Sunday, 27 October 2013

சுந்தர காண்டம் 551-575



பாடல்-551:

சீதை உணர்வுகள் பெயரிட முடியாமல் விம்மின
இது -   
பிறந்த பயன் அறியாது இறந்தவர்கள்
பிறவிப் பயன் அடைந்த மகிழ்ச்சிக்கு சமமோ!
விலை உயர்ந்த பொருளை மறந்தவர்கள்
பல்லாண்டுகள் சென்று அறிந்த உணர்வோ!
உடலைத் துறந்த உயிர்
மீண்டும் வந்து ஒட்டிய திறமோ!

பாடல்-552:

மாணிக்கம் இழந்து
மீண்டும் பெற்ற
புற்றுப்பாம்பென மகிழ்வு பெற்றாள்!
பழைமை மிகு சொத்துக்கள் இழந்து
மீண்டும் பெற்றவரை ஒத்தாள்!
மலடி ஒருத்தி குழந்தை பெற்ற நிலைக்கு உவமை ஆனாள்
குருடாய் உழந்து
விழி பெற்ற ஓர் உடல் ஒத்தாள்




பாடல்-553:

சீதை
அனுமன் தந்த மோதிரம் வாங்கினாள்
முலைக்குவையில் வைத்தனள்
தலையினால் தாங்கினாள்
கண்களில் ஒற்றினாள்
தோள்கள் பூரித்தனள் மெலிந்தனள்
வெப்பத்துடன் ஏங்கினள் உயிர் பெற்றனள்
அந்த உணர்வு
இந்த  உணர்வு தான் என அறுதியிட்டுக் கூற இயலுமோ!

பாடல்-554:

அந்த மோதிரத்தை முகர்ந்து பார்த்தாள்
தன் முலை மேல் வைத்து
அழுத்தித் தழுவிக் கொண்டள்
ஒளிரும் ஆனந்தக்கண்ணீர் ததும்பினாள்
வெகு நீளமான நேரம் அதையே நோக்கினாள்
ஏதேதோ அதனுடன் பேச விரும்பினாள்
ஆனால் பேசமாட்டாள்
மேலும் மேலும் விம்மல் கொள்கின்றாள்
ஆனால் தன்னுள் விழுங்குகின்றாள்

பாடல்-555:

அந்த மோதிர ஒளியால்
சீதையின் நீண்ட கண் பொன்நிறமானது
மின்னல்  போன்ற உடல்
பொன் நிறமானது
இராமனின்  மோதிரம் தீண்டிய உடன்
பொன்னாக மாற்றும்
ஸ்பரிச வேதி எனும் தெய்வமணியோ!

பாடல்-556:

இராமனது மோதிரம் வாழ்க வாழ்க
பசியால் இடர்பட்டு உழந்தவர்கள்
அடைந்த அமுது அது
இறக்கும் நிலையில் உள்ளவர்கள்
உயிர் பிழைக்க வைத்த மருந்து அது
இல்லறம் ஏற்றவர் போற்றும் விருந்தினர் அது

பாடல்-557:

சீதை
அம்மோதிரமுடன்
இப்படியான தன்மைகள் பெற்று
உயிர் இன்பம் பெற்று
முத்த நகை உடையவளாகி
விழி நீர்
முலை முகட்டில் தத்திப்பாய்ந்தது
மழலைச் சொற்கள் தள்ள
“உத்தமா! உயிர் தந்தாய்” என இன்னமும் கூறுவாள்.


பாடல்-558:

“மூன்றுலகமும் படைத்த பிரம்மனுக்கு முதல்வன்
இராமனின் தூதனாக வந்தாய்
உன் செம்மையால் உயிர் தந்தாய்
உனக்கு எளிதாய் கைம்மாறு செய்ய முடியுமோ!
என் அம்மை அப்பனாகிய தெய்வமே!
அருளின் வாழ்விடமே
இம்மை  இன்பமும் மறுமை இன்பமும்
புகழும் தந்தாய் நீ” என்றாள் சீதை.

பாடல்-559:

வலிமை மிகு
பருத்த பெருத்த தோள் உடையவனே
துணை இல்லாதிருந்த எனது
துன்பம் தீர்த்த வள்ளலே வாழி
நான் கற்பு நிலை மனத்தவள் என்றால் - 
“பல யுகங்கள் - நாட்கள் - ஆண்டுகளெல்லாம்
நீ இன்று இருப்பது போலவே
சிரஞ்சீவியாக வாழ்க” என்றாள் சீதை.

பாடல்-560:
தூண்  போல திரண்ட தோள் உடைய
அனுமனை நோக்கி
சீதை மீண்டும் பேசினாள்
“சிறந்த குணமுடையவனே
இராமபிரான்
இலக்குவனுடன் எங்கே இருக்கிறான்
உன்னை எங்கே சந்தித்தான்
என்னை இராவணன் கவர்ந்து சென்ற செய்தியை
யார் சொல்ல அறிந்தான்?” என்றாள்.

பாடல்-561:

கருமேக நிற கொண்ட
மாய அரக்கன் மாரீசன் என்பவன்
இராவணன் ஆணையால் மாய மான் ஆகினான்
மாயமான் எனத் தெரிந்தே நீ அதை விரும்பினாய்
இராமன் அம்பு எய்தான்
சுய வடிவம் பெறும் நிலையில்
“ஓ சீதா!  ஓ இலக்குமணா!” என
இராமன் குரலில் அழைத்தான்
அது பொய்க் குரலின் ஓசை
மயக்கியது உன்னை அம்மா”

பாடல்-562:

பொய்க்குரலை -
இளவல் இலக்குவன் கேட்கக்கூடாது
என இறைவர் இராமன் விரும்பினான்
வில்லினால் உண்மை ஒலி உண்டாக்கினான்
ஆனால் வென்றது-
விதியின் வெப்பமே!
பொய்க்குரல்-
பொல்லாப் பொருள் ஆனது!
வில்லாளன் இராமன் -
இளையவன் இலக்குவன் வரவு கண்டான்.

பாடல்-563:

இராமபிரான்
இளைய வீரன் முகம் கண்டான்
முகம் கொண்டே கருத்தும் புரிந்தான்
அங்கு
வண்டுகள் உறையும் பர்ண சாலை வந்தான்
உன் திருவடிவைக் காணாமல்
“உயிர் உண்டோ இல்லையோ” எனும் படி
 இன்னலில் இராமன் உழன்றான்
இன்னொரு காரணமும் வேண்டுமோ எனும் படி
மனம் உழன்றான்.

பாடல்-564:

சீதாதேவியே
தேடி இன்று உன்னைக் கண்டு கொண்டேன்
நீ வாழி ! இராமனுக்கு தீது ஏதுமில்லை
மெய் உயிர் நீயிருக்க
பொய் உயிர் தாங்கியது போல
இராமன் அங்கே வாழ்கிறான்
ஆண் தகை நெஞ்சில் நீ அகலவேயில்லை
அதனால் அழிவில்லை
இங்கே நீ இருக்கும்போது
அங்கே அவன் உயிர் எப்படிப் போகும்?

பாடல்-565:
அன்னையே
அப்படிப்பட்ட அண்ணலை ஆண்ட அன்னையே
உன்னை
காடுகளில் தேடினான்
மலைகளில் நாடி அலைந்தான்
உயிரில்லாமல் பொறியால் இயங்கும் இயந்திரப் படிவம் ஒத்தான்
தன் உயிரை
புகழுக்கு விற்ற ஜடாயுவைக் கண்டான்.

பாடல்-566:

Ƒஜடாயுவின் மேனி நோக்கி
வான் வரை துயரம் கொண்டு இராமபிரான் -
“என் தந்தையே
நீ எப்படி இப்படி ஆனாய்” என்றதும் விளக்கினான்
இலங்கை வேந்தன் தன்னை
வஞ்சனை செய்தததை
Ƒஜடாயு சொல்லச் சொல்ல
இராமனுக்குள் உலகம் வேகும் அளவு
வெம்மையான கோபமெனும் சீற்றத் தீ நிமிர்ந்தது.

பாடல்-567:

Ƒஜடாயுவின் பண்புதான் என்னே!
இராமன் சீற்றம் மிகுந்து
“மூன்று உலகங்களும் தீய்ந்து
நீறாகப் போகும்படி
என் சின அம்புகளால் அழிப்பேன்” என
கையிலிருந்த வில்லை நோக்கிட
“இராமா!
ஒரு சிறியவன் உனக்குச் செய்த தீமையால்
உலகுக்கே தீமைசெய்ய கோபம் உறுவாயோ
உன் தன் சினம் ஆறுக” என்றான்
தந்தை நிலையிலிருந்த ஜடாயு
அதனால்
சீற்றம் அடங்கி ஆறினான் இராமன்.

பாடல்-568:

“செம்மை குணவானே
இராவணன் எந்த வழியே சென்றான்
அவன் தங்குமிடம் எது?” என இராமன் வினவினான்
கழுகு அரசன் ஜடாயு பதில் கூற முனையும் போது
விதியின் வலியால் இறந்தான்
வில்லேந்திய இராமனும் இலக்குவனும்
துன்பத்தில் வீழ்ந்தனர்.

பாடல்-569:
துன்பாத்தால் அயர்ந்த அவர்கள்
மிகச்சிரமமுற்று மனம் தேறி
தந்தை முறை உடைய ஜடாயுவுக்கு
ஈமக்கடன்களை
தேவரும் மருளும்படி செய்தனர்
கயமைத் தொழில் செய்த அரக்கனை
நாம் தேடிக் காண்போம்” என்று முடிவு செய்தனர்
மேகம் தொடும் மலைகள் காடுகள் கடந்தனர்.

பாடல்-570:

அந்த வழிகளெல்லாம் அன்னையே
நின்னைக் காணாமல் இராமன் அயர்ந்தான்
மிகவும் மனம் தேறிக் கொண்டு
செங்கண் வழியே சிந்திய கண்ணீர்
நெடுவழியை சேறாக்கியது
நெருப்பிலுற்ற மெல்லிய மெழுகு என
அறிவு கலங்கினான் மெய்யன்
புலம்பும் சொற்கள் கூறினான் இவ்வாறு.

பாடல்-571:

“இவ்வுலகில்
எவரால்தான் கர்மவினை கடக்க முடியும்!”
என்று கூறிய
வீரத்திருமகன் உறையும் பெருந்தோள் இராமபிரான்
அறிவு மயங்கினான்
ஐம்புலன்களும் வேறு வேறாய் கழன்றன
நல்ல ஊமத்தம் பூவை
தன் தலை நாகம் அருகே அணிந்த
சிவபெருமான் போல் ஆனான்
தனை ஒன்றும் உணராதவன் ஆனான்.

பாடல்-572:

குளிர் மேக வடிவினன் இராமபிரான்
கோபம் தலைக்கேறிய நிலையில்
கோதாவரி நதி மீது சினம் கொண்டு
“சூரிய உதயத்தில் பவழக்கொடி சீதை
உன் குளிர் நீரில் ஆடியது உண்மையெனில்
அவளைத் தேடி தந்துவிடு !
இல்லையேல் நீ என் அம்பினால்
நெருப்பு ஆகிவிடுவாய்” என்றான்.

பாடல்-573:

நதிக்கு அடுத்து
மலையிட சினம் பாய்ச்சினான்
“ஏ! நீளப்பரந்த மலையே!
அழகிய பூங்கொடி சீதாதேவியை
உன்னிடம் தேடி என்னிடம் காட்டாவிட்டால்
உன் இனம் சேர்ந்த
எல்லா மலைகளையும் அழிக்க இந்த அம்பே போதும்” என்றான்.

பாடல்-574:

மலைக்கு அடுத்து
மான்களிடம் சினம் பாய்ச்சினான்
மாரீசன் பொன்மான் வடிவம் கொண்டதால்
என் மான் சீதை அகன்றாள்
ஏ! மான்களே!
கொலைபுரியும் என் அம்பினால்
உங்கள் பெயரே இனி உலகில்
இல்லாதபடி ஒழிப்பேன்” என்றான்.

பாடல்-575:

தன் மனதிலிருந்தே வேறுபட்ட இராமன்
உயிர் போன்ற இலக்குவன் கூறிய சொல் எனும் அருமருந்தால்
மனம் தேறினான் அதன் பிறகு
அனுமன் கூறியது இது.

--அனுமனோடு மீட்போம்.

Sunday, 20 October 2013

சுந்தர காண்டம் 526 - 550




பாடல்-526: 

இராமனின் திருவடி
செம்மை இதழ் தாமரை என ஒருசொல்லில்
எளிதாகக் கூறிட இயலாது
நாயகன் திருவடி குறித்து
திருத்தமாகக் கூறினால்
கடலில் விளையும் பவழமும்
குவளை மலரின் கருநிறம்  ஆகிவிடும்!
பாடல்-527:

அணிகலன்கள் அணிந்தவளே கேள்
இராமனின் ஒளி மிகுந்த விரல்
கடலில் விளையும் இளமை பவழக் கொடியல்ல
கற்பக மரங்களின்
செந்நிற அரும்பல்ல
உதய இளம் சூரியனின் கதிரொளி
ஓரளவு உவமையாகலாம்!

பாடல்-528:

இராமனின் திருவடி நகங்களுக்கு
சிறியவும் பெரிதுமான
மாசிலாத பத்து சந்திரன்களும் இணை அல்ல
ஒளிவீசும் வைரங்கள் இணையல்ல
அதனால் -  
திருவடி நகங்களுக்கு உவமை நான் அறியேன்

பாடல்-529:

இராமனின் திருவடிகளைப் புகழ்ந்து முடித்து விட இயலாது
அயோத்தியில் அவை நிலத்தில் படவேயில்லை
பின்பு
காட்டில் வருந்தின
திரிவிக்கிரம அவதாரத்தில் அந்தத் திருவடிகள்
எல்லா உலகங்களையும் பொருந்தின
அதன் சிறப்பை எப்படிக் கூறுவேன்!

பாடல்-530:

இராமனின் கணைக்காலுக்கு
உவமை ஏதுமில்லை
ஆதிசேஷன் எனும் பாம்புப் படுக்கையில் துயிலும்
திருமாலின் கணைக்கால்
ஓரளவு உவமையாகும்
கொல்லும் அம்புகள் தாங்கும் அம்பறாத்துணி
இராமனின் திருவடிக்கு ஒப்பல்ல.

பாடல்-531:
இராமனது தொடைகள்
அறம் போற்றும் பறவை அரசன் கருடனது
அழகு மிக்க பிடரிக்கு சமம்
பெரும் புகழ் மிகு மத யானைகளின் துதிக்கைகள் 
இராமனின்தொடைகளுக்கு நாம் சமமில்லை என வெட்கப்படும்
உலகில் வேறெதுவும் உவமை உள்ளதா!

பாடல்-532:

தாமரை மலர் மட்டுமல்ல
எல்லா உலகங்களும் திரண்டு உண்டான
அழகிய கொப்பூழுக்கு எதை உவமையாக்குவது!
சுழித்துப் பெருகும் கங்கை ஆற்றின்
அழகிய நீர்ச்சுழ்¢ உவமை அல்ல அது இழிவே ஆகும்
மகிழம்பூ என்பதும் இணையல்ல
அழகுக்கு உவமை எங்கு தேடுவது?

பாடல்-533:

என் தெய்வமான சீதையே
ஒப்பற்ற அழகு பெற்ற ஒப்பற்ற உயர்வு பெற்ற
மரகத மலை போன்றது
இராமனது மலை போன்ற மார்பு.
அந்த்ச் மார்பினை அடையும் சிறப்பு பெற்றவர்
தவம் செய்த திருமகளை விட வேறு யார்?

பாடல்-534:

இராமனது முழங்கால்
இதழ்கள் நெருங்கிய தாமரை மலர் என
எண்ணிய வண்டுகள் மொய்க்கும் நீங்காத அழகுடையது
இராமனது பெரிய கைகள்
முழங்கால் அளவு நீண்டிருப்பது
ஐராவதம் எனும் திசை யானையின் துதிக்கை
ஒத்திருக்கும் முழங்கால்கள்  என ஓரளவு சொல்லலாம்
வேறு உவமை என்ன சொல்ல?

பாடல்-535:

பசும் இலைகள் கொண்ட தாமரை அரும்பு
சூரியனைக் கண்டு மலர்ந்தது போல உள்ளது
இராமனின் கரங்கள் 
இப்படியான மென்மையான கரங்கள்
இரண்யனின் வச்சிரம் போன்ற உடலை
பிளந்தது உண்மையா என சந்தேகப்படுபவர்
இராமனின் கை நகங்களைக் பார்க்கட்டும்

பாடல்-536:
சீதை தெய்வமே
இராமனின் தோள்களை
மலைகளுக்கு உவமை கூறுவதா? இயலாது!
மலைகளுக்கு இராமனது திரட்சி இல்லை
இராமனது ஒளி இல்லை
வெற்றித் திருமகளோடு சேர்ப்பு இல்லை
மாமேரு எனும் வில் ஒடியும்படி
வலிமையான நாண் புரளவில்லை புகழில்லை
ஒன்றைப் போல் இரண்டில்லை

பாடல்-537:

கடலில் விளையும் சங்கும்
பாக்கு மரமும்
இராமனின்  கழுத்துக்கு உவமை என
சிற்றறிவினர் கூறுவதை ஏற்க முடியாது
ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட
திருமாலின் இடக்கரம் உள்ள
பாஞ்ச சன்யம் இராமனின் கழுத்துக்கு உவமை.

பாடல்-538:

அண்ணலின் திருமுகம் தாமரை என்று கூறினால்
கண்ணுக்கு உவமை எதனைக் கூறுவேன்?
குளிர்சந்திரன் என்று உரைப்பேனா?
சந்திரனோ
விண்ணில் உடல் பொலிந்து
பிறகு மெலிந்து தேய்வானே!

பாடல்-539:
சந்தனக்குழம்பும் அகிலும் கலந்து பூசிய
அகன்ற தோள் அமலன் இராமன்
அவனது செவ்வாய் தாமரைக்கு ஒப்பிடப்பட்டால்
இராமனது இனிய சொற்களை
பவழம் பேசுமா? வெண் புன்னகையும் வீசாதே!
எனவே
பவழம் திருவாய்க்கு உவமை ஆகாது

பாடல்-540:

இராமனின் பற்கள்
முத்துக்களோ
முழுநிலவின் சிறு சிறு துண்டுகளோ
வெண் நிற தேவாமிர்தத் துள்¢களோ
அற வித்துகளின் முனைகளோ
சத்தியமரத்தின் உடும்புகளோ
முல்லையரும்போ
மயிலிறகின் அடிக்குருத்தோ
புன்னை மொட்டோ
எதனை நான் சொல்வேன் அம்மா.

பாடல்-541:

இராமனது மூக்கிற்கு
நாங்களே உவமையாகிறோம் என
இந்திர நீலக்கல்லின் ஒளிக்கொழுந்து வேண்டுகிறது
மரகதமணியின் ஒளித்திரட்சி வேண்டுகிறது
உவமையாக இருக்க முடியவில்லை!
இந்திரகோவம் எனும் பூச்சியை
கவ்விப் பிடிக்கும் பச்சோந்தியும்
அம்மூக்கிற்கு இணை அல்ல!

பாடல்-542:
தண்டகாரண்யத்தில்\
கரன் முதலிய அரக்கர் நடுங்க
இராமன் கையிலுள்ள வில்லினை விட்டதும்
அரக்கர்களது உடல்கள் தலை இழந்தன
உண்ண வந்த பேய்கள் கூத்தாடின
வானவரும் முனிவர்களும் அறக்கடலும் கூத்தாடின
நான்கு வேதங்களும் கூத்தாடின
இந்த பெருமையெல்லாம் இராமனது புருவத்திற்கு
சரியான உவமையா என நீயே அறிக!

பாடல்-543:

இராமனின் நெற்றியை
நிலவுடன் எப்போது ஒப்புமை செய்யலாம்?
வளர்ந்து வளர்ந்து தேய்தல் இல்லாவிட்டால்!
ராகு எனும் பாம்பினால் கவ்வுதல் இல்லாவிட்டால்!
தினசரி  பிறத்தல் இறத்தல் இல்லாவிட்டால்!~
அசையும் இருளில்
நிலவு அசையாமல் பலகாலம் நின்றால்!

பாடல்-544:

இராமனது திருமுடி மயிரினை
மழையெனக் கூற இயலாது ஏன்?
நீட்சி பெற்று திரண்டு
பளபளப்பாக
கருத்து ஒழுங்குடன்
நீலமணி நிறம் பெற்று
முறுக்காகப் பின்புறம் தாழ்ந்து
நுனி சுருண்டு
சந்தனம், துகில் முதலிய எந்த வாசனையும் இல்லாமல்
நறுமண மலர்கள் இல்லாமல்
இயற்கை மணம் வீசும் இராமனின் திருமுடி
இப்போது திரண்ட சடையாகி விட்டதம்மா! அதனால்
மழை என்பது பிழை!

பாடல்-545:

இராமனின் நடை
காளை நடை என்றால்
யானை வருந்தாதோ?
தன்னை அடைய
நிலமகள் திருமகள் இருவரும் வர
எல்லையிலா செல்வம் தர
அதனை மறுத்து
காட்டில் வாழும் நாளிலும்
தன் நிலை மாறாத பண்பு
யானையிடம் உள்ளதெனில் வருந்தாதோ?

பாடல்-546:

இவ்வாறு
அனுமன் மொழிய மொழிய
தீயிலிட்ட மெழுகு என
தன்னை அறியாமல் தளர்ந்தாள் சீதை
அவனைத்
தரையில் வீழ்ந்துவணங்கினாள் உடனே அனுமன்
“நாயகனார் சொன்ன அடையாளச் சொல் ஒன்று உண்டு
இராமன் கூறிய குறிப்புகள் உண்டு
அன்னநடையாளே கேள்” எனகூறத் தொடங்குவான்.

பாடல்-547:

“காட்டில் நடப்பது சிரமம்
காட்டில் நான் தங்கும் நாள்களும் சில
அதுவரை
என் தாய்களுக்கு பணி செய்து அயோத்தியிலேயே இரு”
எனக் கூறியதை கூறுக
ஆனால் அதற்கு முன்பாகவே அவள்
உடுத்த மர உரியோடும் என் மீது சினத்தோடும்
சீதை என் அருகில் நின்றாள் - அதை உரைக்கவும்”
என்றான் இராமன்”

பாடல்-548:

நீண்ட மகுடம் கொண்ட தசரதன்
ஆணையிட்டு அரசாட்சி ஏற்றேன்
பிறகு இழந்தேன் - 
காட்டுக்குப் புறப்பட்டேன்
மதில் கொண்ட கோட்டை வாசல் கடப்பதற்கு முன்
சீதை கேட்ட கேள்வி
“காடு எங்கே இருக்கிறது?புறப்படலாமா?”
இதைச் நினைவூட்டு என்றார் இராமபிரான்.

பாடல்-549:

குழந்தை குணம் கொண்ட சீதை
தேர் செலுத்தும்
சுமந்திரனை நோக்கி
“வள்ளல் இராமனின் ஆறுதல் சொற்களில்
கிள்ளை சீதை மனத்துயர் மறந்தாள் என்க
கிளிகளையும் நாகணவாய்ப்பறவைகளையும்
இனி எனக்குப் பதிலாக
ஊர்மிளை வளர்க்கச் சொல்க”
இதை நினைவு செய்க என்றான் இராமன்.

பாடல்-550:

இதற்குப் பிறகும் உணர்த்த ஏதுமில்லை
என்ற இராமபிரான்
“எனது பெய்யர் பொறித்த
அரிய கலை கொண்ட மோதிரம் இது
நீட்டு” என்று
தனது நெடிய கையால் தந்த
கணையாழி இது” என அனுமன் தர
வாள் நுதலி சீதை கண்டாள்.

--அனுமனோடு மீட்போம்.

Saturday, 12 October 2013

குழந்தைக்கு கவுன் தைப்பவர்கள்


அந்த
நீல நிற மீன்கொத்திப்பறவை பார்க்கும் தூரத்தில்
காயப்போட்டுள்ளார்கள் அந்த கவுனை
சிற்பிகள்தான் மறு பிறவியெடுத்து
குழந்தைக்கு கவுன் தைப்பவர்கள் ஆகமுடியும்போல

அந்த ஆடையின் வடிவிலேயே
ஒரு
சின்னஞ்சிறு குழந்தையை
எப்படித்தான் செய்கின்றனரோ

அடுத்தமுறை நீங்கள் அறியலாம்
கிளிப் போட்டு
காய வைக்கும்போது
காற்றில்
மேலும் கீழும் பறப்பது
கவுனில் இல்லாத துணிவடிவக்குழந்தைகள் அல்ல
மாயக் குழந்தை ஒன்றின் வீசும் கைகள்!


-- ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை (16.10.2013)

சுந்தரகாண்டம் 501-525




பாடல்-501:

இப்போது நான்
எதற்காக உயிர் வாழ வேண்டும்?
என்ன நன்மைக்காக உயிர் தரிப்பது?
என்ன நன்மை வந்து விடும்?
பிறர் மனை சேர்ந்த பெண்ணை
சேர்ப்பது கூடாது என்று நினைத்து தானே
உயிர்த்தலைவன் இராமன் இங்கு வரவில்லை?
அறம் இல்லாததை செய்து கொண்டிருக்கிறேன்
அறவடிவன் இராமன் வருவான் என
பொழுது போக்குகிறேன்!

பாடல்-502:

எப்போது இந்தப் பெரும்பழி நேர்ந்ததோ
அப்போதே உயிர் விட்டிருக்க வேண்டும் நான்!
உலகம் ஏற்க முடியாத பழி சுமந்து
பெருமை அழியும் உயிர் வாழ்வது
மறு உலகில்
வசந்தம் காணவோ!

பாடல்-503:

எதிர்பார்ப்புகள் முடிந்ன
வறண்ட பாலை மணல் உள்ளமாகி
சீதாப்பிராட்டி மனம் உதிரத் தொடங்கியது
அது நினைக்கிறது இப்படி:-
“என்னிடம் அன்பு அழித்து விட்டார்கள்
இராமனும் இலக்குவனும் என்பதால்
வலிய பழி சுமக்கப் போகிறார்கள்
சுமக்கட்டும்
வான் புகழ் கொண்ட ஜனகர் குலப்பெண்
எனத்தோன்றினேன்
எனது துயர் துடைக்க இப்போது
என்னைத்தவிர யார் உள்ளனர்?”

பாடல்-504:

“நான் உயிர் வாழ்வதை
உலகத்தார் ஒப்பமாட்டார்கள்
ஏன்?
வஞ்சக மானின் பின்னே இராமனைப் போகவிட்டேன்
மைத்துனர் இலக்குவனையும் ஏசி அனுப்பினேன்
நஞ்சு போன்ற இராவணனின் வீடு புகுந்த நங்கை நான்
நிச்சயம் உலகம் எனை விரும்பாது”

பாடல்-505:

“வலிமை மிக்க இராமர் இலக்குவர்
அரக்கரை எதிர்ப்பார்கள்
போரில் வென்றாலும் வெல்லட்டும்
வீழ்ந்தாலும் வீழட்டும்
இல்வாழ்வுக்கென ஒரு அறம் இருக்கிறது
அதனை இறக்கச் செய்த நான்
இன்னும் உயிர் வாழ்வதால்
எனக்குரிய இழி சொற்கள் பழி சொற்கள்
என்னையே சேரவேண்டும் அவர்களுக்கு அல்ல”.

பாடல்-506:

“மானத்துக்கு தீங்கெனில்
கவரி மான் உயிர் விட்டுவிடும்
அது போன்ற மகளிர் முன்
நான் ஒரு பேதை ஆனேன்!
“கருமுகில் இராமனைப் பிரிந்து
கள்வன் ஊரில் இருந்தவள் இவள்!” என
ஏசும்படி வாழ வேண்டுமோ நான்?

பாடல்-507:

“அற்புதன் இராமன்
அரக்கர் வர்க்கம் அழிப்பான்
வில்லால்  எனை நிச்சயம் சிறை மீட்பான்
அந்நாளில் “தனது வீட்டுக்குள் வர
தக்கவள் நீ அல்ல” என்று சொல்லிவிட்டால்
என் கற்பை
எந்தத் தன்மையால் நிரூபிப்பேன்?”





பாடல்-508:

“நான் இறப்பதே அறத்தின் விருப்பம்”
என்னைத் தடுக்கும் அரக்கியர்
தற்போது உறங்குவது நல் வினைப்பயனே
நான் இறக்க இதுவே உகந்த நேரம்”
நினைத்துக் கொண்டே சீதை
இறக்க முடிவு செய்தாள்
குருக்கத்திமரம் அருகே சென்றாள்

பாடல்-509:

சீதை இறக்கச் செல்வது
அனுமனுக்குப் புரிந்துவிட்டது
அச்சம் அடைந்தான்
சீதை திருமேனி தீண்டிடக் கூசினான்
ஆதலால் சொற்களால் அவளைத் தீண்டினான்
“தேவர் தலைவன் அண்டநாயகன்
அனுப்பிய அருள் தூதன் நான்”
என்று தொழுதுக் கொண்டே பிராட்டி முன் தோன்றினான்

பாடல்-510:

“மடந்தையே
அடியேன் வருகை இராமனின் ஆணை!
உலகங்கள் குடைந்து குடைந்து
உன்னைத் தேடுகின்ற வானரங்கள்
எண்ண முடியாதவை ஆயின!
தவம் செய்துள்ளேன்
தங்கள்  சேவடி நோக்கி தரிசித்தேன்”

பாடல்-511:
இங்கு நீ இருப்பாதை இடரில் உழலும்
ஆண் தகை அறியவில்லை
அதற்கு காரணம் உண்டு
“அரக்கர்கள் வர்க்கம் இன்னும்
வேரொடு அழியவில்லை” என்பது தவிர
வேறு எந்த காரணமும் இல்லை.

பாடல்-512:

“நெய் நிறை விளக்கே! சீதையே
என்னை வேறாக நினைக்காதே
நீ ஐயப்படலாம் என்பதால்
உண்மை உணர
அடையாளம் என்னிடம் உள்ளது
இராமன் உணர்த்திய உரைகளும் உள்ளன
அப்போது
உள்ளங்கை நெல்லிக்கனி போல நீ உணர்வாய்
தவிர்க்கவும் தற்கொலையை ! ” என்றான் அனுமன்

பாடல்-513:

சீதையினைத் தொழுது நிற்கிறான் அனுமன்
சீதையோ கருணையும் கடும் சினமும் அடைந்தாள்
சீதையின் மின்னல் எண்ணம் இது:-
“இவன் அரக்கன் அல்லன்
நெறி நின்று ஐம்புலன் வென்ற முனிவன்
அதுவுமில்லையெனில் தேவனாக இருப்பான்
இல்லையெனில்
நல் உணர்வு உரைப்பவனாக இருப்பான்
தூயன்
குற்றமிலான்”

பாடல்-514:

அரக்கனாக இருக்கட்டுமே
அமரனாக இருக்கட்டுமே
குரங்கினத் தலைவனாக இருக்கட்டுமே
கொடுமை தர வருகிறவனாகட்டுமே
எம்பிரான் இராமன் நாமம் சொல்லி
உருக்கி விட்டான்
உணர்வைத் தந்தான்
பிரிய இருந்த உயிரைத் தந்தான்
இதை விட உதவி உண்டோ? 

பாடல்-515:

சீதை தெய்வம் ஒரு கணம் நின்றது
அனுமனை உற்று கவனித்தது
பேசலாமா வேண்டாமா என்று கருதியது
உள் நெஞ்சு அதற்கு முன் எண்ணியது:-
“என் உள்ளம் இவனைக் கண்டதும் இரங்குகின்றது
கள்ள மனம் கொண்ட வஞ்சகன் இவனல்ல
என் துன்பம் கண்டு
கண்ணீரால் நிலம் நனைய
நினைவுடைச் சொற்கள் புலம்புகிறான்”
இவனிடம் பேசுவோம்
பிறகு -“வீரா ! நீ யார்?” என்றாள்
முதல் சொல்லே அனுமனுக்கு முற்றான தேன் சொல்!

பாடல்-516:

சீதை கூறிய சொற்களை
தலையில் கொண்டான் அனுமன் பிறகு
தனது கைகளையும் தலைமேல் கொண்டான்
“தாயே
தூயவன் இராமன் உன்னைப் பிரிந்த பின்பு
துணைவனாக சுக்ரீவனைப் பெற்றான்
அவன் தான் சூரியனின் மைந்தன்
கவிக்குலமாம்  குரங்குகளின் கூட்டத்த¨லான்
குற்றமிலான்”

பாடல்-517:

சுக்ரீவன் அண்ணன் வாலி
இராவணன் வலிமை அழிக்கும்படி
வாலினால் இறுக்கிப் பிணைத்து
எட்டுத் திசையிலும் எழுந்து தாவிய
வெற்றி உடையவன்
தேவர்கள் வேண்டியதால்  பால்கடலை
மந்திமலையில் சுற்றிய
வாசுகி எனும் பாம்பின் உடல் தேய
அமுதம் தோன்றச் செய்யும்
தோள்களைப் பெற்றவன் வாலி.

பாடல்-518:

அப்படிப்பட்ட வலிமை வாலியை
உன் தலைவன் இராமபிரான் ஒரே ஒரு அம்பினால்
அவன் ஆவி வாங்கினான்!
வாலியின் தம்பி சுக்ரீவனுக்கே
அரசாட்சி நல்கினான் எம் மன்னவன்!
சுக்ரீவனைத் துணை எனக் கொண்டான்
நாயேன் சுக்ரீவன் அவையில் இருந்தேன்
நல் நெடும் காற்றின் மைந்தன் நான்
அடியேன் நாமம் அனுமன்.

பாடல்-519:

வானரங்களின் வலிமையோடு
உன் தலைவன் மனம் ஒத்துக் கூடியுள்ளான்
வானரங்களால்
உலகங்கள் யாவற்றையும் கையில் எடுக்க இயலும்
கடலைத் தனித்தனியே தாண்ட இயலும்
வானினும் உயர் தோற்றம் எங்களுக்கு
எழுபது வெள்ளம் எனும் எண்ணிக்கையில் உள்ளோம்
உன் தலைவன் இராமன் நினைத்ததை
முகத்தால் அறிந்து
குறைவறச் செய்து முடிப்போம்”

பாடல்-520:

அன்னையே 
உன்னைத் தேடிட
பல திசைகளிலும்
வானரங்கள் புறப்பட்டுள்ளன
பவழக்கொடியுடைய ஏழு கடல்கள்
ஏழுகடல்களைச் சூழ்ந்த ஏழு தீவுகள்
சிறப்பு மிகு நாக லோகம்
விண் - மண் - இடைவெளி
அண்டத்தில் எல்லாப்பக்கங்கள்
இவை தவிர
அண்டம் தாண்டி அப்பால் உள்ள
பல கிரகங்களிலும் தேடப்போயுள்ளன
குறிப்பிட்ட நாள் எல்லைக்குள் திரும்பும்!

பாடல்-521:

இராமனது அருள் ஆணை பொய்க்குமா?
அன்றே சொன்னான் “தென் திசையில் தேடு” என
எவ்வாறு கூறினான் எனில்
இழி தொழில் இராவணன் கடத்திய நாளில்
ரிஷிய முகக் குன்றில்
துணி சுற்றி  நீ வீசினாய் நகைகளை
எமக்கு அருகில் போட்டாய்
அதனைச் சொன்னதும்
இராமன் சொன்னதே அவ்வார்த்தை!

பாடல்-522:

“சீதாதேவியே
கொற்றவன் இராமனுக்கு
சுக்ரீவன் நட்பு கிடைத்த அன்று
உன் அணிகலன்கள் கொண்ட துணி முடிச்சைத் தந்தேன்
அன்று அவன் நிலை
எனது வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது
அன்று இராமன் நீங்காமலிருக்க
உயிர் காப்பாற்றியவை உன் நகைகளே
ஆம் அவைகளே -
இராமனை இறக்காமல் காத்தன
அன்று மட்டுமல்ல இன்று -
உன்னையும் காப்பாற்றின உன் மங்கல அணிகள்!

பாடல்-523:

பழியை வென்ற அனுமன் கூறியது:-
“இராமனின் நிலை இருக்கட்டும்
மற்றது கேளுங்கள்
வாலியின் மகன் அங்கதன்
சுக்ரீவனால் ஏவப்பட்டுள்ளான்
இரண்டு வெள்ளம் வானரர் சேனையோடு
கிஷ்கிந்தை விட்டு
தென் கடற்கரை அடைந்திருக்கிறான்
வீரம் மிக்க அங்கதன்”

பாடல்-524:

அனுமன் இசைக்க இசைக்க
சீதாதேவி உவகையும் உயரம் ஏறிற்று
துன்பத்தால் ஒடுங்கிய மேனி
வான் வரை விம்மி ஓங்கிற்று
“நான் உயிர் பிழைக்கும் காலமும் வந்து விட்டதோ!”
அருவி போல் கண்ணீர் ஒழுகும் கண்ணாள்
“ஐய! சொல்..” என்றாள்
ஐயன் மேனி அறிவதற்கு எப்படி இருந்தது” என்றாள்

பாடல்-525:

“துடி இடையாளே
இராமன் திருமேனி
உவமானத்தின் தன்மையிலோ
உவமானத்தின் பண்பிலோ கூறினால்
அந்த உவமைகள்
தமது இலக்கணம் இழக்கும்
ஆதலால்-
நான் கூறும் அடையாளங்களின் தொடர்ச்சியால் அறிக” என
இராமனின் அடி முதல் முடி வரை
அனுமன் கூறுவான் இவ்விதம்.

-அனுமனோடு மீட்போம்.

Monday, 7 October 2013

சுந்தர காண்டம் 476- 500


பாடல்-476:

பசுமையான வளையல் அணிந்தவளே!
அந்த இருவரும் அற்ப மனிதர்கள்
எனினும்
உன்னை எனக்குத் தந்த உதவி பெரிது
அதனால் உயிர்க் கொலை வேண்டாம் என  விடுகிறேன்
ஆனால் உனக்கு வேண்டுமெனில்
அவர்களைக் கொலை செய்யும் முறையும்
ஆராய்ந்து இயற்றுவேன்! அதையும்  பார்ப்பாய் !

பாடல்-477:

“குறைந்த நாட்களே வாழப் போகிறவளே!
கேள்
ஆழமான அகழி காவல் காக்கும் அயோத்தி அடைவேன்
பரதன்  உயிர் குடிப்பேன்
உலகம் அழிக்கும் ஊழித் தீ போல
மிதிலை நகர் முழுதும் அடியோடு அழிப்பேன்
எளிதாக இங்கு வந்து
உன் உயிரும் போக்குவேன்! பார்!”

பாடல்-478:

செந்தாமரைக் கண்ணாளை அகத்தில் வைத்து
புறத்தில் அவளை ஏசிவிட்டு
இராவணன் மிகவும் பொங்கினான்
எரிக்கும் கதிர் வாளை நோக்கி
கூறியது இதுவே:_
“நீ எனக்கு இணங்கவில்லை
கொல்ல வேண்டிய காலம்
பனிரெண்டு மாதத்திலிருந்து
இரண்டு மாதமாகி விட்டது
இனி நீயே அறிந்து கொள்
மரணமா? வாழ்வா? என்பது உன் கையில்!”


பாடல்-479:

இராவணனுக்கு
தான் மிரட்டியது போதாதென்று
தோன்றியது போலும்
 அரக்கியரைத் தனியே அழைத்தான்
சிரிப்பில்லாத முகம் பிளந்த வாய் கொடும் கோபம்
மூன்றின் கூட்டுத்தொகை ஆன அரக்கியரையும்
மிரட்டினான்
“சீதையை அச்சப்படுத்தியோ நல்ல அறிவுரை கூறியோ
என் வசம் ஆக்குக ..இல்லையேல்
உங்களுக்கு நான் நஞ்சாவேன்”

பாடல்-480:

இராவணன் என்னும் இடி
சீதாப்பிராட்டியை இத்தனை நேரம் வதைத்தது
அசோகவனம் நீங்கியது அரண்மனைக்கு அகன்றது
அடுத்த இடி வந்தது
அரக்கியர்கள் வடிவில் சூழ்ந்தது
இராகு எனும் பாம்பு விழுங்கி
பிறகு உமிழ்ந்த தூய நிலவு போன்ற சீதையை
மயில் போன்ற சீதையை
அரக்கியர்கள் அத்தனை பேரும்
ஒரே நேரத்தில் சுற்றிக் கொண்டனர்
பெரும் ஓசையுடன் அதட்டினர்
சிந்தைக்குத் தோன்றியதெல்லாம் பேசினர்!

பாடல்-481:

ஒவ்வொரு அரக்கியரும்
ஒவ்வொருவரை மிஞ்சும் வண்ணம்
சீதையை மிரட்ட முற்பட்டனர்
சிலர்-
கண்ணில் கனல் வர கோபம் காட்டி மிரட்ட
சிலர்-
மின்னும் சூல்த்தையும் வேலையும் காட்டி மிரட்ட
இன்னும் சிலர்-
“கொல்லுங்கள் கொல்லுங்கள் குடல் கிழிய
வயிறாரத் தின்னுங்கள் தின்னுங்கள்”
என்று மிரட்டினர்.

பாடல்-482:

இன்னும் சில அரக்கியர்
கேள்விகள் கேட்கவும் செய்தனர்
“இராவணன் யார் தெரியுமா?
உலகைப் படைத்த பிரமனின் வழித்தோன்றல்
ஆம்
பிரம்மனின் மகன் புலஸ்தியன்
புலஸ்தியன்மகன் விசிர முனிவன்
விசிர முனிவனின் மகன் இராவணன்
மூவுலகத் தலைவன்
சாமவேதத்தின் ஆயிரம் பகுதிகளிலும் வல்லவன்
அறிவாளன்
மெய் அன்பு உன்னிடம் வைத்தது தவிர
அவன் செய்த இழிதொழில் வேறென்ன?”

பாடல்-483:

இன்னும் சில அரக்கியர்கள்
சுத்தமாய் வடிகட்டிய அநியாயங்களை
புனிதவதிக்கு புத்திமதியாக்கினர்:-
“பெண்களில் தீயவளே!
புண்ணில் கோல் இட்டுக்குத்தியது போல பேசினாய்
இதனால்
மண்ணில் மானுடர்கள் தம் குலத்தோடு
அழிய வைத்து விட்டாய்
உன் உடலும் அழியும்படி
நோய் போன்ற செயல் செய்து விட்டாய்
உண்மையை
நடுநிலை நின்று பார்க்கத் தெரியாதவளே!

பாடல்-484:

இன்னும் சில அரக்கியர்
மிச்சம் வைத்திருந்த ஏச்சுகள்
உச்சகட்டமாய் பாய்ந்தன
“அறிவற்றவளே
உன் மனதில் சிக்குமாறு சொல்கிறோம் கேள்
புகுந்த குலத்துக்கும் பிறந்த குலத்துக்கும்
புகையும் சுடு நெருப்பு விதைக்க வந்தவளே
உணர்வில்லாதவளே
இந்த நிமிடமே இராவணனை அடைக
இல்லையேல் உன் இனமே இருக்காது”

பாடல்-485:

அரக்கியர்கள்
சீதையைக் கொல்வது போல் நெருங்கினார்கள்
கொடுமை செய்தார்கள்
“இராவணன் வெல்வான் இவளைத் தின்னுங்கள்”
என்று கூச்சலிட்டபடி
பயமுறுத்தும் உடம்புகளோடு வந்தார்கள்
இராவணன் கட்டளையும் சீதை நினைத்தாள்
ஒரே நேரத்தில்
அத்தனை துயரமும் நினைத்தாள்
மன உறுதி குறையவில்லை ஆனால்
கண்ணீர் விட்டு
தனது அவலம் நினைத்து சிரித்தாள்

பாடல்-486:

துயரங்கள் கொத்து கொத்தாக
செவி வழியே உடல் வழியே
தேளாகப் புகும்போது
தேனான சொல்லுடன் வந்தாள் திரிசடை
ஆண்டவன் அனுப்பிய தாய்ப்பால் போல்
சீதை இதயம் நோக்கி வந்தாள் திரிசடை
“தாயே
நான் கண்ட கனவின் பயனை
முன்பே சொன்னதை நினை
வீண் கவலை பிழையாகும்” என்றாள்
கேட்டதும்
சீதையின் இதயச்செவியில்
இன்பத் தேன் பரவிய மகிழ்வுடன்
“அன்னை போன்றவளே! நல்லது!”


பாடல்-487:

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்!
அறிஞர் போன்ற திரிசடை
தனது கனவு காட்டப்போகும் உண்மைகளை
அரக்கிகளுக்கு எடுத்துச் சொன்னாள்
மாமன்னன் இராவணன் கட்டளை தவிர
ஏதுமறியா அரக்கியர்
திரிசடை சொற்கள் கேட்டு அதிர்ந்தார்கள்
நிறுத்திக் கொண்டனர் ஏச்சுக்களை!
சீதையின் உயிர் உடலில் நின்றது!

5. உருக்காட்டுப்படலம்

பாடல்-488:

அனுமன் எண்ணங்கள் இவை :-
“சீதை காண ஏற்ற காலம் இது
காவல் அரக்கியர் இன்னும் உறங்கவில்லையே
அவர்களே உறங்க நினைத்தாலும் உறங்க முடியாதே”
நினைத்துக் கொண்டே அனுமன்
மந்திரம் உச்சரிக்க
இறந்தது போல மயக்கம் அடைந்தார்கள்!

பாடல்-489:

சீதா தேவி
உறங்காதவர்களும் உறங்கக் கண்டாள்
துயரம் தாங்க முடியவில்லை
நெஞ்சினால் எது சிந்தித்தும்
உய்யும் வழி காண முடியவில்லை
நெகுகின்றாள் ஆனால் அஞ்சாமல் நின்றாள்
உள்ளம் அழிவுற்றாள்
இராமன் அன்பு பேச வாய்ப்பு கிடைக்குமா
இளகிடும் சொற்கள் கூறி
இன்னும் இளகி மேலும் வருந்தினாள்.

பாடல்-490:

வலிமையான விதியே! சொல்!
கரிய மேகம் போன்ற இராமன்
நெடிய கடல் போன்ற இராமன்
அடர் இருள் போன்ற இராமன்
தனியே தவிக்கும் என் உயிரை
நிலைப்பெறச் செய்ய
வில்லின் இடி போன்ற முழக்கமுடன் வருவானா
நாண் ஒலி ஒலிக்குமா? விதியே நீ சொல்!

பாடல்-491:

அறிவில்லா நிலவே !சூரியனே! கூர் நிலவே
விரைந்து செல்லாத மந்தமான இரவே
குறையாத இருளே
எல்லாரும் என்னைத்தான் வருத்துவீர்களா?
என்னை நினைத்தும் பார்க்காத வில்லாளனை
சற்றும் வருத்த மாட்டீர்களோ!

பாடல்-492:

பூங்கொடிகளே!
அனல் காற்றுத் துணையுடன்
நீங்களும் தான் துன்பம் செய்கிறீர்கள்
என் உயிர் நிலைமை தெரியும் தானே
தன் மேனியும் கடல் மேனியும் ஒன்றாகப் பெற்ற
இராமனுடன் காட்டில் பழகி வரும் நீவீர்
என் குறை உரையாடக்கூடாதோ?

பாடல்-493:

“இராமன் வராமல் போகான்” எனும் வலிய எண்ணத்தால்
ஆயிரம் கோடி இடர்களைக் கொண்டேன்
வலி தீர்த்துவிடு அன்புச் சேவகனே
நாராயணனே தனி நாயகனே

பாடல்-494:

“மரங்கள் அடர்ந்த காட்டுக்கு
என்னுடன் வருதலை சிதையே நீ தவிர்
அயோத்தியிலேயே இரு” என்றாயே
உன் அருள் இதுதானா
என் உயிர் உண்ணமாட்டாயோ!”

பாடல்-495:

“பேணிக் காக்கும் உணர்வே
பேணும் உயிரே
வெட்கமில்லாமல் எதற்கு
இன்று என்னுடன் உழல்கிறீர்கள்?
தனி நாயகன் இராமனைக் காணும் வரை
கழிய மாட்டீர்களோ
நான் அடையும் பழி
உமக்கும் வேண்டுமா? போய்விடுங்கள்!”

பாடல்-496:

நான் எதற்கு மகிழ்வது?
எப்படி மகிழ முடியும்?
முடியாத வழிகளை உடைய வனத்தில் நுழைந்து
புறப்பட்ட இராமனால்
முடிவிலாப்புகழ் தசரதன் முடிவுற்றான்
அப்படிப்பட்ட இராமன் துயர் துடைப்பான் என மகிழ்வதோ!
சீதை தன்னை மதிக்காமல் உயிர்விட முடிவு செய்தாள்
ஆம்!
அவள் எண்ணங்களால் தன்னையே குத்திக் கொள்கிறாள்

பாடல்-497:

மின்னலிடும் அணிகள் இடையில் விளங்கும் சீதை
இடர்களால் துவண்டாள்
உயிர் விம்மி அழுதாள்
“உயிர் உண்டு என்பதால்தானே இடர்களும் இருக்கின்றன?
இடர்களைத்தான் விட்டுவிட முடியவில்லை
உயிரை விட்டால் துன்பமும் நீங்கும் புகழும் சேரும்”
என நினைத்தாள்.


பாடல்-498:

பொறுமையாக இருந்தேன்  இத்தனை நாட்கள்
உயிரைப் போற்றிக் காப்பாற்றி விட்டேன்
எதற்காக?
வீரக்கழல் அணிந்த இராமனைக் காணும் ஆசையால்
நீண்ட இந்நகரின் சிறையிலே
அரக்கர்கள் வதையிலே வாழ்ந்து விட்ட என்னை
அந்தப்புனிதன் ஏற்பானோ?

பாடல்-499:

“இங்குள்ளவர்களை அரக்கிகள் என்கிறேன்
உண்மையில் நானே அரக்கி
ஆம்
பிற ஆடவர்கள் என்னை விரும்பியதை உணர்ந்தும்
உயிரோடிருக்கின்றேனே
அரக்கரும் அரக்கியரும் சொன்னவை எல்லாம்
கடும் சொற்கள் எல்லாம்
என் செவியில் தங்கியும் உயிரோடு இருக்கின்றேனே
இப்படியே நீண்ட காலம் வாழ்ந்தேனே
நானே அரக்கி நானே அரக்கி”.

பாடல்-500:

தன்னையே
தன் எண்ணங்களால் கிழிக்கும் சீதை
தன் உயிரையும் பழிக்கிறாள்
உத்தமிகளும் உத்தமர்களும்
அதிகபட்சம் கலங்குவதே உலக இயற்கையோ!
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பதே வல்லவன் வகுத்ததோ!
ஆம்!
சீதை தன் துயரை விரிக்கின்றாள்
“சொற்களை விட்டுப் பிரியாத பழியை
சுமந்து தாங்குகின்றேனே ஆம்
நான் நல் பிறப்புக்காரி!
நான் நல்ல குடியில் பிறந்தவள்!
கற்புள்ள பெண்கள் கதையில்தான் இருப்பார்கள்!
வீட்டை விட்டுப் பிரிந்து
கற்பை நிரூபித்தவர்கள்
என்னை விட யார் உள்ளனர்!!”
இப்படியெல்லாம் பழித்தும் இழித்தும்
தாழ்த்தியும் உயர்த்தியும்
சீதை தெய்வம் உழன்றது.


--அனுமனோடு மீட்போம்.


Friday, 4 October 2013

இரண்டு அன்புகள்




மாலை இருளில்
சாலை குறுக்கே
சவுக்கு சொடுக்கியது போல நெளிகிறது
கோதுமை நிறப் பாம்பு
அதன் வழியில் அது போக
என் சாலைவழியே நான் ஏக
இருவகை அன்புகளுக்கும் இடையில்
இப்போது சமதூரம்.


--ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை (9.10.2013)
               

Wednesday, 2 October 2013

மகிழ்ச்சி நிரந்தரம்



காலை வண்டிப் பயணம்
அறுபது கிலோ மிட்டரில்
ஆபீசுக்குப் பறக்கும்போதும்
பள்ளி செல்லும் பிள்ளைகளின்
கட்டி கட்டியான பவுடர் மாவும்
கருப்பு திருஷ்டிப் பொட்டும்
குதூகலிக்க வைக்கத் தவறுவதில்லை
அவர்கள் என்னைப் பார்த்து
கைகள் ஆட்டவில்லை
முகமும் நோக்கவில்லை
மகிழ்ச்சி இருபுறமும்
ஒரே நேரம் நிகழவில்லை என்பதைத் தவிர
பிரபஞ்சம் எப்போதும் எவருக்கேனும்
மகிழ்ச்சி ஊற்று
சுரந்து கொண்டேதான் உள்ளது.

காந்திபென்சில்




நண்பர் தந்தார் சிறிய ஆரஞ்சு பென்சில் ஒன்றை
கட்டை விரல் நீளம் கருப்பு கூர் மூக்கு
அது எத்தனை உதவி நினைவுக்கு
அது எத்தனை அவசியம் ஒரு பதிவுக்கு
ரப்பர் போட்டு அழிக்கும் வரை நினைவிலிருக்கும்
துண்டு பென்சிலின் உதவியே அத்தனை பெரிது
கையிலிருந்த பென்சிலைப்பார்த்தேன்
மகாத்மா காந்தி முன்னாளில் பொதுக்கூடம் கிளம்பும் முன்னர்
அவசர அவசியமாய் தேடிய
பென்சிலின் நீளமும் இதுவே தான் இருக்குமோ
சின்ன சின்ன பொருட்கள் உலகில் பெரிய பெரிய இருப்பிடம்
பென்சிலை பேசும்குரல் கேட்டது
“என்னைத் தொலைக்கலாம் சிறிது சிறிதாய் சீவலாம்
காந்தி நினைவோ
இந்தியாவின் நீளம் அகலம் ஆழம் உயரம் அனைத்தும்”