Tuesday, 27 December 2011

VALLALAR CINDHANIGAL

    ஓம்சிவாயநம
வள்ளலார் இன்றைய வாழ்வுக்குப் பொருத்தமானவரா!
                                   கவிஞர் பா.சத்தியமோகன்
அன்றிலிருந்து இன்றுவரை மனிதனின் சுயநலம் ஓயவேயில்லை. எதிலிருந்து எதைப்பெறலாம்.
எதைத்தேடினால் எது கிடைக்கும் என்பதே அவன் நாட்டம். அப்படி எனில் சுயநலம் தவறான விஷயமா?
 சுயநலத்தால் நன்மையே கிடைக்காதா? சிந்திக்கும்போது ஒன்று தோன்றியது.
தென் ஆப்பிரிக்காவில் தனது வழக்கு ஒன்றினுக்காக வாதாடப்போன அண்ணல் காந்தியடிகளை வெள்ளை இனத்தவன்
அந்த இரயில் பெட்டியிலிருந்து முதல்வகுப்பு டிக்கட் வாங்கியிருந்தும் நள்ளிரவில் பலவந்தமாய் இறக்கிவிடப்பட்டு
அவமானம் பெறாவிட்டால், அந்த உன்னத மனிதரின் சுயமதிப்பு சேதப்படுத்தப்படாவிட்டால்,
கறுப்பின மக்களின் விடுதலைக்கு பிள்ளையார் சுழி இல்லை.
           உண்மையில் என்ன நடந்தது?
 நாமாக இருந்தால் எனது இரயில்பெட்டியின் செளகரியமான பயணம் தடைப்பட்டு விட்டதே என்கிற சுயநலமோடு கோபப்பட்டிருப்போம்.
அநேகமாக பயணம் முடிகிற வரையில் நீடிக்கிற, சிலமணிநேர வருத்தம்கலந்த சுய பச்சாதாபமாக வலுப்பெற்ற  சிறிய கோபமாக இருந்திருக்கும்.
அண்ணலோ என்னைப்போல இதுபோல எத்தனை எத்தனை இந்தியர்கள் இங்கே அவமானப்படுத்தப்படுகிறார்களோ
என்று தன் கோபத்தை பொதுநலமாக்கினார். விடுதலை பிறந்தது.
இன்றைய 2011கால கட்டத்தில் “அன்பு” என்கிற சொல்லையும் பண்பையும் நாம் நமது சுற்றத்திற்கும் உறவினருக்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
இது சரியா? முறையா? மனிதத் தனமா ?
 தன் வீடு, தன்மக்கள் , தன் பெண்டிர், தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளம் நன்மைதருமா?
தன்வீட்டுக்கு குடிநீர் வரவில்லை என வருந்துகிறவன், ஊருக்கு மழை வரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால் எத்தனைபேர் பயன் அடையலாம்!
அன்பு என்கிற பண்பை தன்மீதும் தன் சொந்தம் மீதும் மட்டுமே காட்டுவோரே! கொஞ்சம் திரும்புங்கள்.
அன்பைபெரிதாக்கிப் பாருங்கள். அகலமாக்கி உயர்த்துங்கள். என்ன கிடைக்கும்? அன்பெனும் பிடியில் மலையே கிடைக்கும்! அகப்படும். அன்பு  என்னால் குடிசை அளவுக்குத்தானே பெரிதாக்க முடிந்தது என்கிறீர்களா. அதில் இறைவன் எனும் அரசனே வந்துவிடுவார். அன்பெனும் வலை வீசுங்கள், பரம்பொருளே கிடைப்பார். அன்பாகவே உங்கள் மாறிவிட்டனவா? அதில் அமுதமாக அமர்வார் ஈசன். மட்பாண்டத்தால் ஆன பானை அளவுக்கு அன்பு இருந்தாலும்போதும் அதில் பொங்கும் கடல்போன்ற ஈசன் அடங்குவார்.
 அட! அன்புதானப்பா உயிர். அன்பு உயிரில் வெளிச்சம்தானப்பா அறிவு..
அன்பு உன்னிடம் அணு அளவு இருந்தாலும் போதும் அதில் பெரிய ஒளி ஒன்று அமைந்திருக்கும்.
அப்படியானால் பரம சிவம் எப்படி இருக்கும்?
அன்புக்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்!
இத்தனையும் சொன்னார் எக்காலத்திற்கும் பொருத்தமான வள்ளல் பெருமான்! 


Tuesday, 6 December 2011

அன்புடையீர் வணக்கம்.சில நிமிடங்கள் முன்பு துவங்கப்பட்ட  இந்த சில விநாடி குழந்தை பிளாக்கிற்கு உங்களை அடியேன் வரவேற்கிறேன். இது என்ன புதுவிதம்! வானவெளிக்கு காற்றை வரவேற்பதா! ஆம். வரவு வைப்பதுதான் வாழ்வு,செலவு வேறுவிதம்! இனி நாம் உரையாடப்போகிறோம்! எனக்குப்பிடித்தவை- தொட்டவை -  கேட்டவை - உங்களோடு பகிர ஆசை.
உடனடியாக பதில் எழுதவும் என்று தபாலில் படித்திருக்கிறேன். அப்படி ஒரு சாத்தியம் -ஒரு பகிர்தல் - வான்வெளியில் எலக்ட்ரானிக் எழுத்துகளாகத் திரியும் இந்த கடிதத்தின் பயனாகட்டுமே. நேசமான மனித உறவுகள் அருகில் இருக்கும் சாத்தியங்கள் குறைந்த வாழ்க்கை நிலையில் இந்த மின் எழுத்துகளும் சிந்தனைகளும் ஒருவித வெறுமையை இட்டு நிரப்புகின்ற ஆற்றல் உடையவை ஆகின்றன. நன்றி.
சந்திப்போம்.
பகிர்வு-1
அதிர்ச்சியாக இருந்தது.  அலுவலக நண்பர், வயது 47கூட இருக்காது. ராஜமோகன் இறந்துவிட்டாராம். அட்டாக் என்றனர். மன இறுக்கம் காரணம், வேலை பளு காரணம். மனிதர் தேனீ போன்ற உழைப்பாளிதான். நல்ல மனிதர்.மாதா மாதம் தேவார நால்வர் தொண்டுப்பாதை என 16வருடங்களாக அடியேன் நடத்தும் ஒல்லியான பணவசதி கொண்ட   அமைப்புக்கு ஒண்ணாம்தேதி ஆன கையோடு, எங்க காணோம் நேத்து? என்று வாஞ்சையோடு கேட்டு இருநூறு ரூபாய் கொடுப்பார், நான் பில் போட்டு கொடுப்பதுபோல ஒரு வார்த்தை சொல்வதுண்டு. “உங்கள் உள்ளம் வாழ்க, உங்கள் இல்லம் வாழ்க” என்பதுதான் அந்த வார்த்தை. சொன்ன அடுத்த கணம்,”எல்லாரும் வாழட்டும்” என்று புன்னகைப்பார்.கை குலுக்கியவாறு வாழ்த்தும் வாழ்த்தை பெறமாட்டார்.தவிர்ப்பார்.ஏன்? பிறருக்கு உதவுவது வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் அது. அந்த ஒரு எண்ணம் மட்டுமல்ல, இன்னும் நிறைய உதவாமலே இந்த வாழ்த்து கிடைத்துவிட்டதே என்ற மதிப்பான எண்ணம் அது. அவ்வளவு நல்ல மனிதர்.
** தனது அப்பாவுக்கு பாடைகட்டி பிணத்தை எடுத்துவைத்தபின் ஒரு முறை கடைசியாக குடத்தில் நீரூற்றி  வந்தபின் அழுதுகொண்டே பிரியாவிடை கொடுத்து ஓடி வந்த மகளின் முகம் ! அந்த மாலை நேரம்! அந்த மகளின் கண்கள்`!  அவரது கடமையை நிறைவேற்ற இனி யார் உண்டு?   கேள்விகளில் முழுகிப்போனேன். மூத்தது மகள். பத்தாவது படிக்கும் மகன்தான் கொள்ளிவைக்க புறப்பட்டான். இடுகாட்டுக்கு அனுமதி பெண்ணுக்கில்லை. கண்களை மறைத்த காட்சி அந்த 16.11.2011 மாத பூச நாள். வியாழக்கிழமை. விதி என்ற இரண்டே எழுத்துகள்! திணறித் திணறி இதோ இன்று டிசம்பர் மாதம் 4.12.2011ல் ஒரு போன் வருகிறது. “ராஜமோகன் பிரெண்டு சார் நானு! மாசாமாசம் தருவாருல்ல?”
“ஆமாங்க”
“அவரு பொண்ணு எனக்கு போன் பண்ணிச்சு எனக்கு. “அங்கிள்! அப்பா யாருக்கோ மாசம் ஆனா 200 எடுத்துவப்பாரு. அவரு யாரு என்னன்னு தெரியுமான்னு கேட்டது. பணமும் கொடுத்தது. எப்ப நான் உங்களப்பாக்கலாம் சத்தியமோகன்?”
மனம் கனத்தது. நல்லவர்கள் வாழ்வதில்லை என்று புலம்புவார்கள். பார்த்திருக்கிறேன். ராஜமோகன் போன்ற நல்லவர்கள் சாவதில்லை என்றுதான் தோன்றியது.
அன்பன்
பா.சத்தியமோகன்