Thursday, 21 November 2013

சுந்தர காண்டம் 651 -675



பாடல்-651:

சீதா தேவியே!
துன்பம் தாங்க முடியாமல் தாங்கள் உயிர்விட்டு விட்டால்
இராமபிரான் ஏழு உலகங்களையும் அரக்கர்களையும்
தனது அம்பினால் அழித்தாலும்
பழியும் பாவமும்
நீங்காது அல்லவா?

பாடல்-652:
பொன் போன்றவளே
“மூவுலக அரக்கர்களையும் கொல்வேன்” என்று
ஓங்கிய போர் வில்லாளன் இராமபிரான்
உன்னை இப்படி ஒரு சிறையில்  இட்ட பிறகு
எப்படி சாந்த குணம் கொள்வான்!
வியப்பாயிருக்கிறது அம்மா உன் பேச்சு!

பாடல்-653:

இராமன் இன்னும் இலங்கையில் தோன்றவில்லை
உண்மைதான்
அதற்கு வலிமையான தகுந்த காரணம் இருக்கிறது
அரக்கர்களைக் கொல்லாமல்
அவன் கடும் சினம் தணியாது
உன்னை மீட்காமல் போனால்
உன்னை உயிரோடு மீட்காமல் போனால்
மண்ணும் விண்ணும் பழிக்காதோ!
அரக்கர்கள் தப்பிட வேறு இடம் ஏது!
பாடல்-654:
அம்மா!
ஆக்ஞை சக்கரம் உடைய இராமனின் அம்புகள்
குளிர் ஆழக்கடல் மட்டுமல்ல
பதினான்கு உலகங்களையும்
ஊழிக்கால நெருப்பு போல உண்டுவிடாதா!

பாடல்-655:

“தேவரின் பகையான அரக்கரைக் கொன்றான்
தீய செயல்களை எழாமல் தடுத்தான்
தகுதியானவர்களை மீட்டான்
நல்ல வினைகளையே எந்த நாளும்
நிலைத்து வாழ இடம் கொடுத்தான்” என்று புகழ்ச்சியாக
நம்புதலாக
எடுத்துக் கொள்ளக் கூடாதோ அம்மா!

பாடல்-656:

உன்னால் உலகில்
நல்ல அறம் உண்டானால்
அது நல்லது தானே?
நீ ஒருத்தி அரக்கர் துன்பம் நீங்காமல்
சில நாட்கள் பிரிவு இடர் தீராமல் தங்குவதால்
உலகினர் அனைவரும்
நல்ல நாள் காணப்போகிறார்கள் என்றால் நல்லது தானே!


பாடல்-657:

மனம் புளித்து வெறுக்கப்படும் முட்கள் போன்ற அரக்கர்கள்
உடம்பு புண்ணாகி
அவர் தம் இரத்தத்தில்
பேய்கள் குடைந்து குடைந்து
குளிக்க வைக்கும் வரை இராமபிரான் விடப்போவதில்லை
இராவணனுக்கு அஞ்சி ஒளியும் தேவர்
அச்சம் நீங்கி
மணம் மலர களிக்கும் நல்வினை நடக்கத்தான் போகிறது
அதை நீ காணாயோ.

பாடல்-658:

ஊழிக்காலத்தின் இறுதிக்காலத்தில்
இடி விழுந்தது எப்படியோ அப்படிப் பாயும்
இராமனின் ஒளி மிக்க அம்பு!
அந்த அம்பு பிளந்து
புண்ணிலிருந்து பாயும் குருதிப் பெருக்கினால்
அலைகடல்கள் ஏழும் ஒன்றாக நின்று
பேரொலி இரைச்சல் கேட்பாய்
அதனை நீ காணாயோ!

பாடல்-659:
கர்ப்பம் கொண்ட அரக்கியர்கள்
பெரும் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள்
சோர்ந்து போவார்கள்
தமது தாலிகளை அறுத்து எரிவார்கள்
அவை
வான் உயரம் எழுந்த மலையினை விஞ்சும்
தாண்ட முடியாத வளர்ச்சியோடு குவியும்

பாடல்-660:

வானம் வரையில் நீண்ட பேய்கள்
கொடி இறகுகள் கொண்ட கழுகுக் கூட்டங்கள்
அரக்கர்களின் இரத்த வெள்ளத்தில் மூழ்கும்
அந்த இரத்தக்கறை நீங்க
அரக்கியர்களின் கண்ணீரில் மூழ்கும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-661:

இராமன் வெல்லும் காலத்தில்
கைகளினால் அடித்து ஒலிக்கப்படும் மத்தளங்கள் ஒலி
கைகளினால் தடவி ஒலிக்கப்படும் யாழ்கள் ஒலி
பாட்டிசை ஒலி கேட்பாய்
இது மட்டுமல்ல
தேவமங்கையர் நடனமாடிய
இலங்கையின் ஆடல் அரங்குகளில்
குரங்குகள் களித்துக் கூத்தாடுவதும் காண்பாய்.

பாடல்-662:

குற்றம் புரிந்த அரக்கர்களின்
புண்கள் இரத்தம் சொரிந்து
அலை பொருந்திய ஆறாகும்
ஆறு இழுப்பதால்
மலைகள் ஒத்த பெரிய உருவங்கள் மிக நெருங்கும்
அதனால்
பெரிய கடல் தூர்ந்து மேடாகும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-663:

சீதை ஒரு பெரு நெருப்பு
இலங்கையின் நடுவில் தங்கியதால்
இராமனது அம்பு எனும் பெருங்காற்று வீசி
தீவினை அரக்கர்கள் எனும் கரிகள் வெந்து சாம்பலாகிச் சிதறும்
அப்போது
இலங்கை எனும் பொன் உருகுவதை நீ காண்பாய்,.

பாடல்-664:

இராமனது அம்பினால்
இராவணன் இறந்து விழுவான்
காக்கைகள் அவன் தலையில் தாவும்
நல் வினைப்பயன் போன்ற சீதையாம் உன்னை
நோக்கிய கண்கள் இருபதினையும்
கூர்மையான மூக்கினால் கொத்தி உண்ணக் காண்பாய்.




பாடல்-665:

முற்காலத்தில்
இராவணனிடம் தோற்றுப்போன
திசை யானைகள் நாணமுற்று
முகம் திருப்பி நின்றன
நஞ்சாம் இராவணன் தலைகள்
இராமனது அம்பினால் அறுபட்டு உருண்டு ஓடி
திசை யானைகளின் கால்களை அடையும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-666:

நீலவானத்துக்கு வேர்த்தது போல
ஆங்காங்கே தோன்றும்
அழகிய கொடிகள் உடைய
இலங்கை நகரில்
இராமபிரான் அம்பு மழை பொழிவான்
கொழுத்த இரை கிடைக்கும் என நம்பும் பேய்கள்
புழுதியுடன் கூத்தாடுவதை
நீ காணத்தான் போகிறாய்.

பாடல்-667:

அரக்கர்கள் கரு நீல நிறமானவர்கள்
அவர்களது இரத்த வெள்ளம்
உப்பு நீர்க்கடல் நிறைந்து
ஊரெல்லாம் நுழைவதை நீ காண்பாய்
உலகம் கடைசியாக அழியும் வினாடியிலும்
உயிர் தின்னும் ஆசை விடாத எமனுக்கு
அளவுக்கு அதிகமாக
உயிர்களைத் தின்றதால் வெறுப்பு வந்து
முன்னர் தின்ற உயிர்களை
வெளியில் கக்குவதை நீ காண்பாய்.

பாடல்-668:

நல் மணம் வீசும் கற்பகமரங்கள் நிறைந்த
சோலையில் உள்ள குளங்களில்
தெய்வ மகளிர் போன்ற பெண்களோடு
அரக்கர்கள் குளிப்பார்கள்
அப்போது
ஒரு குரங்கின் வளைந்த வாலை
இன்னொரு குரங்கு பிடித்துக் கொண்டு
மாலை போல கூட்டமாகக் குளிக்கும்.
அதை நீ காண்பாய்.

பாடல்-669:

எதற்கு இன்னும்
பலப்பல சொல்வானேன்?
இராமனது தெய்வ அம்புகள்
இலங்கை அரக்கர்களை கொல்லும்
பிறகு அதுவும் தாண்டி மூன்று உலகிலுமுள்ள
அரக்கர்களும் இறப்பார்கள்
அதுவும் நீ காண்பாய்.

பாடல்-670:

இன்னும்
ஒரு முழு மாதத்திற்கு
துன்பத்தில் நீ உழல வேண்டியதில்லை
யான் இராமனைச் சென்று காண வேண்டிய
ஒரு செயல் தான் தேவை
அதற்குப் பின்
ஆண்மையாம் இராமபிரான்
ஒரு கணமும் தாமதிப்பானோ.

பாடல்-671:

“இராமனுக்கு உயிர் உண்டு” என்று
சொல்லும் அளவு தான்
அவனது உயிரின் நிலைமை உள்ளது
இராமபிரான் செல்லும் வழியில் உள்ள
காடுகள் முழுதும்
பூக்கள் முழுதும்
தளிர்கள் முழுதும்
சோலைகள் முழுதும் பொரிந்து தீய்ந்து விட்டன
இராமனின் திருமேனியின்
பிரிவு எண்ணங்கள் தீண்டியதால்!




பாடல்-672:

சுருங்கக் கூறினால்
இராமனுக்கு இப்போது எந்த உணர்வும் இல்லை
சோகம் என்பது
அறிவு தெளிந்து இருப்பவருக்குத் தானே?
மேகம் வந்து இடிந்து வீழ்ந்தாலும்
ஐந்து தலைப்பாம்பு
தோள்களிலும் மார்பிலும்
பற்கள் அழுந்தக் கடித்தாலும்
இராமனுக்கு எந்த உணர்வும் தோன்றாது!

பாடல்-673:

மத்தினால்
கடையப்படும் தயிர் போல
அவன் உயிரும் புலன்களும் தள்ளப்படுகின்றன
அதனால்
பைத்திய அளவும்
உனது பிரிவில் பிறந்த வேதனை அளவும்
எவ்வளவு என  எண்ணிட முடியுமோ.

பாடல்-674:

“இப்படிப்பட்ட நிலை உடையவன்
உனைப் பிரிந்து உயிர் தரிப்பான்
என நீ எண்ணுவது பொய் நிலை!
யான் புகல்வன அனைத்தும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல காட்டுவேன்
மெய்நிலை உணர்ந்து
எனக்கு விடை தந்தருள்க” என்றான்.

பாடல்-675:

அன்னையே
 இராமனின் தேவியே
தீர்த்தனாகிய இராமனும்
குரங்கு குல அரசன் சுக்ரீவனும்
உன்னைப் பற்றிய வார்த்தைகள் கேட்டு
மகிழ்வதற்கு முன்னமே
பெரிய கடல் தூர்க்கப்படப் போகிறது!
இலங்கையை முற்றுகையிட்ட
குரங்குகளின் ஆரவாரம் கேட்கப் போகிறது
அது கேட்டு
நீ மகிழ்ந்திருக்கப் போகிறாய்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 14 November 2013

சுந்தர காண்டம் 626-650



பாடல்-626

“பிரம்மனிடம் இராவணன்
பெற்ற சாபம்
எனக்குத் தெரியாது திரிசடை கூறும் வரை!
ஆம்
திரிசடை என் அச்சம் போக்கி கருணை தரும் தாய்
சத்தியமும் ஆண்மையும் உள்ள
ஒளிவீசும் மகுடம் கொண்டவிபீஷணனின் மகள்.

பாடல்-627:
அந்த சாபம்
இராவணம் மீது இருப்பதால் தான்
அறம் வெல்லும் என்று நம்பி வாழ்கிறேன்
இராமனின் வலிமை வெல்லும் என வாழ்கிறேன்
என் கற்பின் தூய்மை உலகறிய
காட்ட இயலும் என்று நம்புகிறேன்.

பாடல்-628:
அரக்கன் இராவணன்
இளவல் இலக்குவன் அமைத்த பர்ணசாலையை
தண்டகாரண்யத்திலிருந்து என்னோடு சேர்த்து
அகழ்ந்து கொண்டு
பெயர்த்து எடுத்து இங்கு வைத்துள்ளான்
உண்மை உணர்த்த
உன் கண்களால்  அனுமனே நீ பார்ப்பாயாக.

பாடல்-629:

ஆதலால் இந்த இடம் விட்டு
நான் நீங்குவது இயலாது அனுமா!
இராமனது திருமேனி ஒத்திருக்கின்ற
புதிய தாமரைமலர்கள் கொண்ட
பொய்கை நீர் வரை
சில சமயம் நடப்பது மட்டும் உண்டு -
தளரும் உயிரைக் காக்க!

பாடல்-630:

அன்பிற்கினிய சீதை
முடிவாகச் சொன்னது இது:-
“ஆதலால் அனுமனே
நீ கூறியது காரியம் அல்ல
வேத நாயகனிடம் திரும்பிச் செல்
அதுவே உனது காரியம்”
குற்றமற்ற அனுமன் கூறியது:-

பாடல்-631:

அடுத்த கணம் ஆகும்முன்
அனுமன் ஐயம் நீங்கினான்
துன்பமும் போனது
குற்றமற்ற அனுமன் கூறியது இது :-
“நன்று நன்று
உலகை உடைய நாயகனின்
துணையான பெருந்தேவியின்
தவத் தொழில் இது” என
சிந்தை களித்தான் அனுமன்.

பாடல்-632:

“இராவணனால் இந்த உலகம் இருளும் காலம் இது
இனி
தெளியும் காலம் வரும்
சில பகல்கள் பொறு
உயிரைப் போற்றி வைத்திரு
மருளும் மன்னவனுக்கு
யான் சொல்ல வேண்டிய வாசகம் அருள்வாய்” என
சீதாப்பிராட்டியின் திருவடி தொழுதான்.

பாடல்-633:
“நீதியோனே
உன்னை நோக்கிப் பகர்கிறேன்
இன்னும் இங்கு ஒரு மாதம் தான் இருப்பேன்
பிறகு
உயிரைப் பிடித்து வைத்திருக்க மாட்டேன்
அந்த இராமன் மீது ஆணை
இதனை மனதில் கொள் நீ”

பாடல்-634:

“மாலை தவழும் திருமார்பனுக்கு
மனைவியாக இல்லை எனினும்
தயவு எனும் ஈரம் அகத்தில் இல்லை எனினும்
தனது
வீரத்தைக் காத்துக் கொள்ளச் சொல்”
இதனை நீ வேண்டுவாயாக.

பாடல்-635:
பிறர் புகழும்
வெற்றி உடைய
இளையவன் இலக்குவனுக்கு
இந்த ஒரு வார்த்தை கூறுவாய் அனுமனே
“இராமன் கட்டளையால்
பஞ்சவடியில் எனைக் காத்திட்டவனுக்கே
நடுவில் ஏற்பட்ட
கொடிய சிறை வீட்டிலிருந்து என்னை
மீட்கும் பொறுப்பு உள்ளது”

பாடல்-636:
“அனுமனே இன்னும் ஒரு மாதம் தான்
நான் செய்தவம் தீர்ந்துவிடும்
அதற்குள் இராமன் வராவிட்டால்
புதிதாக பெருகும் கங்கை நீரில்
அடியேனுக்கும்
தனது சிவந்த கைகளால்
இறுதிக்கடன் செய்யச் சொல்லி செப்புவாய்”

பாடல்-637:
“இலங்கையில் இறக்கின்ற
சீதையாகிய நான்
சிறப்புமிகு மாமியார் மூவரையும்
தொழுது வணங்கினாள்” என
அறத்தின் நாயகன் இராமனிடம் சொல்
என்னிடம் அருள் இல்லாத இராமன் மறந்து விட்டால்
ஐயா அனுமனே ! நீ தெரிவிக்க மறக்காதே”

பாடல்-638:
மிதிலை நகர் வந்து என் கரம் பற்றி
மணம் செய்த நாளில்
“இந்த உலகப்பிறவியில் உன்னைத் தவிர
இரண்டாவதாக ஒரு மாதரை
சிந்தையாலும் தொடேன்” என்ற
செம்மையான வரம் தந்த வார்த்தையை
 இராமபிரான் திருச்செவியில் கூறு அனுமா..!

பாடல்-639:
“இராமனால் மீட்கப்படாமல்
இலங்கையிலேயே நான் இருந்து
இனிய உயிர் மாய்ந்து ஒஓன்உம்
மீண்டும் வந்து பிறந்து
இராமன் தன் மேனியைத் தீண்டுகின்ற
தீவினை தீர்ந்த வரத்தை
தொழுது வேண்டினாள் சீதை”
என்று விளம்புக அனுமனே.

பாடல்-640:
இராமன்
அரச பதவி ஏற்று ஆள்வதைப் பார்க்கவில்லை
சிறந்த மணிகளோடு கழுத்தில் கயிறு கொண்ட
யானை மீது பவனி வருவதும் பார்க்கவில்லை
பலப்பல திருநாட்களுக்கு ஏற்ற
இராமபிரானின் கோலங்கள் காண விதி இல்லை
என்ன சொல்லி என்ன பயன்
என் ஊழ்வினை எண்ணி நோகிறேன்.

பாடல்-641:
இராமன் எனை மீட்க இங்கு இலங்கை வரமாட்டான்
என்னை மீட்க வரமாட்டான்
தன்னையே எண்ணித் தளர்கின்ற
கோசல மக்களே அவனுக்கு முக்கியம்
அன்னையின் ஏக்க நோயே முக்கியம்
நந்தி கிராமத்தில்
பரதன் அனுபவிக்கும் இன்னல் நோய் தீர்வதே முக்கியம்
அயோத்தி தான் செல்வான்
இங்கு எப்படி வருவான்!

பாடல்-642:

அனுமா இதுவும் கூறு:
“என் தாய் தந்தைக்கும்
உறவினர் முழுமைக்கும்
என் வணக்கம் வ்¢ளம்புக
கவியின் மன்னன்
வானரத் தலைவன் சுக்ரீவனிடம்
சுந்தரத் தோளன் இராமனை
தொடர்ந்து காத்திடச் சொல்க
அழிவிலாத திருநகர் அயோத்திக்கு
அரசனாக்கச் சொல்”

பாடல்-643:

இப்படிப்பட்ட சொற்களை
சீதா தேவி கூறியதும்
“தையலே! இன்னமும்
துன்பப் படுதலை விடவில்லை” என்றான் அனுமன்
இனிய உரைகள் இயம்புவான் இப்படி:

பாடல்-644:

நீ இலங்கையில் இறப்பாய்
அதுவே உண்மை
உன் பிரிவால் தளரும் இராமன்
நீ இறந்தும் உயிர் வாழ்வான் தானே
காட்டைவிட்டு
அயோத்தியில் புகுந்து
அரச மகுடம் அணிவான் தானே
இதுவும் உண்மை தானே

பாடல்-645:

கற்புக்கரசியே
உன்னைப் பிறர் வெறுத்து விலகி ஓடுமளவு
கொடுமைச் சிறையில் வைத்த
இராவணன் உயிர் வாழ்வானாம்
பொய்க்காத வில்லை உடைய இராம இலக்குவன்
பின் வாங்கிப் போவார்களாம்
இந்த சொற்களோடு ஒப்பிட
எந்த வார்த்தையாவது உண்டா?

பாடல்-646:

நல்லவளே
உன்னை நலியச் செய்த தீயர்வர்களை
கொல்லமாட்டோம்
எமது உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு
இராமனிடம் எல்லோரும் செய்வோம்
எம் அரசன் இராமன்
தனது வில்லினை
புத்தம் புதிதாக வைத்திருக்க வேண்டுமல்லவா!

பாடல்-647:

கடக்க முடியாத
நீந்த முடியாத துன்பக்கடலில்
பங்கெடுத்துக் கொண்டு நீந்தாமல் நாங்கள் இருந்தால்
தேயாத பெரும் செல்வமான
கிஷ்கிந்தை அரசை ஈந்தவனுக்கு
உன்னை மீட்டுத் தராமல் நாங்கள் ஓய்ந்தால்
மீட்காமல் சுகம் பெற்றால்
எம்மை விட உயர்ந்தவர்கள்
யார் இருக்கப் போகிறார்கள்?

பாடல்-648:

“நல் பலன் அளிக்கும் வேள்விகள் புரியும்
நல்லோர்களை முனிவர்களை
கொன்று தின்ற அரக்கர்கள் குடலை
பேய்கள் தின்னும்படி கொல்வேனே தவிர
நாடு திரும்பமாட்டேன்” என
தண்டகாரணிய முனிவர்களுக்கு
வாக்களித்த இராமனுக்கு
உன்னை மீட்பது இயலாத காரியமோ.

பாடல்-649:

அகைவர்களால்
சிறை வைக்கப்பட்ட உன்னை
“மீட்டோம்” என்று சொல்லமுடியாமல்
வெறும் கையோடு திரும்பினால்
நாட்டு மக்கள் ஏற்பார்களா
நல்லவர்கள் ஏற்பார்களா
நல்ல நூல் கற்றவர்கள் ஏற்பார்களா

பாடல்-650:

கற்புடைய சீதை
நல்குணங்கள் அணிகலனாக அணிந்த சீதை
சத்தியம் தவறாத சீதை
அறம் தீண்டாத அரக்ககள்
தீண்டும் முன்னே இறந்தாள்” என்று
மனம் தேறி
திரும்பிப் போனால்
அது என்ன வீரமா?

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 7 November 2013

சுந்தர காண்டம் 601-625


பாடல்-601:

சீதை உரைத்ததும்
பெருந்தன்மை கொண்ட அனுமன்  திருவடி தொழுதான்
“அருந்ததி போன்றவளே
இராமனின் அடியவராக
குரங்குக் கூட்டத்தின் தலைவர்கள்
கடல் மணலை விட பலராவர்
அந்த வானரக்கூட்டங்கள்
ஏவிய வேலைகள் செய்யும் தன்மை உடைய ஒருவனாக வந்துள்ளேன்”
என்றான் அனுமன்.

பாடல்-602:

அன்னையே கேள்
எமது இராமனின் வானர சேனை அளவு எவ்வளவு?
எழுபது வெள்ளம்!
இந்தக் கடல் நீர் வெள்ளம் ஒப்பிட்டால் பள்ளத்து நீர்!
அவர்கள் அனைவரும்
ஒரு கையால் குடிக்கவும் கடல் போதாது
இலங்கை இன்று வரை தப்பிப் பிழைக்க காரணம்
அரக்கர் காவல் செய்யும்
இலங்கை இருக்கும் இடம் தெரியாமை தான்
தெரிந்துவிட்டால் பிழைக்காது இலங்கை.

பாடல்-603:
வாலியின் சொந்தங்கள் பல
வாலியின் தம்பி சுக்ரீவன்
வாலியின் மகன்கள்
அங்கதன்- வசந்தன் - துமிந்தன்
வெற்றி உடைய குமுந்தன்
நீலன் -இடபன்
குமுதாக்கன்- பனசன்
சரபனுக்கு மூத்தவனாகிய சாம்பவான்
எமனை நிகர்த்த துன்மர் மற்றும் சாம்பன்
கவயன் - கவயாக்கன்
உலகெல்லாம் அறியும் உத்தமசங்கன்
வினதன் - துவிதன் - நளன்.

பாடல்-604:
இது தவிர படைத்தலைவர்களும் பலர்
தம்பன் - ஒப்பற்ற தூமன் - ததிமுகன் - சதவலி
“இவர்கள் படைத்தலைவர்கள் மட்டுமல்ல
இராமனின் அம்பு போல் தப்பாமல் உதவுவர்
இராமபிரான் தலைமை கீழ் இயங்கும்
வானரங்கள் தொகைக்கு எல்லை இல்லை எனலாம்
கச்சணிந்த முலையாய்!
 இங்குள்ள அரக்கர்களின் பெருந்தொகை
இராமனது துணை வலிமை முன்பு குறுந்தொகை!”
என முடித்தான் அனுமன்.

-உறுக்காட்டு படலம் நிறைவு.



சூளாமணிப்படலம்

பாடல்-605:

அனுமன் கொண்ட உணர்வுகள் இவை:-
“உலகின் அம்மா இவளுக்கு
உவமை சொல்தல் எளிதோ?
தாமரை வாழ் இலஷ்மி போன்ற
இவள் இன்னல் கொள்கிறாள்.....
அண்டம் முதலான சகலத்திற்கும் நாயகனாம்
இராமனின் ஆவி இவளை
எடுத்துக் கொண்டு இராமனிடம் செல்தலே கருமம்”

பாடல்-606
அனுமன் மொழிந்தான்:
“அடியேன் உரை கேட்டு கோபிக்க வேண்டாம்
இராவணன் கொன்றபின்
அவனை வெல்லுவதில் பலனில்லை
பல வார்த்தைகள் பேசுதலில் என்ன பயன்?
இராமனின் எதிரில் நின்னைக் காட்டுவேன்
நீயே காண்க !அதற்கு இதுவே காலம்”

பாடல்-607:

“பேரழகு பொற்கொடியே
ஒரு நொடிதான்
 ஒரே ஒரு நொடி தான்
இராமன் தங்கியுள்ள
மலையிலே உன்னோடு குதிப்பேன்
மென் மயிர் அடர்ந்த
என் தோளில் அமர்ந்து இனிய உறக்கம் கொள்!”

பாடல்-608:
சுருள் கூந்தலாளே...நெடியோன் இராமன் முன்
நினது நிலைமை கண்டும்
வெறும் கையோடு எப்படிப் போவேன்
அரக்கர்கள் தொடர்ந்தால்
சிதைந்து சிதறும்படி அழித்து
மனச்சினம் முடிப்பேன்

பாடல்-609:
“இலங்கையோடு பெயர்த்து எடுத்துச் செல்”
என்றாலும் பெயர்ப்பேன்
வலது கையால் ஏந்துவேன்
இடக்கையால் எதிரிகளைப் பொடிப்பேன்
வீரக்கழலும் வில்லும் கொண்ட
இராம இலக்குவர் திருவடிகளில்
தாழ்ந்து நிற்பேன்
இது எனக்கு ஒரு வேலையே அல்ல”

பாடல்-610:

“அருந்ததி போன்றவளே
அழகிய இராமன் அருகில் சென்று
உன் உயிர் மருந்து அனைய தேவி
நெடிய வஞ்சனை கொண்டோர் சிறையில்
பெரிய துயரத்தோடும்
விடுபட வழியில்லாமல் இருந்தான்” எனச் சொன்னால்
என் அடிமைத் தொழிலால் என்னதான் பயன்.

பாடல்-611:
இராமபிரானிடம்
புண்படாத தோள்களுடன் சென்று
அரக்கர்கள் வலிமை சொல்வேனா?
என் உயிர் பாதுகாப்புக்காக
சீதையைக் கண்டு வரவில்லை என்பேனா?
சீதையைக் கண்டு மட்டும் வந்தேன் என்பேனா?

பாடல்-612:
“அன்னை சீதையே...
இங்குள்ள மதில் சூழ் இலங்கையை
நெருப்பால் உருக்க வேண்டுமா?
வலிமைமிகு இராவணனை அழித்து
அரக்கர் குலம் முழுதும் கொன்று
போர்த்தொழில் செய்க !பிறகு செல்க” என்று
கட்டளையிட்டாலும் செய்கிறேன் இப்போதே! இன்றே!”

பாடல்-613:
“பிறை நெற்றி பெற்றவளே
நான் உன்னை எடுத்துச் செல்வேன்
இராமபிரானுக்கு மனத்துயர் நீங்கித் தெளிவு வரும்
பிறகு
அரக்கர் கூட்டம் முழுதும் அழியும்
கொன்று அழிக்கப்படும்
அழிவற்ற இந்த உலகுக்கு
அவர்கள் செய்த துயரை நீக்கிட அது நல்லதாகும்.

பாடல்-614:
“இனிய சொற்கள் பேசும் இளவஞ்சிக் கொடியே
அடியேன் தோளில் விரைந்து ஏறுக
இனி சொல்லக் கூடியது வேறொன்றும் இல்லை
இதனை நான் செய்த நல்வினைப் பயனால்
அடியேனுக்கு அருள வேண்டும்!” என
சீதையின் திருவடி வணங்கினான்.

பாடல்-615:
அனுமன் கூறும் நல்வார்த்தைகள்
தாய்ப்பசுவுக்கு முன்னே செல்லும்
கன்று ஒத்திருந்தது
அதனைக் கேட்டாள் தூய சொற்கள் கொண்ட சீதை
“சொன்னதை சொன்னபடி செய்தல்
இவனுக்கு அரியதும் அல்ல சிரமமும் அல்ல” என நினைத்து
பின் வருவன கூறினாள்:-

பாடல்-616:
“அனுமனே! அன்பின் வடிவனே
உனது ஆற்றலின் முன்
இது அரிய பெரிய செயல் அல்ல
நீ நன்கு ஆராய்ந்துள்ளாய் .. செய்தும் முடிப்பாய் எனினும்
பெரிய அறியாமையோடு
பேதைத் தன்மை மிக்க
பெண்மைக்கே உரிய
சிறிய அறிவும் என்னிடம் உள்ளது”

பாடல்-617:
“என்னை எடுத்துச் செல்லும்போது
கடல் நடுவில் அரக்கர் சூழ்ந்தால்
போரிடவும் முடியாது
என்னைக் காப்பாற்றவும் முடியாமல் தடுமாறும்
துணையற்றவன் ஆவாய்”

பாடல்-618:

“இன்னொரு  காரணமும் உண்டு
இராமபிரான் வெற்றி வில்லுக்குப் பழி உண்டாகும்
என்னை வஞ்சித்த
நாய் போன்ற இராவணனின்
வஞ்சகத் தொழிலையே
நீயும் செய்ய நினைத்துவிட்டாயா?
இதனை நல்ல செயல் என்பார்களா?யோசி”

பாடல்-619:
“போர் நிகழ வேண்டும்
எம் கொற்றவன் வில் தொழில் நடக்க வேண்டும்
தேவர்கள் பார்க்கும்போதே என் உடலை
காம இச்சையுடன் நோக்கிய
அரக்கனின் கண்களை
காகம் குத்தித் தின்ன வேண்டியது நிகழாமல் இன்னும்
நான் உயிருடன் இருக்கிறேன் என்பது பொய்!”

பாடல்-620:
நாணமில்லாத அரக்கியர்கள்
சூர்ப்பனகை போல மூக்கு அறுபட வேண்டும்
அவமானம் அடைந்து
மங்கல நாண் அறுபட வேண்டும்
இதனை இராம இலக்குவர் வில் தான் விளைவிக்கும்
அது வரை
என் நாணம் சிறப்பு பெறாது.

பாடல்-621:
“பொன்மயமான திரிகூட மலைமேல்
அமைந்த இலங்கை
இனி
பகைவர்களின் எலும்பு மலை பெறச் செய்தால் தவிர
எனது நற்குடிப்பிறப்பும் ஒழுக்கமும்
மாசற்ற கற்பும்
மற்றவர்களுக்கு எப்படி காட்டுவேன்?”

பாடல்-622:
“பிறருக்கு
அல்லல் தருவதையே தொழிலாகக் கொண்ட
அரக்கருடைய இலங்கை மட்டுமல்ல
எல்லையிலா உலகங்கள் யாவும்
என் சொல்லினால் சுடுவேன்
அப்படிச் செய்தால்
அது
தூயவன் வில் ஆற்றலுக்கு அழுக்கு என
அச்செயலை செய்யாமல் வீசி விட்டேன்”

பாடல்-623:
“என்னை நீ எடுத்துச் செல்லாதே!
காரணம்  இன்னொன்றும் உண்டு
என் உரை கேள் அனுமனே மெய்யனே
ஐம்பொறிகள் அடங்கிய உன்னையும்
உலகம்
ஒரு ஆண் என்று கூறும்
ஆதலால் இராமனின் திருமேனி தவிர
உன் உருவம் தீண்டுதல் தகுமோ?

பாடல்-624:
“அற்பன் இராவணன்
இவ்வளவு நீண்ட காலம் என்னைத் தீண்டாமல் உள்ளான்
தீண்டியிருந்தால் அவன்உடம்பில் உயிர்
கண் இமைக்கும் முன்னே பொருந்தாமல் போயிருக்கும்
அதனால்தான் -
வலிய கையினால்
நிலம் பெயர்த்து
நிலத்தோடு என்னை எடுத்துக் கொண்டு போனான்”

பாடல்-625:

தாமரைப்பூவில் தோன்றிய பிரம்மனின் சாபம் ஒன்று
 என் உயிரைக் காத்து வருகிறது
“இராவணனே...
உன்னைக் கூடும் விருப்பமில்லாப் பெண்களைத்
தீண்டினால்
தெய்வத்தன்மை மிக்க உன் பத்து தலைகளும்
நிலத்தில் சிதறி விழும்”
என்பதே அது!

--அனுமனோடு மீட்போம்.

Sunday, 3 November 2013

சுந்தர காண்டம்-576 -600





பாடல்-576:

எங்கள் குலத்தலைவன் சுக்ரீவன் அறிவீர்களா?
வானில் ஒற்றைச் சக்கரத்தில் செல்லும்
சூரிய குலத்துக்குத் தலைவன்
அவன் வாழும் ருசிய முக மலைக்கு
இராமனும் இலக்குவனும் வந்தனர்
இராமபிரானின் உயிர் நண்பனாக
சுக்ரீவனும் தேவர்களும் நட்பு கொண்டனர்.

பாடல்-577:

உயர் வேதங்களும் உயர் ஞானங்களும்
காணமுடியா இராமன்
சீதையைத் தேடி வந்ததைக் கூறினான்
தன் துன்பம் கூறி மனம் புண்பட்டான்
மனநோய் மிகுதியாக விம்மினான்
அப்போது
குரங்குகள் நாங்கள்
நீ விட்டுச்சென்ற அணிகலன்கள் காட்டினோம்
அதைக் கண்டு மயக்கமுற்று விட்டான்.

பாடல்-578:

ஒளிமிகு வேல் படை மிக்கவன் இராமன்
சோர்வின் உச்சி அடைந்து விட்டான்
தூயவளாகிய உன் நகைகள் காட்டினோம்
அமுதம்தெளித்தாலும்
தீராத பெரிய நோய் அவனை அடைந்தது
ஆறாப்பிணி கொண்டனன்
எவரால் அதனைப் போக்க முடியும்.

பாடல்-579:

மனம் அயர்வு உற்று மிகச் சிரமப்பட்டு
மனம் தெளிந்தான்
ரிஷிய முக மலைக்கு அப்பால்
கிட்கிந்தம் எனும் மலை உள்ளது
அங்கு தான் வாலி வாழ்கிறான்
தனது வாலிலே இராவணனைக் கட்டித் தொங்கவிட்டு
கடல்களைத் தாவி
வலிமையோடு வாழ்பவன் வாலி.

பாடல்-580:

அத்தனை வலிவு மிக்க வாலியை
ஒரே அம்பினால்
வீழ்த்திய வலிமையாளன் இராமன்!
அது மட்டுமா
வாலி அபகரித்த அரசை மீட்டு
சுக்ரீவனுக்கே மீட்டும் அளித்தான்
“மழைக்காலம் முடிந்ததும்
சீதையைத் தேடிட
சேனையோடு உதவுக” என்றான் இராமன்
அதன் பின் நான்கு மாதங்களும் தங்கியிருந்தான்.

பாடல்:581
முன் நடந்ததும் அனுமன் அறிவான்
மூன்று காலமும் அறிவான்
அப்படிப்பட்ட அனுமன் சொன்னவை இவை:-
“வில் நெற்றி பெற்ற சீதா தேவியே
சுக்ரீவன் படைகள் வந்துசேர நான்கு மாதம்  ஆகின
நான்கு திசைகளும் அதற்கு அப்பாலும் தேடிட
எம் இனம் அனுப்பினான் இராமன்
தெற்கு திசையில் தேட எனக்கு உத்தரவு
இதுவே இதுவரை நிகழ்ந்தது”
 
பாடல்: 582
அன்பன் அனுமன் உரை கேட்டாள் சீதை
உள்ளம் நொந்தனள்
சிறந்த பொறுமை மிக்க இராமனுக்கே
இத்தனை துன்பமா என நினைத்தனள்
மனம் இரங்க இரங்க அவள் எலும்புகள் உருகின
அவள் இதயம்
இன்பமும் துன்பமும் ஒன்றாய் சுமந்தன
தனக்காக
இராமன் பிரிவில் உருகுகிறான் என்ற இன்பம்
இராமன் தன்மீது
இத்தனை அன்பு வைத்து துயரம் கொள்கிறானே என்பதால் துன்பம்!

பாடல்:583
துன்புறும் மனமே கொண்ட சீதை
கண்ணீர் வழிந்து வழிந்து
வெப்பமான உந்திச்சுழியில் உலரும் சீதை
“ஐயனே ! அளக்கமுடியாத கடலை
எப்படிக் கடந்து வந்தாய்?” என்றனள்

பாடல் : 584
“ஒய்வில்லாத மாயை எனும் பெரும் கடலை
உனது இராமனின் திருவடி பற்றுவோர் எளிதாக
கடக்கிறார்கள் அல்லவா? அதுபோல்நானும் வான் காற்றில் ஏறி
கருங்கடல் கடந்தேன்” என்றான்

பாடல்-585
முத்துக்களைவிட
நிலவைவிட
அழகிய  புன்முறுவல் பூக்கும் சீதை கேட்டாள்:
எப்படி உன் உடல் இத்தனை சிறிதாயிற்று?
அணிமா முதலிய எட்டுவகை சித்திகள் கற்றாயோ?
உன் தவத்தின் பயனோ! எனக்குச் சொல்க ”

பாடல்: 586
எப்படி எனக் கேட்கும்போது
வீரன் ஒருவன் பதிலா சொல்வான்? செய்தே காட்டினான்
ஆம் -
சிறிய மூர்த்திவடிவம் விட்டு பெரும் தோளுடன்
விஸ்வரூபம் எடுத்தான் விண்ணை முட்டினான்
தலை நிமிர்ந்தால்
உச்சி வான் இடிக்கும் என்கிற அளவு
உயரம் அடைந்தான் அனுமன் சற்றே தலை வளைந்தான்

பாடல்-587:

அனுமனின் பெரும் உருவம் வளர்ந்து கொண்டே வந்தது
நன் நெறியால் அடையும் பெருமை குணம்
ஐம்பூதங்களிடம் மட்டும்தானே இருக்கும்?
“இப்போது அனுமனிடம் உள்ளதே!” என
வியக்கும் வண்ணம் வளர்ந்தது.

பாடல்-588:

வானைத் தொட்டு வளரும் அனுமன்
தனக்குத் தான் மட்டுமே உவமையாகிய
பொன்மயமான மேருமலை என உயர்கிறான்
அவனைச்சுற்றிலும்
முன்பும் பின்பும் உள்ள நட்சத்திரங்கள்
மேருமலை மரங்களைச் சுற்றிலும்
மின்மினிப்பூச்சிகள் பறப்பது போல் உள்ளன.

பாடல்-589:

அனுமனின் விஸ்வரூபம்
கண் கடந்த காட்சி
அறிவு கடந்த காட்சி
அனுமனின் இரண்டு குண்டலங்களின் ஒளி
வானின் ஒன்பது கோள்களில்
சூரியன் சந்திரன் ஒளியுடன் பகை கொண்டது போல்
அதிகமாக ஒளிர்ந்தன.

பாடல்-590:

அனுமனின் விஸ்வரூபம்
திருமாலையே அசர வைத்தது
ஆம்!
திரிவிக்கிரம அவதாரத்தால்
எல்லா உலகங்களையும் அளந்த திருமால்
“வலிமையிலாத குரங்கு இது” என
அலட்சியமாக எண்ண முடியாத அனுமனை
அச்சு ஆணி போல் அமைந்த அனுமனை
நன்கு நோக்கினான்
“மிக உயர்ந்த பெருமைகள் எல்லாம்
ஒரே இடத்தில் இருந்து விடாது” என எண்ணியபோது
வெட்கம் அடைந்தான்.


பாடல்-591:

எட்டுத் திசைகளிலும் உள்ள
உலக உயிர்கள் அனுமனைப் பார்த்தன
மேலுலக அமரர்கள் தேவர்கள்
அனைவரையும்
தனது தாமரைக் கண்களால் அனுமன் பார்த்தான்.

பாடல்-592:

மேல் நோக்கி அனுமன் வளர
விண் வளர உயரும் போது
அனுமனின் இரண்டு பாதமும் அழுத்தமாக
இலங்கையை அழுத்தின
அவ்வூரின் நிலத்தில்
கடல் அலைகள் தழைந்து நுழைந்தன
புரண்டன மீன் இனங்கள்.

பாடல்-593:

அனுமனின் பெரிய உருவம்
விரிந்து விரிந்து விரிந்து
அவன் தாமரைத் திருவடிகளும்
காணமுடியாமல் மறைந்துவிட்டது!
“இனி அரக்கர்கள் இறப்பார்கள்” என மகிழ்வுற்றது
வஞ்சிக் கொடி போல் இடையும்
மாசற்ற கற்பும் கொண்ட சீதை தெய்வம்.
இன்னொன்றும் நினைத்தது
“உன் மகா உருவத்தை ஒடுக்க
எனக்கு அச்சமாய் உள்ளது  அனுமா!”

பாடல்-594:

சீதை தெய்வம் இப்போது பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது
தூணைக் காட்டிலும் வலிவுடைய இராமன் தோள்களை
தழுவியது போன்ற மகிழ்ச்சி நிலையில்  இருக்கிறது
தளிர்க்கும் சிந்ததையுடன் அது  அனுமனிடம் சொன்னது
“அனுமனே உனது விரிந்த மகா உருவை காணும்
வல்லமையோடு காணும் உயிர்த்தொகுதி
உலகில் எதுவுமே இல்லை! அதனால் குறுகுக”

பாடல்-595:

வானவெளி கடந்து
வளர்ந்த ஆண்மை அனுமன்
“நீ அருளியபடி நடப்பேன்” என
தன் உருவம் ஒடுக்கி
அனைவரும் காணும்
சிறிய உருவம் கொண்டான்
தூண்டாமலே துலங்கும் விளக்கு போன்ற
சீதை அப்போது கூறியவை இவை:-

பாடல்-596:

“காற்றின் கடும் வேகம் பெற்றவனே
உலகை
மலைகளோடு பெயர்த்து எடுத்தாய்
மேலுலகைப் பொடி செய்தாய்
ஆதிசேஷனை ஒரு கரத்தால் பற்றி இழுத்தாய்
 நினது அளப்பரிய ஆற்றலை விளக்க இயலுமா?
நீ
கடலின் மீது நடந்தாய் என்பதும் கூட
நின் பெருமைகளோடு ஒப்பிட்டால்
எளிய செயல்களே”

பாடல்-597:

“நெடிய கரங்கள் கொண்ட வீரா!
சக்கரம் ஏந்திய தடக்கை கொண்டவன் இராமன்
ஆண்மை மிக்கவன் இராமன்
அவனது அருளும் புகழும் பல யுகங்கள்
நிலை பெறச் செய்ய நீ ஒருவனே போதும் என ஆனாய்
இலங்கை ஏழுகடலுக்கு அப்பால்பட்டு இருந்திருந்தால்
உனது பெருமைக்கும் உனது தாண்டுதல் வலிமைக்கும்
பொருத்தமாக இருந்திருக்கும்!”

பாடல்-598:

உனது உருவம் எத்தகையதோ
அத்தனை பெரிது
உனது அறிவும் ஆற்றலும்!
ஐம்புலன் அடக்கும் திறமை
அதுவும் அப்படிப்பட்டதே!
மனத்தெளிவின் பயன் எண்ணமகிய நீதியும்
அப்படிப்பட்டதே!
பிரம்மன் முதலிய மேலோர்களுடன் உன்னை ஒப்பிட்டால்
அவர்கள் நல்ல குணங்களே இல்லாதவர்கள் ஆகிவிடுவர்!

பாடல்-599:

“மின்னல் போன்ற பற்கள் கொண்ட
அரக்கர் வலிமை நோக்கி
எனது ராமன் போரிடத் துணையாக
இலக்குவன் மட்டும் தானே உள்ளான்? என்ன செய்வது?
எப்படி வெல்லுவான்” என்று கலங்கினேன்
இன்று ஐயம் தெளிந்தேன்
உயிர் பெற்றேன்
நீயே என் இராமனின் துணை என்றால்
அரக்கர்களின் கதி அதோகதி !

பாடல்-600:
அழகின் ஒளி முகம் கொண்ட
திருமகள் சீதை
“இனி நான் இறந்தாலும் தவறில்லை
என்னை வருத்திய அரக்கரை
வேரோடு அறுத்தவள் ஆனேன்
இராமனின் திருவடிகள் அடைந்தேன்
இனி புகழ் மட்டுமே அடைவேன்
இழிவான பழி தீண்டேன்”  என்று மனம் மகிழ்ந்தாள்.

--அனுமனோடு மீட்போம்.