Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, 14 October 2016

பாடகி ஜானகியாரிடம் வேண்டல்




சில மாதம் முன்பு வந்த அறிவிப்பு என்றாலும்
ஏங்குகின்றேன் உள் மனத்தே சரஸ்வதி பூஜை தினத்தில்
கவிதைக் குரல் ஜானகி பெண்ணரசி
பாடுவதை விட்டு விலகி ஓய்வெடுக்கப் போவதாக
அறிவிப்பை எண்ணி கலங்குறும் உள் மனது
பக்திப் பாடல் நதிகளில் காவியம் படைத்த குரல்
சிறு குழந்தை குரலிலும் பாடிய ஜானகி
பின்னணிப் பாடகி அன்று முன் அணிப் பாடகி
வயது முதிர்வோ  தளர்வோ சலிப்போ
விருப்ப ஓய்வோ பாரத ரத்னா திருப்பி அளித்த
எண்ணக் குமுறலோ
எதுவாயினும் சரியம்மா
எமக்காக மீண்டும் பாடுக
எதுவாயினும் உமது குரலால் அஃது சங்கீதமாகும்.
எமக்கு அமுதம் வேண்டும் அம்மா.

Friday, 29 July 2016

கீரை விற்ற மேரி பாட்டி




ஒருவர் இறந்து போவது என்பது எதிர்பார்ப்பல்ல
இறந்த பின் நிகழும் அதிர்ச்சி
மனதின் ஓர் ஏற்பாடல்ல
வடலூரில் கூட்டுரோடு ரவுண்டானா பெரியார் சிலைக்கு
கீழே அமர்ந்திருந்த கருப்பு மேனி இனி இல்லை
அந்த  வதங்கல் முதுமைக்காரி இனி இல்லை
மழையோ பனியோ வெயிலோ
பிற்பகலோ எக்கணமும் எவரையோ நம்பிக்கொண்டு
எத்திசையிலிருந்தும் ஓர் அன்பர் வாங்குவர் என்று
நம்பிக்கை மீது நம்பிக்கை வைத்த அவள் இனி இல்லை
குனிந்த அண்டங்காக்கை என தன் மீதே தலை தொங்கும்
கார்பன் என் கசங்கிய கோடுகள் கொண்ட முகம் இனி இல்லை
ஒரே ஒரு தடவை புடவையும்
பிறிதொரு நாளில் ஒரு வேளை பார்சல் சாப்பாடும்
பிறிதொரு மழை இரவில்  குடைக்கு கீழே
குளிரோடு நடுங்கியவள் உள்ளங்கை சுடச்சுட வாங்கித்தந்த டீயும்
உறிஞ்சிய மேரி பாட்டி இனி காணக் கிடைக்கமாட்டாள்
இறந்து போனாள் என்றது 29.7.16 ப்ளக்ஸ் போர்டு.
சாக்கு போர்த்திய பொன்னாங்கண்ணி கீரைகள்
தார்ச்சாலையில் சிதறி வாடிக் கொண்டிருந்தன .


Tuesday, 19 July 2016

சுயநலம்






பட்டாம்பூச்சியின் மரண ஊர்வலத்தில்
கலந்து கொண்ட  எறும்புகள்
இரவு உணவுக்கு கவலையில்லை என்று
தம்முள் கிசுகிசுத்து வரிசை கலைந்தன.

அத்தனையும் போச்! அத்தனையும் ஆயா ஹை !




அன்னை கிராமம் நகரம்
உறவினர் நட்பினர் சொந்த பந்தம்
தொலை தூரம் மாமன் மச்சான்
அனைவரையும் இழந்து
பக்கென இதயம் நின்று
பேச முடியாத ஊமைத்தனம் ஆகி
சித்தம் பேதலித்தும் வெளியே காட்டாமல்
உள்ளே குமுறும் போது
அத்தனை பேரும் திரும்பக் கிடைக்கின்றனர்
மறந்த செல்போன் பத்து நிமிடம் தாமதித்து  கிட்டும் போது.



மாட்டேன் என்றால் மாட்டுவேன்




இனி கவிதை எழுத மாட்டேன் என
ஒரு கவிதை எழுதி விட்டேன்
இனி அனுப்ப மாட்டேன் என்றே
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
படிக்க மாட்டேன் என்பவர்கள் படிப்பார்கள்
என்றோ எங்கோ எவர்க்கோ
இரு செவியில் விதையாகி ஒரு நொடியில்  கனியாகி
நினைவில் கலந்து மணம் வீசும்
இனி என் கவிதை.

Monday, 18 July 2016

வலி நடுவில்தான் சிகரம் இருக்கிறது




கஷ்டமுடன் செய்யும் வேலைக்கே
கஷ்டம்வரினும் விட்டுவிடாத செயலுக்கே அதிகம் மதிப்பு
பெற்ற குழந்தைக்கு முலைப்பால் தரும் தாய்க்கு
சிறிது சிறிதாய் அதிகரிக்கும் வலி எனினும்
 “தாய்” என்ற பெருமை கிட்டிவிடுகிறது
இலட்சியம் என்ற குழந்தை  இருந்தால் வலிக்கவே செய்யும்
“குறிக்கோள் இலாது கெட்டேன்” எனப்பின்னால்
புலம்பினால் அது அப்பர் தேவாரம் .

செல் பில் குறைய




“ஓம்” என்று உரைத்தனர் தேவர் என்பது
மகாகவி பாரதி வரி
செல் பில் குறைக்கவும் இதுவே உதவும்
“ஓம்” என்று துவங்குவோம் பேச்சை
நடுவில் சில பல தடைகள்  முற்றினால்
“ஓம்” என்றே குறிப்புச் சொல்லாக்கி
அப்புறம் தொடர்வோம் அதுவே நன்று
ஓம்!

அதன் குரல்




வெயில் காலத்தில்
நீரை வீணாக்க வேண்டாம் என
குழாயை இரண்டாம் முறை
மூன்றாம் முறை இறுக்கி மூடுபவரை
மாத்திலிருக்கும் காகம்
“குழாயை இரண்டு சொட்டு வீழுமாறு மூடுக
எமக்கும் வெயில்தாகம் தீர்வோம்” என ஏங்கிக்
கரைகிறது கா ! கா!
வறட்டு மனிதன் பதில் தராமை கண்டு
பிறகு பறக்கிறது அடுத்த கிளைக்கு.



உயர்வு நவிற்சி





முதல் சொல்லில்
சொல்லும்போதே உயர்வாய் சொன்னால்
என்னதான் குறைந்து விடுமாம்?
“உங்கள் வீடு எங்கே என செல்போனில்
வழி கேட்டால்
சுடுகாட்டுக்கு செல்லும் நேர்வழியில்
இரண்டாவது  கட்டிங்” என்கின்ற நண்பா
வேறு அடையாளம் கொள் வேறு உயர்வில் சொல்.
நல்ல அடையாளமாகி நல்லவிதமாய் வாழ்ந்து முடிப்போம்
அதே தெருவில் மகிழம்பூ மரம் இருக்கிறதே அதை
நீ சொல்லி நான் கேட்க வேண்டும்.

கூடா நட்பு




குப்பை மட்டுமே சேகரித்த பிளாஸ்டிக் தொட்டி
நாளடைவில் பெயர் மாறிற்று
குப்பைத் தொட்டி என்று -    
உண்மையில் குப்பையின் குணம் சிறிதுமில்லாதது

துளசியைத் தன்னுடன் வளர்த்த மண்
துளசி மாடம் என வணங்கப்பட்டது
துளசியின் தன்மை  பெற்றது போல்.

Sunday, 17 July 2016

கொல்லைப்புறம்


               
பெண்களுக்கு
முன் வாசலை விடவும் சுதந்திர பூமி
வீட்டின் பின் கொல்லையில் அமர்ந்து பேசுவது தான்.
அதிலும் தோய்க்கிற கல் வைத்த கொல்லை சிறப்பானது
குடும்ப சுமைகளை
 உண்மை பொய் கலந்து கிசுகிசுத்து
இரவும் பகலுமாக  கலந்த குரலில் அங்கலாய்த்து விட்டு
அரக்கப் பரக்க கடுகு வெடிக்க
சமையலில் மீண்டும் சங்கமம் ஆகும் போது
அத்தனை சோகமும் பதிந்த தோய்க்கிற கல்லில்
பாதி கனிந்து விடும்.

பொருட்களும் நானும்



பொருட்களால் வீட்டில் மகிழ்வாய் இருப்பது போல்
பொருட்களும் வீட்டில் மகிழ்ச்சியாய் இருக்க
விழைகின்றேன்.
அருகிலிருக்கும் டூவீலர் நகர்த்தி
இருபது நாளாய் ஆடாத ஊஞ்சலாக இருந்த நிலை மாற்றியதும்
ஆடுகின்ற ஊஞ்சலின் சங்கிலிகள் ஒலி
சிரிப்பாய்த் தோன்றிடக் குதூகலித்தேன் ஊஞ்சலின்  சார்பில்.

Saturday, 16 July 2016

அதுசரி


                                   

ஆசுகவி காளமேகப் புலவரே எப்படிக் கண்டீரோ !
தேங்காயும் சிவனும் ஒன்று என்றீர்
இருவரும் கல்லால் அடியுண்டீர்  என்றீர்
இருவருக்கும் ஓடு உண்டு என்றீர்
இருவருக்கும்  மூன்று கண் என்றீர்
இருவரும் பூஜைக்குப் பயனாவர் என்றீர்
எல்லாமும் சொன்னீர் புலவர்காள்
தேங்காய் விலை அதிகம் என்பது தவிர்த்து.

Wednesday, 13 July 2016

முடிவு



அமர்ந்து கொண்டிருந்தேன்
கண்ணில்பட்ட முருங்கை மர உச்சிக்கிளையில்
எப்படி ஒரு காகம் கிளை வளையாமல்
எத்தனை இலகுவாய்!  - ஆம்  -    
உயரமோ உச்சியோ நுனியோ சிரமமில்லை
விரும்பி அமர முடிவெடுத்த சிறகுகளுக்கு.

முகநூல்



அயர்ந்து கிடந்த
ஆயிரமாயிரம் முகங்களில்
உறைந்து கிடந்த உணர்வுவெளிகளில்
சட்டெனப் பரவ முடியாமல் தவித்தபோது
உள்ளங்காலில் பதிந்தும் இடம் தெரிந்தும்
நீண்ட வருடம் எடுக்கமுடியாத
நெருஞ்சி முள் போல உறுத்திற்று
ஷட்டவுன் செய்யும் கணநேரம் தோன்றி மறைய
கணிணி காட்டிய
இறந்த அப்பாவின் முகச்சிரிப்பு.

உணர்தலின் வெளி



டீக்கடை நண்பர்கள் சூப்புதல் நடுவே
அண்ணாந்தேன் அண்டங்காக்கைக் கண் ஒன்று
வேப்பமர இலை நடுவே
அப்படி இப்படி அலையும்போது
அதன் கண்ணிலும்
உருள்கின்ற சூரிய நிழல் பற்றி
காகம் சற்றும் அறியாதது
எனக்கேன் புரிந்து தொலைக்கிறது.

Monday, 15 February 2016

இசை மணக்கால் புகழ் ஓங்குக !


இசைமேதை மணக்கால் ரங்கராஜன் எனும் மாமேதை விழா!
12.2.2016ல் தக்க நேரத்தில் முதல் வரிசையில் அமர வைத்து
காணச் செய்த நண்பர்
ராதாகிருஷ்ணன் உள்ளம் வாழ்க இல்லம் வாழ்க ஓங்கி வளர்க
மணக்கால் ரங்கராஜன் எனும்
இசை சக்ரவர்த்திக்கு நமஸ்காரம்.
ஆலமரம் ஓயக்கூடும் காற்றின் மகிழ்ச்சி வீசும்
நாட்கள் நகர்ந்துவிடும்
நல்ல நினைவுகள் உள்ளே அமர்ந்துவிடும்
சாதித்தவர்கள் மறைவர்
சாதனைகள் கொண்டாடப்படும்
ஆம்! சாதாரண நிகழ்வா அது?
மணக்கால் என்ற சொல் கேட்டதுமே
ஆதி உணர்ச்சி அடி வயிற்றில்!
மணக்கால் சத்தியமோகன் இவனுக்குள்
மழைத்துளி தாய்மழைமேகம் ஒன்றுடன்
சேர்ந்த உணர்ச்சி!
“வாணி மகாலில்
தியாக பிரம்ம விபூஷண் விருது பெறும்
மணக்கால் ரங்கராஜன்” என்ற அறிவிப்பு
சங்கீத வாக்கர் அவர்
நகர்த்தி நகர்த்தி நகர்ந்து நகர்ந்து 93 வயசில்
வெண்சருகு இலை போல
மேடையில் அமரும் காட்சி
இசைச்சக்கரவர்த்தி நீடா மங்கலம்
B.M. சுந்தரம் ஐயா குறித்தார்:
“கவிகாளமேகம்
கொள்ளிடக்கரைக்கு ஈர மணல் காலுடன் வந்ததால்
“மணல்கால்” என்று வர்ணிப்பு மணக்கால் ஆனது”
இன்னும் சொன்னார்:
இந்திய  முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமியும்
 நீடா மங்கலம்தான்
அமரர் R.S.மனோகரும் நீடாமங்கலம்தான்!
“மணக்கால் ரங்கராஜன் ஐயா அவர்கள்
ஒரே நேரத்தில் இரு கைகளால் மிருதங்கத்தில்
இரு வித தாளம் வாசிப்பவர்” எனப்பகிர்ந்தார் கோபால்சுவாமி!
கலைவாணி ஸ்வரூபமாய் தோன்றினார் ரங்கராஜன்
சென்னை தொலைக்காட்சி வானொலி வாழ்த்தியது
இசைப்புனிதர்கள் நெகிழ்ந்தனர்
காஞ்சி மகாப் பெரியவா ஆசிகள் காற்றில்
அனைவர் மீதும் படர்ந்தது
கலைந்து நடந்தோம் அவரவர் வீட்டுக்கு.
“Better late than never” என்ற மன சமாதானம்
விருது தந்தவர்களுக்கு.
“புகழ் பலருக்கு இருக்கும் ஆனால் யோக்யதை இருக்காது
யோக்யதை பலருக்கு இருக்கும் ஆனால் தகுதி இருக்காது
மணக்காலோ இரண்டும் வாய்ந்தவர்”
இசைப் பிதாமகர் சுந்தரம் ஐயா புகழ் வார்த்தைகள்
சத்திய வார்த்தைகள்! 

Sunday, 31 January 2016

அப்பா நினைவு



அப்பா நினைவு செப்டம்பர்-30 மட்டுமல்ல
சாலையில் சரளைக்கல் கொட்டிக்கிடக்கும்
டிரபீசிய வடிவம் பார்த்தாலும் வருகிறது
அப்பா பத்தாம் வகுப்பில் athan பரப்பளவு காண
1/2 h ( a+b) சூத்திரம் சொல்லிக்கொடுத்தார்
அவர் பிள்ளை நான்
பித்ரு கடன் கொடுக்கிறேன் மாதா மாதம்
தமிழகத்திற்கு வந்து மதுரையில்
அரை ஆடை கோலம் பெற்று
எனக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தந்தை
அவரது நாள் ஜனவரி -30
அவருக்கு பித்ரு கடன் என்ன செய்தேன்?
சாலையில் ஓரம் நின்ற காந்தி
இந்தியாவின் பரப்பளவெல்லாம் கால்கள் வலிக்க
நடந்த காந்தி
எவ்வளவோ கேட்டதுபோலிருந்தது.

Wednesday, 20 January 2016

அவளுக்கென்று ஒரு சிலையுமில்லை

(லாவண்யாவுக்கு)
அவள் காலையின் முதல் கிரணம் விழித்து
வேலைப்பட்டியலின் அழுத்தத்தில் ஏறி
இரவில்
மனபளுமிக்க கவலைப்படுக்கையில் வீழ்வாள்
குடும்பம் குடும்பம் குடும்பம்
என்பதே நினைப்பாகி
வயோதிகம் வாழ் என் அன்னைக்கும் அன்னையாகி
 உணவு உப்புக்கல் என துணை ஆவாள்
அவள் சத்து மாத்திரைகள் உண்ணும் நிலை வந்தும் மறந்தாள்
காலை முதல் இரவு தாண்டியும் இயங்கும் கருவி ஆனாள்
அவள் தலை நோவு கூட அவள் உணரவோ
மருந்து எடுக்கவோ நேரமிலாது ஆனாள்
பிறர் நல்ல விஷயங்களை
தேடித் தேடிப் பாராட்டும் அவள் நல்ல குணத்தை
நான் பாராட்ட நேரமெடுப்பதே கிடையாது
 மீனாக மானாக பறவையாக அன்பு இசைக்கருவியாக
என் வாழ்வின் பாதிதூரம் தாண்டியும்
மூச்சிரைக்க ஓடி வருகிறாள் இனியும் துணை வருவாள்
அவளுக்காக சிலை வைத்தாலும்
அதற்கும் உழைக்க செலவழிக்க
அவளே துணை  என்ற நிலை எனக்கு என்பதால்
சிலை வைக்க பூசலார் போல் மனதால் சிலை வைத்தேன்
வார்த்தையின்றி அவள் முன் மவுனச் சிலை ஆனேன்.

 

Sunday, 17 January 2016

மார்கழி எனும் பெண்ணும் - மனம் எனும் பெண்ணும் ! (1-30)


ஆஹா என சந்திக்கிறார்கள்
இயற்கை மனம் என்ற பெண்ணும்
மார்கழி என்ற குளிரால் செய்த பெண்ணும்!

ஒருவரை ஒருவர் அழைத்து மகிழ்வர்
ஆண்டாள் திருப்பாவை முழுதுமே ஆனந்தக்குளிர்தான்
பெருமிதமான தமிழின் செல்வக்குளிர்
வெளிப்படையான பேச்சு இது அன்று
காதலின் பூமி முழுதும் கண்ணன் எனும் தெய்வத்தின்
இளமை பூசிய இரகசியத்தின் உச்ச கட்ட உரையாடல்கள்
ததும்பி வழிகின்றன பரிசுத்தமான ஆன்மாவின் கேவல்களாய்!
காதலின் குளிர்காலத் திருக்குறள் காமத்துப்பால் இது
இதில் முழுதும் அன்பின் ரசம் மட்டுமே உள்ளது
பூக்காத பூக்களெல்லாம் மணன் வீசுகின்ற மார்கழி இது
(1)
இயற்கை பேரான்மா
மனித உடலில் சிறு தங்கல் ஜீவான்மா
பெரிதுதானே சிறிதை அழைக்கும்! இதோ அழைப்பு !
ஒருத்தி அழைக்கிறாள்
எப்போது உங்கள் மதி நிறைகிறதோ
அப்போதே அது நன் நாள் தானடி! வா!  நீராடப்போவோம்!
நாராயணனின் அம்சமான கண்ணன்
நமக்கே நமக்கு அருள் தருவானடி
ஆமாம்! நமக்கே என்கிறேன் கவனியுங்கள்
பறை தருவான் அவனைப் பாடிப்புகழ்வோம் வருகிறாயா எழுவாயா
எப்போதும் உயர்ந்தோனுக்கே ஆசையுறு
எவன் சிங்கம் போன்ற உச்ச ஆண்?
கூர்வேல் நந்தகோபன் - அழகிய யசோதா மகன் தானே?
தெரியுமா அவனுக்கு சூரியன் போல கண்கள்
மேனி நிறம் மேகநிற கருப்பு!

(2)
வையத்துப் பெண்களே ! ஒன்று செய்வோம் வருகிறீர்களா..?
மனதாலேயே பாவை செய்வோம்
ஆமாம் மனசால்தான்
உடம்புதான் நெய் கேட்கிறது பால் கேட்கிறது
கண்கள் மை கேட்கிறது
கூந்தல் மலர் கேட்கிறது
பிறர் குறை கூற -  வாய் வம்பு கொடு  என்கிறது
மெல்லத் துயில் கொண்ட நம் பரமன் திருவடி பாடுவோம்
உய்ய வேண்டும் பிறவி தாண்ட வேண்டும்
துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் தானம் செய்ய வேண்டும் 
அது மனம் எனும் பாவையால் சாத்தியம்! சத்தியம்!

(3)
பெண்களே நாம் நன்றாக நம் கணவனுடன் வாழ
நமக்கு செல்வம் வேண்டும்... !ஆமாம்தானே? ஆனால்
நாம் நமக்கு மட்டும் வேண்டலாமா? அது தவறு
நாடு முழுதும் மாதம் மூன்று மழை பொழியவேண்டும்
அதை நம் மனப்பாவையிடம் சொல்வோம்
ஆக்க பூர்வமான கற்பனை கொள்வோம்
அதற்கு என்ன வழி ?
தனன் சிறிய கால்கள் ஓங்கிட
மூன்று உலகமும் அளந்த உத்தமன் பேர் பாடினால் போதுமடி.
வயல்களில் நீரும் மீனும்  நெல்லும்
குவளை மலர்களில் வண்டும் பிறகு வரும்
கறவைப்பசு மாடுகளை வள்ளல் பெரும் பசுக்கள் ஆக்கிட
அவன் பேர் மட்டுமே போதும்! புரிகிறதோ?

(4)
ஆழி மழைக் கண்ணா!
கடல் நீரே ஆவியாகி மழை நீர் ! ஒப்புக்கொள்கிறோம்
நீரின்றி அமையாது உலகு! ஒப்புக்கொள்கிறோம்
ஆனால்
சமீப 2015 டிசம்பர் மழையாய் பொழியாதே
எமது கணவர் மட்டுமல்ல நாங்களும் பணிக்குச் சென்று வரவேண்டும்
அப்படிப் பட்ட மழை பொழிய வை
அந்த மழை மிலிடரி படை போல சீரான கடமை மழையாக இருக்கும்
அப்போது மார்கழி நீராட மிகப்பிடிக்கும் கண்ணா
ஆனால் எமக்கு மட்டுமே மழை கேட்க மாட்டோம்
உலகம் முழுதும் உன் அன்பு மழை பொழிய வேண்டும்
எப்படி என்று எங்களைச் சொல்ல வை! கண்ணா
சாரங்கம் என்ற வில் விட்டு நீங்கும் சர மழை அது
இடி ஓசை வலம்புரி சங்கு போல் அதிரும்
மின்னல் ஒளி பத்மநாபன் சக்கரம் போல் ஒளிரும்!

(5)

பெண்களே ! எது நமக்கு பாரம் தெரியுமா?
நினைவுகள் தான்!
என்ன செய்யலாம் நெருப்பினில் வீழ்ந்த தூசு போல்
மனம் லேசாக வேண்டும்
ஒரு வழி இருக்கிறது
நம் மன்ப்பாவை தூய்மையானவள்தான்
அவள்தான் அந்த அழகிய வழி சொன்னாள்
கண்ண பெருமானை வாயினால் பாடி
மனதினால் சிந்திக்க வேண்டும் ! simple!

(6)
வருங்கால மணப்பெண்ணே நிகழ்கால மனப்பெண்ணே
உனக்கு ஒரே ஒரு சிக்கல்
புவி வெப்ப மயமாவதுபோல்
உன் உன் உள்ளம் துன்புறுகிறது
ஆனால் இதை சுலபமாக சமாளிக்கலாம்
ஆண்டவன் கண்ணன் நமக்கு ஒரு நல் வழி செய்தான்
அது என்ன
எத்தனை பெரிய size ஓசை என்றாலும்
நமது சிறிய காதுகளால் நாம் கேட்க முடியும்
கேளாதனவெல்லாம் கேட்பிப்பான் என்கிறார்கள்
அவன் தந்த அந்த அகச்செவியால்
 மார்கழி மாதத்தில் முனிவர்களும் யோகிகளும்
“ஹரி ஹரி” என்று ஒலிக்க எழுகின்ற ஓசை மட்டும்
உன் உள்ளம் புகுந்திட அனுமதி பெண்ணே!

(7)

கீசு கீசு என்று ஆனைச்சாத்தன் குருவி கத்தினாலும்
ஆய்ச்சியர்
தயிர் கடையும் ஓசை கேட்டாலும்
கேட்டுக்கொண்டே இருக்க
கண் மூடி தூங்க முற்படுகிறோமில்லையா
அப்போது நாம் பெண்கள் அல்ல
பேய்ப்பெண்கள் ஆகிறோம்
கண்கள் மூடினால் அவன் உலகம் இருளுமா
செவிகள் மட்டும் திறந்தால் தரிசிக்க இயலுமா
அவன் வர வேண்டும் என்று வாசல் நோக்கு
 நாராயணன் மூர்த்தி கேசவன் புகழும் பாடினார்களே
அடடா! அப்போதும் கேட்கவில்லையா
நீ பேய்ப்பெண் list தானா! கதவைத் திற! அகம் திற.

(8)
எனக்கொரு யோசனை
ஏன் அவன் அருள் இன்னும் கிட்டவில்லை
அவனோ தேவாதி தேவன்
எல்லாம் தெரிந்தவன் ..
ஆனாலும் அவனுக்கு ஏன் புரியவில்லை
சன்னதி முறையீடு என்பார்களே ஆம்! நேராகச்சென்று
அவன் சந்நிதியிலேயே நம் மனக்குறை சொல்வோம்
கிருஷ்ணன் அவன் இருக்குமிடம் சென்று நாம் சேவித்தால்
“ஆ!” என்று ஆச்சரியப்படுவான் பிறகு “வா!” என்று ஆராய்ந்து
அருள் செய்வான்

(9)

மனம் என்னும் விளக்கு அவனை நி¨னைகிறதடி
இருந்தாலும்
தூமணி மாடம் முழுதும்
சுற்றிலும் ஏன்
விளக்கை வைத்து விட்டுப்போனார்கள் தோழிகள்?
விளக்குக்கு முன் விளக்கு எரிய வேண்டும்
அவன் உள்ளே உள்ளான் என்று தெரிந்தால் போதுமா
வெளியிலும் நினை
மாமாயன் வைகுந்தன் மாதவன் என்று அவன் நாமம் சொல்க!

(10)

இப்போதல்லடி!
முற்பிறவியிலேயே அவனுக்காக நீ நோன்பு இருந்துள்ளாய்
அதனால்தானடி நீ சொர்க்கம் புகுந்தாய்
கவலைப்படாதே
மனம் மயக்கப்படாதே
விழிப்பு நிலை தவற விடாதே
நிச்சயம் அந்த பொன் கணம் வரப்போகிறது
உன்னை ஆட்கொள்வான் பாரேன்
தூங்காதே ! கும்பகர்ணன் தூக்கம் உனக்கு வேண்டாம்

(11)
பசு மாடுகள் பால் கறக்கவும் தெரியும்
பகையை போரில்  அழிக்கவும் அவனுக்குத் தெரியும்
குற்றம் ஒன்று கூட சொல்ல முடியாத அவனின்
செல்வப்பெண்டாட்டி நீ அல்லவா
எதற்காக உறங்குகிறாய்
அவன் மனைவி நீ! விழிப்பு நிலை பெறடி !

(12)
மனதுக்கு இனியானைப் பாடினால்
என்ன செய்ய வேண்டும்?
கொட்டும் பனி எமது தலையில் வீழ
உன்  வீட்டு வாசலில் பாடும்போது
வாய் திறந்து ஏதாவது சொல்லலாமே!
தூங்குவது போலும் சாக்காடு உனக்குத் தெரியுமே
அவன் உனக்காக நீ அவனுக்காக இது தெளிவு
அவன் பாடல் புகழ் பாடேன் ஆனால் எழ வேண்டும் நீ
அனைத்து வீட்டிலும் உள்ள பெண்கள் அனைவருமே உணர்ந்தனர்
அவன் பெருமை பாடப் பாட
அவன் பிரிவு உணராமல் விழிப்பு நிலை உணரப்படும்
எம் பாவாய்!

(13)
நீராட நீ வா பெண்ணே
குளிர் நீரில் நீராட நீ வா பெண்ணே
உன் உயரம் குள்ளமாகும்படி
சில்லெனப்பிழியும் ஒரு மின்னல் குளிர்தான்!
ஆனாலும் நீ தாங்க முடியும் ! எழு குளி நீராடு
பூக்காம்பை கிள்ளுவதுபோல் சீதை நாடிய இராவனன் தலை
கொய்யப்பட்டது அன்று
வெறும் குளிருக்கு
உறக்கம் எனும் தற்காலிக இன்பத்துக்கு
படுக்கையில் கிடக்கிறாய் இன்று!
நீ மட்டுமெழுந்து நிகழ்காலத்தை உணர்ந்தால்
கவலை எனும் மனக்குளிரும்
குளிர் நீர் எனும் உடல் குளிரும் போய்விடுமே கண்மணீ! 

 (14)
ஏய் என்னடி சொன்னாய் நேற்று!
“எனக்கு விழிப்பு நிலை அதிகமாகி விட்டது
நாளைக்கு நானே வந்து எழுப்புவேன்” என்றவளே
Over confidence அது!

ஒன்று தெரியுமா
உடம்புக்கு வெட்கம் உண்டு
நாக்குக்கும் வெட்கம் வேண்டும் என்றௌ அறிந்துகொள்
உன் வீட்டில் மலர்கள் வாய் நெகிழ மலர்ந்தன
உன் வீட்டுக்கு வெளியே
செங்கல் நிற ஆடைத்துறவிகள்
வெண்பற்கள் இருளில் ஒளிவீச நடந்துசெல்கிறார்கள்
சங்கு ஒலிக்க கோயில் நோக்கி விரைகிறார்கள்
பார்த்தாயா இல்லையா! 

(15)
மயங்கிய அறிவு மயங்கி இருக்கவே விரும்பும்.
இருட்டில் நடந்த வெளவால்களுக்கு
பகல் ஒளி எந்த பக்கம் என்று அறியவும் ஆசை வராது.
சேற்றில் குளிக்க ஆசைப்படுகின்றன நம் புலன்கள்.
அதிலும் கண் மூடி உறங்கும் மனதை செல்லமாக எழுப்புவதே கடமை.
“எல்லே !” என விளிக்கிறாள் ஒருத்தி
இன்னொருத்தி மனம் எனும் அடங்காப் பிள்ளையை “இளங்கிளியே...” என்பாள்
உடனே அடங்கா மனம் உஷாராகின்றது
“ சில்லென்று கூப்பிடாதீர்கள் எழுந்து வருகிறேன் இருங்கள்”
இப்போது நாமும் கொஞ்சம் சலிக்கிறோம்:-
“ நீ சொன்ன பழைய கதைகள்..... அப்பப்பா! அதெல்லாம்
உன் வாய்க்கே தெரியும்....! வாயில் வந்த கதையெல்லாம் சொல்பவள் நீ!”
அதட்ட ஆரம்பித்ததும் மனம் எனும் தோழி சொல்கிறாள்
“ எனக்கு பதில் நீயே போயிட்டு வா! நீங்களே நான் !”
இப்படி ஐஸ் வைத்து சொல்லும்போது
மனம் எனும் பெண்ணை அறிவு எனும் பெண் இன்னும் விழிப்பாகி
“ வேறு வேலை உனக்கு என்ன இருக்கிறது? எழு!” என்றதும் -
“சரி! எல்லோரும் வந்துவிட்டார்களா! எண்ணிச் சொல்டி” என்கிறாள்
(பிறரை ஒப்புமை செய்து தன் கடமை தள்ளிப்போடுகிறாள்)
அப்போதும் அறிவு எனும் பெண் சோரவில்லை
களைப்படையவில்லை
“வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை
பாடேலோர்  எம்பாவாய்!” என்கிறாள்
ஆகவே புலன்கள் சுவைக்கும் நம் மனது - முதலில் நம் கூப்பிடலை ஏற்காது -
கண்டித்தால் நம்மையே செல்லம் கொஞ்சி திசை மாற்றும்
தள்ளிபோட என்ன வழி? என்றுதான் பார்க்கும்! மாயந்தான் காக்க வேண்டும்!

பாடல்: 16

நேசம் வரவேண்டும். வெறும் வார்த்தைகள் போதாது. அன்புப் படிக்கட்டுகளுக்கு ஒரு படி மேல் ஏறினால் அது நேசமாகின்றது.
அதனால் செய்யப் பட்ட கதவு அது நிலையானதாக இருக்கும்.
அதுதான் நேச நிலைக்கதவு.
அதனைத் திற என்கிறாள் மார்கழி எனும் குளிர்ப்பெண்.
மனம் எனும் பெண் கண் விழிப்பாளா!

பாடல்: 17

பார்க்கும் இடமெல்லாம் நந்தகோபாலனே தெரிகின்றான். இப்போது பக்தி நிலை மனப்பெண் பூண்டாள்.
பாரதியார் போல் “பார்க்குமிடம் எல்லாம் நான்” என்கிறாள்.
பரவெளியைப் பார்த்தாள். நீலமேகம். நீலக்கண்ணன் தெரிந்தான். “அம்பரமே” என்று கூவினாள்.குளிக்கப்போனாள்.
குளிர்ச்சி உடலில் பட்டது. அவன் மேனி அல்லவா என் மீது படுகிறது இந்த நீரின் வழியே? என்று உருகினாள்.  குடிநீரைப் பார்த்தாள்.
அவன் தந்த மழைமேகத்தால் இப்போது தாகம் தீர்க்கிறேன் என உள்ளம் நைந்தாள்.  “தண்ணீரே!” என அழைத்தாள். பசித்தது.
தட்டெடுத்து சாப்பிட அன்னம் பரிமாறினாள் அன்னை.
 “ சோறே! சோறே!” என்றாள்.  ஏனம்மா இது சோறுதான் என்றாள் தாய்.   தாயிடம் காதலை எப்படிக் கூறுவாள்.
சோறும் அவர்தானே.  எப்படி உண்பேன் என்று ஆனந்தத் திகைப்பு கொண்டாள். அன்பிலே தித்திக்கிறாள் மனம் எனும் பெண்.
                                          
பாடல் :18.

பெண்ணே.. நீ யாருடைய மருமகள்? நந்தகோபன் மருமகள். அழகிய நப்பின்னை! நீ யாருடைய மனைவி ஆகப்போகிறாய் தெரியுமா.
கிருஷ்ணனுக்கு. அவன் புல்லாங்குழல் நாயகன்.
இன்னிசை வேந்தன்வேறு- நல்லிசை வேறு-குயில் வேறு- குயில் இனங்கள் வேறு - என்றெல்லாம் நினைத்து விடாதே - எழுந்திரம்மா..
உனக்கு இனி நல்லகாலம்தான். எழம்மா!

பாடல் : 19.
.
பெண்ணே .. பெண் இனமே.. நீ தனியல்ல. ஆணே .. ஆண் இனமே,, நீயும் தனியல்ல..நீவீர் இரண்டு இனமும் பிரிய நினைத்தாலும் பிரிய முடிவதில்லை.
மலர்மார்பா உன்னால் வாய் திறக்க முடிவதில்லை.மைத்தடம் கண் கொண்ட நப்பின்னாய்... நீ உன் கண்ணனை உன் மாபை விட்டு எழவே விடுவதில்லை.
இது ஒரு தகவு நிலை ( தக அமைதல்)

பாடல் 20:

பெண்ணே உன் முலைகள் செப்பு போன்றன. வாயோ செவ்வாய். இடையோ சிறிது.சிறு மருங்குல்.
நப்பின்னை நங்காய்.துயில் எழுவாய். திருவே. நீஉன் மணாளனோடு எழுந்து வந்து எம்மை உலக பற்றுகள் நீங்க நீராட்ட வேண்டும் நப்பின்னாய்!

பாடல்:21

எதிரிகள் வலிமை தொலைந்து உன் வாசல் முன்னே அடி பணிவதுபோல்  வந்துள்ளோம்.
உலகினில் பெரியோய்! உன்னை எமக்கு ஒரு வடிவமாகக் காட்ட சுடர்த் தோற்றமாய் நின்றாய். துயில் எழுவாய். உன்னை நாம் வந்து போற்றவில்லை.
புகழ்ந்து போற்றிக்கொண்டே வருகிறோம்.
ஆண் உலகையும் பெண் உலகையும் பிரித்தும் சேர்த்தும் இயக்கும் இயக்குநனே.. உன் தத்துவத்தை தெரிவி. அதன்படி இயங்குவோம்.

பாடல்:22

கண்ணா! மார்கழி மாத விரதம் பலிக்கவும் எங்கள் சாபம் தீரவும் என்னென்னவோ செய்தோம். வழி புலப்படவில்லை.
ஆ! இப்போது ஒரு வழி உள்ளது. அது உன் கண் வழி! அது என்ன கண்? சாதாரணமான கண்ணா அது!
குழந்தைப்பருவத்திலே குழந்தைகளின் வாய் என்னென்னவோ பேசிப் புலம்பும் .
கிண்கிணி ஓசை போல ஒரு வரைமுறை இல்லாத அழகிய ஒலிக்கலவையாக அந்த கிண்கிணி ஓசை அமையும்.
அந்த  வாயால்  தாமரைப்பூ செய்தால் அது எத்தனை அழகியதாக இருக்கும்.
கிண்கிணி ஒலி எழுப்பும் சின்னஞ்சிறிய குழந்தை வாயால் செய்த தாமரைப்பூக்களே..
இப்போது நீங்கள் கண்ணபெருமானின் கண்கள்!
அவை சிறுச்சிறிதே எம் மேல் விழித்தாலும் போதுமே!

பாடல் : 23

கண்ணா! நாங்கள் ஆணோ பெண்ணோ! பூமிக்கு நாங்கள் வந்த காரியம் என்ன? அதை ஆராய எங்களுக்குத் தெரியாது. அருள் புரிய நீதான் அறிவுற்று
தீ விழித்து குகை விட்டு சிங்கம் புறப்பட்டு வருதல் போல எம்மைக்காக்க வர வேண்டும். எங்கள் விரதம் அதற்கே! 

பாடல்:24

இரக்கம் காட்ட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம் கண்ணா! மலையை குடையாகப் பிடித்து அன்று காப்பாற்றினாய் போற்றி!
 உலகத்தை மூன்று அடிகளில் அளந்த வல்லமை கொண்டாய் போற்றி! வென்று பகை கெடுக்கும் வேல் போற்றி!
உனக்கு சேவகம் புரியும் நிலையிலேயே எம்மை வைப்பாயாக!

பாடல்:25
.
ஆணோ பெண்ணோ எங்கள் வருத்தம் தீர கண்ணா! உன் வாழ்வின் அருத்தம் எங்களுக்குப்புரிய வேண்டும்.
 ஒருத்தி மகனாய்ப் பிறந்தாய். ஒருத்தி மகனாய் வளர்ந்தாய்.நெருப்பென நின்றாய்! நெடுமாலே! மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

பாடல்:26

ஞாலத்தை நடுங்கச்செய்யும் பாஞ்ச சன்னியம் நீ !
 பல்லாண்டு பாடலும் நீ! கோல விளக்கு நீ! கொடி நீ ! விதானமும் நீ! ஆலின் இலையும் நீ! அருள வாராய்!
ஆண் பெண் உறவு நிலைக்க்கு காரணமான அன்பைப்புரியச்செய்வாய்

பாடல் :27

உறவுகளின் உச்ச நிலை எது கண்ணா? உன் அன்பர்களோடு கூட வேண்டும். மனம் குளிர வேண்டும்.
“கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்” என உரக்க எங்களால் முடிகிறதென்றால் கண்ணபெருமானே நீ உன்னோடு கூடாரை வெல்வதால்தான்!
கோவிந்தா உன்னைப்பாடப்பாட சன்மானம் வெகுமானம் எல்லாம் கிடைக்கிறது.
அந்த வருமானத்தில் பலவித அணிகலன்கள் அணிகிறோம். சாப்பாடு மூடும் அளவு நெய் விட்டு சாப்பிடுவோம்.
அது முழங்கை வரை வழியும்!  அப்போது உன் பக்தியால்தான் இவ்வளவும் நடந்தது என்பதை மறவாமல் வாழ அருள்புரிக கண்ணா.

பாடல்:28

குற்றம் ஒன்று கூட இல்லாத கண்ணா! ஒரு வேண்டுகோள்.
 உன்னுடன் உறவு எமக்கு ஒழிக்க நினைத்தாலும் ஒழியாத உறவு.
ஆனாலும் எங்களது சிறு புத்தியால்  உன்னை அவசரத்தில் அழைக்கும்போது தவறு செய்தால் நீ  சீறாமல் அருள்க,
நீதான் அப்படி ஒரு நிலை வராமல் காக்கவும் வேண்டும்.

பாடல்:29

இன்றக்கு மட்டுமல்ல கண்ணா எழுகின்ற பிறவிகள் தோறும் உனக்கே உற்றாராக நாங்கள் இருக்க வேண்டும்.
உமக்கே ஆளாக அடி பணியவும் வேண்டும். இந்த விருப்பங்கள் தவிர வேறு எது வந்தாலும் அதனை நீ மாற்றி அருள் கண்ணபெருமானே!
ஏனெனில் எண்ணம் மனதில் இருக்கும்போதே மாற்றி விடு. வினைகளில் சிக்கி வினைப்பயனில் செலுத்திய பிறகு என்னை மாற்றுவது உனக்கு கஷ்டம் கண்ணா!

பாடல்:30

பட்டர் பிரான் கோதை நான் சொன்ன 30 பாடல்கள் இவற்றைத் தப்பாமல் சொல்லுங்கள்.
செங்கண் திருமுகத்து செல்வத்திருமால் திருவருளால் இன்புறுவீர்கள்!