Friday, 30 August 2013

சுந்தர காண்டம் 351-375




பாடல்-351:

சீதையின் கண்கள் சட்டென
கலங்கவும் ஆரம்பிக்கின்றன
எப்படிப்பட்ட திருவார்த்தைகள் கூறினான்
ஆழமான கங்கை நீர் ஓடம் செலுத்தும்
ஏழை வேடனை “என் தோழன் நீ..” என்றான்
அது மட்டுமா?
“என் தம்பி உன் தம்பி
என் மனைவி உனக்கு மைத்துனி”
என்று சொன்ன பண்பை உணர்ந்து மயங்குகிறாள்.

பாடல்-352:

மெய்யறிவு கொண்ட ஜனகன் மிக விரும்பி
தன் மகள் சீதை நீட்டிய கரங்களை
இராமபிரானின் கைத்தலத்தில் சேர்த்தான்
வலக்கையால் சீதையின் இடக்கைப் பற்றி
திருமணச் சடங்கினைச் செய்தபடி
தருப்பை போன்றபரிசுத்தமான சீதை பாதத்தைப் பற்றி
அம்மியில் வைத்த அந்நிகழ்ச்சி எண்ணி
கண்ணீர் வர
இப்போது அயர்வாள் சீதை.

பாடல்-353:

“எனக்கு பதிலாக நீ அரசு ஆள்க” என்று  கூறியதும்
பொன் முடி சூடிட மறுத்தான் பரதன்
திரித்துவிடப்பட்ட சிவந்த சடை சூடியவன் ஆனான்
தம்பியின் செயலுக்காக
இராமபிரான் வருந்தியதை நினைத்து
சீதை இப்போது நெஞ்சம்
இரங்குகிறாள் வாடுகிறாள் .

பாடல்-354:

சில நேரங்களில் சிலரது புன்னகைக்கு அர்த்தம்
அந்த நேரத்தில் புரியாது
சீதைக்கும் இராமனின் புன்னகை ஒன்று நினைவில் வருகிறது
“ஆம் ! அன்று புன்னகைத்தாள்...
அரசாட்சி துறந்து காடு நோக்கிப் புறப்பட்ட
யாத்திரை தான நேரத்தில்
திரிசடன் எனும் வேதியனுக்கு
பசுக்கூட்டம் தானமளித்தான்
தானம் பெற்ற திரிசடனோ மேலும் மேலும் கேட்க
இராமன் புன்னகைத்தான்
அதை நினைத்து அழுகிறாள் சீதை இப்போது.

பாடல்-355:

மழு என்ற ஆயுதத்தால்
தனது எதிரி மன்னர் வம்சத்தை
இருபத்தொரு தலைமுறை அழித்து
அவர் தம் குருதி நீரில் முழுகி எழுந்த
பரசுராமனின் வலிமை
இராமனுக்கு முன் நிற்கவில்லை
பரசுராமன் தவவலிமை இலவம் பஞ்செனப் பறக்கவிட்ட
மேன்மை எண்ணி வாடினாள் சீதை.

பாடல்-356:

இந்திரன் மகன் ஜெயந்தன்
காம எண்ணத்தால்
காக வடிவுடன் திரிந்தான்
அவனது
ஒரு கண்ணை
தர்ப்பப் புல் அம்பு செலுத்தி அழிக்க
அனைத்து காகங்களும்
ஒரு கண் இழந்திடச் செய்தான்
அந்த வெற்றியை மிகவும் நினைத்தாள் சீதை.

பாடல்-357:

கொடியவன் விராதன் என்பவனின்
தீவினையும் சாபமும்
மாற்றிய இராமனின் திறம் எண்ணுகிறாள்
அவளது ஆருயிர்
செம்மையாய் இருக்கமுடியாமல்
அவள் அறிவும் உடலும் தேம்புகிறது.

பாடல்-358:

நள்ளிரவு நெருங்கியது
அரக்கியர் அனைவரும்
உறக்கம் எனும் மதுவைப் பருகி
மயக்கமடைந்தனர்
தீவினை உறங்கவில்லை
இன்சொல்லை திருத்தமாகக் கூறும் திரிசடை உறங்கவில்லை
சீதைக்கு துணையாக!

பாடல்-359:

அன்பு மிகு திரிசடையை நோக்கி
சீதை கூறினாள்
“நீ தாயினும் நல்லவள்
தூயவளே  கேள்” என ஆரம்பித்தாள்.

பாடல்-360:

சீதை ஆர்வமானாள்
“திரிசடையே .. சொல்
அழகிய உடுக்கை போன்ற
இடையினைப் பெற்றவளே! சொல்
எனது புருவமும் கண்ணும்
இடப்பக்கம் துடிக்கின்றதே இது எதற்காக?
நலம் செய்யத் துடிக்கின்றதா? அல்லது
நான் செய்த பாவம்
வஞ்சகமாகத் நடித்து
இன்னமும் தீங்கு தருமோ?”

பாடல்-361:

“முன்பு -
இராமபிரான்
விசுவாமித்திர முனிவருடன்
மிதிலை வந்த போது
குற்றமற்ற என் தோளும் புருவமும் கண்ணும்
இனிமை விளைவிக்க இடப்பக்கம் துடித்தன
இப்போதும் அப்படித்தானா?
ஆராய்ந்து சொல்லேன் திரிசடை” என்றாள்.

பாடல்-362:

“அடீ ! திரிசடை!
மறந்து விட்டேனடி இன்னொன்று!
அறம் தங்கும் என் ஆவி நாயகன்
“பரதனே நாடாளட்டும் என்று
காடாளப் புறப்பட்ட நாளில் மட்டும்
வலது பக்கம் துடித்தது”

பாடல்-363:

“தண்டகாரண்யத்தில்
நஞ்சு போன்ற இராவணன்
வஞ்சம் மிக்க செயலைச் செய்தானே!
அன்று வலதுபக்கம் துடித்தது
இப்போது மட்டும் இடப்பக்கம் துடிப்பது எதற்காக?
அஞ்சாதே என்று இரக்கபடுமாறு
நடக்கப்போகும் ஒரு செயல் உண்டெனில்
அது எதுவாக இருக்கும் ? என்றாள் சீதாப்பிராட்டி.

பாடல்-364:

சீதை சொன்னதும் -  
திரிசடை சொன்னது இது தான்:-
“நல்லது நல்லது நீ உன் துணையாம்
கணவனை அடைவது உண்மை
இது ஒரு மங்கல அறிகுறி! இன்னும் கேள்”


பாடல்-365:

மின்னல் இடை சீதையே ! கேள்
இராமனைப் பிரிந்து அதனால் உன்னில்
உண்டான பசலை நீங்கப் போகிறது
உன் உயிர் உய்வு அடையப்போகிறது
எப்படிச் சொல்கிறேன் தெரியுமா?
பொன்னிற வண்டு ஒன்று இனிய தன்மையோடு
தேன் இசையை உன் செவியில் ஊதியது!

பாடல்-366:

அதனை ஆராய்ந்தால் ஒன்று புரியும்
உன் ஆவி நாயகன் அனுப்பிய தூதாக
ஒருவன் உன்னைச் சந்திப்பான்
தீயவனுக்கு தீயது நிகழ்வது உறுதி
என்னிடம் கேள் சொல்கிறேன் என்று
சீதை வாயை மறித்து இன்னும் சொல்ல ஆரம்பித்தாள்.

பாடல்-367:

வேல் விழியாளே! சீதையே!
உனக்கு கனவு வருவதில்லை
ஏனெனில் நீ உறங்குவதேயில்லை
ஆனால் எனக்கொரு கனவு வந்தது
பழுதிலாத கனவு அது
சூரியனது  வெயிலை விடவும்
மெய்யாக பலிக்கும் கனவு
கேட்பாயாக அதை!

பாடல்-368:

களங்கமில்லாக் கற்பரசியே கேள்!
அரசன் இராவணன் -  
அழகிய தனது பத்து தலைகளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு
சிவந்த ஆடை அணிந்து
பேய்களும் கழுதைகளும்
பூட்டிய தேரில்
தென்திசை நோக்கிச் செல்வதைக் கண்டேன்


பாடல் -369:

“இராவணன் மட்டுமா?
அவன் பிள்ளைகள், உறவுகள்
மற்றுள்ள அரக்கர்கள்
அதே திசையில் செல்கின்றனர்
சிக்கில்லாமல் சிடுக்கில்லாமல்
இதை நான் நோக்கினேன்
இன்னும் சில தீயதும் உண்டு !அதுவும் கேள் நீ..”

பாடல்-370:

ஆண்மை மிக்க இராவணன்
வளர்க்கின்ற ஹோமத்தீ அணைந்துவிடுகின்றது
அந்த இடத்தில் செந்நிறக் கரையான்கள்
கூட்டம் தோன்றியதைக் கண்டேன்
தூண்ட வேண்டா மாணிக்க மணி விளக்குகள்
 ஒளிவிடும் அரண்மனை
விடியற்காலையில் இடிந்து விழுகின்றது!

பாடல்-371:

பெண் யானைகள்  -  
மதம் கொண்டன
பேரிகைகள் தானாகவே - 
இடியென ஒலித்தன
மேகக்குலம் -  
அண்டம் வெடிக்க இடித்தது
வானின் நட்சத்திரங்கள் யாவும் உதிர்ந்தன.

பாடல்-372:

ஒளிமிகுந்த பகல் அற்ற பொழுது
அப்படிப்பட்ட இரவு நேரம் அப்போது
சூரியன் பாதியாகத் தோன்றினான்
வலிமை வீரர்கள் தோளில் இருந்த
கற்பக மலர் மாலைகளோ - 
புலால் நாற்றம் வீசின.

பாடல்-373:

அது மட்டுமா?
இலங்கை  நகரம் சுழலும் சூழ்ந்த மதில்கள் சுழலும்
திசைகள் யாவும் தீப்பற்றி எரியும்
கற்பகச்சோலை அழியும்
மங்கலக்கலசங்கள் விழுந்து உடையும்
விளக்குகளை இருள் விழுங்கிவிடும்.

பாடல்-374:

அது மட்டுமா?
தோரணங்கள் முறிந்து
துண்டுகள் ஆயின
முகபடாம் பொருந்திய
வாரணங்களின் தந்தம் ஒடிந்தன
வேத அறிஞர்கள் நாட்டிய
பூரண கலசகும்பத்திலுள்ள
புனித நீர் -  
கள்ளாகிப் பொங்கியது.


பாடல்-375:

அது மட்டுமா?
வானச்சந்திரன் பிளந்து உடைந்து
விண்மீன்கள் வெளியாடும்
திரண்ட மேகங்கள்
புண் வழியும் குருதி மழை பொழியும்
கதை - சக்கரம் - வாள் - வில்
இன்னும் மற்ற மற்ற போர்க்கருவிகள்
கடலொலி போல் பேரொலி கிளப்பி
தாமே போர் செய்யும்.


-- அனுமனோடு மீட்போம்.

பிழைபட பேசேல்




“கள்வனைக் கொண்டுவா” என்ற பாண்டியன் சொல்
பிழைபட பேசியதால்
“கொன்றுவா” எனத்திரிந்து
கோவலனைக் கொன்றுவிட்டது அன்று
பிழைபட பேசினாலும் வீசினாலும்
நசுங்கிப் போகும் காபிடம்பளர்களோ
தினமும் தண்டிக்கின்றன
ஒளவை அறிந்தே சொன்னாள் ஆத்திச்சூடி

பிஞ்சுப் பாதங்கள்.

இரண்டு மணிநேரம் பயணித்து
எட்டு மணி நேர வேலைக்குப்பிறகு
வீட்டுக்கு வந்தால்
கிருஷ்ணராவது
ஜெயந்தியாவது என்று
கட்டாம்தரையாக இருந்த மனசில்
கிருஷ்ணரின் பாலபருவம் பதிகிறது
சிறுவயதில் பெரும்ஞானம் அவனுக்கெனப் புரிகிறது
என் மனைவி-
அரிசிமாவு கரைசலில்
கிருஷ்ணர் கால்கள் வரையும்போது!
அதில் இன்னொன்றும் தெரிகிறது
எது நம்மிடம் இருக்கிறதோ
அதில் கிருஷ்ணன் வாழ்கிறான்.

Tuesday, 27 August 2013

அப்பாவுக்கு ஒரு பரிசு

சொல்ல முடியாத  சொற்களையே
காற்று சுமக்குமோ
ஒருவருக்கொருவர் சொல்லமுடியாதவை அதிகம்
அப்பா மகனிடம் - மகன் அப்பாவிடம்
அம்மா மகளிடம் - மகள் அம்மாவிடம்
உறவுகளிடம் இது இன்னும் எவ்வளவோ அதிகம்
காற்றே இப்போது அவரிடம் செல்க
என் கவலைகள் இரு டன் எடை எனச்சொல்க
எண்பத்தி இரண்டு வயதினால் காது கேட்காது என நினைக்காதே
நன்றாகக் கேட்பார்
என்ன என்றால் நான் சொல்லி அனுப்பியதாக
மந்திரஸ்லோகம் ஒன்று சொல்லிவிட்டு வந்துவிடு
வேண்டாம் என்பார்
புதிதாக இதெல்லாம் என்ன புதுப்பழக்கம் என்பார்
கையிலேயும் மனதிலேயும் எழுதி வைத்துக்கொண்டு
பிரார்த்னை போல பயன்படும் என்று உங்கள்  மகன் சொன்னான்
என பதில் கூறுக காற்றே!
“அனாயா சேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
க்ருபையா தேஹி மே சம்போ
த்வயி பக்தி ரசஞ்சலம்”

 தமிழில் அர்த்தம் கேட்பார் அவசியம் சொல்:-
“ஹே சம்புவே! சிவமே! வேதனையின்றி நிம்மதியாக
என் உயிர் பிரிய வேண்டும்! வாழும் காலத்தில்
யாரிடமும் அடிமைப்படாமல் மகிழ்வாக வாழவேண்டும்
உன்னிடம் நிலைத்த பக்தி வேண்டும் ! கருணையோடு அருள்க!”
காற்றே! நீ சொல்லி முடித்ததும் அப்பா
கண்ணீரோ பெருமூச்சோ விடுவார் அதை ஆறுதல் சொல்லாக
என்னிடம் கொண்டுவருவாயா?




Monday, 26 August 2013

அவர்கள் எளிமையின் உருவம்



பூமியில் பிறக்கின்ற சிலர்
இன்னொருவர் தோளில் பூமாலையாக
மணந்து விட்டுப் போகின்றனர் தன் புகழ்பாடுவதில்லை
அவர்கள் தேவை என்ன
அவர்கள் ஆசை என்ன
தேர்ச்சக்கரத்து ஆணி போன்று
குடும்ப மையமாய் நின்று
காற்றில் சந்தனமாய்
வெடுக்கென கடிபட்ட மாவடுபோல்
ஐம்பத்தியெட்டில் மாரடைப்பில்
அடியேன் மாமியார் ஜெயலஷ்மி மறைந்தார்.
எப்போதோ வாசலில் நட்ட நந்தியாவட்டைச்செடி
இன்று அவர்கள் நினைவுநாளில்
முதல்பூ அவர்களுக்கு சிந்துகிறதோ தெரியவில்லை
காலத்தின் கணிதமும் காற்றின் கணிதமும்
மூச்சுக்காற்றின் கணிதமும் எவர் அறிவார்?
படகுப்பயணம் போன்றது இவ்வாழ்வு
எந்த அலையில் எவர் முடிவு
எவரால் கூற இயலும்.. உமக்கெமது வணக்கம்.
“யாருக்கும் கஷ்டம் தரக்கூடாது” என்று நீ கேட்டபடியே
வாய்த்தது மரணம் என்றாலும்
கண்ணீர் சிந்துகின்றோம் இன்று(26.8.2013) பதிமூன்றாம் ஆண்டு.


Saturday, 24 August 2013

கட்டைகளும் பந்துகளும்

ரப்பர் பந்து தந்தால்
சும்மாயிருக்கமாட்டோம்
அமுக்கிப் பார்ப்போம்
சமநிலைக்கு வந்தால்
மறுபடி அமுக்குவோம்
உலகம் ஒரு கட்டை தந்தால்
ஒன்றுமே செய்யாது சலாமிடும் வணங்கும்
நல்லார் படும் துயரம்
தீயவர் பெறும் வணக்கம்
இரண்டிலும் உள்ளே நுழைய
எவரால் முடியும்?

டூ வீலர்




டூ வீலர்

சாலைப்பள்ளத்தில் குதித்து திடுமென அறுந்தது
டூ வீலர் பல்சக்கரத்தின் செயின்
என் வண்டிப்பெட்டியில்
வண்டி இயங்கவோ நகர்த்தவோ
முதல் உதவி செய்யவோ
எந்த ஒரு கருவியும் இல்லை
கை நீட்டி உதவிகேட்டால் பலர் நிறுத்தவில்லை
உதவ வந்த சிலரிடமும் யோசனைகள் மட்டுமே இருந்தன
சரி செய்யும் கருவிகள் இல்லை
எப்படி ஒரு தூக்க மனோ நிலை !
நாம் ஓட்டும் வண்டி சரிசெய்ய நமக்கே ஞானமில்லை
அக்கறையில்லை
வருந்திக்கொண்டிருந்தேன்
டூ வீலர் பேசியது கேட்டது
“உன் உடம்பையே அப்படித்தானே வைத்திருக்கிறாய்!”
டூ வீலர் ஓட்டும் டூவீலர்
என்று முணுமுணுத்தேன் வருத்தமாய்.

Friday, 23 August 2013

பசி

உலவும் பறவைகள் கூட்டம் அழகிய இளம்பெண் வார்க்கும்
தானியங்களைக் கொத்தித்தின்ன தரை இறங்கியது
பெஞ்சில் உட்கார்ந்து பார்க்கிறார்
நன்கு உடை உடுத்திய கிழவர் ஒருவர்
பறவைகள் படபடக்க
மெல்ல அவள் அருகில் வந்தார்
இளம்பெண்ணுக்கு மகிழ்ச்சி
தன்னுடன் தானியம் வீசி உதவிட 
தன்னருகே வந்தார் கிழவரென
அவரைப் புன்னகைத்து
அவர்கள் கைகளில் தானியக்கிண்ணம் தந்தாள்
நன்றியோடு சிரித்து தப்பி ஓடி
மறைவாய் சுவர் ஓரம் நின்று தின்றார்.
கிழவர்களும் குழந்தைகளும்
பசியில் ஒரே இனம் என புரிந்து கொண்ட இளம்பெண்ணை
பறவைகள் கிறீச்சிட்டு வாழ்த்தின எழும்பிப்பறந்து

சுந்தர காண்டம் 326-350


பாடல்-326:

“சம்பாதி” எனும் கழுக்குகளின் அரசன்
இலங்கையில் சீதையைக் கண்டேன் என்றான்
அவன் உரை பொய்யோ?
கருவாக சீதையை மறைத்துவைக்கும் நெடுநகர் இலங்கையைக்
கடலில் கரைத்து இந்நேரம் நான்  
பெருந்தேவியை கண்டிருக்க வேண்டுமே
அப்படிச் செய்யாத நான்
இந்த உடம்பு கொண்டு இன்னமும்
உயிர் வாழ்ந்து உழல்வேனோ.

பாடல்-327:

“வான் அறிய
மண் அறிய 
பூங்குழலாள் சீதையை
பிடித்துச் சென்ற அரக்கனுடன்
இலங்கையைப் பெயர்த்தெடுத்து
கடலிலே மூழ்கடித்த பின்பே
நான் முடிந்து போதல் முறையானது”
என உணர்ந்தான் அனுமன்.

பாடல்-328:

எள் அளவு இடமும் விடாமல்
அனுமன் அலைந்தான் திருமால் போல்!
பறவைகள் தங்கும் பூஞ்சோலையை
முற்றிலும் தேடிவ்¢ட்டு அப்பால் நகர்ந்தான்
தேன் சிந்தும் இன்னொரு சோலை
அருகில் தெரிந்தது.

3 .காட்சிப்படலம்

பாடல்-329:

சோலை நெருங்கினான் அனுமன்
“இந்த இடத்திலும் சீதை
இல்லாமல் போனால்
திரிகூட மலையில் மோதி
இலங்கையை மோதி அழிப்பேன்
எனக்கு இருக்கு ஒரே வழி அதுதான்” என எண்ணினான்.

பாடல்-330:

சோலையுள் புகுந்தான் இராகவன் தூதன்!
வானவர் பூமழை தூவினர்
மனம் மகிழ்ந்தனர்
அரக்கர் இராவணன்
அச்சோலையில் சிறை வைத்த
சீதை நிலையை இனி கூறுவோம்.


பாடல்-331:

வலிய அரக்கியர் நடுவே
சீதாப்பிராட்டி இருத்தல் கண்டான் அனுமன்
கல்லிடையே தோன்றிய மருந்துச்செடி
ஒரு துளி நீரும் பெறாமல்
இருப்பது போல் இருக்கின்றாள்
நன்மைகள் அறுபட்டு வாடிய நங்கை அவளுக்கு
துடி இடை போல
மற்ற அங்கங்களும் மெலிந்து விட்டன.

பாடல்-332:

மயிலின் சாயல் போனது
குயிலின் இனியகுரல் போனது
உறக்கம்  என்ற ஒன்று போயே விட்டது
கண்கள் மூடுதலும் திறத்தலும் போனது
ஒளியற்ற உடம்பு என ஆனாள்
வெயிலில்  வைத்த விளக்கு போல் ஆனாள்
கூரிய பல் புலிக்கூட்டம் நடுவே சிக்கிய
புள்ளிமான் போல ஆனாள் சீதை .

பாடல்-333:

இராமபிரான் இருக்கும் திசை நோக்கி
இராமபிரானை எண்ணி விழுவாள் விம்மினாள்
மெய் கீழே விழுவாள்
எழுவாள் ஏங்குவாள்
மனம் இரங்குவாள்
தொழத்துவங்குவாள்
உடல் வெப்பமாக அழுவாள்
துன்பப் பெருமூச்சு விடுவாள்
வேறு எதுவும் செய்யாள் மகாதேவி!

பாடல்-334:

முன்பு நூலிழை நுட்பம் கொண்ட
சீதையின் கண்களுக்கு அவற்றின் குளிர்ச்சியால்
“மழைக்கண்” என்பார்கள் இப்போது -  
கண்ணீர் பெருகி விழுகிறது
கண்களாகிய துளை வழியே
முலைகளாகிய மலைகளைக் கடந்து எனவே -  
மழைக்கண்ணின் அர்த்தம் இன்று இதுதான்!

பாடல்-335:

ஒரு விடை கிடைத்திருக்கிறது இப்போது
ஆம்!
உலகில் உள்ள காதல்களுக்கெல்லாம்
தலைவன் -  தலைவி பிரிவுத் துன்பம் வரும்போது
எந்த உருவில் அந்தத்துன்பம் இருக்கும்
என்ற கேள்விக்கு
சீதை உருவினைச் சொல்க!
கரிய மேகமும், கண்களில் உள்ள மையும்
இராமபிரானை  நினைவு செய்தன அதனால்
அருவி போல் விழுந்த கண்ணீர் அதிகமாகி
அலைகடல் அடையும்படி அழுதாள்
ஆம்!
அருவிகள்
கடலை அடைவது இயற்கை தான்!

பாடல்-336:

மகாதேவி மங்கையர்க்கரசி சீதாப்பிராட்டியின் ஆடைகள்
நனைவதும் காய்வதும் கொண்டன
எப்படி?
பவழ நிறக்கால்களுடன்
கருமேக நிற உடல் கொண்ட இராமபிரானை
நினைந்து நினைந்து கண்ணீர் பெருகி
ஆடைகள் நனையும்
உடனே
தாங்க முடியாத  துன்பமும் பெருமூச்சும் உண்டாவதால்
நனைந்து ஆடைகள் உலர்ந்துவிடும்.

பாடல்-337:

சீதையின் இதயம்
உயிர்விட எண்ணியது என்றாலும்
விதியின் வலிமையைக் கடப்பது இயலாது
என்று அஞ்சினாள்
சூரிய வம்சத்திற்கு உண்டான பழி தீர்ந்திட
நாயகன் வருவார் வருவார்
என்கிற ஒரே ஒரு துணிவுதான் அவளிடம் உள்ளது
அனைத்து திசைகளையும்
அளந்து அளந்து பார்க்கிறாள்

பாடல்-338:

நிலத்தில் கிடந்த நிலவு போன்ற
சீதையின் கூந்தல்
இராகு கிரகத்தின் கரும்பாம்பு போன்ற தோற்றம் உடையது
பொறுமை பொருந்திய சீதையின் கூந்தல்
திருமுகத்தின்
பக்கங்களில் படர்ந்த கன்னங்களை
நன்றாகக் கவ்விப் பரந்திருந்தது.

பாடல்-339:

சூடான பாலின் மீது படரும்
பாலாவி ஒத்த நூலாடையே சீதை அணிவது
அவளது உடலோ - 
நீரில் தோய்ந்து தூய்மை பெற அவசியமில்லாத
அன்னப்பட்சியின் உடலாகும்
எனவே - 
சீதையின் பிரிவுத் தோற்றத்தை
இப்படிக் கூறலாம்:-
“பாற்கடல் அமுதம் கொண்டு
மன்மதன் தீட்டிய ஓவியம் ஆனால்
புகை படிந்த ஓவியம்!:”

பாடல்-340:
சீதையின் எண்ணங்களும் துன்பங்களும் இனி காண்போம்
மானைத் தொடர்ந்த இராமனை
இளவல் இலக்குவன் காணவில்லையோ...
கனைக்கும் கடல் நடுவே
இலங்கை உண்டு என்பதை
உணராமல் இருப்பார்களோ...
மனம் குழைந்தாள் சீதை
உருகினாள்
புண்ணைப்பிளந்து
அதில் நெருப்புத்தழல் நுழைந்தது போல
மனம் புகைந்தான்.

பாடல்-341:

கழுகுகளுக்கு அரசன் சடாயு
மாண்டு போய்விட்டான் இனி - 
யார் இருக்கிறார்கள்
நான் கடத்தப்பட்டதை சென்று சொல்வதற்கு?
இந்த பிறப்பில்
இனி காண்பது சாத்தியமில்லை
சத்தியமாய் இல்லை என
அந்த மனம் விம்மியது கலங்கியது
மீண்டும் மீண்டும் நெருப்பு புகுந்து புண் எரிவது போல
மெலிந்தாள் உத்தமி.

பாடல்-342:

நாயகன் இராமபிரான்
இளவல் இலக்குவனைக் குறித்து
நான் கூறிய தகாத வார்த்தைகளால்
எண்ணற்ற வினைகள் உண்டாகி விட்டன அதனால்
“அறிவில்லாத சீதை” என்று துறந்து விட்டிருப்பானோ...
அதனால் தான் மீட்க வரவில்லையோ...
முன்னைப்பிறவி ஊழ்வினையோ ..
பலப்பல காரணங்களை கூறிக் கொண்டாள்
வாய் வறண்டது
உணர்வுகள் தேய்ந்தன உயிரும் பதைத்தது

பாடல்-343:

சீதை இருந்த இடத்தைக் கரையான்கள் அரித்துத் தின்றன
அதற்கு கவலைப்படவில்லை
“மெல்லிய இலை உணவு உண்ணும் இராமநாயகன்
இப்போது யார் பரிமாற உண்பான்?
விருந்தினர் வருவரே
உபசரிக்க யாரும் இல்லையே”
நினைத்து விம்மினாள்
“இந்த மனநோய்க்கு ஏது மருந்து?” என மயங்குவாள்.

பாடல்-344:

இரவும் தெரியாத நிலையில்
பகலும் தெரியாத நிலையில்
வாழும் சீதை
இன்னொன்றும் நினைப்பாள்:-
“வஞ்சனை அரக்கர்கள் எனது சீதையை
இத்தனை பகல் பொழுதுகள்
உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள்
தின்றிருப்பார்கள் என நினைத்தானோ
தனது சூரிய குலப்பெருமை
தனது மனைவிக்கும் உண்டு
எனத் தணிந்து போய்விட்டானோ
என்ன செய்வேன்! என்ன செய்வேன்!”

பாட-345:

ஒரு வேளை இராமனின் அன்னையும்
இளவல் பரதனும்
மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்றார்களோ!
இருக்காது இருக்காது
பதினான்கு வருடங்கள் நிறையாமல் திரும்பமாட்டார் அவர்
ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது
இடர் படரப் படர பிறர் அடையாத வலி அடைந்தாள்.

பாடல்- 346:

முன்பு
“முரன்” எனும் அசுரன் ஒத்தவர்கள்
போரிட்டார்களே...
எல்லையில்லா மாய வஞ்சக அர்க்கர்களுடன் போரிட
இன்னும் ஒரு போர் உள்ளது போலும்” என்று நினைத்தாள்
கரன் முதலிய பதினான்கு ஆயிரம் நபர்களுடன்
நிகழ்ந்த போரினை எதிரே கண்டது போல்
கலங்கினாள் சீதை.

பாடல்-347:

இராமன் ஓர் ஆண்சிங்கம்
சிங்கத்தின் தன்மையும் உண்டு அவனிடம்
கேகய நாட்டு கைகேயி
“நெடுநிலமான கோசல நாடு
உன் தம்பிக்கு உரியது” என்றதும்
அது கேட்ட இராமபிரான் முகம்
முன்பு இருந்ததைவிட மூன்று மடங்கு பொலிவானதே!
அதை நினைத்து வாடினாள் சீதை.

பாடல்-348:

“அரச பதவி நீ அடைக” என்றாலும்
சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் முகம் தான்
“அரச பதவி துறந்து காடு செல்க” என்றாலும்
சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் முகம்தான்
அப்படிப்பட்ட தன்மையுள்ள
இராமபிரானை எண்ணி வாடினாள் சீதை.

பாடல்-349:

கங்கை தேங்கும் திருமுடியும்
மூன்று கண்களும் சிவந்த சிவன் அம்சமே
நீண்ட வில்!
அதனை
 இரண்டு துண்டுகளாக்கி விழச்செய்த
இராமபிரான் தோள் வலிமை நினைந்து
மெலிகிறாள் சீதை.

பாடல்-350:

இந்திரனுக்கு  துன்பம் செய்த
கரன் தூஷணன் உள்ளிட்ட
பதினான்காயிரம் அரக்கர்கள் படையை
மூன்றே நாழிகையில் வீழ்த்தினான் இராமபிரான்
அந்த வில்லின் சிறப்பு புகழ்ந்து
ஏங்கி வெதும்புகிறாள் சீதை.


 -அனுமனோடு மீட்போம்.

Thursday, 22 August 2013

உனது பறவை




எவ்வளவு அதிர்ஷ்ட்டம் உனக்கு
நீ வைத்திருந்தாய் அபூர்வஜாதிப்பறவை ஒன்று
ஆசையாக வளர்த்து முடித்தாய்
என்ன ஒரு துரதிருஷ்டம்
உன்  பறவை பறக்கவேயில்லை
சிறகை விரிக்கவில்லை வானம் அறியவில்லை
உன் பறவை என்பதால் குறை என்பது நிறை ஆகுமா
கேட்டவர்களிடம் வருத்தமாய்  சொன்னாய்
சிலர் பற பற என்று பாடம் எடுத்தனர் பறவைக்கு
சிலர் சிறகுக்கு எண்ணெய் தடவியும் பலனில்லை
துறவி ஒருவர் வந்தார்
ஏணி போட்டு தூக்கிக்கொண்டு உன் பறவையை
உச்சி மரக்கிளையில் அமர வைத்து
மரக்கிளையை எதிர்பாராமல் வெட்டிவிட்டார்
பயந்து விழும் பயணம் ஆரம்பிக்க
இடமும் வலமும் தவித்துப் புரண்டு
நிலை சரி செய்ய இப்போது
தானே பறக்கிறது உன் பறவை
நிலை தடுமாறி
சிக்கல் வரும்போது தானே பறத்தல் சக்தி
என்று புத்தி புகட்டுகிறது உன் பறவை.
   

Wednesday, 21 August 2013

நண்டு தியானம்

வட்டக்கிணறு போன்ற இரும்புத் தொட்டியில்
ஆயிரம் நண்டுகள் கொட்டப்பட்டு இருந்தன
மேல்புறமாக
சூரிய ஒளியில் புறா ஒன்று பறந்ததும்
நண்டுக்குப் புரிகிறது வானம் பற்றிய விவரங்கள்
ஏக்கத்தோடு கூறியது;
“என்னை தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது நண்டுகள்
பிடித்து இழுப்பதால் பறக்கும்வாழ்வை இழந்தேன்”
“அதல்ல நண்பா.. நீ பிடித்து இழுக்கும் நண்டுகளையே
எண்ணுவதில் காலம் போக்கினாய்
இன்றுமுதல் வானம் பற்றி தியானம் செய்”

ஆறும் அவனும்

ஆறு என்னவோ அழைத்துக்கொண்டுதா ன் உள்ளது
“வா! குளி ! நீந்து!”
யார் போய் சொல்வது அவன் மூளைக்குள் புகுந்து?
பாதி குளியலையும் குளிரையும்
புத்தியாலேயே செய்வதுதான் துயரம் என்று.

யானைப்புன்னகை

காடுகளில் காணவேண்டிய கம்பீர யானை
இடுக்குகளில்  வளர்வது கண்டேன்
நீ யானைதான் எனப் பல முறை கூறும்போதெல்லாம்
இன்னும் சில சிறிய சந்துகளைக் கண்டுபிடித்தேன் என
புன்னகை புரிகிறது
சகிக்க முடியாத புன்னகை அது
தன்பலம் அறியும் யானை ஒருநாள் என்பதால் அதற்கு
சிநேகிதமான புன்னகையே வீசுவேன்.

Tuesday, 20 August 2013

மெல்ல மெல்லச் சிவனாகுதல்



சொல்லத் தகுமோ
நடுவிலிருப்பவர்கள் வாங்கும் சொல்லம்புகளும் அடிகளும்
“இவன் செய்தது சரி”
என அவனிடம் சொல்லமுடியாமலும்
“அவன் செய்ததும் சரி” என
இவனிடம் சொல்ல முடியாமலும் நின்று
இரு பக்கமுள்ள புழுக்கச் சொற்களும் ஏச்சும்
கேட்டு கேட்டு
செவிக்குள் குண்டலம்
ஒரு மண்டலமாக விரிந்து ஆட ஆட
அதில் தப்பிக்க
இரு கால்களால் ஓட முடியாமல்
ஒரு கால் தூக்கி ஆடி
தப்பிக்கும் முயற்சியில்
நடராஜன்  ஆகுதல் தான் எல்லையோ ஐயா.

Sunday, 18 August 2013

எனக்கென்று..

எனக்கென சிறுநதி வைத்திருந்தேன்  அதில்தான்
எருமைகளின் காலைக்குளியல்
எனக்கென கொஞ்சம் வானம் சட்டைப்பையில் வைத்திருந்தேன்
அதில்தான் பட்டம்விடுவேன் என்கிறார்கள் தெருவாசிகள்
எனக்கென ஒரே ஒரு இயற்கை ஓவியன் வைத்திருந்தேன்
திருவிழாவில் கதவிலக்கம் எழுத மட்டுமே
அழைக்கிறார்கள் ஊர்க்காரர்கள்
எனக்கென கால்கள் ஓரம் நடைபாதைபுற்கள் இருந்தன
அதை உண்ணவே எனது பேதமை ஆர்வமாகிறது
எனக்கென வாங்கிய புல்லாங்குழல் துளைகளில்தான்
குளவிப் புழுக்கள் மண்கொண்டு மூடும் 
எனக்கென இருந்த நண்பன் ஒருவன்
அநீதியாய் வேலை துறந்தான்
எனக்கென ஒலிக்கும் இசைப்பாடல்கள் நடுவில்தான்
அறுபதுக்கும் மேலே விளம்பரங்கள்
எனக்கென இருந்த அம்மாவின் இதயம் முழுதும்
தேவையே இல்லாத தனிமை அழுத்தங்கள்
எனக்கென உணரும்  மரியாதைமிகு அவதிகளை வைத்திருந்தேன்
அதைச்சொன்னால்
சில்லு சில்லு கண்ணாடியாய் உடைப்பார்கள்
என்ன ஒரு கருணை
எனக்கென ஊதினால் உலகம் முழுதும் விரியும் ஒரு பலூன்
வைத்துள்ளேன்
நல்லவேளை கடவுள் அதனை எனக்குள் விட்டுவிட்டார்!





சில காரணங்கள்



சில காரணங்கள் புரிவதேயில்லை
சிலர் எடுத்துச்சொன்னாலும் சரி
பலர் சொல்லிவிட்டுப்போயிருந்தாலும் சரி
விளக்கவும் முடியவில்லை
விளங்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் இல்லை
காகங்களுக்கு வடை மட்டுமே ஏன் அதிகம் பிடிக்கிறது?
வயதும் நோயும் புரியும்போது அற உணர்வு ஏன் அதிகமாகிறது?
பெட்ரோல்விலை ஏறும்போது மட்டும் கோபமும்
பிறகு மறப்பும் ஏன் நிகழ்கிறது?
ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் மட்டும் கட்டாயம்
சில மணிநேர மூடு அவுட் ஏன் நிகழ்கிறது?
ஜீன்ஸ்கள் ..முன்னோர்கள்.. வினைப்பயன்கள் ..
எதை ஒத்துக்கொள்வது - 
வெய்யிலில் நடப்பவனுக்கு வெய்யில் பற்றி எதற்கு ஆராய்ச்சி
நடந்து போகணும் மெல்ல
வேறென்ன சொல்ல

Friday, 16 August 2013

ஈசல் ஞானம்

ஒரு நாள் எனினும்
உயர வழி தேடு!
உயிர் போகும் எனினும்
மறு நாள் வரை பற!
இறந்த ஈசல் இறகுகள்
காலை ஈரத்தில்
பெருக்கித் தள்ளப்படும்போது
பறந்து பறந்து சொல்லுகின்றன என்னிடம்.

சுந்தர காண்டம்(301 --325)





பாடல்-301:

உறங்கும்போது இராவணன்    தலைகளில் உள்ள
மாணிக்கங்கள் பதித்த மகுடங்கள்
உதிக்கும் இளம்சூரியன்
மலை மீது ஏறியது போல் உள்ளன
அது மட்டுமா?
பலதோள்களும் பல தலைகளும் பரப்பி - 
படுத்துத் தூங்குவது இரணியனைக் கொன்ற
நரசிங்க மூர்த்தியின் இராவண வடிவம் போல உள்ளது!

பாடல்-302:

உறங்கும் இராவணன் !
இருபுறமும் அரம்பையர் ஆயிரம்பேர்!
பொன்காம்பு கொண்ட கவரி வீசுகின்றார்கள்
கற்பக மலரின் தேன் துளி கலந்த
பசுங்காற்று அதனால் உண்டாக்கி
அவனது நீண்ட மேனி வெதும்புகிறது
சீதையை நினைக்கிறான்
பெருமூச்சு விட்டு நினைக்கும்போதே உயிர் தேய்கிறான்!

பாடல்-303:

வெண்மதிக்குழந்தை சூடிய சிவபெருமானின்
கயிலை மலையை குலுக்கிய தோள்களில்
திசை யானைகள் மோதிய பழைய வடுக்கள் இருந்தன
அவற்றின் நடுவே -  
இப்போது பசும்புண்கள் - 
மன்மதனின் கொடிய அம்புகளால்!

பாடல்-304:

இராவணனின் உறக்கம் எப்படியிருக்கிறது?
தென்றல் காற்று 
இராவணன் மீது பூசிய  சந்தனத்தில் படுவதால்
காதல் கனவை வளக்கும்
துருத்திக் காற்றாகி வீசுகிறது
காந்தள் மலர்விரல்கள் கொண்ட சீதையிடம்
மனம் முதலான அந்தகரணங்கள் ஓடிவ்¢ட்டன
இப்போது - 
பாம்புகள் நீங்கிய புற்று போல
நெஞ்சம் குழைந்து உறங்குகிறான்.

பாடல்-305:

இயல்பாகவே ஊக்கம் அதிகம் இராவணன்
அனைத்து திசைகளிலும் வெல்வதாகச் சொன்னபடி
சொன்ன வீரர்களோடு போரிடுவான்
வீரம் மிகுந்த கைகளால் வாரி வாரி உண்டு விட்டான்
திறந்த வாயுடன் உறங்குகிறான்
திறந்த வாயின் இரண்டு ஓரங்களிலும் வழியும் உணவு
கோரப்பற்கள் முளைத்தது போல உள்ளன
தேவர்களின் புகழ் வழிவது போலவும் உள்ளன.

பாடல்-306:

இராவணனின் உடல் வெம்மையால்
மலர்ப்படுக்கை வெந்தது
தீப்பொறி எழுந்தது
புள்ளிவெண் மொக்குகள் போல
வியர்வை கொதித்துப் பொங்கியது
கள் வழியும் மாலையில்
சுற்றிய தும்பிகள்
கரிந்து சாம்பலாயின இத்தனைக்கும்
இராவணனின் பெருமூச்சே காரணம்!

பாடல்-307:

திருமாலின் சிந்தை செல்வது சீதையிடமே!
அது போல் -  தற்போது
இராவணன் சிந்தையும் ஆனது!
அதனால்
மலர்ப்படுக்கையில் பொய் உறக்கம் தான் வந்தது
இராவணன் -  
காதல் எனும் நீரால்
அவன் தன் உயிரையே அம்மியில் வைத்து
அரைத்துக் கொண்டிருக்கிறான்!

பாடல்-308:

மிகுதிப்பட்ட நினைப்பு
முற்ற ஆரம்பித்தால்
உருவம் தோன்றும் அல்லவா!
ஆம்! சீதை உருவம் வந்தது
காதலால் நடுக்கமுற்றான்
“தேன் சிந்தும் மொழியாள்
ஏதோ ஒரு வகையில் இணங்கி என் அறையுள்ளே
வந்து விட்டாள் அல்லவா” என
அவன் மயிர்ப்புறங்கள் பொடித்துப் போயின.

பாடல்-309:

நுட்பமான அழகான
தோகை கொண்டது மயில்
எனினும் அது
தானிருக்கும் மலை விட்டு
வேறொரு மலை சேருவது மிகவும் கடினம்
அது போலவே -  மயில்சாயல் பெண்களும்
இராவணனின்  தோள்களை
அப்படித் தான் கருதினர்!

பாடல்-310:

உலகைச் சுற்றிலும் கடல் தான்
கடலின் மேல்
சூரிய கிரணங்கள் படர்ந்து ஒளிவீசுவது போல
இராவணன் மார்பில்
ஒளி வீசுகின்றன மாணிக்க மாலைகள்!
சிவனின் மழு
திருமாலின் சக்கரம்
பிரம்மனின் வச்சிராயுதம்
மூன்றின் வலிமையும் துடைத்த மார்பு
இராவணன் மார்பு!

பாடல்-311:

இராவணன் எட்டுத்திக்கு யானைகளுடன்
போரிட்டபோது -  
அவன் மார்பின் மலர் மாலை வண்டுகள்
யானைகளின் மதநீரை மொய்த்தன!
இராவணனின் மார்பு சந்தனம்
திசை யானைகள் நெற்றிக்குப் பொட்டு வைத்தது!
யானைகளின் குங்குமம் -  
இராவணன் மார்புக்குப் பயணமாயின!
அதனால் அவன் மார்பு
யானையின் தந்தங்களால் உழப்பட்டது !
இராவணனின் கையில் உள்ள வடிவேலின்
போர்குணத்துக்குப் பயந்து
அவன் தாளைத் தொழுதுபணிந்த
பகை வேந்தர்கள் மிக அதிகம்
ஆம்!
அவர்கள் மகுடங்கள் மோதி மோதி
இராவணன்  பாதங்கள் வடுக்கள் கண்டுவிட்டன!

பாடல்-312:

தனது ஒப்பற்ற வடிவம் திருமாலின் வாமன வடிவைவிட
சிறிதாக்கி அனுமன் 
இராவணனின் பத்து தலைகளை  இருபது தோள்களை
உற்று நோக்கி காண்கிறான்
உறுதி கொண்டான்
“இவன் இராவணன்” என்றது அறிவு
மனம் செயல்படும் முன்னே
 அனுமனின் கண்கள் கோபமுற்றன
செந்நிறமான ஊழித் தீயை கண்கள் கொட்டின
அந்த வெம்மையால் -  
அண்ட கோளத்தின் - 
மேல்பகுதியும் கீழ்ப்பகுதியும் பிளந்து வெடித்தன.

பாடல்-313:

அனுமனின் மனம் கொதிக்கிறது
“வாள்விழி சீதையைக் கவர்ந்த
இராவணனின் மணிமுடிகளை
கால்களால் உதைத்துத் தள்ளுவேன்
சிதறச் செய்வேன்
அப்படி இல்லையெனின் என் தோள் வலிமை எதற்கு?
நெடு வான்புகழ் எனக்கு எதற்கு?
அப்படி நிகழ்த்தாவிட்டால்
இராமனின் அடியவன் ஆகமாட்டேன்!

பாடல்-314:

அனுமன் மேலும் திகைத்தான்
இராமனுக்கு அடிமை பூண்டது என்பது
வெறும் நடிப்பா?
சீதையை சிறை பிடித்த இராவணனுக்கு
நான் கண்ட பிறகும் உயிர் இருக்கலாமா?
தோள்கள் உடைப்பேன்
தலைகளை உதைத்து உருட்டிக் கொல்வேன்
அவனையும் முடித்து  இவ்வூரையும் முடித்த பின்
எது நடந்தாலும் எனக்கென்ன”

பாடல்-315:

இப்படியாக நினைத்து ஊக்கமுடன்
இரு கரமும் பிசைந்து எழுந்தான்
புறப்பட்டான்
ஒரு நொடி உணர்வு!
தனக்கே உரைத்துக்கொண்டான்
“இது இராமபிரான் இட்ட பணி அல்ல
ஒரு செயலை ஊக்கமுடன் முயன்று
வேறொன்று செய்தல்
சரியான உணர்வு அல்ல
பிறகு நினைத்துப் பார்க்கும்போது
இது பெரும் பிழை தந்துவிடும்” என்று விலகினான்.


பாடல்-316:

அனுமன்
தன் செயலை அடக்கிக் கொண்ட ஒழுக்கம்
நஞ்சினை உண்ட சிவனின் ஒழுக்கம் போன்று
ஆழ்ந்த சிந்தனை சார்ந்தது
உலகையே அழிக்கும் ஆற்றல் இருப்பினும்
தனக்குரிய காலத்தை எதிர்பார்த்து
கரை கடக்காமல்
 காத்திருக்கும் கடல் போன்றது.

பாடல்-317:

இப்போது எனக்குள் பிறந்த
பெரும் சீற்றமும் கோபமும்
எனக்குள்ளேயே அடங்கட்டும்
“கற்றைப்பூங்குழல் சீதையை
சிறை வைத்த இராவணனை
ஒரு குரங்கு முடித்துவிட்டது என்றால் அது
இராமபிரானின் வில் தொழில் போருக்கு
குறைவு தருமே” என தன்னைக்
குறைத்துக் கொண்டான்.

பாடல்-318:

தன்னை அடக்கிய அனுமனுக்குள்
இன்னொரு புரிதல் வெளிச்சம் உண்டானது:-
“இராவணன் தனியே தவிக்கிறானே தவிர
பிற மகளிர் இவனுடன் இல்லை
கற்புச்சிகரம் சீதையும் இவனுடன் இல்லை என்பதால்
நல்ல நிலையில் தனித்து உள்ளான்
என்பது தெரிகிறதே!”



பாடல்-319:

“இனி இங்கு நிற்பதால்
ஒரு பயனும் இல்லை” என
மலையின் தோளுடைய அனுமன்
இராவணன் அரண்மனை விட்டு நகர்ந்தான்
சில நொடி நின்றான்
மனம் பொருமிற்று
இத்தனை  பெரிய நெடுநகரில்
பொன் அணி பூணாத சீதை இல்லையே

பாடல்-320:

“ஒரு வேளை
கற்பு அழியாத குலமகளை கொன்று விட்டானோ
கொடிய செயலால் தின்று விட்டானோ
எங்கு சிறை வைத்தானோ
சிறியேனுக்கு ஒன்றும் உணர முடியவில்லையே
மீண்டும் திரும்பி இராமபிரானிடம்
என்னவென்று உரைப்பது?
இத்துயரம் அகல ஒரே வழி
நான் இறப்பதுதான்!”

பாடல்-321:
என் பயணமே வீண்
சீதையோடு வருவேன் என இராமபிரான் காத்திருப்பான்
வானர அரசன் சுக்ரீவன் காத்திருப்பான்
பகைவரை அழித்து
நானும் அழிந்திருக்க வேண்டும்
அப்படி ஏதும் நடக்காமல்
வீணாக இறந்துவிடுவேனோ!

பாடல்-322:

“சீதையைக் கண்டு வருவேன்” என்று
குறிப்பிட்ட நாளும் கடந்துவிட்டது
உயிர்விட முற்பட
அங்கதன் முதலானேவரைத் தடுத்து
நான் ஆரம்பித்த முயற்சி பலிக்கவில்லை
அதன் பின் உயிர் வாழ்வேனோ
“புண்ணியம் என்று ஒரு பொருள்”
எனை விட்டு நீங்கி விட்டது போலும்!

பாடல்-323:

இலங்கை மதிலின் நீளம்
ஏழு நூஏறு யோசனை
அதில்
நான் காணாதன இல்லை
பெருந்தேவி சீதையைத் தவிர!
கடலைத் தாண்டிய என்னால்
துன்பக்கடலில் வீழ்ந்து அழிந்து விடுவேனோ!

பாடல்-324:
வலிய அரக்கன் இராவணனை
பற்றிப் பிடித்து
வாயில்குருதி வருமாறு
என் கரத்தால் அடித்து
“சீதையைக் காட்டு” என்று காணமாட்டேனோ!
அல்லது
சூரியஒளி போல் வேல் கொண்ட இராவணனும் இலங்கையும்
அரக்கு போல் உருகிஅழியுமாறு
நெருப்பு மூட்டமாட்டோனோ!

பாடல்-325:

தேவர்களை சீதை எங்கே என்று கேட்டால்
அரக்கன் இராவணனுக்கு அஞ்சி
உண்மை சொல்லப்போவதில்லை
அவர்களே துணிவில்லாமல் இருக்கும்போது
பிறரும் அப்படித்தான்
சூழ்நிலை இப்படி எனில்
எப்படி தெரிந்து கொள்வேனோ
உடல் அழிந்து உயிர் நீங்காமல்
உயிர் சுமக்கின்ற உணர்வும் இல்லாமல் இருக்கின்றேன்.

               --அனுமனோடு மீட்போம்.

Thursday, 15 August 2013

மங்கல இசைக் கலைஞன்

எத்தனை இனிய நாயன இன்னிசை ஆலாபனை
எத்தனை மேளவகைத் தொடர் ஆரோகணம்
எத்தனை சுருதி சேர்ப்பு ஜாலரா மெல்லிய சேர்ப்பு
அத்தனையும் யார் ரசித்தார் திருமண மண்டபத்தில்
அவரவர் பரபரப்பு இரைச்சலில் அலைகின்றனர்
எதையும் காணவில்லை நாயனக் கலைஞன்
மேளக்காரர் தலைரசிப்பு மட்டும்தான் தனக்கு எனும்
அவநம்பிக்கை கொள்ளவில்லை அவன்
தன் இசையில் தானே லயித்து
தன் படைப்பை தனக்கே சுத்தமுடன் ரசிப்புடன்
திருமண மண்டபக்காற்றில் மிதக்கவிடும் கலையாக  இரு
கலைஞனாக இரு
ஏ மனமே உனக்கிது கூறினேன்
நீ பாடு ஆனந்தமாய்
கேட்போர் உள்ளனர் வாழ்க்கை பரபரப்பு மண்டபத்தில்
சர்வ நிச்சயம்!

Wednesday, 14 August 2013

67ஆம் சுதந்திர தினமே




விம்மும் தியாகமே
தியாகிகளின் நெஞ்சு வலியே
தியாகங்களின் தீபாவளியே
பல்லாயிரம் இளைஞர்கள் பெண்கள் எழுதிய வேள்வியே
சத்தியத்தீர்ப்பு நாளே
காண்பன எல்லாம் மறையுமென்றால்
மறைந்தனவெல்லாம் காண்போமன்றோ என பாரதி வினவிய
வினா-விடைத் தாளே
இப்புனித நாளில் சிலமிட்டாய்கள் கொடி அணிதலுடன்
எனக்கொரு அவசிய பணியுண்டு
1.    குழந்தைகளுக்கு “ஜனகண மன” முழுப்பாடல் பாட அறிய வைத்தல்
2.    பித்ரு வழிபாட்டில் கொடிகாத்த குமரனையும் ராஜாஜியும் சேர்த்தல்
3.    குல தெய்வம் யார் எனக் கேட்டால் சத்தியசோதனை நூல் கூறல்


அப்பாவுக்கு 82







நேரில் சென்று சொல்ல ஆசைப்பட்டேன் வாழ்த்தாக
ஒரு நாள் லீவாகும்
எட்டுமணிநேரப்பயணம் ஆகும்
செலவாகும்
சுற்றியுள்ள வேலைகள் பிடுங்கித்தின்கின்றன
இத்தனையும் தாண்டி வந்தேன் என சொன்னாலும் வருந்துவார்
சொல்லவும் விடாது  என் இதயம்
பேசிவிடலாம் என செல் எடுத்தேன்
பிறந்த நாள் எனச்சொல்தல் இறப்புக்கு அருகில் என
நினைவூட்டி விடுமோ என்றும் அச்சம் அமுக்க
அவரோ தன்னை மறந்த பட்டமாய்
அடுத்தடுத்த தலைப்புகளில் நெல்லிமூட்டையாய் அவிழ்க்க
வாழ்த்துகள் என்று ஒற்றைச்சொல் முனகியபோது
எதற்கு என்று கூட கேட்கவில்லை
பிறந்தநாள் கொண்டாடி பழக்கமே படாத அப்பா!  

கேட்க எண்ணுவேன்





வாதாமர இலையே..
கீழே பச்சையும் சிவப்புமாய் கலந்து  வீழும் இலையே
நீ  கீழே விழுந்து ஆரஞ்சு நிறமுடன்
மரம் நோக்கிக் கூறும்
அந்த மீதமுள்ள கவிதையை
நீ ஏன் மரத்தில் இருந்தபோதே எழுதவில்லை?
                    



Monday, 12 August 2013

சுந்தர காண்டம்

பாடல்-271:

“இராவணனின் தோள்களுக்குத்தான்
எத்தனை வலிமை!
மேருமலையை வில்லாக வளைத்து
சிவபெருமானின் கயிலை மலையை அசைத்தவை!
அப்படிப்பட்ட உயர்ந்த தோள்களில் பூசப்பட்ட சந்தனத்தை
தமது முலைகளால் கவர்ந்தோமே”
என்று நினைத்து இன்பம் அடைகிறார்கள்
சில இயக்க மங்கையர்கள்!

பாடல்-272:

உயர்ந்து எழும் நான்கு திசைக்கடல்கள்
ஒன்றாகக் கலந்து கோர்த்து
பெரு வெள்ளமாகும் பிரளயத்தில்
ஆடுகின்ற சிவனின் புகழை
தனது கை நரம்பினால்
பெரும் பண்களும் ஆசைப்படும்படி
பாடியது இராவணன் அன்றோ ! என புகழ் பாடுகின்றனர்
இயக்க மாதர்கள் சிலர்.

பாடல்-273:

இயக்க மாதர்கள் இப்படியாக இருந்த
பல்லாயிரம் வீடுகளைக் கடந்தான்
நீதிநெறி அனுமன்
பின்பு -   
இராவணனின் குலம் சார்ந்த
அரசகுடும்ப அரக்கியர் வாழும்
இடத்தில் தேடப்புறப்பட்டான்.

பாடல்-274:

அரக்கியர் மாளிகைகள் - 
சுவர்களில் பதிந்த மாணிக்கங்களால்
இருளிலும் ஒளி வீசின
அதனால் - 
விளக்குகள் 
தேவை இல்லை!
தோழியர் கூட்டம் நீங்கியதும்
அரக்கியர்கள் தனியே வாடினர்.
அவர்கள் மனங்களோ - 
இராவணனோடு போய்விட்டது!


பாடல்-275:

அரக்கியர் சிலர்
கூந்தல் அழகு மிக்கவர்கள்
அக்கினிக் பிழம்பு மீது
கஸ்தூரிக்குழம்பு பூசியது போல இருப்பார்கள்
கூந்தல் மொய்க்கும் புகை
வண்டுகளுக்குச் சமம்!
மலர்ப்படுக்கை பகையாகி விட்டது
பளிங்குக்கல்லின் குளிர் மேடையில்
படுப்பினும்
காமம் தணியாமல் வளர
நெஞ்சு கொதிப்பானார்கள்.

பாடல்-276:
அரக்கியர் சிலர் - 
மாலை நேர வானம் போல இருந்தார்கள்
எப்படி?
அவர்கள் ஒப்பற்ற உடம்பு  - 
பரப்பு மிக்க ஆகாயம்
அவர்கள் நெற்றி - 
பிறைச்சந்திரன்!
அவர்களின் முத்து மாலை -  
ஆகாய விண்மீன்கள்!
அவர்கள் இடை -  
மின்னல் கொடி!
அவர்கள் திரண்ட கூந்தல் -
முருக்க மலரின் ஒளி கொண்ட செவ்வானம்!
மையுண்ட கண்கள் -  
மேகம்!

பாடல்-277:

பிரிவுத்துயரை மறக்க
அரக்கியர் கண்ட இன்னொரு வழி இதுதான்  :-
ஓங்கிய மாடம் ஏறினர்
எள்ளி நிலவொளி முற்றம் சென்றனர்
தோழியரும் வந்தனர்
நீலோற்பவ மலர் போன்ற கண்கள்
நிலவொளியால் நிறம் மாறின
சுருண்ட கூந்தல் மேகம் சரிய
வான நட்சத்திரம் கைகளால் பறித்து
அவற்றை கழற்சிக் காய்களாக எண்ணி
விளையாட முற்பட்டனர்!

பாடல்-278:

பிரிவுத்துயர் மறக்கச் செய்ய -
தேவமகளிரான பெண்டிர் கூட்டம் முயன்றது
ஆகாய கங்கை நீரைக் கொணர்ந்தனர்
அந்தக்குளிர்ச்சி போதவில்லை
கோபம் கொண்டனர் சிலர்
இரத்தினம் பதித்த மாடத்தில்
இடை தடுமாற ஏறிச் சென்று
மேகங்களை விரலால் கீறி
அதில் ஒழுகும் நீரில்
மஞ்சனம் ஆடினர்!

பாடல்-279:

இன்னும் சிலர் - 
“பாம்பரசனின் செந்நிற மாணிக்கத்தை
இன்னுயிர்க் கணவன் இராவணன்
வலிதில் பறித்து
எனக்கு கொடுத்தான்
இது எனக்கு சூதாடும் காய்!” என்கின்றனர்.

பாடல்-280:

இன்னும் சிலர்
ஆடல் காணத் துவங்கினர்
யாருடைய ஆடல்?
பொன்மாளிகையில் முத்துப்பந்தல் கீழ்
அழகிய குடமுழாவின் தாளத்திற்கு
சித்த கன்னிகள் பாட
அழகிய தோள்கள் உடைய
அரம்பையர் ஆடுகின்றனர்!

பாடல்-281:

இன்னும் சிலருக்கு அழுகை!
ஆணி போன்று அறைந்த காதல்
அகம் சுட்டது
அருவி உண்டது போல் கண்கள் அழுகின்றன
````````````````````````````````````உறக்கம் தீர்ந்து``````விட்டது`
வீணையின் குரலும் அவர்கள் குரலும்
வேறு வேறு அல்ல எனுமளவில்
சிலர் பாடவும் செய்தனர்!

பாடல்-282:

சில அரக்கியர்கள் உண்டது -   
உறைப்பான “கள்”!
அதனால் மயங்கிச் சுழன்றன
கண்கள்!
குரவை பாடினர்
கூத்தாடினர் ஆரவாரமுடன்!
அப்போது -  
வாழை மரத்தின் அடித்தண்டு போன்ற
தொடைகளின் நடுவில் உள்ள
அல்குல் எனும் தட்டின் மீது
கட்டிய சேலைகள் தாழ்ந்தன
இடை அணிகளும் தாழ்ந்தன
அணிந்த குண்டலங்கள் ஒளி வீசின.

பாடல்-283:

இன்னும் சில அரக்கியர் -   
பல வகைப் பிராணிகளின்
குருதி குடித்து மயங்கினர்
நாக நஞ்சு போன்ற கள் குடித்தனர் அதனால் - 
“குச்சரி” எனும் பண் தன்மை
குரலில் கலந்து பைத்தியம் போல் பிதற்றினர்
“சச்சரி” எனும் தோல் கருவி போல
கைகள் தட்டினர்.
அல்குலின் மீது அணிந்த
மெல்லிய ஆடையையும் கிழித்துக் கொண்டனர்
“கலாபம்” எனும் இருபத்தைந்து இடை அணியும்
கிழித்துக் கொண்டனர்!

பாடல்-284:

சில அரக்கியர் - 
தயிர் நிறம் கொண்ட கள் பருகினர்
மனம் தடுமாறினர்
அறிவு மயங்கினர்
ஆரவாரித்தனர்
“என் மேல் தெய்வம் வந்தது!” என்றுபெருமூச்சு விட்டனர்
இரண்டு  கைகளையும் தலை மே உயர்த்தி சிலிர்த்து
உடல் கூசி
வாய் திறந்து கதறி ஓய்ந்தனர்.

பாடல்-285:

இப்படியாகப்பட்ட அரக்க மகளிர்
வரிசையாக வசித்த நான்கு  கோடி வீடுகளிலும்
அனுமன் தேடிப்பார்த்தான் சீதையை!
கிட்டவில்லை!
சித்தர்களின் பெண்நிலையான
சித்தியர்கள் வாழும் தெருவும் கடந்தான்
வித்தியாதர மகளிர் வீதிகள் அடைந்தான்.

பாடல்-286:

வித்தியாதர மகளிருக்கு
தன் கணவனாகிய இராவணன் மீது
நாளும் நாளும் வளரும் காதல்!
ஆனால் -  
சுறாமீன் வடிவு பொறித்த
நீண்ட மகுடம் பூண்ட
இராவணன் வருதலோ நிகழவில்லை
அதனால் - 
அவர்களது தளர்ந்த மனம்
அவர்களது இடையைக் காட்டிலும் அதிகம் துடித்தது!
ஆறுதல் தந்திட 
எழுப்பிய இசையோ
நாகம் -  
செவியில் நுழைந்தது போல துன்புறுத்தியது.

பாடல்-287:

“நன்னெறி முனிவர்களுக்கும் தேவர்களுக்கும்
சரண்புக இடமில்லாமல் துன்பம் செய்த
இராவணன் மீது அன்பு மிக்க
வித்தியாதர மகளிரை நாம்
பகைத்தே தீர வேண்டும்” என்று
முடிவெடுத்த குளிர் சந்திரன்
அரக்கியர் முலைகளை சுட்டெரிக்கிறான்
அதனால் சிலர் -  
பூங்கொடிகள்  போல வதங்கினர்.

பாடல்-288:

இராவணன் மீது கொண்ட காதலால்
வித்தியாதர மகளிர் சிலருக்கு
நிமிடம் , வினாடி முதலிய
சொற்ப காலங்கள் கூட
கற்ப காலங்களாக நீண்டன
முன்பு அவனைத் தழுவியதால்
முலையில் படிந்த சந்தனம்
கண்டு பெருமூச்சு விட்டார்கள்
முன்பு அவன் வரைந்த
“தொய்யில்” எனும் குறிகளும்
அவர்கள் உயிர் பிளந்து வருத்த
கண்கள் சிவந்தன!

பாடல் -289:

இப்படியாக - 
வித்தியாதர மங்கையர் வாழும்
பனிரெண்டு கோடி மாளிகைகள் கொண்ட
நெடிய தெரு முழுதும் சீதையைத் தேடினான்
அடுத்து -  
மூன்று உலக அதிபதியாம் இராவணனின்
பெரும் அரண்மனை நெருங்கினான்
அங்கே -   
சந்திரன் தோற்கும் சுந்தரமுகம் கண்டான்
மயன்மகள் மண்டோதரி
வசிக்கும் மாளிகை கண்டான்!

பாடல்-290:

அனுமனுக்கு ஒரே பேரின்பம்!
“நமது தேடும் பணி நிறைவுற்றது
மற்ற மாளிகையில்
இல்லாத சிறப்பு இதற்கு உண்டு
அது எது?
இராமனின் உயிரை விடவும் சிறந்த சீதை
வசிக்கும் பெருமை அது!
எல்லா வீடுகளும் மணிகள் அதில் - 
திருமால் மார்பில் உள்ள
“கெளத்துபம்” எனும் மணி போன்றது இம்மாளிகை!

பாடல்-291:

அந்த மாளிகையில் இருந்தது சீதையல்ல
மண்டோதரி!
அரம்பை மேனகை திலோத்தமை
ஊர்வசி முதலானவர்கள்
மலர் அம்புகள் இடப்பட்ட
அம்பறாத் துணி போன்ற
அவள் பாதங்கள் பிடித்துவிட்டனர்
கரும்பும் கசக்க
வாசிக்கப்படும் வீணை இசை
மண்டோதரி காதில் விழுந்தது
நறுமணம் மூக்கில் மணந்தது.

பாடல்-292:

வினையினால் விளையப்போகும் பயனை
எண்ணும் அறிவாளிகள்
பண்புக்குப் பொருத்தமற்றதைச் செய்வதில்லை
ஆசை அறுத்த ஆன்றோரும்
கீழோரின் கோபத்துக்கு ஆளானால்
நன்மை அடைவரா? தீமை அடைவரா?
பெருந்தென்றல் மீண்டும் மீண்டும்
சிந்தித்தது
துயிலும் மங்கையரிடம் செல்கிறது தென்றல்
“கட்டளை யாது?” என்று கேட்கிறது
ஊஞ்சல் போல
போவதும் வருவதுமாக இருக்கிறது காற்று.

பாடல்-293:
ஒளி வீசும் மாணிக்கங்களின் ஒளி அழியும்படி
மண்டோதரியின் உறங்கும் உடல்
ஒளி வீசியது
அனுமன் ஐயுற்றான்
மூண்டெழுந்த கொடுந்தீ
உயிரைச் சுட்டது போல சொன்னான்:-



பாடல்-294:

எலும்புடன் தொடர்புற்று
உடல் பெற்றதால் அடையும்
பெரும் பயன் இழந்தேன்” என்றவன்
தடையின்றி செல்லும் அனுமன்
மண்டோதரியை
சீதை என நினைத்தான்
அன்பாம் பாசத்தளைப் போக-
தெய்வ கற்பும் போக - 
வாழ்கின்ற சீதை இவளெனில் - 
“இராமனது புகழ்ப்பொலிவு அழியும்
இலங்கை அழியும்'
அரக்கரும் நானும்  இன்றேஅழிவோம்” என்றான் அனுமன்.

பாடல்-295:
“சீதையோ -  
மானிடப்பெண்களில் அழகி!
உறங்கும் இவளோ - 
மாறுபட்டவளாக இருக்கிறாள்
இயக்கியோ !
அரக்க மங்கையோ!
இராமன் மீது அன்பு வைத்தவர்கள்
காமன் மீது ஏங்கார்கள்
இவள் சீதையாக இருக்கமுடியாது
அப்படி நினைத்தது தவறு” என்றான்.



பாடல்-296:

உத்தமப்பெண்ணின் இலக்கணம்
இவளிடமும் உள்ளன
என்றாலும்
இவள் உடம்பு விரைவில்
எல்லையற்ற துன்பம் அடையும் என்று எடுத்துச் சொல்கிறது
மலர் சூடிய கருங்குழல் அவிழ்ந்து
தூக்கத்தில் வாய் குழறி
சில வார்த்தைகள் சொல்வது
“இவள் கணவன் இறப்பான்” என்பதன் அடையாளம்
“இலங்கையும் அழியும்” என்பதன் அடையாளம்.

பாடல்-297:

இராவணனாலும் பெயர்க்க முடியாத கயிலை மலைபோன்ற
தோள்களை உடைய அனுமன்
”இவள் சீதையல்ல” என உணர்ந்து
அந்த எண்ணத்தை நிறுத்தினான்
அந்த கலக்கத்திலிருந்து விடுபட்டான்
மாளிகை விட்டு வெளியேறினான்
மாமேரு மலையை சிறிதாக்கும் ஒரு மாளிகை கண்டு
அதனுள் சென்றான்




பாடல்-298:

அந்த மாளிகைக்குள்
அனுமன் நுழைந்தபோது தீய சகுனங்கள் நிகழ்ந்தன
அவை என்ன?
பூமியின் இடங்கள் நடுங்கின
பெருமலைகள் குலுங்கின
அரக்க மகளிர் கண்களும் புருவங்களும்
தோள்களும் வலப்புறம் துடித்தன
எட்டுத் திசைகளும் நடுங்கின
மின்னல் இல்லாமலே
வானில் இடி முழக்கங்கள் ஒலித்தன
மங்கலமான பூரண கலசங்கள் வெடித்தன.

பாடல்-299:

மாளிகையில் புகுந்ததும் நிகழ்ந்த
தீய நிமித்தங்களை
கண்ணாலும் கருத்தாலும் நோக்கினான்
உய்யும் பொருள் உணர்ந்தான்
உள்ளம் நெகிழ்ந்தான்
“ஐயோ! இப்பெரிய நகரின் செல்வம் அழியும்
எந்த குலமாயினும்
இரு வினை உண்டு
விதியை விட வலிது ஏதுமில்லை” என நெகிழ்ந்தான்.



பாடல்-300:

வேல்படைப் பெருங்கடல்
அரக்கருடன் வெளியே இருக்க
ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது
திருமால் எனும் கருங்கடல் தங்கியது போல்
ஒப்பற்ற அழகு இராவணன் உறங்க
கடல் போன்ற நூலறிவுக்கடல் அனுமன்
நுணுக்கமான கேள்வி அறிவுக்கடல் அனுமன்
இராவணனைப் பார்த்தான்.


      --அனுமனோடு மீட்போம்

Thursday, 1 August 2013

ஞானமரம் கண்டேன் !

தேக்கு மரம் தெரியும்!
அதன் வலிமைக்காக அறிந்திருப்போம் சொல்லிக்காட்டுவோம் ஆனால்
தேக்கு மர இலைகளை நேசிப்போமா?
நேசிப்போம் வாருங்கள்
பச்சை இலைகளின் பரப்பில்
அழகுடன் நெளியும் நரம்புகள் காற்றில் அலையும்,
மென் கவிதையின் ஆரம்பம் அது!

இன்று
அந்த தேக்கு மரத்தின் இலை உதிர்கால ஆரம்பம்
மெல்லிய பனிப்பொழிவு தொடங்கப்போகும் மார்கழி  முன் பருவ காலம்

எப்படியிருக்கிறாய் மரமே! என்று
நான் ஏதும் கேட்கும் முன்னர்
மனிதர்  வாழ்நிலை போல
நாலுவித பருவம்  சொல்லிற்று அதன் தோற்றம்

முதன்முதலில்
நட்டு வளர்த்து ஆளான போது
பிரம்மச்சரியம்

அடுத்த கட்டத்தில் -            
பூப்பூத்து
கிரகஸ்தன் எனும் இல்வாழ்க்கை காலம்

“மூன்றாம் பருவமான
துறவறத்தில் தானே இப்போது நீ இருக்கிறாய்?” என்று நான் கேட்டேன்

காவிநிற ஆடை தரித்தது போன்ற தோற்றம்
நோக்கிக் கேட்டேன்

“ஆம்” என்று அம்மரம் கூறிவிட்டால்
அதற்கடுத்த நிலையில்
“வானபிரஸ்த்ம்” ஆகிவிடுமே என்ற
அச்சமோடும் கவலையோடும்  நான் அதனைக் கேட்டேன்

“வானபிரஸ்தம்” என்பது மரண நிலை அல்ல
இருந்து வாழும் வாழ்விலேயே
துறவு மனதை கெட்டியாய் ஒட்டி விடுதல்!

“கூழுக்கும் ஆசை! மீசைக்கும் ஆசை என்பது போல
வாழும் வாழ்வுடனே
துறவு நிலை சாத்தியமா?”எனக் கேட்டதும்
தேக்கு மரம் கூறிற்று:

“கூழுக்கும் மீசைக்கும் ஆசையுற்ற ஒரு மனிதன்
கூழும் ஒட்டாமல் மீசையும் நனையாமல்
ஸ்டிரா எனும் உறிஞ்சு குழாய் கண்டதுபோல்
உனக்குள் நீயே ஒரு வழிகாண்” என்றது தேக்குமரம்.

தேக்குமரத்தின் வலிமை
அதன் வாக்கிலும் இருக்கிறது என்பது அறிந்தேன்
அழகிய துறவறம் பூண்ட
அந்த இனிய தேக்குமரத்தின்
ஆயிரமாயிரம் பச்சை இலைகளில் ஒன்று
ஆரஞ்சு வண்ண கோலம் கொண்டு
அட்சதை போல் என்மேல் விழுந்து ஆசி கூறிற்று!!

                        *****

அடிகள்

சிறு வயதில்
சிலேட்டில் தப்பாக எழுதும் எழுத்துக்கு
அடிப்பது அம்மாவின் கைகள் தான்

கணக்கில் ஏறுவரிசை இறங்குவரிசை
தப்பாகச் சொல்லிவிட்டால்
அப்பாவை முந்திக் கொண்டு
அப்போதும் அம்மாதான் முதலில் அடிப்பாள்

பள்ளி விட்டு தாமதமாக வர நேரிட்டாலும்
தங்கையுடன் சண்டை முற்றும்போதும்
நிலவைக் காட்டியும் சாப்பிட மறுக்கும்போதும்
பக்கத்து வீட்டுத் தோட்ட மாம்பழங்கள் திருடியபோதும்
முதல் ஆளாக பல தருணங்களில்
அப்பாவை முந்திக் கொண்டு
அடிக்க கை ஓங்கும் அம்மாவிடம்
காரணம் கேட்டே விட்டேன்

சிறிது வளர்ந்ததும் விளக்கம் சொன்னாள் அம்மா :-
“அப்பா அடித்தால் தாளமுடியாது உன்னால் !
 அதிகம் வலிக்கும் என்பதால் -
முந்திக் கொண்டு நான் அடிக்கிறேன் !
கோபித்து கத்திக்கொண்டே வேகமாய் கை ஓங்கி ஆனால் -
மெல்ல அடித்து உன்னைக் காத்திடுவேன்”


*****                                            

வார்த்தைச் சிக்கல்

இன்று நேற்றல்ல - இது அன்புக்கு ஏங்கும் பல கோடி மனிதர்களின் சிக்கல்!
அது எது? ஆம்! அதுதான் -
அன்பற்ற மனிதர்களின் வார்த்தையில் இருக்கும் வெப்பம் ! அதனை வடிகட்ட
ஒரு தனி இதயமே வேண்டும் !
எனக்குத் தெரிந்த மனிதர்கள் சிலர் சொல்லில் இருக்கும் -
சூட்டுக்குச் சமமாய்  பாய்லர் வெப்பமும் சுடவில்லை!
வேறு ஒரு வெப்பப் பொருள் காணவில்லை !
 சொற்களில் இருக்கும் மாலை நிழலை , ஏன் அறியாமல் பலர் வாழ்கின்றனர்!
சொற்களில் தேள் செய்யும் மனிதர்கள் குறித்து
ரகசியமாய் அஞ்சும் நான்-
சொற்களில் சிரிக்கும் மாலை மஞ்சள் வெய்யிலை  பகிரங்கமாய் அறிவேன்!!
நொணாப்பூ வாசம் போன்ற -
தெள்ளிய வாசம் நிரம்பிய சொற்கள் கூறினால் -
அவசர ஆத்திரமாய் -
உடனே  ஓர் அபத்தப் பேச்சின் சாலை திறக்கிறான் எதிர் பேச்சாளி!
என்ன செய்வது!
இப்போது புரிகிறது -      
நல் சொற்களில் விளையும் மகத்துவம் அறியாதவர்களே
கீறல் விழுந்தவற்றையும்
பிறரைக் கீறி விடும் சொற்களையுமே கூறுகின்றனர் !!
எப்போதாகினும் நேரமிருப்பின் என்று சொல்லமாட்டேன்- மனிதர்களே !
எவ்வப்போது இயலுமோ எந்த எந்த இடத்தில் இயலுமோ -
அங்கெல்லாம் நிரப்புங்கள்-
இனிமை நிரம்பிய உங்கள் ஆழமான சொல்லை என்பேன்!!!

*****                                                

சுந்தர காண்டம்

பாடல்-261:

இராவணனுக்கு
போர் புரிவது பிறவிக்குணம்
அவனது பொன் மாளிகை
முழு சந்திரன் எனத் திகழ்கிறது
சுற்றிலும் நட்சத்திரங்கள் தேவைதானே?
அப்படித்தான் இருந்தன
தொடராக
அவனது உரிமை மகளிர் வாழும் மாளிகைகள்!
அங்கு அணுகினான் அனுமன் ...

பாடல்-262:

முயல் வடிவில் கருப்புக்கறை மட்டும்
நிலவில் இல்லையென்றால்
எத்தனை அழகாக இருக்கும்!
அப்படி அந்த அழகையும்
வென்றவர் இயக்க மங்கையர்!
அவர்கள் வாழும் மாளிகை வீதிகளை
அடைந்தான் அனுமன்


பாடல்-263:

ஒளி மழை பொழிகின்ற மாளிகைகள்!
சீதைப்பிராட்டியைத் தேடிட வேண்டும்
பொருட்களை விரும்பும் கொடிய ஆசையை
வேரோடு களைந்த அனுமனால் மட்டுமே
ஆசையற்ற கண்களோடு
இயக்க மகளிர் வாழும் இடம்தோறும் தேட முடிந்தது
ஒளி மழை  மாளிகையின்
சாவித்துவாரங்களில்
நூலைவிட மெலிதாக மாறி நுழைந்தான் அனுமன்
இளம் தென்றலை விட
நுண்ணியதாக மாறியும்  நுழைந்தான்.

பாடல்-264:

இயக்க மங்கையர் நிலை என்ன?
அவர்கள் யார்?
மலை போன்ற யானைகள் உடைய
இராவணனிடம் சிந்தை வைத்து
ஏக்க மூச்சு விடுகிறவர்கள்!
தாமரை இதழ்கள்!
சித்திரப்பாவைகள் போன்ற அழகிகள்!


பாடல்-265:

இயக்க மங்கையரில் சிலர்
அகத்தில் உறக்கமின்றி
புறத்தில் மட்டும் கண்மூடி உள்ளனர்
மன்மதனின் அம்புக்கு பயமா?
கனவின் இன்பம் தேவைப்பட்டதா?
வஞ்சனைச் செயலோ!
நமக்குத் தெரியவில்லை!

பாடல்-266:

இராவணன் இல்லாத சோகத்தை
தாங்க முடியாத இயக்க மங்கையரால்
அவர்களில் சிலர் -  
மன்மதனின் பழுதில்லா அம்புகள்
பலமுறை பாய்ந்த
கொங்கைகள் பெற்றவர்!
ஊசலாடும் உயிர்ப்பு அவர்களுக்கு!
சித்திரத்திலாவது இராவணனைக்காண
ஏங்கினார்கள் சிலர்.

பாடல்-267:

இயக்க மங்கையர் சிலருக்கு
கண்ணீர் துளிர்த்தது
உயிரற்ற மங்கைகள் பேசுவதுபோல
தமது பூவைகளாகிய
நாகணவாய்ப் புள்ளிடம் புலம்பினர்:-
“என் உயிர் இராவணன் இங்கு வர அழைக்கவுமில்லை!
என் துயரம் அங்கு கூறவுமில்லை
எனக்கு இன்பமாகும் எதனையும்
நீ கூற மாட்டாய்”

பாடல்-268:

இயக்க மங்கையரை
ஈரத்தென்றல் சீண்டியதும் மெலிந்தனர்
தமது பாரமான கொங்கைகளைப்பார்த்து
பாதகனாகிய இராவணன் வீரத்தோள்கள்
தழுவவில்லையே என்று
சோர்ந்து சோர்ந்து
உயிர் மெலிய
துடிதுடித்தார்கள் சிலர்.

பாடல்-269:

இன்னும் சில இயக்க மங்கையர் -  
சிவப்பு ஒளி வீசும்
மாணிக்கப் பேரொளி வீசும் படுக்கையில்
நிறைவேறாத ஆசையுடன்
நாட்கள்  வீணாகக்கழிய மெலிந்து - 
அதனால்
செவ்வானத்து நிலவு ஒத்தனர்.


பாடல்-270:

இன்னும் சில இயக்கமங்கையர்
ஒளித்தெளிவு பெற்ற கற்பக மரத்தைச் சார்ந்த
பொற்கொடி பொன்றவர்கள்!
அவர்களின் தோள்கள்
ஊஞ்சலில் துயின்றாலும்
காதில் விழும் பாடகர்களின் பாடலும்
யாழிசையும் செவிக்கு தேளாயின!

          --மீண்டும்  அனுமன் 08/ 08/2013  வருவார்