Wednesday, 30 December 2015

மார்கழி எனும் பெண்ணும் - மனம் எனும் பெண்ணும் ! - 15


மயங்கிய அறிவு மயங்கி இருக்கவே விரும்பும்.
இருட்டில் நடந்த வெளவால்களுக்கு
பகல் ஒளி எந்த பக்கம் என்று அறியவும் ஆசை வராது.
சேற்றில் குளிக்க ஆசைப்படுகின்றன நம் புலன்கள்.
அதிலும் கண் மூடி உறங்கும் மனதை செல்லமாக எழுப்புவதே கடமை.
“எல்லே !” என விளிக்கிறாள் ஒருத்தி
இன்னொருத்தி மனம் எனும் அடங்காப் பிள்ளையை “இளங்கிளியே...” என்பாள்
உடனே அடங்கா மனம் உஷாராகின்றது
“ சில்லென்று கூப்பிடாதீர்கள் எழுந்து வருகிறேன் இருங்கள்”
இப்போது நாமும் கொஞ்சம் சலிக்கிறோம்:-
“ நீ சொன்ன பழைய கதைகள்..... அப்பப்பா! அதெல்லாம்
உன் வாய்க்கே தெரியும்....! வாயில் வந்த கதையெல்லாம் சொல்பவள் நீ!”
அதட்ட ஆரம்பித்ததும் மனம் எனும் தோழி சொல்கிறாள்
“ எனக்கு பதில் நீயே போயிட்டு வா! நீங்களே நான் !”
இப்படி ஐஸ் வைத்து சொல்லும்போது
மனம் எனும் பெண்ணை அறிவு எனும் பெண் இன்னும் விழிப்பாகி
“ வேறு வேலை உனக்கு என்ன இருக்கிறது? எழு!” என்றதும் -
“சரி! எல்லோரும் வந்துவிட்டார்களா! எண்ணிச் சொல்டி” என்கிறாள்
(பிறரை ஒப்புமை செய்து தன் கடமை தள்ளிப்போடுகிறாள்)
அப்போதும் அறிவு எனும் பெண் சோரவில்லை
களைப்படையவில்லை
“வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை
பாடேலோர்  எம்பாவாய்!” என்கிறாள்
ஆகவே புலன்கள் சுவைக்கும் நம் மனது - முதலில் நம் கூப்பிடலை ஏற்காது -
கண்டித்தால் நம்மையே செல்லம் கொஞ்சி திசை மாற்றும்
தள்ளிபோட என்ன வழி? என்றுதான் பார்க்கும்! மாயந்தான் காக்க வேண்டும்!
                                     - தொடரும்.

 



மார்கழி எனும் பெண்ணும் - மனம் எனும் பெண்ணும் ! (1 -14)



ஆஹா என சந்திக்கிறார்கள்
இயற்கை மனம் என்ற பெண்ணும்
மார்கழி என்ற குளிரால் செய்த பெண்ணும்!

ஒருவரை ஒருவர் அழைத்து மகிழ்வர்
ஆண்டாள் திருப்பாவை முழுதுமே ஆனந்தக்குளிர்தான்
பெருமிதமான தமிழின் செல்வக்குளிர்
வெளிப்படையான பேச்சு இது அன்று
காதலின் பூமி முழுதும் கண்ணன் எனும் தெய்வத்தின்
இளமை பூசிய இரகசியத்தின் உச்ச கட்ட உரையாடல்கள்
ததும்பி வழிகின்றன பரிசுத்தமான ஆன்மாவின் கேவல்களாய்!
காதலின் குளிர்காலத் திருக்குறள் காமத்துப்பால் இது
இதில் முழுதும் அன்பின் ரசம் மட்டுமே உள்ளது
பூக்காத பூக்களெல்லாம் மணன் வீசுகின்ற மார்கழி இது
(1)
இயற்கை பேரான்மா
மனித உடலில் சிறு தங்கல் ஜீவான்மா
பெரிதுதானே சிறிதை அழைக்கும்! இதோ அழைப்பு !
ஒருத்தி அழைக்கிறாள்
எப்போது உங்கள் மதி நிறைகிறதோ
அப்போதே அது நன் நாள் தானடி! வா!  நீராடப்போவோம்!
நாராயணனின் அம்சமான கண்ணன்
நமக்கே நமக்கு அருள் தருவானடி
ஆமாம்! நமக்கே என்கிறேன் கவனியுங்கள்
பறை தருவான் அவனைப் பாடிப்புகழ்வோம் வருகிறாயா எழுவாயா
எப்போதும் உயர்ந்தோனுக்கே ஆசையுறு
எவன் சிங்கம் போன்ற உச்ச ஆண்?
கூர்வேல் நந்தகோபன் - அழகிய யசோதா மகன் தானே?
தெரியுமா அவனுக்கு சூரியன் போல கண்கள்
மேனி நிறம் மேகநிற கருப்பு!
(2)
வையத்துப் பெண்களே ! ஒன்று செய்வோம் வருகிறீர்களா..?
மனதாலேயே பாவை செய்வோம்
ஆமாம் மனசால்தான்
உடம்புதான் நெய் கேட்கிறது பால் கேட்கிறது
கண்கள் மை கேட்கிறது
கூந்தல் மலர் கேட்கிறது
பிறர் குறை கூற -  வாய் வம்பு கொடு  என்கிறது
மெல்லத் துயில் கொண்ட நம் பரமன் திருவடி பாடுவோம்
உய்ய வேண்டும் பிறவி தாண்ட வேண்டும்
துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் தானம் செய்ய வேண்டும் 
அது மனம் எனும் பாவையால் சாத்தியம்! சத்தியம்!
(3)
பெண்களே நாம் நன்றாக நம் கணவனுடன் வாழ
நமக்கு செல்வம் வேண்டும்... !ஆமாம்தானே? ஆனால்
நாம் நமக்கு மட்டும் வேண்டலாமா? அது தவறு
நாடு முழுதும் மாதம் மூன்று மழை பொழியவேண்டும்
அதை நம் மனப்பாவையிடம் சொல்வோம்
ஆக்க பூர்வமான கற்பனை கொள்வோம்
அதற்கு என்ன வழி ?
தனன் சிறிய கால்கள் ஓங்கிட
மூன்று உலகமும் அளந்த உத்தமன் பேர் பாடினால் போதுமடி.
வயல்களில் நீரும் மீனும்  நெல்லும்
குவளை மலர்களில் வண்டும் பிறகு வரும்
கறவைப்பசு மாடுகளை வள்ளல் பெரும் பசுக்கள் ஆக்கிட
அவன் பேர் மட்டுமே போதும்! புரிகிறதோ?
(4)
ஆழி மழைக் கண்ணா!
கடல் நீரே ஆவியாகி மழை நீர் ! ஒப்புக்கொள்கிறோம்
நீரின்றி அமையாது உலகு! ஒப்புக்கொள்கிறோம்
ஆனால்
சமீப 2015 டிசம்பர் மழையாய் பொழியாதே
எமது கணவர் மட்டுமல்ல நாங்களும் பணிக்குச் சென்று வரவேண்டும்
அப்படிப் பட்ட மழை பொழிய வை
அந்த மழை மிலிடரி படை போல சீரான கடமை மழையாக இருக்கும்
அப்போது மார்கழி நீராட மிகப்பிடிக்கும் கண்ணா
ஆனால் எமக்கு மட்டுமே மழை கேட்க மாட்டோம்
உலகம் முழுதும் உன் அன்பு மழை பொழிய வேண்டும்
எப்படி என்று எங்களைச் சொல்ல வை! கண்ணா
சாரங்கம் என்ற வில் விட்டு நீங்கும் சர மழை அது
இடி ஓசை வலம்புரி சங்கு போல் அதிரும்
மின்னல் ஒளி பத்மநாபன் சக்கரம் போல் ஒளிரும்!

(5)
பெண்களே ! எது நமக்கு பாரம் தெரியுமா?
நினைவுகள் தான்!
என்ன செய்யலாம் நெருப்பினில் வீழ்ந்த தூசு போல்
மனம் லேசாக வேண்டும்
ஒரு வழி இருக்கிறது
நம் மன்ப்பாவை தூய்மையானவள்தான்
அவள்தான் அந்த அழகிய வழி சொன்னாள்
கண்ண பெருமானை வாயினால் பாடி
மனதினால் சிந்திக்க வேண்டும் ! simple!
(6)
வருங்கால மணப்பெண்ணே நிகழ்கால மனப்பெண்ணே
உனக்கு ஒரே ஒரு சிக்கல்
புவி வெப்ப மயமாவதுபோல்
உன் உன் உள்ளம் துன்புறுகிறது
ஆனால் இதை சுலபமாக சமாளிக்கலாம்
ஆண்டவன் கண்ணன் நமக்கு ஒரு நல் வழி செய்தான்
அது என்ன
எத்தனை பெரிய size ஓசை என்றாலும்
நமது சிறிய காதுகளால் நாம் கேட்க முடியும்
கேளாதனவெல்லாம் கேட்பிப்பான் என்கிறார்கள்
அவன் தந்த அந்த அகச்செவியால்
 மார்கழி மாதத்தில் முனிவர்களும் யோகிகளும்
“ஹரி ஹரி” என்று ஒலிக்க எழுகின்ற ஓசை மட்டும்
உன் உள்ளம் புகுந்திட அனுமதி பெண்ணே!

(7)
கீசு கீசு என்று ஆனைச்சாத்தன் குருவி கத்தினாலும்
ஆய்ச்சியர்
தயிர் கடையும் ஓசை கேட்டாலும்
கேட்டுக்கொண்டே இருக்க
கண் மூடி தூங்க முற்படுகிறோமில்லையா
அப்போது நாம் பெண்கள் அல்ல
பேய்ப்பெண்கள் ஆகிறோம்
கண்கள் மூடினால் அவன் உலகம் இருளுமா
செவிகள் மட்டும் திறந்தால் தரிசிக்க இயலுமா
அவன் வர வேண்டும் என்று வாசல் நோக்கு
 நாராயணன் மூர்த்தி கேசவன் புகழும் பாடினார்களே
அடடா! அப்போதும் கேட்கவில்லையா
நீ பேய்ப்பெண் list தானா! கதவைத் திற! அகம் திற.
(8)
எனக்கொரு யோசனை
ஏன் அவன் அருள் இன்னும் கிட்டவில்லை
அவனோ தேவாதி தேவன்
எல்லாம் தெரிந்தவன் ..
ஆனாலும் அவனுக்கு ஏன் புரியவில்லை
சன்னதி முறையீடு என்பார்களே ஆம்! நேராகச்சென்று
அவன் சந்நிதியிலேயே நம் மனக்குறை சொல்வோம்
கிருஷ்ணன் அவன் இருக்குமிடம் சென்று நாம் சேவித்தால்
“ஆ!” என்று ஆச்சரியப்படுவான் பிறகு “வா!” என்று ஆராய்ந்து
அருள் செய்வான்

(9)
மனம் என்னும் விளக்கு அவனை நி¨னைகிறதடி
இருந்தாலும்
தூமணி மாடம் முழுதும்
சுற்றிலும் ஏன்
விளக்கை வைத்து விட்டுப்போனார்கள் தோழிகள்?
விளக்குக்கு முன் விளக்கு எரிய வேண்டும்
அவன் உள்ளே உள்ளான் என்று தெரிந்தால் போதுமா
வெளியிலும் நினை
மாமாயன் வைகுந்தன் மாதவன் என்று அவன் நாமம் சொல்க!
(10)
இப்போதல்லடி!
முற்பிறவியிலேயே அவனுக்காக நீ நோன்பு இருந்துள்ளாய்
அதனால்தானடி நீ சொர்க்கம் புகுந்தாய்
கவலைப்படாதே
மனம் மயக்கப்படாதே
விழிப்பு நிலை தவற விடாதே
நிச்சயம் அந்த பொன் கணம் வரப்போகிறது
உன்னை ஆட்கொள்வான் பாரேன்
தூங்காதே ! கும்பகர்ணன் தூக்கம் உனக்கு வேண்டாம்
(11)
பசு மாடுகள் பால் கறக்கவும் தெரியும்
பகையை போரில்  அழிக்கவும் அவனுக்குத் தெரியும்
குற்றம் ஒன்று கூட சொல்ல முடியாத அவனின்
செல்வப்பெண்டாட்டி நீ அல்லவா
எதற்காக உறங்குகிறாய்
அவன் மனைவி நீ! விழிப்பு நிலை பெறடி !
(12)
மனதுக்கு இனியானைப் பாடினால்
என்ன செய்ய வேண்டும்?
கொட்டும் பனி எமது தலையில் வீழ
உன்  வீட்டு வாசலில் பாடும்போது
வாய் திறந்து ஏதாவது சொல்லலாமே!
தூங்குவது போலும் சாக்காடு உனக்குத் தெரியுமே
அவன் உனக்காக நீ அவனுக்காக இது தெளிவு
அவன் பாடல் புகழ் பாடேன் ஆனால் எழ வேண்டும் நீ
அனைத்து வீட்டிலும் உள்ள பெண்கள் அனைவருமே உணர்ந்தனர்
அவன் பெருமை பாடப் பாட
அவன் பிரிவு உணராமல் விழிப்பு நிலை உணரப்படும்
எம் பாவாய்!
(13)
நீராட நீ வா பெண்ணே
குளிர் நீரில் நீராட நீ வா பெண்ணே
உன் உயரம் குள்ளமாகும்படி
சில்லெனப்பிழியும் ஒரு மின்னல் குளிர்தான்!
ஆனாலும் நீ தாங்க முடியும் ! எழு குளி நீராடு
பூக்காம்பை கிள்ளுவதுபோல் சீதை நாடிய இராவனன் தலை
கொய்யப்பட்டது அன்று
வெறும் குளிருக்கு
உறக்கம் எனும் தற்காலிக இன்பத்துக்கு
படுக்கையில் கிடக்கிறாய் இன்று!
நீ மட்டுமெழுந்து நிகழ்காலத்தை உணர்ந்தால்
கவலை எனும் மனக்குளிரும்
குளிர் நீர் எனும் உடல் குளிரும் போய்விடுமே கண்மணீ! 
 (14)
ஏய் என்னடி சொன்னாய் நேற்று!
“எனக்கு விழிப்பு நிலை அதிகமாகி விட்டது
நாளைக்கு நானே வந்து எழுப்புவேன்” என்றவளே
Over confidence அது!

ஒன்று தெரியுமா
உடம்புக்கு வெட்கம் உண்டு
நாக்குக்கும் வெட்கம் வேண்டும் என்றௌ அறிந்துகொள்
உன் வீட்டில் மலர்கள் வாய் நெகிழ மலர்ந்தன
உன் வீட்டுக்கு வெளியே
செங்கல் நிற ஆடைத்துறவிகள்
வெண்பற்கள் இருளில் ஒளிவீச நடந்துசெல்கிறார்கள்
சங்கு ஒலிக்க கோயில் நோக்கி விரைகிறார்கள்
பார்த்தாயா இல்லையா! 
                        - தொடரும்

Friday, 25 December 2015

அப்பா! உனக்கு ஆயிரம் வார்த்தைகள்


அப்பா என் ஆருயிர்த்தேனே
அடியோடு உன்னை இழந்து என் ஆவி சோர்கின்றேனே
செப்டம்பர்30 நள்ளிரவு ஏன்தான் வந்ததுவோ காந்திபோல்
எளிமைக்கு வந்ததுவோ உன் பிறப்பின் இரசியம்
என்றும் போல் இருப்பதில்லை மரண நாட்கள்
இருப்பது போல் இருந்து சந்தன ஊதுவத்தி மணமாய் மறைய
உன்னிடம்தான் கற்க வேணும்
ஏதோ கூப்பிட்டதுபோல
மாசிவ் அட்டாக் நிகழ்ந்து நெஞ்சு அடைக்க
சுழன்ற நாக்கை கடித்துக்கொண்டு இரத்தம் ஒழுக
பாத் ரூமில் சரிந்து கண் மூடி மறைந்தாயே
சிவன் தான் வந்தானோ
எஸ்.ஆர். எம். ஆஸ்பத்திரியில் விட்டோமே என
கவ்விடத்தான் கொண்டானோ
பொக்கெனப் போனீரே
சிறு மூச்சா பெரு மூச்சா
காண வேண்டும் மரணக்காரா நீ அறிவிப்பாயா
30ம் தேதியே வாடகைப்பணமும் மளிகைப்பணமும்
அட! கரண்ட் பில்ல்லும் கூட கட்டிவிட்ட
நிதி உணர்வு தனி உணர்வு விழிப்புணர்வு
 அட ! 84 வயது உனக்கென்றால் எவர்தான் நம்புவர் காண்
தடங்கல்களில் சுலபமாய் நீந்திய அன்புப் படகே
எங்கே போனாய்
உனக்கு பென்ஷன் 85லும் வாங்கும் ஆசையும்
பெருமிதமும் ஆரோக்கியமும் குரல் பலமும் இருந்தன
இரவுப்பணி நள்ளிரவில் எலக்டிரிகல் சாதனப்பணி பயம் என்றேன்
வான் கலந்த மாணிக்க வாசகரின் திருவாசகம்
துன்பம் வரும் நேரமெல்லாம் படி என்றாய் ஆஹா
சிவபுராணம் சொல்லிக்கோ என்றாய் சகஜமாய்
நான் கவ்விக்கொண்டேன் பயம் போயிற்று
தொற்றிய பயம் துரத்தும்போது தப்பிட
உன்னையறியாமல் எப்போதோ கற்பித்தாய்
என்றாலும் நான் பற்றினேன்
எத்தனை எத்தனை இன்பங்கள் நீ தந்தாய்
அத்தனையும் கூறிட
ஒரு நெஞ்சு எனக்குப் போதுமோ ஏன் பிரிந்தாய்
நெஞ்சு கரிக்கும் என்று சொல்லி
எந்த உணவு பின்னாலும் உனக்குப்பிடிக்கும்
மாவடுவும் பழைய சோறும் காம்பினேஷன்
இரவில் நீ உண்ணும் ஓசை
உறிஞ்சும் ஓசை அள்ளி அள்ளி உண்ணும் ஓசை
இப்போதும் கேட்குமப்பா
ஆயிரம் கதைகள் சொல்லி ஆயிரம் அனுபவங்கள் சொல்லி
மகனை மகளை மாணவரை மாணவியை
காண்பவர் எவராகினும் அறிவின் சிகரமாக்க
பேதமில்லாமல் முயன்ற
உன் அன்பை வெட்ட வெளி ஞானம் என்பேன்
குளத்தில் சிமெண்ட் கட்டை மீதிருந்து
என்னைத் தூக்கி வீசிப்போட்டு
ஐயோ அப்பா காப்பாற்று என்று கத்திக்கொண்டே
நீரை அழுத்தும்போது “அதாண்டா நீச்சல்!” என்ற துணிவு
மணக்கால் குளத்தில் நீச்சல் கற்றுத் தந்து
 மீன்கள் போல் நீரில் நீந்தும் ஆசை தோற்றுவித்தாய்
பேராசிரியர் சத்திய சீலன் உன் தோழன்
அவர் பெயரே எனக்கும் சேர்த்து
நட்பின் பெருமை பூண்டாய் உலகில் உன் போலுண்டோ
மேடையேறி பேசுக என் மகனே என  நீ
நேரடியாய் சொல்லாமல் இரவென்றும் பகலென்றும்
சத்தியசீலன் அறிவொளி பட்டிமன்றம் கூட்டிச்செல்வாய்
உன் நட்பெல்லாம் எனக்காக்கி
இளம் வயதிலேயே
என்னைத் தமிழ்க்கிழவனாக்கினாய்
தனித்த நறும் சொல் மட்டும்தானா
அன்பென்ற இணைப்பெல்லாம் இலக்கியமெல்லாம்
புதுக்கவிதை சாரம்தான் என்று
சுஜாதா எனை பாராட்டிய கணையாழிக் கூட்டம் வந்தாய்
இலக்கியபீடம் விக்கிரமன் ஐயா நெய்வேலி விருதுதர
அப்போதும் என் அருகே வந்தாய்
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ப்ரேமி தொடரில்
என் கவிதையை ஜேம்ஸ் ஐயராக அவர் முழங்க
ஊருக்கு ஊர் என் பையன் கவிதை என் பையன் கவிதை என்றாய்
நிமிடத்தில் சுதந்திர உணர்வு கொள்ளும் சுதந்திர எண்ணம்
உனக்குண்டு ஆதலினால்
எப்போதும் விரைந்து பறக்கும் பேச்சிலே வித்தை செய்தாய்
காவியத் தலைவன் போல் ஒரு கணம் உன்னை உணர்வாய்
கால் நொடியில் நாம் ஒன்றுமில்லை என்பாய்
ஞான நிலை தத்துவ நிலை
இரண்டின் நிலையும் மாறி மாறி பயணம் போனாய்
கல்வியிலே உனைப்போல விடாமுயற்சி இளைய தலைமுறை
பெற வேண்டும் என்று எனை நினைக்க வைக்குமளவு
மலை போல் இரவு முழுதும் விழித்துப்படிப்பாய்
ரோடு மேஸ்திரிக்குப் பிறந்த எட்டாவது பையன்
என்ற மனப்பான்மை பெருமையாய் கூறுவாய்
காபி ஆற்றும் வேலை செய்து புத்தகம் இரவல் வாங்கி
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்பாய்
திருப்பராய் துறையிலும் சிதம்பரத்திலும் கற்றாய்
நான் டிப்ளமா சிதம்பரத்தில் படித்தபோது
நீ M.Ed படித்தாய்
இரவு நேரத்தில் வாடகை வீட்டின் வெளிச்சம் போதாமல்
ஒரே ட்யூப் லைட்ட்ட்டின் கீழ் படிப்போமே அப்பா!
திரிசிரமலை புராணம் நீயும் சத்தியசீலனும் கலந்து எழுதிய
பக்திக்காப்பியம் ஆனாலும் நீ தீவிர பக்தனல்ல
உலக வாழ்க்கை பக்தன் என்றே உன்னைக்காட்டி வந்தாய்
எல்லோரும் நம்பி விட்டோம்
தம்பிக்கு பெரம்பலூரில் வேலை கிட்டியதும்
சிதம்பரம் நடராஜர் பொன்னம்பலத்தை
மொட்டை அடித்த தலையோடு அங்கப் பிரதஷ்ணம் செய்தபோது
உன்னையுமறியாமல் உன் பக்தி உலகுக்கு
சிறு முளை காட்டிற்று
உலகுக்கு இருக்கும் ஒரே வழி
நமசிவாய மந்திரமே என்று
ஒரு தரம் ஒப்புக்கொண்டாய்
“எனக்கு ஒரு முறை நீச்சல் வராமல்
குளத்தில் இறக்கும் நிலை
வந்தபோது இராம நாமம் காப்பாற்றியது அதனால்
அதுவே எனக்கு இலகுவாய் வருகிறது”  என்றும் சொன்னாய்
நடப்பு செய்தி எதுவானாலும்
உன் கருத்து உன் சிந்தனை
அதனை மறுக்கும் முதலில் பிற்பாடு வளையும்
நாக்கில் ஒலிக்கும் சொற்கள்
நெகடிவ் தன்மை போல் அச்சம் தரும்
இங்கே இருப்பதை எதிராளிக்குப் போய் சொல்லி விடும்போல
செய்தி சொன்னவரை கலங்க வைக்கும்
கீதை கண்ண பரமாத்மா போல
எல்லோருக்கும் பொது என்ற தன்மை கொண்டதனால்
எல்லோரும் உன்னை வா வா என்றாலும் ஏதோ
உள்ளே கொஞ்சம் அஞ்சினர்
ஆனாலும் பொது மனிதர் ஒருவர் பொது ஜன விரோதி என
நினைக்க இடம் ஆனாய்
ஆனாலும் என் கடமை பொதுக்கருத்தே என்றாய்
என் கருத்தை எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்
என்று கண்ணதாசன் போல  எடுத்துச்சொன்னாய்
புத்தகம் அச்சிடுகிறேன் என்று சொன்னால் போதும்
உடனே கவலைப்பட்டு முதல் ஆளாய் தடுத்திடுவாய்
புத்தகம் விருது வாங்கினாலோ
“என் பிள்ளை !” என்று உச்சி மோர்வாய்
உன் சிடுக்குகளும் நேர்ப்புள்ளிகளும் கோணல்களும்
என் திருமண வாழ்க்கைக்குப் பின்
என்னைத் திணற வைத்தன
ஆனாலும் என் மனைவி கஸ்தூரிபா போல
என் இயலாமை மாற்றி  தனைக் கொடுத்து எனக்கு பலம் தந்தாள்
உன் முதுமையெல்லாம் அவள் ஆதரவாக கனிவுடன் இருந்து
எனக்கு நான்கு கரங்கள் என இயங்கினாள்
கடைசியாய் தீபாவளிக்கு காரில் அழைத்து வந்தபோது
“தலை தீபாவளி மாப்பிளை!”  எனப் பெருமிதப்பட்டாய்
(அது கடைசி என்று யாருக்குத் தெரியும்)
அவசரத்தில் தவறாகப் புரிந்து கொள்வதில் உன்னைப்போல்
அசகாய சூரர் யாருமில்லை என்றாலும்
அத்தனையும் வெளிப்படையாய் சொல்வாய் குழந்தை போலே!
குஷ்ட ரோகிக்கு உதவுவதென்றாலும்
இல்லாதவர்க்கு இரக்கப் படுவதென்றாலும்
கனிவு உந்தன் சொந்தம்
ஆனால் சிறுகணமும் அவமானம் தாங்காய்
திருக்குறளில் முந்திரி பருப்பு போலே
முத்து முத்து வாக்கியம் பகிர்வாய்
“குணம் என்னும் குன்றேறி நின்றார் சினம்
கணம் ஏனும் காத்தல் அரிது” என்பதாக
உன் சினம் நியாயம் செய்வாய்
எத்தனை எத்தனை ஊன்று கோல் சொற்கள்
அத்தனையும் நீ உருவாக்கின சொல் சிற்பங்கள்
அடடா அடடா
“எதிர்பார்த்தால் ஏமாற்றம்”
“பணம் கிடக்கு பாஷாணம்”
“கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்
யாரே அனுபவிப்பார் அந்தப்பணம்”
“நான் முந்திண்டா நோக்கு நீ முந்திண்டா நேக்கு”
“If you save a penny , a penny will save you”
“A thing for a place and a place for a thing”
“Waiting for mahatma”
“ a stitch i time saves nine”
எத்தனை எத்தனை
கொத்து கொத்தாய் நெஞ்சில் கொட்டிவிட்டுப் போனீரே
மரியாதையாய் நடத்துகிறேனா அப்பா என்றால் -
“நீ எனக்கு அப்பா ஆயிட்டேடா நாங்க உன் பிள்ளைகள்” என்றீர்
கோமாளிகளோடு பேசவும் தெரியும் அப்பாவுக்கு
அப்துல் கலாம் ஆங்கிலமும் குறட்பாவும் சிந்தனையும் தெரியும்
அப்பா! நீங்க நல்லாசிரியர் விருது வாங்கலியே ? என்றால்
அடுத்தகணம்
அது “நல்- ஆ- சிறியர்!” விருதுடா என்பீர்
எதுவும் எகத்தாளம் செய்யப்படாமல்
உன்னிடம் தப்பியதில்லை
உன் அன்னைப் பாசமும்
மேட்டுக்குப்பம் சிவப்பிரகாச சாமிகள் பாசமும் தவிர!
எதையோ இழந்தது போல்
நானும் என் மகளும் என் மகனும்
உணர்ந்து கலங்குகிறோம்
அப்பா நம்முடன் தான் உள்ளார்
என்கிறாள் குழம்பிய மனைவி
கடைசியாக போனில் “வாரா வாரம் பேசும்மா”
என்றாரே என்கிறாள்
இல்லை இல்லை நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்
அதற்குள் டெத் சர்டிபிகேட் வந்துவிடும்போல் உள்ளது
இருப்பதும் இல்லாமையும்  கலந்து துன்பமுறுகிறோம்
நான் அவர் வேட்டி சட்டை உட்பட
மேட்டுக்குப்பம் இல்லத்திற்கு கொண்டு சென்றோமே
அப்படி எனில் அப்பா இல்லை தானே என நினைக்கிறேன்

“என் சாம்பலை மேட்டுக்குப்பம்
சிவப்பிரகாச சாமிகள்ட்ட கொடு”என்ற தியாக
உணர்ச்சி வாக்கியம் நெஞ்சை அறுக்கிறது  
இல்லை இல்லை என்கிறேன்
நீங்கள் இருக்கிறீர்கள் இருக்கிறீர்கள் என்றும் சொல்கிறேன்
அதற்குள் டெத் சர்டிபிகேட் வந்துவிடும்போல் உள்ளது
இருப்பதும் இல்லாமையும்  கலந்து துன்பமுறுகிறோம்
இன்பமான நிலை இல்லை இது
மந்திர ஒலிகளால் அஞ்சலி செய்ய
சோதக கும்பம் - திதி மாசிகம் வந்து வந்து போகுது
அப்பா உனக்கு உன்னை அறியாமலே
ஆண்டவன் அருள் துரத்திற்று
ஆதலினால் நெருப்பில் வாய் வைத்தாலும்
முடிவில் அது இனிப்பாகவே மாறி உனைத் தூக்கிற்று
 அந்த கால அனுபவ முத்திரைகள் என்றாலும்
அவர் அவர் அனுபவம் மதிப்பாய் விலகுவாய்
Everybody is an individual என்பாய்
“கண்ணிலே என்ன உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்” 
கண்ணதாசன் பாட்டை எம்.எஸ்,வி. குரலில் பாடுவாய்
ப்ரீசர் பாக்சில் இருந்து எங்களை யெல்லாம் பார்த்தாய்
வறுமைக்கு கலங்காதே உன் நேர்மை உன் சொத்து
அஞ்சாதே என்றாய்
கற்பதில் உன்னைபோல் மாணவ மனம் எனக்கு கொடப்பா
அஞ்சாமையில் அன்பில் நட்பில் இயற்கை நேசிப்பில்
எனக்கு உன் பலம் கொடப்பா
Be bold ! say yes or no! உன் இஷ்ட வாக்கியம்
What is lost! Un conquerable will that i have
என்பது உன் ஜீவ வாக்கியம்
ஏசு பிறப்பு நாளில் எழுதுமிக்கவிதை கண்டு
எழுந்து வா என் அப்பா என்றால்
“மேப்படியான் மோகனய்யர் பாத்துப்பான்” என்பீரோ
அழுகின்றேன் கண்ணீர் வாராமல்
அதுக்கும் ஏதேனும் சொல்வீரே அப்பா
“நானேதான் நீ ஆயிடுக”
அழுத்திச்சொன்னீர் செல்போனில்
ஆசி தருக அருள் தருக தெம்பும் வழியும் தருக!



Saturday, 19 December 2015

இருக்கும் ஒரே கேள்வி



மூச்சிரைக்க மூச்சிரைக்க இலக்குக் கோட்டைத் தொடும் நேரம்
நான்கு ஐந்து பேர் அமுக்குவர் உனைச்சூழ்ந்து !
தெம்பிருந்தால் வா ! அதை விளையாட்டாக விளையாடு
அதுவே “கபடி” கற்றுத் தரும் பாடம்.
ஒரு சிலரை அவுட்டாக்க நொண்டியடித்தாவது முயல்க
உன் மூச்சு இரைக்கும்
அதையும் விளையாட்டாக விளையாடு அது
“நொண்டி” விளையாட்டு பழக்கும் பாடம்
ஏதோ தருவதுபொல் வரிசையாக அமர வைத்து
 ஒருவர் முதுகுபின்னே ஒருவர் மறைந்து
எதிர்பாரா நேரத்தில் கிளம்பிவிட்டு “போ!” எனத்துரத்தும்
வாழ்க்கைத் தன்மைதான் “GO GO” விளையாட்டு
உற்றுப் பார்த்தால்
“கீச்சு கீச்சு தாம்பாளம் கியான் கியான் தாம்பாளம்” முதல்
ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் வரை
ஒவ்வொரு விதமான  விளையாட்டிலும்
புதைந்திருக்கிறது ஓர் சூட்சும வஞ்சகப் பயிற்சி
அப்படியிருந்தும் மனிதர் நடுவே
விளையாடுவாயா கடைசி வரை?
முட்டியில் சிராய்க்க அடிபட்டாலும் ஏமாந்தாலும்
சிநேகித்தால்தான் உரசல்களும் விளையாட்டாகும் என உணர்வாயா?
அதுதான் மனித உறவில் இருக்கும் ஒரே கேள்வி!

Wednesday, 16 December 2015

மலை உச்சி வார்த்தை


அன்று ஒரு நாள்
பர்வதமலை உயரத்திற்கு
நானும் மகன் அருண்சித்தார்த்தும் ஏறலானோம்
பயணப்பட பயணப்பட நடந்துவந்தது  முதலில் உற்சாகம்
வெய்யில் ஏற ஏற தனிமையும் களைப்பும் கூட ஏறின
சுற்றிலும் பாறைகள் சுற்றிலும் பாறைகள்
மலை உச்சி நெருங்குவோமா என ஆகிவிட்டது
அங்கிருந்து தரையைத் தேடினால்
அது ஆகாயமாய் விலகித் தெரிந்தது
ஏறு ஏறு விடாதே இலக்கை அடை என்று மூச்சு விட்டோம்
அயர்ச்சி வாட்டும்போது சுழன்ற கண்களில்
ஒரு பாறையில்
அம்பிகையே எழுதியதுபோலவும்
பாரதியார் வைத்த மீதி வார்த்தை போலவும்
கண்டேன் அச்சொல்லால் மன உச்சிக்குப் போக வாய்த்தது
அது என்ன சொல்? ஆ! மனனம் செய் நெஞ்சே -
“ஏக்கம் தவிர்”


 

Tuesday, 15 December 2015

நூலும் நூலும்




அசையும் மெல்காற்றின் நடுவே
வேப்பமரம் தாண்டி நடந்தபோது
ஏதோ அந்தரத்திலிருந்து இறங்கிய பச்சைப்புழு ஒன்றை
பள்ளிக்கூடத்தில் பார்த்ததுபோவே
கண்ணறியாமல் மெல் சரடாய்
குதூகலமாய்க் காணநேர்ந்தது
மரம் நீங்கி தொங்கிக் கொண்டிருந்தது சர்க்கஸ் போல்
தன் நாவிலிருந்து நூல் கட்டி
உயர மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறது .
நாக்கில்  நல்ல நூலால் என்னால் ஏற முடிவதுபோல்
நெஞ்சில் நல்ல நூல் இருக்கும் மனிதா
உன்னாலும் மேலேற முடியும்”
என்று சொன்னது அரைக்கணம் உணர்ந்தேன் பிறந்தேன்!

Monday, 14 December 2015

காலை ஆபீஸ் வரும்போது



காலை ஆபீஸ் வரும்போது
மஞ்சள் காமாலை தடுப்பென அப்பா உணர்த்திய
“சி” வைட்டமின் சிகரமென அப்பா பதிவித்த
செடி இலைகளைப்பறிக்கும் போது தவறுதலாய்
வேருடனும் வேர்மண்ணுடனும் இறக்க நேரிட்டது அது
என்ன இருந்தாலும் அப்பா பறித்தது போலவோ
அவரின் லாவகம் போலவோ வராது என்பதை
உணர்த்தவும் அவகாசம் தராமல்
காய ஆரம்பித்தது கீழாநெல்லிச்செடி
 

Sunday, 13 December 2015

விண்ணப்பக் கலிவெண்பா ( 320 வரை)


பொன்னுக்காகவும் பெண்ணுக்காகவும் பொருளுக்காகவும் அலைந்து
துக்கம் மிகுந்த இடங்களில் வலம் வந்து சஞ்சரித்தேன்
உன் கோவில் வலம் வர உன்னைப் பணிய நினைத்ததில்லை
பெருத்த செல்வமுடையோரை கை கூப்பி புகழ்ந்தேன் வாழ்த்தினேன்
உன் சந்நிதியில் கை கூப்பி வணங்கியதில்லை
அற்ப நெறி மனிதர்களான மிண்டர்களை வியந்தேன்
நினது தொண்டர்களை கூடவும் இல்லை
ஆன்ம விசாரணை செய்யவுமில்லை
காண்பவரை கடுகடுத்து வெறுத்த முகத்துடன் பார்ப்பேனே தவிர
எந்த நாளிலும் முகமலர்ச்சி ஏற்றதில்லை
நல்நெஞ்சமாம் சிவநெஞ்சை பிறரும் பெற வேண்டி தொண்டர்கள்
உன் புகழை நவில்வது கேட்டு
கல் நெஞ்சை சிறிதும் கரைத்தது இல்லை
தண்ணீரின் தண்மையும் தன்மையும் ஒத்திட்ட
பண்களால் பாமாலையால் துதித்து
கண்ணீர் கொண்டு உன்னை யான் துதித்ததில்லை
தண்ணீர் போல் நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பரை
அஞ்சேல் என ஆட்கொண்டதுபோல்
என்னை ஆட்கொண்டதில்லை
“இவர் மெய் அடியார்” என மேலோர் புகழ்வதற்காக
வித்தகா! உன் பொன் அடிக்குப் பொய் வேடங்கள் பூண்டுள்ளேன்
மெலிவைத் தருகின்ற ஆனால் புதுமை மிகுந்த
பணத்திற்காக புணர்ச்சியில் ஈடுபடுத்தும் பெண்கள் புணர்ச்சிக்காக
கலவி எனும் பிறவி தரும் குழியில் நான் விழுந்தது உண்டு
தூயவர்களைக் கூட மதித்து எண்ணாமல்
அவர் முன்னே ஒரு விதமாக
இல்லாத இடத்தில் ஒரு விதமாக என் இயல்பில் பேசியது உண்டு
மானத்தைப் போற்ற வழியில்லாமல்
மனம் நொந்து இரப்பவர்களுக்கு
தானம் செய்பவரைத் தடுத்தது உண்டு
வழக்கு உண்டாகும் போது
குறைவிலாத அன்பு வார்த்தைகள் பேசாமல்
ஒருதலைபட்சமாக நின்றது உண்டு
உன் அடியே தஞ்சம் எனத் தாழாமல்
ஈரம் இல்லாத நெஞ்சருடன் கூடித் தாழ்ந்தது உண்டு
குற்றமில்லாத தாய்மை கொண்ட உன் சந்நிதி வந்தும்
அன்பு வெளிப்பாடு இல்லாத ஒதிய மரம் போல் நின்றதுண்டு

தீயவினைகளை நிறுத்திக்கொள்ளாத
செல்வர்வீட்டு வாசலில் செல்வத்திற்காக
கேட்கக்கூடாத சிவநிந்தை கேட்டதுண்டு


புலால் உண்ணும் புலையர்கள் போல்
கொடிய ஆணவத்தால்
புண்ணியரை சொல்லாத வசை எல்லாம் சொன்னதுண்டு
நல்லவர்களைப் போற்றாமல்
பொய் உடம்பைப் போற்றி பாதுகாத்துக்கொண்டு
உடம்பின் மூலமாக சிவஞானம் பெற
சிவபூசை செய்யாமல் இருந்ததுண்டு
“இறையன்பனே! எனக்கு சோறுதா” என்று இரக்கும்போது
கோபம் கொண்டு நாய் போல் குரைத்து
வெருட்டியது உண்டு
மனம் வாக்கு செயல் மூன்றும் வேறு வேறு திசை போகவிட்டு
சிவஞானம் சித்திக்காமல் என் தந்தையே
உன்னைத் தொழாமல் இருந்தது உண்டு
நீருக்குள்ளேயே கிடந்தாலும் கல் இளகாதது போல
ஞானிகள் அறிவுரை கேளாமல்
நிலப்பாதையில் எல்லைக்கல் போலவும் நின்றதுண்டு
சஞ்சிதவினை எனும் முன்னை வினை ஆழ்த்துவதால்
அழுக்கு உலகின் அற்ப மகிழ்ச்சிக்கு மயங்கி
உன்னை வாழ்த்தாமல் மறந்ததுண்டு
எலும்புகளை அணிகலனாகப்  பூண்டவனே 
நிலையான நின் பொன் வடிவம் காண முயலாமல்
வீண் காலம் தாழ்த்தியதுண்டு
தாங்கள் உயர வேண்டும் என முயற்சிக்காமல்
தனக்குரிய பெருமைகளைக் கொள்ளாமல் இருக்கும் நாட்டிலே
இரை தின்றும் பிறருக்கு உழைத்தும்
இரண்டு கால் மாடு போல் வாழ்ந்ததுண்டு
                                                                 ( தொடர்வோம்)





 

Saturday, 12 December 2015

விண்ணப்பக் கலிவெண்பா


வள்ளல் பெருமானார் அருளியது. அருள் பெற இது ஒன்றே போதும் என்று அன்னதான ஆதீனம் மேட்டுக்குப்பம் வாழ் ஞான வள்ளல் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் முன்னுரை ஒன்றில் கூறியுள்ளார்.
எப்படி இறைவனைத் துதிக்க வேண்டும் என்ன கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் வள்ளலார் நமக்கு அருளிய கலி வெண்பா வடிவம் அதனை புதுக்கவிதை வடிவில் முயன்று எழுதும் வடிவம் இது.
 அனைவரும் அறிய முற்படுவோம். காலம் சிறிது.
                                                         பா.சத்தியமோகன் 13.12.15

“ குளிர் நெஞ்சம் உடையவனே பாசநீக்கம் செய்பவனே
தேடியும் காணமுடியாத தலைமை உடையவனே
உனக்கொரு விண்ணப்பம்
வேறாக உட்கொண்டு என்னை இகழாதே
எனக்குள் ஒளியாமல் உள்ளபடியே உரைக்கின்றேன்
கடும் சொல் தவிர வள்ளலே உனது அன்பர்களுக்கு
இனிய சொல் தந்ததும் இல்லை
பணிவுடன் ஒன்றைத் நான் தந்ததும் இல்லை
தீய சொல்லாகிய பொய் சொல்வதென்றால் பூரித்து மகிழ்கிறேன்
ஆனால் உண்மை பேசுவதை நான் விரும்பியதே இல்லை
வாயால் துன்பம் விளைவிக்காத வாய்மை எனக்கில்லை
மெய்யால் துன்பம் விளைவிக்காத மெய்ம்மை எனக்கில்லை
உள்ளத்தால் துன்பம் விளைவிக்காத உண்மையும் எனக்கில்லை

பொருந்தா நெறியாகிய  உயிர்க்கொலையாகிய
பொல்லாத விரதம் பூண்கிறேன் உண்கிறேன்
கொல்லாத விரதம் பூண்டதில்லை

பிறவிகளை மேலும் மேலும் வருவிக்கும்
இருள் சேர்க்கின்ற புகழை விரும்பினேன்
நல்ல நெறிக்குப் போகாதவர் புகழைக் கேட்க விரும்புகிறேன்
வானவரும் தானவரும் புகழும் உந்தன்
பொருள் சேர் புகழைக் கேட்க நினைத்ததும் இல்லை
வஞ்சம் கொண்டு இனிமையாக நடிக்கும்
நுண்ணிய இடை மாதர்களுக்கு ஏவல் புரிந்தேனே தவிர
உனது பொன் அடிக்கு என்றுமே தொண்டு புரிந்தது இல்லை
மூன்று குற்றமாகிய காமத்தாலும் கோபத்தாலும் மயக்கத்தாலும்
நெருக்கப்பட்ட என் மனம் செக்கில் இடப்பட்ட எள் போல
சிந்தை நசிந்தது தவிர
மூன்று குற்றம் முறிக்க நான் எண்ணியதே இல்லை
                                                                     ( தொடர்வோம்_)


 

துன்பங்களின் கூட்டுத்தொகை !


ஓம்.

துன்பங்கள் வந்தால் துடித்துப்போகாதார் யாருமில்லை. மொத்த துன்பங்களும் தொகுப்பாக வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கொரு பாடல் இருக்கிறது. “அர்த்தமுள்ள  இந்துமதம்” கண்ணதாசன் நூலில் படித்தேன். அந்த பாடல் எழுதியவர் பெயர் அதில் போடவில்லை. ஆனால் “வாழையடி வாழை” வடலூர் மேட்டுக்குப்பத்திலிருந்து வெளிவரும் இதழில் ராமச்சந்திர கவிராயர் என இருந்தது. அந்த இதழை நடத்துபவர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள். நன்றி.
               அழகான ( படா அவஸ்தையான) அந்தப் பாடல் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் தன்மைகள் கொண்டிருக்கிறது. அது இதுதான்:-
                     “ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ
                      அகமுடையாள் மெய் நோவ அடிமை சாக
                      மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
                       வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
                       சாவோலை கொண்டொருவன் எதிரே வர
                        தள்ளவொணா விருந்து வர சர்ப்பம் தீண்ட
                        கோவேந்தர் உழுதுண்ட கடனைக் கேட்க
                       குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே”
இந்தப்பாடலின் பொருளை சிந்திப்போம். ஒருவன் வீட்டில் பசுமாடு கன்று போட்டிருந்ததாம். மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை உடனே புரியும். வீடே நச நச என இருக்கும். காரியம் ஒன்றும் புரியாது. (இப்போதைய வெள்ளம் வந்த சென்னை வீடு மாதிரி) காய்ந்த இடம் இல்லாமல் இருக்கும். அப்போது மழையும் பொழிந்தததாம். வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லையாம். வீடும் விழுந்து விட்டதாம். வீட்டு வேலைக்கார அடிமை உதவி கேட்கலாம் என்றால் செத்துவிட்டானாம்.  கிடப்பது கிடக்கட்டும் நமது வயலுக்கு இப்போது ஈரம் உள்ள நேரம் ஆதலால் விதைப்போம் என்று வயல்வெளிக்கு ஓடினானாம். வழியில் கடன்காரர் மறித்துக்கொண்டாராம். நெருங்கிய உறவினர் இறந்தார் என்று சாவோலை அதே நேரத்தில் வந்ததாம். அதே நேரத்தில் மறுக்கவே முடியாத சொந்தக்காரர் ஒருவர் வந்துவிட்டாராம். பாம்பும் தீண்டியதாம். அரசர் எதிரே வந்து நிலத்துக்கு கட்டவேண்டிய கடனைக் கேட்டாராம். அதே நேரத்தில் குருக்கள் எனக்கு சேரவேண்டிய தட்சணை கொடு என்றாராம்!
              
                    
                   

Friday, 11 December 2015

மகாகவி பாரதியார்


மகாகவி பாரதியார் பற்றி எழுதுமுன் நாள் போய்விட்டது. சரி.  பலர் அவர் கவிதைகள் மட்டும் எழுதினார் என நினைத்துக்கொள்கிறார்கள். அவர் எழுதின கதைகள் எல்லாம் திக்கான பசும்பால் போல இளைஞர்களுக்கு வழி காட்டுவன.
சற்று முன் படித்த ஒரு கதையை அடியேனின் அன்பர்களுக்கு:-
குண்டூசி வியாபாரம்
ஒருவன் ஊசி வியாபாரம் பண்ணினான். பக்கத்துக்கடையிலே ஒருவன் வாழைக்காய் வியாபாரம் பண்ணினான். அவனைப்பார்த்து குண்டூசி வியாபாரியும்பகல் வெயில் நேரத்தில் அரைத்தூக்கமாய்க் கண்ணை மூடிக்கொண்டே சாமான் எடுத்துக்கொடுக்கும் வழக்கத்தைக் கற்றுக்கொண்டான். ஒரு நாள் பகல் வெய்யிலில் குண்டூசிக்காரன் அரைகண்ணைத்திறந்துகொண்டு முக்கால் குறட்டையாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது இலேசான கனவு காணலானான். கையிலே வாய் திறந்த குண்டுசி டப்பி ஒன்று இருக்கிறது. இவன் கன்விலே ஒரு பெண் வந்தாள்.அவள் வந்து தன் புருவத்திலும் கண் இமையிலும் ஜவ்வாது தடவுவதாக கனா கண்டான். கையிலிருந்த குண்டூசி டப்பியை கண்னிலே கவிழ்த்துக்கொண்டு மிகவும் வருத்தப்பட்டான். குண்டூசி வியாபாரம் பண்ணுகிறவன் பட்டப்பகலில் நடுக்கடையில் உட்கார்ந்து தூங்கக் கூடாது 

உபரி சாட்சி


                              
                         

அது ஒன்றும் காண முடியாத செடி அல்ல
ஆனால் அபூர்வத்தின் கையெழுத்து போன்று
கழிவறை சன்னலின் விளிம்பில்
மூன்று அடி ஆழம் தாண்டி வேர் விட்டு
வளர்ந்திருக்கிறது ஆலம் கன்றாய்.
திட்டமிட்டு நட்டாலும்
வளர்க்க முடியாது அப்படி ஒரு ஆலம் கன்று
கட்டிட மண்ணில் விழுந்தது விதி எனினும்
சுவராகும் போது
தப்பித்திருக்கக் கூடாதா என உள் மனம் ஏங்குகிற்று
பக்கத்திலேயே வெண்டிலேட்டர் வட்டம் பரிகாசம்
கழிவறை வருவோர் போவோர் காணாமல்
புறக்கணிக்கின்ற அதிசயத்தின் வேதனையை விடவா பெரிது
என அந்த ஆலமர வேர் நினைக்கும் போது
நானும் 
மற்றுமொரு உபரி சாட்சியாகத்தான் இருந்தேன்.

Wednesday, 9 December 2015

அடடா இராமானுஜன் சார் !



அழைத்தேன் சொற்களை மெல்ல அவை விசும்பின
நான் எதிர்பார்க்கவில்லை அட யார்தான் அறிவார்
இத்தனை  சீக்கிரம் அவர் மறைவாரென்று
தனிமையில் வளர்ந்து ஓங்கிய மூங்கீல் முறிந்ததுபோல்
சட்டென அவர் உயிர் பிரிந்திருக்கக் கூடும்
ஒரு கம்பீரம் ஒரு அடர் கனமான குரல்
இதம் படிந்த உத்தரவின் வீச்சு
கலை இதயங்களை இரசிக்கும் மேன்மை ருசி
புத்தக நெஞ்சில் மலர்ந்த உயர்ந்த ஆங்கிலம் 
போலிகளை விமர்சிக்கும் வெளிப்படைச் சிரிப்பு
கற்பித்தல் எப்படி இருக்கக்கூடாது என்பதை அறிவுறுத்தும் தெளிவு
எனக்குத்தெரிந்து அவர் ஒரு தைரிய உருவம்
அசல் கலைக்கு உள்ளே பூக்கும் தாகமும் தேடலும்
எதுவும் போகவில்லை சார்!
இருக்கிறீர்கள் மாணவ மாணவிகளுக்கு உரைத்த சொற்களில்
ஒன்று கேட்கிறேன்
வட்டம் ஐந்து நெய்வேலி சுடுகாடே ஏனிந்த அவசர அழைப்பு?
8.12.2015 பிரதோஷ நாள் என்றா!

 

Monday, 7 December 2015

ஆனாய நாயனார் குருபூஜை (7.12.2015)



அது ஒரு சிறிய கருவிதான். ஆனால் அவர் இலட்சியம் குறிக்கோள் எண்ணம் உயர்வாக இருக்கும்போது கருவியின் பயன்பாடு பெருமை பெற்று விடுகிறது.ஆனாய நாயனார் அவர் பெயர். அவர் கையில் இருந்த கருவி புல்லாங்குழல். (மேல் மழநாடு என்பது முந்நாள் பெயர்)ஊர் லால்குடி அருகில் உள்ள திருமங்கலம்.
              கருவி காரணமா? இசை காரணமா? எது மூலம்? கருவியிலிருந்து இசை வருவது இல்லை என்பதே உண்மை. அன்பு உள்ளே இருக்க வேண்டும். அன்புதான் இசை ஆகிறது. பிரதிபலன் எதிர்பாராதது அன்பு. ஐந்தெழுத்து மந்திரம் சிவாயநம என்பதை புல்லாங்குழல் இசையில் பயின்றார் ஆனாயர்.
                     அன்பு ஊறியது. ஊறிய அன்பு இசையானது. பொங்கியது.அமுத இசை ஒலித்தது. ஒலியால் வன்பூதப் படையாளியாகிய சிவனின் ஐந்தெழுத்தையும் துதித்தார். வாழ்த்தினார்.ஊதும் அளவு முறையாக ஒலிக்க என்ன ஆனது? எந்த உயிர்களின் எலும்பிலும் கரைந்து உருக்கும் இன்னிசை அவரது புல்லாங்குழலுக்குள் சேர்ந்தது.
                       ஆனாய நாயனார் மாடுகள் மேய்ப்பவர். பசுக்கூட்டங்கள் அவர் வாசிக்கப் போவதை அறிந்து கொண்டு சூழந்து வந்தன. அப்போது சுற்று சூழல் பற்றி வர்ணிக்கலாம். ஆனால்சேக்கிழார் பெருமான் காலத்தை வருணிக்கும் அழகு அசாத்தியமானது. அது இதுதான்:
                        நீல நிறம் கொண்ட மயில்கள் அகவின. கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப்பண் பாடின. முல்லை அரும்புகள் புன்முறுவல் செய்தன.அப்போது வானில் வருகின்ற மின்னல் என்பது இடையாக மாலைப் பொழுதே கொங்கையாக அசைந்தபடி உலகம் என்கிற பெரிய அரங்கி ஆடிட காலம் என்ற பருவத்தை உடைய மங்கை வருகின்றாளாம்! 

Monday, 30 November 2015



30.9.2015 வரை
மனநாட்டில் அப்பா இருந்தாரே அவ்வளவு பேசினாரே
உடல் போனால் எல்லாம் போகுமா
எங்கே எங்கே என உருகிய கணம்
உருவான சிறு கண்ணீர்த்துளி
நவம்பர் மழைநீர்ச்சாரலில் கரைந்தது
சாலை போக்குவரத்தில்
விக்கி விக்கி அழ முடியாமல்
ஐம்பத்தியிரண்டு வயது பொறுப்பு தடுத்தது
அப்பா எனும் அலைவரிசை
அப்பா எனும் அன்பு வரிசை
முரண்பாடு எனும் சிடுக்கில் புறத்தே சிக்கினாலும்
தனிச்சிவப்பு ரோஜாவெனச் அகத்தே சிரிக்குது
அப்பா இறந்து இன்றோடு இரண்டு மாதம் ஆகின்றது
அப்பாவை இழந்தவர்களுக்கெல்லாம்
அப்பா வருவார் அகத்தே அன்பாக இன்னும் வருவார்
ஆதலினால்
முழு அழுகையிலும் ஒரு  சிதறல் நுழைகின்றது.


 

Thursday, 22 October 2015

“பணிசெய்யும் இடமோ தொழிலோ யாருக்கும் எதுவும் எப்போதும் நிரந்தரமல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.தொடர்ந்து நல்ல விஷயங்களை தந்துகொண்டிருந்தால் மட்டுமே தொழிலில் வெற்றி என்பதும் தொடர்ந்து வரும் என்பதை உணருங்கள்”
- book:- “you cannot win a fight with your boss” ( நன்றி:நாணயம் விகடன்)

Sunday, 18 October 2015

அப்பா என்றொரு சூரியன்




சு.பார்த்தசாரதி தோற்றம் 15.5. 1931 மறைவு 30.10. 2015 என எழுதாதீர்
அப்பா இனிமேல்தான் வாழப்போகிறார்
கடைசியில் ஒரு நாள் இறக்கவேண்டியதுதான் ஆனால்
அப்பா இறப்பை மருத்துவம் சொன்னாலும் சத்தியமாய் நம்பேன்
84வயது அப்பாவுக்கு கொள்ளியிட்டு வடலூரில் சிதை மூட்டினேன்
எனினும் அப்பா கனக்க அப்பாதான் தோளில் கனத்தாரா
அவர் லேசல்லவே அவர் கனமல்லவே எதைச் சொல்வேன்
போய்விட்டீர்களா எனக்கனலும் நெருப்பின் கனல் ஒன்றை
அடித்தொண்டையில் சிவப்பில்லாச் சிவப்புடன் கனல வைத்தார்
பூமித்துண்டே இழந்துவிட்டாய் பேசும் மரம் ஒன்றை
முதிர்ந்த வாசக கிரிக்கெட் கிழ இளைஞர் ஒருவரை
மூக்குப்பொடி வழியும்  கருடமூக்கு லாவகம் காணோம் எழுந்திரப்பா
ப்ரீசர் பாக்ஸ் பெட்டி மூச்சு உனக்கெதற்கு கண்விழி
கைலி கட்டிய  பறவை என படபடக்கும் நாக்குடன்
காலைக்காற்றுக்கும் காலைநேர பள்ளிக்குழந்தைக்கும் காலை காபிக்கும்
ஆசானாய் பல காலம் வாழ்ந்த புத்துயிரே எங்குதான் சென்றாய்
அதெப்படி அப்பாக்கள் மட்டும் அப்பாதான் என்றும் எதனால் எனில்
அவர் உருவம் பிரியும் ஆனால் அவர் நிழல் என நம்மை மாற்றுதல்
எதை சொல்லி என்னப்பா எழுந்து வா
தனித்த மனம் தனித்த இரணம்
வாய் ஓயாப்பேச்சும் கம்பனும் ஷெல்லியுமாய் இலக்கியபூமியுமாய்
மாடி பார்த்த நட்சத்திரங்களில் ஆகாயப் பூவென பேச்சு பெச்சு பேச்சு
முகசவரம் செய்யும்போதும் தாடைதிருப்பும் பேச்சு
மலச்சிக்கல் மனச்சிக்கல் பணச்சிக்கல் மூன்றிலும் வெல்லும் கலை
எவரும் கண்டதில்லை இருமலில்லை சளியில்லை
ஊன்றுகோலில்லை கழிச்சலில்லை ஆஸ்பத்ரி படுக்கை வலியில்லை
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை
திருச்சி ஓயாமாரி இடுகாட்டில் உன் தாய்க்கு
என்னை பட்டினத்தார் தாய்ப்பாடல் பாடச்சொன்னாய்
உனக்கு என்னே அதிசயம்
வெட்டியானின் செல் வழியே
“கல்லிலே கலை வண்ணம் கண்டான்..” சீர்காழி குரல் கேட்டாய்
நெடு விழிகள் கரைந்து ஒழுக
இடுகாட்டுச்செடிகள் நனைய வட்ட நீர்ப் பானை உடைந்து
நவம் நவமாய் தந்த அப்பா
கணம் கணமாய் கலைந்து போனார் பிரபஞ்சமானார்!
 


 

Tuesday, 22 September 2015

அந்த கால நினைவுகள்



அப்பா விரும்பும் மாகாளிக்கிழங்கு நறுக்கு
அதன் நறுமணம் மிகு சாரல் சிவப்பு நீர்ச்சொட்டு

அம்மா நறுக்கித் தந்த ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
அதில் மிதக்கும் கொண்டைக்கடலை மூக்குகள்
அதற்காக பரிசளித்த பெரும்பீங்கான் ஜாடிகள்

நடுக்கூடத்தில் பந்துபந்தாய் மோர்சாதம்
பிசைந்து பிசைந்து அன்பு பூட்டிய
கூட்டுக்குடும்பத்தின் பாசக்கரங்களும் பசுமாடும்.

மணக்கால் மலட்டாறு நடுவில்
அள்ளிப்பருகிய பளிங்குநீர் ததும்பும்
வட்டக்கிணறில் தெரியும் அடி ஊற்று

எங்கும் இருந்து அருள் பாலிக்கும்
சுப்பிரமணியசாமி கோவில் வாசலில்
வேர்கடலையும் நல்லெண்ணையும் பிசைந்த
புளிசாதமும் அன்பு வெண்தயிர் சாதமும்!

எத்தனை தூரம் ஓடி வந்துவிட்டோம்
எத்தனை தூரம் கடந்து வந்துவிட்டோம்
எவர் கொண்டு சென்றனர் எங்கோ
நேற்று வீசிய தென்றல் இன்றும் வீசுவதாக
மனத்திண்ணையில் புரண்டு படுப்பேன்
புழுக்கம் மிகு மின்விசிறி தலைமேல் சத்தமிட்டு முறைத்திட.

 

Saturday, 1 August 2015

எ(மது) எம்.எஸ்.வி



எம் என்பது எமது ! எமது எஸ். விஸ்வநாதரே!
அதிசயம் தான்!
அன்று உம்மைச் சந்தித்தேன்
மகிழ்ச்சியின் வெள்ளைவேட்டி நடை கொண்டு
ஓர் திருமண வரவேற்பில் ஏவிஎம் மண்டபத்தில்
பணிவின் பனிக்குடமாக! எத்தனை மூளை சுறுசுறுப்பு!
சட்டென சொல்லாமல்
காலில் விழுந்தேன் இசை நாயகா!
கவிஞன் எனக்கு அதில் அகமகிழ்வு!
எத்தனை இசைக்கருவிகள் தொட்டகரங்கள்!
அத்தனையும் ஆர்மோனிய விரலாச்சு உனக்கு
உன் விபூதி குங்குமசந்தன நெற்றிக்கண்  உற்சாகக் குரல்
இன்றும் காதில்  கேட்கிறது எனக்கு!
சுசீலா டி.எம்.எஸ் பாலசுப்ரமணியம் குரல்களில்
கவியரசு கண்ணதாசன் சாறு கலந்து
இசைத் தேன் கலந்து பெருக
காலத்தேர் ஓட்டிய இசைத் தேவனே
நீ தற்கொலை புரிய முயன்றாய் மூன்று முறை
1.உன் தாய் இறந்தபோது
2.கண்ணதாசன் இறந்தபோது
3.எம்.ஜி.ஆர் இறந்தபோது
இப்போது இசைப்பாடல்கள் என்ன ஆகும் நீயே பாடு
மன அழுத்தம் தவிர்க்க தமிழனுக்கு ஒரு வழி 
எம்.எஸ்.வி பாடல்களின் ஜீவன் !
மனிதர்கள்  அன்புபேச என்றும் உன் இசை வாழுமய்யா இசை விஸ்வ நாதரே.
 

அழகிய கலாமும் அழகிய காலமும்


              
கடவுளுக்கு நினைத்து நினைத்து நன்றி கூறி
இதயம் பூத்த இராமேஸ்வர ஜோதி மலரே ஏன் முடிந்து போனாய்!
அலட்சிய  மனங்கள் நடுவே
இலட்சிய பூமி மீது நெய்த செயல் நிலமே எங்கே விரைந்தாய்?
இலட்சியப் பொறி பற்றிய ஞான வீணையே
மேகாலயத்தில் இணைந்த தமிழ்மேக லயமே
நிம்மதி தேடி ஒடுங்கும் மூப்புப் பருவம் நடுவே
ஓடி ஓடி உழைத்த முதிய இளைஞரே
அழிவைத் தரும் அணுச் சோதனை பயம் போக்கி
துணிச்சலில் நிமிர்ந்த விஞ்ஞானமே
இஸ்ரோ விண்கலச் சரிவுக்குமட்டுமல்ல எதற்குமே
மனம் முறியாமல் அடுத்த சோதனைக்கு வித்திட்டாய் வித்தகமே
திருச்சி புனித ஜோசப் கல்லூரிப் புறாவே
இதய வால்வு ஸ்டண்ட் மெலிய எடை தந்த சுவாசமே
சிந்திப்பவர் ஞானமெல்லாம்
திருக்குறளாக இருக்கும் என்று வாழ்ந்த அன்பு கலாமே
ஆக்கபூர்வ எண்ணங்களில்
மரம் நடு விழா துவங்கிய நல் மனிதமே
நடு வகிடு எடுத்த நரை முடிச் சிரிப்பில்
குழந்தைகள் இளைஞர்கள் சிந்திக்கவைத்த நேசமே
முடிவில்தான் ஆரம்பம் இருக்கும் என்பதால்
முதியவர்கள் ஞானமெல்லாம்
மாணவப் பருவம் நோக்கித் திருப்பிய உணர்வே
பகவத் கீதையின் கர்மயோகம் பயின்ற இஸ்லாமே
கல்விப் பேச்சுரை ஆற்றும்போதே சரிந்த
தமிழ் மூச்சுரையே
திருமணமே புரியாமல்
இந்தியாவைத் திருமணம் செய்த மணமே
வீசும் உன் புகழ் இனிமேல்தான் இன்னும் இன்னும்!
 

Thursday, 9 July 2015

உடல் பயணச் சலிப்புகள்




கதவின் கீல்
ஒவ்வொரு தடவை  திறந்து மூடும்போதும்
சத்தமிட்டுக் கொண்டே அன்றாடம்
அரைவட்டத்தில்தான் இயங்குகிறது
அலுவலக லிப்ட்
ஒவ்வொரு தடவை ஏறி இறங்கும்போதும்
சத்தமிட்டது தெரியாமல் இரும்புக் கயிறால்
மேலும் கீழும் ஒரே விதமாய்த்தான் அன்றாடம்
ஏறி ஏறி இறங்குகிறது
கதவின் கீலுக்கு என்ன பணியோ
அந்த இடத்தில்தான் அது இயங்க முடியும்
லிப்டுக்கு என்ன நிர்மாணமோ
அதற்குள்தான் அது இயக்கப்பட முடியும்
கடன் தீர வாழ்கிறோம்
கடமை என்பதே கடன் + மை தானே
சலிக்காதிரு மனமே சுதந்திரம் தேடாதிரு மனமே கசப்பில்லை
நீரில் கொப்புளங்கள் போல் தோன்றிய வாழ்க்கை
பெரும் நீர் வீழ்ச்சியில் சங்கமம் ஆவோம்
யார் புகழ்ந்து யாருக்கென்ன நிகழ்ந்தது அதுவும் ‘குபுக்'தான்
பம்பரத்தை சுற்றிவிட்டு தெருவில் சிறுவன்
வேறு விளையாட்டுக்குப் போவது போல்
இறைவன்  இயக்கியதிவ்வுடல் பயணம் .ஆஹா அனுபவி.

சார்பு

  
அன்றும் இன்றும்
பறவைதான் அநியாயத்தை முதலில் அறிகிறது
சீதை கடத்தும் இராவணன் மார்புக் கவசம் அறுத்தது ஜடாயு
காது குண்டலங்களை அறுத்தது ஜடாயு
இராவணன்  வில்லினைப் பறித்து வானில் எறிந்தது ஜடாயு
இராவணன் தேர் நகரவிடாமல் சிறகு பரப்பிற்று ஜடாயு
இராம இலக்குவனுக்கு செய்தி செப்பும் வரை உயிர் விடவில்லை
இன்றும் சிட்டுக்குருவிகள்
ஜடாயு சார்பாக
இயற்கை எனும் சீதை காக்க
பாலிதீன் பையை கொத்தி எறிகிறது
வானிலோ மின் கம்பித்தடத்திலோ அலைந்து
அது வாடுகின்றதோ இல்லை எச்சரிக்கின்றதோ !

(இலக்கியச் சிறகு இதழில் வெளிவந்த கவிதை)
*****
 

Monday, 22 June 2015

அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறோம்?



நமக்கு ஐந்து வயதெனில்
“எல்லாம் தெரிந்தவர் என் அப்பா” என்கிறோம்

நம் ஆறு வயதில்
“என் அப்பாவுக்குத்தான் தெரியும்” என்றோம் உறுதியாய்

நம் எட்டு வயதில்
“அப்பாவுக்குத் தெரியாமலும் இருக்கலாம்” என ஆரம்பித்தோம்

நம் பத்து வயதில்
“அப்பாவுக்கு அதெல்லாம் தெரியாது” என்றோம்

பனிரெண்டு வயது ஆனது
“வரவர அப்பா விளையாடுகிறார்” என்றிருப்போம்

பதினான்கு ஆனதும்
“அப்பா பேச்சை அப்படியே விட்டுத் தள்ளு” என்றோம்

பதினெட்டு ஆனபோதோ
“அப்பாவுக்கு என்ன தெரியும்?”

இருபத்தொன்று ஆனது
“அப்பா பேச்சு முட்டாள்தனமானது”

இருபத்து மூன்று வயதில்
“அப்பாவை விட எனக்கு அதிகம் தெரியும்”

இருபத்து ஐந்து வயது
“ஏதோ கொஞ்சம் தெரியும் அப்பாவுக்கு” என ஆயிற்று

முப்பது வயது
“ஒரு சில விஷயம் அப்பாவிடம் கேட்கலாம்” என்போம்

நாற்பது வயது நமக்கு ஆகும் போது
“புதிராயிருக்கிறது! அப்பா!
எப்படி கடந்தீர்கள் இந்த வாழ்வை” என வியப்போம்

நாற்பத்து ஐந்து வயது ஆனது
“வாழ்க்கை வழி நெடுக அப்பா சரியானவராகவே
இருந்துள்ளார் என திகைத்துள்ளோம்

நமக்கு ஐம்பது வயது
அப்பா அருகில் இருந்திருந்தால்
நிறைய கற்றிருக்கலாம் என மெல்லத் தோன்றுகிறது

நமக்கு ஐம்பத்து ஐந்து வயது
அப்பா இப்போது போட்டோவில் மட்டுமே உள்ளார்.

Sunday, 3 May 2015

நீங்கள் மெல்ல இறக்க ஆரம்பிக்கீறீர்கள்





நீங்கள்
மெல்ல இறக்க ஆரம்பிக்கிறீர்கள்
நீங்கள் பயணம் செய்யாவிட்டால்
வாழ்வின் ஓசைகளைக் கேட்காவிட்டால்
நீங்கள் உங்களையே பாராட்டாவிட்டால்
நீங்கள் மெல்ல இறப்பது ஆரம்பிக்கிறது
நீங்கள் உமது சுய மதிப்பைக் கொல்லும் போது
பிறர் உங்களுக்கு உதவ அனுமதிக்காத போது
நீங்கள் மெல்ல இறப்பீர்கள்
உங்கள் பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகும் போது
நிதமும் கடந்த பாதையிலேயே நடக்கும் போது
உமது தினசரிகளை மாற்றாத போது
புதிய நிற ஆடைகள் அணியாத போது
தெரியாதவர்களிடம் பேசாமல் தவிர்க்கும் போது
நீங்கள் மெல்ல இறக்க ஆரம்பிக்கிறீர்கள்
உமது வாழ்வை மாற்றாத போது
உமது வேலையில் திருப்தி அடையாத போது
அல்லது
உமது அன்பில் திருப்தி காணாத போது
நிலையிலாத ஒன்றுக்காக
பாதுகாப்பான முறையில்
எந்த வித பிரயாசையும் பட்டு முயலாத போது
நீங்கள் ஒரு கனவைப் பின் தொடராத போது
வாழ்வில்
குறைந்த பட்சம் ஒரே ஒரு தடவை
அறிவுரைகளிலிருந்து தப்பி  ஓடாத போது.
                                                     - பாப்லோ நெடோ
                                            தமிழாக்கம் :  பா.சத்தியமோகன்


 

Wednesday, 22 April 2015

அவர் வலக்கையைத்தொட்டுள்ளேன் !


“தமிழ்நாட்டில் ஞானச்செருக்கு மூன்று பேருக்குத்தான் இருக்கிறது - பாரதிக்கு,எனக்கு,மூன்றாவதாக ஜெயகாந்தன்” என்று கண்ணதாசனால் புகழப்பட்டவர். “சில நேரங்களில் சில மனிதர்கள்”   “யுக சந்தி” “சினிமாவுக்குபோன சித்தாளு” “கங்கை எங்கே போகிறாள்” “பாரீசுக்குப்போ” ( சொல்லிக்கொண்டே போகலாம்)      தைரியமான மனோ ஓட்டம் கொண்டு ,சாட்டை வீசிய சமுதாயப் பங்களிப்புகளும் அதிகம். சமஸ்கிருதம் அவசியம் என மொழிந்த திறந்த தைரியமும் அதிகம். நிற்க.  
       சிதம்பரத்தில் அடியேன் டிப்ளமா படித்துக்கொண்டிருந்தபோது(1982) கீழவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில்தான் பொதுக்கூட்டம் அரசியல் கூட்டம் எல்லாமே நடக்கும். அங்கு நடந்த அவரது பேச்சின் சாரம் இளைஞர்களுக்கான அறிவுரை மீசையோடு முறுக்கிப் பேசிய கம்பீரம் நினைவிருக்கிறது. கூட்டம் முடிந்து எல்லோருக்கும் அலை போல் கை அசைத்தார். ஆர்வம் மிகுதியில் அவர் கை நீட்ட எல்லோருமே ஆர்வத்தோடு மேடை நோக்கி எக்கி எக்கித் தொட்டோம். அடியேனும் அவர்களில் ஒருவன். எவ்வளவு பஞ்சாக மெத்தென்று இருந்தது! அதில்தான் எத்தனை நெருப்பு !
        கார்ல் மார்க்ஸ் பற்றி “எங்களை விட அவர் அதிக உயரம் பார்த்தார்” என்று ஏங்க்ல்ஸ் குறிப்பிட்டதுபோல தமிழுக்கு ஜெயகாந்தன் திகழ்வார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்,விஸ்வநாதன் குரலில் அவர் எழுதிய ஒரு சினிமா பாடல் இது:-
             “கும்பிடச்சொல்லுகிறேன்
             உங்களைக் கும்பிட்டுச்சொல்லுகிறேன்
             எனை நம்பவும் நம்பி கெடுவது உம் தலையெழுத்தென்றால்
              எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ!”

Monday, 20 April 2015

வேப்பம்பூத் தங்கங்கள்

சிறு சிறு துன்பத்திற்கும்
பெரும் கோபமுடன்
வார்த்தை உதிர்க்கும்
என் சுயநலம் கண்டு
போதிமரமானது வேப்பமரம்
கோடைப் பெரும் வெய்யிலுக்கும்
உள்ளுக்குள்
ஓயாது தன்னை மலர்த்தி
ஏராளமாய் சிறு சிறு பூக்கள்
மண் எங்கும் தெளித்தது அது.

Tuesday, 14 April 2015

மனிதநேயம் வளரட்டும் !

அனைவருக்கும் அன்பு இணைய தள நட்பு மனங்களுக்கும் அனைத்து நலங்களும் முருகப்பெருமான் அருள பிரார்த்னை செய்து கொண்டு
அன்பு வாழ்த்துகள் பகிர்கிறேன்.
மேலும் பாண்டிச்சேரி வானொலியில் (MW1215 khz) 14.4.21015 காலை 9 மணிக்கு ஒலிபரப்பாகும் என் கவிதையும் இதோ உங்கள் சிந்தைக்கு:-





அன்னைத் தமிழ்ப்புத்தாண்டு
மெல்ல உதயமாகிக் கொண்டிருந்தது
“மன்மத ஆண்டு !” என்று நாட்காட்டி சொன்னது
அன்று
ஒரு நகரின் வெட்டவெளியில்
இருவருக்கான மேடை போட்டிருந்தது
பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்
நீண்ட வருடங்களாக
முகமூடிதரித்த ஒருவர் !
இரயில் பயணங்களிலும் பொது இடங்களிலும்
365 நாட்களும்
எதிர்பாராமல் அவ்வப்போது
அடிவாங்கிய காயமுடன் ஒருவர்!
அடி கொடுப்பவருக்கு பதுங்கி வாழ்கிறவருக்கு - மூடிய முகம்
அன்றாடம் அடி வாங்கினாலும் - இவருக்கு கனிவு முகம்
தின்று கொழித்து செழித்திருந்தார் அவர்
ஒல்லியாய் ஆனால் ஆன்மீக தெளிவுடன் இவர்
அவர்கள் இருவரும் யார் என்று .
கூர்மையுடன் கவனித்தார்கள் மக்கள்
பேட்டி உரையாடல் ஆரம்பமானது
“என்னை அறிக!
என் பெயர் “தீவிரவாதம்” என்றான் ஒருவன்
அன்பிலே கருத்தரித்த அடியவன் பெயர்
“மனித நேயம்” என்றான் இவன்
பொதுமக்கள் சலசலத்தார்கள்
என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்தார்கள்
“என் பெயரில் மொத்தம் ஆறெழுத்து! தெரியுமா!”
என்றான் அவன் வலிமையாக!
ஆறுதலைத் தரும் மலையில் பிறந்து
வேலில் உண்டானேன் ! எனக்கும் ஆறெழுத்துதான்!”
என்றான் இவன் - உண்மையாக.
“எதற்காக என் கைகளைக்கட்டிபோட கயிறு தேடுகிறாய்?
ஏழை வயிறு போல் ஒட்டிபோன பசியால்
நீ என்னடா செய்வாய்?”என்று விரட்டியது அது
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே!” என்று
வள்ளலார் அருட்பா பாடியது இது!
“நான் இருளின் பிள்ளை” என்றது தீவிரவாதம்
“நான் ஒளியின் கொழுந்து அன்பின் மருந்து” என்று
புன்னகைத்தது மனிதநேயம்
“என்னைப்போல் உன்னால் ஒரே நாளில்
எல்லா டி.வி.சேனலிலும்
பெயர் வாங்க முடியுமா” என்றது தீவிரவாதம்
“என்னைப்போல் தியாகம் செய்து அன்பின் பெயர் சூட்டு
அன்று உனக்குப் புரியும்” என்றது அன்புவாதம்
“நீயும் நானும்
எந்த விதத்திலும் சமரசம் ஆக முடியாது” என்றது அது
‘அன்பிற்கு தாழ்ப்பாள் போட்டு அடைக்க முடியாது
விழும் கண்ணீர் உன் மீது என் காதலாகும்! ” என்று விவரித்தது இது
“நீ பாய்ந்து தாக்க வந்தால்
உன் கால்கள் வெட்டுவேன்!” என்றது தீவிரவாதம்
“முள்ளாகி
காற்றைக் கீறுவதாய் நீ நினைக்கிறாய்
காற்றாகி
நான் உன்னைத் தழுவுவதாய் நான் நினைக்கிறேன்”
என்றது மனித நேயம்.
“யானையாகிய எனக்கு மதம் பிடித்தால்
நொறுக்குவேன் உன்னை!” என்றது அது!
“யானைக்குத்தான் மதம் பிடிக்கும்
மனிதநேயத்திற்கு மதம் பிடிக்காது” என்றது இது.
“சந்திர நிலவொளியும்
பட்டப்பகல் சூரியனும் எப்படி சந்திக்கும்?
உன் குணங்கள் எனக்கு எப்படிப் பிடிக்கும்?” - அது சொன்னது!
“அறம் வளர்க்கும் காவிரியில்
நீராய் மாறி ஓடி வா
பயிர்கள் செழிப்பாக
உன் அன்பில் பூக்கள் போல் நான் மிதப்பேன்” என்றது இது!
“சுட்டெரிக்கும் துன்பம் தீர்க்க ஆயுதமே வழி” என்றது அது
“அஹிம்சை என்பது
மலர்களில் செய்த மனசாட்சி” என்றது இது
“அடித்துப் பேசினால்தான் சரிப்படுவாய் நீ !” என்றது கோப முகம்
“என் எலும்பைக்கூட
நீயே எடுத்துக்கொள்”என்றது திருக்குறளாய் சொன்னதுஅன்பு முகம்
“உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று மிரட்டியது பலம்!
“இருப்பவனை விட
இல்லாதவனின் நியாயமே பலமுள்ளது” என்றது இது.
“என்னுடன் கைகுலுக்கு! என்னைப் போலாகி விடு!” என்றது அது
“சூரியனின் நிறம்
கருப்பாகும்போது கூட
அன்பின் நிறம் மாறாது” என்றது இது
“முடிவாக என்னதான் சொல்கிறாய்?
உன்னைப் போல் என்னால்
பாவம் செய்யாமல் இருக்கமுடியாது” என்றது அது.
“அதிகம் வேண்டாம்!
ஏழே ஏழு பாவங்கள் மட்டும் செய்யாது விட்டுவிடு
என்று கெஞ்சியது மனிதநேயம்.
“குழைவாகப் பேசி
என் கல் மனம் கரைக்காதே” என்றது அது.
“தண்ணீரைக் கூட சல்லடையில் ஏந்தலாம்
பனிக்கட்டியாக மாறும் வரை
பொறுமையாய்க் காத்திருந்தால்” என்றது இது
“நீ மிகவும் பேசுகிறாய்! கைகள் தூக்கு!
உன்னைத் தீர்த்துக் கட்டப் போகிறேன்! கவுண்ட் டவுன்!
கடைசி ஆசை என்னவெனச் சொல்” என்றது அது
“மீண்டும் சொல்கிறேன் நண்பா !
ஏழுபாவங்கள் விட்டுவிடு அது போதும் என்றது இது
“உச்சி வெயில்
பசி நேரம் வந்துவிட்டது சாப்பிட்டுவிட்டுச் சொல்” என்றது அது
“உழைக்காமல் வந்த செல்வம் ஒரு பாவம்
ஒழுக்கமில்லாத கல்வி ஒரு பாவம்
கொள்கையில்லாத அரசியல் ஒரு பாவம்
தியாகமில்லாத வழிபாடு ஒரு பாவம்
நாணயமில்லாத வியாபாரம் ஒரு பாவம்
மனிதாபிமானமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம்
மனசாட்சியில்லாத இன்பம் ஒரு பாவம்”
ஆஹா இனிமை இனிமை - இதெல்லாம் சொன்னது யார்?
மகாத்மா காந்திஅடிகள் தானே!
மனித நேயத்தின் புத்தாண்டு செய்தி இது!
மன்னித்து விடு ! மனம் திருந்தினேன்! என்றது தீவிரவாதம்
“சினிமாவில் வருவதுபோல்
எப்படி அரை நிமிடத்திற்குள்
உன் மனம் மாறியது என எனக்குத்தெரியும் !
பசியால் துடித்த என்னை நோக்கி
முதலில் சாப்பிடு பிறகு பதில் சொல்”
என்றபோதே புரிந்துகொண்டேன்!! என்றது மனிதநேயம்
பொதுமக்கள்
கைத்தட்டிப் பாராட்டினார்கள்
தேவர்கள் பூ மாரிப் பொழிந்தார்கள்
அன்புப் பசியும் அங்கீகாரப் பசியும் தீர்ந்து
மகிழ்ந்தது தீவிரவாதம்!
வயிற்றுப்பசி தீர்ந்து
மகிழ்ந்தது மனிதநேயம்!
மன்மத ஆண்டு முதல்
இருவரும் ஒற்றுமையாய் ஆனார்கள்
இருவரும் ஒருவராகி
ஒரே பெயர் மனித நேயம் எனப்பெற்றார்கள்!
“மனிதநேயம் வளரட்டும் வாழ்க வாழ்க!”
என்று வாழ்த்தியது உலகம் முழுதும் மனித குலம்!!
******

Sunday, 5 April 2015

எழுத்தறியும் பெருமான் மாலை (புதுக்கவிதை வடிவம்)



“அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” எனும் மகா மந்திரம் அருளிய இராமலிங்க அடிகளார் அருளிச்செய்த “ எழுத்தறியும் பெருமான் மாலை” திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் பாடப்பெற்றது. வள்ளல் பெருமானார் மனம் கசிந்து பாடிய சொற்களில் கருணையின் கனிவு குழைந்து உள் உருக்குவன. நம் தலையில் என்ன எழுத்து எழுதி இருக்கிறது என்பது அங்குள்ள எழுத்தறியும்பெருமான்  அறிவிக்க இந்தப் பாடல்களின் வரிகளில்
பயணமாகிய போது தோன்றிய மறு ஆக்கமாக இதனை இணைய தள ஆன்மீக அன்பர்களுக்கு அளிக்கின்றேன்.இதனை எழுதிட உதவிகளும் ஒத்துழைப்பும் என் மனைவி லாவண்யா மற்றும் டைப் செய்து அளித்த மகள் மருத்துவத் திலகம் அபிநயா அவர்களுக்கும் நன்றி .
கோடை வாட்டினாலும் கடந்த 10 நாட்களாக கல்லங்குடியில் கலியபெருமாள் ஆலயத்தில் ( சாலை விபத்தில் உண்டான தனது உடல் நலிவை பற்றி கவலையே படாமலும்) 25 ஆம் ஆண்டாக அன்னதானம் செய்து பசிப்பிணி ஆற்றும் அன்னதான சிவம் கோவை சிவப்பிரகாச சுவாமிகளின் காலடியில் நவீன கவி வடிவில் ஆன இம்மாலையை அணிவிக்கின்றேன்.
பா.சத்தியமோகன்
வடலூர்-5.4.2015 (பங்குனி -22)
 

1.
 
சிந்தை மயங்கி இயங்குகின்ற ஒரு நாய் நான்
என்னுடைய முன்வினை தொலைத்து
உன் திருஅடிக்கு ஆள் ஆக்காமல்
சலித்து சலித்து
குறை சொல்லும்நோயால் என்னை இயக்குவது நீதியோ
எனக்கு அப்பா நீதானே
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

2.
கல் மன நெஞ்சுகொண்டவன் நான்
வஞ்சகன் நான்
வலிய நோயை
தானே சென்று பற்றிக் கொள்ளும் பைத்தியம் நான்
அருமையான நாட்களை வீண் செய்யும் பேய்
இப்படிப்பட்ட நாயேன்
உனக்கு ஆளாக வேண்டுமெனில் எத்தனை நாளாகுமோ
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

3
நல்ல நெறியில் செல்லும் அன்பர்களை நாடிட வைத்தாய்
உன் புகழின்  நல்லநெறிகளைச் சேர்ந்திட வைத்தாய்
எனக்கும் உனக்கும் முன் தொடர்பு பின் தொடர்பு
துளி கூட தெரியவில்லையே
எப்படிப்பட்ட மிகப்பெரும் மூடன் நான்.
பிரதி உதவியாக கைம்மாறாக
இங்கே எனக்கு என்ன செயல் என்று எப்படி அறிவேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

4
மை படிந்து வழியும் கண்கள் கொண்ட பெண்கள் மேல்
ஆசை கொள்ளச் செய்வாயோ
இரண்டு கைகளும் படிந்திட உன்னைத் தொழுது
உன் திருவடி நினைக்கச் செய்வாயோ
இப்படியோ இல்லை அப்படியோ
எதுவும் அறியாதவன் நான்
உன் சித்தம் எப்படியோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

5

இந்த உடம்பு நிலைக்கப் போவதில்லை
ஆனால் நிச்சயம்தான் நிலைதான் என்றே நேசிக்கின்ற
பொல்லா நெஞ்சுக்காரன் நான்
புலை கொலைத் தொழில் புரிகிறேன்
இந்த உலகில்
யாரிடமும் சொல்ல முடியாத மனநோயால்
சோர்வுறுகிறேன் அலைகிறேன் ஐயா
என் துன்பம் எல்லாமே அறிந்த
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

6
தீமை அறிவேன்
அணு அளவு கூட நல்லது செய்யேன்
வீணாக நாட்களைக் கழிக்கும் பேச்சு அறிவேன்
வஞ்சகன் நான் வலிய வினைகள் செய்துள்ளேன்
வாய்மை அற்றவன் நான் சூது மட்டுமே அறிவேன்  
இப்படிப்பட்ட நான்
திருமாலும் பிரம்மனுமே
சொல்ல முடியாத அளவு பெருமை கொண்ட
உன் பெருமையை எந்த விதம் என்றோ
எப்படிப்பட்டது என்றோ அறிய முடியுமா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
7
மாறாத வலிமையான பிணியால்
ஆழ்ந்து போய் ஆழ்ந்து போய் நெஞ்சம் அயர்ந்து
கூற முடியாத கொடிய துன்பக் கடலுக்குள் வீழ்ந்தேன் அடியேன்
துன்பம் தாளாமல்  அரற்றி அழுகின்றேன்
உன் காதுகளில் அது ஏறாதோ ஐயா
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

8

புண்ணியனே
உள்ளே வலிய வினை என்னுள் ஆடுகின்றது
வலிய வினைகள் ஓயாமல் கட்டிப் பிணிக்கின்றன
உழல்கின்றேன்
நெந்சம் புண் ஆகிப் புழுங்க ஆரம்பித்தேன்
உனைக் கண்டால் கண்கள் பசி தீரும்
இப்படிப்பட்ட எனக்கு
 உனது கருணைஅளிக்க விரும்புவாயோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

9
மாறாத தீய செயல்கள் மட்டுமல்ல
ஒழுக்கமிலா மங்கையரின்
வலிய செயல்களாலே மயங்குகிற வஞ்சகன் நான்
கொன்று போடும் எமன் 
மாறாமல் தப்பாமல் வந்து விடும் நேரம்
என்ன செய்யப் போகிறேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

10
சங்குடைய கிருஷ்ணன் தாமரை வாழ் பிரம்மன்
இருவரும் உனது திருவடி காணவில்லை
திரு முடியும்  காணவில்லை
குளிர் கொன்றை அணிந்த எப்போதும் குளிர்ந்த
கங்கை அணி சடையாய்
கோதை உனது ஒரு பங்காக உடைய சிவமே
ஏழை முகம் பார்க்காமல் தள்ள்¢விட்டால்-
எங்கு போய் எதில் விழுவேன்! எதை அடைவேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

11
“எல்லோரும் காணுகின்ற மேடையில் நடனம் செய்கின்ற
மாணிக்க மலையே
வெற்றி கொள்ளும் மழு ஆயுதம் கையில் கொண்ட
வித்தகனே! ஈசனே !”என்று பலவிதமாக
தாய்ப்பசு தொலைத்த கன்றுக்குட்டியை விடவும்
அயர்ந்து அழ ஆரம்பித்தேன்
கண்ணீர் துடைத்து அருள
என்று வருவாய் ஐயா?
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

12

“கங்கை அணி சிவன்” என மிகப்பெரும் தவம் செய்தவர்கள் நினைக்கும் போது
சோதியாய் நிலைத்து ஒளிர்பவனே.
அவர்கள் வேண்டிடும் அதே கணத்தில்
அவர்கள் துன்பம் ஒழிப்பாய் ஆனால்
அது எனக்கு மட்டும்  இதுவரை பலிக்கவில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!


13

மீண்டும் மீண்டும்
மின்சார ஒளி போல் மின்னி மறையும் இச்சை
என்னை வெம்பிடச் செய்கின்றது ஆனாலும்
தன்னைப் போல என்னை நினைக்கின்ற தெய்வமே
எனை ஈன்ற தாய் போன்ற தெய்வமே
நான் சொல்கிறேன்  என்பதற்காகச்  சார்ந்து
ஏதேனும் ஒன்றை உரைக்காமல் இருக்கின்ற தங்கமே
உனது அருள் மட்டும் இப்போதே பெற்றுவிட்டால்
உறுதி!என்னைப் போல் எவருமே இல்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

14
ஐயா! உனது பொன் அருளை
பூவில் தேன் அள்ளிப் பருகும் வண்டு போல
புண்ணியர்கள் அருந்துகிறார்கள்
நினது திருப்பாதத்தின் கீழ் சார்ந்து நிற்கின்றார்கள்
ஐயோ! நான் என்ன செய்கிறேன் -
காமம் எனும் கடும் இருட்டில்
கள் உண்ணுகின்றேன்
கண் மூடி ஏமாறுகின்றேன்
இது என்ன நிலையோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
15

ஐயா! உனக்குத்தான் பொறுப்பு
ஆம் உனக்கே பொறுப்பு! பாதகன் நான்
இந்த பூமியில் வயிற்றுப்பாடுக்கே உழல்கின்றேன்
உனது பொன்னார் திருவடிகள் போற்றாமல் சூழாமல்
திறந்த புண் போல வாழ்கின்றேன்
குற்றம் தான் இது குற்றம் தான்
எனது அருமைத்தாய் நீயே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

16
எனது மனத்தை ஆராய்ந்தேன்தேடினேன்
அடங்கவில்லை எனது தீய மனம்-
வீட்டுக்கு அடங்காத விளையாட்டுப் பிள்ளை
செய்யும் துயரம்
ஏட்டில் எழுத முடியாத  அளவு விரிந்து கொண்டே செல்கிறது-எதைப்போல?
பாடும் பாட்டில் அடக்க முடியாத
உனது பக்தித் தொண்டாளர்கள்
திருவடிப் புகழ் போல!  அடக்குவீர் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

17
பின்னிப் பின்னிப்  பேசுகின்ற எனது மனம்
எந்தத் தன்மையுமே இல்லாமல்
என்னை முழு அளவில் பாதகன் ஆக்கிற்று
ஞானச் சூரியனின் வெம்மைக் கதிர்கள் சூழும்போது மட்டும்
எனது மும்மலக் குற்றங்கள் காய்ந்து
அருள் நீர் தாகத்தால் நிலை கலங்கி வாடுகின்றேன்
இன்னும் அறியாயோ ஐயா
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!


18
என் மனம் கல்லுக்குச் சமம்
அதுவும் கடைப்ப்பட்ட  மனம்
அதுவும்
காட்டில் எந்த நெறியும் இல்லாமல் திரிகின்றது
புல்லை மதிக்கத் தெரிகின்றது ஐயோ!
பசுமையான பூவையோ இகழ்கின்றது
பொய்யின் பாதங்களுக்குச் சேவகம் செய்கின்ற
பொய் அடியேன் எனது வேதனைக்கு
எல்லை எது என்றே அறிய முடியவில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

19

தங்கத்தை மதிக்கத் தெரிந்த எனக்கு நின்
தங்கம் ஒத்த திருவடியை போற்றாத கல் மனம்
ஆதலால்
கலங்குகின்ற தவம் மட்டுமே உடையவனாக இருக்கிறேன்
இன்னல்களில் உழல்கின்ற ஏழைகளுக்கெல்லாம் ஏழை நான்
என்னைக் காண்பாய் என்னக் கை விடாதீர் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

20

ஆசை, கன்மம், மாயை  எனும் மலக்கடல்
மிகப்பெரும் சுவர் போல் தடுத்து வீழ்ந்தேன்
உலகினர் எவரும் உதவாமல் அலைகின்றேன்
இரங்கத்தக்க நிலையில் உள்ள
பரிதாபமான என்னை
திருவொற்றியூர் சிவனே நீ ஆளாவிட்டால்
என்னை பார்க்கவும் கூசுவார்களே
அடியார்களெல்லாம் கை கொட்டிக் கூடி சிரிப்பார்களே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

21

உத்தமனே சிவனே
உன் ஊர் சொல்வேன் பேர் சொல்வேன்
நினது திருத்தாள் புகழ் சொல்வேன்
நீ மட்டும் என்னை
உன்னுடன் சேர்க்காமல் அகற்றிவிட்டால்
“ நீ செய்வது சரியல்ல”  என்று உனக்கு
யார் சொல்வார் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

22

உனது மெய் அடியார்கள் அனைவரும்
நீக்கமில்லாத நேசம் உடையவர்கள்
பொய் அடியனாகிய எனக்கோ
ஊக்கம் இல்லாத நெஞ்ச ஓட்டமே உள்ளது
தன்னை மறக்கும் தூக்கம் வேண்டாம்
உன்னை நினைக்கும் ஆனந்தத் தூக்கமே வேண்டும்
வேறு ஏக்கம் எனக்கில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

23
      
அழிகின்ற வஞ்சகர்களை போக்கிவிடு
உன் பொன்னடிக்கே ஆளாகின்ற
மேலோர் திருவடி வாழ்த்தாமல்
வாழ்கின்ற நாயேன் எனக்கு
பாகை விட சிறந்த சுவையான
நினது அருளை என்று  தருவாயோ  ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

24

“தனது ஊழ்வினையை அகற்ற
தனது மனதையே உளவு பார்த்து எச்சரித்து
எதைச் செய்ய வேண்டுமோ
அதைச் செய்து தடுக்காத பொய்யன் இவன்
இவனுக்கு இருப்பது பீழை மனம்
இவன் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டான்
இவன் மனம் கொடியது” என
என்னைத் தள்ளிவிட்டால் என்ன கதி ஆவேன்  ஐயா
நான் ஏழை! .
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

25

ஆழம்  காண முடியாத அளவுள்ள
மல இருட்டில் சென்றுவிட்டேன்
மனம் கடுக்கிறது அதுவும்எல்லை  தாண்டிவிட்டது
புலன்களால் கட்டிச் சுமக்கப் படுகின்றேன்
இனி மேல்
தொகுப்பதற்கு துன்பமேயில்லை என்ற அளவு ஆனபின்
துன்பச்சுமையை இனி எடுக்க முடியாதே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

26  
நெஞ்சம் முழுதும் முட்கள் நிரம்பிய
புலை நிரம்பிய மாதர்களிடம்
கள் குடித்த நாயை விடவும் கடைப்பட்ட எனக்கு
அன்பர்கள் உள்ளவரைக்கும் உதவுகின்ற
உனது திருவடி மீது
அன்பு என்பது
சிறு எள் அளவு கூட  இல்லையே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
27 

மீண்டும் இது போல் மனிதப்பிறப்பு
அடைய முடியுமா என்று
நினைக்கவும் தோன்றாத  பலவீனன் நான்
நலம் தேடி மீண்டும் மீண்டும் வாடுகிறேன்
அமுதமாகிய நீயோ
உண்ணமுடியாத அளவு பரந்துள்ளாய்
உன்னைத்தவிர யாரால் இதை அமைத்து
எண்ண வைக்க முடியும் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
\.
28 
பலருக்குப் பலபிறப்பிலும் தீங்கு செய்த
மிகக் கொடியவிஷமுள்ள தேள் போல
செய்த வினைகளுக்காக வெதும்புகின்றேன்
அந்த மனதை ஒளித்து மறைக்க விரும்பாமல்
உன்னை அழைக்கின்றேன் அழுது வாடுகின்றேன்
இங்கு உலகுக்காக நஞ்சு சாப்பிட்ட
என் அருமை அப்பா அல்லவா நீ
எங்கே ஒளிந்துள்ளாய்ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

29  
காமம் கொண்ட பெரும் பேய்ப்பித்தன் நான்
ஆணவம், பொய் ,பொறாமை , சினம், வஞ்சம்கொளல் மட்டுமா
சகல பாவங்களும் நான் தான்
என்னைப் பார்ப்பீரா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

30

ஒரு சொட்டு கூட மிச்சமிலாது
உலகின் மீது விஷம் படாமல் காக்க
அத்தனை விஷமும் குடித்த தயவு நிதி நீ அல்லவோ
இங்கு அயர்ந்து நிற்கின்ற என் முன் ஒரு சொல் சொல்லாயோ
தூய திருக்கோயிலில் நீ இல்லையோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

31

நீ உன்னை மட்டுமே கொண்டாய்
நீயே உலகம் முழுதும் உள்ளாய் உனையன்றி இல்லை
மனைவி , மக்கள் வீடு எனும் வாழ்க்கை நடுவே
இழிவையே பெற்ற என்னை ஆள்வது உன் கடனே
என்னை உன் உடையவனாக்குவீரா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
.
*****






 

Thursday, 19 March 2015

மனதிடம் வேண்டுகோள்
பேனா திறந்து சட்டென எழுதி டைரியில் வைத்திருந்து மீண்டும் புதுப்பித்து எழுதிய காலங்களை அடிக்கடி கலைத்துகலைத்து  பாஸ்வேர்டு கேட்கும் கம்யூட்டர் கேலி செய்கிறது. மூச்சடக்கித் தான் முத்தெடுக்க வேண்டும். கைகளே பழகு. மனமே பாஸ்வேர்டை திருக்குறள் போல் மனனம்  செய். சிந்தனையே பிளாகர் ஓபன் ஆகும் வரை கெட்டியாக பொறுமையாக கலைந்து போகாதிரு. உனக்கு தமிழின் வாசகன் காத்திருக்கிறான். ஆதலால் - ஆதலால் - நீ மவுனத்திடம் யாசகம் செய்து உன் அகத்தமிழை பரப்புவாயாக.  

Monday, 16 March 2015


ஆச்சரியமும் செய்தியும் எங்கும் கிட்டலாம். சமீபத்தில் திருச்சியில் ஒரு ஓட்டலில் கை அலம்பும் இடத்தில் சின்னதாக ஒரு நோட்டீஸ் கண்டேன். கூடவே வந்திருந்த நண்பர் அவசரமாக காருக்கு கூப்பிடும் முன் எனது  மகள் எடுத்துத் தந்த சிறிய நோட்டில் குறித்துக்கொண்டேன். அது என்ன? பூமி வெப்பம் அடைவது எல்லோருக்கும் கவலை அளிப்பதுதான். ஆனால் என்ன செய்யலாம்? என்று கேட்டால் நழுவி விடுவோம்.
துளசிச் செடி பற்றி தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். எப்படி? ஒரு துளசிச்செடி நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் ஆக்சிஜன் தருகின்றது. மீதி நான்கு மணி நோம் ஓசோன் தருகின்றது. ஒவ்வொருவரும் 16 செடிகள் நட்டால் பூமி வெப்பம் நிச்சயம் குறையும் என்றது அந்த செய்தி.
வாருங்கள் நண்பர்களே
நடுவோம் ஓர் துளசிச்செடி

Wednesday, 11 February 2015

பங்கு


           அந்தக் கோபத்திற்கு நிகரான கோபம் தேன்தமிழ் நெஞ்சில் உருவானதே இல்லை. அப்பாவின் உடலை அப்படியே வெட்டி எறிய வேணும் போல் ஆத்திரம் கிளர்ந்தது. கண்ணாடிப்பெட்டியின் கிடக்கும் உள் கனலும் வெப்பத்தில் அப்பா உடம்பு இருந்தது.
          அரசியல்வாதிகள்  வரிசை நீண்டுகொண்டுதான் இருக்கிறது.இரண்டரை அடி ரோஜாமாலை முதல் பத்தடிக்கும் தாண்டியது வரை மாலைகள் அப்பா காலடியில் வைத்துவிட்டு,இறுக மூடிய கண்களையே சில விநாடிகள் பார்த்து”நீங்களா கண் மூடினீர்கள்” என்ற மாதிரி உற்றுப்பார்த்துவிட்டு நகரும் கூட்டம் தேன் தமிழனுக்கு போரடித்தது. அலுப்பாக இருந்தது.
         இந்த வேஷதாரிகளால்தான் ஆசிரியராக ஒரு பள்ளியில் பென்ஷனோடு நிம்மதியாயிருக்க வேண்டியவர்,இப்படி தெருத்தெருவாய் கொடிபிடிக்க ஆரம்பித்து ஒன்றியச் செயலரில் ஆரம்பித்து மாவட்டச்செயலர் வரை ஆரம்பிக்கும்போதுஅடங்கிப்போனார்.
        அரசியல்,குற்றவாளிகள் பதுங்குகுழி. நிமிர்ந்து இந்தச் சமூகத்தில் கால் ஊன்றி ஒரு துறையில் ஜெயிக்க முடியாதவர்கள் மாறுவேடத்தில் நுழைகிற கொல்லைப்புறவாசலே அரசியல்.
        “ஐயா..அநியாயமா போயிட்டீங்களே!”
        சாமந்திப்பூ சேவல் கொண்டைப்பூ சம்பங்கிப்பூ கலந்து பின்னிய பூ மாலையுடன் அப்பாவின் கால்மாட்டின் மேலிருந்த கண்ணாடி பாகத்தில் தலை வைத்து கண்ணீர் ஒழுக கண நேரம் கலங்கும் பெரியவர் யாரோ.
         கசங்கி நண் செருகி உடைந்து வழியும் துளிகள்.தோள் துண்டால் வாய் விம்மலை அடைக்கும் துண்டு.
        “உங்கப்பா மாதிரி பார்க்க முடியாது தம்பீ..”
        “போய்யா பெரிசு!என்னம்மோ சொல்லாதது சொல்ல வந்திட்டே.அவுரு கட்சியைவுட்டு விலகினாலும் தனியாளா அன்னிக்கு அரெஸ்ட் ஆனப்போ வந்து பாத்தியா? வந்திருந்தா உன்னை மதிச்சிருக்கலாம்”
           இப்படியெல்லாம் சொல்லி, அடக்கி விரட்டலாம்தான்.தேன் தமிழனுக்கு வார்த்தை எழும்பாமல் அமிலக்கட்டிகளால் சொற்கள் உள்ளே குமுறின. ஏன் அப்பா!கண்களை திறந்திருந்தபோது வாய் வார்த்தைகளால் கொட்டி கொட்டி எடுத்தீர்கள்.
       கண்களை மூடி நேற்றிரவு தூக்கத்தோடு போய் சேர்ந்தீர்கள்.இப்போது கலக்கிய அரசியல்குட்டையின் நாற்றம் பிடித்த சீக்காளிகள் வந்தனம் செய்வதை சகிக்க முடியவில்லை.போதாக்குறைக்கு என்னை வேறு அரசியலுக்கு இருக்க கடைசி ஆசை என்று மாவட்டப் பிரதிநிதிகளிடம் கூறி வந்திருக்கிறீர்கள்.
           துண்டு சுருட்டி வாயில் பந்து போல் அடைத்துக்கொண்டு அழுதிட்ட பெரியவர் நகர்ந்துவிட்டார். இப்போது நாற்பது வயசு தாண்டிய ஆறுமுகம் வருவது தெரிகிறது.
           “அப்பாவுக்கு இப்படி ஆயிருச்சே தம்பீ தேன்தமிழா!”
           “இவனுக்கு நான் தம்பியாம்..ஹேர்டை அடித்து அடித்து கலங்கி போன சுருட்டைத்தலை. நேற்று இரவு குடியில் நனைந்த வீச்சம் படிந்த பேச்சு.
          “சரி போங்க.. போங்க! ஆக வேண்டியதைப் பார்ப்போம்”
          ஆறுதல் காட்டப்படவேண்டிய தேன்தமிழனே, வந்தவர்களை அடுத்த மனநிலைக்கு நகர்த்தவும் வேண்டியிருந்தது. ஆனால் அதுவும் தப்பாகவே புரிந்துகொள்ளப்பட்டது.
         “கல் மனசு தம்பீ உங்களுக்கு ”என்று திட்டுவதுபோல சொல்ல வந்த ஆறுமுகம், “அப்பா மாதிரி இரும்பு நெஞ்சு தம்பீ” என்று மாற்றிப்பேசினார். நகர்ந்தான். அதிர்ந்து பேசமாட்டார் அப்பா.உரத்து சிரிக்க மாட்டார். வெற்றிலையுடன் புகையிலை கலந்து உண்டு மென்ற பற்கள் தாவாங்கட்டைக்குள் இப்போது அடங்கிக் கிடக்கின்றன.
           “உன் தோள்ல என் கட்சித்துண்டு எப்பவும் கிடக்கணும்யா தேனு”கடைசிப்பேச்சாக சொன்னது.
கார்கில் போரில் செத்தவரோ இவுரு! தேசியக்கொடி போர்த்தி பீரங்கி குண்டு முழக்கிதான் அடக்கம் பண்ணணுமோ. செத்ததுதான் செத்தான் .கடைசி ஆசை சொல்லாம சாவுற தகப்பனுக்கு நான் பொறந்திருக்க கூடாதா.
           தேன் தமிழன் நெஞ்சு முணுமுணுத்தது.
            அவ்வளவு கோபம். அவ்வளவும். விளைநிலங்களை விற்று ரைஸ்மில் கட்டினார். அறுபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து கட்சி மண்டப நிதிக்கு உதவினார். அம்மாவின் நகைகளை ஒவ்வொன்றாய் அடகு வைத்து அந்த அணி இந்த அணி என்று பார்ட்டி வைத்தே ஒழித்தார். தாலிக் கொடிக்கு வைத்திருந்த ஐந்து பவுன் சங்கிலியை வறட்சி நிவாரண நிதி சேகரிப்பு என்று உண்டியல் குலுக்கும் போது கழற்றித் தரச் சொன்ன போது அம்மா திராவகமாய் மாறினாள்.
           “ நம்ம பையன் பொண்ணு  எல்லாம் அனாதை ஆக்கணும்னு முடிவே பண்ணிட்டீங்களா. மூத்தவனை பி.இ. சேர்த்தீங்க. காலேஜ்ல சேர்ந்த ஒரே வருசம்... படிக்கிற நேரமா பாத்து மாவட்ட இளைஞரணில பொறுப்பு கொடுத்தீங்க... சரி... ! இப்பவே பையன் அஞ்சு சப்ஜெக்ட்ல காலி.... ”
          “ இப்ப என்னடீ பண்ணணும்கிற... ”
        “ என் தாலிய அறுக்காதீங்கன்றேன். நம்ம தேன்தமிழ் படிப்புக்கு விஷம் வைச்சுராதீங்கனு கேட்டுக்றேன்..”
            கடைசியில் அம்மா பேச்சு தோற்றது. நகை போய்விட்டது. டிகிரி படிப்பு பாதியில் நின்றது. டிகிரி காபி ஆற்றும் வேலையாவது கிட்டுமா என்ற நிலை வந்தது. எவரிடம் போய் வேலை கேட்டாலும் , “ ஓ ! ஐந்தாம் உட்கிளை மாவட்ட பிரதிநிதி பையனப்பா நீ... உங்கப்பா செல்வாக்குல முதலமைச்சரையே கூப்ட்டு பேசலாம்... நீ எங்ககிட்டே  சாதாரண வேலை பாத்தா நாளைக்கு தலைமைக் கழகத்துக்கு பதில் சொல்லணுமா இல்லியா... ” என்று நாசுக்காக பட்டுப் புடவை தூசு போல விலக்கி விட்டார்கள்.
அது ஒரு விதத்தில் துரத்தல் தான்.
                  தேன் தமிழன் எல்லாவற்றையும்  மீறி அங்கே இங்கே கடன் வாங்கி தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசுக் கடை போட்டான் கிழக்குத் தேரடித் தெருவில்.  பிறகு அதில் வந்த லாபத்தை எடுத்து, ரியல் எஸ்டேட் பார்ட்னர் ஆகி, நஷ்டத்தோடு பழி பாவமும் சேர்ந்தது.. ஆம்.
                   பார்ட்னர் வஞ்சனையும்  சதியும் இவன் மேல் விழுந்தன. இனிமேல் அப்பாவின் பெயர் கூறிய  எந்த நபரிடம் ஒட்டோ உறவோ பங்குதார நட்போ கூடவே கூடாது என்று  ஞானம் கற்றுத் தேர்ந்த போது அம்மாவுக்கு இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பு என்று அப்பல்லோவில் சீட்டு எழுதிக் கொடுத்தார்கள்.
   “ இரவல் தந்தவன் கேட்கின்றான்
                    அதை-
                    இல்லையென்றால் அவன் விடுவானா? ”
டி.எம்.எஸ். குரலில் கண்ணதாசன் பாட்டு மூளைக்குள் யாரோ பாடினார்கள். எவ்வளவு துக்கத்திலும் மூன்றாம் ஆள் ஒருவர் உள் மனசிலிருந்து  பார்த்துக் கூறுவது கேட்கும்.
போன மாசம் தான், அம்மாவின் கொள்ளியை வாரிப் போட்டான். தப்பாமல் மூன்றாம் மாதம் அப்பா ! அம்மாவுக்கு சடங்கு சாங்கியம் செய்த போது  அழுதவர்கள் மிகக் குறைவே. அன்று அப்பா மிக இயல்பாக மரண தத்துவம் பேசினார். மூன்றாம் நபர் போல வாசலில் ஒருவராக மர பெஞ்சில் அமர்ந்தார். கூப்பிட்ட போது மட்டுமே அம்மாவின் சடலம் அருகே வந்து நின்றார். பார்த்தவர்கள் கசந்து போனார்கள்.  “ இப்படி இருப்பானோ ஒரு மனுஷன்... பெண்டாட்டி செத்துக் கிடக்றா.. பொட்டு தண்ணீ வுடலியே.. ”
                   வசவுகளை விமர்சனங்களை என்னமோ விருது போல ஏற்ற முகத்துடன் அன்று இருந்தார். அப்படிப்பட்ட அப்பாவின் முகம் இன்று தீயில் வேகட்டும். பொசுங்கட்டும். மனசு சபித்தது.
                   என்னென்னமோ முன்னும் பின்னுமாய் பயணித்து  துக்கமும் வஞ்சமும் கலந்து புகைந்த நெஞ்சு , வாசலில் குவிந்த மொத்த கூட்டமும் ஏதோ பரபரத்தது போல் தெரிந்தது. தேன் தமிழனும் வாசல் பக்கம் பார்த்தான்.
                  அடிஷனல் டெப்டி கமிஷனர் ஆஃப் போலீஸ் ஜீப் என்று எழுதியிருந்தது.
                 வந்தவர் இந்தவருடம் பதவியில் இல்லை. நாராயண நாகராஜன் தான். ஆனால் அவர் போன வருடம் வரை, அப்பாவின் சந்திப்புப் பட்டியலில் கட்டாயம் இடம் பிடித்தவர். இவரிடம் என்ன பேசுவதோ. அப்பா என்னவிதமான கருத்துகளைப்பேசி என்ன அபிப்ராயம் ஏற்படுத்தி வைத்திருக்கிறாரோ. இவரிடம் என்ன பேசி அனுப்புவது. குழம்பினான்.
               சாவு வீட்டிற்கு வந்தவர்களின் பதவி வாடையும் ஒரு சுமை தான்.  தேன் தமிழா. உன் தலைவிதி இப்டி நாறிப் போச்சேடா. உங்கப்பன் இன்னும் எத்தனை பேர்ட்ட என்னென்ன மாதிரி சம்பந்தம் வச்சிருந்தானோ. அடுத்தது மார்க்கெட் போன நடிகை கூட, எவளாச்சும் மாலையோட வர்லாம்....
              வந்தவர் நேராக உள் கூடத்துக்குச் சென்று இரு கால்களும் கோர்க்கப் பட்ட நிலையில் வெண் வேட்டி போர்த்திய மார்பின்  குறுக்கே இரு கைகளும் பிணைக்கப் பட்டு திருநீறு சார்த்திய உடம்பாக கண்ணாடி பெட்டியின் உள்ளே கிடக்கும்  அப்பாவை ஒரு நொடி துல்லியமாக கண் மூடித் தொழுதார்.
              “ பூசுவதும் வெண்ணீறு
                பூண்பதுவும் பூங்கரவம்
                 ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ ”
உரத்த குரலில் மாணிக்க வாசகரின் தேவாரம் பாடி விட்டு தலை குனிந்து வணங்கினார். தேன்தமிழன் தோளில் கை வைத்து ஆதூரமாய் கூட்டம் தாண்டி அவனைத் தள்ளிக் கொண்டு சென்றார்.
            “ உங்கப்பனை மாதிரி அரசியல்வாதிங்க நாட்டுல கம்மி தம்பி. நான் ரிடையர் ஆனப்றம் கூட என்னை மதிச்சு பேசுனவங்கள்ல அவர் ஒருத்தர்.  நிறைய பேரு தன் பையன் வேலை. பொண்ணு கல்யாணம்னு  சுயநலமான கோரிக்கையோட கட்சியில இருப்பாங்க. இப்படீ ஒரு வளர்ந்த பையன் அவுருக்கு இருக்றதே இப்பதான் தம்பீ தெரியுது..  போன வருசம் பரமத்தி வேலூர் பாலத்துக்கிட்டே இந்தப் பக்கம் ஆயிரம் பேர்! அந்தப் பக்கம் மூவாயிரம் பேர்! கருப்புக் கொடி காட்ற போராட்டம்! கடைசி நிமிஷம் லா அன்ட் ஆர்டர் பிராப்ளம் வராமெ எப்டி தடுத்தேன் தெரியுமா? கட்சிக்கொடியோட நின்ன  உங்கப்பாகிட்டே அமைதியா கலைஞ்சு போக சொன்னேன்.
             லத்தி சார்ஜ் இல்லாமெ, பெட்போல் குண்டு வெடிக்காம உயிர் இழப்பு வராமல் நின்னிடுச்சி. இல்லேன்னா கலெக்டர் ஆர்டர்ல பையர் ஓப்பன் பண்ணி இருப்போம் தம்பீ....!  எத்தனை உயிர்களெக் காப்பாத்தியிருக்கார் உங்கப்பா.... அவரு பையன் நீ...! உனக்கா எடுத்து சொல்ணும்...”
             “...”
              “அரசியல் நல்லது.... ஆனால் அரசியல்வாதி கெட்டவனுக... இந்த இழிச் சொல்லை  மாத்திக் காட்ட உன் பங்கு என்ன தம்பீ...! ”
     தேன்தமிழன் எதுவும் சொல்லாமல் அப்பாவின் காலடிக் கட்டை விரல் மேலிருந்து மெல்லச்சரிந்த ஒற்றை ரோஜாவை முதன்முதலாக மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தான்.
                                     
 
                                    ***********
 
  
இலக்கியப்பீடம் பிப்ரவரி -2015 இதழில் வெளியான பரிசுப் பெற்ற சிறுகதை.