29.11.2025
சந்த்யாவந்தனம் விளக்கம் (1)
அனைவருக்கும் வணக்கம் : புதிய பகுதி
ஓம். ஒரு கட்டிடம் எவ்வளவு பெரிதாகவும் அழகாகவும் இருந்தாலும் அதில் முக்கியமாகப் பயன் படுவது அதிலுள்ள காலி இடம். அதுபோல், ஒருமனிதன் அனுபவிக்கும் இரவும் பகலிலும் பெரிய செயல்களும் இன்பமும் நிறைந்தனவாக இருந்தாலும் செயல்களுக்கு நடுவே இன்பங்களுக்கு நடுவே செயலர்று இருக்க வேண்டிய நிலை ஒன்று உண்டு. அதுவே ஸந்தி. அது பகலையும் இரவையும் விட பயன் தரக் கூடியது. இது முன்னோர் கண்ட பாதை.
அந்த ஸந்தியாவந்தன காலத்தில் என்ன செய்ய வேண்டும்?
அந்த நேரத்தில் சந்த்யா காலத்தில் உலக சந்தடியிலிருந்து விலகி, உண்ணாமலும் உறங்காமலும் தான் தானாக தனித்திருக்க வேண்டும். பசித்தும் தனித்தும் இருக்கும் ஒருவன் விழித்திருக்கும் காலமாக இதனை மாற்ற அறிகிறான். வாய் உண்ணவில்லை. கண் உறங்கவில்லை. வாய் யாரிடமும் பேசவும் இல்லை. இப்படி ஆக்கிக் கொண்டு, தன் உள்ளும் தன் புறமும் நின்று, தன்னை அறியாமல் தன்னை இயக்கும் பரம்பொருளை ஒவ்வொருவனும் வழிபடுவதே சந்த்யாவந்தனம்.
சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேஜோ மயம் என்று தாயுமானவர் புகழ்கிறார். இது சிற்பரவெளிக்குள் வளர்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தற்பரம் ஆகிறது அந்த பரதேவதையின் அஞ்சலி.
இந்தப் பழக்கம் முதிர்ந்தால் என்ன கிடைக்கும்?
இந்தப் பழக்கம் முதிரும்போது,அந்த மனோ நிலையில் பகலும் இரவும் சந்திக்கும் காலத்தில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு எண்ணத்தின் முடிவுக்கும் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சூன்யம் தவிர்க்கப்படும். ஒவ்வொரு சொல்லின் முடிவுக்கும் ஆரம்பத்திற்கும் நடுவில் உள்ள சூன்யம் - வெற்றிடம் அகலும். இவ்வளவு ஏன்? ஒவ்வொரு செயலின் தொடக்கத்திற்கும் முடிவிற்கும் நடுவில் உள்ள வெற்றிடம் சூன்யம் மறைந்து ஆன்ம தரிசனம் விளங்கும். ஆம். ஆன்மாவே நமது எண்ணமாகவும் , சொல்லாகவும், செயலாகவும் பரிமளிக்கிறது என்பதை உணரத் தொடங்கும் ஆன்ம தரிசனம் அது.
உண்மையில் உலகில் காணும் எல்லாப் பொருள்களும். செய்யும் செயல்களும், எல்லா விவகாரங்களும் ஆன்மாவை மறைக்கவே செய்கின்றன.
ஆம். ஜபமாலையை உருட்டும்போது மணிகளிடையே ஊடுருவிச் செல்லும் இழை, மணிகளில் மறைகிறது.இடை இடையில் மட்டும் மீண்டும் தோன்றுகிறது. அதுபோல சூத்திரமாய் மறைந்திருக்கும் ஆத்மா செயல்களில் மறைந்து மின்னல் போல் தோற்றம் அளிக்கிறது.
( தொடரும்/ 29.11.25)
No comments:
Post a Comment