Saturday, 22 February 2014

சுந்தர காண்டம் 976-1000








பாடல்-976:

குற்றமற்ற போர்க்களம் அது
அரக்கியர்களோ ஓவியப்பாவையின் அழகுடன்
இறந்த வீரர்கள் மீது புரண்டு அழுகிறார்கள்
விழும்போதெல்லாம்
அம்பு போன்ற அழகிய கண்கள்
இமைக்கவும் இல்லாமல்
இறந்து போனது போல தெரிகின்றார்கள்
இப்படிப்பட்ட செயல்கள் யாவும்
உயிர் ஒன்று உடல் இரண்டு என
நிரூபிக்க நிகழ்கின்றது போலும்?

பாடல்-977:

இளமை மிகு அரக்க மகளிர் ஓட்டம் உயிர்களை நாடி
ஓடும் உடல் போல் உள்ளது
இறந்த பிணக்குவியல் நடுவே
கணவரின் உடல்களைக் கண்டுபிடித்தனர்
இறந்த உடல் பார்த்து இறந்தனர்
மேல் உலகம் சென்றனர்
இவர்கள் வருவதற்கு முன்பே
தேவமகளிர் தமது கணவரைத் தழுவியதைக் கண்டு
ஊடல் கொண்டனர்.

பாடல்-978:

மை தீட்டிய கண்\
திருமகள் போல் அழகு
இரண்டும் கொண்ட அரக்கப்பெண்
கூத்தாடி விழுகின்ற தலையிலாத உடலை
அதன் தலையுடன் சேர்த்து
“எம் உயிர் துணைவனை காட்டுபவன் ஆகுக” என
அழுகின்றாள் கை கூப்புகின்றாள்.

பாடல்-979:

ஓவியத்திலும் தீட்டமுடியாத பூங்கொடி போன்ற
அரக்க மகள் இறந்த கணவனின் அறுபட்ட தலையை
கையில் ஏந்தி நிற்கின்றாள்
தலையில்லாத உடலோ துள்ளுகின்றது
ஆடுகின்ற கணவனைக் கண்டு
“ன்ந்த்ஐவனே! வேந்தனே! நீ அலசி ஆடிவிட்டாய்
போதும் விடு! உனது நடம் ஆட்டம்”
கூறிக் கொண்டே தன் தலைவன் உடலைத் தழுவுகிறாள்

பாடல்-980:
அசோகவனத்தைக் காவல் செய்யும்
பருவத் தேவர்கள்
அனைவரும் கண்ட காட்சி இது!
“இதற்குப்பின் உயிர் பிழைத்தவர்
எவருமில்லை” என்ற செய்தியுடன் ஓடினார்கள்
இராவணன் திருவடி வீழ்ந்தார்கள்
“பெரும்படை யாவும் மாய்ந்தது” என்றார்கள்

பாடல்-981:

இராவணன் இணை
மயன் மகள் மண்டோதரி
கயல் மீன் ஒத்த கண்கள் நீர்வடிக்க
கருமேகக்கூந்தல் நிலத்தில் புரளபுழுதியில் அளாவுற
பிரம்மன் மகன்
புலத்தியன் மகனாகிய
விச்சிரவசுவின் மகனாகிய
இராவணன் திருவடிகளில் விழுந்து
வயிற்றில் அடித்துக் கொண்டு அலறித் துடித்தாள்.

பாடல்-982:

இராவணன்  திருவடிகளில்
இப்போது அழுது தொழுதவர்கள்
இலங்கையில் வாழும் மகளிர் மற்றும்
அசோகவனக் காவலராம் பருவத் தேவர்களும்!
பருவத்தேவர்களுக்கு இராவணன் தோல்வி
சிந்தையிலே களிப்பு வந்தது
வெளியில் மட்டும் அழுதனர்!
(அக்ககுமாரன் வதைப்படலம் முற்றிற்று)

பாடல்-983:

அப்போது அச்செய்தி கேட்டான்
ஆண்சிங்கம் இந்திரஜித்!
முன்பே சிவந்த விழி இப்போது
எரிக்கும் விழி ஆகியது சினம் வீங்கியது
எப்படிப்பட்ட உலகமும் குலைந்து நடுங்க
மிகுந்த சினம் ஆனான்.

பாடல்-984:

ஒப்பற்றவன் இந்திரஜித்
“அரத்தால் சுடரும் ஒளி வேல் அக்ககுமாரன்
இறந்தான்” எனும் சொல்கேட்டு
அனல் பெருமூச்சு உயிர்த்தான்
திரிபுரம் எரிக்க
மேருமலையை வில்லாக வளைக்கப்புறப்பட்ட
பரஞ்சுடர் சிவபெருமான் என எழுந்தான்.

பாடல்-985:

வானின் உயரம் என்ன? என
அளக்கும் தேரில் இந்திரசித் ஏறினான்
ஆயிரத்து இருநூறு பேய்கள் பூட்டிய தேரில்
சக்கரங்கள் பூட்டிய தேரில் ஏறும்போதும்
அவன் கர்ஜித்த வீர உரைகள்
ஒன்றுடன் ஒன்று கோர்த்து
நெரும் திசைகள் பிளந்தன
அண்ட கோளம் பிளந்தது.

பாடல்-986:

இந்திரஜித் கர்ஜித்தபோது
அவனது வீரக்கழல்களும் பேரொலி செய்தன
பேரிகைகளும் இடியும் அஞ்சின
இந்திரன்  உயிர் நடுங்கிற்று
தேவர்களின் தலைவர்களான மும்மூர்த்திகள்
“போர் உச்சம் அடிந்துவிட்டது” என நினைத்து
யோகம் கைவிட்டனர்!

பாடல்-987:

தம்பி அக்ககுமாரனை
எண்ணியபோதெல்லாம் தாரை தாரையாக
கண்ணீர் ததும்பிற்று இந்திரஜித்துக்கு!
கட்டமைப்பான வில்லை நோக்கி
வாய் மடித்து உருத்துப் பார்த்து சினமாய் நகைத்தான்
மரக்கொம்புகளில் வாழும்
நிலையற்ற மாயவாழ்வு வாழும் குரங்கினாலா
என் தம்பி தேய்ந்தான்! அல்ல!
என் தந்தை இராவணன் புகழ் தேய்ந்தது!

பாடல்-988:

இந்திரஜித்துக்குத் துணையாகத் திரண்ட
வேல்படைக்குழு
வில் படைக்குழு
மலையும் பிளக்கும் வாள்படைக்குழு
இவற்றை எண்ணிக்கூற முடியாது
ஆனால்
இரு பக்க நிலத்தையும் சேறாக்கும் மதநீர் சொரியும்
சிறுகண் யானைப்படைத் தொகை பன்னிரண்டாயிரம்
தேர்களின் தொகையும் அதுவே.

பாடல்-989:

ஒரு கண் கண்ணீர் பெருக்க
மறுகண் சினத்தைப் பாய்ச்சிட
இந்திரஜித் கோபம் எந்த அளவோ 
அதே அளவு செயலின் வேகமும் இருந்தது
ஆதலால்
“ஏய்!” எனக்கூறும் நேரத்திற்குள்
இரவணன் இருந்த அரண்மனை வந்துவிட்டான்
பன்னிரெண்டாயிரம் குதிரைப்படையுடன்
கொடும் வாள் ஏந்திய அரக்க அரசர்களுடன்.

பாடல்-990:

தந்தையின் தாளில் விழுந்தான்
இறந்த தம்பிக்காக அழுதான்
இந்திரஜித் தோள்பற்றி
இராவணனும் ஏந்தித் தழுவினான்
அழுது சோர்ந்தான்
வாள் நெடும் கண் மாதர்கள்
வயிற்றில் அடித்துக் கொண்டு அலறினார்
அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு
இந்திரஜித் சொல்வான்:-

பாடல்-991:

“அரசே! ஒன்றை நீ உணர மறுக்கிறாய்
துன்பம் அடைந்த பின் வருந்துகிறாய்
குரங்கின் ஆற்றல் அறிந்தும்
செல்லுங்கள் போருக்கு என அனுப்பி
படைகள் தேயுமாறு கொன்றுவிட்டாயே
நம் அரக்கர் படை குழு குறைந்து விட்டதே!

பாடல்- 992:

என் தந்தையே
கிங்கரர்கள் அழிந்தனர்
சம்,புமாலி அழிந்தான்
சேனைத் தலைவர் ஐவர் அழிந்தனர்
என்ன காரணம்?
அக்குரங்கே சங்கரப்ன் பிரம்மன் திருமாலின் கூட்டு
எனக் கருதத் தக்கது.

பாடல்-993:

திசை யானையின் வலிமைகூட
முன்பு அழியும்படி செய்து
மூன்று புரமும் எரித்த முக்கண்ணன் சிவனையே வென்றாய்
சிவனது கயிலை
மூன்று உலகமும் வென்றாய் அப்படிப்பட்ட நீ
குரங்கை முதலில் வென்றிருக்க வேண்டும்
அப்படிச் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறாய்
இதனை புலம்பல் என்று தான் சொல வேண்டும்
“வெல்வோம்” என நீ இப்போது சொல்வது பிதற்றல்.

பாடல்-994:
“ஆயினும் ஐயனே!
மனம் நொய்யாதோஅண்மைத் தொழில் புரியும் குரங்கை
“ஏ” எனும் நேரத்துள் பற்றிப்பிடித்துத் தருவேன்
துன்பம் என உழல ஒன்றுமில்லை
நீண்ட காலம் வாழ்க” என
நெடிய புகழோடு போருக்குப் போனான்.

பாடல்-995:

இந்திரஜித்
வீரக்கடமை புரிய புறப்பட்டான்
பிர்ளய காலத்தில் தனியே நிற்கும்
மாமேருமலை போல நிற்கிறான்
அவனைச் சுற்றிலும் ஊழிக்கடல் போல
அழகிய தேர்கள் குதிரைகள் வீரர்கள்!
முகபடாமும் சிவந்த கண்களும்
கொடிய கோபமும் கொண்ட யானைகள்!
அரக்கர் சேனைகள்!

பாடல்-996:

இந்திரஜித்
எல்லாத்திசை உலகங்களும் வென்றவன்
எனினும் அனுமன் ஆற்றலை
ஒரு கணம் வியந்து  உவகை கொண்டான்
பலரும் நடுங்கினர்

பாடல்-997:

இலை வடிவ அணிகலன்கள் தரித்த இந்திரஜித்
“போர்க்களம் காண்கிறான்
பிணமும் இரத்த வெள்ளமும்
அளவிலா ஆயுதமும் தடுக்கிறதே
இது போர்க்களமே அல்ல
மலைகளும் கடல்களும் காடுகளும் பெற்ற
இன்னொரு  உலகம்! அம்மா!” என நினைத்தான்.

பாடல்-998:

அது வரை
கவலை ஏதும் அடையாத இந்திரஜித்
கவலை உற்றான்
ஓர் விம்மல் கொண்டான்
“கடல் போன்ற பெருமை மிகு அரக்கர்
ஒப்பில்லாத ஆற்றல் அரக்கர் அனைவரையும்
அழித்தது ஒரே ஒரு குரங்கு எனில்
இராமனுக்கு  எவ்வளவு ஆற்றலோ!”
என நினைத்தான்.

பாடல்-999:

இறந்து கிடந்தவர்களைப் ப் அர்க்கிறான்
அடடா!
அத்தனை பேரும் இலங்கை அரசுக்கு
கண் போன்ற அரக்கர்கள்
எண்ண முடியாத பெருமை மிகு அரக்கர்கள்
உதட்டை மடித்து கோபிக்கிறான்
ஆறாத புண்ணில் கோல் இட்டது போல்
மான உணர்ச்சியால் புழுங்குகிறான்.

பாடல்-1000:

காட்டில் என் அத்தை சூர்ப்பணகைக்கு
அவமானம் அடைந்ததும்
கரன் இறக்க நேரிட்டதும்
தம்பி அக்க குமாரன் இறந்ததும்
இரண்டே இரண்டு மானிடர்களால்!
ஒரே ஒரு குரங்கால்!!” என்றால்
என் வீரம் எவ்வளவு சிறந்தது! அடடா!
இழிவு பட தன்னையே
எண்ணிக் கொண்டான் இந்திரஜித்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 13 February 2014

சுந்தர காண்டம்951 - 975






பாடல்-951: 

“இந்திரஜித் அல்லது இராவணன் !
இருவரில் ஒருவனே இவன்
நான் முன்பு செய்த புண்ணியம் இது
என் அரசன் சுக்ரீவனின் தவப்பயன் இது
நானும் தயார்
வந்திருப்பவன் உயிர் வாங்க எமனும் தயார்
நினைத்தது விரைவாக முடிப்பேன்!”

பாடல்-952:

பத்து தலை இராவணன் இவன் அல்ல
ஆயிரம் கண்கள்  உடைய இந்திரனைக் வென்ற
இந்திரஜித் இவன் அல்ல
இவன்  வடிவில் எந்தக் குற்றமும் இல்லை
புகழ் மிக்க முருகனும் இல்லை
ஆராய்ந்தால்
மூவருக்கும் மேம்பட்டவன் அப்படியெனில் -
நீலமலை போல் நிற்கும் இவன் யாரோ!

பாடல்-953:

விண் வரை உயர்ந்த இந்திரவில் போல
காணப்படுகிற தோரணவாசலின் உச்சியில்
வீற்றிருக்கின்ற அனுமனைப் பார்த்தான் அக்ககுமாரன்
பற்கள் தெரிய சிரித்தான்
“அரக்கர் கூட்டத்தைக் கொன்றது
இந்த  குரங்கு தானாம்!” என்றான்
ஏளன உச்சியில் ஏறி நின்ற அக்ககுமாரன்.

பாடல்-954:

ஏளனச் சொல் கேட்ட
அக்ககுமாரன் தேரோட்டி உணர்த்தினான்
“ஐயனே! கேளுங்களேன் என் சொல்லை
உலகியலில் இதுதான் நிஜம் என ஏதும் உண்டோ?
இகழாதீர்கள் எதையும்
நம் மன்னன் இராவணனை எதிர்த்து வென்ற
வாலியும் ஒரு குரங்குதான் என்பதை நினைவு கொள்க
மற்றது சொல்ல வேண்டுமோ
போருக்கு முன் இதை நன்கு யோசிக்கவும்”

பாடல்-955:

நஞ்சினால் செய்த வடிவம் போன்ற
அக்ககுமாரன் பதில் இது:-
“இத்தனை அழிவு செய்த இக்குரங்கு அழிப்பேன்
அழித்த பின்னும் எஞ்சியிருக்கப்போகும் என் கோபத்தால்
மூன்று உலகமும் நுணுகி நுணுகித் தேடுவேன்
வெளியில் உள்ள உலவும் குரங்குகள் மட்டுமல்ல
கருவில் உள்ள குரங்குகளும் அழிப்பேன்”

பாடல்-956:

அஞ்சனை மைந்தன்
மலை போன்ற அனுமன் மேல்
பருவ கால மழை போல
அக்ககுமாரன் ஆயுதங்கள் பொழிந்தான்!
தேவர்கள் அச்சத்தால் உடல் வேர்க்க
வெற்றி மாலை கொண்ட அனுமன்
தானும்
தனது தனிமையுமாக சேர்த்து
படைகளை எதிர்த்தான்.

பாடல்-957:

அரக்கர் படைகள்
கருவிகளை எறிய
அனுமன் உடம்பில் மோதி முறிந்தன
அனுமன் போரினால்
யானைகள் இறந்தன
தேர்கள் சிதைந்தன
குதிரைகள் கூட்டம் வலிமை இழந்து வீழ்ந்தன.

பாடல்-958:

அனுமனின் போர் வேகம்
பற்றியெறியும் நெருப்பு
காய்ந்த புல் தொகுதியில் பற்றியது போல் உள்ளது
“ஏய்!” எனும் ஓசை புறப்படும் முன்
போரிட வந்தவர்களின் உயிர்கள்
தென்திசையில் உள்ள எமலோகம் சென்று வீழ்ந்தன
இந்தச் செயல் முடிக்க
எமனுக்கு ஆயிரம் கோடி தூதர்கள் இருந்தால்
அது வியப்பு தான்!

பாடல்-959:

அனுமனின் பலம் அதிகம் அதிகம்
உலகம் அழியும் கடைசி காலத்தில்
எரித்திடும் சூரியனின் வெப்பம் போல
எதிரிகளை எரிக்கிறான் அனுமன்
அதனால்
போருக்கு முன்பே வந்தவர்களும்
வருகின்றவர்களும்
வந்து கொண்டிருப்பவர்களும்
எலும்பில்லாத புழுக்களுக்கு சமம் ஆயினர்!

பாடல்-960:

ஐம்புலன்கள் வென்ற அனுமன்
இரத்த வெள்ளம் செய்கின்றபோது
முகபடாம் கொண்ட யானைகள்  குதிரைகள்
இரத்தச் சேறாவதும் தப்பவில்லை
“சுறாமீன்கள் நிறைந்த கடல் எனும்
அரண் அழிந்துவிட்டது
இலங்கை உயிர்கள் அழ்¢ந்தன
எமன் கொள்கை இது” என
பார்த்தவர்கள் கூறும் அளவுக்கு அனுமன் போரிட்டான்.

பாடல்-961:

நேரே போரிட்டார்கள் இறந்தனர்
தனியே தப்பி உயிரோடு நின்றவர்கள்
தம் உடலில் உயிர் நிற்காமல் தவித்தனர்
“தேர்களே அதிகமாக அழிந்தன” என்றனர் சிலர்
“காலாட்படை மனிதர்களே அதிகம் இறந்தனர்” என்றனர் சிலர்
யானைகளே அதிகம் என்றவரும் உண்டு.

பாடல்-962:

அலை மோதுகின்றது அரக்கர் சேனை
அதில் இருக்கின்ற வலிமை வீரர்கள் தொகுப்பு
அகன்றவாய் கொண்ட பானைத்தயிர் போலவும்
அவர்களைக் கடையும் மத்து போலவும்
அனுமன் இருந்தான்!
அரக்கவீரர்கள்
ஊழிக்கால வெள்ளம் என இருந்தாலோ
அதனை உறிஞ்சி அழிக்கும்
வடவாமுக அக்னி எனும்
ஊழித் தீயானான் அனுமன்.

பாடல்-963:

அரக்கர் கூட்டங்களை
உடனுக்குடன் அனுமன் கொல்வதால்
இரத்தப் பேராறுகள் பெருகியபடியே உள்ளன
மிஞ்சியவர்கள்
இரத்த ஆறில் ஓடித் தப்பித்துவிட்டனர்
அக்ககுமாரன் மட்டுமே நின்றான்
கண்களில் தீப்பொறியுடன் அம்புகள் செலுத்த
அனுமன் தன்னந்தனியாக நிற்கின்றான்
சூரியன் எனும் ஒற்றைச் சக்கரத்தேர் போல
பெருமை மிக்க தேருடன்
அனுமனை எதிர்க்கின்றான் அக்ககுமாரன்.

பாடல்-964:

ஒரே நாளில் பல உயிர்கள் உண்ணும்
அனுமனுக்கு எதிரே இந்திரசித்துக்கு இளையவன்
அக்ககுமாரன் நிற்கின்றான்
தேவர்களுக்கு மனம் கசிவுற்றது
“மாருதி நிலை என்னாகுமோ” என்றனர்
இமையாத விழி நமக்கு இருப்பதால்
அதனால் விழி மூடாமல் பார்க்க முடிகிறது
என மகிழவும் செய்தனர்
பிரியாமல் போரிடும் இருவரையும்
எதிர் எதிர்பக்கம் நின்று கூடினர்
வேடிக்கை பார்க்க!

பாடல்-965:

அக்ககுமாரன் எய்தான் அம்புகள்
நெருப்பு உமிழும் பதினான்கு அம்புகள்
அனுமன் மீது பொழிந்தன
பொடியாய் உதிரச் செய்தான் அனுமன்
இரும்புத்தடி ஒன்றினால்!
அதனால் சீற்றமாகி
இன்னும் கொடுமை மிகு பல அம்புகள்
ஒரு படையாக செலுத்தினான் அக்ககுமாரன்
அவற்றுக்கு எதிராக
கைகளே படையாக எதிர்தாக்குதல் செய்தான் அனுமன்
பாய்கின்ற அவன் தேர் மேல் பாய்ந்தான் அனுமன்.

பாடல்-966:

தேரில் சென்று பாய்ந்து
கோல் கொள்வான் ஆகிய சாரதியின் உயிர் தின்றான்
தேர் தரையில் உருண்டது
இதற்குள்  அக்ககுமாரன் அம்புகள் சில
அனுமன் மார்பில் நுழைந்துசென்றன
பல அம்புகள் அனுமன் தோளில்
எந்த இடம் என அறியாமல் மறைந்தன
அனுமன்
அக்ககுமாரன் வில்லையே
இப்போது பிடித்துக் கொண்டு எதிரே நிற்கின்றான்!

பாடல்-967:

அனுமனின் ஒரு கரம்
அவனது வயிரம் வாய்ந்த வில்லைப் பற்றியது
அக்ககுமாரன் இரு கைகளால் எதிர்க்க
அந்த வில் இற்று ஒடிந்தது
அனுமனின் அழகிய தோளை
வாளை உருவிக் குத்துகின்றான் அக்ககுமாரன்
இராமனின் சொல் கொண்டு வரும் தூதன் முன்
அவை என்ன ஆகும்?
முறித்தான் பொடிப்பொடியாகக் உதிர்த்தான்.

பாடல்-968:

வீரன் அக்ககுமாரனின் வாள் பொடியாகி
உதிர்வதற்கு முன்பு
மீண்டும் அனுமனின் தோளைத் தழுவிட முனைந்தான்
அனுமனின் மயிர்கள் யாவும்
வேல்களாகி தைத்தன
அக்ககுமாரனை நிமிர விடாமல்
அனுமனின் நீண்டவால் சுற்றியது பற்றியது
அக்ககுமாரன் மேல் ஏறினான் அனுமன்.

பாடல்-969:

வாலினால் பற்றிக் கொண்ட அனுமன்
கையினால் அறைந்தான் அக்ககுமாரனை!
கன்னத்தில் அறைந்த அறையில்
வாள் போல் ஒளிரும் பற்கள் உதிர்ந்தன
குண்டல ஆபரணங்களிலிருந்த மணிகள் முழுதும்
மேகத்திலிருந்து வெளிவரும் மின்னல் போல் வெளியேறின
வெற்றி மிக்க அவன் பிடரி
அனுமனின் ஒரே கரத்தில் குத்துப்பட்டது
அவனைத் தாண்டிவிட்டான் அனுமன்.

பாடல்-970:

ஊழிக்காலத்தின் இறுதியில்
ஏழு உலகமும் அழிந்தாலும்
தன் புகழ் அணுவளவும் தேயாத அனுமன்
இப்போது அக்ககுமாரனை அரைக்கப் போகிறான்
அரைக்கும்போது தெளிக்கும் நீர்
அங்கு ஓடும் இரத்த ஆறு!
அம்மிக்கல் எது ?
போர்க்களம்!
அரைப்பதற்கான உப்பிய அரிசி -
அக்ககுமாரன் எலும்புகள்!
அம்மிக்குழவி -
அக்ககுமாரன்!
வயிரம் பாய்ந்த கைகளினால்
விண்ணுலகம் மண்ணுலகம் காண
அம்மிக்குழவியை
அம்மிக்கல்லில்
தேய்த்து அரைக்கிறான் அனுமன்!

பாடல்-971:

ஒவ்வொருவரின் பயமும்
ஒவ்வொரு விதமாக வெளிப்பட்டது
இரத்த வெள்ளத்தில் ஒளிகிறார்கள் சிலர்
பேய்களின் செல்வமாம் பிணக்குவியலில்
புகுந்து சில ஒளிகின்றனர்
பயத்தால் இறந்தனர் சிலர்
திசை தெரியாமல் சிலர் கலங்கி நடந்தனர்
சிலர் ஓடிய திசைகளையே
இன்னும் சிலரும் தேர்வு செய்து
ஆயுதம் கீழே போட்டு ஓடுகிறார்கள்!

பாடல்-972:

பயத்தின் உச்சியில்
சிலர் வடிவங்களும் மாறின
மீனாகி கடலில் புகுந்தவர் சிலர்
பசு வடிவமாகி மேயத் தொடங்கினர் சிலர்
அந்தணர் வடிவமாயினர் சிலர்
மான்விழி மங்கையாகி கூந்தல் விரிய
அனுமன் எதிரே நின்றனர் சிலர்
“ஐயனே நாங்கள் உன் அடைக்கலம்” என்றனர் சிலர்
காவல் கடவுள் திருமாலின் பெயரை உச்சரித்தனர் சிலர்

பாடல்-973:

பய உச்சியில் இன்னும் சிலர்
என்ன செய்வதெனத் தெரியாமல்
ஏதேதோ செய்தனர்
அனுமன் மீது கொண்ட அச்சத்தால் சிலர்
தமது மனைவியைப் பார்த்ததும் கூட
“நாங்கள் உமது உறவினர் அல்ல
இந்தப் போரினை காண வந்த தேவர்கள்” என்றார்கள்
சிலர்
“நாங்கள் மனிதர்கள்” என்று கூற ஆரம்பித்தனர்
மந்தார மரச்சோலையுள் புகுந்து
சோலை வண்டுகளாக வடிவம் மாறினர் சிலர்
மயங்கி நின்றனர் சிலர்
சந்திரனாய் வளைந்த கோரப்பற்கள் எனும் அடையாளத்தை
ஒடித்துக் கொண்டனர் சில அரக்கர்கள்
இன்னும் சிலர்
நெருப்பின் செந்நிறம் கொண்ட தலை மயிரை எரித்து
கருப்பாக்கிக் கொண்டார்கள்!

பாடல்-974:

ஒரு அரக்கியர் அல்ல இருவர் அல்ல
பல அரக்கியர்கள் அழுகிறார்கள்
குண்டலம் எனும் காதணிகளும்
அழகிய கொங்கைகளும் கொண்ட அரக்கியர்கள்
வண்டுகள் அலையும் கூந்தல் அவிழ்த்து
காலை வருடும்படி நின்று அழுகிறார்கள்
தாமரை நிறத்தில் செம்பஞ்சுக்குழம்பு பூசப்பெற்ற
அவர்கள் வாய் திறந்து அழுகிறார்கள்
அந்த அழுகை
அந்த ஊரிலிருந்து
அண்டம் வரை சென்றது.

பாடல்-975:

உதிக்கும் சூரியனின் முகம் கொண்ட கணவன்மார்கள் முன்பு சென்று
கால்களில் விழுந்து
அழுது சோர்கிறார்கள்
அழகு வாய்ந்த சிவப்பு கூந்தல் நிறமும்
அவ்வூரில் பெருகிய இரத்த நிறமும்
ஒரே நிறத்தில் பரவி ஓடியது.

--அனுமனோடு மீட்போம்.

Friday, 7 February 2014

சுந்தர காண்டம் 926 - 950




பாடல்-926:

வெண்பற்களும்
கறுத்த உடல்களும்
விரியும்படித் திறந்த வாயும் கொண்ட அரக்கர்கள் இருவரும்
சூரியனை விழுங்கிட
கோபமுடன் நெருங்கும்
இராகு கேது போல இருந்தனர்
அனுமனோ சூரியன் என ஒளிர்ந்தான்.



பாடல்-927:

இரண்டு அரக்கர்கள்
யூபாட்சன் ! பிரகசன்!
கட்டப்பட்டார்கள் அனுமன் வாலினால்
தோள்களும் கால்களுமாக  பிறகு முறிக்கப்பட்டார்கள்
சூரியனை விட்டு
பாம்பு கேது நீங்கியது போல இறந்தார்கள்
அல்லி மலருக்குப் பகைவன் போன்ற சூரியனாக
எந்தத் தீங்கும் அடையாமல்
ஜொலித்தான் அனுமன்.

பாடல்-928:

ஐவருள் மீதம் பாசகர்ணன் மட்டுமே உள்ளான்
அவன் அனுமனை எதிர்க்க
அனுமன் பாய்ச்சல்
மலை மீது சிங்கம் போல அமைந்தது
ஒளி வீசும் வலிய தலை மீது குதித்து
பூமியில் தேரோடு புதைத்தான் இறந்தான் பாசகர்ணனும்!

பாடல்-929:

ஐவரும் விரும்பியது
வஞ்சனையும் களவுமே!
நஞ்சைக் காட்டிலும் கொடுமை மிகுந்து
அறமற்ற வழியில் சென்றனர்
அனுமன் ஒருவனால் மட்டுமே வெல்லப்பட்டனர்
கடுங்கோபம் மிக்க ஐவரும்
ஐந்து புலன்களுக்குச் சமம்
தனித்து நின்ற அனுமனோ
புலன்களை வென்ற அறிவின் வடிவம்!


பாடல்-930:

நெய் பூசிய வேல் ஏந்திய அரக்கர்களில்
எவரும் உயிருடன் இல்லை
அணி வகுப்பில் போர் முழக்கம் செய்த அனைவரும்
எமனையும் அஞ்ச வைக்கும் ஐவரும் இறந்து போனதை
நன்றாகப் பார்த்தனர்.

பாடல்-931:

காவலர்களுக்குப் புரிந்தது
“இந்தக் குரங்கு நம்மையும் இப்போதே கொன்றுவிடும்”
மனம் வருந்திக் கொண்டே
அரக்க மாதரை திட்டிக் கொண்டே இராவணனை அடைந்தனர்
கடுஞ்சொல்லின் சொந்தக்காரனும்
ஊழித்தீ போல ஏழு உலகமும் தீய்ந்திட பார்ப்பவனுமான
இராவணனிடம் சென்று
தோல்விச் செய்தியை சொல்லினர்.


பாடல்-932:

காவலர்கள் சொன்னது இது:-
“ஐயனே குரங்கின் தாக்கம் தாளாமல்
முதலில் சேனை அழிந்தது முதலில்
சேனைத் தலைவர்களும் பிறகு அழிந்தனர்
தம்முடன் வேறு யாரும் போருக்கு இல்லையே என
ஏக்கமுடன் சோம்பலுடன்
அங்கேயே இருக்கிறது அந்தக் குரங்கு”

( பஞ்ச சேனாபதிகள் வதைபடலம் முற்றியது )


அக்ககுமாரன் வதை படலம்

பாடல்-933:

அசோகவனம் காக்கும் பருவத் தேவர்கள்
கூறிய செய்தி இராவணன் கேட்டான்
சினமெனும் பெருகும் தீ கிளர்ந்தது
பெருமூச்சு விடும்போது
அவன் அணிந்த
வண்டுடன் கூடிய மாலைகள் தீய்ந்து விட்டன
கண்கள்
அரக்கு பூசியது போல் சிவந்தன
ஒருப்பட்டான் ! உருப்பட்டான்!
தானே போர் செல்ல முடிவெடுத்தான்
மைந்தன் அட்ச குமாரன் தடுத்தான்
“எனக்கு வாய்ப்பு தருக” என்றான்.

பாடல்-934:

என் தந்தையே
நீ போரிடச் செல்வது
முக்கண்ணன் சிவனின் ஊர்தியாம் காளையோடு அல்ல
மூன்று உலகும் அளந்த காலடி கொண்ட
திருமாலின் பறவையாம் கருடனோடு அல்ல
திசை யானைகளும் அல்ல
அற்பமான குரங்கு!
இக்கடன் தீர்க்கும் வாய்ப்பு தாராய்


பாடல்-935:

“எட்டுத்திசை வெற்றியாளரே
என் தந்தையே என்னை ஏவுவீர்
உன் கட்டளை நிறை செய்ய நான் உள்ளேன்
தேவர் தலைவன் இந்திரனை ஏவினீர்
அதனால் என் மனம் வாடிய குறை தீர
இன்று ஒரு வழி பிறந்துள்ளது
வலிமையிலாத இந்தக் குரங்கையாவது பிடிக்கிறேனே ! ”


பாடல்-936:

இமையாத முக்கண் ஈசன்
கொய்யும் தளிர் உண்ணும்
குரங்கின் உருவில் வந்திருந்தாலும் சரி
இலங்கைக்கு ஓர் சிறு பழி இழைத்தாலும்
எளிதில் பற்றி வருவேன்
ஓர்  நொடி போதும் ! உன் வசம் சேர்ப்பேன்

பாடல்-937:

துண்டம் செய்த தூணில் தோன்றிய நரசிங்கன் ஆனாலும்
வெள்ளி ஒளி வீசும் பல்லில்
பூமியை ஒட்டிக் கொள்ளும் அளவு வளர்ந்த வராகமே ஆனாலும்
போரிடும் ஆற்றலின்றி
அண்டம் கடந்து அகன்று ஓடும்!
நின் வசம் அக்குரங்கை நான் தரவில்லையெனில்
அப்போதே நீ என்னை தண்டிக்கலாம்

பாடல்-938:

இப்படியெல்லாம் சொல்லி
“விடை தருக:” என்று கெஞ்சினான் மகன்
வீரக்கழலும்
வயிரம் பாய்ந்த  தோளும் கொண்ட
மகனை மகிழ்ந்து நோக்கினான் இராவணன்
“விரையும் குதிரைகளின் தேரில் ஏறிச் செல்க” என்றான்
புனைந்த மலர் அணிந்து
அக்ககுமாரன் போருக்குப் போனான்.


பாடல்-939

இந்திரன் 
முன்பு போரில் பயன் செய்த
இருநூறு  குதிரைகள் பூட்டிய வலிமை மிகு தேரில் ஏறினான்
அரக்கர்கள் வாழ்த்தினர்
முரசுகள் மேகம் போல் முழங்கின
பிரளய கால கடல் போல்
சேனைகள் ஊற ஊறக் கிளம்பினான் அக்ககுமாரன்.

பாடல்-940:

அக்ககுமாரன் படையின்
யானைகள் எண்ணிக்கை அறிய வேண்டுமா?
கடலில் உள்ள சுறா மீன்களை எண்ண வேண்டும்!
வலிமையான தேர்கள் எண்ணிக்கை அறிய வேண்டுமா?
கடல் மீன்களின் எண்ணிக்கை வேண்டும்!
கடல் மணலை எண்ணி அறிந்தால் -  
காலாட்படை வீரர்கள் எண்ணிக்கை கூறலாம்
கடல் அலைகளை எண்ண முடிந்தால் -
தாவும் குதிரைகளின் எண்ணிக்கை அறியலாம்.


பாடல்-941:
ஊழிக்காலத் தீயின் நாக்குகளுக்குச் சமமான
பன்னிரு ஆயிரம் இளைஞர்கள்
அக்குமாரனை உயிராக நினைப்பவர்கள்
அரக்கர்களின் புதல்வர்கள் அவர்கள்
ஆதரவாக தேரில் ஏறி
அக்ககுமாரனை சூழ்ந்தனர்.

பாடல்-942:

இது மட்டுமா?
மந்திர ஆலோசனை குழுவினரின் புதல்வர்கள்
படைத்தலைவர் புதல்வர்கள்
அந்தரங்கமான தேவமகளிர் வழித்தோன்றல்கள்
இரண்டு  லட்சம் வீரர்கள் அவர்கள்
எந்திரத்தேர்களில் ஏறி சூழ்ந்தனர்
அக்ககுமாரனை ஆதரித்து!

பாடல்-943:

ஆயுதங்கள் வரிசையுடன்
அக்ககுமாரன் ஆதரவாளர்கள் உள்ளனர்
என்னென்ன ஆயுதங்கள்?
தோமரம் -உலக்கை - சூலம்
ஒளிவிடும் கோடாலி - வச்சிராயுதம்
அங்குசம் - வில் - கோல் - ஈட்டி
வாள் - எழு - மரத்தடி - பாசக்கயிறு
வளையம் - கூர்மையான தண்டு
வளைத்தடி -கைவேல் - கப்பணம்
சக்ராயுதம்.

பாடல்-944:

இத்தனை இத்தனை ஆயுதங்கள்
அடடா
நிலவும் வெயிலும் கலந்த ஒளி காட்டுகின்றது !
வானம் முழுதும்
சேனைகளின் புழுதி பறக்கின்றது!
புழுதி பூசிய இடங்களும்
ஒளியும் வெயிலுமான இடங்களும்
இப்போது  பூமியில்
அழியாத பொன்மயமான தேவலோகம் உருவாக்கியதே!

பாடல்-945:

இத்தனை  மிகப்பெரியப்படை புறப்பட
பின் தொடர்ந்தவைகளும் இருக்கின்றன
எவை எவை படையைத் தொடர்கின்றன?
காகங்கள்!
கழுகுகள்! பேய்கள்! எமன்!
பலகாலமாக உறுதியுடன் செய்த பாவங்கள்!
பாகு என இனிக்கும் சொற்களும் செந்நிற வாயும்
வாள் விழியும் பருத்த மூங்கில்  தோள்களும் கொண்ட
அரக்கர் இனத்து மயில் மங்கையர் மனங்கள்!
வீரர் மாலைகள் மொய்க்கும் வண்டுக்கூட்டங்கள்!

பாடல்-946:

மழைக்க்குரல் இடி போல ஒலிக்கும் சொற்களும்
சேனைகளுக்குள் எழும்புகின்றன
ஆனாலும் பிறருக்கு கேட்கவில்லை
ஏன்?
முன்பு நிகழ்ந்த போரில் இறந்த அரக்கர்களின்
மான்விழி அரக்கியர்
எழுப்பும் அழுகை ஒலியினால்!
பல் வகை இசைக்கருவிகளால்!

பாடல்-947:

சூரிய கிரணங்களின் ஒளி அடங்கியது - 
மாலைப்பொழுதால் அல்ல -
வீரர்கள் அணிகலன் ஒளியால்!
அணிகலன்கள் ஒளியோ
வீரர்களின் வேலொளியால் அடங்குகிறது!
வேல்களின் ஒளியோ
வீரர்கள் இளம்பிறை பல்வரிசை ஒளியால் வெல்லப்படுகிறது!
பலவகை ஒளிக்கூட்டத்தினால்
பிராணிகளுக்கு
இரவுமில்லாமல் பகலுமில்லாமல்
புதுவித உணர்வு!

பாடல்-948:

எவ்வளவு உயர்ந்த அடையாளங்கள்
எவ்வளவு வலிமைகள் இருப்பினும்
தீய சகுனங்கள் காட்டித் தந்துவிடும்
ஆம்
பிடரி கொண்ட தேர்க்குதிரைகள் தூங்கி வீழ்ந்தன
வீர அரக்கர்களின்
இடக்கண்கள் இடது தோள்கள் துடித்தன
பருத்த மேகங்களோ இரத்தத்துளி சொரிந்தன
காகங்கள் ஆரவாரிக்கின்றன.

பாடல்-949:

சேனைகளை அளவிடுவர் “வெள்ளம்” என்ற அலகினால்!
அக்ககுமாரனைச் சூழ்ந்ததோ சேனை வெள்ளமே!
வான தேவர்கள் அஞ்சினர் கலங்கினர்
கூற்றுவனோ புன்சிரிப்பு செய்கின்றான்
பேய்களோ தோள்தட்டி குதித்தன
காற்றின் சேய் அனுமன்
இத்தனையும் காண்கின்றான்

பாடல்-950:

உருவத்தில் தான்
அனுமன் குரங்கே தவிர
கோபத்தில் சிங்கம்!
சந்தேகம் கொள்கின்றான்
“போருக்கு வந்திருப்பது இந்திர ஜித்தா? இராவணனா? சரி!
மனதில் நினைத்தது நடக்கிறது..
மகிழ்ச்சி!”
சுந்தரத் தோள் கொண்ட
இராமன் வாழும் திசை நோக்கி வணங்கிக் கொண்டு
சொல்கின்றான் இதனை:-

--அனுமனோடு மீட்போம்.