Friday, 27 December 2013

சுந்தர காண்டம் 776 - 800



பாடல்-776:

மேகங்கள் இடி ஒலி கேட்கவில்லை
அலைகடல் ஒலி கேட்கவில்லை
அரக்கர்களின் முரசு ஒலியால்!
மலைகுகை போல வாய் திறந்தனர்
புகை கவிய பெருங்கோபம் வீசினர்
மூங்கில்காடு தீப்பற்றியது போல
ஆயுதம் எறியும் அரக்கர்கள்
அனுமனைச் சுற்றித் திரண்டார்கள்.

பாடல்-777:

அறமே வடிவாகிய அனுமன்
அறவன் எனப் பெயர் பெற்றவன்
“அசோகவனமே அழிந்தாலும்
தனக்கு உதவி புரிய ஒரு எரிந்த மரம் நிற்கிறது என
அதன் அருகில் சென்றான்
“இப்போது என் ஒரே துணை நீயல்லவா” என
அந்த மரத்தை விருப்பமுடன் கையில் எடுத்தான்
பாற்கடலைக் கடைகின்ற
மந்திரமலை போல நிமிர்ந்து நின்றான்!

பாடல்-778:

அனுமன் அந்த மரத்தினால்
அரக்கர்களை அடித்தபோது 
மலைகள் நெறிந்தன பொடியாயின
இடி கூட சிறிதாயிற்று
அரக்கர்களின் இரத்தம்
மலை அருவியில் கலந்து சிவப்பானது
அச்சமுற்ற அரக்கர்கள்
ஒருவர் கையை ஒருவர் பற்றி நின்றனர்
அவர்களது பெரும் தலைகள்
அனுமனால் அடிபட்டு தரையில் உருண்டன.

பாடல்-779:

அரக்கர்களில்
உயிர் பிழைத்த சிலர்
படைக்கருவிகள் எறிந்தனர்
மற்ற பலருக்கும் சேதாரமே உண்டானது
பறை போன்ற கண்கள் இழந்தனர்
தரையில் விழுந்தனர்
பிறைச்சந்திரன் போன்ற பற்கள் இழந்தனர்.
பிடரிகள் தலைகள் பிய்ந்தனர்
குற்றுயிர் சிதற மிதிபட்டனர்
குடலும் குருதியும் குழைவாகினர்
அரை பட்டனர்
முடை நாற்ற உடல்கள் அழிபட்டனர்.

பாடல்-780:
அனுமனின் தாக்குதலால் உண்டான
கனலும் தீப்பொறியும்
அரக்கர்களின் உடல் மயிரை தீய்த்தன
படைக்கருவிகள் உடைப்பட்டன
நீண்ட தோள்கள் உடைந்தன
வயிறுகள் கிழிபட்டன
ஆங்காங்கே
மலை போல விழுந்தார்கள்.

பாடல்-781:

அனுமனின் பலத்தின் முன்
பொருள்களை இருள் மூடுவது போல
உடல் கருத்த
அரக்கர்கள் அப்பளமாயினர்!
கதாயுதம் எடுபடவில்லை
அம்புகள் பயனில்லை
அனுமன் உதையால்
மார்பு நொறுங்கும் ஒலிகள் கேட்கின்றன
வீரமுழக்கமு போனது
விழிகளும் போனது
அச்சத்தில் இரத்தம் கக்குகின்றனர்
நிற்கவும் முடியாதவர்கள்
நீண்ட நேரம் நிலத்தில் புரள்கிறார்கள்
விதைகள் தெளிப்பது போல உயிர்களைத் தெளித்துவிட்டு
பிணங்களாக விழுகிறார்கள்.

பாடல்-782:
அனுமன்
அரக்கர்களின் உடல்களை
மலை மீது மோதிட வீசினான்
குறி தவறி வீசிய உடல்களில் சில
வானவெளி போயின
குபேரனின் அளகாபுரி போயின
கடலில் விழுந்தன
சிதைந்த உடல்கள்
பல பக்கங்களில் சென்றன
மேலே எறியப்பட்ட உடல்களோ
சுவர்க்க லோகம் போயின.

பாடல்-783:
இன்னும் சில அரக்கர்களை
கால்கள் தனியாக தோள்கள் தனியாக பிய்த்து வீசினான்
அந்த உடல்கள்
இறகுகள் அறுக்கப்பட்ட
மலைகளின் கூட்டமாகத் தெரிந்தன
கொடிய அரக்கர்களை
வாலில் பிணித்து
பம்பரமாய் சுற்றவும் செய்தான் அனுமன்.

பாடல்-784:
ஒடிந்தன அரக்கர்களின் வாள்கள்
ஒடிந்தன கட்டான விரல்கள்
ஒடிந்தன கோடாலிகள் சூலங்கள்
அறுபட்டன தோள்கள், கால்கள்
உடைந்தன பற்களின் கூட்டங்கள்
அறுபட்டன பெரிய கைகள்
முடிந்து போயின அரக்கர்கள் ஆயுளும்.

பாடல்-785:
அனுமன் தாக்குதலில்
வலிமையான தலைகள் சிதறின
ஒளி நிறை கவசங்கள் சிதறின
பசும்பொன் வீரக்கழல்கள் கதறின தெறித்தன
பொன் மாலைகள் தெறித்தன
அணிகலன்களும் மாலைகளும் தெறித்தன
வீரப்பட்டங்களும் விருதுகளும் தெறித்தன
குண்டலங்கள் தெறித்தன
கருவிழிகளும் தெறித்தன!

பாடல்-786:

அனுமனின் தாக்குதலில்
சிதறியவை பட்டியல் இன்னும் இருக்கிறது
பற்கூட்டங்கள் சிதறின
தோல்களும் எலும்புகளும் பொடிபட்டன
முகண்டி எனும் கருவிகள்
கப்பணங்கள் சிதறின
பிளக்கப்பட்ட உடல்களின் வழியே
சிந்திப் போயின உயிர்கள்.

பாடல்-787:
அனுமனுடைய அங்கங்கள்
ஒவ்வொன்றுமே
பலப்பல அரக்கர்களை வீழ்த்தின
கால்களால் பலர் இறந்தனர்
கைகளால் பலர்
அனல் விழிகளால் பலர்
அதிகரிக்கும் வலிமை தந்த திகைப்பினால் பலர்
குத்துகளால் பலர்
வாள்களினால் பலர்
அனுமன் எறிந்த மரங்களினால் பலர்.


பாடல்-788:

அனுமன் இழுத்து சிலர் இறந்தனர்
அனுமன் இடித்து சிலர் இறந்தனர்
அனுமன் வீசி எறிந்து சிலர்
அனுமன் பிடித்த போதே சிலர் இறந்தனர்
அனுமன் ஆரவாரிப்பு ஒலி கேட்டே சிலர் இறந்தனர்
அனுமனிடம் அடி வாங்கி சிலர் இறந்தனர்
அனுமனின் கோபப்பார்வையால் சிலர்
சிலர் இறந்ததைப் பார்த்தே
இறந்தனர் சிலர்.

பாடல்-789:

காற்றாடி எவ்விதமாக
திசையெல்லாம் திருப்பித் திருப்பி பறக்குமோ
அது போல் பறந்த அனுமன்
சிலரை ஓடிச்சென்று கொன்றான்
சிலரை
உடலோடு உடல் மோதி கொன்றான்
சிலரை
நெடிய மரத்தினால் அடித்துக் கொன்றான்
பிணங்களின் நடுவே ஒளிந்த சிலரைத்
தேடித் தேடிக் கொன்றான்.

பாடல்-790:
மலைக்குச்சமமான அனுமன்
மலையை விடவும் வலிவான அனுமன்
தன்னை முட்டியவர்களை முட்டிக் கொன்றான்
வரிசை வரிசையாக வந்தவர்களை
நெருங்கிச் சென்று கொன்றான்
பலரைக் கட்டிப் பிடித்தே கொன்றான்
தன்னைத்தட்டியவர்களை
தட்டியே கொன்றான்.



பாடல்-791:

தீப்பொறிகள் பறக்க
அரக்கர்கள் எறிந்த ஆயுதங்களை
பொடியாக்கும் அனுமனிடம்
எந்த அரக்கர் தப்ப இயலும்?
மயக்கமடைந்து உறங்கிய
அரக்கர்களையும் அனுமன் கொல்வான்
உணர்வு பெற்று எழுந்தாலும் கொல்வான்
வானில் பறந்தாலும் கொல்வான்
நிலத்தில் நின்றாலும் கொல்வான்

பாடல்-792:

ஒரு மனிதன்
இரத்தம் கக்குவது கண்டிருப்போம்
இலங்கை நகரமே
இரத்தம் கக்குவது போலுள்ளது
ஆம் -
இலங்கை நகரின் வாசல்கள் எங்கும்
அரக்க வீரர்களின் மூளைகளும் கொழுப்புகளும்
சேறும் வண்டலும் போல் உள்ளன
தூசி  நிறைந்த தெருக்களில்
ஆறு போல இரத்தம் காணப்படுகிறது.

பாடல்-793:
நினைக்கும் நேரமே
உலகில் மிகக்குறுகிய நேரம் என்பார்கள்
வேதம் நிகர்த்த அனுமனுக்கோ
அந்த அளவுக்கு கூட நேரம் தேவைப்படாமல்
அரக்கர்களை
வாலினாலும் கைகளாலும் கட்டி
மரத்தின் மீது எறிந்தான்.
ஆலையில் இடப்பட்ட கரும்பாகி
உடலில் பெருகியது குருதி.
ஒலிக்கும் கடலில் சென்று
குருதி கலக்கிறது ஒலிக்காமல்!

பாடல்-794:

தூக்கி எறியப்பட்ட அரக்கர்கள் உடலால்
கொடி பறக்கும் மாளிகைகள் இடிந்து விழுந்தன
பெரும் துதிக்கை யானைகள்
மடங்கி விழுந்து மரணமாயின
கோபுரங்கள் தகர்ந்தன
உயிர் துறந்தவைகளில்
பெண் யானைக்கூட்டமும் உண்டு
குதிரைகளும் உண்டு.

பாடல்-795:

அனுமன்  கொன்ற அரக்கர்களின் உடல்கள்
வீசப்படும் போது
சிலர்
தமது சொந்த மாடங்களையே உடைத்தனர்
தமது சொந்த மனைவியரையே அழித்தனர்
தமது சொந்த குழந்தைகளையே கொன்றனர்.

பாடல்-796:

கொல்லும் யானை ஒத்த அனுமன்
சில அரக்கியர்க்கு அருள் செய்து
“வீடு நோக்கிச் செல்க” என்பான்
சிலரை உயிரோடு அனுப்பினான்
ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு
வீடுகள் வரை போய்ச்சேருமாறு உதவினான்.

பாடல்-797:

கொல்லப்பட்ட அரக்கர்களை வீசி எறிந்தான்
அவை விழுகின்றன -
மரங்களில்!
வீட்டுத் திண்ணைகளில்!
நாற்சந்திகளில்!
நகரத்தின் நடு இடங்களில்!
வீதிகளில்!
தேசம் முழுதும் உடல்கள்!

பாடல்-798:

அரக்கர்கள் அனைவரையும்
கொல்லும் தொழிலை
நிறுத்தாமல் செய்தபடியே இருந்தான்
அதனால்
எமனின் தொழில் தடை பட்டது
அனுமன் பறித்து வீசிய உயிர்கள்
விண்மீன்களில் விழ
மேகங்களில் விழ
வானில் விழ
மற்ற மற்ற இடைவெளிகளில் எங்கும் விழுந்தன.

பாடல்-799:

அரக்கர்களின் சினமோ
இன்னும் இன்னும் அதிகமானது
போர் மோகம் அதிகமானது
வானம் முழுதும் சூழ்ந்தார்கள்
அனைத்தும் சூழ்ந்து
அரக்கர்கள் நிறமும் மேகமும் ஒன்றே ஆனது
போரிடும் அனுமனோ சூரியன் ஆனான்.

பாடல்-800:
அரக்கர்களுக்கும் கடலுக்கும்
இப்போது ஒற்றுமை வந்து விட்டது
ஆரவாரத்தால் !
கண்டவர் சோர்வடைய பருத்து தோன்றுவதால்!
வலிமை படைக்கலன்கள்
கடல் மீன்கள் போல ஒளிர்வதால்!
அனுமனோ
கடலையும் கடையும்
மந்தர மலை போலிருந்தான்!

--அனுமனோடு மீட்போம்.

Wednesday, 18 December 2013

சுந்தர காண்டம் 751 - 775



பாடல்-751:

“நாம் காவலுக்கு வைத்த அரக்கர்களின் வீரம் அழகு!
அடடா! எத்தனை அழகு! என்ன வியப்பு!
மலையை
சோலையை
ஒரு குரங்கினால் அழிக்கச் செய்து விட்டு
அதனை இங்கு வந்தும் சொல்றார்கள்
மூடர்களும்  இப்படி பேசமாட்டார்கள்!”
பரிகாசம் செய்தான் இராவணன்.

பாடல்-752:

“இராவணன் திருவடியில் விழுந்து
புகார் செய்த தேவர்கள்
“அரசனே
அந்தக் குரங்கின் உடலைத் தாங்கும்
பூமி வலிமை புகழ்ச்சிக்கு உரியதுதான் ஆனால்
அனுமனின் வலிமையோ
மும்மூர்த்திகளில் ஒருவன் எனப் புகழ்ந்தாலும் அடங்கிவிடாதது
ஐய! அந்தக் குரங்கை காணுங்கள்” என்றனர்.



பாடல்-753:

அப்போது அந்த இடத்தில்
அனுமன் வருகையால் பூமி பிளக்க ஆரம்பித்தது
கடல் நீர் புகுந்து பாய்ந்தது
எட்டுத் திசை யானைகளும் தேவர்களும்
நிலை கெட்டு ஓடினர்
கொவ்வை வாய் அரக்கியர்கள்
கருவும் சிதைந்து சோர்ந்தனர்
அண்டமே வெடிக்க அனுமன்
“ஆம்” என ஆர்த்தான் ஆர்ப்பரித்தான்.

பாடல்-754:

அனுமனின் ஒலி
பெரிய மலைக்குகை தாக்கும் இடியின் ஒலி
பிரளய கால கடல் பொங்கும் ஒலி
சிவதனுசை இராமன் ஒடித்த ஒலி
இத்தனை ஒலிகளும்
இராவணனின் பத்து தலைகளைக் குலுக்கின
இருபது செவிகளை இறுக்கின!

பாடல்-755:

இராவணனுக்கு அப்போது புல்லிய முறுவல் எனும்
புன் சிரிப்பு தோன்றியது பொறாமையும் தோன்றியது
எல்லையிலா ஆற்றல் கொண்ட
எண்ணற்ற பேரை ஏவினான்
அவர்கள் கிங்கரர்கள்
“ஆகாய வழி அடையுங்கள்
கொல்லாமல் கொண்டு வாருங்கள் அக்குரங்கை” என்றான்.

பாடல்-756:

இராவணன் ஆணைக்கு
நிலவுலகம் அழிக்கும் பிரளயகாலக்கடல் போல
கிங்கரர்கள் கிளம்பினார்
சூலம் -வாள் - உலக்கை -வேல் - தோமரம் - தண்டு
பிண்டி பாலம் எனும் வகை வகையான ஆயுதங்களுடன்!

பாடல்-757:

அந்த அரக்கர்கள் அசாதாரணமானவர்கள்
போர் என்றால் அவர்களுக்கு கற்கண்டு
போர் என்றால் மதுவின் போதை
அந்த இயல்பை எப்படிக் கூறுவதெனில்
அவர்களது போர் வெறி
பரந்த காட்டை விடப் பெரிது
உடலின் தோற்றமோ மலையினும் பெரிது.

பாடல்-758:

தேவர்களும் அசுரர்களுமே எமக்குஅற்பம் எனில்
இச்சிறு குரங்கா எமக்கு ஈடு?
பூச்சிகளும் பழங்களும்  தின்று வாழும் குரங்கோடு போரா?
என்று பல நாட்கள் வருந்தும் நெஞ்சம் உடையவர்கள்.

பாடல்-759:

அந்த அரக்கர்கள் இடையில் வாள்
உடம்பில் கவசம்
காலில் வீரக்கழல்
திசை முட்டும் தோள்கள்
ஆகாயம் தொடும் தலைகள்
மலைகளை இடறும் கால்கள்
அவர்கள் பேச்சோ
ஓங்கி அடிக்கும் பேரிகை ! மேகத்தின் இடி!

பாடல்-760:

தேவர்கள் எறிந்த ஆயுத காயங்களும்
அசுரர்கள் தந்த ஆயுதத்தழும்புகளும்
அந்த அரக்கர்களின் அணிகலன்கள் ஆகும்
அரக்கர்கள் வாய் எனும் குகையால் 
வாரி விழுங்க
ஆண் யானையும் பெண் யானையும் ஏற்றவை
பிறைச்சந்திரன் போல வளைந்த பற்கள் கொண்டவர்கள்
கோபத்தால் கொதிக்கும் கண்கள் கொண்டவர்கள்

பாடல்-761:
என்ன ஆயுதமில்லை அவர்களிடம்! அடடா!
சக்கராயுதங்கள்
உலக்கைகள்
தண்டுகள்
கூரிய வாள்கள்
இரும்பு  வளை போட்ட தடிகள்
சங்க வாத்தியங்கள்
சம்மட்டிகள்
முசுண்டி
எறி ஈட்டிகள்
வேல்கள் சூலங்கள்
முக்கோல்கள்
பொன்பிடி இட்ட வச்சிராயுதங்கள்
பகைவரை இழுத்திட கயிறுகள் கோடாலிகள்
வில் அம்புகள் கூர் நுனிதடிகள்

பாடல்-762:

அந்த அரக்கர்கள்
உடல் வலிமை மட்டுமே பெற்றவர்கள் அல்ல
தெய்வத்தன்மை மிகு அணிகலன்கள் அணிந்தவர்கள்
ஆயுதமும் கோபமும் தமது விழிகள் ஆக்கி நின்றவர்கள்
அவர்களை நோக்கி
“ஏன் நெருக்கித் தள்ளுகிறீர்கள்” என்றால்
“நீங்கள் விரைவாக ஏன் செல்லவில்லை” என்பார்கள்
தமக்கு முன்னே நிற்பவரையோ
தமது வெப்ப மூச்சினால் தீய்ந்து போகச் செய்வார்கள்.

பாடல்-763:

அவர்கள் வாய்
சினத்தால் மடிந்தே இருக்கும்
அவர்கள் முகத்தில் ஆயுதம் பிரகாசிக்கும் ஒளி
அவர்கள் கரங்களில் வில்
விரைந்து நடக்கும் கால்கள்
பிரளய கால மேகம்
மழை பொழியக் காத்திருக்கும் கருமேகம் போன்றது
அவர்களது உடம்பு.

பாடல்-764:

அந்த அரக்கர்களுக்கு
கொதிக்கும் மனது உருவாயிற்று
ஒருவரை ஒருவர் முந்தி நடந்தனர்
காரணம் -
“அசோகவனத்தையும் செய்குன்றத்தையும்
ஒரே குரங்கு அழித்ததாம்” என்பதால்!
அவர்கள் செருக்கு காயமானது
இதை விட அவமானமில்லை என்பதால்.

பாடல்-765:

முரசுகள் அடிக்கும் ஒலி
வில்லில் நாண்பூட்டும் ஒலி
வீரக்கழலில் பிறந்த ஒலி
சங்கு ஒலி
அனைத்து ஒலிகளும் ஒருமித்து எழுந்தன
அந்த ஒலி
ஊழிக்கால மழை ஒலியை அடக்கிற்று
ஊழிக்கடலின் இரைச்சலையும் அடக்கிற்று

பாடல்-766:

அந்த அரக்கர்களில் சிலருக்கு
தெருவில் நடக்க இடம் இல்லை
அதனால் வானம் வழி சென்றனர்
தம் புருவங்களையும் வில்லையும் வளைத்து
கோபக்கனலுடன் புகையுடன் பெருமூச்சு விட்டனர்
வரிசையாகச் செல்லும் சிலர் முந்தியதால்
முறை தவறியதால்
கோபம் கொண்டனர்
“இலங்கை பரந்துபட்டதாக இல்லை” என்று விழித்தனர்.

பாடல்-767:

அரக்கர்கள் பல வகைப்பட்டனர்
வாள்களை அசைப்பவர்கள்
கோபத்தால் வாயை மடிக்கிறவர்கள்
வழியில் காணப்படும் கற்களைத் தூளாக்குபவர்கள்
எடுத்த காலை கீழே வைக்க தரை இல்லாமல்
செருக்கு கொண்டு நெருக்குபவர்கள்
தமது வலிமை மிகு பற்கள் கடித்து
நெருப்பு போல கொதிக்கின்றவர்கள்.

பாடல்-768:

அந்த அரக்கர்கள் அனைவரும்
மலை போல் நின்றனர்
பலவகைக் கருவிப்பயிற்சி பெற்றவர்கள்
பெற்ற வரத்தால் ச்¢றப்பு பெற்றவர்கள்
இடிப்பேரொலி எழுப்பும் குணம் பொருந்தியவர்கள்
தேவர்களை வென்றவர்கள்
அசுரர் உயிர் கொன்று தின்றவர்கள்
அனைவராலும் அசோகவனத்தின்
அகன்ற பூமி நெளிய ஆரம்பித்தது!

பாடல்-769:

மின்னல் ஒளியும்
வீரக்கழலும் கொண்ட நாகர்களை மோதி
புறமுதுகு காட்டி ஓடச் செய்து சிரித்தவர்கள் அரக்கர்கள்
குபேரனுடைய புகழே அழியும்படி
அளகாபுரியை அழித்து வென்றனர்
“நம்மோடு போரிட எவரேனும் கிடைப்பார்களா”
என்று தேடுகிறவர்கள்.

பாடல்-770:

அரக்கர்களால்
ஆகாத காரியங்கள் எவையுமில்லை
மலைகளை இடற வேண்டுமா?
அலைகடலை முழுதும் குடிக்க வேண்டுமா?
சூரியனை மண்ணில் விழச் செய்ய வேண்டுமா?
வான் மேகங்களைப் பிழிய வேண்டுமா?
பாம்புகள் தலைவன் ஆதிசேஷனை
தரையோடு தரையாக அரைக்க வேண்டுமா?
நிலத்தைப் பெயர்த்து எடுக்க வேண்டுமா?
இவை எல்லாமும் செய்ய
ஒரே ஒரு அரக்கரே போதும்!

பாடல்-771:

அந்த அரக்கர்களின் நடையில்
புழுதிப்படலம் கிளம்பிச் சென்று
உயர்ந்து உயர்ந்து சென்றது
தேவர்களின் விழிகளில் படிந்தது
அனுமனை நோக்கி அரக்கர்கள் நடை -
சிங்கங்களின் தொகுதி போல
கொல்புலிக்கூட்டங்கள் போல
வான் தொடும் பேய்கள் வரிசை போல
கடல் கடைந்த போது உண்டான நஞ்சு போல
மேகங்கள் மலை நோக்கி வருவது போல இருக்கின்றது

பாடல்-772:
அசோகவனத்தை சூழ்ந்த
அரக்கர் கண்களில் தீப்பொறி வந்தது
மூச்சுக் காற்றில் புகை வந்தது
எல்லாத் திசைகளிலும் இடி போல முழங்கினர்
அவர்கள் நடையில்
கொடிய பிரளயக்காலக் காற்று வீசியது
இடிகளின் கூட்டம் கூட பயந்து விட்டது
அதனால் பூமிக்கே வராமல் காற்று அஞ்சியது


பாடல்-773:

அரக்கர்கள் ஊதும் கொம்பின் ஒலி
கார்கால மேகம் போல இடிக்கும் முரசு ஒலி
மண்ணுலக உயிர்கள் அஞ்சும் போர் ஒலி
ஒலிகளின் கூட்டு சக்தி
அனுமனை மிரட்டி மோதிட வந்தன
அனுமனோ
விண்ணை முட்டும் கயிலை மலை போல நிற்கிறான்
வெயில் தரும் கதிரவனும் அஞ்சி விலகினான்.

பாடல்-774:

எந்தச் செயல் பொருத்தமானது?  எதைச் செய்வது உயர்வு ?
எதைச் செய்வது வெற்றி ?
எவரினும் அதிகம் உயர்ந்தோன் என
கம்பன் புகழும் அனுமன்
“பக்குவமான இயல்புடைய அறிவு உண்டாவதே
வாழ்வின் வெற்றி” என அறிந்தவன்
அசோக வன அழிவினால்
அரக்க வீரர்கள் தோற்றோடுகின்ற
வலிய போர்ச்செயலும் இனிதே நிகழ இருக்கிறது”
அனுமனின் உள் நெஞ்சு குதூகலித்தது.

பாடல்-775:

“இவன் தான்! இவன் தான்! இவன்தான்!” என
அனுமனைச் சுற்றி நின்றனர் அரக்கர்கள்
பிடிப்பதே நமது பணி என முற்பட்டு எதிர்த்தனர்
காற்று போல போரிட்டனர்
அரக்கர்கள் உடல் கருப்பின் நிறம்
பகலில் ஒரு இரவு எனத் தெரிகின்றது
அரக்கர்களின் படை கருவியோ மிக வலிது
மண்ணும் , மலையும், வானமும் , ஒப்பற்ற இலங்கையும்
ஒரு சேர அதிரும்படி
தப்பாமல் நஞ்சு போல் கொல்கின்ற படைக்கருவிகளை
அனுமன் மீது செலுத்துகிறார்கள்.

--அனுமனோடு மீட்போம்.

சுந்தர காண்டம் 726-750



பாடல்-726

அனுமன் பல வகை மரங்கள் வீசினான்
அதனால்
பெரும் தாமரைத் தடாகம்
சிவந்த சந்தனக் கட்டை அரைத்துக்
கரைத்தது போல் ஆனது
அசோக வனத்து மரங்கள் விழுந்து விழுந்து
உப்பு நீர்க் கடல் இப்போது
சாமரம் எனும் இசை பாடும்
வண்டுகளுடன் மலர்க்கடலாக மாறியது

பாடல்-727:

ஒவ்வொரு திசையிலும்
அனுமன் வீசிய நொச்சி மரங்கள்
கடலின் நீண்ட அலைகளில் மிதக்கின்றன
அரக்கர் மாளிகை மேல்
சந்தன மரங்கள் விழுந்து
வாசல் கதவுகள் முறிந்து தூளாயின.

பாடல்-728:

நந்தவனத்தில் இருந்த பூக்களை விட
ஆகாய நட்சத்திரங்கள் போல
அனுமன் வீசிய மரங்களின் பூக்கள் அதிகம்
அனுமன் வீசிய புளிய மரங்கள்
எங்கே சென்று விழுவது என
கடலில் சிதறி விழ
கடல் சங்குகள் அதிர்ச்சியுற்றன அதனால்
தமது முத்துக்கள் சிந்திட நிலை கெட்டு ஓடின.

பாடல்-729:

அனுமன் வீசிய மரங்கள் எளிதானவை அல்ல
பல வகை பொன்னாலும் மணியாலும் ஆனவை
அவை
இரவில் ஒளிரும் இந்திரன் வில் போலத் தெரிந்தன
:”இப்போதே அனுமன்
அனைத்து அரக்கரையும் கொல்வான்” எனும் குறிப்புடன்!

பாடல்-730:

அனுமன் எறிந்த அசோக வனத்து மரங்களால்
அழிந்த இடங்கள் அதிகம்
யானை கட்டும் இடங்கள்
ஆடல் அரங்குகள்
கள் குடிக்கும் இடங்கள்
குதிரைகள் கட்டும் இடங்கள்
இவை மட்டுமா?
அழகு செய்த தேர்களும் தான்,.

பாடல்-731:
அசோக வன மரங்களை மட்டுமா
பிடுங்கி வீசினான் அனுமன்?
பொன்னால் செய்த கொடிகளை
அறுத்து எத்திசையிலும் எறியும் போது
சூரிய கிரணக் கதிர்கள் அறுந்து விழுந்து
மேகம் படிந்த உடலில் புகுவது போல் உள்ளன.

பாடல்-732:
பேரொளி வீசும் பொன்மயமான மதில்கள் -
அனுமன் வீசும் மரங்களையும்
பெரு குன்றுகளையும்
தாங்க முடியாமல் நெரிகின்றது
மாளிகைகள் சாம்பலாயின
இலங்கையின் எல்லா இடமும் அழிந்தன.

பாடல்-733:

விண்மீன்களின் தலைவன் சந்திரன் வியந்தான்
ஆனால் மறைந்து ஒளிகிறான்
ஏன்
இராவணன் கண்டால் கேள்வி கேட்பான்
“என் மீது பகை கொண்ட குரங்கு
சோலையை அழிக்கும்போது
வேடிக்கை பார்த்தாயா ! ” என்று.

பாடல்-734:

குற்றமற்ற மணிகளால் ஆன பொன்மரங்கள்
மன்மதன் இருப்பிடம் போன்ற மரங்கள்
இரண்டு  கைகளாலும் அனுமன் பறித்து வீசிய போது
பேரொளி வீசிட
உலகமே ஒளிமயம் ஆனது.

பாடல்-735:

விலங்குகள் யாவும்
அச்சத்தால் கலங்கின கத்தின
கண்கள் புண்ணாகிப் பொங்கின
கடலில் பறவைகள் விழுந்தன
விழாதவையோ பறக்க முயன்றன
சில
சிறிது நேரம் சிறிது தூரம் சில பறந்தன
சிறகுகளை உதறின
சிறகுகள் ஒடுங்கி இறந்தன.

பாடல்-736:

அனுமனின் மலை போன்ற தோள்களும்
சூரியன் போல் பரந்த மார்பும்
கோபமாய் தீண்டியபோதே
மலர்களும் இதழ்களும் கூட்டுப் பறவைகளும்
தெய்வத்தன்மை மிகு மரங்களும்
சுவர்க்கம் புகுகின்றது என்றால் -
அருள் புரிந்தால்
வரும் பலனை நம்மால் கூறமுடியுமோ!

பாடல்-737:

அசோக வனத்தில் அனைத்தும் அழிந்தன
பொய்யையே தமது ஒழுக்கமாகக் கொண்ட
அரக்கர்கள் பாதுகாக்கும் சோலையில் அனைத்தும் அழிந்தன
ஆனால்
அதிசயிக்கத்தக்க மென்மையுடன்
சோலையை விட மென்மையான உள்ளமுடைய
அன்னம் போன்ற சீதை வாழும்  மரம் மட்டும் வாழ்ந்தது
மூன்று வகையான உலகங்களும் அழியும்
ஆனால் ஊழியின் இறுதியில்
திருமால் வீற்றிருக்கும் இலை உடைய ஆலமரம் மட்டும்
அழியாமல் வாழ்வதுபோல!

பாடல்-738:
எல்லா அணிகலன்களையும் வீசி எறிந்த சீதை
மிகுந்த ஒளியுடைய சூளாமணி மட்டும்  வைத்திருந்து
அதையும் இராமனுக்கென
அனுமனிடம் தந்து விட்டாள்
அலைகடல் தனக்குள் யோசித்தது
அழகிய சிகாமணி இவளுக்கு
இன்னொரு சூளாமணி இதோ என
சூரியன் எடுத்துத் தந்தது!

பாடல்-739:

சீதையும் மரமும் தவிர
அசோகவனம் முழுதும் அழித்த அனுமன்
தன்னந்தனியாக நிற்கிறான்
பதினான்கு உலகம் அளந்த திருமால் போல!
பாற்கடலைக் கடைந்திட நிற்கும்
மந்தாரமலை போல!
ஊழி இறுதியில் உலகமெல்லாம் அழித்து நிற்கும்
உருத்திர மூர்த்திப் போல!

பாடல்-740:

இத்தனை அழிவுகள் நிகழ்ந்த பின்
உறக்கம் கலைந்த  அரக்கியர்கள்
மனம் கொதித்தனர்
பொன் மலைபோல் நிற்கும்
புனித அனுமனை உற்றுப் பார்த்தார்கள்
“அம்மா! யார் இவன்” என்று அச்சம் அடைந்து
பிறகு சீதை நோக்கி
“நங்கையே இவனை அறிவாயா” என்றனர்.

பாடல்-741:

அரக்கிகள் வினவியதும் அற்புதமான பதில் தந்தாள் சீதை
நல்லவர் உலகிற்கு
ஆறுதல் மருந்து போல ஒரு சொல்!
“தீயவை என்பதை தீயவர்கள் தான் உணர்கிறார்கள்
நல்லவர்களோ எல்லாமும் நம்புவார்கள்”
மாரீசன் எனும் மாயமான் வந்த போது
“இது தீயவர் மாயம்” என இலக்குவன் உணர்த்தியும்
உண்மை என மயங்கியவள் நான்.

பாடல்-742:

சீதை கூறியதும்
அரக்கிமார்கள் வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடினர்
அப்போது வானமும் கடல்களும் குலைந்தன
அருகில் ஒரு மிச்சமாக நின்றது ஒரு மலை!
“நீக்குவேன் இதனை” என அனுமன் தனது
மலை போன்ற கைகள் நீட்டினான்.

பாடல்-743:

அந்த மலை சாதாரண மலை அல்ல
வானவெளி அடைக்கும் மலை
நாணத்தால்
வானத்தின் மனம் புண் ஆக்கும் மலை
கண்ணால் உயரம் காணமுடியா மலை
மேகம் மூட முடியா மலை
வலிய காற்று அடையாத மலை
இரவும் மூட முடியாத மலை
அட! இந்த உலகமே அதன் சுமைதாங்க முடியாத மலை.

பாடல்-744:

சந்திரன்
பல நாட்கள் பொழிந்து
பெருகி வரும் புதிய பால் ஒளி மட்டுமல்ல
அதன் கறை இருளையும்
வாரி நக்கும் பொன் குன்று அது!
இராவணன் கட்டளையால்
பிரம்மன் தனித்து உருவாக்கியது,

பாடல்-745:

அந்தக் குன்றின் ஒளி
சிவப்பு ஒளியைத் தனது சீதனமாகக் கொண்ட
சூரியனுக்கே அணிகலன் என ஒளிரும் ஒளி கொண்டது
அந்த மலையில்
தூண்  போல நிமிர்ந்த இடங்களில் இரத்தினங்கள்!
மலையின்  சுற்றுப்புறங்களில்
தங்கமும் முத்துக்களும் பதித்த ஒளி!
இவ்வளவு சிறப்பு பெற்ற மலை
எம்மால் புகழக்கூடிய பொதுவான தன்மை பெற்றதல்ல!

பாடல்-746:

அழகிய வெள்ளி மலையான கயிலையை
கொடுந்தொழில் இராவணன்
வேரோடு பறித்ததைக்
கேள்விப்பட்டுள்ளான் அனுமன்
அச்செயல் சாதாரணம் என நினைக்கும் அளவு
பொன்மலையை மண்ணிலிருந்து எடுத்து
இலங்கை மீது வீசினான்!
மலையினால் மோதப்பட்ட
வானுயர் மாளிகைகள் பொடியாயின.

பாடல்-747:

அப்போது தோன்றிய
நெருப்புப் பொறிகள்  தெறித்தன
எப்பக்கமும் சுட்டன
அரக்கர்கள் அஞ்சி அழிந்தனர்
பிறருக்குத் தீமை செய்பவர்கள்
அந்தத் தீமையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு
இந்த அழிவே சாட்சி.

பாடல்-748:

இராவணனிடம்
அலறி அடைக்கலம் புகுந்தவர்கள் பட்டியல் இதுவே:
அசோகவனம் காக்கின்ற
ஆறு பருவத்துக்கும் உரிய தேவர்கள்;
அச்ச நெருப்பு மூண்டவர்கள்;
தம் உடையிலேயே சிறுநீர் பீறிட்டவர்கள்
மரங்களில் கிளைகள் கிழித்து குருதி வழிபவர்கள்
கால்கள் பின்னிட ஒரே காலுடன் நடப்பவர்கள்
திறந்த வாயுடன் ஊளையிடுபவர்கள்.

பாடல்-749:

சிங்கம் போல கர்ஜிக்கும் கோபமுடைய
இராவணன் திருவடி சேர்ந்தார்கள்
“திசை யானைகள் எல்லை வரை
காவல் காக்கும் மன்னனே
இப்போது
அசோகவனம் கூட
காவல்  செய்ய முடியாமல் ஆனோம்
மலைத் தோள் உடைய ஒரு குரங்கு
மரங்களை முறிக்கிறது
காவல் மிகுந்த சோலை இப்போது
தீப்பட்ட ஆடை!” என்று கதறினார்கள்.

பாடல்-750:
“இராவண மன்னா!
அக்குரங்கு செய்த அழிவு
சொல்ல முடியாத அளவு மன்னா!
தன் கால்களாலும் கைகளாலும்
அசோக வனத்தை
புல்லும் துகளும்
பொடியும் இல்லாத அளவு அழித்துவிட்டது
பொன் ஒளி வீசும் செய்குன்று
பிடுங்கி வீசப்பட்ட நகரம்
சிறிய இடம் மட்டுமே அழியாமல் உள்ளது” என்று கதறினர்.

--அனுமனோடு மீட்போம்.

Wednesday, 11 December 2013

சுந்தர காண்டம் 701 -725





பாடல்-701:
சூரியனும் சந்திரனும் வலம் வரும் மேருமலைக்கு சமமான
இரண்டு தோள்களையுடைய தனது வடிவத்துடன்
அசோகவனத்தை அழித்தான் அனுமன்
இரணியாட்சன் பூமியை
சுருட்டிச் சென்றதை மிட்டு எடுத்த
வராக மூர்த்திக்கு சமமாக
அடர்ந்த அசோகவனத்தை
கால்களால் துகைத்து அழித்தான்.

பாடல்-702:
அனுமன் கால்களால் தாக்கப்பட்ட
அசோகவனத்து மரங்கள் பிளந்தன
முரிந்தன நெரிந்தன
மடிந்தன பொடிந்தன மறிந்தன
எரிந்து கரியாய்ப் போயின ஒடிந்தன
துவண்டு சாய்ந்தன
உதிர்ந்து சின்னாபின்னம் ஆயின.

பாடல்-703:

சில மரங்கள் வேரோடு விழுந்தன
வெந்து போயின
வானத்தின் மேகத்தோடு நெருங்கின
காற்றினால் கடலில் வீழ்ந்தன
வண்டுகளுடன் வானோரின் ஊர் சென்றன
இன்னும் சில மரங்கள் உருவிழந்து சிதைந்தன.

பாடல்-704:
அனுமன் கழற்றி வீசிய மேக உயர மரங்கள்
எட்டுத்திசைகளிலும் உள்ள யானைகளுக்கு
தழை உணவு ஆயின
இன்னும் சில
வான வழியே சென்று
தேவர்களின் சோலைகளைச் சிதைத்தன.

பாடல்-705:
அனுமன் வீசிய மரங்களால்
கடலில் அலைகள் அலைவுற்றன
அரக்கர் வீடுகள் பொடியாயின
இன்னும் பல மரங்கள்
மலை மீது மோதி தூளாயின
மரங்களின் வெண் மலர்கள் நிலை கலங்கின
நட்சத்திரங்களுடன் கலந்து கீழே விழுந்து சிந்தின.

பாடல்-706:
அனுமன் பிடுங்கி வீசிய மரங்கள்
மதம் கொண்ட திசை யானைகளின் தந்தங்கள்
நடுவே தொங்கின
பெண் யானைகளுக்கு உதவ
துதிக்கைகளில் இடுக்கி வைத்திருப்பது போல
மரங்கள் காணப்பட்டன.



பாடல்-707:
அனுமன் வீசி எறிந்த மரங்கள்
எல்லா உலகிலும் சென்று வீழ்ந்தன
அதனால்
நஞ்சு மிகு இராவணன் சோலை மலர்களை
செம்பஞ்சு பாதம் கொண்ட பெண்களால்
வித்தியாதரர் வாழும் உலகிலும் பறிக்க முடிந்தது!
இயக்கர்கள் வாழும் மலையிலும் பறிக்க முடிந்தது!
மரணமிலாத தேவர்கள் வாழும்
சுவர்க்கத்திலும் பறிக்க முடிந்தது.!

பாடல்-708:

பொன்னில் பதித்த இரத்தினங்களால்
செய்யப்பட்ட இராவணன் வீட்டை
தடிமனான அசோகவன மரங்கள் சுற்றி வருவதால்
மின்னல்போல் தெரிந்தன
பல மரங்கள்
சூரியன்கள் திரிவது போலவும் தெரிந்தன
வீசி எறிந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தூளாகி
ஊழிக்காலத்தில்
கீழே விழும் நட்சத்திரங்களை ஒத்திருந்தன.

பாடல்-709:
அனுமன் வீசிய மரங்கள்
கடலில் விழுந்த போது விழுந்தவை பட்டியல் இது :
“மரத்திலிருந்த பறவைகள்!
வண்டுகள்!
தேனீக்கள்! நறுமண மலர்கள்!
தேன் அரும்புகள் ! தளிர்கள்
இனிய காய்கள்” இவை அத்தனையும்
மீன் கூட்டங்களால் மகிழ்ச்சியாக விழுங்கப்பட்டன
அடடா -
உண்டு முடித்த மீன்களின் மேல் மரங்கள் வீழ
அவை இறந்து போயினவே.

பாடல்-710:
அனுமன் வீசிய மரங்களின் மலர்கள்
கடலில் உள்ள
புலால் மணத்தை மாற்றி
மலர் நறுமணம் வீசச் செய்தன
அதுமட்டுமா!
தேவர்கள் தம் மனைவிகளுடன்
மகிழ்ந்து குளிக்கும் குளமாக ஆகின கடல்கள்!

பாடல்-711:
அனுமன் பறந்து கடக்க வேண்டிய கடல் அல்ல
நடந்தே கடக்கலாம்! ஆம்!
அனுமன் பறித்து எறிந்த
மாணிக்க மயமான மேடைகளும்
அசோகவன மரங்களும்
கடலில் படிந்து வழி உண்டாக்கியதால்!

பாடல்-712:
மலை பொடியாவது போல்
வான் இடியால் உடையும்
பெரிய மலைகள் ஒத்த அசோக மரங்கள்
கோடை சூரியன் போல ஒளி விடுகின்றன.

பாடல்-713:

அனுமன் கோபமுடன் வீசிய
அளவிலாத மரக்கூட்டங்கள்
வானில் தழைத்துத்  தெரிவதால்
வலிமை மிகு இராவணன் அசோகவனம்
விண்ணிலும் இருக்கிறது என  நினைத்தனர் சிலர்.

பாடல்-714:
அனுமனால் வீசப்பட்டு
ஆகாயத்தில்பறக்கும் மாணிக்க மயமான மரங்கள்
தேன் துளி சிதற
பறவைகள் ஒலியோடு
நட்சத்திரங்களை நொறுக்கின
வாள் போல வில் போல ஆகாய விமானம் போல
பறக்கும் மரங்களின்
ஒளி தெரிகின்றது.

பாடல்-715:
ஒப்பற்ற போர் புரிவதில்
யானைக்கு சமமான அனுமன்
வீசி எறிந்த மரங்களும்
மரங்களின் கிளைகளும் இலைகளும்
வானம் வரை உயர்ந்து சென்று கடலில் விழும்போது
கடல் நீரை முகக்கும் மேகங்களை ஒத்துள்ளன.

பாடல்-716:

இராவணன்
முன்னர் கற்பக மரங்களை
கொடை குணம் மிக்க குளிர்ச்சியான
விண்ணுலகிலிருந்து மண்ணுலகம் கொண்டு வந்தான்
இப்போது  அவை பெயர்த்து வீசப்பட்டன
சுவர்க்கலோகம் சென்றன
தேவர்கள் சொர்க்கம் செல்வது போல காட்சி தந்தன.

பாடல்-717:

மாணிக்கங்கள் பதித்த
திண்ணைகளை இடித்தான்
மண்டபங்களை துண்டாக்கி உடைத்தான்
ஒளி பொருந்திய வலிமையான சுவர்களை
இடித்துத் தள்ளினான்
உயர்ந்த குன்றுகளையும் அழித்தான்.

பாடல்-718:

வேங்கை மரங்களையும்
ஆச்சா மரங்களையும்
கீரை போல இலகுவாகப் பறித்தான் வீசினான்
கற்பக மரங்களைப் பூக்களோடு ஒடித்தான்
சண்பக மர வரிசைகளையும் பறித்து எறிந்தான்
மாங்கனிகளோடு கிளைகளோடு
பெரும் மரங்களை வீசி முறித்தான்.

பாடல்-719:

மன்மதன் வரும் முன்பு
இளவேனிலாகிய வசந்தம் எனும் வசந்தன் வருவான்
பூஞ்சோலைகள் கலங்கி
நிலை குலைந்ததால்
வசந்தன் முகம் இப்போது பொலிவிழந்தது
சந்தன மரங்கள்
விறகுகளாய் எரிந்து சிந்தி அழிந்தன.

பாடல்-720:

“காமரம்” எனும் பண் பாடும் வண்டுகள் கலங்கும்படி
மரங்கள்
மண்ணோடு மண்ணாகி வீழ்ந்தன
அரங்குகள் தகர்ந்தன
பூ மரங்கள் எறிந்து பொரிந்தன.

பாடல்-721:
இலைகள்
சிறு கிளைகள் கொடிகள்
குயில் குலங்கள் தங்கும் தளிர்கள்
மென் மலர்கள் கொண்ட வாசல்கள்
வாசனைப் புதர்கள்
தேன் மழை
வண்டுகள்
மயில்கள்
எல்லாமும் அனுமனால் அழிந்தன.

பாடல்-722:

மேகங்களை மின்னல்கள் சுற்றிக் கிடப்பது போல
அனுமன் வீசிய பவளக் கொடிகள்
இலங்கை சூழ்ந்த மலைகளைச் சுற்றிக் கொண்டன
அனுமன் வீசி எறிந்த
பொன்மயமான கிளைகளும் மரங்களும்
மலைகளில் கிடப்பது
கவளம் கவளமாக உண்ணும்
யானைகளின் முகபடாம் போல ஒளி வீசின.

பாடல்-723:

அனுமன்
அசோக வனம் அழிக்கும்போது
பறவைகள் ஆர்த்த ஒலி ஓசை
மரங்கள் ஒடியும் இடி ஓசை
அறவடிவன் அனுமனின் குரலோசை
அண்டத்திற்கு அப்பாலும் கேட்டதே...
பாடல்-724:

பாதிரி மரங்களும்
கோங்கு மரங்களும்
பறவைகளோடு குஞ்சுகளோடும்
இசையுடன் குளிர்ப்பாடல்கள் பாடும் வண்டுகளோடு
அலைகள் கரைகளை அலம்பும் கடலில்
ஓசையுடன் விழுந்தன.

பாடல்-725:

ஆற்றின் கரையோர ஆச்சா மரங்கள்
வண்டலோடு கூடிய நல்ல நீர் கொண்ட
மண்ணுலக ஆற்றில் மடிந்தன
அனுமனால் வீசப்பட்ட
நீண்ட நீண்ட மரங்கள்
திருமால் கால் அலம்பிய
ஆகாய கங்கையில் விழுந்தன.

-அனுமனோடு மீட்போம்.

Sunday, 1 December 2013

சுந்தர காண்டம் 676 -700




பாடல்-676

நங்கையே
எண்ண முடியாத பெரிய வானர சேனை
நாளையே இந்நகருக்குள் வரும்
அப்பொழுது அவை நடுவில்
கருடன் மேல் திருமால் போல்
இராமனை என் முதுகில் நீ காண்பாய்.

பாடல்-677:

அங்கதன் தோள் மேல்
இராமனின் இளவல் இலக்குவன் வருவான்
மலையில் பொங்கும்
வெம்மையான சூரியக்கதிர்கள் என விளங்குவான்
போரிடும் முடிவோடு வானரப்படை இலங்கையில் தங்கும்
எனவே
கவலைகளும் கலக்கமும் நீங்கி விடுக
உனது தனிமை நீங்கப் போகிறது.

பாடல்-678:

“குராமலர்கள் சூடிய குழலியே
நீ குறிப்பிட்ட நாளில்
இந்த பெரும் சிறையிலிருந்து உன்னை மீட்காவிட்டால்
பழியும் பாவமும் தொடர்வதற்கு
அந்த இராமனே இராவணன் என ஆவான்
இந்த இராவணனே இராமன் ஆவான்” என்றான்.

பாடல்-679:

குற்றமற்ற
அனுமனின் மொழி கேட்டு
மயிலாகிய சீதை அறிவிலே தெளிவுற்றாள்
உவகையால்  மனம் களித்தாள்
உயிர் பெற்றாள்
“இவன் இராமனிடம் போவது நன்று” என்பதை
புத்தியில் வைத்தாள்
இப்படியாக சில வாசகம் சொன்னாள்:-

பாடல்-680:
“ஐயனே
மேன்மையானவனே
இராமனிடம் விரைக
தீயவை எதுவரினும் வெல்க
இனி ஒன்றும் சொல்ல என்ன இருக்கிறது
இப்போது நான் சொல்வதும்
முன்பு நிகழ்ந்தவைவும்
கோமகனுக்கு விளங்கும்” எனச் சொன்னாள்
இனிய சொற்கள் இசைக்கும் சீதை.

பாடல்-681:

அனுமனே.. இதனை நினைவூட்டு
அப்போது வனவாசத்தில் இருந்தோம்
சித்திரக்கூட மலையில் இருந்த எனது அருகில்
ஒரு காகம் வந்தது
கூர் வாள் நகத்தால் என் மார்பு கீறியது
அந்தக் காகத்திடம் இராமன் கோபித்தான்
அருகில் கற்கள் நடுவே
வளர்ந்திருந்த புல் கொண்டு
விரைவும் கொடுமையும் கொண்ட
பிரம்ம அஸ்திரத்தை ஏவிய  செய்தியை
மெல்லச் சொல்வாயாக
மென்மையாக விரிப்பாயாக.

பாடல்-682:

அது மட்டுமல்ல
 இன்னொன்றையும் இராமன் மனதில் விரிவாக
தைக்கும்விதமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
ஆம்! அந்தக் காகம்
தன்னைக் கொல்ல வரும் அம்பு கண்டு அஞ்சியது
பிரம்மலோகம் சென்றது
பிரம்மன் கோபித்து அனுப்பி விட்டான்
உமையொரு பாகனிடம் சென்றது
திசை எட்டும் சென்றது
ஒவ்வொருவரும் தமது இடத்திற்கு
ஏன் வந்தாய் என மறுத்தனர்”

பாடல்-683:

அந்தக் காகம் வேறு யாருமல்ல
இந்திரன் மகன் ஜெயந்தன்!
அவனது துன்பங்களை
ஆகாயத் தேவர்கள் பார்த்து
“இராமனின் திருவடிகளே உனக்கு அடைக்கலம்
அங்கு சென்று விழு” என்று சொல்லியதும்
அந்தக் காகம் சரண் அடைந்தது
இந்நிகழ்வை அவன் நெஞ்சில் வைப்பாய் அனுமனே.

பாடல்-684:

ஜெயந்தன் இறுதியில்
இராமபிரானிடம் புகலிடம் பெற்றான்
மகிழ்ந்த இராமபிரான்
பிரம்மாஸ்திரத்திற்கு இட்ட ஆணை என்னவெனில்:
“இக்கொடியவனின் இரண்டாம் கண்ணை
அப்புறப்படுத்து” என்றதும்
தெய்வ அம்பு
அந்த காக்கையின் கண்ணைப் பறித்துச் சென்றது
இதனை நினைவூட்டுக.

பாடல்-685:

“தந்தையே உன் திருவடி சரணம்
என்ற தன்மையினால்
முன்பு நீ செய்த குற்றமும் பொறுத்தோம்”
என்று கூறி ஆறுதல் தந்ததை
அவனிடம் சொல்வாயாக.

பாடல்-686:

ஜெயந்தன் அச்சம் நீங்கினான்
இராமனை வணங்கி வானுலகம் சென்றான்
தேவர்கள் பூமழை பொழிய
யானை போன்ற இலக்குவன்
இவ்வெற்றியை அறிவதற்கு
இனிய சொற்களால் இராமனிடம் சொல்க.

பாடல்-687:

என் நாயகனே
உண்மை வழியோனே
என் இனிய உயிர் போன்ற கிளிக்கு
யார் பெயர் வைப்பது என்று கேட்டேன்
“என் தாயாகிய
மாசற்ற கேகய மன்னன் மகளாகிய
கைகேயியின் பெயர் இடுக”
என்று அக்காலத்தில் சொன்ன மொழியை
இராமனிடம் கூறுக.

பாடல்-688:

சீதாதேவி
அடையாளச் செய்திகள் யாவும் கூறிய பிறகு
இனி கூறுவதற்கு ஏதுமில்லை என உணர்ந்தாள் சீதை
தனது திருத்துகிலில் பொதிவுற்ற
பதித்து வைத்திருந்த
சூளாமணியை எடுத்தாள்
சூரியனை வெல்லும் ஒளி வீசியது அதன் சுடர்.

பாடல்-689:

சீதை தனது மலர்க்கையினால்
எடுத்த சூளாமணியைக் கண்டு அனுமன் வியந்தான்
“இது என்ன!” என்று திகைத்து வியப்புற்றான்
வியப்பால் வீங்கினான்
சூளாமணியின் ஒளியினால்
ஏழுலக இருளும் ஓடிப்போனது!

பாடல்-690:

அந்த சூளாமணியின் ஒளி
அரக்கர்களுக்கு ஒரு சந்தேகம் தந்தது
“மேகமண்டலச் சூரியன்
இராவணனுக்கு அஞ்சாமல்
இலங்கையுள் புகுந்துவிட்டானோ!!”
சக்கரவாகப்பறவைகளுக்கும் குழப்பம்
தினசரி சூரியன் போல் எண்ணி
துணையுடன் கூடாமல் சஞ்சலப்பட்டன
தாமரை மலர்கள் சூரியன் என எண்ணி மலர்ந்தன.
சூரிய காந்தக் கற்கள் தீ உமிழ்ந்தன

பாடல்-691:

அந்தச் சூளாமணி
சீதையின் கூந்தல் மேகத்தின் மேல்
ஒளிவிடும் சூரியனை ஒத்திருந்தது
சீதை மேனி போல் சிவந்திருந்தது
இராமனது திருவடி போல்
இருள் நீக்கி ஒளி உமிழ்கிறது.


பாடல்-692:

சீதை சொன்னது இது
“என்னைத் தேடி வந்து
என் இனிய உயிர் காத்த அனுமனே
இந்தச் சூளாமணி இதற்கு முன்பு பல நாட்கள்
என் ஆடையில் இருந்தது
இதுவே அடையாளம் எனப் பெற்றுக் கொள்! கோடி!!”

பாடல்-693:

சீதை தந்த சூளாமணியைத் தொழுதான் வாங்கினான்
தன் ஆடையில் சுற்றிக் கொண்டான்
பாதுகாப்பு செய்தான்
வணங்கினான் அழுதான்
மூன்று முறை வலம் வந்து வணங்கினான்
ஓவியப் பாவை போன்ற சீதை புகழ்ந்தாள்
புறப்பட்டான் அனுமன்
(சூளாமணிப் படலம் முற்றியது)

பொழில் இறுத்த படலம்

பாடல்-694:
வடக்கு திசை வழியே செல்ல
முடிவு செய்தான் அனுமன்
மலர்ச்சோலைகள் நடுவே விரைந்து சென்றான்
இலங்கையில் சிறிய வேலைதானே செய்தோம்
வீரத்திற்கு அது தீமை!” என ந்¢னைத்தான்
வேறு ஒரு செயல் செய்ய நினைத்தான்.

பாடல்-695:

இழி தொழில் அரக்கரை
அடித்துக் கொல்லாமல்
கடலில் சிதறி விழ வீசாமல்
மான் விழி சீதையை
இராமனின் திருவடியில் சேர்க்காமல் நான் எப்படி
இராமனின் அடியவன் என ஆக முடியும்?

பாடல்-696:

நான் எனது வாலினால்
இராவணனின்
பத்து தலைகளையும் இருபது தோகளையும் சேர்த்து
நெருக்கிக் கட்டவில்லையே
கொடிய சிறையில் வைக்கவில்லேயே
போரிலும் வெல்லவில்லையே
இராமனே தஞ்சம் என நான் கூறுவது
பொருத்தமாகவா இருக்கிறது?

பாடல்-697:

ஒன்று செய்வோம்
அரக்கர் கூட்டத்தை
எனது வலிமையால் கலங்கச் செய்வோம்
இராவணன் பார்க்கும் போதே
அவன் மனைவி மண்டோதரியின்
மலர்க்கூந்தல் பிடித்துக் கொண்டு போய்
சிறை வைத்தால் என்ன குறைந்து விடும்!

பாடல்-698:

மேலும் மேலும்
மற்ற ஒன்று எண்ணுவதற்கு நேரம் ஏது?
அரக்கர்களை வருந்தி ஓடச் செய்ய
எனது முழு வலிமையும் பயன்பட வேண்டும்
அரக்கர்களை
கடும்போரில் சிக்க வைக்க
வழிகள் என்ன என சிந்தித்தான் அனுமன்,.

பாடல்-699:

அரக்கர்களை
சினத்தினர் ஆக்க வேண்டும்
கோபமுற வைத்துவிட்டால்
என் நோக்கம் எளிதாகிவிடும்
இங்குள்ள சோலைகளை இறுக்கி
அழித்தால் பேரொலி கேட்கும்
அரக்கர்கள் கோபமுடன் தாக்கவருவர்
என் வலிமையுடன் மோதி உயிர் இழப்பர்
இதுவே என் தந்திரம்.


பாடல்-700:

வந்த அரக்கர்கள்
திருப்பிச் செல்ல முடியாது
வந்தவர்கள் வந்தவர்கள் தான்!
எவரும் திரும்பாமையால்
இராவணன் என்னிடம் மோத வருவான்
அவன் மகுடம் மிக்க தலைகள்
தரையில் உருண்டோட வைப்பேன்
இந்த  வெற்றிச் செய்தியுடன்
இராமனிடம் மகிழ்ந்து செல்வேன்.

--அனுமனோடு மீட்போம்.