Sunday, 30 November 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (3)

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (3)


பாடல் 2ல் பகவான்: 

“அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் உற்று

அபின்னமாய் இருப்போம் அருணாசலா” என அருள்கிறார். 

கடையில் வாழைத்தாரில் தொங்கும். எல்லாம் தனித் தனியாக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஆனால் சில பழங்களில் உள்ளே இரண்டு கொண்டிருக்கும். வெளியே இரண்டு பழத்திற்கும் பொதுவான ஒரே மஞ்சள் தோலால் மூடிய வாழைப்பழம் பார்த்திருப்பீர்கள். அதனை ஒன்று என்பதா? இரண்டு என்பதா? ஒரு பழம்தான் என்று சொல்பவர்களுக்கு இரண்டு என வாதிடலாம். இரண்டு பழம் என்பவர்களுக்கு அது ஒன்றுதான் என சுட்ட முடியும்.

ஈசா என அகத்தில் அழகு என்ற அம்சமாய் நீ உள்ளாய். சுந்தரமும் நீதான். அழகு என்ற சொல்லுக்கு சுந்தரம் என்ற இணைச் சொல்லும் உண்டு. 

கல்லில் உள்ள எல்லா இடத்திலும் சிலையின் தன்மை உள்ளது அல்லவா. 

இரண்டையும் பிரிக்க முடியாமல், பின்னம்( சிதைப்பது) இல்லாமல் “அபின்னமாய் இருப்போம் அருணாசலா” என பகவான் அழைப்பது ஆன்ம குயில் கூவல் போன்ற அழகுடையது.


அபிராமி அந்தாதியில் (பாடல்:9) 

அழுதபிள்ளைக்குப் பால் தரும் அம்மையின் கனிவு குறித்த பாடல் இது. சீகாழியில் திருஞானசம்பந்தப் பெருமானுக்குப் பொற்கிண்ணத்தில் பால் சுரந்து புகட்டியமை பேசப்பட்டது.

“அம்மே நீ என் முன் வந்து நிற்கவே” என்ற கோரிக்கை வைக்கிறார் அபிராமிபட்டர். அப்படியெனில் அப்பன் சிவன் இல்லையா என ஐயம் தோன்றலாம். அப்படி அல்ல. சிவசக்தி என்றே ஒன்றாகக் குறிக்கிறோம். ஒன்றுக்குள் ஒன்று. 

அம்மை அப்பனாக வரச்சொல்லும் காட்சி இப்பாடலில் கேட்கப்படாமல் இருந்தாலும் ஏக வடிவே உள்ளது. அறிவின் வேலை த்தனையும் பகுத்துக் கொண்டே செல்வது. ஞானத்தின் வேலையோ பொதுமை கண்டு இணைப்பதும் இணைவதும் ஆகும்.

                                                           ( ஈசனால் தொடர்வோம் )



சந்த்யாவந்தனம்: (தொடர்:3)

 சந்த்யாவந்தனம்: (தொடர்:3) 

சந்த்யாவந்தனம் செய்யக் கற்றுக்கொண்டவ்ன் துவிஜன் அல்லது இருபிறப்பாளன் எனப்படுகிறான். தெய்வ சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்தில் இருபிறப்பாளன் - இரண்டாம் முறை பிறந்தவன் - என்று சுட்டப்படும். தரும சாஸ்திரம் இது பற்றி என்ன சொல்கிறது?

“பிறவியில் எல்லோரும் உறுப்பு வழி பிறந்தவ்ர்கள்தாம்.  ஞானக்கண்  திறக்கப்பெற்று பிரம்மத்துக்கு அர்ப்பணமாக கர்ம அனுஷ்டானங்கள் செய்யத் தொடங்கியபின்னர்தான் துவிஜர் அல்லது இரண்டாம் முறை பிறக்கிறோம். ( ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணோ ஜாயதே த்விஜ:”

ஒரு பறவை முட்டையாக முதலில் பிறந்தபோது குறுகிய முட்டையின் அளவே அதனுடைய உலகம். முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த பின்னரே புதியதொரு பேருலகை அது காண்கிறது. இது அப்பறவையின் இரண்டாவது பிறப்பு.

இதுபோலவே, குறுகிய மனப்பான்மையுடன் புலன்களுக்கு அடிமையாகப் பிறந்த மனிதன் அகக் கண் திறக்கப் பெற்று பேரானந்த வடிவான ஆன்ம ஒளியைக் காணும்போதே இருபிறப்பாளன் என்ற பெயருக்கு உரியவன் ஆகிறான். பூணூலாலும் சிகையாலும் மட்டுமல்ல.

யணூல் எனப்து வேதாந்தம்; நுண் சிகை ஞானமாம்.

                                                                      ( ஈசனால் தொடர்வோம்)


Saturday, 29 November 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும்

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் 


அருளியவர் : பகவான் ரமணர்

பாடல் : -1 

அருணாசலம் என அகமே நினைப்பவர்

அகத்தை வேரறுப்பாய் அருணாசலா 

“அகம்” என்ற சொல்லின் இரு அர்த்தங்களை அழகுறப் பயன்படுத்தி இமயமலையை கண்ணாடி தாங்குவதுபோல பகவான் ரமணர் அமைத்த முதல் பாடல் இது.

“அகம்” என்பது உட்பகுதியைக் குறிக்கிறது. “அகந்தை” என்பதும் குறிக்கிறது. அகந்தைக்கிழங்கு என்று சித்தர் பாடல்கள் பேசும்.  அருணாசல எனும் ஐந்தெழுத்து குறித்து மனிதன் நினைக்க ஆரம்பித்தால் அகந்தை அழியும் .

“மன்” - என்றால் நினைப்பது அதனால் மனிதன் என வந்தது.

அபிராமி அந்தாதி பாடல்:71 ல் மனதை நெஞ்சம் என வருணித்திருப்பார் அபிராமிபட்டர். 

“இழவுற்ற நெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே”

நெஞ்சம்  தனது நிலை விட்டு இறங்கிக்கொண்டே இருக்கும். அல்லது தன்னை நோக்கி இரங்கிக் கொண்டேயும் இருக்கும். சுய பச்சாதாபம். Self pitty. 

அதனை “இறங்கும்போது” அவ்வப்போது உயர்த்த வேண்டியிருக்கிறது. 

“இரங்கும்போது” அபிராமி அம்மையை நினைப்பதும் கொள்வோம்.

செம்மறிக் கூட்டத்தில் வளரும் சிங்கக் குட்டி நம் மனது. உனக்கு என்ன குறை? நீ இப்படி வருந்த வேண்டாம். அபிராமி எல்லையற்ற கருணை கொண்டவள் இருக்க என்ன குறை என்று மனதைக் கேட்க வேண்டும்.


***


சந்தயா வந்தனம் விளக்கம் / பகுதி : 2

 சந்தயா வந்தனம் விளக்கம் / பகுதி : 2

30.11.2025

ஈசா வாக்ய உபநிஷத் என்ன சொல்கிறது? என்ன பிரார்த்னையை முன் வைக்கிறது?

மனிதன் எதைக் காண ஆசைப்பட்டு தனது எண்ணங்களை அமைக்க வேண்டும் என அது சொல்கிறது? அது சூரியனை நோக்கி அருளக் கேட்பது இதனைத்தான் இதுதான்:

“பொன் வட்டில் போன்ற உன் பிரகாச வடிவத்தால் உனக்குள் இருக்கும் சத்தியத்தின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. சத்தியத்தை நாடும் என்னுடைய பார்வைக்கு நீ அந்த மறைப்பை நீக்கி அருள்வாயாக. உன் கிரணங்களைச்  சுருக்கி உள் வாங்கிக்கொள். உன்னுடைய உத்தமமான மங்கள வடிவம் எதுவோஅதை நான் பார்க்கும்படி அருள்வாய்”

தாயுமானவர் வரிகளில் அது இவ்விதம் புரிந்துகொள்ளப்படலாம்:

“ஓராதே!

ஒன்றையும் உற்று உன்னாதே!

நீ முந்திப் பாராதே!

பார்த்தானைப் பார்”

- இவ்வரிகள் நமக்கு என்ன சொல்கின்றன? எண்ணங்கள் அலைபோல் வந்து கொண்டிருக்கின்றன. பெரிய அலை இது என ஓடுவோம். துரத்துவோம். துரத்தினால் அச்செயல் நாம் முந்திக்கொண்டு பார்த்த செயல் ஆகும். ஆனால் அலைகளை ஆரம்பிக்கிற இடம் ஒன்று உள்ளது. அலைகளை அனுப்புகிறவர் யார் எனப் பார்ப்பதே “பார்த்தானைப் பார்” என்ற வரியின் அர்த்தமாகும்.

                                                                        ( தொடர்வோம்/ 30.11.2025)

Friday, 28 November 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும்

 

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் 


அருளியவர் : பகவான் ரமணர்

காப்பு: 

அருணாசலவரற்கு ஏற்ற அஷர மணமாலை சாற்றக்

கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.


அருணாசல நாயகனுக்குத் தகுதியான எழுத்துமாலையை மணமாலையாகப் பாட வேண்டும் என் தியானிக்கிறார் பகவான் இரமணர். 

எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்து “அ” என்ற கரம் “அகரம்” உதவுகிறது. 

நம் அனைவருக்கும் கருணையே வடிவான ஐந்துகரம் கொண்டு காக்கின்ற கருணாகரம் கருணை சாகரம் ; கருணையின் சேகரம் விநாயகப் பெருமானே ஆவார். இரமண பகவான் மூல முதல்வனின் அருளைக் கோருவது அவருக்காக அல்ல. வழியறியா பக்தனுக்காக. 

பக்தனுக்காக எனும்போது தன்னை ஒரு பக்த நிலைக்கு இரமண பகவான் இறங்கி வருகிறார். 

அபிராமி அந்தாதியில் முதல் பாடலில் விநாயகப் பெருமானுக்குதில்லை ஊரர் ( சிவன்) பாகத்து (அம்மை) மைந்தன் விரும்பும்  நீண்ட  கொன்றைமாலையும் சண்பக மாலையும் சார்த்தப்படுகிறது. 

தாரமர் ( தார்: நீண்ட / அமர்: விரும்பும்)கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே என அபிராமிபட்டர் பாடுவார்.

- தொடர்வோம் / 29.11.2025


சந்த்யாவந்தனம் விளக்கம் (1)

 29.11.2025

சந்த்யாவந்தனம் விளக்கம்  (1)

அனைவருக்கும் வணக்கம் : புதிய பகுதி

ஓம். ஒரு கட்டிடம் எவ்வளவு பெரிதாகவும் அழகாகவும் இருந்தாலும் அதில் முக்கியமாகப் பயன் படுவது அதிலுள்ள காலி இடம். அதுபோல், ஒருமனிதன் அனுபவிக்கும் இரவும் பகலிலும்                                                                                      பெரிய செயல்களும் இன்பமும் நிறைந்தனவாக இருந்தாலும் செயல்களுக்கு நடுவே இன்பங்களுக்கு நடுவே செயலர்று இருக்க வேண்டிய நிலை ஒன்று உண்டு. அதுவே ஸந்தி. அது பகலையும் இரவையும் விட பயன் தரக் கூடியது. இது முன்னோர் கண்ட பாதை.

அந்த ஸந்தியாவந்தன காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

அந்த நேரத்தில் சந்த்யா காலத்தில் உலக சந்தடியிலிருந்து விலகி, உண்ணாமலும் உறங்காமலும் தான் தானாக தனித்திருக்க வேண்டும்.  பசித்தும் தனித்தும் இருக்கும் ஒருவன் விழித்திருக்கும் காலமாக இதனை மாற்ற அறிகிறான். வாய் உண்ணவில்லை. கண் உறங்கவில்லை. வாய் யாரிடமும் பேசவும் இல்லை. இப்படி ஆக்கிக் கொண்டு, தன் உள்ளும் தன் புறமும் நின்று, தன்னை அறியாமல் தன்னை இயக்கும் பரம்பொருளை ஒவ்வொருவனும் வழிபடுவதே சந்த்யாவந்தனம்.

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேஜோ மயம் என்று தாயுமானவர் புகழ்கிறார். இது சிற்பரவெளிக்குள் வளர்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தற்பரம் ஆகிறது அந்த பரதேவதையின் அஞ்சலி.   

இந்தப் பழக்கம் முதிர்ந்தால் என்ன கிடைக்கும்?

இந்தப் பழக்கம் முதிரும்போது,அந்த மனோ நிலையில்  பகலும் இரவும் சந்திக்கும் காலத்தில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு எண்ணத்தின் முடிவுக்கும் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சூன்யம் தவிர்க்கப்படும். ஒவ்வொரு சொல்லின் முடிவுக்கும் ஆரம்பத்திற்கும் நடுவில் உள்ள சூன்யம் - வெற்றிடம் அகலும். இவ்வளவு ஏன்? ஒவ்வொரு செயலின் தொடக்கத்திற்கும் முடிவிற்கும் நடுவில் உள்ள வெற்றிடம் சூன்யம் மறைந்து ஆன்ம தரிசனம் விளங்கும். ஆம். ஆன்மாவே நமது எண்ணமாகவும் , சொல்லாகவும், செயலாகவும் பரிமளிக்கிறது என்பதை உணரத் தொடங்கும் ஆன்ம தரிசனம் அது.

உண்மையில் உலகில் காணும் எல்லாப் பொருள்களும். செய்யும் செயல்களும், எல்லா விவகாரங்களும் ஆன்மாவை மறைக்கவே செய்கின்றன.

ஆம். ஜபமாலையை உருட்டும்போது மணிகளிடையே ஊடுருவிச் செல்லும் இழை, மணிகளில் மறைகிறது.இடை இடையில் மட்டும் மீண்டும் தோன்றுகிறது. அதுபோல சூத்திரமாய் மறைந்திருக்கும் ஆத்மா செயல்களில் மறைந்து மின்னல் போல் தோற்றம் அளிக்கிறது.

                                                                     ( தொடரும்/ 29.11.25)


அவளுக்கென்று ஒரு சிலையுமில்லை

 

 வா(ச)க மனமே நலம்தானே! உங்கள் உள்ளம் வாழ்க. இல்லம் வாழ்க.  கார்த்திகை மாத தீப விழாக் காலம் இது. வாழ்வில் ஒளி வேண்டி திருஅண்ணாமலை வலம் வரும் புண்ணிய நேரம் இது. நிற்க. 

வாழ்க்கை என்ற தொடர் ஓட்டத்தில் நாம் உள்ளோம். பெண் ஆணுடன்; ஆண் தனது இணையுடன்  ஒவ்வொரு கண்ணியாக தாண்டும் வாழ்வில் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். 

ஆனால், பணத்தேவையை விடவும், உணர்வுப் போராட்டங்கள் ஆணையும் பெண்ணையும் புரட்டிபோடுவதில் நிலைகுலைந்து போகிறோம். 

அதனால் சரியான திசைகள் புரிபடுவதில்லை. முடிவுகள் வேறு வேறு தளம் செல்கின்றன. முன்னைப்போல கூட்டுக் குடும்ப அமைப்பும் இல்லை. அதனால் ஒருவருக்கொருவர் பரிமாறும் உணர்வுகளே அடுத்த கட்டத்திற்கு குடும்பத் தேரின் சக்கரம் அசைக்கும் - திருப்பும் கட்டைகளாக - உள்ளன. அதாவது தேர் சக்கரத்தில் வைத்து ஒரு கட்டையினால்- குறுகலான திருப்பங்களில் - தெருக்களில் - தேரினைத் திருப்பும் நிகழ்ச்சியை - தெருவடைச்சான் என்பர் - அதாவது அடுத்த கட்டத்துக்கு நகர முடியாதபோது அத்தனை பெரிய தேருக்கு - தெருவடைச்சான் - என்ற பெயர் ஏற்பட்டுவிடும்.

உணர்வுகள் முக்கியம். பரிமாறும் வார்த்தைகள் முக்கியம். சொல்லும் விதம் மிகவும் மிகவும் முக்கியம். உடம்பு எப்படியிருக்கு என்ற சொல்லினை கரிசனமாகவும் கேட்கலாம். கோபமாகவும் கேட்கலாம். 

துவைப்பதற்காக ஊற வைத்த கணவனின் பனியனில் பெண்ணின் புடவை சாயம் தோய்ந்து வெள்ளை பனியன் சிவப்பு பனியனாவதுபோல் கணவனும் மனைவியும் ஒருவர் உணர்வைப் பெறுகின்றனர்.  

தனது மனைவி கணவனது தாய்க்கு ஆற்றிய சேவை சுமையால் தன்னையே கவனித்துக்கொள்ள முடியாத நிலை நடுத்தரக்குடும்பத்தில் உண்டு. அதனை அலுவலகப் பணியால் உணர முடியாத கணவர்கள் இன்றும் உண்டு.

வீட்டை விட்டு வீதியில் இறங்கினால் எத்தனை எத்தனை சிலைகள்! மனைவியின் தன்னலமற்ற உழைப்புக்கான சிலைவைத்தல் நிகழ்ச்சி நடைபெறுமானால் தமிழகம் பெண்களின் சிலையால் நிரம்பிவிடும் என்பதால் எவரும் வீட்டுப் பெண்களுக்கு சிலை வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை போலும்! 

 ஆனால் நன்றி உணர்வுகொண்ட கணவர்கள் தமது மனதில் “அவளுக்கொரு சிலையுமில்லை” கவிதையை அரங்கேற்றம் செய்வார்கள் என்று நெஞ்சார நம்புகிறேன்.


Friday, 21 November 2025

 ஆகாய மின்னல் நல்லவங்களான்னு லைட் அடிச்சுப் பார்க்குது


பல் செட் கீழே விழுந்தாமாதிரி எல்லாம் காலியாகி 

மழையாக கீழே உதிர்த்துவிட்டு 

ஒரு வெற்றிடமாய் இருக்கிறாய் ஆகாயமே நீ இன்று.

வானமே நீ என் தாத்தா மாதிரி தோணுகிறாய்.

வேட்டியை சரியாக கட்டாமல்

தோட்டத்தில் அலைகிறது மாதிரி 

உன் மேக வேட்டியை திரிய விடுகிறாய்.

ராத்ரியெல்லாம் - ஒரு பத்தரை மணி

ஒரே மின்னல் காடாக்கிவிட்டாயே ஏன்.

ஞானியர் உலகத்தில் பாயும் நல்லொளி மாதிரி இருந்தது அது.

மூணு வயசு அபி பாப்பா  

பாயில்  போர்வையில் நத்தை மாதிரி சுருண்டு கொண்டு;

“ஏம்பா .. நம்மள எல்லாம் நல்லவங்களான்னு 

சாமி லைட் அடிச்சுப் பார்க்கிறாரான்னு” கேட்டது.

நான் என்னத்தைக் கண்டேன்!

சரடு சரடாக இங்கிலீஷ்ல “Y” எழுத்து போடறா மாதிரி 

கம்பி கம்பியாத் தெரியற 

மின்னல் கோட்டைப் பார்த்ததும் 

அது மறைஞ்சதும்

வயதான தாயின் நடுமண்டையில ஓடற

வெள்ளைமுடிக் நரைக்கற்றை ஞாபகம் வந்தது

உண்மையிலேயே மின்னல் வரும் போது

கண்ணை மூடிக்கிற பய புத்தியைக் கழுவறத்துக்கு

கடையில சோப்பு இருக்கா தெரியலை.

ஆனா மேகமே..

இந்த அறை கூட 

சில்லுன்னு ஆயிட்டுது

ராத்திரியெல்லாம் பெஞ்சு வச்சிருக்கே!

தோட்டமெல்லாம் தார் ரோடெல்லாம் ஈரம்.

மைனாக்குருவி

ஒன்னு இறக்கை நனைஞ்சிருந்தது

ராபின் நாய்க்குட்டி கூட சாக்குல சுருண்டு கிடந்தது.

கண்ணு கூட அரைக்கண்ணுதான் திறக்குது

சுதந்திர தினம் இன்னும் இரண்டு நாள்ல வருது

மேகமே உனக்கு கேட்குதா இந்தியாவின் சந்தோஷ சத்தம்?

***


Friday, 14 November 2025

 பனியன் போட்ட குருவி


குழந்தைகள் வருணிக்கும் அழகில்

கவிதை வார்த்தைகளை  நான் எழுதுவதில்லை

குழந்தைகள் காட்டும் மஞ்சநாத்தி

பாம்பும் வந்தால் கத்தும் நொள்ளான்

குதிரைக் கொண்டை போட்டிருக்கும் வெண் கோரைகூட்டம்

முள் கம்பி வேலியைச் சிறகால் போர்த்தும் நாரைகள்

குளிரில் 

குழந்தை அபி சொன்னாள் “பனியன் போட்ட குருவி!” 

ஓ ! மரங்கொத்தி குருவி! 

பெயரற்ற அழகுடன் 

பெயர் புரியா வான் பார்க்கும்

மின்கம்பி அமர் குருவிகளுக்கு என்ன பெயரோ என்றேன் 

தொப்பிக்குருவி என்றாள் குழந்தை அபி

மடக்கி வைப்பேன் 

கவிதை எழுதக் கொணர்ந்த தாளை.

***



 கவலை விடுபடல்

இத்தனை பெரிய ஊரில்

யாருமில்லை என் வீட்டைப் பாதுகாக்க

ஒவ்வொரு சேமிப்பும் ஒவ்வொரு பொருளையும்

தனியே விட்டு ஊர் கிளம்ப

குசுகுசுக்கும் பயம் நெருடிற்று

செம்பருத்தி தனியே வீழுமே

தோட்டம் நீரற்றுக் காயுமே

ஒட்டடை குமிந்து கூடுமே பூட்டுகளை நம்பியா

ஒரு ஒரு மனிதனும் வீட்டைத் 

தனியே விட்டிட அஞ்சுகிறான் ?

குனிந்து கிழவி போல  கொல்லைப்புற மாமரம்

ஓரோர் இலை போடும் சப்தம் கேட்கும்

நண்பர் வந்து ஏமாறுவர் சப்தம் கேட்டு!

வீட்டைப் பாதுகாக்க 

யாரேனும் தோழனை

இரவிலே படுக்கச் செய்யும் ஏற்பாடுகள் தோல்வி

அவரவர்க்குள்ளும் ஆயிரம் முட்கள்

ஆயிரம் காரணங்கள் கூறி தட்டிக் கழிக்க

பூட்டிய வீட்டை தனியே விட

பயச்சங்கிலி தாக்கும்போது 

நீண்ட வெகு நீண்ட

காலங்களுக்குப் பிறகும்

தொங்கும் சருகுக் குப்பை என அலட்சியமாய்

எடுத்துப் போடாமல்

நான் விட்டிருந்த கூடு நோக்க நேர்ந்தது!

தன் கூடு இருக்கிறதா என்று பார்க்க சீறிப்பாய்ந்து

கூரை கீழே காற்றில் பளபளத்தது 

அந்த மஞ்சள் மார்புக் குருவி ஓ! கடுகுக்கூர் அலகினால்

உள் சன்னல் வழியே அதன் கண் காணக்கிடைத்தது.

“வீட்டைப் பாதுகாக்க ஆள்வந்தாயிற்று”

விட்டு விடுபடலானேன் எனக்கென்ன மனக்கவலை!

***


 ஆன்மிகம்



பறவைகள் எதுவும்

பறக்கும் போது

கால்களை மடக்கிக் கொள்கின்றன

உள் நோக்கி மடங்கும் தருணம்

வெட்டவெளி ஒன்று விரியும்.


***


Thursday, 13 November 2025

 பரிகாசத்துக்குரிய முட்டை



பிடி நழுவ எது மூலம்  எனத் தெரியவில்லை

பிடி கொள்வதற்கும் காரணம் சரிவர இல்லை

ஒரு செடியாய் மாறினால்

சில மண் வெட்டிகளுக்கும்

ஒரு மரமாய் மாறி நின்றால்

கூர் அரிவாளுக்கும்  பலியாகும் நிலை என்பதால்

ஒரு பறவையாய் மாற எத்தனிக்கும் கணத்தில்

எனது பெருவிருப்பத்தின் முட்டையை

ஒரு மின்மினி உடைத்ததெனில் யார் தான் நம்புவார்கள்

சத்தமில்லாத 

அந்த உடைந்த கணத்தை

பறந்து கொண்டிருக்கும் எந்தப் பறவையும் அறியாது

இப்போது போலவே.


***


Wednesday, 12 November 2025

 


காபிக்கடை 

காபி : 2

13.11.2025 வியாழன். 


கவிதைக்கு கிடைக்கும் மொழி மட்டுமல்ல அதன் சூழலும் தளமும் கூட மாறிக்கொண்டே வந்துள்ளது. கவிஞன் சுட்டும் தலைவி ஒருத்தி அகநானூறு பாடல்கள் ஒன்றில் தலைவன் தன்னை அடைந்து மனம் செய்துகொள்வானா என்ற ஏக்கமுடன் உள்ளாள்.அவளுக்கு தைரியமும் தலைவன் மீது நம்பிக்கையும் வருவதாக ஒரு சூழல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தோழியே! நேற்றிக்கு நடந்த சிரிப்பதற்கு இடமான செய்தி ஒன்றைச் சொல்கிறேன் கேள் என்று ஆரம்பிக்கிறது அப்பாடல்.(அகநானூறு/கபிலர்/பாடல்:248/புலியூர்கேசிகன் உரை)

வேடர்கள் பன்றி வேட்டைக்குச் செல்கிறார்கள். வேட்டை நாய்கள் பன்றிகளை பயமுறுத்தின. தொங்கும் முலைகளைக் கொண்ட தனது  பெண் பன்றியைக் குட்டிகளுடன் காப்பாற்ற ஆண்பன்றி அந்த வேட்டை நாயை எதிர்த்து விரட்டுகிறது. அதுமட்டுமல்ல, வேட்டைக்காரனுக்கும் அப்பன்றி தனது எதிர்ப்பைக் காட்டி தடுக்கிறது. வேடுவனும் கூர் அம்பை எய்யாமல் அகல்கிறான்.

இச்செய்தி என்ன குறிக்கிறது? பழி போடுவது வேட்டை நாய்கள் போன்ற மனிதர்களின் கூட்டம். அதனை எதிர்த்து விரட்டுகிறது உன் தலைவன் நாட்டுப் பன்றி.  அதுமட்டுமல்ல, அம்பு எய்து துன்பம் தருவதற்கு வேடர்களும் வந்தாலும் நேருக்கு நேர் சமாளிக்கிறது தலைவன் நாட்டு ஆண் பன்றி.

நிகழும் எளிய சம்பவங்களில் வாழ்வுக்கான நம்பிக்கை பெறும் காட்சி ஒற்றுமை அக நானூறு இலக்கியத்தில மட்டுமல்ல இன்றைய புதுக்கவிதையிலும் காண முடிகிறது.

எல்லா நிகழ்விலும் நாட்டின் வளம் பேசப்பட்டது அன்றைய கவிதை மொழியில். இன்றைய கவிதை மொழியில் சுயம் இழப்பு; அடையாளம் இழப்பு சுட்டப்படுகிறது.