்  நடக்காமல் போகவும் நீங்கள் செய்யும் செயல்களே காரணம் என்று. 

அப்படி அல்ல. உங்களுக்கு பிரம்மன் எழுதியதே நடக்கிறது.

உங்கள் மட நெஞ்சுக்கு நினைவூட்டிச்  சொல்லுங்கள், நினைத்தது எல்லாம் நடப்பதில்லை என்றும் அதற்காக வருந்திப் பயனில்லை என்றும் சொல்லிக் கொடுங்கள். 

முன்பிறப்பில் செய்த பாவ புண்ணியமே இந்தப்பிறவியில் நமக்கு அமைகிறது. 

நினைத்த எல்லாம் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழேயே போய் நின்று கொண்டு கேட்டாலும் முன்பிறப்பு விதியால் கசப்பு மிகுந்த எட்டிக்காய்தான் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதுதான் கிடைக்கும். அதுதான் அவன் விதி.

எழுதிய விதியை யாரால் மாற்ற முடியும்?

இது ஒளவைப்பாட்டியின் மூதுரை.


Tuesday, 16 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் தொடர்: 17 / 16.12.25 

**********************************************************

பாடல்: 17

***************

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணி

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.


ஏ மக்களே! 

நீரோடையின் கரையில் சோர்வுற்றதுபோல நிற்கும் கொக்கு ஒன்றைக் கண்டேன். சிறு மீன்கள் எல்லாம் அதன் காலைச் சுற்றி வந்தபோதும் கொத்தித் தின்னாமல் இருந்தது. அவற்றி நீந்திப் போக விட்டுவிட்டது. அறிவில்லாத கொக்கு என நினைத்து விட்டேன்.

பெரிய மீன் வரும்போது கொத்திக்கொண்டு அந்தக் கொக்கு பறக்கும்போது எனக்கு ஒன்று புரிந்தது. அறிவுள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பது மிகப் பெரிய வாய்ப்புக்காக; 

 அவர்கள் செயலின்றி இருக்கவில்லை. மிகப் பெரும் பலனுக்காக; தக்க காலத்தை நோக்குகிறார்கள் கொக்கு போல .

                                                            ( ஈசனால் சிந்திப்போம்)


 சந்த்யாவந்தனம் தொடர் எண்: (17) 14.12.25 

******************************************************

தினமும் மூன்று வேளையும் சந்த்யாவந்தனம் செய்து வாழ்வாங்கு வாழ முக்கியமான 07 பகுதிகள் இவை. செய்முறைகளை பிறகு பார்க்க இருக்கிறோம். இப்போது 07 படிக்கட்டுகள் போன்ற நிலைகளை அறிவோம்.

1.  ஆசமனம் .

2. ப்ராணயாமம்: 

யாமம் என்ற சொல்லுக்கு ஒழுங்கு என்று அர்த்தம். பிராணன் எனும் மூச்சை ஒழுங்கு செய்தல் . இதன் மூலம் நமது மனம் ஒரு நிலைபாட்டுக்கு வருகிறது . இதனில் மூன்று பகுதிகள் உள்ளன. மூச்சை இழுத்தல்; மூச்சை உள் அடக்குதல்: மூச்சை வெளியிடல் என்பன அந்த மூன்று பகுதிகள். 

இது யோகாசனப் பயிற்சியும் ஆகும். இதனால் நமது நுரையீரல், இருதயம்,நாடித் துடிப்பு ஆகியவை சீராக இயங்க ஆரம்பிக்கின்றன.


3. மார்ஜ்ஜனம்:-

 ஆசமனம் , ப்ராணயாமம் பகுதிக்குப் பிறகு வருகின்ற மார்ஜ்ஜனம் பகுதி என்பது மந்திரங்களை உச்சரித்து நீரை ( ஜலத்தை) தலை மேல் தெளித்துக்கொள்வது (  ப்ரோஷணம்).

4. அகமர்ஷணம் : பகலும் இரவும் செய்யும் பாவங்கள் தீர்வதற்கு அகமர்ஷணம் உதவுகின்றது. வலது உள்ளங்கையை , பசுவின் காது போல குவித்துக்கொள்கிறோம். மந்திரங்கள் சொல்கிறோம். பிறகு அந்த ஜலம் ( நீர்) உண்கிறோம்.

5. அர்க்யம்: சூர்ய பகவானை நினைத்து ஜலத்தால் வழிபாடு செய்வதே அர்க்யம் ஆகும். இருகைகளையும் சேர்த்து, நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சூர்யனுக்கு சமர்ப்பணம் செய்வதே அர்க்யம் ஆகும்.

சூர்ய உதயத்தின்போதும், அஸ்தமனத்தின் போதும் காயத்ரி மந்திரத்துடன் அர்க்யம் விடுபவன் எல்லாவித சுகங்களும் அடைவான் தைத்ரீய ஆரண்யகர் கூறுகிறார்.

6. ஜபம்: எவன் ஒருவன் திட மனதுடனும், ஒன்றுபட்ட சிந்தனையுடனும் காயத்ரி மந்திரத்தை 64,108,1008 என்ற எண்ணிக்கையில் ஜபிக்கிறானோ அவன் தேஜஸ் பெறுகிறான். ஞானம், தெளிந்த அறிவு ஆகியவற்றை அளவில்லாமல் பெறுகிறான் என்பதில் ஐயமில்லை.

7. உபஸ்தானம்: குவித்த கைகளுடன் நின்று கொண்டு சூர்ய பகவானை பிரார்த்னை செய்வதே உபஸ்தானம் எனப்படும். அனைத்து ஜீவராசிகளின் வாழ்வுக்கு ஆதாரமான சூரியனை வழிபடுவது முக்கியம். வருணன் பருவ காலங்களின் ஆதாரம். எனவே காலையில் சூரியனையும் ; மாலையில் வருணனையும் பல்வேறு மந்திரங்கள் உச்சரித்து ஆராதிக்க வேண்டும்.

                                                    ( ஈசனால் தொடர்வோம்)


 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (17) - 16.12.25 

**************************************************************************************


பகவான் பாடல்: 16

***************************

காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்

கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா.

காந்தம் இரும்பைக் கவர்கிறது. இரும்பைத் தன்பால் அது வைத்துக்கொள்கிறது. கவர்ந்துவிட்டபின் இரும்புக்கு பிரிவதற்கு வாய்ப்பில்லை. அருணாசலனே அது போல் என்னுடன் இருப்பாய் என்ற வரிகள் சிவபுராணத்தில் “ ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே” என்ற வரியுடன்  ஒப்பன.

அபிராமி அந்தாதி / பாடல்:83 :

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்

இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்

பரவும் பதமும், அயிராவதமும் பகீரதியும்

உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே.


அபிராமியை பூசித்து பூசித்து காந்தம் கவர்ந்த பின், பக்தன் நிலை அபிராமி அந்தாதியில் சொல்லப்படுகிறது. தேவர்கள் எல்லோரும் இவர்களை வணங்குவர். இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதம் ஏற்கும். பகீரதி எனும் கங்கையில் ஆடுவர். வலிமை பெறுவர் தேவர்களைப் போல. இந்திரனின் கையில் உள்ள வஜ்ராயுதம் (குலிசம்)பெறுவர். கேட்பதெல்லாம் கொடுப்பது சிந்தாமணி. கற்பகத் தரு உள்ளிட்ட அனைத்தும் பெறுவர்.

                                                             ( ஈசனால் சிந்திப்போம்)


Saturday, 13 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (  16) 14.12.25 

****************************************************


பாடல் 16

******************

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனதுபோல் பாங்கு அறியாப்

புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்.


ஏ மக்களே! 

காட்டுக்குப் போயிருந்தேன். கண்டேன். உடலில் நஞ்சு ஏறி நோயுற்றுக் கிடக்கிறது ஒரு வேங்கைபுலி. கவனிக்கிறான் ஒரு விஷ வைத்தியன் ( விட காரி). குணப்படுத்திவிடுகிறான். புலி என்ன செய்கிறது? அந்த இடத்திலேயே வைத்தியனை உண்டு விடுகிறது.

நாட்டுக்குள் வந்தேன். நன்மை அறியாத ( பாங்கு ) புல்லறிவாளருக்கு ( அற்ப அறிவுடையவருக்கு) உதவி செய்யும் ஒருவனைப் பார்த்தேன். அவனுக்குத் தெரியவில்லை. அவன் செய்யும் உதவி கல்லின் மேல் எறியப்பட்ட மண்கலம் போல் நொறுங்கி விடும்.

புலிக்கு உதவிய விஷ வைத்தியனும் புல்லறிவாளருக்கு உதவுகிறவனும் ஒன்றே.

                                                              ( ஈசனால் சிந்திப்போம்)

                                      


சந்த்யாவந்தனம்: (16) 14.12.25 

********************************************

சந்தியாவந்தனத்தின்போது செய்ய வேண்டிய க்ரியைகளின் விளக்கம் பார்ப்போம்.

ஆசமனம்:-

நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதேபோல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. நமது உள்ளமும் உடலும் சுத்தமாவதற்கு  ஆசமனம் அவசியம்; அங்க வந்தனம் அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணரவேண்டும். உத்தரணியில் ஜலம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கட்டைவிரலின் அடிபாகத்தால் விடப்படும் ஜலம் பிரம்மதீர்த்தம் எனப்படும். மூன்றுமுறை மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி, எச்சில்படாமல் உட்கொள்ள வேண்டும். உணவுக் குழாய்க்கும் போதுமான ஜலம் செல்ல வேண்டும்.

பிராணயாமம் என்பதன் விளக்கம் என்ன?

                                                             ( ஈசனால் தொடர்வோம்)

 

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (16) - 14.12.25 

****************************************************************************************


பகவான் பாடல் : 15

*************************


கண்ணுக்கு கண்ணாய்க் கண் இன்றிக் காண்; உனைக்

காணுவதுயார் அருணாசலா.

கண்கள் இருந்தாலும் உடலில் உயிர் எனும் ஆத்மா இல்லாதபோது காணமுடிவதில்லை. அப்படியெனில் கண்ணுக்கு கண்ணாய் கண்டது யார்? ஆத்மா தான். அக நோக்குதான்.

முகத்திலே கண் கொண்டு  காண்கின்ற மூடர்காள்

அகத்திலே கண் கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைக் 

கூறுமாறென்றால் எங்கணே?

மகளுக்கு ஒரு தாய் தனது கணவனுடன் நிகழ்ந்த சுகத்தை எப்படி விவரிக்க முடியாதோ அதுபோல அகத்தில் கண் கொண்டு ஈசனுடன் நேரும் அனுபவம் எனும் திருமூலர் பாடலோடு ஒப்பு நோக்கத் தக்கது.

அபிராமி அந்தாதி : பாடல் 50

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு 

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி  என்று

ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே


மேற்கண்ட பாடலில் அம்மையின் 11 திருநாமங்கள் கூறப்பட்டு மனம் இன்புறும் நிலை பாடப் படுகின்றது. ஜீவாத்மாவுக்குத் தெரியாமல் பரமாத்மா இல்லை என்ற அத்வைத நிலை தோன்றிய பின் பகவான் இரமணர் கேட்கும் இவ்வினா, கண்ணுக்கு கண்ணாய் கண் இன்றிக் காணுவது ஏக நிலைப்பட்ட ஆத்மாதான் என உணர்த்தவே ஆகும்.


                                                                            ( ஈசனால் சிந்திப்போம்)  


Friday, 12 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (  15) 13.12.25 

*************************************************


பாடல் 15. 

*****************

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்

பொல்லாச் சிரகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி. 


ஏ மனிதர்களே! திரும்பத் திரும்ப கூறுகிறேன். 

கல்வியே முக்கியம். கல்வியே முக்கியம். கல்வியே முக்கியம். இலக்கியம் வேண்டுமா? அதில் ஆழ்ந்து செல்க. விண் இயல் பொறியியல் ஞானம் வேண்டுமா? அதில் கல்வி கொள்க.

அதுவே மனிதனின் அகம் விரிய உதவும். 

இதனை அறியாதவர்கள் என்ன செய்கிறார்கள்? 

காட்டிலுள்ள மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி ஒன்று தன் அழகில்லா சிறகுகளை விரித்து தன்னை மயிலாக நினைத்து ஆடுவதைப் போல கவிதை எழுத முற்படுகிறார்கள்.


                                                                          ( தொடர்வோம்)


 சந்த்யாவந்தனம்: (15) 13.12.25

***************************************

மனு தருமத்தில் கால எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை, ஆனால் சந்த்யாவந்தனம் தொடங்கும் காலத்தில் மாற்றம் இல்லை. 

ஆம். சூரியன் உதிக்கும் முன் ஆரம்பித்தல் ; சூரியன் உச்சிக்கு வரும் முன் ஆரம்பித்தல்; மேற்கு வானில் சூரியன் மறையும் முன்பு ஆரம்பித்தல் என்பவை அவை.

தவம் எனும் நிலையை சந்த்யாவந்தனத்தின் மூலம் நாம் அடைய முடியும். 

அதாவது காயத்ரி மந்திரம் எவ்வளவு நீண்ட நேரம் சொல்லப்படுமோ அதுவே தவமாகும். ஜபமே தவத்தின் பாதை. 

ஞானிகள் இவ்வாறு தவம் மேற்கொண்டு நீண்ட ஆயுள் அடைந்தனர். ஆரோக்யம், புகழ், ஞானம், தெள்ளிய அறிவு மற்றும் பரம்பொருளுடன் ஐக்கியம் ஆகியன பெற்றனர் என்பது மிகையல்ல.

மேலும் , சந்த்யாவந்தனம் பசுமாட்டுத் தொழுவத்திலோ கோசாலையிலோ நதிக்கரைகளிலோ அல்லது திருக்கோயில்களிலோ செய்தால் வீட்டில் செய்யப்படுவதை விட;  பல்லாயிரம் மடங்குகள்; கணக்கில் அடங்கா மடங்குகள் பலன் தரக் கூடியது என மனுசாஸ்திரம் கூறுகிறது. 

சந்தியாவந்தனத்தின்போது செய்ய வேண்டிய க்ரியைகளின் விளக்கம் என்ன?

                                                        ( ஈசனால் சிந்திப்போம்)


 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (15) - 13.12.25 

***************************************************************************************

பகவான் பாடல்: 14

****************************

“ஒளவை போல் எனக்கு உன் அருளைத் தந்து எனை

ஆளுவது உன் கடன் அருணாசலா”

புறக்காட்சி நாடுவது இளமை. ஆசா பாசம் என்பது புறம். ஒளவை தன் இளமை நீக்கி முதுமை யாசித்து இறைவனை வேண்டிப் பெற்றது அகத்தில் ஈசனைக் காணவே ஆகும். இது ஈசன் கருணை ( அருள்) நமக்கு கிட்டினால்தான் சாத்தியம். காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் ஒருவர். அவரும் முதுமை வரம் பெற்று திருஆலங்காடு ஈசனுடன் உறைந்தார்.

அபிராமி அந்தாதி பாடல் : 42 

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து

வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை

நடம் கொண்ட கொள்கை  நலம் கொண்ட நாயகி நல் அரவின்

படம் கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே

             “நலம் கொண்ட நாயகி” என்ற வரியினால் தன் கணவனாகிய ஈசன் நெஞ்சில் நீங்காமல் இருக்க வேண்டும் என்ற உண்மை தோன்றுகிறது. பல முறை ஈசன் நெஞ்சில் நடம் ( திரும்பத் திரும்ப ஆடினாள்)என்பது நடம் கொண்ட கொள்கை ஆகிறது. என் கணவர் என்னைப் பிரிய மாட்டார் எனும் செயலையே நலம் கொண்டது என்றார்.

               அருள் வேண்டுவோம் - உடலில் முதுமை கிடைக்கவும்; ஈசன் அன்பில் முதுமை கொள்ளவும் அருள் வேண்டி அழுவோம் குழந்தைகள் கிரயான்சுக்கு அழுவதுபோல.

                  **** 


 நான் ஒளவை பேசுகிறேன் (  14) 12.12.25 

*************************************************

பாடல் 14.  

****************

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவை அல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நல் மரம்.


ஏ மனிதர்களே! 

கிளைவிரித்து பல கொம்புகளுடன் உயர்ந்த மரங்கள் நல்ல மரங்கள் என்று நான் கூற மாட்டேன். அவற்றை விட்டுவிடுங்கள்.

அறிஞர்கள் சபையில் தரப்பட்ட ஏடுகளின் குறிப்புகளை உள் அர்த்தம் உணர்ந்து கொள்ள இயலாதவன் நல்ல மரம் என்பேன். அவனை மரம் என்று சொல்லுங்கள்.


 நான் ஒளவை பேசுகிறேன் (  13) 12.12.25 

**************************************************

பாடல் 13. 

*************

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் 

கல்மேல் எழுத்துபோல் காணுமே - அல்லாத

ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர்மேல் எழுத்துக்கு நேர்.


ஏ மனிதர்களே! இந்த உலகில் நல்லார் யார் தீயார் யார் என்று அளக்க மிக எளிதான ஒரு அளவு கோல் இருக்கிறது. 

கருணை உள்ளவர்கள் , கருணை இல்லாதவர்கள் என்று இரண்டே வகை. 

கருணையை நெஞ்சில் ஈரம் என்றனர் முன்னோர்.

நீங்கள் செய்த உதவியை மீண்டும் மீண்டும் பல இடங்களில் கூறி அந்த நன்றி அறிதலை கல்வெட்டு போல சொல்லிக்கொண்டிருப்பவர்கள் நல்லோர். 

கருணை இல்லாதவர்கள் நீர் மேல் எழுத்து போல உடனே மறப்பார்கள்.


***

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (14) - 12.12.25 

*******************************************************************************************

பகவான் பாடல்: 13

*********************************

ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்

உனையார் அறிவார் அருணாசலா.

ஓம் என்று சொல்லிச் சொல்லி உள்ளே ஒன்று புலப்படுகிறது. ஓங்காரம் எனப்து ஒவ்வொருவர் உள்ளேயும் ஒலிக்கிறது. 

“உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா!” என்பது மாணிக்கவாசகர் அருளிய சிவபுராண வரி.

அதனை அறியும் தேடல் எதுவும் இல்லை. ஆனால் உனக்கு ஒப்பாகவோ உன்னைவிட உயர்வாகவோ யாரும் இல்லை என்பது என் அறிவுக்குப் புரிகிறது. அப்படிப்பட்ட உன்னை முழுதாக அறிந்தவர் எவருமில்லை அருணாசலா என்கிறார் பகவான்.

அபிராமி அந்தாதி: 46

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்

பொறுக்கும் தகைமை புதியதன்றே புது நஞ்சை உண்டு

கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே

மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே 


உன் விருப்பத்துகுரியவை எவை எனத் தெரிந்தும் மறதியாலும் அவசரத்தாலும் ஊழ்வினையாலும் அவற்றை நான் செய்யவில்லை. அதனால் நீ என்னை வெறுத்துவிடாதே. பொறுத்துக்கொள். அது பெரியோருக்குப் புதிதல்ல.

 ஓங்காரப் பொருளே ஒப்புயர்வு இல்லாதவனே உன்னை யார் அறிவார் அருணாசலா. நான் உன்னை அறியாதவன் என்று என்னை வெறுத்துவிடாதே என வேண்டுவதே பகவான் வரிகள்.

உயிர் நண்பர்கள் “என்னைத் தப்பா நினைச்சுடாதே” என்று சொல்லிப் பிரிவார்கள். அதாவது உணர்வில் பிரிதல் என்ற ஒன்றை நிகழ்த்தினாலும் “என்னைத் தப்பாக நினைக்காதே” என்ற வேண்டுதலில் குறியாக இருப்பார்கள். ஓங்காரப் பொருளை அறியாத தவறு அது. 


***  

Thursday, 11 December 2025

 சந்த்யாவந்தனம்: (14) 12.12.25/ 

****************************************

“காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்று சந்த்யாவந்தனத்தின் காலங்கள் ஒரு பழமொழியால் குறிப்பிடப்பட்டதன் விளக்கம் சுவாரசியமானது. 

அதாவது சூரியன் கீழ்வானத்தில் உதிக்கும் வரை  சந்தியாவந்தனம் செய்யப்ப்ட வேண்டும் என்பதே சூரியனைக் காணாமல் கொடுக்கும் வந்தனம் ஆகும்.

சூரியன் நண்பகலில் உச்சிக்கு நேராக இருக்கும் போது ( நமது நிழல் கோணாமல் ) இருக்கிறது. அது மாத்யாநிஹம் ஆகும். ( மதியம் செய்யப்படுவது)

மேற்குவானில் சூர்யன் மறையும் முன்பே தொடங்கி நஷத்திரங்கள் உதயம் ஆகும்வரையில் செய்ய வேண்டும் என்பது மாலையில் செய்யும் சந்தயாவந்தனம் ஆகும்.

இதுவே வேத விதி.

மனு தருமத்தில் இந்த கால நிர்ணயம் வரையறுக்கப்படவில்லை.

                                                             ( ஈசனால் சிந்திப்போம்)


Wednesday, 10 December 2025

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (13) - 11.12.25 / மகாகவி பாரதி பிறந்த நாள் 

************************************************************************************************************************

பகவான் பாடல்: 12

************************

ஒருவனாம் உன்னை ஒளித்து எவர் வருவார்

உன் சூதே இது அருணாசலா


முந்தைய பாடலில் 11 ல் ஐம்புலக்கள்வராக வந்தனரே அப்போது அகத்தில் நீ இல்லையோ என்று கேள்விகேட்டார். இவ்வரிகளில் அப்படி வந்தவர்கள் வேறு யாருமல்ல, உன்னைத் தவிர இவ்வுலகில் எவர் வர முடியும் என்கிறார். அப்படி என்னை நினைக்க வைத்தது உன் சூது என்றும் சொல்கிறார். துணியில் சாயம் ஏற்றுகிறவனுக்கு பச்சை நிறம் கேட்போருக்கு பச்சை தருகிறான். சிவப்பு ஆரஞ்சு எதுவேண்டுமோ அதனைத் தோய்த்து தருகிறான். உண்மையில் சாயம் தோய்ப்பவனுக்கு இது பற்றி எந்த அபிப்ராயமும் இல்லை என்பது இராமகிருஷ்ண பரமஹம்சர் வாக்கு.

அபிராமி அந்தாதி - பாடல் 10 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்

ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து

அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே.

“அபிராமி அந்தாதி” தமது அனுபவ உரை விளக்கத்தில் அ.அறிவொளி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“சிவன் அவதாரமாக பிறப்பதில்லை. இதனால் “பிறவா யாக்கைப் பெரியோன்” என சிலப்பதிகாரம் கூறும். ஆனால் சக்தி பல அவதாரங்கள் எடுப்பதுண்டு. காமாட்சி, மீனாட்சி, பார்வதி என பல பெயர்களில் அவதாரம் ஆவதும்; அபிராமி, துர்கை,லலிதா, அங்காள பரமேஸ்வரி, காளி, மாரி என பல வடிவுகளில் சில காரணங்களால் உருவம் ஏற்பதும் உண்டு.

மீனாட்சி, பார்வதி முதலியோர் பிறந்தார்கள். மற்றவர்கள் தோன்றினர் என்க. தோன்றியவர்களுக்குப் பெற்றோர் இல்லை எனவும் அறிக. இதை அறிவிக்கவே இமயத்து அன்றும் பிறந்தவளே என்றார் . தாயின் கரு வழியாகப் பிறக்காவிட்டாலும் சிறு குழந்தையாகத் தோன்றி வளர்வதும் ஒருவகைப் பிறப்பே ஆகும்”

பிறப்பது, தோன்றுவது , கருத வைப்பது , மறைவது, பின்னர் தோன்ற வைப்பது என எல்லாம் அவள் அருள் நிலைகளே ஆதலால் “உன்னை ஒளித்து எவர் வருவார்” என பகவான் அருளியது அனைத்தும் அம்மை அப்பனே எனக் கருதியே ஆகும்.


                                                                               ( ஈசனால் தொடர்வோம்)


 சந்த்யாவந்தனம்: (13) 11.12.25/ மகாகவி பாரதி பிறந்த நாள் 

*********************************************************************

ஒவ்வொரு மனிதனும் பிறந்தபின், உப நயனத்தின்போது எப்போது “காயத்ரீ” மந்திர உபதேசம் பெறுகிறானோ அப்போது இரண்டாவது பிறப்பினை அடைகிறான் என முன்னமே பார்த்தோம். “த்விஜன்” ஆகிறான். அவரது முக்கியமான கடமை சந்த்யாவந்தனமே ஆகும்.

அதிகாலை மற்றும் அந்தி; மாலை வேளைகளில் சேய்யப்படுக் தினசரி கடமை இது. நண்பகலில் செய்யப்படும் போது மாத்யாஹ்னிகம் ( மதியம்) எனப்படும்.

யாஜ்ஞவல்கிய மகரிஷி அருளிய மந்திரத்தில்:-

“ சந்த்யாவந்தனமானது காலையில் செய்யப்படும்போது காயத்ரி தேவீ அருள் பெற வழிபட்டு தியானிப்பது; நண்பகல் எனில் சாவித்ரீ தேவீ அருள் பெற வழிபட்டு தியானிப்பது; மாலையில் என்றால் அவ்வழிபாடு சரஸ்வதீ தேவியின் அருள் பெற வழிபட்டு தியானிப்பது ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

“காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்று சந்த்யாவந்தனத்தின் காலங்கள் ஒரு பழமொழியால் குறிப்பிடப்பட்டன. அதன் விளக்கம் என்ன?

                                                          ( ஈசனால் சிந்திப்போம்)


 நான் ஒளவை பேசுகிறேன் (  12 ) 11.12.25 / மகாகவி பாரதி பிறந்த நாள்

*************************************************************************************

பாடல் 12. 

***************

மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது

மண் நீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல்

உண்நீரும் ஆகிவிடும் .

ஏ! மனிதர்களே! நீங்கள் மனிதரின் உடல் தோற்றம் வைத்து எடை போடும் பழக்கம் கொண்டுள்ளீர்கள். அதனை விடுங்கள். அவர்கள் செயல்தன்மை நோக்கி எடை போடப் பழகுக.

தாழை என்றால் தென்னை மரம். தென்னை மரத்தின் மடல் ஆகிய இதழ்கள் - அதாவது மட்டைகள் பெரிதாக உள்ளன. ஆனால் அவை வாசம் வீசுவதில்லை. அருகில் மகிழம்பூச்செடியின் பூக்களோ அவ்வளவு சுகந்த மணம் வீசுகின்றன.

அளவில் மிகப் பெரிதாக இருக்கிறது கடல். உடம்பைக் கழுவ இயலுமா?குடிக்க உதவுமா? இல்லை. 

கடலுக்கு சற்று ஓரமாய் சிறிய ஊற்று கண்டேன். ஆஹா அது தாகம் தணிக்கிறது.

                                                        ( ஈசனால் தொடர்வோம்)

  

Tuesday, 9 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (  11 ) 10.12.25

***************************************

பாடல் 11. 

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமி போனால் முளையாதாம் - கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி

ஏற்ற கருமம் செயல்.


ஏ மனிதர்களே! 

எல்லாச் செயல்களையும் துவக்கி நம்முடைய சொந்த வலிமையால் முடித்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். அதைத் தன்னம்பிக்கை என்றும் இதுவரை நினைத்து வந்துள்ளீர்கள். அது அப்படி அல்ல.


நான் நெல் வயல் போயிருந்தேன். மக்கள் பசி தீர்க்கும் நெல் வயல் அது. சாகுபடி விளைச்சலுக்கு நெல்லை முதன் முதலில் விதைத்தனர். காலம் சென்றது.

“முதலில் முளைத்து வந்த நெல்மணியே போதுமே ! எதற்கு அரிசி மேல் மூடியிருக்கும் உமி ?” என்றேன். 

“முதலில் அரிசி முளைத்தாலும் அதனை மூடி இருக்கும் உமி இல்லாவிட்டால் முளைக்காது” என்றனர் விவசாயிகள்.

ஒன்று புரிந்தது.

எவ்வளவுதான் திறமை மிகுந்தவர் என்றாலும் அளவான தக்க துணவர் இல்லாவிட்டால் கருமம் ( செயல்கள்) ஆற்ற முடியாது.ஜெயிக்க முடிவதில்லை.

                                              ( ஈசனால் தொடர்வோம்)


 சந்த்யாவந்தனம்: (12) 10.12.25

*********************************

உங்கள் ஊர் எத்தனை தொலைவு என்று கேட்கும்போது நேரக்கணக்கில் கிலோ மீட்டர் தூரத்தில் சொல்ல முடியும். ஆனால் சந்த்யாவந்தனம் என்ற இந்த அழகிய செயல்பாடு 25 நடவடிக்கைகளில் செயல்பட்டு அடையும் ஓர் மன ஊர் . சந்த்யா தேவதையின் அமைதி ஊர். 

அவற்றை நாம் காணும் முன்னர் ஸந்த்யாவந்தனம் எதற்கு என்ற முக்யத்வம் ஆழமாக அறிதல் பொருட்டு சில உரைகள்.

****

மானுட வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து அவர்கள் பெய் அறிவைப் பெறுவதற்கு வழிகாட்டி அனாதி காலமாகத் திகழ்வது வேதங்களே ஆகும். அறநெறிகளை போதித்து நல் வாழ்விற்கு கலங்கரை விளக்கம் வேதங்களே.

“வேதோ அகிலோ தர்ம மூலம்” அனைத்து தருமங்களுக்கும் மூலம் வேதங்களே என்றனர் பெரியோர். எல்லா வருணத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையில் வாழும் மானுடர்களுக்கும் அன்றாடம் செய்ய வேண்டிய கடமையில் முக்கியமானது சந்த்யாவந்தனம் ஆகும்.

“ஸந்த்யா” என்ற சொல், ஸூர்ய பகவானை மனதாலும் உள்ளத்தாலும் சிந்திப்பது மட்டுமல்ல. தனது நிலையை வயப்படுத்துவது மட்டுமல்ல. ஒருவித யோகப் பயிற்சியும் கலந்து  செய்யப்படும் ஆராதனை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

உலகில் உள்ள ஜீவராசிகள் பிரகாசிக்க சூரியனது கிரணங்கள் கொண்ட ஒளிச்சிதறல்களே காரணம் என்பது போல். மனிதனது அறிவுத்திறன் ஜொலிக்கவும் உடல் தேஜஸ் பெறவும் சூரியனே காரணம்.

                                                          ( ஈசனால் தொடர்வோம்)


 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (12) - 10.12.25

***********************************************************************************

ரமணர் பாடல்: 11

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது

அகத்தில் நீ இல்லையோ அருணாசலா 

பகவான் இரமணர் கேட்கும் கேள்வி அவருடையது அல்ல. ஆன்ம விழிப்பு பெறாத மானுட குல விடுதலைக்கானது. அவர் அருணாசலப் பெருமானை வினவுகிறார். ஒருவரல்ல இருவரல்ல ஐந்து கள்வர்கள் என் அகத்தினில் புகுந்தனர். கொள்ளையிட்டனர். இது எவ்வாறு நிகழ முடியும்? நீ அக்கணத்தில் என் அகத்தில் இல்லாமல் போனதாக நான் எண்ணமுடியுமா? என்று கேட்பது உண்மையில் நம் மனம் விழிப்படையாமல் புலன் வழியே செல்லுதல் எனும் குற்றம் சுட்டுவதற்கே ஆகும்.

“ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 

இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளி” என்று ஒளவை அருளினார் விநாயகர் அகவலில்.

ஐம்புலன் அடங்க ஈசன் கருணை கேட்டாள் ஒளவை. 


அபிராமி அந்தாதி: பாடல்: 51 

அரணம் பொருள் என்று அருள் ஒன்றில்லாத அரக்கர் தங்கள்

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே

சரணம் சரணம் என் நின்ற நாயகி தன் அடியார்

மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே .

எது பாதுகாக்கும் அரணோ அதை நம்பாமல், எது உலகியலோ அதை நம்பிய மூன்று அரக்கர்கள் பொன் கோட்டை, வெள்ளி கோட்டை, இரும்பு கோட்டை என்ற மூன்றால் போர் புரிந்து ஈசனால் அழிந்தனர். ( வித்யுன்மாலி, தாரகாட்சன்,வாணன்) அவர்கள் ஏன் முரணாக எண்ணினர்? முரணாக எண்ணி ஏன் அழிபட வேண்டும்? மாயைதான் காரணம். 

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இல்லையோ அருணாசலா என்ற கேள்வியால் மாயைக்கு இடம் கொடுத்த மானுடம் விழிப்பு பெறவில்லை ; பாதுகாக்கும் அரணாகிய பெம்மானை (சிவனை) சரணம் என நம்பவில்லை.என்பதும் அறியலாம்.

***

                                                             ( ஈசனால் தொடர்வோம்)

சந்த்யாவந்தனம்: (11) 9.12.25

 சந்த்யாவந்தனம்: (11) 9.12.25

*********************************

இந்நூலில் யஜுர்வேதிகளின் அனுஷ்டான முறையே சொல்லப்படுகிறது. எனினும் ரிக், ஸாம வேத அனுஷ்டான முறையும் சில இடத்தில் வேற்றுமை விளக்க சொல்லப் பட்டுள்ளது. சமஸ்கிருத எழுத்துகளின் தமிழ் வடிவத்துடன் தமிழ் அர்த்தமும் எழுதப்படுகிறது. 

மந்திரப் பிரயோகம், வியாக்யானக் குறிப்புடன் சில இடங்களில் தரும சாஸ்திரங்கள்,உபநிஷதங்கள், பகவ்த் கீதை, ஆழ்வார்கள், நாயன்பார்களின் சரிதக் குறிப்பும் அருள்மொழிகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

1) முதல் மந்திரம் பார்ப்போம்:

காயத்ரீம் சந்தஸாம் மாதா

இதம் பிரம்ம  ஜுஷஸ்வந:

பொருள்:- காயத்ரீ எனப் பிரஸித்தமான வேதமாதா நம்முடைய இந்த மந்திர வடிவமான ஸ்துதியை அங்கீகரித்து அருள் புரிய வேண்டும்.


2) ஆசமனம் : 

அச்யுதாய நம:

அனந்தாய நம:

கோவிந்தாய நம:

ஸந்த்யாவந்தனம் பற்றி அனுஷ்டான பிரகாசிகை சொல்லுவதை நாளை பகிர்ந்து கொள்கிறேன். 

                                  (பொறுத்துக்கொள்ளவும்;எனது நேர சூழல் பொறுத்து தொடர் தொடர்கிறேன்) 

                                                            


 சந்த்யாவந்தனம்: (10) 8.12.25

************************************

உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்துகள் உணர்ந்துகொள்வது முக்கியம். உபாசனைகள் அப்போது பயன் அளிக்கும். சாந்தோக்ய உபநிஷத் இவ்வாறு கூறுகிறது: ஓங்கார உச்சாடனத்துடன் - உச்சரிப்புடன் - அறிந்தவர் அரியாதவர் என்ற இருவகையினரும் கர்மங்களைச் செய்கிறார்கள். அறிவும் அறியாமையும் முற்றும் வேறன்றோ? ஆகையால் ததுவ ஞானத்துடன் சிரத்தியுடன் யோகமுறையை அணுசரித்து எது செய்யப் படுகிரதோ அதுவே மிகவும் வீரியம் உடையதாகும் என்பது தெளிவு.

நெருப்பின்றி விறகு எப்படி எரியாதோ அப்படி ஞானம் இல்லாமல் ஆற்றும் கருமம் பயன் தராது. எல்லாக் கருமங்களுக்கும் எல்லா உபாசனைகளுக்கும் எல்லா மந்திரங்களுக்கும் ஆணிவேர் சந்த்யாவந்தனம் மட்டுமே.

வெவ்வேறு திசைகளிலிருந்து ஒரே  ஊஉரை நோக்கி வரும் பாதைகள் போல் எல்லாச் சமயங்களும் இங்கு ஒன்றுபடுகின்றன.

“ஒன்றாகக் காண்பதே காட்சி”

சைவரோ ,வைஷ்ணவரோ, சாக்தரோ, வட் நாட்டாரோ தென் நாட்டாரோ யாராயினும் சந்த்யாவந்தனத்தில் ஜபிக்கும் மந்திரம் ஒன்றே. இதுவே நல்லோர்கள் நமக்குப் பெற்று நமக்கு அளித்த அழிவிலாச் செல்வம்.

                                                           (ஈசனால் தொடர்வோம்)


 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (11) - 9.12.25

**************************************************************************


ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க

இது உனக்கு அழகோ அருணாசலா.


உறக்கம் ஏன்? இன்னும் என்னை நீ ஆட்கொளவில்லையே? என்று “உறக்கம்” எனும் குற்றச்சாட்டு ஈசனுக்கல்ல. பக்தன் தான் உறங்கிவிடுகிறான் புலன் இன்பங்களில் இழுபட்டு. இது ஈசனுக்கும் தெரியுமே!  ஈசா என்னை அவ்வாறு கைவிடல் அழகோ என்ற உரிமை பகவானின் வரிகள் சுட்டுகின்றன.


அபிராமி அந்தாதி - 61

“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து 

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்

நின்னை பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறுபெற்றேன்

தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கச்சியே.


தனக்கு அருளப்பட்டதை பக்தனால் புரிந்துகொள்ளமுடிகிறது என்பதை அபிராமி பட்டர் “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக” என்றார். 

பகவான் இரமணர் “எனைப் பிறர் இழுக்க” என்ற சொல்லுடன் “நாயேனையும்” என்ற பதம் ஒப்பிட்டு நோக்கத் தக்கது. 

ஆம். உலகியலில் நாய் - நாயேன் என்ற சொல் , புலன்களால் ஆட்பட்ட நிலை பேசுகின்றது. 

அபிராமி பட்டர் “நாயேன் “ என்ற சொல்லால் தன்னைத் தாழ்த்திக்கொள்வது உலகினர் தமது நிலை உணரவே ஆகும். வக்கீல் ஒருவர் வாதிடும்போது தம் கட்சிக்காரர் குற்றத்தை தான் செய்ததாகவே வாதாடுவார் என்பது போன்றது.


 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (10) - 8.12.25


எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்

இதுவோ ஆண்மை அருணாசலா

கடல் அலைகளின் ஓரம் கட்டப்படும் மணல் கோபுரம் கடலுக்கு அந்நியம் போல குழந்தை எண்ணுவதைபோல நான் வேறு நீ வேறு என ஏண்ணிக்கொண்டிருக்கிறேன் அருணாசலா.

கடல் கலக்காமல் இருக்கும்வரை குழந்தைக்கு புரியப்போதில்லை. அந்தக் குழந்தையாக என்னை எண்ணிட வைக்காதே. அது உன் ஆண்மைக்கு அழகல்ல என்கிறார் பகவான் ரமணர்.

யான் - தான் - எனும் சொல் இரண்டும் கெட்டால் அன்றி

யாவருக்கும் தோன்றாது சத்தியம் என்பது கந்தர் அலங்காரம் பாடல் (95).



அபிராமி அந்தாதி: பாடல் :81

அருணாசலனே நீ உன் ஆண்மை காட்டி என்னை ஆட்கொள்ளாமல் கைவிடுவாயேல் நெஞ்சில் வஞ்சகம் உள்ளவரோடு இந்த மாய உலகில் இணங்கவேண்டிய சூழல் எனக்கு ஏற்படும். அதை என்னால் ஏற்க இயலாது. அதை நான் விரும்பவுமில்லை.

அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்

வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரோடும்

பிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீ வைத்த பேரளியே


                                                         ( ஈசனால் சிந்திப்போம்) 


 நான் ஒளவை பேசுகிறேன் (10) 10.12.25 

*******************************************


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.


ஏ மனிதர்களே! 

இந்த உலகம் மிக மிகப் பழமை உடையது. மிக மிக மிக வயதான உலகம். நமக்கு முன்பே இருந்தது. நமக்குப் பின்பும் உலகம் இருந்துகொண்டே இருக்கும். இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட பிரபஞ்சத்தில் நாம் தொடர்பு கொண்டவர்களாகத்தானே இருக்க முடியும்? 

இவ்வளவு ஏன்? இவ்வுலகில் மழைக்கும் நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளதை சிந்தித்துப் பார்த்த அவ்வை சொல்வதை அறிவீர்களா?

வான் மழை முணுமுணுப்பதை அறிவீர்களா? அது இதுதான்:-

“இந்த மண்ணுலகில் நான் ஏன் மழை பொழிகிறேன்? இந்த உலகில் ஒரே ஒரு நல்லவன் இருக்கிறான். அவனை முன்னிட்டே மற்றவர்கள் குடிநீர் பெறுகின்றனர். நெல்லுக்காக உழவன் இரைக்கும் நீர், வாய்க்கால் வழி ஓடி பயனில்லாத புல்லுக்கும் அதன் வேருக்கும் பாய்ந்து நீர் வார்ப்பது ( பொசிவது) போல அந்த ஒரு நல்லவனுக்காக நான் பொழிகிறேன்”

இப்போது புரிந்திருக்கும், நாட்டில் மழை பொழிவு குறைவது எதனால் என்று.

                                                                    ( ஈசனால் சிந்திப்போம்)

 நான் ஒளவை பேசுகிறேன் (9) 9.12.25  

****************************************** 


தீயாரைக் காண்பதுவும் தீதே ; திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே- தீயார்

குனங்கள் உரைப்பதுவும் தீதே - அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது.


ஏ மனிதர்களே! நீங்கள் கேட்கலாம்:- 

“ஏன் நான் நல்லோரைப் பார்க்கவும் அவர்கள் சொல் கேட்கவும் நல்லார் குணங்கள் உரைக்கவும் ;பழகவும் இணங்கி இருக்கவும் வேண்டும்?” என்று.

நல்ல எண்ணங்களைக் கொண்டு உங்களை நிரப்பிக்கொண்டே இருக்கப் பழகவில்லை யென்றால் உங்கள் குணம் தாழ்வு எண்ணங்கள் நோக்கிப் பாய்வது உறுதி. இது ஒரு உளவியல். அதையே அறிவு அன்னை அவ்வை சொல்கிறார்கள்.

நல்லோரின் உயரம் உங்களை உயர்த்தும். உயர முற்படாத மனிதர்கள் தாழ்வை நோக்கிச் செல்வதே விதி. நல்லோருமது மனதைப் பூந்தொட்டியாக்குவர் . தீயோர் உங்கள் மனதைக் குப்பைத்தொட்டி ஆக்குவர்.

                                             ( ஈசனால் சந்திப்போம்)

 நான் ஒளவை பேசுகிறேன் (8) 8.12.25  

***********************************************


நல்லாரைக் காண்பதுவும் நன்றே ; நலம் மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே; நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே ;அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.


ஏ மனிதர்களே! உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என விரும்பினால் ஒரு எளிய வழி சொல்கிறேன்.

நல்லவர்களைக் காண்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

நல்லவர்கள் சொற்களைக் கேளுங்கள். நல்லதே நடக்கும். அதுவும் முடியவில்லையா?

நீங்கள் அறிந்த நல்லவர்களின் குணங்களை பிறருக்கு தெரியப்படுத்துங்கள். நல்லதே நடக்கும்.

நல்லவர்களுக்கு இணக்கமாக இருப்பதும் சிறந்த குணமே. ஆம். அவர்கள் எண்ணங்கள் சக்தி கொண்டவை.


***


Sunday, 7 December 2025

எறும்புகளால் குயில்கள் துன்பம் உறுமா

 எறும்புகளால் குயில்கள் துன்பம் உறுமா


சரம் சரமாய்  சுள்ளெறும்புகளாட்டம்

கடிக்க ஆரம்பித்த கேள்விகள்

வழிப்பாதைகளை 

தானாகவே துலக்குகிற மாதிரியான எறும்புகள்

இரவிலும் ஊர்ந்து கொண்டுதான் உள்ளன 

எவர் நோக்கி? எப்பாதை நோக்கி? 

இரவில்  நடமாடும் அவை என் காலடியால்

சற்று நிதானிக்கா விட்டால் 

கடிதரும் எறும்புகள் இறந்திருக்கும்

நடுநிசியில்  ஏதோ ஒரு நொணாப் பூ வாசம் நாசியில் ஏற

கடிக்கக் கொடுத்த இடங்கள் வீங்குகின்றன

இப்போதும்  ஒரு ஞான வரைபடம்

குயிலின் நெஞ்சுக்குள்ளே அழுகியபடி இருக்கிறது

வெக்கையில் குரலிழந்த குயில்

இரவு  மெலிதாகும் வரை  கதறிக் கூவுகிறதா

கூவிக்கதறுகிறதா தெரியவில்லை.

***


Saturday, 6 December 2025

நான் ஒளவை பேசுகிறேன் (7) 7.12.25

 நான் ஒளவை பேசுகிறேன்  (7) 7.12.25  


நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தான் கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்

தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்தளவே ஆகுமாம் குணம்.

ஏ மனிதர்களே ! இன்று நான் ஒரு ஊரின் குளத்தில் நீராடியபோது அங்கே உள்ள அல்லி மலர்களின் ( ஆம்பல்) உயரம் தெரிந்தது. உண்மையில் நீரின் உயர அளவுமட்டம் எவ்வளவோ அந்த உயரம் தான் அல்லிபூவின் உயரம். மனிதர்களின் நுண் அறிவு அவர்கள் படித்த/கற்ற நூல்களின் அளவில்தான் இருக்கும்.

மனிதர்கள் பணம் பணம் என்று 24 மணிநேரமும் ஓடுகிறார்கள். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின்/தவத்தின்  அளவிலேயே ஒருவனது இப்பிறப்பு செல்வ நிலை.

இன்னொன்றும் சொல்கிறேன். பிறந்த குடும்பத்தின் பெருமை அளவிலேயே ஒருவனது பண்பு நலன்கள் அமைகின்றன.

***


அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (9) 7.12.25

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (9) 7.12.25


பகவான் ரமணர் பாடல் : 8

ஊர்சுற்றும் உளம் விடாது உனைக்கண்டு அடங்கிட

உன் அழகைக் காட்டு அருணாசலா.

பக்தனுக்கு லயமாக காட்சி அவசியம் தேவை. காட்சியிலிருந்து காட்சியன்ற ஒன்றுக்கு செல்ல முடியுமே தவிர காட்சியற்ற ஒன்றை நினைக்க இயல்வதில்லை. அழகின் அம்சமே ஈசன். சுந்தரமே ஈசன். மாயமானைத் தேடி ஓடிய சீதை உள்ளம் கட்டுக்குள் நிற்க இலஷ்மணன் கோடு உதவியது போல நமது மனதுக்கு ஈசனிடம் அழகு தோன்றச் செய்வாய் அருணாசலா.

அபிராமி அந்தாதி (பாடல்:1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர் 

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை 

துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன 

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


அம்மையின் அழகு திரு உருவம் கண்டு மனம் அடங்க அபிராமிபட்டர் பாடியது இது.

உதிக்கின்ற சிவப்புக் கதிராக, பெண் நெற்றி உச்சித் திலகமாக,யோக சாதனை மாணிக்க நிறமாக, மாது உளம் போது (பூ) என்பதாக,மின்னல் கொடி போன்ற மகாலஷ்மி அபிராமியை, குங்குமக் குழம்பாக சந்தனத்தில் கலந்து பூசும் தோயமாககாணப்படும் அவள் மேனி வண்ணம் விழுமிய ( மிகச்சிறந்த )துணை என்றார்.

வேறு எந்தத் துணையாலும் மரணம் தவிர்க்க இயலாது. பிறவாத ஆனந்தம் தரவும் இயலாது என்கிறார் அபிராமி பட்டர்.


***


சந்த்யாவந்தனம்: (9) 7.12.25

 சந்த்யாவந்தனம்: (9) 7.12.25

ஸந்தியாவந்தனத்தின் ஜீவநாடியாயிருப்பது அர்க்கியப் பிரதானம். மார்ஜனம், பிராசனம் முதலிய பகுதிகளும் உண்டு.

 அஷ்டாங்க யோகத்தின் முதற்படிகளான இமயமும் நியமமும் போன்று அவை பூர்வ அங்கங்களாக அமைகின்றன. 

புறத்தூய்மையுடன் அகத் தூய்மையும் தேவை என்பது இம்மந்திரங்களின் கருத்தினின்று தெளிவாகும்.

இயமம் பற்றி திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.

“கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்

நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய

வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்

இல்லான் நியமத்திடை நின்றானே”


யோகத்திற்கும் சந்த்யாவந்தனத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆம். ஆசனம் மற்றும் பிராணாயாமம் இரண்டிலும் உண்டு. அதுமட்டுமல்ல.

சந்த்யாவந்தனத்தின் “ஜபம்” எனும் பகுதியால் புலன்களை வசப்படுத்தும் தியானம், தாரணை, சமாதி ஆகிய படித்தரங்கள் வந்து விடும்.

உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்துகள் உணராமல் உபாசனை செய்யலாமா?

                                                                  ( ஈசனால் சிந்திப்போம்)


Friday, 5 December 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (8)6.12.25

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும்(8) 6.12.25

பகவான் ரமணர் பாடல் : 7

உனை ஏமாற்றி ஓடாது உளத்தின்மேல்

உறுதியாய் இருப்பாய் அருணாசலா

கல் மிதப்பதில்லை. ஆனால் தெப்பத்தில் ஏறியகல்லினால் மிதக்க முடியும். உலக வாழ்வெனும் நீரில் தத்தளிக்கும் மனம் ஈசனை நினைக்க முடியவில்லை என்று ஏமாற்றி ஓட நினைக்கிறது. அருணாசலா நீ உறுதியாய் இரு என வேண்டி அழுகிறது பக்தனது உள்ளம்.

அபிராமி அந்தாதி , பாடல்:40;

வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்

காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு

பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய்த புண்ணியமே.

              “பேணுதற்கு எண்ணிய பேதை நெஞ்சு” எனக் கொள்க .என் அறிவு சிறப்படையவில்லை.என் அறிவு அறியாமை கொண்டது எனும் தாழ்மை கொண்டு ஒப்புக் கொண்டவர்களே வழிபாட்டில் ஆர்வம் கொள்வார்கள். 

            அப்பர் பெருமான் “ வாழ்த்த வாயும் ; நினைக்க மட நெஞ்சும்” என்பது அப்பர் பெருமான் வாக்கு.

             மடமை கொண்ட நெஞ்சில்தான் வழிபட்டாவது பார்ப்போம் என்ற நினைவு தோன்றும் என்கிறார். இப்படிப்பட்ட பேதை நெஞ்சம் என்னுடையது ஆதலால் என் உள்ளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா.


***

நான் ஒளவை பேசுகிறேன் (6) 6.12.25

 நான் ஒளவை பேசுகிறேன் (6) 6.12.25


உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவாரோ - கல்தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோதான்.


ஏ மனிதர்களே! 

நான் ஒரு கல்தூணைப் பார்த்தேன். அது பிளந்து வெடித்து கீழே விழுந்திருந்தது. அதிகமான பாரத்தை ஏற்றி இருக்கிறார்கள். அந்த பாரமான நேரத்தில் தனது தளர்வை அது சொல்லவில்லை. வளைந்துகொடுக்கவும் இல்லை. எனக்கு உடனே சில தன்மை உள்ள மனிதர்களின் குணம் நினைவு வந்தது. ஆம்,அவர்கள் இந்தக் கல்தூண் போன்றவர்களே. 

அவர்கள் செய்திதாளில் 14 ஆம் பக்கத்தில் சிறிய பெட்டி செய்தியாக காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளால் உயிரிழக்கும் இராணுவ வீரர் (30) திருத்தணி ஒன்றியம் சேர்ந்த  சக்திவேலாக இருந்தாலும் சரி; 

குடும்ப மான அவமானம் தன்னுடையதாக எண்ணுகிற வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆனாலும் சரி; 

அவர்கள் அவமானமுற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் ஆவர். தன்னை எதிர்க்கும் பகைவர்களுக்கும் துன்பங்களுக்கும் பணிந்துபோக மாட்டார்கள்.


***

சந்த்யாவந்தனம்: (8) 6.12.25

  சந்த்யாவந்தனம்: (8) 6.12.25

சந்தியா வந்தனத்தின் முக்கியமான மூன்று அம்சங்கள் உண்டு. அவை 1) அர்க்யப் பிரதானம் 2) பிராணயாமம் 3) காயத்ரி ஜபம்.

அர்க்யப்ரதானத்தின் கருத்தை விளக்க வேதத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. சூரியனை எதிர்த்து அரக்கர்கள் அன்றாடம் போராடுகின்றனர். 

இரு பிறப்பாளர்கள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து பூமியில் விடும் அர்க்கியம்(நீர்) வஜ்ராயுதம் போல் வலிமை படைத்து அரக்கர்களை முறியடிக்கிறது என அது சிலேடையாகக் கூறுகிறது. 

எது அரக்கர் படை? அஞ்ஞானமே அரக்கர் படை. அறியாமையாகிய அரக்கர்கள் போருக்கு வரும்போது செய்ய வேண்டியது என்ன? ஞானம் பெற வேண்டும். 

ஞானமே சூரியன். போர்க்களம் மனிதனுடைய மனவெளி. இப்போரில் வெற்றி காண உதவும் பிரம்மாஸ்திரம் போன்றது காயத்ரீ மந்திரம். 

அரக்கர்படை திரும்பத் திரும்ப வந்து அகவெளியில் சூழ்ந்து கொள்வதால் தமக்காகவும் பிறர்க்காகவும் அறிவாளிகள் அன்றாடம் அறியாமையுடன் போர் புரிந்துக் கொண்டே இருக்கவேண்டும்.

தினந்தோறும் சாப்பிடுவதை மறந்தாலும் மறந்தாலும் ஸந்தியாவந்தனத்தை மறக்கக்கூடாது. “ஸந்தியாவந்தனம் செய்தால் தான் சாப்பாடு” என்று சொல்லும் தாய்மார்கள் இன்றும் உண்டு.


ஸந்தியாவந்தனத்தின் ஜீவநாடி எது?

                                                               ( ஈசனால் சிந்திப்போம்)


Thursday, 4 December 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (7) 5.12.25

  அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (7) 5.12.25 

பகவான் ரமணர் பாடல் : 6

ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்

இதுவோ உனதருள் அருணாசலா.

அருணாசல நினைவு மறந்து விடுவதன் காரணம் என்ன? ஈசன் கைவிட்டதே என்ற காரணம் புரிகிறது. சரி. ஈசன் நினைவு சரிந்துவிழ எது காரணம்? புலன்களா அல்லது மனமா என்ற கேள்விக்கு போகத் தோன்றவில்லை. ஈன்ற அன்னையைவிட தயவு உடையவா  என்னை நீ கை விடலாமோ. இதுவோ உன் அருள் அருணாசலா? என்று பகவான் மனம் நைந்து போகிறது.

பாடல்: 57 / ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்

உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்

செய்ய பசும் தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்

மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ? உந்தன் மெய் அருளே?

அறம் வளர்க்கும் அம்மையை மெய்யாகப் பாடினாலே புலவர்கள் எல்லா செல்வமும் புகழும் பெற்றுவிடலாம் எனும் நிலை இருக்கும்போது ; எதுவும் கேளாமலே பூமிக்கு இவ்வளவு நன்மைகள் செய்யும் அம்மை இருக்கும்போது புலவர்கள் பொய்யும் மெய்யுமாக செல்வம் புகழ் தராதவர்களைப் பாடுமாறு இயம்ப வைப்பது ஏன்? இதுவா உன் அருள்? என்று கேட்பது குறைத்துப் பேசியது போல உயர்த்தியது எனக் கொள்க.


நான் ஒளவை பேசுகிறேன் (5) 5.12.25

 நான் ஒளவை பேசுகிறேன் (5) 5.12.25


அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தாலன்றிப் பழா.

ஏ மனிதர்களே! நான் பார்த்துவிட்டேன் இவ்வுலகில். எதற்கும் காலம் ஒன்று வரவேண்டும். அதுவரை அடுத்தடுத்து தொடர்ந்து முயன்றாலும் அந்த காரியம் நிறைவேறுவதில்லை. 

இதனை நான் எப்படிச் சொல்கிறேன் என்றால் வடிவத்தால் நீண்ட மிக உயரமான மரங்களின் காய்கள் கண்டேன். ஏன்,அவை பழுத்துத் தொங்கவேண்டியதுதானே! ஏன் பழுக்கவில்லை? ஆம், அதற்குரிய பருவம் வரவில்லை.

இயற்கை விளைவும் சரி, மனித முயற்சிக்குப் பலன்களும் சரி - காலத்தின் கையில் இருக்கிறது. 

                                                         ( ஈசனால் சிந்திப்போம்)


சந்த்யாவந்தனம் (7) 5.12.25

 சந்த்யாவந்தனம் (7) 5.12.25


உப நயனத்தில் அளிக்கப்படுவது காயத்ரீ மந்திரம். மந்தி உபதேசம். அது அனைத்தையும் விடச் சிறந்தது. முதன்மையானது. எனவே பிரம்மோ(உ)பதேசம் எனப்படுகிறது. இராணுவத்தில் பிரம்மோஸ் ஏவுகணையின் பெயர் இதுவே. சிக்கல் தருணங்களில் கடைசியாக ஏவப்படும் ஆயுதமும் பிரம்மாஸ்திரம் என்றே பேச்சு வழக்கில் கூறப்படும்.

“பிரபஞ்ச ஸாரம்” எனும் நூலில் ஆதி சங்கராச்சாரியார் பின் வருமாறு கூறுகிறார்.”இகத்திலும் பரத்திலும் நல்வாழ்வை நாடும் துவிஜர்களால் முறைப்படி இம்மந்திரம் ஜபித்தற்கு உரியது. துவிஜர்கள் எனும் சொல் பிராமணர்க¨ளையும், ஷத்திரியர்களையும், வைசியர்களையும் குறிக்கும். பரிசுத்தமான தாய் தந்தையரிடம் நல் குலத்தில் உதித்தவர்களும் புத்திமான்களுமான துவிஜர்களால் உப நயனம் தினமும் அவரவர்  சம்பிரதாயத்துடன்  உபாசிக்கப்பட வேண்டும்.  உப நயன் டீஷை பெற்றது முதல், பிரணவத்துடன்; வியாஹ்ருதியுடன்,சிரசுடன் கூடிய இந்த  காயத்ரி மந்திரம், சந்தியா உபாசனையாலும்; ஜபத்தாலும்; தியானத்தாலும்  உபாசிக்கப்பட வேண்டும்”


சந்தியா வந்தனத்தின் முக்கியமான மூன்று அம்சங்கள் உண்டு. அவை என்ன?

                                                                      ( ஈசனால் சிந்திப்போம்)


Wednesday, 3 December 2025

நான் ஒளவை பேசுகிறேன் (4)4.12.25

  நான் ஒளவை பேசுகிறேன் (4) 4.12.25

அட்டாலும் பால் சுவையில் குன்றாது; அள(வு) வளா

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ; சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.


ஏ மனிதர்களே !  நட்பு பற்றி என்ன அறிந்துள்ளீர்கள்? பழகுபவர் எல்லோரும் நண்பர்களா? இல்லை. நான் கூறும் எடைக்கல் இதுதான்.

 பாலை எவ்வளவுதான் காய்ச்சினாலும் சுண்டக் காய்ச்சினாலும் (அட்டாலும்)அதன் சுவை குறையாது. நல்ல நண்பர்களுடன் எவ்வளவு பிணக்கு வந்தாலும் அது சுவையாகவே கருதப்படும்.

நட்பில் இன்னொருவகை உண்டு. குறிப்பிட்ட நிலையோடு கலந்து பழகினாலும் (நட்டாலும்) உண்மையான நட்புத் தகுதி இல்லாதவர் நண்பர்களாக மாட்டார்கள்.அதாவது நாம் கலந்து பழகினாலும் பழகாதவர்களை விட்டு விடுங்கள்.

நட்பைத்தவிர நாம் பழக வேண்டியது ஒரு வகையினர் உண்டு. அவர்கள் யார்? மேன்மக்கள்! அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? 

சுட்டாலும் சங்கு சுடப்பட்டாலும் வெண் நிறமே கொள்வதுபோல ,  வறுமைக் காலத்தால் சுடப்பட்டாலும்  தங்கள் உயர் குணத்தை கைவிடாமல் வாழ்வார்கள்.

                                                          ( ஈசனால் சிந்திப்போம்)


அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (6) / 4.12.25

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (6) / 4.12.25

பகவான் ரமணர் பாடல் : 5

இப்பழி தப்பு உனை ஏன் நினைப்பித்தாய்

இனி யார் விடுவார் அருணாசலா.


அருணாசலா என்னை நான் அறியாமல் ஈர்த்து உன் வசமான நான், இந்நிலையில் என்னைக் கைவிட நினைத்தால் அது உனக்குப் பழியாக மாறிவிடும் . 

ஏன் என்னை நினைப்பிக்க வைத்தாய் என்று ஒரே ஒருகணம் கேட்கிறேனே தவிர இனி எந்த ஆத்ம சாதகனும் பக்தனும் உன்னை விட மாட்டார்கள் அருணாசலா.

அபிராமி அந்தாதி - பாடல் :72 ல் ஒரு வரி வருகின்றது.

என் குறை தீர ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்

நின் குறையே அன்றி யார் குறை காண்?

அடியார்கள் வினையை நீக்குதல் - மரணம் நிகழாமல் காத்தல் - மீண்டும் பிறக்காமல் செய்தல் என்ற மூன்றும் அருள்வது உன் கடமை. வேறு யாரும் இதனைச் செய்வாரில்லை. மீண்டும் பிறந்துவிட்டால்? என்பதில் பிறக்கமாட்டேன் என்ற நம்பிக்கை தொக்கி இருந்தாலும் அவநம்பிக்கை வந்தவராக - அப்படி நான் பிறந்தால் அது யார் குறையாக இருக்க முடியும் என்பதோடு பகவான் ரமணர் பாடல் வரியை சிந்திக்க முடிகிறது.

                                                            ( ஈசனால் சிந்திப்போம்)

***


சந்த்யாவந்தனம் (6) 4.12.25

 சந்த்யாவந்தனம் (6) 4.12.25

குரு சிஷ்யனுக்கு ஆசி வழங்குவது இதனைத்தான்: நீ இப்போது கால் ஊன்றி நிற்கும் ககல்லிபோல் வலிமை கொண்ட உடலும் ; உறுதிபடைத்த நெஞ்சும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊறு செய்பவர்களை எதிர்த்துப் போராடி நீ விரட்டி அடிக்க  வேண்டும். அதுமட்டுமல்ல, நீ பிரம்மச்சாரியாகிவிட்டாய்.சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும். அறியாமையில் இருந்து விழித்து எழுந்திரு. உறங்காதே”

                                                                ( ஈசனால் தொடர்வோம்)


Tuesday, 2 December 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (5) 3.12.25

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (5) 3.12.25

பகவான் ரமணர் பாடல் : 4


ஆருக்கா (க) எனை ஆண்டனை!?  அகற்றிடில்

அகிலம் பழித்திடும் அருணாசலா .

யாருக்காக என்னை வந்து ஆண்டாய் அருணாசலா? அதுவும் நான் நினைக்காதபோதே என்னை ஆட்கொண்டு ஆளவும் ஆரம்பித்தாய். இப்போது என்னை அகற்றிவிட்டால் அகிலம் பழிக்கும் என்பதை மாணிக்க வாசகப் பெருமான் -

“நான் தனக்கு அன்பின்மை நானும் தானும் அறிவோம்

தான் என்னை ஆட்கொண்டது எல்லோரும் அறிவார் “  என்று திருக்கோத்தும்பி பகுதியில் தன்னை ஆட்கொண்ட விதம் பாடுவார். இவ்வாறு தனது ஆத்மா என்பது ஈசனே என்ற அனுபவம் அடைய வேண்டும். அதுவே முடிவு. அதுவே அத்வைதம். அப்படி இல்லாவிட்டால், ஈசனிடமிருந்து அனுபவத்தை அனுபவிப்பவர் தானாகவும் அனுபவம் கொடுப்பவர் ஒருவராகவும் நினைத்தால் மரணம் என்பது, விடைபெறும் தருணம் என்பது மனக்கவலை மிக்கதாகிவிடும்; அதனால் அபிராமி அந்தாதி (பாடல் : 89)பாடுகின்றது இம்முறையில்:

“உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும்போது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே”. ஆம். உடம்பில் பிறக்கும் கணத்தில் உயிர் செருகப்பட்டது. அது விலகும் வரை மனம் இருக்கும். நினைவுக்கு ஆதி என்பதே சிவசக்தி நிலையாகும்.

அதனை அடையும் நிலைக்கு செல்ல விடாமல், மனமாக தன்னைக் காட்டிக்கொள்ளும் உயிரின் போக்கு சிந்திக்கத் தக்கது.


****  


நான் ஒளவை பேசுகிறேன் (3) 3.12.25

  நான் ஒளவை பேசுகிறேன் (3) 3.12.25

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு.


ஏ மனிதர்களே ! செல்வம் இனிமை தருவதாக எண்ணுகிறீர்கள். அது  இன்பம் அனுபவிக்க வேண்டிய வயதில் இளமைப் பருவத்தில் கிட்டாமல் முதுமையில் கிட்டினால்  துன்பமே. எனவே இனிமையான செல்வமும் இனிமை இல்லாமல் போவதை சிந்தியுங்கள். 

(இளமையில் வறுமை வந்தால் ஒரு மனிதனால் இன்பம் அனுபவிக்க முடிவதில்லை) எனவே செல்வத்தின் தன்மை  இளமை முதுமை பொறுத்து மாறுபடுகிறது.

பெண் என்பவள் அழகு அழகு என்கிறீர்கள். ஆனால் நறுமணம் மிக்க மலர் என்றாலும் தோட்டத்தில் தேவைப்படும் பருவம் தவறி நறுமணம் மிக்க  மலராக இருந்தாலும் பயன் என்ன? எவருக்கும் பயன் தராமை போன்றே கணவன் இல்லாத பெண்ணின் அழகும் வீணாய்த்தான்  போகும். 

                                                   ( ஈசனால் சந்திப்போம்)


சந்த்யாவந்தனம்: (5) 3.12.25

  சந்த்யாவந்தனம்: 5 (3.12.25) 


வாமன மூர்த்திக்கு சூரிய தேவன் காய்த்ரி மந்திரத்தை உபதேசிக்கிறார். பிரகஸ்பதி தவம் காக்கும் பூணூலைக் கொடுக்கிறார். பிரம்மச்சரியத்திற்கு காப்பு ( ரஷை) போன்ற முஞ்சிக் கயிற்றை காஸ்யபர் இடுப்பில் கட்டினார். ஆயுளை வளர்க்கும் மாந்தோலை பூமிதேவி போர்த்தினாள். ஓஷதிகளின் கண்வன் சோமன் பலாச தண்டம் அளிக்கிறார்.கெளபீனத்தை தாயார் அதிதி அளிக்கிறாள். குடையை மேலுலக தேவதை அளிக்கிறாள். பிரம்மன் கமண்டலம் அளிக்க, சப்தரிஷிகள் தர்ப்பை அளிக்கின்றனர். உமாதேவி பிஷை இடுகிறாள்.

“பிஷாம் பவதீ

சாஷாத் உமா அதாத் அம்பிகா ஸதீ”

இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட  வாமனர் பிரம்ம தேஜஸ் பெற்று பிரகாசித்தார்.

தக்க சமயத்தில் ஒழுங்காக உபநயனம் செய்விக்கப்படும் ஒவ்வொரு சிறுவனும் வாமன பிரம்மச்சாரியின் திரு உரு போல தோற்றம் அளிப்பான்.

உபநயனத்தில் குருவானவர் சிஷ்யனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச் செய்து ஆசிர்வதிப்பது என்ன?

                                                               ( ஈசனால் சிந்திப்போம்)

Monday, 1 December 2025

நான் ஒளவை பேசுகிறேன் (2)

  நான் ஒளவை பேசுகிறேன் (2)

பாடல் (1)

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல் என வேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.


ஏ மனிதர்களே! நீங்கள் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள். மகிழ்ச்சி. அது ஏழைப்பையன் கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதாகவோ ; பேருந்தில்  கூட்டத்தில் உங்கள் அமரும் இடத்தை எழுந்து அவர்களை அமரச் செய்ததோ; அன்ன சத்திரம் கட்டுவதோ இருக்கலாம். அப்போது மனம் என்ன எதிர்பார்க்கிறது? அந்த உதவிக்கு பதில் உதவி - பிரதி உதவி - என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தயவு செய்து விட்டுவிடுங்கள். ஆம்.

நான் ஒரு தென்னை மரத்தைப் பார்த்தேன்( தெங்கு) . 

அந்த மரத்திற்கு ஒருவர் வேரில்  நீரை ஊற்றினார். அதன் தாள் (வேர்) அந்த நீரை ஏற்றுக்கொண்டது. 

ஆனால் அந்த தென்னைமரம் நீர் வார்த்தவருக்கு பதில் நன்றியாய் மீண்டும்  வேரினாலேயே தரும்  என்று நீர் வார்த்தவர் நினைக்க முடியுமா? 

தாளில் குடித்து தலையாலே ( மர உச்சி) தருகிறது.  

பல மடங்கு - உயர்ந்த விதத்தில் அந்த உதவி திரும்பி வரும் என்பது உண்மை.

நம்புங்கள் மனிதர்களே. இது உண்மை.

                                                                ( ஈசனால் தொடர்வோம்)

 





நான் ஒளவை பேசுகிறேன் (1) (மூதுரை விளக்கம் )

 நான் ஒளவை பேசுகிறேன் (1)

(மூதுரை விளக்கம் )


கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.


ஏ மனிதர்களே கேளுங்கள். தினமும் மலர் கொண்டு சிவந்த திருவுடல் ( துப்பார் திருமேனி) கொண்ட விநாயகரின் திருவடிகள் வணங்குவோம் வாருங்கள்

தும்பிக்கை உடைய விநாயகப் பெருமான் பாதம் வணங்குவாருக்கு 

1) சொல்வன்மை கிடைக்கும் 

2) நல் சிந்தனை கிட்டும் 

3) செந்தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருமகள் செல்வம் தருவாள் 

4) அவரது உடலை நோய் அணுகாது ( நுடங்காது) 


                                                                         ( ஈசனால் தொடர்வோம்)


அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (4)

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும்  (4)

பகவான் ரமணர் பாடல் : 3

அகம் புகுந்து ஈர்த்து உன் அகக் குகை சிறையாய்

அமர்வித்தது என் கொல் அருணாசலா


“ஈர்த்து என்னை ஆண்டுகொண்ட எந்தை பெருமானே” என்று சிவபுராணம் பகுதியில் மாணிக்கவாசகப் பெருமான் அருளினார். “ஈர்த்து” என்பது ஈர்க்கப்படும் பொருள் ஈர்க்கப்பட்டபின்னரே அறியும் நிலை ஆகும். உலகியலில் இருந்து ஈர்க்கப்படல் சுட்டி அருளினார் பகவான்.

அபிராமி அந்தாதி பாடல் :55 ல் “மின் ஆயிரம் ஒரு வடிவாகி விளங்குகின்ற அன்னாள்” ஒரு மின்னலையே பார்க்க இயலாத நிலையில் ஆயிரம் மின்னல் என்கிற சோதியை காண இயலாத நிலையில் என்ன செய்ய இயலும்? 

முகத்திலே கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் என்பது திருமந்திரம்.

புறக்கண்ணால் காண முடியாத அன்னையை அகக்கண்ணால் அன்னையை அறியலாம். மின்சாரம் கொண்டது மின்னல். மின்னல் கண்ணை ஈர்க்கும்.  கண்ணைப் பறித்தது என்பர். ஈரம் இருக்குமிடத்தில் மின்சாரம் எளிதாகப் பாயும். கருணை கொண்ட மனதில் அம்மையின் சாரம் பாயும்.

                                                         ( ஈசனால்  சிந்திப்போம்)



சந்த்யாவந்தனம்: (தொடர்:4)

 சந்த்யாவந்தனம்: (தொடர்:4) 

“உபநயனம்” எனப்படுவது இரண்டாவது பிறப்பின் வாசல் நிகழ்வாகும். “உப” என்பது பிரம்மத்திற்கு சமீபம் என அர்த்தமாகும். “நயனம்” எனபது ஆசார்யன் சிஷ்யனை “அழைத்துச் செல்லுதல்” என அர்த்தமாகும். 


மாதா பிதாவால் பிறந்த உயிர், உலக வாசனையால் மயங்காமல், சுழலாமல் உழலாமல் பிரம்மம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவது ஆசார்யன் மூலமே. 

பிராம்மணர்களும் ,ஷத்ரியர்களும், வைசியர்களும் முறையே 8,12,16 வயதிற்குள் உபநயன தீஷை பெற வேண்டும் என்பது தொன்றுதொட்டு வந்த பழக்கம். 

வாமன மூர்த்தியாக அவதரித்த பகவானுக்கு உபநயனம் செய்வித்த நிகழ்வை பாகவதம் அழகாக வருணிக்கிறது. அந்த வருணனை என்ன? 

                                                                 ( ஈசனால் தொடர்வோம் ) 


Sunday, 30 November 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (3)

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (3)


பாடல் 2ல் பகவான்: 

“அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் உற்று

அபின்னமாய் இருப்போம் அருணாசலா” என அருள்கிறார். 

கடையில் வாழைத்தாரில் தொங்கும். எல்லாம் தனித் தனியாக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஆனால் சில பழங்களில் உள்ளே இரண்டு கொண்டிருக்கும். வெளியே இரண்டு பழத்திற்கும் பொதுவான ஒரே மஞ்சள் தோலால் மூடிய வாழைப்பழம் பார்த்திருப்பீர்கள். அதனை ஒன்று என்பதா? இரண்டு என்பதா? ஒரு பழம்தான் என்று சொல்பவர்களுக்கு இரண்டு என வாதிடலாம். இரண்டு பழம் என்பவர்களுக்கு அது ஒன்றுதான் என சுட்ட முடியும்.

ஈசா என அகத்தில் அழகு என்ற அம்சமாய் நீ உள்ளாய். சுந்தரமும் நீதான். அழகு என்ற சொல்லுக்கு சுந்தரம் என்ற இணைச் சொல்லும் உண்டு. 

கல்லில் உள்ள எல்லா இடத்திலும் சிலையின் தன்மை உள்ளது அல்லவா. 

இரண்டையும் பிரிக்க முடியாமல், பின்னம்( சிதைப்பது) இல்லாமல் “அபின்னமாய் இருப்போம் அருணாசலா” என பகவான் அழைப்பது ஆன்ம குயில் கூவல் போன்ற அழகுடையது.


அபிராமி அந்தாதியில் (பாடல்:9) 

அழுதபிள்ளைக்குப் பால் தரும் அம்மையின் கனிவு குறித்த பாடல் இது. சீகாழியில் திருஞானசம்பந்தப் பெருமானுக்குப் பொற்கிண்ணத்தில் பால் சுரந்து புகட்டியமை பேசப்பட்டது.

“அம்மே நீ என் முன் வந்து நிற்கவே” என்ற கோரிக்கை வைக்கிறார் அபிராமிபட்டர். அப்படியெனில் அப்பன் சிவன் இல்லையா என ஐயம் தோன்றலாம். அப்படி அல்ல. சிவசக்தி என்றே ஒன்றாகக் குறிக்கிறோம். ஒன்றுக்குள் ஒன்று. 

அம்மை அப்பனாக வரச்சொல்லும் காட்சி இப்பாடலில் கேட்கப்படாமல் இருந்தாலும் ஏக வடிவே உள்ளது. அறிவின் வேலை த்தனையும் பகுத்துக் கொண்டே செல்வது. ஞானத்தின் வேலையோ பொதுமை கண்டு இணைப்பதும் இணைவதும் ஆகும்.

                                                           ( ஈசனால் தொடர்வோம் )



சந்த்யாவந்தனம்: (தொடர்:3)

 சந்த்யாவந்தனம்: (தொடர்:3) 

சந்த்யாவந்தனம் செய்யக் கற்றுக்கொண்டவ்ன் துவிஜன் அல்லது இருபிறப்பாளன் எனப்படுகிறான். தெய்வ சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்தில் இருபிறப்பாளன் - இரண்டாம் முறை பிறந்தவன் - என்று சுட்டப்படும். தரும சாஸ்திரம் இது பற்றி என்ன சொல்கிறது?

“பிறவியில் எல்லோரும் உறுப்பு வழி பிறந்தவ்ர்கள்தாம்.  ஞானக்கண்  திறக்கப்பெற்று பிரம்மத்துக்கு அர்ப்பணமாக கர்ம அனுஷ்டானங்கள் செய்யத் தொடங்கியபின்னர்தான் துவிஜர் அல்லது இரண்டாம் முறை பிறக்கிறோம். ( ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணோ ஜாயதே த்விஜ:”

ஒரு பறவை முட்டையாக முதலில் பிறந்தபோது குறுகிய முட்டையின் அளவே அதனுடைய உலகம். முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த பின்னரே புதியதொரு பேருலகை அது காண்கிறது. இது அப்பறவையின் இரண்டாவது பிறப்பு.

இதுபோலவே, குறுகிய மனப்பான்மையுடன் புலன்களுக்கு அடிமையாகப் பிறந்த மனிதன் அகக் கண் திறக்கப் பெற்று பேரானந்த வடிவான ஆன்ம ஒளியைக் காணும்போதே இருபிறப்பாளன் என்ற பெயருக்கு உரியவன் ஆகிறான். பூணூலாலும் சிகையாலும் மட்டுமல்ல.

யணூல் எனப்து வேதாந்தம்; நுண் சிகை ஞானமாம்.

                                                                      ( ஈசனால் தொடர்வோம்)