வா(ச)க மனமே நலம்தானே! உங்கள் உள்ளம் வாழ்க. இல்லம் வாழ்க. கார்த்திகை மாத தீப விழாக் காலம் இது. வாழ்வில் ஒளி வேண்டி திருஅண்ணாமலை வலம் வரும் புண்ணிய நேரம் இது. நிற்க.
வாழ்க்கை என்ற தொடர் ஓட்டத்தில் நாம் உள்ளோம். பெண் ஆணுடன்; ஆண் தனது இணையுடன் ஒவ்வொரு கண்ணியாக தாண்டும் வாழ்வில் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், பணத்தேவையை விடவும், உணர்வுப் போராட்டங்கள் ஆணையும் பெண்ணையும் புரட்டிபோடுவதில் நிலைகுலைந்து போகிறோம்.
அதனால் சரியான திசைகள் புரிபடுவதில்லை. முடிவுகள் வேறு வேறு தளம் செல்கின்றன. முன்னைப்போல கூட்டுக் குடும்ப அமைப்பும் இல்லை. அதனால் ஒருவருக்கொருவர் பரிமாறும் உணர்வுகளே அடுத்த கட்டத்திற்கு குடும்பத் தேரின் சக்கரம் அசைக்கும் - திருப்பும் கட்டைகளாக - உள்ளன. அதாவது தேர் சக்கரத்தில் வைத்து ஒரு கட்டையினால்- குறுகலான திருப்பங்களில் - தெருக்களில் - தேரினைத் திருப்பும் நிகழ்ச்சியை - தெருவடைச்சான் என்பர் - அதாவது அடுத்த கட்டத்துக்கு நகர முடியாதபோது அத்தனை பெரிய தேருக்கு - தெருவடைச்சான் - என்ற பெயர் ஏற்பட்டுவிடும்.
உணர்வுகள் முக்கியம். பரிமாறும் வார்த்தைகள் முக்கியம். சொல்லும் விதம் மிகவும் மிகவும் முக்கியம். உடம்பு எப்படியிருக்கு என்ற சொல்லினை கரிசனமாகவும் கேட்கலாம். கோபமாகவும் கேட்கலாம்.
துவைப்பதற்காக ஊற வைத்த கணவனின் பனியனில் பெண்ணின் புடவை சாயம் தோய்ந்து வெள்ளை பனியன் சிவப்பு பனியனாவதுபோல் கணவனும் மனைவியும் ஒருவர் உணர்வைப் பெறுகின்றனர்.
தனது மனைவி கணவனது தாய்க்கு ஆற்றிய சேவை சுமையால் தன்னையே கவனித்துக்கொள்ள முடியாத நிலை நடுத்தரக்குடும்பத்தில் உண்டு. அதனை அலுவலகப் பணியால் உணர முடியாத கணவர்கள் இன்றும் உண்டு.
வீட்டை விட்டு வீதியில் இறங்கினால் எத்தனை எத்தனை சிலைகள்! மனைவியின் தன்னலமற்ற உழைப்புக்கான சிலைவைத்தல் நிகழ்ச்சி நடைபெறுமானால் தமிழகம் பெண்களின் சிலையால் நிரம்பிவிடும் என்பதால் எவரும் வீட்டுப் பெண்களுக்கு சிலை வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை போலும்!
ஆனால் நன்றி உணர்வுகொண்ட கணவர்கள் தமது மனதில் “அவளுக்கொரு சிலையுமில்லை” கவிதையை அரங்கேற்றம் செய்வார்கள் என்று நெஞ்சார நம்புகிறேன்.
No comments:
Post a Comment