Tuesday, 19 February 2013

பிப்ரவரி 14காதலும் 14வருடக் காதலும்!


**
காதல் என்ற பெயரில்
இருக்கலாம் முற்றுப்புள்ளி
காதலில் வேண்டாமே.

**
ஆதலினால் காதல் செய்வீர் என
பாரதி அடுக்கிய காரணம் தாண்டியும்
காதல் வேண்டும் மானுடர்க்கு.

**
இமயச்சிகரம் தொடுவதுதான் காதல் என
காதல் புரியாமல் இருந்துவிடாதீர்
காதல் -
“புரிய” வேண்டும் என்பதை
நோக்கமாகக் கொள்க.

**
அன்னப்பறவை
சக்கரவாகப் பறவை
எல்லாப் பறவையும்
நீ காணலாம் உன் மனைவியிடம்.

**
சுதந்திர தினத்திற்கு
நாடுகள் என்ற வேறுபாடும்
தேதி மாறுபாடும் உண்டு
காதல் தேதியற்றது
எக்கணமும் உயிரானது.



**
சகியே
சுதந்திர தினத்திற்குப்
பள்ளியில் மிட்டாய் தந்தனர்
காதலர் தினத்திற்கு
இதழ்களே இனிமையானவை.

**
மாறுபடுவதும்
கருத்து வேறுபடுவதும்
சகிப்புத்தன்மை
வளர்க்கிறது என்று
சொன்னால் நான்  சாதாரணன் ஆவேன் என்பதனால்
அது உன் தனித் தன்மை என்று
புரிந்து கொள்ளும் சக்தியைக் கேட்கின்றேன்
சொல்லடி சிவசக்தி!

**
நிறைய நண்பர்கள்
பக்திக்கான அடையாளமான
திருநீறும் குங்குமமும் கண்டு வியப்புறுகின்றனர்
இரகசிய விலகல் அடைகின்றனர்
சகியே - 
ஆண்டவனே சிவசத்தியாகும் போது
நானும் சிவசக்தி சின்னம் அணிவது
ஏற்புடையதே!

**
மின்னல் கண்டு
தாழம்பூ மலர்வது இயற்கை
என் காதல்
எப்போதுமே மின்னல் கூட்டமாய் ஒளி வீசுவதால்
சகியே
அது உனக்குச் சாதாரணமாய்ப் போனது- 
ஒரு பகல் பொழுது ஒளி போல!

**
வீடுகளுக்கு இலக்கம் உண்டு
வீதிகளுக்கு இலக்கம் உண்டு
அன்புக்கு இலக்கம்
உன் கண்களாய் அறிகிறேன்
யாரிடம் சொல்வேன் ஆதலால்
உன் கண்களிடமே சொல்லுகிறேன்.

**
இலக்குவன் தினமே
காதலர் தினமாக
அறிவிக்கப்பட வேண்டும்!
அண்ணன் வாழ்வுக்காக காடு சென்ற -
தம்பியின் தியாகத்தில்
அரும்பியது
இராமதேசத்தில் முதன்முதல் காதல் தினம்.

**
வாய் மூடி
மென்று தின்றால்
உமிழ் நீர் கலந்தால்
சர்க்கரை நோய் வருவதில்லை
ஆனால்
காதல் இனிப்பை
நெஞ்சில் மூடி மென்னறு உணர்ந்தால்
காதல்நோய் வளர்ந்துவிடுமே!



**
எத்தனையோ தேதிகள் இருக்க
14ம் தேதியில்
காதல் தினத்தை வைத்திட
காரணம் என்ன என யோசித்தால்
பதினான்கு ஆண்டுகள்
அண்ணல் இராமனுக்காக
தன் மனைவி ஊர்மிளையைப் பிரிந்த
இலக்குவனே
நினைவில் வருகிறான்.
பிரியாத காதலை விட
பிரிந்த காதலின் சக்தி
உலகை ஆள்கிறது
தமிழின் ஊட்ட சக்தியாக !

***

மண் சட்டியில்  பழைய சாதத்தில்
நீர் ஊற்றி
மறுநாள் காலை
அளவுடன் உப்பிட்டு
எலுமிச்சையும் பிழிந்து
தொட்டுக் கொள்ள  சின்ன வெங்காயமும்
பச்சை மிளகாயும் சேர்த்து
உண்ணும் நேரம் போல
இனிமையாய் இருந்தது காதல்
இன்று
பிரிட்ஜில் வைத்து உண்ணுகின்ற
சில்லிட்ட
மூன்றாம் நாள் குழம்பு போல்
ஆனது ஏனோ!
ஆக்கியது நீயோ நானோ!

**

இராமனுக்காக சீதை
14 வருடங்கள்
தானும் காட்டுக்குப் போனாள்
சீதையின் தியாகம்
போற்றுகிறோம்
ஊர்மிளையும் தான்
தியாகம் செய்தாள்
கணவன் இலக்குவனைப் பிரிந்து
14 வருடங்கள்

வீட்டுச் சிறையில் இருந்தாள்.
போற்றுவோம் ஊர்மிளை
காதலை!
இலக்குவன் காதலுக்கோ
இன்னமும் இமயம் புதிதாக வேண்டும்!

*****

சுற்றிலும் பெய்த மழை


             சிரமம் போயிருந்தேன். புதிதாக வெள்ளை நிற டெம்போ டிராவலர் நின்றது. ‘வரும் வரும்' என்று காத்திருந்த வண்டி அது. ஏன்?  இதற்கு முன்பு பழைய 407 வேன் மட்டுமே பயன் படுத்தி வந்தார் சுவாமிகள். ( இடுப்புக்கு கீழே சுவாமிகள் செயல்படா நிலை என்பதை கட்டுரை வாசிக்கும் அன்பர்கள் நினைவு கொள்க)அன்பர்கள்அதில் இரும்பு வெல்டு செய்யப்பட்டிருக்கும். சல்லடையில் மாவு குலுக்குவது போல கூட்டிக் கொண்டு போகும். இதனைப் பார்த்து சுவாமிகளின் அன்பர்கள் வாங்கித் தந்த வண்டி தான் புதிய டெம்போ டிராவலர். ரீ கண்டீஷன் செய்த வண்டி என்றாலும் சீராக பெயிண்ட் செய்து முறையாக உள்ளே வசதிகள் செய்யப்பட்ட  சவுகரியமான வண்டி. கோவை அன்பர்களும் மதுரை அன்பர்களும் செலவை ஏற்றுக் கொண்டனர்.
                  வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ‘போகம்பட்டி'யில் இந்த வண்டி வழங்கப்பட்டது என்றார். போகர் வாழ்ந்த ஊர் என்று சொன்னவர் சட்டென அவ்வூரில் தாய் தந்தையுடன் வாழ்ந்ததை நினைவு கொண்டார். “அப்பா முதலில் இறந்தார். கோமாவில் இருந்த அம்மாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ அம்மாவும் இறந்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் கோப்பெருந்தேவி இறந்தது போன்ற அதிர்ச்சி மரணம் என்றும் என் அம்மா மரணத்தை வர்ணிக்க முடியாது” என்று சொல்லித்ட்த் தொடர்ந்தார். “இரண்டு பேருக்கும் ஒரே குழி. சடங்கு செய்வதற்காக குளிப்பாட்டி முடித்ததும், குழியில் அந்த இரண்டு உடம்புகளையும் இறக்கும் போது அந்த இடத்தில் மட்டும் சுற்றிலும் மழை பெய்தது !” என்ற போது சுவாமியின் குரல் தாழ்ந்து விட்டது. ஆதி சங்கரரையும் பட்டினத்தாரையுமே விட்டுவிடாத  தாய்ப்பாசம் நமது சுவாமிகளையும் விடவில்லை என எண்ணிக்கொண்டேன்.

                                                                                       ( சந்திப்போம் 19.02.2013)

Tuesday, 5 February 2013

எப்போது ஆட்கொள்ளப்படுவோம்!

                  அன்றிலிருந்து இன்றுவரை விநாடிக்கு விநாடிக்கு அதிசயங்கள் நிரம்பியதுதான் வாழ்க்கை.உணர்ந்து பார்க்கத் தவறிவிடுகிறோம்.இழந்த பின்பு புரிகிறோம்.காரணம் நமது ஆணவம்.இராணுவத்தில் இறந்தவர்களைவிட, நாட்டில் ஆணவத்தால் இறப்போர் தொகை அதிகமாகிவருவது கண்கூடு.இச்செய்திகளை சிந்திப்பதற்க்கு காரணம் இருக்கிறது.”அப்பா வாசனை” என்று ஒரு சிறுகதை.அச்சிறுகதை அமுதசுரபியில் வெளிவந்து பரிசு பெற்றது(1998).அதனை அடியேன் எழுதியது சிதம்பரம் சிவகாமிஅம்மன் கோவில் வளாகத்தில். அச்சிறுகதை இறக்கப்போகும் தந்தை குறித்த மகனின் மனஓட்டமாக அமைந்திருக்கும் ஒரு பாடல் வரும்:-
”நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும்
பொல்லா நெஞ்சப் புலையேனேன் இவ்வுலகில்
சொல்லா மனநோயால் சோர்வுற்று அலையும் அல்லல்
எல்லாம் அறிவாய் என் எழுத்தறியும் பெருமானே”
       இப்பாடல் எதில் வருகின்றதென்று அப்போது தெரியாது. வள்ளல்பெருமான் குறித்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய ஆர்வமும் எழவில்லை இருந்ததில்லை. காலஓட்டத்தில் வடலூரில் குடியேறினோம்.               
                        மேட்டுக்குப்பம் வாழ் அன்னதான வள்ளல் கோவை சிவப்பிரகாச சுவாமிகளுடன் தொடர்பு ஏற்பட்டபோது “எழுத்தறியும் பெருமான் மாலை”என்று அன்புடன் அளித்த தொகுப்பில் வள்ளல் பெருமான் இயற்றிய  5 ஆம் பாடலாக மேற்கண்ட  பாடல் இருந்தது. சிலிர்ப்பாக இருந்தது. இது ஏன் அப்போதே எனக்குத் தெரியவில்லை? வள்ளல்பெருமான் உயிர் மீது படிந்திருக்கும் “நான்” என்ற ஆணவ இருளை அடக்கி மிகவும் அவசியப்பட்ட தருணத்தில் மட்டுமே தம்மை அறிவிக்கிறார் என்பதே இதன் பொருள்.
 அதுதான் ரகசியம்.அந்த மாலையின் 31 பாடல்களும் அபாரமான உள் தோண்டல் கொண்டவை.

           நம்மை நாமே விமர்ச்சிக்கவும் உணரவும் அழவும் தொழவும் செய்பவை. என்னுடைய முந்தை வினை தொலைத்து உன் கழலுக்கு ஆளாக்க மாட்டாயா ? என்று ஆரம்பிக்கிறது முதல் பாடல். கடைசி பாடலில் எனை ஆள்வது உன் கடனே என்று முடிக்கும்போது “எனை உடையாய்” என்பார் வள்ளல் பெருமான். நம்மையெல்லாம் உடமையாய் வைத்திருப்பவர் சிவபெருமானும் சக்தியும்.
           திருவொற்றியூர் சிவபெருமான் - அழகம்மை அலாதியான சரணம் புகுந்து தம்மை ஆண்டு கொள்ள இறைஞ்சுகின்ற வள்ளல்பெருமான் அடியேனுக்கு 2002ல் நிகழ்ந்த சிறுகதையின் வரிகளாக நிகழ்ந்து தடுத்தாண்டு கொண்டதாகவே தோன்றுகிறது. “எனக்கு உனக்கு முன் அறியேன் பின் அறியேன் எப்படியோ ஐயா உன் சித்தம் எழுத்தறியும் பெருமானே” வள்ளல்பெருமான் திருவடிகளே சரணம். அருட்பெரும் ஜோதி.அருட்பெரும் ஜோதி. தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

                *****