Friday, 26 July 2013

சுந்தர காண்டம்

பாடல்-251:

கரிய இரவு
நேரமும் கருப்பான நேரம்
எமனும் அஞ்சும் அரக்கர் வாழும் இலங்கையில்
பனிரெண்டு யோசனை தூரம் கொண்ட
மூன்று லட்சம் தெருக்களில்
அனுமன் தனி ஆளாக
சீதையைத் தேடுகிறான்

பாடல்-252:

இலங்கையின் நள்ளிரவு இப்படி இருந்தது
கள் உண்ணும் தொழில்கள் அடங்கின
கடல் ஒலி போன்ற ஒலிகள் நகரில் அடங்கின
தொழிலாளர்கள் செயல்கள் அடங்கின
மூன்று வகைப்பட்ட பறைகள் அடங்கின
அனைவருக்கும் உறக்கம் தொடக்கம்!

பாடல்-253:

நள்ளிரவில் -  
நல்ல நிறம் கொண்ட குதிரைகள்
இன்பமாய் உறங்குகின்றன
வீரம் செறிந்த மதில் காவலர்கள்
துடி எனும் பறையினால் ஒலி எழுப்ப
ஓசைகள் கிளம்பின
மலரணிந்த கூந்தல் மகளிர் ... 
தம் கணவரைப் பிரியாதோர்....
கணவரோடு ஊடல் தவிர்த்தவர் ...  
அனைவரும் உறங்குகின்றனர்!

பாடல்-254:

அந்த நள்ளிரவில் - 
மாலைகள் அணிந்த பெரும் தோள் ஆடவர்
கலவிப் போர் முடித்து ஓய்கிறார்கள்
களிப்பு கொண்ட மயில்கள் போன்ற
மங்கையர் கொங்கைகள் மீது
மயங்கிக் கிடக்கிறார்கள்
இதனால் களைப்பு நீங்கும்!

பாடல்-255:

அந்த நள்ளிரவில் -  
இரண்டு வகை மனிதர்கள்
நடக்க முடியாமல் உறங்கினார்கள்
மது எனும் நீர்த்துறையில் மயங்கி
தம்மை மறந்தவர்கள் ஒருவகை!
மற்றொரு வகை யார்?
தேனை விரும்பிய வண்டுகள் ஒலிக்கும்
நறுமணப்புகை சூழும் படுக்கை அறைகளில்
காமம் எனும் “கள்” பருகியவர்கள்!


பாடல்-256:

அந்த நள்ளிரவில் - 
பொருநர்களின் பாடல்கள்
பண் தரும் கருவிகளின் இசையை மூடிவிட்டன
இருள்  நிறைந்து வானம் -  
தனது இமையை மூடிவிட்டது
தோல் கருவிகளின் இசையும் மூடிக்கொண்டது

பாடல்-257:

அந்த நள்ளிரவில்
அலைந்தது காற்று!
நரத்தம் முதலிய வெண்மலர்கள் மீது
உராய்ந்து வருகிறது தென்றல் காற்று
உயிரின் மீதும் அக்காற்று  உலாவியதால்
கணவனைப் பிரிந்த கன்னியர் கண்கள்
கண்ணீர் சொரிந்தன
காதலரைப் பிரிந்ததால்
நாணமும் அவர்களைப் பிரிந்தது
நாணம் இழந்த நெஞ்சம்
துணையின்றி வாடியது தெரிந்தது!

பாடல்-258:

இளகும் நெய் குறைந்து
கணகற்ற விளக்குகள் அழியத் தொடங்கின!
பகைவர் தளர்ச்ச்¢யுற்ற நேரத்தில்
பாய்ந்து அழிக்கும் பகைவர் போல
காற்று - 
அந்த விளக்குகளை அழித்தது!
அந்நகர மங்கையர் உடலில் உள்ள
நவமணிகள் பேரொளிக் கடலில் பரவியது
அதற்கப்பாலும் உள்ள திசைகளில் பரவியது.

பாடல்-259:

தன் கடமைகளை
நாள்தோறும்  தவறாமல் செய்யும்
நிறை ஞான உத்தமர்கள் உறங்கினர்
மதம் பிடித்த கொடிய யானைகளும் உறங்கின
இதில்
மற்றவர்கள் -  
உறங்கியவர்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.

பாடல்-260:

வினைப்பகை வென்ற அனுமன்
இடைநகரின் மதிலுள்ளே புகுந்தான்
பிறகு
அரச குடும்பங்கள் வாழும்
இரண்டு  கோடித் தெருக்களில் சீதையைத் தேடினான்
அகழி மதில் கடந்தான்
சீதாப்பிராட்டி காண
இராவனணின் இருப்பிடமே சென்றான்.
                 
                                        --மீண்டும்  அனுமன் 02/ 08/2013  வருவார்

Thursday, 18 July 2013

சுந்தர காண்டம்

பாடல்-226:

இராமனின் புகழ் - 
செவிக்குத்தேன்! அதனைத்
திருந்தச் சொல்பவன் அனுமன்
திரும்பத் திரும்பச் சொல்பவன் அனுமன்
கோபத்தை அடக்கிக் கொண்டான்
“உறங்குகிற இவன் இராவணாக இருந்தாலும் இருக்கட்டும்
இன்னும் சில பகல்களே வாழப் போகிறான்!”
என அகன்றான் அனுமன்

பாடல்-227:

இராமனது அனைத்து புகழையும் தொகுத்தால்
அது அனுமனாகத்தான் இருக்கும்
அப்படிப்பட்ட அனுமன் தேடுகிறான் சீதையை
மாடங்களில்
கூடங்களில்
மாளிகைகளில்
மகளிர் ஆடல் அரங்குகளில்
அம்பலங்களில்
தேவர் ஆலயங்களில்
பாடல் மேடைகளில்
பட்டி மண்டபங்களில்!


பாடல்-228:

காற்று போல பரவித் தேடுகிறான் அனுமன்
நகர மாளிகை வாயில்களில்   
சாளரத் தலங்களில்
மலர்களில்! அட!
மலர்களின் தண்டுக்குள்ளும் புகுந்து தேடுவான்
அந்தந்த இடத்துக்கு ஏற்ப
நுண்ணிய வடிவோ - பெருவடிவோ
அவன் அலைதல் கதியை - சிரமத்தை
யார் தான் சொல்ல முடியும்!
திருமால் -  
மிகச்சிறிய அணுவிலும் உள்ளார்
மிகப்பெரிய  மலையிலும் உள்ளார்
சீதை தேடும் அனுமனும் இப்போது
திருமால் போல்
அனைத்திலும் கலந்து தேடுகிறான்.

பாடல்-229:

ஏந்தல் அனுமன்
எல்லா இடங்களிலும் தேடினான்
காந்தள் மலர் என விரல்கள் கொண்ட
அனைத்து மங்கையரையும் பார்த்து வந்தான்
அலைந்தான் அலைந்தான்
கண்டான் ஒரு மாளிகை அது ஒரு மாளிகை
அரசர் , அசுரர், மேலுலகினர், கீழ் உலகினர்
யாவரும் விரும்பும் விபீஷணன் மாளிகை!

பாடல்-230:

ஆஹா ! கற்பக மரங்கள்!
அவற்றின் நிழலே ஆனந்தம்
அதிலும் அவை தேன் சொரியும் மரங்கள்
அதன் கீழே
விபீஷணன் மாளிகை இருக்கிறது
“அரக்கர்களின் கருமை நிறம் நடுவே
வெண்ணிறமாகிய நாம் வாழ்தல் கூடாது”
என எண்ணி விலகியதுபோல இருந்தது மாளிகை
தருமத்தைப் போன்ற
விபீஷணனை நெருங்கிக் கண்டான்.

பாடல்-231:

விபீஷணன் பண்பு நலன்களை
அவன் உணர்வுகளை
தன் உணர்வினால் உணர்ந்தான் அனுமன்
“குற்றமிலாத நற்குணத்தவன்” என உணர்ந்தான்
கோபம் நீக்கிய மனத்தினன் ஆகி
மலை போன்ற ஒரு கோடி மாடங்களில் புகுந்து
சீதையைத் தேடி முடித்தான்

பாடல்-232:
தேவமகளிர் பலரைக் கண்டான்
முழுமதி முகமும்
செந்நிறவாயும் உடைய பலரைக் கண்டான்
அவர்களில் சீதை இல்லை என அறிந்து
மாளிகைகள் கடந்தான்
தன் மன வேகமும் மீறும் அனுமன்
இப்போது -  
இந்திரன் சிறையிருந்த
இந்திரஜித் மாளிகை வாசல் அடைந்தான்

பாடல்-233:

இந்திரன் வீட்டு வாசலில்
யார் யார் இருந்தார்கள்...
ஆயுதங்கள் ஏந்திய பெரும்கை உடையவர்கள்
கோரப்பற்கள் தெரிய சிரிப்பவர்கள்
மூதுரைகள் -பெரும் கதைகள்- விடுகதைகள் சொல்பவர்கள்
போர்க்களத்தில் கோபிப்பதில் மகிழ்ச்சி அடைபவர்கள் என
பல்லாயிரக்கணக்கானவர்கள் !
அவர்களைக் கடந்தான் அனுமன்.

பாடல்-234:

இந்திரஜித்
அழகிய மகளிர் மத்தியில் உறங்குகிறான்
“மூன்று கண் முக்கண்ணன் மகன்
ஆறுமுகன் -  
ஆறுமுகங்களையும் பன்னிரு கைகளையும் மறைத்து
ஒரு முகமும் இருகரமுமாக தோன்றினானோ” என்று நினைத்து
அவன் அறையை நோக்கினான்
புகை நுழைய முடியாத இடத்திலும் புகுகிற அனுமன்.

பாடல்-235:

“குகை சிங்கம் போன்ற இந்திரஜித்
கோரைப்பற்கள் கொண்ட அரக்கர் மகனோ!
சிவனின் மகன் முருகனோ!
வேறு எவனோ!
அறிய முடியவ்¢ல்லையே
இராமனும் இலக்குவனும்
பல நாட்கள் இவனுடன் போர் நிகழ்த்த வேண்டியிருக்கும்”

பாடல்-236:

இந்திரஜித்தை  தனது இனிய மகன் எனப்பெற்றதால்
இராவணன் மூவுலகமும் வென்றது அரிய செயலென
வர்ணிக்க முடியாது
அது எளிய செயல்களில் ஒன்று!
சிவன் -  பிரம்மன் - திருமால்
இந்திரஜித்துக்கு ஒப்பானவர்கள்!
மற்றவர்களோடு ஒப்பிடுதல்
அறிவுடைமை அல்ல.

பாடல்-237:

அனுமன்  -  
இப்படியெல்லாம் நினைத்து
“அறிவுடைமை ஆகாது” என்பதை
சைகையிலும் காட்டினான்
“இங்கு இந்திரஜித்திடம் வீணே காலம் கழிப்பது நல்லதல்ல
என நினைத்து நகர்ந்தான்
ஆயிரம் ஆயிரம் மாளிகைகளிலும்
சந்தேகத்திற்கு இடமில்லாவிட்டாலும்
துருவ்¢த் துருவி தேடினான்.

பாடல்-238:

அனுமன் யார்?
இராமனின் திருவடி போல் புகழ் கொண்டவன்!
அட்சகுமாரனது வீடு தாண்டி
அதிகாயன் மாளிகையிலும்
போர் வீரர்கள் நடுவிலும்
ஆலோசனைக்குரிய அமைச்சர்கள் வீட்டிலும்
தாவிக்குதித்து
உட்புகுந்து தீவிரமாக தேடுகிறான்.

பாடல்-239:

மிகப்பெரிய படைத்தலைவன் இருப்பிடமான
ஆயிரம் கோடி பொன் மாளிகையில் தேடுகிறான்
அழியாத இலங்கையில் மறைவான இடம் இராவணனுடையது
அங்கும் தேடினான்
மூன்று அகழிகளில் நடுவில் உள்ள அகழி அடைந்தான்
தேவி கிட்டவில்லை!



பாடல்-240:

ஒப்பற்ற மதயானைக்கு துணையில்லை
அனுமனும் அப்படியே!
அனுமன் பாய்ந்த போது
அகழி கண்ணுக்கு தென்பட்டது
அனுமன் நினைத்தான்:-
“என்னால் எளிதில் பெருங்கடல்
தாண்டப்பட்டது
அந்த அவமானம் தாளாத கடலரசன்
என்னால் தாண்ட முடியாதபடி இப்போது
 ஏழு கடல்களையும் ஒன்றாக அமைத்து விட்டான்”

பாடல்-241:

“இந்த அகழிக்கு -  
சிறந்த அகலம்
சிறந்த நீளம் உள்ளது” ஏண் கூறுபவர்கள்
“ஊழிக்காலம் வரை தோண்டினாலும்
இப்படி ஒரு அகழி அமையாது” என அறியாதவர்கள்!
“இராவணனுக்கு அஞ்சியதால்
ஏழுகடல்களும்
இந்த நகருக்கு அகழியாக அமைந்தன போலும்”
என நினைத்தான் அனுமன்




பாடல்-242:

இராமனது புகழ் சூழ்ந்த உலகங்கள் யாவிலும்
தனது புகழ் பரப்பிய அனுமன்
சிறப்புமிக்க அந்த அகழியை அடைந்தான்
அப்போது அனுமனின் எண்ணம்:-
“முன்பு  -  
அடியேன் கடலைத்தாண்டிய வேகம் போல
இப்போது இரு மடங்கு கொண்டாலும் கடக்க முடியாது”

பாடல்-243:

அகலமான அந்த அகழி
வானத்து மேகங்களை
கடல் என ஏமாற வைத்தது
நீர் மொண்டு செல்ல அழைத்தது
ஒரு விதத்தில் - 
அந்த அகழி இராவணன் சேனை போலவும் உள்ளது
வாய்ச் சொற்களால்
அகழி சிறப்புகளை சொல்லமுடியாது!

பாடல்-244:

அந்த அகழியில்
என்ன கிடைக்கும்?
யானைகளின் மூன்று வகை மதநீர்!
தேவமளின் குங்குமக் குழம்பு பூசிய கூந்தலுக்கான
அகில்புகை!
மலர்த் தேன்!
அகில் தோய்ந்த சந்தனக்குழம்பு!

பாடல்-245:

அந்த அகழியில் ஒலியெழுப்புவன
என்னென்ன பறவைகள்?
உன்னம்
நாரைகள்
மகன்றில்கள், குருகல்கள்
நீர்க்கோழிகள்
“பெரு நாரைகள்
சக்கரவாகங்கள்கின்னரங்கள் கொக்குகள்
சிலுங்கங்கள், மீன்கொத்திகள்
நீர்ப்பருந்துகள்
காகங்கள்
குணாலங்கள்!

பாடல்-246:

அகழியின் சிறப்பு கொஞ்சமா நஞ்சமா?
அழகு மகளிர் அகில் புகை
கஸ்தூரிப் புழுகும்
செம்பஞ்சுக் குழம்பு
அகழியில் கலந்து கலந்து சேர்ந்து சேர்ந்து
அதில் குளிக்கும் யானைகள்
புதிய மணமும் நிறமும் பெற்று
அதனால் -   
பெண் யானைகளுக்கு சந்தேகம்!
அதனால் -   
ஆண் யானைகளுடன் ஊடல்!

பாடல்-247:

இரவு நேரம் -  
அகழியில் மலர்ந்திருந்த
தாமரை மலர்கள் குவிந்திருந்தன
அனுமன் நினைத்தான்
சீதையின் முகத்தோடு உறவுடைய இத்தாமரைகள்
சீதை முகம் வாடினால்
வாடி ஒடுங்கத்தானே செய்யும்!

பாடல்-248:

தெளிந்த மனமுடையவரும்
தெளியாத சிறியோரும்
ஒன்று கூடினால்
வேற்றுமை மறைந்து விடும்!
அது போல இருக்கின்றது - 
பளிங்கு பதித்து ஒளி வீசும் அகழியின் கரையும்
அகழியின் நீர்ப்பரப்பும்!


பாடல்-249:

அகழிக்கரையின் மேல்பகுதியில்
நீலநிற வகை மணிகள் பதித்துள்ளனர்
அகழிக்கரையின் கீழ்ப்பகுதியில்
நித்திலம் முதலான மணிகள் பதித்துள்ளார்
அதனால் - 
அகழி நீர்
பாற்கடலில்
பலநிறக்கடல்கள் கூடியது போல் உள்ளது!

பாடல்-250:

ஆச்சரியமில்லை!
முன்பு
கடல் கடந்தது போலவே
இப்போது -  
அகழியும் தாண்டி விட்டான்!
மதிலும் தாண்டிவிட்டான்!
எவரும் நெருங்க முடியாத
மாநகர் அடைந்தான்
அங்கு நடந்தது குறித்து
அந்தத் தன்மை குறித்து
இனி அறிவோம்.

             --அனுமனோடு மீட்போம்.

Tuesday, 9 July 2013

சுந்தர காண்டம்

பாடல் -201:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் வேறன்ன  கண்டான்?
செம்மையான பளிங்கு மேடையில் இருந்த
அரக்கியரின் வேல் போன்ற  கண்கள்
கணவரைப் பிரிந்து அதனால்
வளர்ந்த காமப்பயிருக்கு
நீர்ப் பாய்ச்சுகின்றன
எப்படி இதனை அறிய முடிந்தது?
அவர்”கள்”
“கள்”அருந்தியபோது
விழிகள் செந்நிறமானதால்!

பாடல்-202:

சீதையைத் தேடும் பணியில்
அனுமன் இன்னொன்றும் கண்டான்
அரக்க மாதர்களின் கருப்பு கண்கள்
அரக்கர்களுடைய கண்கள்போல் சிவப்பாயின
தூதுளைச் செடியின் பழத்தை வென்றன
அவர்கள் செந்நிற வாய்கள்!
அவர்கள் மாறி மாறி
கள் குடிப்பது
காதல் என்னும் கள் குடிப்பது போல உள்ளது



பாடல்-203:

சீதை தேடும் அனுமன் தனது பணியில்
இன்னொன்றும் கண்டான்
அரக்க மகளிர்
கற்பக மரம் பெற்றிருந்தனர்
கேட்டதெல்லாம் தரும் மரம் அது!
அதனிடம் -  
செம்பஞ்சுக்குழம்பு பெற்று
பாதத்தில் பூசிக்கொண்டனர்
மணம் மிக்க சந்தனக்குழம்பு பெற்று
மேனியில் பூசிக்கொண்டனர்
மை பெற்று -  
வாள் விழிகளுக்கு இட்குக்கொண்டனர்
தக்க அணிகலன்கள் ஆபரணங்கள் -  
தக்க இடங்களுக்கு !

பாடல்-204:

சீதை தேடும் பணியில் அனுமன்
இன்னொன்றும் கண்டான்
புலியைக் கொல்லும் வலிமை மிகு அரக்கரின் மைந்தர்கள்
செய்து விட்டனர் ஏதோ ஒரு குற்றம்!
அதனால் அரக்க மகளிர் மனம் நலிந்து
அமுது ஊறும் வாய்¢னால் பெருமூச்சு விட்டனர்
இடை -  
மின்னல் என துவண்டது
சிலம்புகள் - 
புலம்பி ஒலித்தன
காலால் உதைப்பட்டனர் அரக்க மைந்தர்கள்
மெய் சிலிர்ப்பு உற்றனர்.

பாடல்-205:

சீதை தேடும் பணியில் அனுமன்
இன்னொன்றும் கண்டான்
ஆகாயத்திற்கு வடிவமில்லை
அரக்க மகளிர் இடையும் அப்படித்தான்
இருக்கிறதா  இல்லையா தெரியாது!
அவர்கள் “கள்” உண்டனர்
கண்கள் சிவந்தன
வாய் வெண்மையானது
கண்ணும் வாயும் துடித்தது
புருவங்களும் வளைந்து துடித்தன
வியர்வைத் துளிகள் அரும்பின
கள் பானையில் -  
அவர்களுக்கு தங்கள் மதிமுகம்
புதுமுகமாகத் தெரிந்தது
அது -  
கணவன் கண்டுகொண்ட இன்னொருத்தி முகமோ! என
கணவனிடம் கோபித்தனர்!





பாடல்-206:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் இன்னும் என்ன கண்டான்?
அரக்கர்கள் -  
வேல்விழி கொண்ட  அரகியர்களின்
குமுதவாய்த் தேனைப்பருகி
மயங்கிக் கொண்டிருந்தனர்
வெண் பற்களுக்கிடையே சுரக்கின்ற அந்தத் தேன் - 
கரும்பு ஆலையில் இல்லை
மலைச்சாரல் குகையில் இல்லை
மிலேச்சர் இல்லத்தில் இல்லை
தூய பாற்கடலிலும் இல்லை !

பாடல்-207:

சீதையைத் தேடிச் செல்லும் அனுமன்
இன்னும் என்ன கண்டான்?
அழகிய கணவர்கள் பிரிந்து
அதனால் பெருகிய காமத்தீயால்
முலை மீது பூசிய சந்தனம்தீய்ந்து போனது
அது மட்டுமல்ல
அவர்கள் தமது
முகம் என்ற தாமரை மலரை
கைகள் என்ற மலரால்
தாங்கிக் கொண்டு பெருமூச்சு விடுவதைக் கண்டான் !


பாடல்-208:

சீதையைத் தேடும் பாதையில்
இது மட்டுமா கண்டான்?
ஆயுதங்களில் தேர்ந்த கணவர் மீது
காதல் அதிகம் கொண்டவர் பிரிவைக் கண்டான்
அதனால் அரக்க மகளிர் -   
மலர் மஞ்சத்தில் உயிரில்லா உடல் போல
சாய்ந்து கிடந்தனர்
பெரும் துன்பம் தரும் காதலோ விடவில்லை
வைத்த விழி எடுக்காமல்
வாசலையே நோக்கியபோது
தூது சென்ற மகளிர் வர
போன உயிரைத் திரும்பப் பெற்று
மகிழ்ச்சியால் துடித்ததைக் கண்டான் அனுமன் !

பாடல்-209:

சீதையைத் தேடும் பாதையில்
வேறென்ன கண்டான்?
கூந்தலையும் செவ்வாயும் உடைய தேவமகளிர்
தாளமிட்டு மங்கலப்பாடல்கள் பாடினர்
சங்கு வளை
சிலம்பு
மேகலை
பாதரசம்
ஆகிய அணிகலன்களின் ஒலிகள் தாழ்ந்து போகுமாறு
பலவகை முரசுகள் முழங்கின
அந்தச் சூழலில்
இல்லத்தில் உறையும் தெய்வத்தை வணங்கி
மலரினால் அர்ச்சனை செய்யும்
அரக்க மகளிரைக் கண்டான்!

பாடல்-210:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் வேறென்ன கண்டான்?
அரக்கியர் அணிகலன்களின் ஒளி
வில் போல இருந்ததை!
வாள் போல இருளோடு போரிட்டதை!
வேல் விழிகாளால் இளைஞர் நெஞ்சம் துளைக்கப்பட்டதை!
சங்கு பேரிகை கருவிகள்
மேகம் போல ஆரவாரித்ததை!
மங்கலச் சடங்குகள் செய்யும் அரக்கியர்
மேகங்களைத்தொடரும் மயில் போல நடந்ததை!

பாடல்-211:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் வேறென்ன கண்டான்?
பள்ளி அறையில் ஊடல் நீங்கிய பின்
புணர்ச்சி எனும் போருக்கு
சம்மதித்த நெஞ்சமுடன்
மெள்ள இமை திறந்ததைக் கண்டான்
கள்ளம் கொண்ட வாள் எனும் நெடுங்கண் தனது
 வாள் உறையைத் கழற்றுவது போல
 இருந்ததைக் கண்டான்!

பாடல்-212:

சீதையைத் தேடும்பாதையில்
அனுமன் வேறென்ன கண்டான்?
அரக்க மகளிர் -
தம் கணவரோடு ஊடல் கொண்டபோது
புத்தி- மனம் - சித்தம் - அகங்காரம் என்கிறநான்கும்
கணவரோடு சென்றதால்
மின்னல் இடை துவண்டது
அன்னப்பேடை போல நடந்து
தானும் தன் உயிருமாக
அறைக்குள் புகுந்து
கதவு மூடிக்கொள்வதைக் கண்டான்!

பாடல்-213:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் வேறென்ன கண்டான்?
ஆணும் பெண்ணும் இரட்டையராய் நின்று
கின்னரர் கீதம் பாடி வாழ்த்த
மேகம் கிழிக்கும் மின்னல் போல
முத்து விமானத்தில் மகளிர் சூழ
பொன் நகரின் வீதியில் பவனி வந்து
கணவர் வீடு எனும் புதுமனையில்
புகுகின்ற அரக்க மகளிரைக் கண்டான்!


பாடல்-214:

அனுமன் வேறென்ன கண்டான்?
மேக ஒலி எழுப்பும் முரசு ஒலியோடு
தேவர்கள் வாழ்த்துரையோடு
முனி பத்தினிகள் பாடும் பாடலோடு
தேவமங்கையர் பல்லாண்டு பாட
மணி மாலைகளும் குழைகளும் மின்னிட
புதுமணப்பெண் கோலத்தில்
அரக்கமாதர்கள் செல்வதைக் கண்டான் !

பாடல்-215:

அனுமன் வேறென்ன கண்டான்?
இயக்கியர்- 
அரக்கியர்- 
நாகமங்கையர்  -  
கறையற்ற நிலவு முகம் கொண்ட
வித்தியாதரப் பெண்கள்
இவர்கள் மட்டுமல்ல
மலைபோல படுத்துறங்கும் கும்பகர்ணன்!

பாடல்-216:

கும்பகர்ணன் உறங்கும் மண்டபம்
ஏழு யோசனை அகலம்!
இந்திரன்  முடி சூடும் மண்டபம் போல்
மாசில்லாதது
எட்டுத் திசைகளின் இருளையும்
அழிக்கும் ஆற்றல் பெற்றது!

பாடல்-217:

அந்த மண்டபத்தின் நடுவே
படுத்துறங்கும் கும்பகர்ணன்
ஒரு ஆதிசேடன் போல!
ஒரு கடல் போல!
இருளின் தொகுதி போல!

பாடல்-218:

நினைக்கக் கூடாத பாவங்களுக்கு
மூன்று வகை கதிகள் உண்டு
மந்தகதி - மத்தியகதி - துரிதகதி
கும்பகர்ணன் தன் தொகுதியாம்
மந்தகதி எடுத்துக் கொண்டான்
மகரந்தப் பொடி சிந்தும் கற்பகவனத்தில் - 
இனிய இளந்தென்றல் தன்னைத் தழுவ
உறங்குகின்றான் கும்பகர்ணன்!

பாடல்-219:

மண்டபத் தூண்களில்
சந்திர காந்த கற்கள்
தேவமகளிர் மதிமுகம் கண்டு
இனிய நீரைச் சொரிந்தன
அந்நீர்த்துளிகள் -   
கும்பகர்ணன் முகத்தில் விழ விழ
இன்னும் இன்னும் உறங்குகிறான்  !

பாடல்-220:

கும்பகர்ணனின் மூச்சு
வேகப்புயலுக்கு சமம்
அது வாசல்பக்கம் இருந்த அனுமனை
நகரவிடாமல் நிறுத்தியது
கும்பகர்ணன் மூச்சு இழுத்தபோது
அனுமன் அவன்
மூச்சருகே இழுக்கப்பட்டான்
மூக்கினுள்  செல்லக் கூசினான்
விதிர் விதிர்த்து விட்டது!
விலகிக் குதித்தான் அனுமன்
கும்பகர்ணன் மூச்சுக்காற்று இழுப்புவிசை தாண்டி!

பாடல்-221:

புழுதிக்கூட்டம் ஏற்பட்டது
கும்பகர்ணன் மூச்சினால்!
வானம் தொட்டது அது
மீண்டும் - 
அவன் மூக்கினில் நுழைந்தது மூச்சினால்!
ஊழிக்கால முடிவில்
உலகங்கள் அனைத்தையும் அழிக்கும் ஊழிக்காற்று
செயல்புரியும் முன்பாக இப்போது
கும்பகர்ணன் மூச்சில்
குடியிருக்கிறதோ!

பாடல்-222:

கும்பகர்ணனுக்கு
உயிர்ப்பு மிக்க முகம் தான்
ஆனால் உறங்குகிறான்
சிரிப்பற்ற முகத்தில்
கோரைப்பற்கள்  தெரிகின்றன
அவை - 
“சந்திரனைப் பகைவன் என நினைத்து
இரண்டு  கூறுகளாகப் பிரித்து
இரண்டு பக்க வாயிலும்
உண்கிறான் போலிருக்கிறது ”
என நினைக்க வைக்கும்.

பாடல்-223:

கும்பகர்ணன் ஏழப்போவதில்லை
ஏன்?
தடை செய்யும் மந்திரத்தால்
கட்டுப் பட்ட நாகம் போன்ற தூக்கம்!
ஊழிக்காலத்தை எதிர்பார்க்கும் கடல்
இருந்த இடத்திலேயே
அசையாமலிப்பது போன்ற தூக்கம்!

பாடல்-224:

மும்மூர்த்திகளில் ஒருவன் என
நினைக்கத்தக்க அனுமன்
கும்பகர்ணன் குறித்து என்ன நினைத்தான்?
நற்குணமற்ற அரக்கர் அரசனோ
இராவணனோ என நினைத்தான்
உடனே-  
காக்கும் கண்கள் கொண்ட அனுமன்
கனல் கண்கள் கொண்டன கோபத்தினால்!

பாடல்-225:

கோபித்த  அனுமன் - 
அருகில் சென்று பார்த்தான்
இவனுக்கு பத்து தலைகள் இல்லை
மலைகள் ஒத்த இருபது தோள்கள் இல்லை
ஆகவே
இவன் இராவணன் இல்லை என எண்ணினான்
ஆம்! வேகமாய் எழுந்த
கோபம் எனும் வடவைத்தீ
அறிவு எனும் கடல்நீரால் அணைந்தது!


         -அனுமனோடு மீட்போம்.

Saturday, 6 July 2013

சுந்தர காண்டம்

பாடல்-176:

பொங்கும் அனல் போன்ற
புகை கக்கும் கண்கள் உடைய
இலங்கை தேவி -
“அறிவற்றவனே!
தகுதியற்றதைச் செய்ய
உனக்கு பயமில்லை போலும்
இலையும்  வேரும் தின்று திரியும் வானரங்களிடம்
எனக்கு கோபம் தேவையில்லை
வலிமையும் வனப்பும் கொண்ட
மதிலை நோக்கிக் கொண்டே
இந்தப் பொன்மதிலைத் தாவி
என்னை பகைக்காதே! செல்!” என்றாள்.

பாடல்-177:

இலட்சியம் எடுத்தவர்கள் மனதில்
களிப்பில் மூழ்கும் செயல்கள் குறைவே!
அனுமன் அப்படித்தான் செயல்பட்டான்
கோபம் வெளிப்படாமல் அடக்கி
நீதியின் நலத்தினாலே
செய்ய வேண்டியன எவை என நினைத்தான்
அதனால் அவளை அழைத்து
“ஊரைக்காண ஆசை
எளியவன் நான் சென்றால்
உனக்கென்ன நஷ்டம்!” என்றான் மகா வலியவன்.

பாடல்-178:

அனுமன் சொல்லி முடிக்கும்முன்
அக்கினி வார்த்தைகள் அவள் சொன்னாள்
“போ” என்றதும் போகாமல்
எதிர் சொல் சொல்கிறாயே நீ யாரடா!
திரிபுரம் எரித்தவனே அஞ்சுகின்ற இடம் இது
ஆசைப்பட்டதும் பார்க்க முடிகின்ற ஊரா இது!”
என்று நகைத்தாள்.

பாடல்-179:

இலங்காதேவி வெளிப்படச் சிரித்தாள்
அனுமனோ தனக்குள் சிரித்தான்
அதுவும் அவள் உணர்ந்துவிட்டாள்!
“நீ யார்!
யார் சொல்லி வந்தாய்?
உனது உயிர் பிரிவதால் உனக்கு என்ன பயன்?
ஓடி விடு” என்றதும் -
“இனி - 
இவ்வூரில் புகாமல் திரும்பமாட்டேன்” என்றான்
புகழ் கொண்டான்!

பாடல்-180:

“இவன் வஞ்ச உருவில் வந்தவன்
இவன் வானரம் அல்ல
எமனும் என்னைக் கண்டால் சோர்வானே
இவனோ
பாற்கடல் விஷம் குடித்த சிவன் போலச் சிரிக்கிறானே..”
அனுமனின் நெஞ்சம் புரிந்தாள்
கற் சிலை என திகைத்துவிட்டாள்.

பாடல்-181:

“கொல்வதேவழி ! இல்லையேல்
இவ்வூர்  இறுதிக்காலம் அடையும்” என நினைத்தான்
“வென்று விடு நீ!
இல்லையேல் வெளியேறு” என
தன் விழிகலளில் நெருப்பு வைத்தாள்
தன் வாயினிலும் நெருப்பு கொண்டாள்
இரண்டு  நெருப்புகளை அனுமன் மீது
வீசும் முன்
மூவிலை சூலத்தை
“செல்க” என செலவிட்டாள்!

பாடல்-182:

அனுமன் நினைத்த எண்ணம் எதுவும்
பிழையாக ஆனதில்லை
நெருப்பு வேல் எதிரில் வந்ததும்
பாம்பைக் கவ்வும் கருடன்போல
கைகளால் பிடித்து ஒடித்தான்
தேவர்கள் மகிழ்ந்தனர்
இலங்காதேவியோ திடுக்கிட்டாள்

பாடல்-183:

அவள் எறிந்த சூலம் காணாமல் போனது
நெருப்பை ஒத்த அவள்
இன்னும் பல ஆயுதங்கள் வீசினாள்
அவளை அழிக்காமல்
அவளது ஆயுதங்களை மட்டும்
முழுதுமாக
விண்ணில் வீசி அழித்தான் அனுமன்.

பாடல்-184:

தெய்வத்தன்மையுள்ள
தெய்வப்பல்படை காணாமல் போனது
மலை வானில் முழங்கும் மேகமென
கோபமும் முழக்கமும் செய்தான்
தாயத்தில் சுண்டும்  கழற்சிக்காய்களைப் போல
குன்றுகளையே ஆட்ட வல்ல
தனது கரங்களால்
செந்தீப்பொறி எழ
அனுமனை அடித்தாள்.

பாடல்-185:

இலங்கைதேவி அடிக்கும் முன்பே
அவளது எட்டு கைகளையும்
தனது ஒரே கையால் பிடித்து
“என்ன செய்வது! இவள் பெண்!
கொல்வது பிழை!” என
அவளது ஒடியாத நெஞ்சில் ஒரு அடி தந்தான்
இடி உண்ட மலை போல
உயிரோடு  மண்ணில் வீழ்ந்தாள் சரிந்து.

பாடல்-186:

விழுந்தாள்
நொந்தாள்
சிவப்புக்குருதி வெள்ளத்தில் மூழ்கினாள்
எழுந்து நின்றாள்
பிரம்மனின் அருள் நினைத்து எழுந்தாள்
அனைத்து உலகமும் தொழும்
இராமநாயகன் தாள் தொழும் வீரனாகிய
அனுமன் முன்நின்று கூறினாள் இதுதான்:-

பாடல்-187:

“ஐயனே! இதைக்கேள்
பிரம்மனின் அருள் ஆணையால்
இந்த மூதூர் இலங்கை காக்கின்றேன்
இலங்கை மாதேவி என் பெயர்
செய்தொழில் இழுக்கினாலே
உன்னுடன் சிறுமையாய் போர் செய்தேன்
“பிழைத்துப்போ” என உயிர் பிச்சை இட்டால்
உண்மை உணர்த்துவேன்” என்றான்.


பாடல்-188:

“எத்தனை காலம்
இலங்கை நகரைக் காக்க வேண்டும்?”
கேட்டேன் பிரம்மனை
“வலிமை பெற்ற குரங்கு ஒன்று
கையினால் அடிக்கும்! வருத்தும்”
அன்று நீ
இலங்கை விட்டு என்னைக் காண்பாய்
அதன் பின்
இலங்கை சிதையும் திண்ணமாக” என்று
பிரம்மன் சொன்னான்.

பாடல்-189:

“ஐயனே!
பிரம்மன் சொன்னதே நடந்தது
அறம் வெல்லும்  பாவம் தோற்கும்
என்று இயம்பவும் வேண்டுமோ
இனி மேல் -  
நீ நினைப்பது யாவும் நடக்கும்
உன்னால் முடிக்க முடியாதது இல்லை
பொன் நகராம் இலங்கையுள் புகுக”
புகழ்ந்தாள் வணங்கினாள் புறப்பட்டாள்.




பாடல்-190:

அனுமன் மகிழ்ந்தான்
வாய்மையே வெல்லும் என
ஆரியன் இராமனின் கமலபாதம்
அகத்தில் வணங்கினான்
இழிந்தவர் வாழும் இலங்கையின்
பொன் மதிலில் தாவிப் புகுந்தான்
சிறந்த பாலில்
சிறிது மோர் தெறித்தது போல!
அவ்வளவு நுண்ணியமாக!

பாடல்-191:

இலங்கையில் மட்டும்
இரவும் பகலே!
ஆம் - 
வானைத் தொடும் மாளிகையின் மணிகள்
சிந்தும் வெளிச்சம் அது!
அதனைக்கண்ட அனுமனுக்கும் தடுமாற்றம்
ஆம் - 
“ஒற்றைச்சக்கரத் தேராகிய சூரியன்
உதயமாகி விட்டானோ!” என்பதே
அந்தத் தடுமாற்றம்.




பாடல்-192:

“தன்னைச்சுற்றிலும் இத்தனை ஒளி உள்ளது என்று
இலங்கை அறிந்தால்
தானே - 
தனது இருளைநீக்கிக் கொள்ளும்
நாம் செல்வது வெட்ககரமானது”
இப்படி நினைத்தது சூரியன்!
“ஒரு வேளை -  
சூரியன் செல்லுமாயின்
மின்மினி என உணரும்”
இப்படி அனுமன் நினைத்தான்.

பாடல்-193:

பசும்பொன் மலை போல இருந்தது மதில் !
அதன் நடுவே
அழகான ஒளிமாடங்கள்
ஒளி உமிழ்வதால்
இலங்கையில் மட்டும்
உண்மையான இருள் இல்லை.

பாடல்-194:

ஒளி மிகுந்த வீதிகளில்
அனுமனின் தோற்றம் பயணப்பட்டால்
கண்டுபிடிக்கக்கூடும்
அனுமனின் ஒரு தோள்
அமுதம் கடைந்த மந்தரமலை போன்றது
இன்னொரு  தோளோ
இராமனின் புகழ்போல் உள்ளது
“வீதி நடுவில் போவது பிழை” என உணர்ந்து
தனது பெரிய திருமேனி சுருக்கினான்
வீதி ஓரம் சென்றான்
மானுட விதி திருத்தும் அனுமன்!

பாடல்-195:

தேனுக்காக
பூக்களைத் தேடித் தேடி அலையும்
வண்டினம் போலத் தேடுகிறான் அனுமன்!
கருங்கடலைக் கடந்த அனுமனின் கால்கள்
இப்போது  சீதைக்காக நடக்கின்றன
பசுக்கள் நிரம்பிய கொட்டில்கள்!
யானைக்கூடங்கள்!
தேர் மாடங்கள்!
குதிரை லாயங்கள்!
எல்லா இடமும் அலைகின்றது
அனுமன் எனும் தும்பி!

பாடல்-196:

சுவர் வரிசைகளில் பதித்த மணிகள்
நட்சத்திர ஒளியோடு மின்னுகின்றன
அன்புள்ளோர்க்கு அனுமன் எளியன்
அதனால் எளியனாகத் தெரிந்தான்!
அன்பிலார்க்கு அரியன்
அதனால் திருமால் போலத் தெரிந்தான்!
நீலமணி வெளிச்சத்தில் கருநிறத்தனாக தெரிகின்றான்
மாணிக்க ஒளியில்
செந்நிறத்தனாகத் தெரிகின்றான்

பாடல்-197:

சீதையைத் தேடிச் செல்லும் வழியில்
காட்டுமயில்கள் போல
களிக்கும் அன்னங்கள் போல
அரக்க மகளிர் தெரிந்தனர்
ஏன் எனில்
அரக்கிகள் நீராடுவது
ஆகாயகங்கை நீரில்!
தேன் சோலையில் தேவமகளிர் நீராட்டுகின்றனர்
அதனால் அரக்கி முகங்கள்
செந்தாமரை மலர்கள் போல பொலிவாகவும் உள்ளது.

பாடல்-198:

கச்சணிந்த முலைகளின் பாரம்
தாங்காத நுண்ணிய இடையோடு
தேவமகளிர் நீர்க்குடம் சுமந்து
அரக்க மகளிரை நீராட்டுவதைக் கண்ட அனுமன்
நினைத்தான் இதனை:-
“சேர்த்து வைக்க விரும்புவோர்
தவத்தை சேமியுங்கள்
செல்வம் அல்ல!
விதிக்கடவுளின் வழி இதுவே ! ”

பாடல்-199:

அனுமன் தேடல் தொடர்ந்தது
இசை இலக்கணப்படி
ஏழுவகை நரம்புகளை உடையது யாழ்
அதனை
அரக்க மகளிர்
செம்பஞ்சு குழம்பு பூசிய
தளிர்க்கரம் வருந்துமளவு இசைத்தனர்
அந்த இசையை மேகத்தின் முழக்கம் தடுக்கும் என அஞ்சி
மேகத்தின் வாயை பொத்தும்
பணிப்பெண்டிரைக் கண்டான் அனுமன்.

பாடல்-200:

அனுமன் இன்னொன்றும் கண்டான்
அவரவர் நினைப்பை பலிக்கச் செய்யும்
சிந்தாமணி விளக்கு ஒளிர்ந்தது
மலர்களின் பந்தல்
பொன்மயமான நாடக அரங்கம்
அதில் பாடுவோர் இருந்தனர்
கந்தர்வ மகளிர் ஆடல் விதிப்படி ஆடினர்
அந்த நடனத்தை அரக்க மகளிர்
படுக்கையில் இருந்தபடி ரசிக்கின்றனர்.

      --அனுமனோடு மீட்போம்.