Thursday, 31 January 2013

அருள் நமக்கு கிடைக்குமா!

          ஒரு கோடீஸ்வரர் இருக்கிறார். அவரிடம் யாசகம் கேட்டுச் செல்கின்றோம், கோவில் எழுப்பிட. அவர் தனது கணக்குப் பிள்ளையிடம் கூறி 50000 செக் தருகிறார். இப்போது பணம் தந்தவர் கணக்குப் பிள்ளை என்பதால் அவர் பக்திமான் என்று நினைக்கலாமா? கோடீஸ்வரருக்கு தானே அந்த புண்ணியம் போய்ச்சேரும்? அவர் தன் கையால் எடுத்துத் தரவில்லை, அவ்வளவு தான்.
            வேகமாக விரையும் காரினில் பின் சீட்டில் அமர்ந்து “இப்படிப்போ அப்படிப்போ” என டிரைவருக்கு கட்டளையிடுவார் கார் சொந்தக்காரர். ஓட்டாமல் உட்கார்ந்திருக்கிறார் என்பதால் அவர் காரின் சொந்தக்காரர் அல்லாமல் போய் விடுவாரா ? அவர் அந்நிலையில் இருக்கிறார் அவ்வளவுதான்.
            சிவபெருமான் அருளுதலை சக்தி மூலமாகச் செய்கிறான்.  இதனை சிவமே தனக்கு எடுத்து இயம்பியது என்று அகவல் பாடுகிறார் வள்ளல் பெருமான். அகவல் என்ற சொல் அழகானது. நாய் குரைக்கும். மயில் அகவும். அக ஓசை. காகம் கரையும். இக்கால கவிஞர்கள் தன் துன்பம் கண்டே கரைகிறார்கள். வள்ளல் பெருமான் உலகினர் துன்பம் அற்று வாழ சிவத்திடம் அகவுகிறார் இப்படி:-
“அருள் அலாது ஓர் அணுவும் அசையாது அதனால்
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே”
                அதுமட்டுமா சொல்கிறார். அருள் பெற்று விட்டால் எல்லாம் இயலும். இது உண்மை. அதனால் அருளுற முயல்க என்று சிவம் அருளியதாம் அவரிடம். அதாவது அருள் பெற முயற்சிக்க வேண்டும். முயற்சியிலாது எதுவும் கிட்டாது. பக்தியும் அதன் மூலம் அருள் பெற முயல்வதும் சோம்பேறித்தனமானவை அல்ல. அது முயற்சி தொடர்புடையது. அதனால்தான் அருள் பெற முயல்க என்றார் வள்ளலார்.
“பிரான் அருள் உண்டேல் உண்டு நல் செல்வம்
பிரான் அருள் உண்டேல் உண்டு நல்ஞானம்
பிரான் அருளில் உண்டு  பெருந்தன்மையும்
பிரான் அருளில் உண்டு  பெருந்தெய்வமும் ஆமே”
-    எனும் திருமூலர் வாக்கில் இறை அருளால் நாம் பெருந்தெய்வப் பண்புகளையும் பெற முடிவது புரிய வரும். வள்ளுவப்பெருந்தகை
“அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லாகி ஆங்கு” என்கிறார். 
           நிறையபேர் “ஆங்கு” என்ற சொல்தொடரை விட்டுவிடுகிறார்கள். அப்படிச் செய்தால் அக்குறள் தனித்தனியான இரண்டு வாக்கியங்கள் போல் உப்பு சப்பு இல்லாத முழக்கமாக இருக்கும். உலகப்பொது மறையாம் வள்ளுவம் அப்படி இருக்குமா? இருக்காது. உலகினருக்குத் தெரிந்ததை வைத்து, தெரியாததை விளங்க வைக்கிறார் வள்ளுவர் பெருமான் . பொருள் இலாதவரை இந்தப் பொருள் உலகம் மதிக்காமல் எப்படி விரட்டுமோ அது போல அருள் உலகிற்கு அருள் இருந்தால்தான் மதிப்பு என்பது விளக்கம்.  
           வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் வாழும் அன்னதான ஆதீன சித்தர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் தயவு வடிவானவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது கூறினார்:- “  இலங்கையில் இந்திய ரூபாய்கள் செல்லாது. அங்கு செல்லும் முன்பு அந்த நாட்டுக்கேற்ப பணத்தை மாற்றிக்கொள்கிறோம். அந்நியச்செலாவணி என்பார்கள்.  அதே போல, நாம் செல்லப்போகும் அருள் உலகத்திற்கு ஏற்ற புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும்” என் அழகுற விளக்கினார். எவ்வளவு அழகிய விளக்கம்! 

              எடுத்துக் கொடுங்கள். எடுத்து எடுத்துக் கொடுங்கள். குறையாது. ஆம். அட ஆமாப்பா. குறையாது. அப்படி ஒரு பொன் இருக்கிறது. அது எடுக்க எடுக்க அடுத்து அடுத்து ஓங்குகிறதே. மெய் அருள் என்கிற தங்கம் உனக்கு இருக்கின்றது. உனக்குள் இருக்கின்றது. தளரக் கூடாது. நீ எடு. நீ எடுத்தால் வளரும் தங்கம் அது. உன் உள்ளம் கிளறி இதைக் கூறுகிறேன் அப்பா. அப்படிப்பட்ட செம்பொன் அது. அது அருள் பொன் என்று உரத்துச்சொன்னார் வள்ளல் பெருமான்.

           *****

Tuesday, 29 January 2013

அறியும் பறவை

சைகைகள் தாண்டிபழிப்புகள் தாண்டி
தனது உயரம் அறிவிக்கிற பறவைக்கு ஒரு இடைஞ்சல்
நீர் நிலைகளில் விழுகின்ற தனது நிழலும்
தன்னைப் போலவே பறந்து பழிப்புகள் காட்டுவதாக!
பழிப்பு அறிந்த பறவைக்கு இன்னொன்றும் தெரியும்:
“நீர் நிலை தாண்டிய பின் -
பழிக்கும் நிழல் மாயமாய் மறைந்துவிடும்!”

(கல்கி 3.2.2013 இதழில் வெளிவந்த கவிதை)

Sunday, 20 January 2013

தான் இல்லாது கொடுக்கும் கலை

      “தானம்” என்பதன் தெளிவான விளக்கத்தை கீதை உபதேசித்துள்ளது. முதலில் , அது தகுதியுள்ளவர்களுக்கே செய்யப்பட வேண்டும். அதாவது அதனைப் பெறுகிறவன் , திருப்பித் தரும் அளவுக்கு வசதி வாய்ப்புள்ளவனாக இருக்கக்கூடாது. அப்படி வசதி வாய்ப்புகள் இருந்தால் “தானம்” என்பது தலைகீழ் ஆக வாய்ப்புண்டு.
         இரண்டாவதாக, தானம் என்கிற செயல் உண்மையிலேயே தேவைப் படுகிறவர்களுக்கு  நிகழ வேண்டும் என்கிறது கீதை. மூன்றாவது சரியான இடத்தில் நிகழ வேண்டும். (இக்கருத்து தானம் என்பது மிக ரகசியமாகவும் வேண்டாம். மிகவும் விளம்பரமாகவும் செய்யப்பட வேண்டாம் என்று பகவான் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்) நான்காவது: கொடுக்கிற நபர் தனது கடமையாக எண்ணியே உதவி அளித்தல் எனும் தானம் நிகழ்த்துதல் வேண்டும்.
          எதிர்பார்ப்பின் எந்த ஒரு கூறுபாடும் தானம் தருகிறவருக்கு இருந்துவிடக் கூடாது. மரியாதை பெறுதல் நிமித்தமாகவும் கூடாது. பெறுகிறவர்கள் அன்பை எதிர்பார்ப்பதும் கூடாது. எந்த மறுபலனும் அற்றதே தானம். இந்த நான்குவித கோட்பாடுகளும் நிரம்பியதே சாத்வீக தானம் எனப்படும். அது உண்மையானது . நல்லது.
            தானே முன் சென்று தருதலை குரானும் கட்டாயமாக்கியுள்ளது.
     கீதையும் பிறருக்கு கொடுப்பதை “தனது கடமை” என்ற உணர்வோடு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கண்ணில் தெரிகின்ற- கண்ணறியாமல் மறைத்த உனது ஒவ்வொரு சொத்துக்கும் “சகத்” குறிப்பிட்ட தொகையில் செலுத்தப்பட வேண்டும் என்று புனித குரான் கூறுகிறது. மறைத்தோ வெளிப்படையாகவோ தானம் செய்வதை புனித குரான் கொடுப்பவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறது. ஏனெனில் கருணையோடு செய்யப்படுவதை விரும்புகிறது. அதிகாரம் ,புகழ், கெளரவம் பெற விரும்பும் தானம் தானமே அல்ல என்கிறது புனித குரான்.
      மனிதன் என்பவனை வர்ணிக்க வேண்டுமானால் எதை எதை தியாகம் செய்தானோ அதில்தான் உண்மையாக இருக்கிறான் என்கிறது சாந்தோக்ய உபநிஷத்.
       ஜான் கார்மோ கூறுகிறார்:-  தியாகம் என்பது நமது வாழ்வின் பரிசு. அந்தப் பரிசு நமது நேரத்தினால் ஆக்கப்பட்டிருக்கலாம். நமது திறமையாக இருக்கலாம்.  நமது சொத்தாக இருக்கலாம்.


*****

Wednesday, 16 January 2013

செவிகளா ! கண்களா!

           
                சிந்திக்கச் சிந்திக்க திகைப்பூட்டுவதே வாழ்வின் அதிசயம். நிகழ்காலக் கடமைகளில் உழல்வது மட்டுமே நமது பொறுப்பு என அது நம்மை நம்ப வைக்கிறது. ஆனால் நாம் எதிர்காலக் கடமைகளுக்கும் இலட்சியங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அழுத்தபூர்வமான நிலையில் அது நம்மை அழுத்தி இருப்பதை மறுக்க முடியுமா ? இப்படிப்பட்ட வாழ்வியலைக் கொண்டுள்ள நாம் , நமது செயல்பாடுகளுக்குள் இயந்திரங்கள் பலவற்றைப் புகுத்திக் கொண்டோம். புகுத்துதலுக்கு விஞ்ஞானத்தைக் காரணமாகச் சுட்டினோம். அது நமது நேரத்தை மிச்சம் செய்வதாக கற்பனை செய்தோம். ஒரு கருவியால் மிச்சமாகும் நேரம் , இன்னொரு கருவியைப் பராமரிக்க ஆகும் நேரத்தில் கழிந்து விடுகிறது. பொருளுக்காக கருவிகளை நுழைத்து , கருவிகளுக்கான பொருளாகிப் போய்விட்டதே இந்த நூற்றாண்டில் நம் பரிதாப நிலை.
ஒன்றல்ல, இரண்டல்ல..எண்ணற்ற  கருவிகள் நம் வாழ்வைச் சூழ்ந்து விட்டன. எதற்குத்தான் கருவி என்றில்லை. பல் தேய்த்துவிடும் கருவி , உடல் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் கருவி, சின்ன வெங்காயம் உரிக்கும் கருவி, நாக்கைப் பிரட்டாமல்  உணவை மெல்லாமல் வயிற்றுக்குள் தள்ளும் கருவி , என்பவற்றைக் கூட எதிர்பார்க்க ஆரம்பித்துவைக்கிறது இன்றைய கருவிக்காலம். மாறாக,  நம் முன்னோர்கள் உண்ட உணவின் பலங்கள், அவர்களை அழியாத கோவில் படைப்புகளை நிர்மாணிக்கும் பலசாலிகள் ஆக்கி வைத்திருந்தன என்பதை எண்ணிப்பார்க்கலாம். போர் பயமற்ற அன்றைய சூழல் ஆன்மாவை நோக்கி , எளிதாக - ஆழமாக - உண்மையாக - மிகப்பெரும் தமிழர்கள் - அதிக எண்ணிக்கையில் ஈடுபட உதவிற்று,  ஆன்மீகம் சுத்திகரிக்கப்பட்டது. ஆகம விதிகளில்  நிர்ணயமான கோவில்கள் மிகப்பல சத்தியச் சுடராய் தலை நிமிர்ந்தன. இன்றும் அவை நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நமது ஆன்மா எழுப்பும் கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளிப்பன. இன்னும் அதன் சக்திகள் நமக்குள்தூண்டலை உற்பத்தி செய்கின்றன.

                ஏக்கப்பெருமூச்சுவிட வைக்கும் கடந்த காலத்தையும், இயந்திர வாழ்வையும் ஒப்பிட்டு மீண்டும் நுகத்தடி மாடுகள் போல நுழைவதாலோ நாம் இயந்திரகதியில் சுழல்வதாலோ, தேவையான காரணங்களை அடுக்குவதாலோ வாழ்வின் எல்லை நம்மை மன்னித்துவிடுமா என்ன!
              சொந்த பந்தங்களுக்கும் , அலுவலக வேலைகளுக்கும் , போட்டுக் கொண்ட அரிதாரங்களுக்கும் ஈடு கொடுப்பதிலேயே  காலம் கழிக்கும் நம்மை காலன் கேட்கும் கேள்வியோ வேறு.  ஹீப்ரு மத நம்பிக்கையில் மேலுலகில் இரண்டு கேள்விகள் மட்டும் கேட்கப்படுகிறது. 
1. நீ பூமியில் சந்தோஷமாக இருந்தாயா ?
 2. பிறரை சந்தோஷமாக வைத்திருந்தாயா ? 
          இந்த இரு கேள்விகள் எழுப்பும் அதிர்வுகள், மிகவும் தன்னைத் தொலைத்துவிட்ட நவீன மனிதனுக்கு எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசாட்சி மிக்க நடுத்தரவர்க்கத்தினர், உண்மையும் உழைப்பும் மிக்க அடித்தட்டு வர்க்கத்தினர் , தர்ம சிந்தையுள்ள சில மேல்தட்டு மக்கள் ஆகியோர் இதயத்திற்குள் இக்கேள்விகள் பாயும் சக்தி கொண்டுள்ளன.
          மிக மிக அதிகமான விஞ்ஞானக் கருவிகளில் தொலைபேசியும் ; செல்போனும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் மிக மிக அருகாமை தரும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மகளை வெளிநாட்டில் கற்க அனுப்பும் தந்தை , தன் ஒரே மகனை வடகிழக்கு மாநிலத்துக்கு வேலைக்கு அனுப்பும் தாய் ஆகியோர் அந்த செல்போனை மட்டுமே  நம்பி அனுப்புகின்றனர். பேச்சே ஆதாரம். பேச்சே மகனின் உருவம்!
            தொலைபேசியும் செல்போனும் என்ன செய்துள்ளன?நமது உறவுகளை செவி வழியே புகுத்தி சொல்பிரபஞ்சம் வழியாக, ஏற்கனவே நாம் நம் மனதில் பதித்திருந்த சொல்சித்திரம் வழியே  விரிந்து கொள்கின்றனவே தவிர, நிஜத்தில் வேறு ஏதும் நிகழ்வதில்லை. அதாவது உதாரணத்திற்கு ஐந்தாண்டுகளாக ஒருவர் வெளியூரிலிருந்து பேசிப்பேசி ஒருவரைக்குறித்து ஏற்படுத்திக்கொண்ட உருவம், நேரில் காணுகையில் (கண் என்ற ஊடகம் வழியே காணும்போது) மிக மிக மாறுபட்டதாக இருக்கும். அதாவது, நமது அகத்தில் ஒரு பிளவு ஏற்படுத்திவிட்டன கருவிகள். இதனால் தனது கண்ணை நம்புவதா, செவியை நம்புவதா என்ற  கேள்வி முடிச்சில் இருபத்தோரம் நூற்றாண்டு மனிதன் தவிக்கிறான். ஓயாத பேச்சுகளின் வழியே ஏற்பட்ட அகபிம்பம் வேறு. நேரில் கண்களுக்கு ஏற்படும் வேறு நடத்தை கொண்ட மனித ஆளுமை வேறு.
                    வேறுபட்ட பொய்ச்செய்திகள் செல்போனில் மழைபோல பொழியும் இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க எளிய வழி இருக்கிறது. அண்ணல் காந்தி சொன்ன மிக எளிய வழி தான் அது. ஆம். உண்மை பேசுதல். தொலைபேசியிலும் செல்லிலும் உண்மையான தகவல்களை மட்டுமே நேர்மையாக (நேரில் இருப்பதாகக் கருதி) பரிமாறிக் கொண்டால் மனித உறவுகளில் மகிழ்ச்சி ஏற்படும்.
            நவீன கருவிகள் எத்தனை நுழைந்தாலும் மனித உறவுகள் காயப்படாமல் தப்பிக்க வழி ஏற்படும். பூசல்கள் குரோதங்கள் அழியும். இல்லையேல் தப்பும் தவறுமாக அவசரமாக தொலைபேசியில் பறக்க விடும் சொற்களால் நாம் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் நிலை ஏற்படும். தொலைபேசியிலும் செல் பேசியிலும் பேசும் வாழ்வை, கூடிய வரையில்,  சுத்தம் கொள்வோம். நேர்மையுடன் நடந்து மனித உறவு விரிசல் தடுப்போமாக.

                           *****

Sunday, 13 January 2013

பொங்கல் வாழ்வு

அன்று முதல் இன்று வரை
பொங்கல் உண்டு
தனிச்சிறப்பு உண்டு
“தளர்ந்து போகாதே!பொங்கு”என்கிறது பொங்கல்
கொதிநிலை உணர்வுடன்
உன் இலட்சியத்தை ஒரே குறிக்கோளில்
சூடாக்கினால்
பொங்கி வழியும் வெற்றி என அறிவிக்கிறது பொங்கல்
வெல்லம் உண்டு அரிசி உண்டு
சூரியனைப்போற்றும் மனது உண்டு
நிச்சயம் நமக்கு நல்ல்லதே உண்டு
வாயில்லா மாட்டிற்கும் மதிப்பு உண்டு
ஜீவகாருண்யப் பொங்கல் இது
சந்தோஷப்பொங்கல் இது
மாற்றம் வரும் என்று நம்பும் பொங்கல் இது
நீரைச் சிக்கனம் செய்து
பூமிக்கு ஒத்துழைப்பு தரச்சொல்லி
இயற்கை கோரிக்கை வைக்கும்
பொறுப்பான பொங்கலும் இதுவே!

திருப்பாவையில் ஏது கடைசி ?

மார்கழி:30
திருப்பாடல்:30



“வங்கக்கடல் கடைந்த”திருப்பாவையின் கடைசி பாடல் இது. ஆனால் திருப்பாவையான ஆண்டாளின் அன்புக்கு கடைசி என்பது இல்லை. அன்பை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு பொருளும் அருளும் வந்து கொண்டேதான் இருக்கும். வஞ்சனையாய் பொருள் சுருட்டுகிறவர்கள் குறித்து “நாம் அவன் போல் ஏமாற்றி வாழ்ந்திட அறியவில்லையே” என்றெல்லாம் ஏங்குவது எதற்கு? ஸ்வாமி தந்திருப்பது குறைவற்ற பக்தி. அவன் நம்மை உடையவன். அவன் நம் கையைப் பற்றி இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம்மை ஆட்படுத்திக் கொண்டவன். “வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை” என்று வாழ்வதற்குரிய உயர் எண்ணங்கள் அனைதையும் நமது நெஞ்சின் உள்ளே பிறக்கும்போதே வைத்து அனுப்பியவன். அவன் என்றும் நம் துணை. ஆம். அவன் வங்கக் கடல் கடைந்த மாதவன். நமது உள்ளக்கடலையும் அறிந்தவன்!

திருப்பாடல்:

வங்கக்கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
தங்கள் திருமுகத்துச் சேழியையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலர்த் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


திருப்பாவையில் ஓம்

மார்கழி:29
திருப்பாடல்:29

மறு ஜன்ம பயம் எல்லோருக்கும் இருக்கிறது. கண்ணன் அடியவர்களுக்கு அது இல்லை. ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இல்லை. ஏன்? அவர்கள் எழுகின்ற பிறவிதோறும் கண்ணா - நீயும் எங்கள் குலத்திலேயே பிறந்துவிட்டால் பிறவித்துன்பம் தீண்டாமல் நீயே பார்த்துக்கொள்வாய் அல்லவா! என்று விண்ணப்பம் வைக்கிறார்கள். எற்றைக்கும் (என்றும்) எத்தனைப் பிறவி எடுத்து எழுந்தாலும் (ஏழேழ் பிறவிக்கும்) உனக்கு உற்றவராகவே யாம் இருப்போம். (இருப்பு+ ஓம்) உனக்கே நாம் ஆள் (பணி) செய்வோம் (செய்தல்+ஓம்) கண்ணா! எமது காமங்களை (விருப்புகளை) மாற்றி நல்ல திசையில் செலுத்தி அருள்வாய்.

திருப்பாடல்:

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ எம்பாவாய்.



திருப்பாவையில் அசையாத நம்பிக்கை

மார்கழி:28
திருப்பாடல்:28


“நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம்” என்பான் கம்பன். நம்பிக்கையே இல்லாதபோதுதான் நம்பிக்கையாய் அதிகம் பேச வேண்டும். உலகப்பற்றிலேயே மூழ்கிப்போய் எப்போதும் பணம் பணம் என்று மண்டியிடும் சந்தர்ப்பத்திலும் , நமக்கு பக்தியே அற்றுவிட்டதோ என்று நம்மையே நாம் சந்தேகமாய் நினைக்கும் தருணத்திலும் “இறைவா உன்னோடு உறவு நமக்கு என்றும் ஒழியாது. அழியாது” என்று குறை ஒன்றுமில்லாத கோவிந்தனைத் துதிக்கவேண்டும். அற்¢யாத பிள்ளைகள் நாங்கள். நாங்கள் அழைப்பதில் குறை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக சீறிவிடாதீர். இப்படியெல்லாம் பணிவுடன் கேட்கின்றனர். ஆனால் பெருமாள் முகத்தைப்பாருங்கள். குறைவு ஏதேனும் கண்ணில் தெரிகிறதா? சீறக்கூடிய ஸ்வாமியாக அவரில்லை. பூரணமான ஸ்வாமி அவர். அவரைப் பற்றுவோம். கரையேறுவோம்.


திருப்பாடல்:

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் வெற்றிவிழா

மார்கழி:27
திருப்பாடல்:27

கண்ணபெருமானே உமது வெற்றி எமது வெற்றி. உன்னைப் பறை கொண்டு பாடுகிறோம். அப்போது எங்களுக்கு நாங்களே பலவித அணிகலன்கள் (தோடு ,செவிப்பூ) அணிந்து சந்தோஷப்படுகிறோம். பால்சோற்றை மூடுமாறு நெய் ஊற்றி சாப்பிடுவோம். அப்போது அந்தநெய் முழங்கை வரையில் வழிகிறது. இப்படிப்பட்ட மகிழ்ச்சியான உணவை கூடியிருந்து உண்கின்றோம். உள்ளம் குளிர்ந்தது கண்ணா! உனது அருள் என்பது எமது ஆன்மாவின் உணவு. வயிற்றுப்பசியை எவ்விதம் சேர்ந்து உண்டு சொந்த பந்தங்களுடன் உண்பதற்கு ஆசைப்படுகிறோமோ உனது அருள் உண்டு பசியாற நாங்கள் ஒன்றுகூடி உள்ளோம். மார்கழி குளிர் வேறுவகை. இப்போது உமது அருள் பெறும் நேரம் கூடிஇருக்கிறது. இப்போது உள்ளம் குளிர்கிறது!

திருப்பாடல்:

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பாறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையை தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் இசைக்கருவிகள்

மார்கழி:26
திருப்பாடல்:26


பாஞ்சன்னியம் என்கிற சங்கு மகாபாரதப்போர் துவக்கத்திலும் முடிவிலும் ஓசை எழுப்புகிறது. காயிலே நீ புளிக்கிறாய் அதுவே கனியானதும் அதே இடத்தில் நீ இனிக்கிறாய்  அது நீயே எமது கண்ணபெருமானே! “பறை” என்கிற கருவி இசை கலந்து எங்கள் குரலையே இசைக்கருவியாக்கி பல்லாண்டு இசைக்கிறோம். “கோல விளக்கு” போன்ற துணை உடைய ஆலின் இலை வாழும் கண்ணா! ஆலின் இலைக்கு சமானமான அழகும் பசுமையும் உலகில் எங்கேனும் உண்டா! உன் அருளும் அந்த ஆல மரத்தின் இலைகள் போல பசுமையானது. எங்கள் உள்ளத்தின் மலட்டுத்தன்மைகளைப் போக்குவது. ஆம். கண்ணா எமக்கு நீ அருளமாட்டாயா?

திருப்பாடல்:

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டிலையேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் பொய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே! கொடியே! விதானமே!
ஆலின் இலையாய்! அருளேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் ஒருத்தி

மார்கழி :25
திருப்பாடல்:25



“ஒருத்தி” என்ற சொல் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கும் சொல். “ஒரு பெண்” என்று அதன் அர்த்தம் இருந்தாலும் அந்த ஒரே பெண் யார்? என்றும் நம்மை யோசிக்க வைக்கும். தாய் நம்மைப் பெற்ற முதல் பெண். வளர்கிறோம். இன்னொரு பெண் நம் வாழ்வில் நானே தாரம் என்கிறாள். முதல் ஆதாரமாய் இருந்தவளும் பெண், வளர்த்து ஆளாக்கி அவள் இன்னொரு பெண்ணின் கரங்களில் ஒப்படைக்கிறாள்.இதனை கண்ணதாசன், “ இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்” என்று பாடத்தொடங்கி “பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்” என்கிறார். இது இயற்கையின் திட்டம். நிற்காத சுழற்சி. இதனை தடுக்க நினைப்பவருக்கு கண்ணபெருமான் நெருப்பென்ன நின்று அழித்து முடிப்பான்.                                  




திருப்பாடல்:

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருந்தித்து வந்தோம் பறைதகுதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Friday, 11 January 2013

திருப்பாவையில் வீரம்


மார்கழி:24
திருப்பாடல்:24

வீரம் மிகுந்தவரைப் பணிந்தால் சேவகம் செய்தால் நமக்கும் வீரம் வரும். உலகை அளந்த வீரம், தென் இலங்கையில்  வென்றாய். மலையைத் தூக்கி குடையாகப் பிடித்தாய். எங்களது பகையை அழிப்பாயாக. பெருமாளே எங்களுக்கு இரங்குவாயாக.


திருப்பாடல்:
 
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் மாண்புமிகு


மார்கழி :23
திருப்பாடல்:23



“மன்னிய”என்ற சொல் , இந்தியிலும் உண்டு. இதன் பொருள் “மாண்பு மிகு” . நமது மன்னிய அறிவு என்னும் சீரிய சிங்கம் தீயைப் போல் விழித்து செயல்படாமல் குகையில் (மூலாதாரத்தில்) உறங்குகிறது. எங்கள் அறிவில் தீ இல்லாமல் அவியும் நிலை வந்து விட்டது. பூவைப் பூவண்ணா அருள மாட்டாயா?

திருப்பாடல்:

மாரி மலைமுழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் கண்கள்

மார்கழி :22
திருப்பாடல்:22

“பெண்கள் தாமரை விழியால் நோக்கினர்”என்ற பதத்திற்கு திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகள் “பெண்கள் தமது அரை விழியால் நோக்கினார்கள்”என்று விளக்கியதும் அந்தக்கூட்டம் முடியும் முன்பே ஒரு ஆளை அனுப்பி கவியரசு கண்ணதாசன் ஐந்துபவுன் சங்கிலி  பரிசளித்தார் என வாரியார் சுவாமிகள் கூறக் கேட்டிருக்கிறேன்.
இந்தத் திருப்பாவையில் “தாமரைப் பூப்போல செங்கண்” என்று வர்ணித்துவிட்டு அவை எம்மேல் “சிறுச்சிறிதே விழியா ஓ?” என்று கேட்கிறார்.கண்ணனது கண்கள் அருளுடன் மிகப்பெரிதாக தாமரைப்போல் சிவந்து உள்ளன. அவை சிறிதளவு எம்மேல் விழ வேண்டும் என்று கேட்டிருக்கலாம். அதிலும் சிறிது கிடைத்தால் போதும் என்று மிகப்பணிவுடன் வேண்டுகிறார் ஆண்டாள் நாச்சியார். “சிறுச்சிறிதே” என்பது மிகவும் நயமான பதம். ஆண்டாள் போல் தகுதியிருக்கும் நபருக்கு எது வழங்க வேண்டும் என்று கண்ணனுக்குத் தெரியாதா என்ன. அதனால் சிறுச்சிறிதே நோக்குவதே போதும் என்று கம்பீரமான தன்னடக்கமும் பக்தியும் காணும் பாடல் இது.

திருப்பாடல்:

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி சிறுச்சிறிதே எம்மேல் விழியாஓ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் மாற்றான்

மார்கழி : 21
திருப்பாடல்:21

நமது ஆணவம் , நம்மை மிகப்பெரிய கடவுள் சக்தி முன்னம் நின்று தொழவிடாமல் தடுக்கிறது. வாழ்வுச்சக்கரம் சுழல்கிறது. வெற்றி வரும்போது துள்ளிய மனம், அடிகளும் ஏமாற்றங்களும் பெருகும்போது வலிக்கிறது. தன்னை ஒரு பலவானாக நினைத்த மனம், அடங்க ஆரம்பிக்கிறது. “வலி” என்று திருக்குறள் சொல்கிற வலிமை - தன்னிடமிருந்து வந்தது அல்ல என்று உணர்கிற மனம் , இறைவாசல் தேடி அலைகிறது. அடிபணிகிறது. அந்த நிமிடம் வரையிலும் தன்னை ஒரு பலவானாகாவும் ,சக்தியாகவும் இறைவனுக்கு மாற்றானாகவும் நினைத்த மனம் தொலைந்து போகிறது. உன் வாசலுக்கு “கண்ணா ! நாங்கள் மாற்றான் ஒருவன் தாங்கமுடியாமல்  வந்து உன் அடி பணிவது போல பணிகின்றோம்.” என்று கெஞ்சும் திருப்பாடல் இது. ஆணவம் சாகிற இடத்துக்கு வருவது அத்தனை சாதாரணமா என்ன! ஆண்டாள் நாச்சியாரால் அது முடிகிறது.


திருப்பாடல்:
 
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய் ! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் விசிறியும் கண்ணாடியும்

திருப்பாடல் - 20   
மார்கழி - 20 


பனை ஓலை விசிறி  ! தெருவில் விற்பார்கள். கவனித்துப்பாருங்கள். மறக்க முடியுமா அந்த எளிமையை! எந்த முகப்பூச்சும் பூசாமல் எவ்வளவு அழகு . அந்த ஈர்ப்பு சக்தி பார்த்தீர்களா. திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் மகான் திருக்கரத்தில் பொலியும் அந்த விசிறி அமரத்துவத்தின் குறியீடு. “பிரம்மத்தின் சக்தி பெற்று சுவாசித்து உயிர் வாழும் நீ விசிறிபோல் அந்த பிரம்மத்தினால் இயக்கப்படுகிறாய். மறந்துவிடாதே”
 “உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை” என்கிறது தங்கவரி. அது என்ன தட்டொளி? தட்டுபோல் இருக்கிறது கண்ணாடி. நிமிர்த்திவைத்தாலும் படுத்துக்கிடந்தாலும் உலகை எந்த சுமையும் இல்லாமல் தன்னுள் எடையே இல்லாமல் தூக்குகிறது  - கண்ண பெருமானைபோல! ஆனால் இந்த சக்தி அளிப்பது நப்பின்னைதான்!


திருப்பாடல்:

முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் டந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் பெண்மையின் சக்தி

திருப்பாவை - 19
மார்கழி - 19


“நப்பின்னைகொங்கைமேல் வைத்துக்கிடந்த  மலர் மார்பா” தந்தக்கட்டில் போட்டு- சுற்றிலும் விளக்குகள் எரிய -  தனது மலர் மார்பை நப்பின்னையின் கொங்கைமேல் வைத்து - உறங்குகிறான் . அடடா! எத்தனை அழகிய காதல் உறக்கம்! நேரமோ மார்கழி!
ஆனால் இப்பாடலில் இந்த காட்சியின் முக்கிய சக்தியாக  - ஒன்று இருக்கிறது. இப்படிப்பட்ட தூக்கம் கலையாமல் இருப்பதற்கு பொறுப்பு சக்தியிடம்தான் உள்ளது.  அவள் கையில்தான் அவன்! எனவே அவளை எழுப்புகிறார்கள் கெட்டிக்காரத் தோழிகள்! பிரிய முடியவில்லையோ என்று ஆதாரமான கேள்வி கேட்கிறார்கள்.   

திருப்பாடல்:

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்று பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் மெல் ஒலிகள் கூட்டம்

திருப்பாடல்-18
மார்கழி-18


பொதுவாக நாம் ஓசை உலகில் உள்ளோம். அதன் மூலமே புரிகிறோம். கூந்தலில் உள்ள வாசனை கூட “கந்தம் கமழும் குழலீ” என்ற சொல்லால் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் இந்தப்பாடலை உலகியல் வழக்கில் அப்படியே அர்த்தம் கொள்ளாமல் தியான நிலைக்கு உயர்த்தியும் பார்க்கலாம். “எனக்கு என் தியானத்தில் ஒரு காட்சியும் வரவில்லையே.. பதில் குரல் ஒன்றும் வரவில்லையே.. நான் ஆதி பரமனுடன் இணைக்கப்பட்டதை எப்படி எதனைக்கொண்டு அறிவது?” என்று சிலர் வருந்துவார்கள். அதன் பதிலை, குயில்கள் போன்ற கவன ஈர்ப்புகளை தாண்டி - அழகிய வளையல்கள் ஓசையுடன் அம்மை கதவு திறக்கும் ஓசையுடன் பொருத்தி மிக கவனமுடன் நாம் (கழறிற்று அறிவார் நாயனார் போல) நிச்சயம் உணர்வோம்.

திருப்பாடல்:

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பினாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால்  குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறப்பாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் உறக்கத் தீவிரவாதங்கள்

மார்கழி :17
திருப்பாடல்:17

இரண்டு பேர் உறங்குகிறார்கள். ஓங்கி உலகளந்த உத்தமன் ( மனசாட்சி) உறக்கம் காட்டப்படுகிறது. “யசோதாய்” என நீளமாய் நீநீநீட்டி   அழைக்கப்பட்டு  ( மனசின் பெண்பாகம் ) உறக்கம் கொள்வதாய் சொல்லப்படுகிறது. செல்வப் பரந்தாமனே உறங்கிவிட்டால் இந்த உலகம் என்னாகும்!
திருவள்ளுவர் பேருந்தில் 112ரூபாய் கொடுத்து சென்னைக்கு ஏறுகிறீர்கள். இரவு இரண்டு மணிக்கு கண்விழித்துப்பார்த்தால் ஓட்டுநரும் உறங்குவதை ஒரு நொடி கண்டு விட்டீர்கள்! எப்படி இருக்கும்! உறங்காதீர் என்று எழுப்புவீர்களா இல்லையா? 
நீதி:- “உலகம் என்கிற மாயை படைத்தீர்கள். அது பற்றி பலதடவை கண்ணபெருமானே நீ விளக்கியும் , விட்டில் பூச்சிகளாய் நாங்கள் காம, குரோத, லோபத்தில் சிக்கிய மக்களாம் எங்களை எழுப்பும்  ஓயாத பணியை விட்டு உறங்கிவிடாதீர்கள்! எழுந்திருங்கள்”  

திருப்பாடல்:

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோ எம்பாவாய்.

திருப்பாவையில் நேசம்

திருப்பாடல் 16
மார்கழி 16

நேசம் வைத்து ஆரம்பித்த செயல்களைக்கூட  நடுவில் நாம் நிறுத்திவிடுகிறோம்.  “அது இது” என எவ்வளவோ சப்பை க்கட்டுகள் கட்டினாலும் அதற்கு உள் காரணம் ஒன்று இருக்கும். வாயால் முன்னம் ஒன்று பேசினோம். இப்போது மாற்றி விட்டோம். மாற்றி மாற்றிப்பேசுகிறவர்களை “உனக்கு இரட்டை நாக்கா? என்பார்கள். தண்ணில கிடக்குற நாக்கு எப்படியும் பேசும்” என்பார்கள். ஏன்? கதவு போட்டு நல்ல காரியங்க¨ளை இழுத்துமூடியதற்கு என்ன காரணம்? மரக்கதவு தேக்கு கதவு போட்டால் அடைத்தே வைத்திருப்போம். நேசம் கொண்டு ஒரு கதவு செய்தால் அதனை  நம்மால் திறக்க முடியும்தானே! ஆண்டாள் நாச்சியார் வாய் மலர்கிறதை இதோ பாடலில் கேளுங்கள். 

திருப்பாடல்:

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா!நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.


Sunday, 6 January 2013

திருப்பாவையில் அறியாமை

மார்கழி :15
திருப்பாடல் :15

திருப்பாவையில் அற்புதமான பாடல் இது. நம்மைச் சுற்றிலும் அறியாமை சூழ்ந்துள்ளது. நாமும் அறியாமை கொண்டவர்களே. எனினும் மற்றவர்களை விட ஒரு சில விஷயத்தில் அறிவு விழிப்பு உள்ளவர்களாய் நமக்கே தோன்றும்போது அறியாமை கொண்டோரிடம் கோபமாக “என்ன! உனக்கு இதுகூட தெரியாதா” என்று சினம் கொள்வோம். அப்படிப்பட்டவர்களை கோபமாக  அப்படிச் சொன்னால் மாறமாட்டார்கள். நமக்கு ரத்தக் கொதிப்பு (பி.பி) எகிறும். உண்மையில் திட்டு வாங்கும் நபர் , “உமக்கு மட்டும் எல்லாம் தெரியுமோ!” என்று கேட்கவும் கூடும். இந்த சிக்கல்கள் தீர ஆண்டாள் அம்மை அழகிய காட்சி ஒன்றைத் தருகிறார்.
அறியாமை என்கிற உறக்கத்தில் இருப்பவர்களை மெல்லென “எல்லே!” என்றும் “இளங்கிளியே” என்றும் கொஞ்சும் அன்புடன் அழைக்க வேண்டும். பிறகுதான் “இன்னும் உறங்குதியோ” என்று சிடுசிடுப்பு காட்ட வேண்டும். அப்போதும் அவர்கள் மாறுவார்களா? விழிப்பார்களா? “நீங்கள் எல்லாம் பேச்சில் திறமைசாலிகள்” என்று புகழ்ந்து ஒதுங்கப் பார்ப்பார்கள். மீண்டும் புரியுமாறு கூறுவோம். அப்போது அவர்கள் “மற்றவர்கள் உறக்கம் விட்டு (அறியாமை) நீங்கிவிட்டார்களா? அவர்கள் எத்தனை பேர்! முதலில் அதை எண்ணிச் சொல்லுங்கள்” என்றுதான் கூறுவார்கள். இத்தகைய உலகப்பண்பை  மார்கழி குளிர் நடுவே வரைந்த கோலத்தில் வைத்த மஞ்சள் பூசணிப்பூ போல செழுமையாக சேர்த்துவிட்டார் நம் ஆண்டாள்!
   
திருப்பாடல்:

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


திருப்பாவையில் நாவு

மார்கழி :14


நமக்கு நம் உள்ளே இருக்கும் நாக்கு வெளியில் தெரியவில்லை. ஆனால் பேச்சு  உலகில் பேச்சு மட்டும் எழுப்புகிறவர்களால் நாம் உள்ளோம். இல்லாததும் பொல்லாததும் பேசி வருகிறோம். நிறைய பேசுகிறவர்களே மாட்டிக் கொள்வார்கள். திருப்பாவையில் ஒரு தோழி “நாளைக்கு நானே வந்து சீக்கிரம் எழுப்புவேன்” என்று உத்தரவாதமாய் பேசி அந்த வாக்குறுதி மறந்து உறங்கிவிடுகிறாள். ஆண்டாள் நாச்சியார் இபடிப்பட்டவர்களை “நாணாதாய் நாவுடையாய்:” என்று பட்டம் தருகிறார். உண்மை சொல்லவேண்டும் என்கிற பொறுப்புடன் நடந்துகொள்ளாத நாக்கு வெட்கமில்லா நாக்கு. ஆடை அணியாத நாக்கு. நிர்வாண நாக்கு என்று உறுதிப்பட கூறுகிறது இப்பாடல்.

திருப்பாடல்:

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவாள் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் வானவியல்

மார்கழி:13

அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிடும். சும்மாவிடுகிறதா இந்த சோம்பல்!  அப்படியே படுக்கையில்  கிடப்போம். : “இன்னுமொரு அஞ்சு நிமிஷம்” என்று உடம்பு கேட்கும். புத்தி தலையாட்டும். நேரம் கடந்துவிடும். எழுவது தள்ளிப்போகும். பொழுது விடிந்து சூரியனின் கிரணங்களில் படிந்து கடிகாரம் காலை ஏழு எனச் சொல்லும். அடடே எப்படித் தூங்கிப் போனோம்! என்று பறந்து பறந்து  நேரத்தைத் துரத்துவோம். ஒரு பொன்மொழி சொல்கிறது. “காலையில் நீங்கள் இழந்த பத்துநிமிடத்தை இரவு படுக்கச் செல்லும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள்!”
              “வெள்ளி எழுந்து” என்கிறார் கோதை நாச்சியார். வெள்ளி என்பது சுக்கிரன் வானில் பளீர் எனத் தனியே தெரியும் நட்சத்திரம். மற்ற நட்சத்திரங்கள் போல் மின்னி மின்னி அடங்காது. அளவில் சற்று பெரிதாக வைரக்கல் மூக்குத்தியே போல் நிலைத்த பிரகாசமுடன் காணலாம். இப்படிப்பட்ட வெள்ளியைக் வானில் காண அதிகாலை எழ வேண்டும். மனம் குளிரும் இத்தகைய “வெள்ளி” ஒளிவிட்டு எழும்போது வியாழன் கிரகம் மறைகிறது என்கிற வானவியலை  “வெள்ளி எழ வியாழம் உறங்கிற்று” என்று கவிதைத் தமிழில் அறிவியலாகச் சொன்னாள் நமது திருப்பாவையார்.

திருப்பாடல்:

புள்ளின்வாய்க் கீண்டானைப்ப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புகார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் இயற்கை அழகு

மார்கழி:12


எருமை என்றதும், “பெருத்த கருப்பு உருவம்! எமனின் குறியீடு! கணக்கு வாத்தியார் திட்டு!” முதலியன நினைவு வரலாம். அன்பு வழியாகவே காண ஆரம்பித்தால் காட்சிகள் மாறுகின்றன. ஆண்டாள் காணும் எருமைதான் எத்தனை அழகு வாய்ந்தது. அதோ பாருங்கள்! தாய்ப்பாசம் நிறைந்த எருமை தனது கன்றுக்கு பாலூட்ட நிற்கிறது. பால் உடனே சுரக்கவில்லை. மனம் இரங்கும்போதுதான் முலை வழியே பால் சுரக்க முடியும். இது ஒரு அபூர்வ கவனிப்பாகும். உடலில் சுரக்கும் திரவம் - அது எருமையானாலும் சரி அன்பு மன ரசாயனம் தேவைப்படுகிறது. அதன் பின்பு சுரக்கும் பாலினால் இல்லம் நனைந்து சேறாகிறதாம். வீட்டு வாசலில் பனி வழிந்து தலையில் சொட்டுகிறது. பனியும் ஈரம். பாலும் ஈரம். இரண்டுமே நீரின் அம்சங்கள். திருப்பாவையில் இந்த அழகியலைச் சுட்டிக்காட்டிய ஆண்டாள் நாம் நம்மை தூக்கத்திலிருந்து (அறியாமை) எழுப்பிக் கொள்ள “மனத்துக்கு இனியானைப்பாடுக” என்று நேரடியாக சொல்லாமல் , மனம் இரங்க வேண்டும் என ஈரம் வழியே நினைவூட்டுகிறார்.

திருப்பாடல்:

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ் நின்வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ எம்பாவாய். 


திருப்பாவையில் வலிமையான கேள்விகள்

மார்கழி :11


“தூங்குகிறேன் நன்றாக” என்கிறவரை “நீதான் நன்றாகத் தூங்கினேன் என்கிறாயே நீ உறங்கியது எப்படி உனக்குத் தெரியும்!” என்று ஒரு கேள்விக் கேளுங்கள்.சொன்னவர் திண்டாடிப் போவார். ஏன்?  அதற்கு பதில் சொல்ல அவரால் முடியாது. உண்மையான பதில் எதுவெனில் நமது ஆன்மா உறங்குவதில்லை., நமது புலன்கள் உறங்குவதை அது சாட்சியாகக் காண்கிறது என்பதே விடை. சுருக்கமாகச் சொன்னால், ஆன்மாவுக்கு இரவுமில்லை.பகலுமில்லை. உறக்கமும் இல்லை. விழிப்பும் இல்லை. என்பதே அர்த்தமாகும். நாம் நம்மை ஆன்மாவாகக் கருதாமல், விழிப்புணர்வாக உணர்ந்து கொள்ளாமல் வயிறு சம்மபந்தப்பட்டவர்சகவும் கண்ணாடி போட்டவராகவும் நெட்டை குட்டை என்றும், படித்தவர் பெயிலானவர் என்றும் கருதுவது சரியல்ல. அதனால்தான் இந்தத் திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் அழகாக “எற்றுக்கு உறங்குகிறாய்? இதன் பொருள் என்ன!:” என்று அர்த்தமற்ற - உயர்வு தராத - விழிப்புணர்வு கொள்ளாத தன்மையாகிய தூக்கத்தை கேள்வி கேட்டு ஆராய்கிறார். அந்தக் கேள்வியில் அக்கறையும் தெரிகிறது. பழி போடுவதாய் கேட்கவில்லை.

இதோ அந்த அருமையான பாடல்:

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழி மாரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
ஏற்றுக் குறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் மனப்பாவை

மார்கழி-பத்தாம் நாள்

“எம்பாவாய்! எம்பாவாய்!” என்று முடிகிறதாகவே திருப்பாவை முழுதும் அமைகிறது. மனம் எனும் பெண்ணை வசியப்படுத்துதல் எளிதல்ல. “ஒன்றையே பற்றி ஊசலாடுவாய். ஒன்றை விட்டு ஒன்று தாவுவாய். என் வார்த்தை கேளாய்” என்று மகாகவி பாரதி “மனப்பெண்” எனும் தலைப்பில் கவிதை எழுதினார்,
அதன் போக்கிலேயே சென்று ,பட்டாம்பூச்சி பிடிப்பதுபோல் பிடிப்பதே நமது கடமை. “சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தையை அம்மா திட்ட மாட்டாள். என் கண்ணல்லவா! என் பட்டு” என்று அதிகமாகக் கொஞ்சுவாள். இந்த வேலையைத்தான் நாமும் நம் மனதிடம் செய்ய வேண்டும். எதற்கு? நமது சொல்படி நடக்க வைப்பதற்கே. திருநாவுக்கரசு சுவாமிகள் நம்முடைய ஐந்து புலன்களை “கள்ளப்புலன்கள்” என்று திட்டுவதுபோல்சொன்னாலும் அதே வரியில் அவற்றை “காளா மணிவிளக்கே” என்கிறார். “கள்ளப்புலன் ஐந்தும் காளா மணி விளக்கே” என்பது அப்பர் வாக்கு.
அதாவது எந்த ருசியைத் திருடலாம் என கண், காது ,மூக்கு, வாய் , மேனி என்ற ஐந்தும் அலைகிறதாம். ஆனாலும் அவை உள்நோக்கி திருப்பப்பட்டால் Transformation பெற்று விளக்காகவும் மாறும் என்கிறார். எவர் திருடரோ அவரையே போலீசாக்குவது மனசின் சக்தி என்பதை ஆண்டாள் நாச்சியார் “எம்பாவாய்” என்று அழைப்பதிலேயே புரிகிறது.

திருப்பாடல் 10 :
 
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்!
மாற்றமும் தாராரோ ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணணும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தோற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் கதவு

திருப்பாடல்:9
மார்கழி:9

மாடம் என்பார்கள். விளக்கேற்றும் இடத்தைப் பிறை என்பார்கள். அதில் ஒரு விளக்கு. இது தவிர சுற்றிலும் விளக்குகள் அழகாக ஒளிவிடுகின்றன. உள்ளே கதவு தாழிடப்பட்ட நிலையில், நல்ல - கமகம வாசம் நடுவே தூங்குகிறாள் ஒரு பெண். அந்தப்பெண் வேறு யாருமல்ல. நமது மனம் தான். ஐந்து புலன்களையும் தாண்டி வராமல் அதிலேயே மயங்கி உறங்குகிறது. சுற்றிலும் ஒளி. மனமோ உறக்க இருளில்! எப்படியிருக்கிறோம் பாருங்கள்!
ஹால்மென்ஹாண்ட் என்ற பிரபல ஓவியர் “உலகின் ஒளி” என்கிற அழகிய ஓவியம் வரைகிறார். அதன் காட்சி இதுதான். மிகப் பெரிய தோட்டத்தின் நடுவிலுள்ள வீட்டின் கதவை ஹரிக்கேன் விளக்குடன் தட்டுகிறார் ஏசு பெருமான். குறையே கூறும் ஒரு விமர்சகன் ஒருவன் “உமது ஓவியத்தில் உள்ள கதவினில் கைப்பிடியே இல்லையே...! ஏசு எப்படி திறப்பார்?” என்றானாம். “தம்பீ! அது மனிதனின் இதயக் கதவு ஆன்மீகக் கதவு. உள்ளிருப்பவர் காதில் விழுமாறு வெளியில் இருப்பவர் குரல் மட்டுமே கொடுக்க முடியும்- திறந்துகொள்வதும் இறைவனை உள்ளே அனுமதிப்பதும் அவரவர் செய்யவேண்டிய முயற்சி” என்று பதில் சொன்னாராம். நாம் ஏதோ மந்திரத்துக்கு அடிமை போல் புலன் இன்பத்தில் உள்ளோம் என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.


ஆண்டாள் நாச்சியாரின் பாடல் இதோ:-    

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பொருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

Thursday, 3 January 2013

திருப்பாவையில் ஹைக்கூ நெறி

திருப்பாடல்: 8
மார்கழி:8


சொல்சுருக்கமும் கவிநயமும் பலாப்பழச்சுளையுடன் தோல் ஒட்டியது போன்ற நெருக்கமுடன் காணக்கிடைக்கும் எட்டாம் பாடல். எவ்வளவு அவசரம் பாருங்கள். ஒருவரை எழுப்ப வேண்டும். எழுப்பட வேண்டியவரோ பெரிய செல்வாக்குள்ளவர். “வானம் வெளுத்திருச்சிங்க எழுந்திரிங்க” என்று நீள நீள வார்த்தைகளின் கும்மி ஆட்டம் இல்லை. முதலில் கீழ் வானம் பார்க்கிறார்கள். உடனே கீழ் வானம் “வெள்” என்று என்கின்றனர். (வெள்ளை என்று எழுதவில்லை) பட்டென திரும்புகிறார்கள். எருமை நிற்கிறது. எருமை என்ற சொல் மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். வீட்டைப் பார்த்தால் சிறிது. சிறு வீடு என்று குறிக்கிறார்கள். இப்படியே சொல்லி மேய்கிற ஆவினங்களை “மேய்வான்” என்றனர். நிறைய பசுக்கூட்டம் தெரிகிறது. “பரந்தன காண்” என்று வர்ணிக்கும்போதே திபுதிபுவென பிள்ளைகள் வந்துவிட்டார்கள். “மிக்குள்ள பிள்ளைகள்” என்று ஒற்றை வரியில் சொல்லி பட்டுபட்டாய் காட்சி அடுக்கும்போது மைக்கா தகட்டில் மயிலிறகு நழுவுவது போல் ஹைகூவுக்கும் தாண்டி விடுகிறார் ஆண்டாள் நாச்சியார்.

திருப்பாடல்:

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது குலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய்! பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் பறவை

மார்கழி:7
திருப்பாடல் :7

வலியன் குருவி என்று ஒரு குருவி. கருப்பு நிறமாய் இருக்கும். கருப்பு புளியங்கொட்டையால் எண்ணெய் தடவின மாதிரி மினுமினுக்கும். இருட்டைவிட இருட்டாக எடுத்து இறகுகள் செய்து அணிவிக்கப்பட்ட பறவை அது. ஆனால் காகத்தையே விரட்டும் தைரியம். தரையோடு தரையாக இறங்கி இடிப்பதுபோல் பறந்து சண்டை குணம் கொண்டது. ஆனால் பாருங்கள். இவ்வளவு குணாம்சம் இருந்தும் குரல் என்னவோ “கீசுகீசு” என கிசுகிசுப்பாக மட்டுமே கேட்கும். “மனம் என்கிற பேய்ப் பெண்ணே! உன்னைத் திறக்க நீயே அனுமதி கொடு. ஏனெனில் இதயக்கதவை வெளியிலிருந்து யாரால் திறக்க முடியும்? அவரவர்களே திறந்து மார்கழி ஞானக்காலையில் தம்மையே கடைந்து கொள்ளவேண்டும். உண்மையெனும் தயிராகிய உள் உள்ளத்திலிருந்து (அரவம்) ஓசை கேட்கட்டும்”
ஆனைச்சாத்தன் பறவையாக வந்தாலும் பெரும் குரலாக எழுப்பவில்லை ஆண்டாள் நாச்சியார். கீசுகீசு என்கிற அழகிய கவிநயம் வாசம் வீசுகிறது!

திருப்பாடல்:

கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் உறக்கம் பற்றிய எச்சரிக்கை

திருப்பாடல்:6
மார்கழி:6



“பிள்ளாய் எழுந்திராய்!” என்பது பாவை நோன்பு நோற்கும் பெண்களுக்கு என நினைத்துக் கொண்டோம். யாரோ யாரையோ எழுப்புவது பற்றியா எழுதுவார்கள்? அது உண்மையா ? அப்படியெனில் அது சிறு சம்பவம் மட்டுமே. சம்பவம் கூட இல்லை. வெற்று நிகழ்ச்சி. உறங்குவதும் மரணமும் ஒன்றே என்கிறது வள்ளுவம். அறிதுயில் என்கிற வகையறாவும் உண்டு. அது ஒருபுறம் இருக்கட்டும்.
இந்த ஆறாம்பாடலில் இரண்டுமுறை “எழுந்திரு எழுந்திரு” என்கிற அறிவிப்பு வருகிறது. அது இளமையில் நமது மனசாட்சி நம்மிடம் சரணாகதி பற்றி கிசுகிசுப்பாகக் கூறுவது. அதையே “பறவைகள் சிலம்பின” என்று ஆண்டாளின் வரி அழகுறக் கூறுகிறது. அது தூரத்தில் பறவைகள் பாடும் சிலம்பு ஒலிதானே! நமக்கென்ன!”என்று நாம் புறக்கணிக்கிறோம். இரண்டாம் முறை உள்குரல் வருகிறது. இப்போது நாம் அழுத்தமாக வற்புறுத்தப்படுகிறோம். சங்கின் ஒலி உன்னை விளிக்கிறது. அழைக்கிறது. அது பேரரவம்- பெரும் சத்தமாக உன்னை அழைக்கிறது. “அதோ பார் மனமே! முனிவர்களும் யோகிகளும் இந்த மார்கழி குளிர் அதிகாலையில் மெள்ள எழுகின்றனர். “அரி அரி!” என்ற பேரரவம் கேட்கிறது!” அற்புதமான அனுபவம் இந்த 6ம் பாடல்.

திருப்பாடல்:

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளைத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

Wednesday, 2 January 2013

திருப்பாவையில் மிக எளிய ஞானப்பாதை

மார்கழி :5
பாடல் :5

ஆச்சரியப்படும்படி செயல்புரிபவனை “ஆ..ஆ!” என வாய்பிளந்து வியப்போம். “மாயன்” என்று பெயர் சூட்டி அழைத்து அழகுபார்க்கிறார் நமது கோதை நாச்சியார். “21.12.2012ல் உலகம் அழியும்” என்கிற பயத்தைப் புகுத்தியது எங்கோ இருந்த மாயன் நாட்காட்டி. கண்ணபெருமானின் (மாயன்) நாட்காட்டி என்ன சொல்கிறது இந்த பயமுறுத்தல்களுக்கு? நாளைக்கே சூரியப்புயல் என்று கிலி காட்டினாலும் , “உலகீரே! நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களுக்கு வாய் இருக்கிறது. வாருங்கள். உங்களுக்கு நான் தந்த மனம் இருக்கிறது. என்னைச் சிந்தியுங்கள். அப்போது எந்த ஒரு பிழையான செய்தியும் உங்கள் நெஞ்சில் புகாது. நெருப்பில் தூசு போல ஆக்குகிறேன்” என்று உறுதி கூறும் பாடல் இது.

பாடல்:

மாயனை மன்னும் வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் மணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்
போய்ப்பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினால் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


திருப்பாவையில் உவமை இமயம்

மார்கழி :4
பாடல்:4
கண்ணபெருமானை வர்ணிப்பது சாதாரண வேலையல்ல. உயிரிலிருக்கும் தமிழையெல்லாம் கண்ணன் பருகக் கேட்பான். மகாகவி பாரதி தனது பாடல்களில் “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்று கொஞ்சும்போது அவனுக்குத் தகப்பன் ஆகி அவன் குறும்புகளை எழுதி மகிழ்வார். நமது கோதை நாச்சியார் பார்த்தாள். கடலும் இல்லாமல், கடல் சார்ந்த மழையும் இல்லாமல் உயிர்கள் வாழ சாத்தியமே இல்லை என்பதை அறிந்து - அந்தநீர் தான் - குடி நீர், மழை நீர் , ஆற்று நீர், ஏரி நீர், உயிர் நீர் என்று சரம் சரமாய் வர்ணித்து நேரம் கடத்தாமல் - ஒரே வரியில்- “ஆழி மழைக்கண்ணா!” என்று போட்டாளே ஒரு போடு. அதாவது ஆழியாகிய கடலும் கண்ணணே. மழை பொழிவும் கண்ணணே. அடுத்த தடவை , கடலைப் பார்த்தால் கண்ணன் காண்க. நெஞ்சு குழைக.
 
பாடல்:

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகுந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.