மூவகை மக்கள்
*****************
சொல்லாமலே செய்வர் பெரியர்; சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே! நல்ல
குலமாலை வேற்கண்ணாய்! கூறுவமை நாடில்
பலா மாவைப் பாதிரியைப் பார்!
மனிதர்களே.
இவ்வுலகம் மனிதர்களால் ஆனது. மனிதர்கள் உறவு வயப்பட்டவர்கள். உறவோ செயலை அடிப்படையாகக் கொண்டது.
அறிவினில் சிறந்த பெரியோர்கள் சொல்லாமலே செய்வார்கள். அவர்கள் பூவாமல் காய்க்கும் பலா மரத்தை ஒத்தவர்கள்.
அறிவினில் சிறியவர்கள், பிறர் சொல்வதைக் கேட்டு அதன் பிறகே செய்வார்கள். இவர்கள் மாமரம் போல், பூத்தபிறகே காய்ப்பவர்கள்.
பாதிரிமரமோ, பூக்குமே தவிர எந்தக் காயும் காய்க்காது.இவர்கள் கயவர்கள்.
மனிதர்களை வகை அறிந்து பழக வேண்டும் எனப்பகரும் ஒளவையின் தனிப்பாடல் இது.
***
வேளூர் பூதன் விருந்தை வியந்து பாடியது
******************************************************
வரகரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்த விருந்து இட்டான் ஈது
எல்லா உலகும் பெறும்.
மனிதர்களே.
சிலர் அளிக்கும் விருந்துக்கு ஈடு இணை இருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு விருந்து வேளூர் பூதன் எனக்கு அளித்தான். அதன் சுவைக்கு எல்லா உலகங்களையும் அளிக்கலாம். அவ்வளவு சுவை. அந்த விருந்தில் என்னென்ன இருந்தது?
அது வரகு அரிசிச் சோறு.
வழுதுணங்காய் ( கத்தரிக்காய்) வாட்டு. ( கத்தரி பொரியல்)
முர முர என புளிப்பேறிய மோரும் ஆஹா!
விருப்பமுடன் விருந்து அளித்தான்.
எவ்வளவோ சாப்பிடுகிறோம். மறந்துவிடுகிறோம். அன்போடும் விருப்பத்தோடும் அளிக்கப்படும் சாப்பாடோ எல்லா உலகமும் தரலாம் எனும் அளவுக்குப் பாராட்டு பெற்றுள்ளது.
***
Thursday, 15 January 2026
ஒளவையின் தனிப்பாடல் 2,3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment