Friday, 24 July 2026

எந்த ஏக்கம் நமக்கு நன்மை தரும்? (22)

 எந்த ஏக்கம் நமக்கு நன்மை தரும்?

*******************************************

ஒற்றியூர் வாழும்  எழுத்தறியும் பெருமானே. எனக்கு ஒரே ஒரு ஏக்கம்தான். நேசம் இல்லாத பொய்யான அடியவனாக நான் இருக்கிறேன். ஊக்கமோ மகிழ்வோ இல்லாத எனது நெஞ்சத்தின் உறவு அகலச் செய்துவிட்டால் தூக்கமில்லா  ஆனந்தத் தூக்கம் எனக்கு கிட்டும் அல்லவா? எஅனக்கு அருள் செய்வாயாக.


பாடல்:22


நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்

ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்

தூக்கமிலா ஆனந்தத் தூக்கம் அன்றி மற்றும் இங்கோர்

ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


நாம் எப்படி கருணை பெற வேண்டும்? (21)

 நாம் எப்படி கருணை பெற வேண்டும்?  

*******************************************

உத்தமனாகிய  எழுத்தறியும் பெருமானே. நீ என்னை ஏற்காமல் அகற்றுவாய் என்றால் என்னால் தாங்க இயலாது. உனது ஊர் சொல்வேன். பேர் சொல்வேன். நினது திருவடிப் பெருமைகளைச் சொல்வேன். எதுவாயினும் எனது பிழை எதுவென நேராகச் சொல்வாயாக. அப்படி சொல்லாமல்  மவுனம் காப்பது, உனக்கு அழகல்ல நீதியும் அல்ல என உனக்கு யாரால் சொல்ல இயலும்? எனக்கு அரூள்வாயாக.


பாடல்:21


ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்

சீர்சொல்வேன் என்றனை நீ சேர்க்கா தகற்றுவையேல்

நேர் சொல்வாய் உன்றனக்கு நீதியீதல்ல என்றே

யார் சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.


நாம் வெம்புவது எதனால்? (13)

 நாம் வெம்புவது எதனால்?   

*********************************

மின்சாரம் போல் நோக்கும் பெண்களின் கண்கள் தரும் விருப்பத்தினால் மனம் வெம்புகின்றது. ஆசை வாட்டுகின்றது. ஆனாலும் ஈடில்லா உன் தாயுள்ளத்தால் பொன்போன்ற உன் திருவடி மீது  தீரா விருப்பமாக என் மனநிலையை மாற்றி அருளினால் உலகில் எனக்கு சமம் யாருமில்லை எனும் நிலை அடைவேன். எழுத்தறியும் பெருமானே அந்நிலையை  எனக்கு அருள் வாயாக.

பாடல்:13

மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்

தன்போல்வாய் என் ஈன்ற தாய் போல்வாய் சார்ந்துரையாப்

பொன் போல்வாய் நின் அருள் இப் போதடியேன் பெற்றேனேல்

என் போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.


***


நாம் எங்கு உள்ளோம்? (20)

 நாம் எங்கு உள்ளோம்?

*********************************

எனக்கு ஒன்று புரிகின்றது.       நான் ஆணவம், கன்மம், மாயம் எனும் மூன்று மலக் கடல்களில் தத்தளிக்கின்றேன்.  நீ என்னை ஆளாவிட்டால் அடியார்கள் எனை நோக்கி கைகொட்டிச் சிரிப்பது உறுதி. அது மட்டுமல்ல என்னை நோக்கவும் கூசுவார்கள் . அந்த அவமானம் எனக்கு வேண்டாம். எழுத்தறியும் பெருமானே, எனக்கு அருள்வாயாக.


பாடல்:20


மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்

ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்

கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்

ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


***


யார் மிகப் பெரிய ஏழை? ( 19)

யார் மிகப் பெரிய ஏழை?

***********************************

என் குற்றங்கள் அளவிட முடியாதன. அது  தங்கத்தை மதிக்கிறது. ஆனால் பொன் போன்ற உன் திருவடி குறித்து போற்றுவதும் இல்லை. மனதினால் எண்ணுவதும் இல்லை. உலக வாழ்வு நிலை என மயங்கி எந்நேரமும் இயங்குகின்றது.  வாழ்நாளெல்லாம் துன்பப்படும் ஏழை கூட , வயிற்றுப்பசி என்ற ஒரு துன்பத்தை மட்டுமே அடைகிறான். நானோ அந்த ஏழையினும் ஏழை. ஆம். எண்ணத்தால் உன் பொன்னடி போற்றாத ஏழை. என் எண்ணம் உயர்த்துக. உன் பொன்னடி போற்றச் செய்க.  எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.


பாடல்:19


பொன்னை மதித்தையா நின் பொன்னடியைப் போற்றாத

கன்னிகரும் நெஞ்சால் கலங்கின்ற கைதவனேன்

இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய்

என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.


************


நாம் எதனை இகழ்கிறோம்? ( 18)

 நாம் எதனை இகழ்கிறோம்?   

**********************************

எனது மனம் ஒரு கல் ஆகிவிட்டது. ஏதோ ஒரு கானகத்தில் அது அலைகிறது. இது கூட பரவாயில்லை. மேலும் அது ஒரு தவறு செய்கிறது. அது என்ன வெனில் புல் என்ற சிறிய தாவரத்தை மிகப் பெரும் அளவில் மதிக்கிறது. ஆனால் பசும் பூக்கள் கானகமெங்கும் கண்டும் இகழ்வது ஏன்? பொய்யனாகிய இந்த அடியவன் அடைகின்ற வேதனைக்கு எல்லைக் கோடு இல்லை. எழுத்தறியும் பெருமானே எனக்கு இரங்குவாயாக.


பாடல்:18


கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்

புல்லை மதித்தையோ பைம்பூ இழந்த பொய்யடியேன்

ஒல்லைபடுகின்ற ஒறுவே தனை தனக்கோர்

எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.


நாம் சோடை போவது ஏன்? ( 17)

 நாம் சோடை போவது ஏன்?  

*****************************************

எழுத்தறியும் பெருமானே. என் மனதின் அசல் தன்மைகள் நீங்கி இன்று  ஓர் பாதகனாக நிற்கின்றேன். ஏன்? ஐம்புலன்கள் என்னை வெங்கதிர்கள் வாட்டுவது போல வாட்டின அதனால் நான் இவ்வாறு காய்ந்து வறண்டு தளர்ந்தேன்.  இந்நிலையில் நீ எனக்கு என் தாகம் தீர அருள் நீர் தந்து தாகம் தணிப்பாயாக. என் வாட்டம் இன்னுமா அறியவில்லை? எனக்கு அருள்வாயாக.


பாடல்:17

பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்

துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்

நின்னருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்

இன்னும் அறியாயோ எழுத்தறியும் பெருமானே.