Thursday, 27 December 2012

வா

புரியவில்லை -            
ஆளுக்கு ஒரு செல்போன் இருந்தும் அன்பால்
இணைப்பில்லாமல் போனது உலகம்
தான் எனும் நினைப்புடன்
சதா
செருமிக்களைக்கும் உலகம்
பக்கத்து மனிதரை அக்கறையில்லாமல் பார்க்கிறது
அடுத்தவர் வலியை அறிய மறுக்கிறது
சந்தைப் பரபரப்பில் கரும் பொட்டு வைத்துச் சிரிக்கும் மழலைகூட
ரசிக்கும் மனமில்லாமல் யந்திரமாக
விலை பேசும் தந்திரமாக மாறி வருகிறது
மேலோட்டமாய் இன்னும் எத்தனை நாள் உன் நிழலில்
நீயே தங்கிட உன்னையே நீ துரத்தி ஓடுவதை நிறுத்துவாய்?
என்று கேட்பதைக்கூட காது கேளவில்லையே என்கிறது உலகம்
உண்மையான அன்பான வெளிப்படையான உரையாடல்
துவங்கும் வரை
உனக்கே தெரியும்
நிலாவைப் பற்றி
அரசியல் அற்றி
ரஜினி உடல்நிலை பற்றி
முல்லை பெரியாறு பங்கீடு பற்றி
பொத்தாம் பொதுவில் பேசுவோம் வா.

(இலக்கியச் சிறகு புத்தகம் எண் :18 வெளிவந்த கவிதை)

Wednesday, 26 December 2012

திருப்பாவையில் உத்தமன்

மார்கழி-3
பாடல்:3



“நீ என்ன பெரிய உத்தமனோ!” என்று கோபத்தில் நேர்மையை கேலி பேசுவார்கள். அப்படியே எரிகிற மாதிரி இருக்கும் அந்த வார்த்தை.  ஏன்?  நம்முடைய உள்மனசை அடுத்தவர்கள் எடை போடும் நேரம் அது. ஆக, உத்தமன் என்ற சொல் வலிமை மிக்கது. சரி. உத்தமன் எப்படி இருப்பான். நம்மைப் போன்றேதான் இருப்பான். என்ன என்ன குணங்கள் இருக்கும் என்று யோசித்தால், இவை இவை இருக்கும் என்கிறார்கள் பெரியவர்கள். உத்தமன் என்பவன் மிக நல்லவன். தவசீலன். ஏதேனும் ஒரு திருமுறையை தம் வாழ்வில் பின்பற்றி வாழ்பவன். ஆசனம், பிராணயாமம் போன்ற யோகப்பயிற்சி உள்ளவன். வழிபாடு செய்பவன். தியானம் உண்டு. தவம் உண்டு. இப்படி இருக்கின்றவனால் தன் சிக்கல் மட்டுமல்ல ,பிறரது சிக்கலுக்கும் தீர்வு ஏற்படும். அந்த ஆற்றல் உள்ளவன் அவன். சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள், பஞ்சபூதங்கள் இவனுடன் இணக்கமாக ஒரு நெட் ஒர்க்கில் தொடர்பு கொள்ளும் என்கிறார்கள்.
கெட்டவன்,சாதரணமானவன்,நல்லவன்,உத்தமன், துறவி, மகான், தீர்க்க தரிசி என்ற ஏழு நிலைகளில் உத்தமன் நிலை முக்கியம். அதனால்தான் “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்று ஆரம்பிக்கிறது மூன்றாம் திருப்பாடல். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்கிற வள்ளலார் வாக்கு.

பாடல் :3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலைப்பற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

Tuesday, 25 December 2012

திருப்பாவையில் உணவு



பாடல் - 2 :
மார்கழி இரண்டாம் நாள்

விரதம் வேறு. நோன்பு வேறு. கட்டுப்பாடு வேறு. பட்டினி வேறு. ஒவ்வொன்றும் ஒரு ஒரு சூழலைக் குறித்தது. உணவுக்கும் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை வேதங்கள் முழக்கி அறிவிக்கும். ஆண்டாள் கோதை நாச்சியார் , ஒரு தபாலுக்கு முகவரி எழுதுவது போல “வையத்து வாழ்வீர்காள்” என்று நம்மை நோக்கி எழுதியது இந்த இரண்டாம் பாடல். இதன் 4ஆம் வரியில் “நெய் உண்ணோம் பால்உண்ணோம்” என்கிறாள். நெய் உணவு கொழுப்பு தருவது. அதிகமான கொழுப்பு வகை உணவுகள் மந்தம் தருவன. உணவின் தன்மையில் பக்தியும் அடக்கம். இது  முக்கியமான உண்மை. “பாவை நோன்பு” என்பது பாவையாகிய பெண்ணுக்கு மட்டுமே என எண்ணக் கூடாது. பரமனைத் தவிர அனைத்து உயிர்களும் பெண்களே என்பது இங்கு கருதத்தக்கது.

பாடல்:2

வையகத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


Monday, 24 December 2012

நட்சத்திர சார்பு வேண்டுகோள்



மனதாரக் கோருகிறேன் நண்பர்களே
நிதமும் அண்ணாந்து இரவில்
விண்மீன் நட்சத்திரக் கூட்டம் பாருங்கள்
அது அழகியல் தொகுப்பு
ஆஹா ஆஹா மவுன சங்கீதம்
அந்த வானம் உமது சொந்தம்
வாடகை அது கேட்காது
வாட்டம் அது தராது
நீங்கள் உமது நிலை விட்டு உயரே உயர்வீர்கள்
லேசாக புன்சிரிப்பு உதிர்த்தால் போதும்
அவ்வளவு கோடி நட்சத்திரங்களும்
உம்முடன் புன்னகை செய்யும்
மொட்டை மாடி தேவையில்லை
கழுத்தும் கண்களும் இதயமும் போதும்
நீங்களும் ஒரு நட்சத்திர நபர்!

திருப்பாவை -1

முதல் நாள்
பாடல் - 1   
திருப்பாவையில் தூய்மை
நம்மைச் சுத்தம் செய்து கொள்ள அழைக்கிறது மார்கழி மாதம் என்பதை ஆண்டாள் போல் யாரும் நிச்சயமாகச் சொல்லவில்லை. அன்புத் தமிழில்பக்தியுடன் அழைக்கவுமில்லை. குளிரில் சுருள்வதும் போர்வையில் மடங்குவதும் நல்லது செய்யுமா? என்று ஒரு நொடி சிந்தித்தே ஆக வேண்டும். சுத்தமாக இருப்பதாக நினைப்போம். “எல்லாம் நம்மிடமே! நாமே எல்லாமும் அறிவோம்” என்கிற எண்னங்களை விரட்டுவதற்கு பயிற்சி மாதம் மார்கழி மாதமே என்பது கோதையின் அழகிய எண்ணமாகும். அதனால்தான் நீராட வாருங்கள் என்று அழைப்பது முதல் பாடலிலேயே நடக்கிறது.
கர்வம் என்கிற எண்ண அழுக்கு அகல, குளம் எங்கே கிடைக்கிறது என்று நேரே சொன்னால் யாரும் ஏற்கத் தயங்குவார்கள். ஆனால் நாராயணனை பாடிப் புகழ அருள் நிச்சயமாகும் என்று சொல்வது எத்தனை அழகிய பாதை! அந்த எண்ணமே “நமக்கே பறை தருவான்” என்பதாகும்.  நமக்கு + ஏ= நமக்கே என்பதில் உள்ள “நமக்கே”வை கவனியுங்கள். அச்சொல்லில் நமக்கு நிச்சயமாக அருள் கிடைக்கும் என்று உறுதியும் தொனிக்கிறது. அதே சொல்லை இன்னும் ஒரு முறை உச்சரித்தால் ,எத்தனை அழுக்காக இருந்தாலும், அம்மா தன் குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொள்வது போல் நம்மீது இரக்கப்பட்டு நமக்கே கூட அருள் செய்வான் என்கிற அர்த்தமும் வரும். என்னே நயம்!
பாடல் :
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

Saturday, 22 December 2012

வடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் -2

அறிஞர் ஜீன்பால் சார்த்தர் கூறுவார்: “இந்த உலகின் அழியாத பொருள் ஒன்றுடன் நான் தொடர்புடையவன் என்கிற எண்ணத்தை இழந்துவிட்டால், மனிதன் எல்லாவற்றையும் இழந்துவிடுவான்” ஆம். அழிவேயில்லாத ஆன்மாவுடன் -பிரம்மத்துடன் நமது விழிப்புணர்வு இணைக்கப்பட்டே உள்ளதை மறந்து தவிக்கிறோம். எல்லாம் நம்மால்தான் என்கிற எண்ணத்தை விட்டுவிட முடியாத பலவீனம் நம்மை மேலும் மேலும் பலவீனன் ஆக்குகிறது. ஆனால் தன்னை முழுமுதல் பொருளுடன் இணைக்கப்பட்ட உணர்வுடன் தியாக வாழ்வு வாழும் ஒருவரை சந்திக்கப்போகிறேன் என்பது அப்போது தெரியவில்லை.
கோவை சிவப்பிரகாச சுவாமிகளை நேரில் சந்திக்க முற்பட்டபோது அவரே முயற்சித்தாலும் எழ முடியாத உடல்பாங்குடன் கட்டிலில் குப்புறக்கவிழ்ந்த நிலையில் காணக்கிடைத்தார். ஆனால் அவர் புன்னகையில் உள்ள சத்தியத்தை எளிதாக உணர்ந்தேன். மீற முடியாத புன்னகை அது. வரவேற்றார். “வாங்க” என்ற கொங்கு பாஷையில்தான் எத்தனை அன்பு. ஒருவரை எந்த உணர்வுடன் தொடுகிறோம் என்பதற்கு குரலின் கனிவே சாட்சி. தன்னுடைய உடம்புக்கு நேர்ந்த விபத்து பற்றி துளியும் காட்டாத அன்பு பரந்த முகம் கோடியில் ஒருவருக்கே கிட்டும். அவர் முகத்தில் வரவேற்ற புன்சிரிப்பு வலியை மறைக்க போடும் திரைப்பூச்சாக இல்லை. “உட்காருங்க” என்றார். கட்டிலின் முன்புறம் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். “உங்கள் அன்பு ஓங்கி வளர்க” என்றபடி இந்த மாதம் அறநிலையத்துக்கு தாங்கள் வாங்கி வரும் அரிசியின் தரம் பற்றிப் புகழ்ந்தார். அறநிலையம் என்பது (130 நபருக்கு) அவர் அன்னதானமிட்டு தங்கும் இடவசதியுடன் (இலவசமாக) நடத்துகின்ற அனாதைஇல்லம் என்பது புரிந்தேன்.
வள்ளல்பெருமான் இராமலிங்க சுவாமிகள் சித்தி வளாகம் செல்கிற வழியில் எதிர்புற சந்தில்தான் சிவப்பிரகாச சாமிகள் இருக்கிறார். “இத்தனை அருகிலேயே இருக்கிறீர்களே” என்றேன். சுவாமிகள் புன்னகைத்து “குருடனுக்கு வெளிச்சம் பற்றி எதுவும் தெரியாது.ஆனால் அங்கிருந்து (சித்தி வளாகத்திலிருந்து) பார்க்கிற (அருட்பெரும் ஜோதி) ஆண்டவருக்கு இவன் குருடன் என்பது தெரியும் அல்லவா! அதுவே நல்ல வழிகாட்டும் தானே..” என்று புன்னகையுடன் சொன்னார். முத்துச்சிதறல் உள்ளே பரவியதாய் உணர்ந்தேன்.
                            எப்போது விபத்து? எதனால் சுவாமி இப்படி ஆனார்?  அடுத்த மாதம் அரிசி வாங்க உதவி கிட்டியதா?

                                        (தொடர்ந்து பேசுவோம்)

Monday, 17 December 2012

அம்மாவுக்கு ஒரு பரிசு






இந்த எண்ணம் அப்போதெல்லாம் எனக்குத் தோன்றவில்லை
பக்கவாட்டில் தலை ஓரமெல்லாம் நரைக்கும்
முப்பதாறு வயதில் தோன்றுகிறது -     
முதியோர் இல்லத்திலிருக்கும் என்னை விட இருமடங்கு வயதுடைய
தாயாருக்குப் பரிசொன்று தர வேண்டுமென!

கருவறையைத் தொட்டிலாக்கி
நெஞ்சுக்கு இதம் தந்தாளே
அதை நினைவூட்டும் நன்றியுடன்
அம்மாவுக்கு
இலவம் பஞ்சு மெத்தை செய்து
தொட்டில் ஒன்று போட்டால் என்ன!

பாலகனாயிருந்த பருவத்தில்
அம்மா அருகில் அணைத்துக் கொள்ள அவள் மேல்
தலையணை போல் கால் போட்டுத் தூங்குவேனே ..
அதை நினைவூட்டும் நன்றியுடன்
என் அன்புக் காற்றை நிரப்பி அருமையாய் ஒரு
தலையணை செய்து தந்தாலென்ன!

குமரனாய் வளர்ந்த பருவத்தில்
ஒரு நாக்கு போதாதென்று நான்
ஐம்பது ருசியுடன் பலதும் கேட்க
சமையலறையில் அடுப்புடன் போராடி
கை சுட்டுக் கொண்டு வடித்துப் போட்டாளே ..?
அதை நினைவூட்டும் நன்றியுடன்
ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில்
அம்மாவைப் பசியாற்றினால் என்ன?

குடும்பம் மூழ்கும் நேரம்
அப்பா நோயில் வாடும் நேரம்
பலர் வீட்டு வேலை செய்து
தன் மேனி தான் தேய
தனக்கு வைத்திருந்த
இருமல் மருந்து செலவுக் காசில்
நான் படிக்க புத்தகங்கள் வாங்கித் தந்தாளே
அதை நினைவூட்டும் நன்றியுடன்
அம்மாவைப் பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதியே
ஒரு நூல் வெளியிட்டால் என்ன!

வாலிபனாய் நிமிர்ந்த காலத்தில்
தான் தாலி அறுத்திருந்தாலும்
எனக்காகத் தப்பாமல் தக்க துணை தேடித் தந்து
தான் ஒதுங்கிக் கொண்டாளே ...
அதை நினைவூட்டும் நன்றியுடன்
அம்மாவை என் மனைவியுடன்
புகைப்படம் எடுத்துத் தந்தால் என்ன!

அம்மாவுக்கு எது செய்ய நினைத்தாலும்
எது வாங்க நினைத்தாலும்
எது அணிவித்துப் பார்த்தாலும்
அதிலொரு குறை
ஒரு கல் உப்பு உணவில் அதிகம் போல
நெஞ்சு உவர்த்து விடும் எனும் அச்சத்தால்
அம்மாவிடமே
கேட்டுச் செய்வோமே என்று
நேரில் காணச் சென்றேன் அம்மாவை.

சுமார் அறுபது எழுபது மூதாட்டிகளுடன்
சக்தைத் தோலாக
கிழட்டுப் பறவையாக
சுவரோடு சுவராக
தேகம் இடிந்து உட்கார்ந்திருந்தாள்
என் அம்மா...

அம்மாவின் கால் மண் என் நெற்றியில் ஒட்ட
அவள் காலில் வீழ்ந்து
உனக்கு என்ன வேண்டும் கேளம்மா என்றேன்
அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தாள்
பழுதுபட்ட தொலைநோக்கியில்
வானத்தைப் பார்ப்பது போல

பிறகு சொன்னாள்
“காதோரம் தலை ஓரமெல்லாம்
வெள்ளை வெள்ளையா
பூத்துப் போச்சே என் ராசவுக்கு
மை வாங்கிப் பூசிக்கடா..”

எந்த வயதிலும்
தனது மகன் நன்றாயிருக்க வேண்டும் என நினைக்கும்
அவள் மனதே பரிசாக
எப்போதும் எனக்குக் கிடைக்கிறது

அவளுக்கு நான் வாங்க நினைத்த பரிசுகளெல்லாம்
வெறும் தூசாய் போகிறது.

*****                             


அனைத்திந்திய தேசிய கவி சம்மேளனத்தில் 26.1.2003ல் அனைத்து இந்திய மொழிகளிலும் ஒலிபரப்பாகியது.

Sunday, 16 December 2012

வடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் - 1





“அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி”
இதுவே வள்ளலார் இராமலிங்க அடிகள் கண்ட மகா மந்திரம் ஆகும். இதனை ஓதி ஆத்ம அமைதி கண்டோர் ஆயிரம் ஆயிரம்.
வள்ளல் பெருமான் முத்தேக சித்தி பெற்ற சித்தி வளாகம் ( அவர் தன்னை அறையில் சாத்திக்கொண்டு ஒளியாகிக் கலந்த இடமே சித்தி வளாகம்). அது சித்தி வளர் அகம் எனக் கொண்டாடி அதன் அருகிலேயே 1989முதல் அனாதைள் ஆதரவு அற்றோருக்கு உணவும் புகலிடமும் அளித்து வருகின்ற கோவை சிவப்பிரகாச சுவாமிகள்  குறித்து உங்களுடன் பகிர்கிறேன். வடலூரிலேயே வாழ்ந்தும் அவரைப்பற்றி எனக்கு சுத்தமாகத் தெரியாது.பிறகு எப்படி தெரிந்தது?”அலுவலக சக அன்பர் செங்குட்டுவன் எனும் திராவிடர் கழக அன்பர் சொன்னார்:-“அவசியம் போய் அவரைப்பாருங்க.. உங்களுக்கும் அவருக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டால் நான் ஒரு மணிநேரமா உங்கள்ட்ட பேசினது எல்லாம் தூசாத் தெரியும்”
              ( நான் போய் சந்தித்தேனா? என்ன கண்டேன் அங்கே?)

Saturday, 15 December 2012

சிவப்புப்பொட்டல நாய்

ஓம்சிவாயநம. அன்பு மனமே வணக்கம். பிளாக் ஆரம்பித்து உடனே பாரதிகுமாரும் அவர் மனைவி நிலாமகளும் கடிதம் அனுப்பி வாழ்த்துகிறார்கள்.இது ஒரு நல்லப் பழக்கம். நல்லவற்றை வாழ்த்தும்போது நல்லது நடக்கும். அவர்களுக்கு நன்றி. நிற்க.
14.12.12ல் நேற்றே எழுத வேண்டிய ஒன்று இப்போது எழுதுகிறேன். மனசு தாங்கவில்லை. பீடிகை
அதிகம்தான். காரணம் உண்டு. சாலையில் நான் பார்த்தது ஒரு நாய். இதுவரையில் அப்படி பார்த்ததேயில்லை. உடம்பில் உள்ள அத்தனை பாகமும் வெளியே பிதுங்கி
விட்டிருக்க - கண்களில் ஒன்று மட்டும் தெறித்து வழிய - சிறுகுடல் நீளமாய் ரத்தம் ஊற்றி ஸ்பீடு பிரேக்கரில் கோடு போட்டுக்கிடந்தது. அது என்ன சார். இப்படி ஒரு மரணம்.
திக்கித்துப்போனேன். இபோது என்ன செய்யலாம். ஆளாளுக்கு யாரோ கார்காரன் அடிச்சுட்டான் என்ற பேச்சுதான் சொல்கிறர்கள். எல்லா  இடத்திலும் உதவி செய்வதற்காக பறக்கின்ற பாலிதீன் குப்பை பைகளில் இரண்டை மண்தட்டி எடுத்து உதறினேன். கைகளை நுழைத்துக்கொண்டு இறந்த நாயின் காலகளைப் ப்பிடித்துக்கொண்டு தூக்கி சாலை ஓரமுள்ள மண்பரப்பில் இழுத்துப்போட்டதும் காக்கைகள் வர ஆரம்பித்தன. காகத்தை விரட்டி ஒரு பிடி மண் போட்டு ஒரு நொடி பிரார்த்தனை செய்து வாட்ச் பார்க்க மணி எட்டு முப்பது என்றது.  அடுத்தமுறை நீங்கள் இப்படி ஒரு நாயை கவனிக்க நேர்ந்தால் நிச்சயம் பாலிதீன் பயும் நேரமும் கிடைக்க சிவசக்தியை வேண்டிக்கொள்கிறேன்.

Friday, 14 December 2012

இரண்டு வகை வெளவால்கள்





அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய
கருப்பு வெளவால் ஒன்று
அலுவலகம் புகுந்தது
மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது
பிறகு
இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது
“மேசை மேலே வா
எழும்பு
ஜன்னலைப் பார்
ஆகாயம் தெரியும்
வெளிச்சம் தேடு”
என்றெல்லாம் நினைக்கத் தான் முடிகிறது
சொல்ல முடிவதில்லை
மன வெளவாலிடம்.

*****


Thursday, 13 December 2012

அறியான்



எல்லாம் எல்லாம் என்னால் என்னால் என்றான்
எதற்கும் எதிலும் தானேதான் என்றான்
அடக்கிப்பார்ப்பதில் அளவிலாமல் போனான்
தானே தானே என்றவனை
தாக்கிபோட்டதுவோர் “தானே” புயல்
தேதி அறிந்தான் நேரம் அறிந்தான் இட எல்லை குறித்தான்
என்றாலும் தடுக்க இயலாமல் ஆனான்
இப்போது அடங்கிக் கிடப்பான் இவன்
மின்சாரமும் வீடும் நிவாரணமும் உப்பும் சோறும் உறவும்
மீண்டும் கிட்டியதும்
மீண்டும் “தானே” என்பான்
தன்னை மீறிய இயற்கை அறியான்!

நினைத்துப்பார்க்கிறேன்

பண்டிட் ரவிசங்கர் இறந்தார் எனும் செய்திக்குள் ஒரு வலி. மகா கலைஞர். லெஜண்ட் என்கிறார்கள்.நாடும் உலகும் போற்றிட வாழ்ந்தார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது வாழ்நாள் இறுதி வரையில் நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்தார் என்பது அற்புதமான செய்தி. ஏனெனில் ஒரு கலைஞனுக்கு ஒரு முகம் மட்டுமே இருப்பதில்லை என்பதை மறைக்கவே நாம் முயல்வோம். அவர் மகள் அனூஷ்கா டைம்ஸ் ஆப் இந்தியாவில் குறிக்கும்போது பாபி என்று நான் செல்லமாய் அழக்கும் என் அப்பா சீரியசாய் ஆஸ்பத்திரியி அட்மிட் ஆனபோது கூட தனது சிதார் மூலம்பூனை போல ஒரு ஒலி எழுப்பி சிரிக்கவைப்பார் என்கிறார். அது மட்டுமல்ல. குழந்தை போல அழுது  ( ஆடியன்ஸ் பார்க்காமல்) செய்து சந்தோஷப்படுவாராம். தன்னை ச்சுற்றிலும் சிரிப்பு பரவ - தனது புகழ்மலை - தன்னை அழுத்தாமல் காப்பாற்றிக்கொண்ட புத்திசாலி என்பது அந்த கட்டுரையில் நன்கு தெரிகிறது. "சிரித்து வாழ வேண்டும் .. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" என்ற வரிகள் எப்போதும் ஒளிரும் வரியாகவே இருக்கும். அண்ணல் காந்தி ஒரு முறை சொன்னார்:-" நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை யென்றால் நான் எப்போதோ இறந்து போயிருப்பேன்"

Wednesday, 12 December 2012

அவல் அளவு நிம்மதி



சொல்லிக்கொள்ளமுடியாத அளவுக்கு வேலைகளும் வரலாம். அடுத்தடுத்து ஏற்படும் செலவுகளில் கவலைகள் வரலாம். இதையெல்லாம் தீர்ப்பதற்கு வடலூர் சேஷாயி நகர் உறை ஆபத்சகாய ஈஸ்வரர் சிவன் கோவிலில் பேங்க் ஒன்றும் இல்லை. அம்பாள் கனகாம்பிகை கரத்தினில்  பணக்கட்டுகள் காய்க்கவில்லை. இருந்தாலும் அங்கு உட்கார்ந்து குடும்பத்தோடு மாலை சாற்றிக்கொண்டு சபரிமலைக்கு கிளம்புகிற ஐயப்ப சாமிகளுக்கு தாடியோடு தாடியாய் எவ்வளவோ பணத்தேவைகள், உடல் வலிகள், தூங்காமை  இருக்கும்.அனுசரனையாய் இருந்து வேன் ஏற்றி விட வந்திருக்கிற மனைவியிடம் பேசாத வார்த்தைகள் அதைவிட இருக்கும்.மகள்கள் இரட்டை சடை பின்னலோடு பொழுது போகாமல் அப்பாவின் செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். உயரத்திற்குப் பொருத்தமில்லாத பேண்ட் அணிந்த மீசை அரும்பாத பையன்கள் அம்மன் சன்னதி அருகே இருந்த வாழைப்பழங்களை நோக்குகிறார்கள். நாற்பது பேராவது இருப்பார்கள். கதம்பமான புளிசோறு வாசனை அடிக்க இரவு நேரக்குளிரின் அருகில் செல்லாமல் வேனுக்காக காத்துள்ள மக்களுக்கு எவ்வளவோ கவலைகள் எனினும் நடுவே சிரிக்கத்தான் செய்கிறார்கள். கோவில் கட்டுமான வேலைகள் முடிந்தும் முடியாமல் என்னாகுமோ ! அந்த தனி நபர் குருக்களும் கவலைப்படவே செய்கிறார். அம்மன் சந்நிதியில் இருந்து “எல்லாம் நல்லபடியா நடக்கும்”  என்று மற்ற மற்ற பக்தர்களுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை,வெற்றிலைப் பாக்கு மஞ்சள் பையில் போட்டு குருக்கள் தருகிறார். கோபுரத் தூண்களுக்கு சிமெண்ட் பூசிட மூட்டைகள் இறக்கியவன் உட்பட கடன்தான். அர்ச்சனைகள் நிற்கவில்லை. நம்பிக்கையும் நிற்கவில்லை. விநியோகம் செய்கிற தாம்பாளத்தில் உள்ள அவலில் இருக்கிற செர்ரி பழங்களை மட்டும் பொறுக்கி உண்கிற பையனை அவன் பாட்டி அதட்ட குருக்கள் சொல்கிறார்: “ எடுத்துக்கட்டும் எடுத்துக்கட்டும் நாளைக்கு வந்து கேட்டா என்னால கொடுக்கவா முடியும்!” அவரவரிடம் இருக்கிற அவல் அளவு நிம்மதியை ஒருவருக்கொருவர் அன்றே பரிமாறிக்கொள்ள சிவனும் அம்மையும் வாழும் கோயில்கள் இருக்கும்வரை பேங்க் பணக்கட்டுகளை விடவும் மதிப்பு இருக்கவே செய்யும்

குழப்பமே நீ சொல்

12.12.2012 அப்பாடா! ஒரு வழியாக மீண்டும் வலைப்பூவில் இணைகிறோம். (நன்றி பாரதிகுமார்)நலம்தானே? நலமே விழைகிறோம்.
சிந்தனை-1
அன்று முதல் இன்றுவரையில் ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் மோதுவது இருந்திருக்கும். இது மனிதருக்கு மனிதர் மாறலாம். ஆனால் ஒரே சிந்தனை இருவருக்கு ஒரே சமயம் ஏற்படுமா. நாம் பேச நினைப்பதையே எதிரில் வருபவர் பேசும்போது ஆச்சரியமாக வாய் பிளக்கலாம். ஆனால் பாருங்கள்...நாம் பேச நினைப்பதையே பாண்டிச்சேரி பண்பலை ரேடியோவும் பேசினால் ?! இது எனக்கு புதிராக உள்ளது. என்னுடைய நெஞ்சம் நினைப்பதை அந்த அறிவிப்பாளர் கிட்டத்தட்ட பேசுகிறார். ஒத்த சிந்தனைகளின் ஓட்டம் ஒரே புள்ளியில் வருமோ. அதன் அதிர்வு இதுவோ. உங்களில் யாருக்காவது இப்படி உண்டா. எழுதுங்களேன். (ஒரு வேளை நீங்கள் கேட்க நினைப்பதை நான் கேட்கின்றேனோ!)