Friday, 29 July 2016

கீரை விற்ற மேரி பாட்டி




ஒருவர் இறந்து போவது என்பது எதிர்பார்ப்பல்ல
இறந்த பின் நிகழும் அதிர்ச்சி
மனதின் ஓர் ஏற்பாடல்ல
வடலூரில் கூட்டுரோடு ரவுண்டானா பெரியார் சிலைக்கு
கீழே அமர்ந்திருந்த கருப்பு மேனி இனி இல்லை
அந்த  வதங்கல் முதுமைக்காரி இனி இல்லை
மழையோ பனியோ வெயிலோ
பிற்பகலோ எக்கணமும் எவரையோ நம்பிக்கொண்டு
எத்திசையிலிருந்தும் ஓர் அன்பர் வாங்குவர் என்று
நம்பிக்கை மீது நம்பிக்கை வைத்த அவள் இனி இல்லை
குனிந்த அண்டங்காக்கை என தன் மீதே தலை தொங்கும்
கார்பன் என் கசங்கிய கோடுகள் கொண்ட முகம் இனி இல்லை
ஒரே ஒரு தடவை புடவையும்
பிறிதொரு நாளில் ஒரு வேளை பார்சல் சாப்பாடும்
பிறிதொரு மழை இரவில்  குடைக்கு கீழே
குளிரோடு நடுங்கியவள் உள்ளங்கை சுடச்சுட வாங்கித்தந்த டீயும்
உறிஞ்சிய மேரி பாட்டி இனி காணக் கிடைக்கமாட்டாள்
இறந்து போனாள் என்றது 29.7.16 ப்ளக்ஸ் போர்டு.
சாக்கு போர்த்திய பொன்னாங்கண்ணி கீரைகள்
தார்ச்சாலையில் சிதறி வாடிக் கொண்டிருந்தன .


Tuesday, 19 July 2016

சுயநலம்






பட்டாம்பூச்சியின் மரண ஊர்வலத்தில்
கலந்து கொண்ட  எறும்புகள்
இரவு உணவுக்கு கவலையில்லை என்று
தம்முள் கிசுகிசுத்து வரிசை கலைந்தன.

அத்தனையும் போச்! அத்தனையும் ஆயா ஹை !




அன்னை கிராமம் நகரம்
உறவினர் நட்பினர் சொந்த பந்தம்
தொலை தூரம் மாமன் மச்சான்
அனைவரையும் இழந்து
பக்கென இதயம் நின்று
பேச முடியாத ஊமைத்தனம் ஆகி
சித்தம் பேதலித்தும் வெளியே காட்டாமல்
உள்ளே குமுறும் போது
அத்தனை பேரும் திரும்பக் கிடைக்கின்றனர்
மறந்த செல்போன் பத்து நிமிடம் தாமதித்து  கிட்டும் போது.



மாட்டேன் என்றால் மாட்டுவேன்




இனி கவிதை எழுத மாட்டேன் என
ஒரு கவிதை எழுதி விட்டேன்
இனி அனுப்ப மாட்டேன் என்றே
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
படிக்க மாட்டேன் என்பவர்கள் படிப்பார்கள்
என்றோ எங்கோ எவர்க்கோ
இரு செவியில் விதையாகி ஒரு நொடியில்  கனியாகி
நினைவில் கலந்து மணம் வீசும்
இனி என் கவிதை.

Monday, 18 July 2016

வலி நடுவில்தான் சிகரம் இருக்கிறது




கஷ்டமுடன் செய்யும் வேலைக்கே
கஷ்டம்வரினும் விட்டுவிடாத செயலுக்கே அதிகம் மதிப்பு
பெற்ற குழந்தைக்கு முலைப்பால் தரும் தாய்க்கு
சிறிது சிறிதாய் அதிகரிக்கும் வலி எனினும்
 “தாய்” என்ற பெருமை கிட்டிவிடுகிறது
இலட்சியம் என்ற குழந்தை  இருந்தால் வலிக்கவே செய்யும்
“குறிக்கோள் இலாது கெட்டேன்” எனப்பின்னால்
புலம்பினால் அது அப்பர் தேவாரம் .

செல் பில் குறைய




“ஓம்” என்று உரைத்தனர் தேவர் என்பது
மகாகவி பாரதி வரி
செல் பில் குறைக்கவும் இதுவே உதவும்
“ஓம்” என்று துவங்குவோம் பேச்சை
நடுவில் சில பல தடைகள்  முற்றினால்
“ஓம்” என்றே குறிப்புச் சொல்லாக்கி
அப்புறம் தொடர்வோம் அதுவே நன்று
ஓம்!

அதன் குரல்




வெயில் காலத்தில்
நீரை வீணாக்க வேண்டாம் என
குழாயை இரண்டாம் முறை
மூன்றாம் முறை இறுக்கி மூடுபவரை
மாத்திலிருக்கும் காகம்
“குழாயை இரண்டு சொட்டு வீழுமாறு மூடுக
எமக்கும் வெயில்தாகம் தீர்வோம்” என ஏங்கிக்
கரைகிறது கா ! கா!
வறட்டு மனிதன் பதில் தராமை கண்டு
பிறகு பறக்கிறது அடுத்த கிளைக்கு.



உயர்வு நவிற்சி





முதல் சொல்லில்
சொல்லும்போதே உயர்வாய் சொன்னால்
என்னதான் குறைந்து விடுமாம்?
“உங்கள் வீடு எங்கே என செல்போனில்
வழி கேட்டால்
சுடுகாட்டுக்கு செல்லும் நேர்வழியில்
இரண்டாவது  கட்டிங்” என்கின்ற நண்பா
வேறு அடையாளம் கொள் வேறு உயர்வில் சொல்.
நல்ல அடையாளமாகி நல்லவிதமாய் வாழ்ந்து முடிப்போம்
அதே தெருவில் மகிழம்பூ மரம் இருக்கிறதே அதை
நீ சொல்லி நான் கேட்க வேண்டும்.

கூடா நட்பு




குப்பை மட்டுமே சேகரித்த பிளாஸ்டிக் தொட்டி
நாளடைவில் பெயர் மாறிற்று
குப்பைத் தொட்டி என்று -    
உண்மையில் குப்பையின் குணம் சிறிதுமில்லாதது

துளசியைத் தன்னுடன் வளர்த்த மண்
துளசி மாடம் என வணங்கப்பட்டது
துளசியின் தன்மை  பெற்றது போல்.

Sunday, 17 July 2016

கொல்லைப்புறம்


               
பெண்களுக்கு
முன் வாசலை விடவும் சுதந்திர பூமி
வீட்டின் பின் கொல்லையில் அமர்ந்து பேசுவது தான்.
அதிலும் தோய்க்கிற கல் வைத்த கொல்லை சிறப்பானது
குடும்ப சுமைகளை
 உண்மை பொய் கலந்து கிசுகிசுத்து
இரவும் பகலுமாக  கலந்த குரலில் அங்கலாய்த்து விட்டு
அரக்கப் பரக்க கடுகு வெடிக்க
சமையலில் மீண்டும் சங்கமம் ஆகும் போது
அத்தனை சோகமும் பதிந்த தோய்க்கிற கல்லில்
பாதி கனிந்து விடும்.

பொருட்களும் நானும்



பொருட்களால் வீட்டில் மகிழ்வாய் இருப்பது போல்
பொருட்களும் வீட்டில் மகிழ்ச்சியாய் இருக்க
விழைகின்றேன்.
அருகிலிருக்கும் டூவீலர் நகர்த்தி
இருபது நாளாய் ஆடாத ஊஞ்சலாக இருந்த நிலை மாற்றியதும்
ஆடுகின்ற ஊஞ்சலின் சங்கிலிகள் ஒலி
சிரிப்பாய்த் தோன்றிடக் குதூகலித்தேன் ஊஞ்சலின்  சார்பில்.

Saturday, 16 July 2016

அதுசரி


                                   

ஆசுகவி காளமேகப் புலவரே எப்படிக் கண்டீரோ !
தேங்காயும் சிவனும் ஒன்று என்றீர்
இருவரும் கல்லால் அடியுண்டீர்  என்றீர்
இருவருக்கும் ஓடு உண்டு என்றீர்
இருவருக்கும்  மூன்று கண் என்றீர்
இருவரும் பூஜைக்குப் பயனாவர் என்றீர்
எல்லாமும் சொன்னீர் புலவர்காள்
தேங்காய் விலை அதிகம் என்பது தவிர்த்து.

Wednesday, 13 July 2016

முடிவு



அமர்ந்து கொண்டிருந்தேன்
கண்ணில்பட்ட முருங்கை மர உச்சிக்கிளையில்
எப்படி ஒரு காகம் கிளை வளையாமல்
எத்தனை இலகுவாய்!  - ஆம்  -    
உயரமோ உச்சியோ நுனியோ சிரமமில்லை
விரும்பி அமர முடிவெடுத்த சிறகுகளுக்கு.

முகநூல்



அயர்ந்து கிடந்த
ஆயிரமாயிரம் முகங்களில்
உறைந்து கிடந்த உணர்வுவெளிகளில்
சட்டெனப் பரவ முடியாமல் தவித்தபோது
உள்ளங்காலில் பதிந்தும் இடம் தெரிந்தும்
நீண்ட வருடம் எடுக்கமுடியாத
நெருஞ்சி முள் போல உறுத்திற்று
ஷட்டவுன் செய்யும் கணநேரம் தோன்றி மறைய
கணிணி காட்டிய
இறந்த அப்பாவின் முகச்சிரிப்பு.

உணர்தலின் வெளி



டீக்கடை நண்பர்கள் சூப்புதல் நடுவே
அண்ணாந்தேன் அண்டங்காக்கைக் கண் ஒன்று
வேப்பமர இலை நடுவே
அப்படி இப்படி அலையும்போது
அதன் கண்ணிலும்
உருள்கின்ற சூரிய நிழல் பற்றி
காகம் சற்றும் அறியாதது
எனக்கேன் புரிந்து தொலைக்கிறது.