Thursday, 15 January 2026

       கல்விக்கு எல்லை இல்லை
****************************************

கற்றது கைம் மண்ணளவு; கல்லாதது உலகளவு என்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்; மெத்த
வெறும் பந்தயம் கூற வேண்டாம்; புலவீர்
எறும்பும் தன் கையால் எண் சாண்.


மனிதர்களே.
சிறு எறும்பு ஒன்றைக் கண்டேன். அதன் கை ஜாணால் அது தன்னை அளந்துபார்த்தது. “தெரியுமா! நான் எட்டுஜாண் அளவு நீளம் உள்ளேன்! உள்ளேன்!” என்று சொல்வதைப் போன்றதுதான் புலவர்கள் தங்களைப் படித்தவர்களாக எண்ணிக்கொள்ளுதலாகும்.
இவ்வளவு ஏன்!
கலை மகள் சரஸ்வதி தேவியே கையில் உள்ள நூல் எதைக் குறிக்கிறது? எதற்காக அவள் கையில் நூல்? அவளே கல்விக்கு எல்லையும் கடவுளும் ஆவாள் எனும் போது எதற்காக கல்வி அன்னை படிக்க வேண்டும்? ஆம். கல்விக்கு எல்லை இல்லை. ஒவ்வொருவரும் கற்ற கல்வி உலகில் உள்ள கல்வியின் அளவில் ஒரு கைப்பிடி அளவுதான். கல்லாதது உலக அளவு.
கற்ற கல்விக்காக ஆணவம் கூடாது.
**

சிறந்த செயல்கள்
*****************************

மதியாதார் முற்றம் மதித்து ஒருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர்! உண்ணீர்! என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிபிறந்தார்தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

மனிதர்களே.
செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும் என்று ஓடுகிறீர்கள். நல்லது.
 நீங்கள் நாலு கோடிப்பணம் சம்பாதிக்க வழி சொல்கிறேன் கேளுங்கள். அல்லது ஏற்கெனவே உங்களிடம் நாலு கோடிப்பனம் இருப்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இப்பாடலைப் படியுங்கள்.
 எவர் ஒருவர் தம்மை மதித்துப் போற்றாதவர் வீட்டு முற்றம் ( வாசல்) மறந்துபோயும் கால்வைக்காமல் இருக்கிறார்களோ அவரிடம் ஒரு கோடி ரூபாய் உள்ளது என்று அர்த்தம்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்று உபசாரம் செய்யாதவர் வீட்டில் சாப்பிடாமை ஒரு கோடி ரூபாய்க்குச் சமம்.
பண்பட்டவர்கள், பண்பாடு உடையவர்கள் வீட்டில் ஒரு கோடி தந்தேனும் தமது உறவினர்களாகக் கொள்ளுதல் ஒரு கோடி.
கோடானு கோடி பணம் தருகிறேன் என்றாலும் பொய் சொல்லாதவனின் நாக்கு, பொய்மை இல்லாதவனின் வாக்கு ஒரு கோடிக்கு சமம் ஆகும்.
ஆம். இப்பாடல் புகழும் நாலு குணங்களுமே நாலு கோடி செல்வம் ஆகும்.
**


 




No comments:

Post a Comment