பாடல்: 21
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சம் இல்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.
மனிதர்களே
வஞ்சம் இல்லாத மனத்தோடு செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லஷ்மிதேவியை நிதமும் வணக்கம் செய்க. துதி செய்க. அவள் வழங்கிக்கொண்டே இருப்பவை இவை:
அவையாவன:-
நீர்வளம் பெறுவீர்கள்
நல்ல வீட்டின் நிழல் பெறுவீர்கள்
நிலம் மூடும் அளவுக்கு நெல்கதிர் கட்டுகளால் நல் உணவு பெறுவீர்கள்
சமூகத்தில் நற்பெயர் கிட்டும்
பெருமை கிட்டும்
சிறந்த வாழ்வைப் பெறுவீர்கள் அது பெருவாழ்வாக இருக்கும்
நல்ல ஊரும் செல்வமும் பெற்று வளர்வீர்கள்.
நீண்ட ஆயுள் பெறுவீர்கள்
முலைபகர்வார் கொண்டாட்டம் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக செந்தாமரை மலரில் வாழும் லஷ்மிதேவி வழிபாட்டின் பயன்கள் அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
மனிதர்களே.
பலர் மிகவும் பாடுபட்டு உழைத்துப் பணம் சேர்க்கிறார்கள். அது தப்பில்லை. ஆனால் அதனைத் தனக்கு மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற சுயநல வெறி கொள்கிறார்கள். அதனால் மறைத்தல் ஆரம்பமாகிறது. சிலர் ஒளித்து வைக்கிறார்கள். சிலர் புதைத்துவைக்கிறார்கள். கோடி கோடியாய் வைத்துக்கொண்டு தம்மிடம் உள்ள செல்வம் மறைக்க, செல்வம் இல்லாதது போல பிச்சைத் தோற்றம் கூட காட்டுகிறார்கள்!
அவர்கள் யார்? அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இவ்வாறு செல்வத்தை மறைத்து, ஒளித்து, புதைத்து, ஒன்றுமிலாதது போன்ற வேஷமிட்டு இவ்வாறெல்லாம் செய்கிறார்கள்? என்று சிந்தித்தால் விடை கிடைக்கும்.
ஒரே ஒரு நினைப்பு என்ன?
அந்த நினைப்பு இதுதான்.
உயிர் அவர்கள் உடல் கூட்டை விட்டுப் போய்விடும் என்பதை அடியோடு மறந்தவர்கள். நிரந்தரமாய் உயிர் இருக்கும் என நினைக்கும் பாவிகள்!
ஒருநாள் கூடு விட்டு ஆவி போனபின்பு அவர்கள் ஒளித்து வைத்த பணம் யாருக்கும் பயன்படப்போவதில்லை. அந்தப்பணத்தை அவர் மட்டுமல்ல , யாரும் அனுபவிக்கப் போவதில்லை.
நிலையாமை சுட்டிக்காட்டும் நல் வழிப்பாடல் இது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பாவிகள் செய்யும் செயல் என்பது பணத்தை மேலும் மேலும் சேர்த்து ஒளிப்பதாலும், புதைப்பதாலும் உயிர் போகும்போது அந்தப்பணம் பயன்படாது என்பதாகும்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 23
வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.
மனிதர்களே.
நீதி வழங்குதல் சரியான முறையில் நடை பெற வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பும் சரி, குடும்பத்தலைவன் கூறும் தீர்ப்பும் சரி, ஊர்த் தலைவர் கூறும் தீர்ப்பும் சரி. ஒருதலைப் பட்சமாக ஓரம் சார்ந்து அமையுமானால் என்ன நடக்கும்?
அவர் வீட்டில் பேய் சேரும். வேதாளம் சேரும்.
வெள்ளை எருக்கம் செடி பூப்பூக்கும்.
பாதாள மூலி எனும் புதர்க்கொடி படர்ந்து செழிக்கும்.
தரித்திரம் தரும் மூதேவியானவள் அந்த வீட்டுக்குள் புகுவாள். வாழ்க்கை நடத்துவாள்.
சேடன் ( பாம்பு) குடிபுகும்.
முலைபகர்வார் கொண்டாட்டம் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக நீதி சொல்பவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்:24
நீறில்லா நெற்றிபாழ் ; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறு இல்
உடன் பிறப்பில்லா உடம்பு பாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.
மனிதர்களே.
உருப்படியான விஷயங்கள் நடுவே கவனிக்காமல் விட்டால் பாழாகும் விஷயங்களையும் கட்டுப்படுத்த முயற்சி செய்வதும் நம் கடமையாக இருக்கிறது.
திருநீறு அணியாத நெற்றி பாழ் வீட்டிற்கு சமம். குடியிருக்கும் வீட்டுக்குத்தானே வெள்ளை அடிப்பார்கள்? ஆம். ஈசன் நம் உடலாகிய வீட்டில் குடியிருக்கிறான்.
நெய் சேர்த்துக்கொள்ளாத உணவு பாழ். ஆம். உடம்புக்கு அவசியமானது நெய்.
எவ்வளவு உயர்ந்த ஊராக இருந்தாலும் ஆறு பாயாத ஊர் ஆறும் ஆற்றங்கரையும் அமையாத ஊருக்கு அழகு பாழ்.
கருத்து ஒற்றுமையுடன் கூடிய ; உடன்பிறப்பு அமையாவிட்டால் அந்த உடம்பு பாழ்.
நற்பண்புகள் அமைந்த மனைவி இல்லாத வீடும் பாழ் வீடே.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பாழான விஷயங்கள் ஐந்தினை அறிந்தோம்.
விழிப்புணர்வு கொள்வோம். பாழாவதைத் தடுக்க முயல்வோம். சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு.
மனிதர்களே.
மனிதனது மானம் பெருமை இழக்க எது காரணம்?
சம்பாதித்த முதலில் மூலாதாரப்பணத்திலிருந்தே (அதாவது விதைப்பதற்கு வைத்திருக்கும் நெல்லில் இருந்தே ஒருவன் உணவுக்கு எடுத்து உண்பது போல) செலவு செய்துவிட்டால்; அதிகமாக செலவாகிவிட்டால் சிக்கனம் பின்பற்றாத வாழ்வு வாழ்ந்தவன் பெருமை அழிகிறது. மானம் அழிகிறது. அறிவு கெடுகிறது. ஆம். அறிவும் கெட்டுத்தான் போகிறது.
திக்குகளில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் எல்லோருக்கும் அவன் திருடன் என்று தூற்றப்படுவான்.
ஏழு பிறப்புகளிலும் தீய குணம் கொண்டவனாக மாறுவான்.
நல்லவர்க்கும் பொல்லாதவன் ஆகிறான்.
ஆகவே மனமே! சிக்கனத்தை நாடு.
முலைபகர்வார் கொண்டாட்டம் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக சிக்கனத்தின் அருமை சுட்டியதை அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்:26
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல்காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
மனிதர்களே.
உங்களுடைய குற்றங்களை நீக்கிகொள்ள நீண்ட காலம் ஆகும்.
ஆனால் உங்களிடம் ஒரே ஒரு விஷயம் நுழைந்தால் இருந்த இடமே தெரியாமல் பறந்து போகும் 10 விஷயங்கள் அறிவீர்களா?
இது வந்துவிட்டால், உங்கள் மதிப்பே உங்களுக்குப் பெரிதல்ல.
இது வந்துவிட்டால், உங்கள் குலம் ( குடும்பப் பெருமை) முக்கியமல்ல.
இது வந்துவிட்டால், உங்கள் கல்வி மறக்கிறது.
இது வந்துவிட்டால், கேட்டதைத் தரும் கொடை குணம் (வண்மை) போய்விடும்.
பகுத்து அறியும் அறிவு போகிறது.
தானே கொடுக்கும் தானப்பண்பு போகிறது.
கடவுள் வழிபாடு ( தவம்) போகிறது.
மேன்மை ( உயர்ச்சி) போகிறது.
முயற்சி ( தாளாண்மை) போகிறது.
தேனின் கசிவு போல் சொல் உடைய பெண்கள் மீது தோன்றும் ஆசை போகிறது.
அது என்ன?
பசி!
பசியின் சக்தி இது!
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பசி வந்திடப் பறக்கும் பத்து விஷயங்கள் அறிந்தோம். பிறர் பசி போக்கவும் இயன்ற வழி செய்வோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்:27
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
மனிதர்களே.
நீங்கள் அடைவது அனைத்தும் உங்கள் எண்ணங்களால் அடையப்பெற்றவை என்று நூறு சதவீதம் உங்களால் சொல்ல முடியாது.
ஏன் எனில், நீங்கள் நினைக்கும் பொழுதே அந்த நினைப்பு ஒழிந்து அதன் பொருள் வேறு ஒன்றாக மாறும்.
அல்லது
நீங்கள் நினைத்த ஒன்றே அதே பொருளில் வந்து சேர்ந்தாலும் சேரக்கூடும்.
நீங்கள் நினைத்த ஒன்று , நினைக்கும் முன்பே தானே வந்து சேர்ந்தாலும் சேரும்.
எல்லாமும் என்னை ( உங்களை) ஆளும் ஈசன் செயல் என்று உணருங்கள்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் மூலமாக நினைப்பதும் அடைவதும் நினைக்கும் முன்பே நடப்பதும் நம் செயல்பாடுகளால் அல்ல, ஈசன் செயல் என அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
பாடல்:28
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்தனையும் சஞ்சலமே தான்.
மனிதர்களே.
சுடப்படாத களிமண்ணில் செய்யப்பட்ட கலம், குழைந்து குழைந்து வினாடிக்கு வினாடிக்கு வளைசல் ஏற்படும். அந்த மண்கலமும் மனிதனின் மனமும் ஒன்றே.
சாகும் வரை சஞ்சலத்தில்தான் உழலுகிறது மனித மனம். அது அப்படி ஆகுமோ. இது இப்படி ஆகுமோ என்ற துடிப்பு இல்லாத வினாடிகளோ நிமிஷமோ நாளோ வாரமோ வருஷமோ உண்டா?
இத்தனை கவலை படும் மனிதனின் அன்றாடத் தேவைகள் என்ன?
ஒரு நாள் முழுதும் பசியாற ஒரு நாழி ( ஒரு படி) அரிசி போதும்.
உடுப்பதற்கு நான்கு முழம் துணியே போதும்.
ஆனால் சாகும் வரைக்கும் மனிதன் நினைந்து எண்ணுவதோ 80 கோடி எண்ணங்கள் கொண்ட கண்மூடித்தனமான மனித வாழ்க்கை. அத்த்னையும் மண்ணில் செய்த கலம் போன்றது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக நிலையில்லாத மனிதர்கள் கொண்ட வீண் கவலைகள் 80 கோடிக்கும் அதிகம் என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
No comments:
Post a Comment