Sunday, 5 June 2022

 ஓம் சிவாயநம

ஆசியாவில் மிகப்பெரிய நடராஜர் கோவில் அமைந்த நெய்வேலி நகர்க்கூறு கோவிலில் 04.06.2022 மாலை ஏழு மணிக்கு சில்வர் ரோலர் கட்டிலில் கிடத்தப்பட்டு நான்குபேர் உருட்டு விசையும் தள்ளுவிசையும் படிக்கட்டுகளில் தூக்குவிசையும் கொடுக்க, தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் பேசினார்.

 முகம் கொள்ளா புன்னகை அமுதம் சிந்த, சிறு துளியும் உடல் நோவு காட்டாத பேரன்பு காட்டும் முகம் மின்ன, ஒரு மணி நேரம் பேசினார். 

பார்க்கப் பார்க்க நமக்குத் திகைப்பும் சிவபக்தியும் தரும் அடியார் ஒருவரைக் காண்கிறோம் என்பதே மறந்து, அப்பூதி அடிகள் பற்றி சர்க்கரை பொங்கல் போல நம் செவிகளில் பாய்ச்சுகிறார்.

சுவாமிகள் ஒரு அற்புதம். தமிழர்களுக்கு ஒரு வரம்.  

அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை முகம் பார்க்காமலே, செவியினால் அவர் மேன்மை கேள்விப்பட்டே தனது குருமூர்த்தமாக அமைத்துகொண்டவர் என்று எடுத்துக் கூறினார்.

 63 நாயன்மார்களில் இருவர் மட்டுமே துறவறம் பூண்டவர்கள். விறன்மிண்டர், திருநாவுக்ரசர் தவிர மற்ற 61 பேரும் இல்லறத்திலேயே இருந்து இறைவனைக் கண்டவர்கள். 

துறவறம் பூண்டால் இறைவனை நீங்கள் தேட வேண்டும். இல்லறத்தில் இருந்தால் இறைவன் உம்மை தேடி வருவான் என்று தருமம் புரிய வேண்டினார். “ஈ” என்றால் கொடுத்தல். ஈகை என்றால் கையினால் கொடுங்கள். வாயினால் அல்ல என்று புன்னகைத்தபடியே சொல்கிறார்.

ஈகை அதிகாரத்திற்கு அடுத்த அதிகாரம் புகழ் என்கிறார்.

கனலில் நின்று ஊசி முனையில் நின்று அர்ஜுனன் போல் தவம் புரிய வேண்டாம். கனவிலும் நனவிலும் உங்கள் குருநாதர் நாமம் சொல்லலாமே என்கிறார்.

மாதா பிதா இருந்தாலும்/இல்லாவிட்டாலும் குருநாதர் பாதம் பிடிப்போம். 

“தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே”  என்று திருமூலர் சொல்கிறார். திருவருள் இல்லாமல் ஏதும் நிகழ்வதில்லை என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்,


அதற்குள் மணி இரவு 08.30 ஆகிவிட்டதா

சற்று நேரத்தில் நெய்வேலி வானின் இரவு சிவமயமாகி சேக்கிழார் குருபூஜையும் நமிநந்தி அடிகளுக்கும்  கோவில் வளாக வலம் நிகழ்கிறது.

எல்லாம் செல்வமுத்து குமரன் செயல்! 




 



No comments:

Post a Comment