Saturday, 28 September 2013

முக அகம்



மவுனமாய் இருக்க இருக்க
கனத்து கனத்து
சுரக்கும் சொற்களில் அமுதத் தன்மை மற்றும்
சற்றே ஒரு கூர்வாள்
இரண்டும் கலந்த
முக அகம்.

Friday, 27 September 2013

யானை முடி




பிரம்மாண்டம்  இந்த உலகம்
நம் பங்கு மிக மிகச் சிறிய அணு
அதனை நாம் இயக்குவதாக
எண்ணும் பளு எண்ணம்
நம் இயக்கத்தைத் தடுக்கிறது
யானை முடி யானை மேல் ஒன்று
யானை அதனால் இயங்கவில்லை.

Wednesday, 25 September 2013

சுந்தர காண்டம் 451 -475


பாடல்-451

“கயிலை மலை எடுத்தேன்
திசை யானைகளை வென்றேன்”
இப்படி வீரம் பேசும் நீ
இலக்குவன் என்னை காத்து நின்ற போது
நேரில் உன் உருவுடன் வந்தாயா?
இந்த அவமானம் போதவில்லையோ?
உன் தலையை பெண்களின்
காலிலும் வைக்க வேண்டுமோ!

பாடல்-452:

அற்¢வில் ஏழையே
நீ ஒளிந்துள்ள இடம் இது என
என் கோமகன் அறிந்த
அதே நாளில் என்ன நடக்குமோ தெரியாது
கடல் அழியுமோ இலங்கை அழியுமோ ஊழி வருமோ
உன் உயிரை அழித்தாலும்
கோமகன் சினம் இன்னும்
ஏதேது செய்யுமோ

பாடல்-453:

கொடும் கோபம் கொண்ட அரக்கரை
அழித்த பின்பும்
இராமபிரான் கோபம் அடங்குமோ?
எனது வள்ளல் சீற்றத்தை
இந்த உலகம் தாங்குமோ?
மிஞ்சுமா ஏதாகிலும்? நான் அஞ்சுகிறேன்
இதற்கு அறக்கடவுளே சாட்சி!

பாடல்-454:

மண்ணுலகினர் அஞ்சிட விண் உலகினர் அஞ்சிட
உன் இழி செயலை விலக்க
எண்ணம் எதும் உள்ளே இலாதவனே
திருமால் எளியன்
நான்முகன் எளியன்
சிவன் எளியன்
எங்கள் நாயகன் அப்படி அல்ல முட்டாளே!

பாடல்-455:

இராமரும் இலக்குவரும்
மானிடர் தானே என நினைக்கிறாய்
காட்டிலே உயர்ந்த மலை போன்ற
கார்த்த வீரியனை
பரசுராமனாகி ஒற்றை மனிதனாக
வீழ்த்தியதை எண்ணிப்பார்
இராமனது தன்மை புரியும்

பாடல்-456:
நினது செல்வம் இழந்து
உயிரும் இழக்கப்போகிறவனே
“இருவர் மட்டும்தானே
இராமரும் இலக்குவனும்” என அலட்சியம் செய்கிறாய்
யுக முடிவில்
உலகம் எல்லாம் அழிக்கும் நாராயணன் வரும் போது
அந்த இருவருடன் போரிடும் போது
நான் சொன்னது உண்மை என உணர்வாய்

பாடல்-457:

இரணியாட்சன்
இரணியாட்சன் தம்பி இரண்யகசிபன்
இவர்களில் யாராவது
பிறன் மனைவி விரும்பினார்களா
வில் நாக்கு உராய்ந்து தழும்பேறிய
மற்ற மற்ற அரக்கர்கள்
யாரேனும் பிறன்மனை விரும்பிச்சேர்ந்து
மகிழ்ந்து வாழ முடிந்ததா? யோசி

பாடல்-458:

ஐம்புலன் இன்பவழி சென்றவர்
எவரேனும் சிறந்துள்ளார்களா?
பிரம்மனோ தேவர்களோ அசுரர்களோ
யாராயினும் சரி
பாவத்திலிருந்து நீங்க முற்படலே சிறப்பு
எல்லா உலகும்
உன் ஆணைக்கு அடிமை புரியும் வாய்ப்பு எப்படி வந்தது
உன் பாவப்பயனா? உன் இளமையில் நீ செய்த தருமமா?
பாடல்-459:

இவ்வளவு பெரும் செல்வமும் உனக்கு
சிவபெருமான் தந்தது எதற்காக? நீ
மேலும் தவநெறியில் ஒழுகி
பெரும் செல்வம் அனுபவிக்க வேண்டும்
என்ற அருள் தானே?
அறிவில்லாத நீ
செல்வமும் அழிய உறவும் அழிய
அறம் தவறுகிறாய்
உன் செல்வமும் அதிகாரமும் பெருகியதே
உன் அறத்தால் வந்தது தான்
அந்த வழியில் நடக்க விரும்ப மாட்டாயா?

பாடல்-460:

வீரம் மாறாதவர் இவ்வுலகில் இறந்து விட்டனர்
மாறா வலிமை மிக்கவர் இவ்வுலகில் இறந்தனர்
இரக்கம் அற்றவர் இறந்தனர்
அறம் தவறியோர் இறந்தனர்
பற்றுகள் நீக்கி
காமம் வெகுளி மயக்கம் எனும்
மூன்று உட்பகை அழித்தவர்களோ
பாச பந்தம் நீங்கினர்
பிறப்பும் இறப்பும் தவிர்த்தனர்
வேறு யாராவது
பிறப்பு  பிணியிலிருந்து நீங்கினார்களா சொல்!

பாடல்-461:

அன்று நீ செய்த
கொடும் செயல்களை நான் கேட்டேன்
தண்டகாரண்யத்தில்
இராமன் புகுந்த போது
இனிய தமிழ் மொழி அகத்தியன்
“இழி தொழில் அரக்கர்கள் இம்சையால்
தவம் ஆற்ற முடியாமல் தவிக்கிறோம்
அவர்களைக் கொல்க
உன்னால் தான் முடியும்” என்று
வருந்திட நீயே காரணம்.

பாடல்-462:

இராமன்
உன்னைப்பற்றி கேள்விப்பட்டான்
உன் வலிமை
உன் ஆயுள்
உன் அரக்கர் படை பெருமை
முனிவர்கள் புகழக் கேட்டான்
அதன் பிறகு தான்
உன் தங்கை சூர்ப்பனகை மூக்கு அறுத்தான்!
அதை அறிய மாட்டாயோ?
உன் தம்பிகளாகிய கரன் தூஷணன் திரிசரா
தோள்களும் தாள்களும்
சின்ன பின்னமாக்கினான்
இதனை நீ சிந்திக்க மாட்டாயோ?

பாடல்-463:

நீசனே
நன் நெறி அறியாதவனே
உனது இருபது கரங்கள் பிடித்து
உன் வாய் வழியே இரத்தம் கொட்டுமாறு குத்தி
உன்னை சிறையில் அடைத்த
சுத்த வீரன் கார்த்த வீரியார்ச்சுனன்
ஆனால் அவனது
வைரம் பாய்ந்த ஆயிரம் கைகளையும் தோள்களையும்
வெட்டித் தள்ளியவன் பரசுராமன்
ஆனால் அப்படிப்பட்ட பரசுராமனே
இராமபிரானால் வலிமை போனவன் ஆனான்

பாடல்-464:

கண்டவரை
கடிக்கும் பாம்பு
மந்திரத்தால் அடங்கும்
செருக்கு கொண்ட உன்னை
இடித்துச் சொல்லி
“இது தவறு” என ஆதாரமுடன்
அறிவு வழி செலுத்துவோர் இல்லை
நீ செய்த தீமை எண்ணத்தையே
அவர்களும் எண்ணுகிறார்கள்
உன்னை முடிப்பவர்கள் அவர்கள்
அதனால்
நீ அழிவாய் என்பது தவிர
வேறென்ன முடிவு இருக்கிறது!

பாடல்-465:

இப்படியெல்லாம் உரைத்த சீதை வார்த்தைகள் கேட்டு
இராவணனின்
இருபது கண்கள் மின்னலும்
தீப்பொறியும் சிந்தின
கோரப்பற்களின் ஒளி வீசும்படிவாய் பிளந்து
அதட்டி ஆர்ப்பரித்தான்
குன்றுகள் இடிபட்டு விழுந்தன
இதை இன்னும் எதற்கு
விளக்க வேண்டும்?
இராவணன் கோபத்தின் அளவு
அவனது காம அளவும் தாண்டி வெளிப்பட்டது.

பாடல்-466:

திசைகளையே மறைக்கும் தோள்கள்
கனல் விழிகள்
எல்லாமும் மறைய
ஒரு பெண் இகழ்ந்து விட்டாளே என்று
குமுறிக் கொண்டே
“இவளைப் பிளந்து தின்பேன்” என்றான்
ஆனால் அப்படிச் செய்ய முடியாமல்
சீதையிடம் கொண்ட காமம் தடுத்தது
காமமும் கோபமும்
எதிர் எதிரே நின்று வாட்டின
இரண்டையும் அடக்க முடியவில்லை
கோபத்தால் சீதையைக் கொல்ல நெருங்கினான்
அவளிடமுள்ள
காமத்தால் சீதை விட்டு விலகினான்
நெருங்குவதும் பின் வாங்குவதுமாக அலைந்தான்.


பாடல்-467:

அப்போது
அனுமன் எண்ணம் இது:-
“அருந்ததி ஒத்திட்ட கற்புச்செல்வி
எம் சீதையே
ஆளுடை நாயகன் தேவியை
என் முன்பே தவறாகப் பேசிவிட்டான்
அந்த நீசன் தொடும் முன்
அவனை மிதித்து உழக்கி
பிறகு சீதை மீட்பேன்”
பாடல்-468:

அனுமன் உணர்ச்சிப்பிழம்பானான்
“தனியனாய் நிற்கின்ற இராவணன்
தலை பத்தும் சிதறிடத் தாக்குவேன் இலங்கையே
குளிர்கடலின் கீழே பாய்ச்சுவேன்
புனித மாதவ அரசி சீதையை
இனிதே சுமந்து இராமனிடம் சேர்ப்பேன்”
இதெல்லாம் நினைத்து
தன் கரம் பிசைந்தபடி இருந்தான்.

பாடல்-469:

வாள் போல் கொடிய அரக்கன்
அண்டத்தையே அழிக்கக்கூடியவன்
உலகம் அழியும் ஊழிக்கால நெருப்பு போல கோபம்
முற்றியவன் ஆனான்
ஆனாலும்
நீண்ட காமம் வென்றதால்
கோபத்தை ஒரு விதமாய் வ்ன்று
பேச ஆரம்பித்தான்:-

பாடல்-470:

ஒன்றைப் புரிந்து கொள் சீதையே
உன்னைக் கொல்வேன் என்று தான்
ஆனால் கொல்லவில்லை எழுந்தேன்
என்னைப்பற்றி நீ சொன்ன வார்த்தைகள் சரியே
அதற்கெல்லாம் ஒரே காரணம் தான்
என்னால் முடிந்த காரியம் முடியாத காரியம்
என இரண்டு என்னிடமில்லை
வெல்வதும் தோற்பதும் எனக்கு விளையாட்டே.

பாடல்-471:

இன்னொன்றும் கூறுகிறேன்
நன்றாகக் கேள்
அன்று நான் வஞ்சனையால் கவர்ந்தேன் கவர்ந்தேன்
என்கிறாயே...
என்னால் இராமனைக் கொல்ல முடியும்
கொன்றிருந்தால் நீ இறப்பாய்
நீ இறந்தால் எமனால் நானும் இறந்திருப்பேன்
இதனை உணர்ந்தே
வஞ்சக் வேடம் தாங்கி வந்தேன்

பாடல்-472:

“தேன் என்பதை அறிய வைக்கும் சொல் உடையவளே..
கேள்!
மாயமானைத் துரத்திய மானிடர்கள்
இராமனும் இலக்குவனும்
கவர்ந்து சென்றது நான் தான் என அறிந்தால்
வரமாட்டார்கள்
வருவார்கள் என நினைப்பது உன்
ஏழைமை உணம்
கவர்ந்து சென்றது இராவணன் என அறிந்தால்
தேவர்களும் பின் வாங்குவர்”

பாடல்-473:

மென் தோள் கொண்டவளே
நீ சொன்னாய்
வீரீயார்ச்சுனன் உயர்வு என!
ஆனால் அவன் உயிர் இருக்கும் போதே
யாவரினும் உயர்ந்த மும்மூர்த்திகள் வாழும் போதே
இந்திரனை எனக்கு ஏவலாள் ஆக்கினேன் 
மூன்று உலகமும் ஆட்சி செய்கின்றேன்
என்னைத் தவிர இத்தனை சிறப்பு எவருக்கு உண்டு
வேறு காரணம் வேண்டுமா?

பாடல்-474:
என் விழி போன்றவளே
குழந்தை மொழியாளே கேள்
“மும்மூர்த்திகளையும் தேவர்களையும்
வலிமை அழித்து வெற்றி பெற்ற நான்
இராம இலக்குவ மனிதர்களைக் கொன்று
பழி ஏற்பட நடக்க மாட்டேன்
அவர்களை பணிவிடைச் செய்யச் சொல்வேன்”


பாடல்-475:

குற்றமற்ற அழகு அரசீ!
அற்ப ஆற்றல்
அற்ப இயல்பு
அற்பத் தொழில்
இம்மூன்றும் கொண்ட அற்ப மனிதர்கள்
வீரம் முதிர்ந்த என்னிடம் செல்லாது
இதோ இதோ! இன்று பகலிலேயே செல்கிறேன்
அந்த இருவரையும் ஒரே கையால் பற்றுகிறேன்
கொண்டு வருகிறேன்!”

                                                                         --அனுமனோடு மீட்போம்.

Sunday, 22 September 2013

ஆற்றங்கரை அன்பே



“எல்லா இடமும் நேசி” என்று
கணேசர் ஆனவரே...

“எழுதும்போதும் பொங்கி எழும்போதும் இடர் வரும்
அப்போது உன்
சுவாசக்கொம்பை ஒடித்து உனக்குள் பயன்படுத்தினால்
மகாபாரதம் கூட எழுதலாம்” என்று உணர்த்தும் ஆதி எழுத்தாளரே

“பொருத்தமே இல்லை என்று உலகம் இகழ்ந்தாலும்
உன் மனதுக்கு வசதியான வாகனத்தை
உன்னருகில் துணைகொண்டு சவாரி செல்க”என
மீஞ்சூறு கொண்ட முத்தமிழே..

மகான் திருஞானசம்பந்தரை
 “பிள்ளையார்” என்றே பெரியபுராண சேக்கிழார் போற்றுகிறார்.
இந்தச் சிறியவனுக்கும் தாங்கள் பிள்ளையாரே !

“யானை வயிறு பானை வயிறு என இகழ்ந்தாலும்
மகிழ்ச்சியாக முகம் வைத்திரு
ஆரோக்கியமாக இருந்தால் போதும்” என்பவரே.
ஒளவைப்பிரட்டி அகவல் சூடிய அன்பு நேயரே.

பூரணமாக உன்னை கொழுக்கட்டை பூரணம் போல்
நெஞ்சில் மூடியே வைத்துக்கொண்டேன்
அன்பினால் வேக வைத்தேன் அன்பினால் பிட்டு உண்பேன்
பிள்ளையார்பட்டி வந்து தொழ ஆபீஸ் லீவு 
இதுவரை வாய்க்கவில்லை எனும் சப்பைக்காரணம் சொன்னாலும் மன்னிப்பாய்

இதயநாயகா
அன்று தெய்வானையை யானையாக மாறித் துரத்தி
முருகனுக்கே திருமணம் நடத்தி வைத்தாய்

அருகம்புல் பறித்துப்போட அவகாசமில்லை என்றாலும்
தோப்புக்கரணமே போதும் என ஏற்பாய்
மறதியால் உலகப்பற்றால் உன்னை கைவிட்டாலும் என்னை உன்
துதிக்கையால் தூக்குவாய் என்றே ஏக்கம் வளர்க்கின்றேன்
மனித இனம் மீது அன்பு கொட்டும்
ஆற்றங்கரை அன்பே
இந்த ஏழையேன் ஆற்ற முடியா செயலை எல்லாம்
நீயே முடித்துக்கொடப்பா காலில் விழுந்தேன் சத்தமில்லாமல்!

Saturday, 21 September 2013

புரிகிறது..



தோட்டச் செடியைப்பார்த்தேன்.. என்ன செடியோ?
என்ன பெயரோ...?
சிந்தித்தாலும் தெரியவில்லை
பெயர் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்
பெருங்கூட்டத்தில் வயலின் வாசிக்கும் ஒருவனின் இசை போல
தனிப்பெயர் இல்லையென்றாலும் அது வாழ்கிறது
பூமிக்கு அனுப்பியாகிவிட்டது இருந்தாக வேண்டும் அது
நம் பயன் என்ன ?
நாம் ஆற்றும் செயலின் பயன் எங்கு போகிறது?
எதுவும் தெரியாது சொல்லப்படுவதில்லை நமக்கு
வாழ்ந்தாக வேண்டும் .. யாருக்காகவோ ..
எதற்கோ..எங்கோ.. ஆனால் சந்தோஷமாக!

Friday, 20 September 2013

மகாளய பட்சம்

இரு சக்கர வாகனத்தில் செல்கிறோம்
பின்னே வரும் வண்டிகளும் மனிதர்களும்
பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரிகின்றது
நகர்ந்து நகர்ந்து விலகி விலகி பயணப்பட்டோம்
அடுத்த நொடியில் காணோம் அவர்களை  
சென்று  சேருமிடத்தில் இறங்கியபோதும்
கண்ணாடியில் தென்பட்டவர்கள் நேரில் வருவதில்லை
காட்சி அளிப்பதில்லை
ஆனால் அவர்கள்
நம் பாதையில் ஒரு கணம் தெரிந்தது நிஜம் தானே
நம் பாதையை மாற்றியது நிஜம் தானே
நிகழும் செப்டம்பர் 20 முதல் பதினைந்து நாட்கள்
மகாளய பட்சமும் அப்படித்தான்
மாறி மாறி நகரும் நம் வாழ்வுப் பாதையில்
நம்மை உணர்த்தியும் திருத்தியும் வந்தவர்கள்
பூமிக்கு அரூபமாய் வந்து நம்மோடு தங்கும் தினங்கள்!
அறிந்து உணர்ந்து வாழ்வில் சக்தி பெறுவோம்.

சுந்தர காண்டம் 426- 450



இராவணன் வருகை இப்போது நிகழ்கிறது
அரம்பையர் கூட்டம் நகர்கின்றது
 மற்ற மற்றவர் கூட்டம் விலகுகிறது
வேறிடம் நகர்கிறது
பெண்களுக்குள் பெருவிளக்காம் சீதையோ
நடுங்கினாள் கரைந்தாள் -  
உடலுக்குள்ளே வலிமையும்
 உடலின் மேல் வரிகளும் கொண்ட
கடும் சினப்புலி தின்ன வரும் போது
பெண்மான் உயிர் கரைவது போல.

பாடல்-427:

அனுமன் தற்போது
அந்த இருவரையும் காண்கின்றான்
உடல் கூசி உயிர் குலையும்
சீதைப்பிராட்டி ஒரு புறம்
ஆசையினால் உயிர்க்கட்டு குலையும் இராவணன் மறுபுறம்
இதற்கு சாட்சி எது?
அனுமனின் குற்றமற்ற கண்களே சாட்சி
ஊசல் ஆடிய அனுமனின் உள்ளம்
தனக்குள் உளைந்தது தானே பேசிக் கொண்டது

பாடல்-428:

வாழ்க ஜானகி! வாழ்க இராகவன்!
வாழ்க நான்கு வேதங்கள்!
வாழ்க அந்தணர்!
வாழ்க நல் அறம்! என்று வாழ்த்தினான்
ஒவ்வொரு ஊழியிலும் !புகழ் வளரும் அனுமன்

பாடல்-429:
உயிரைக் கொல்லும் கொடிய விஷத்தை
அமுதம் என நினைத்து விட்டான் இராவணன்
அது தான் ஆசை எனும் விஷம்!
சீதை இருப்பிடம் அருகே சென்றான்
“துன்புறும் இடை பெற்ற குயிலே!
எனக்கு இன்னருள் செய்வது என்று?” என வேண்டினான்.


பாடல்-430:

தான் வணங்கும் ஈசன்
சிவபெருமானிடம் கூட இராவணன்
பெருமிதம் அழியாத மனதினன்!
ஆனால் இப்போது
சீதை மீது காமமும் ஆசையும் வருத்தியதால்
கூசிக் கூசி இவ்வாறு கூறுகிறான்:-

பாடல்-431:
“காதணி வரை செல்கின்ற நீண்ட கண்கள் உனக்கு
சீதையே போரிடும் செங்கண்கள் உனக்கு!
இன்று வரை நாட்கள் இறந்து போயின
இனி வரும் நாட்களும் இறக்கப்போகின்றன
என் காதல் என்னைக் கொன்று
நான் இறந்த பிறகு
என்னைக் கூடுவாயோ!”


பாடல் -432:

“திலகம் போன்றவளே ஒன்று அறிவாயாக
எல்லையிலாச் செல்வத்தினால்
மூன்று உலகங்களும் ஆள்கின்ற அரசியலில்
உனக்காக மன்மதன் செய்யும் கலகம் தவிர
எனக்கு இழிவு எதனாலும் வரவில்லை தெரியுமா?”

பாடல்-433:

பூச்சூட்டலுக்கு அமைந்த
நீண்ட கூந்தல் பொன் கொழுந்தே!
புகழ் மிக்க என் செல்வத்தை இகழ்ந்து பேசினாய்
உன் இனிய உயிர் கள்வன்  இறக்காமல் இருந்துவிட்டாலும்
காடு கடந்து போய் நீ வாழ்ந்தாலும்
அது
சாதாரண மானிட வாழ்வு தானே!

பாடல்-434:
கச்சுக்கு அடங்காத முலையாளே
தவம் செய்யும் முனிவர்களும்
நுண் பொருளை ஆராய்பவர்களும் பெறுகின்ற
முடிவான பயன் என்ன தெரியுமா?
என் ஆணை ஏற்கும் தேவர்களுடன்
சேர்ந்து வாழ்கின்ற இன்பம் தான்

பாடல்-435:

உன் மழலைக்குரலால்
விளரிப்பண் இசை
தோற்றுவிடும் இனிய குரல் மங்கை நீ
நாகணவாய்ப் பறவை  மருளும் மங்கை நீ
நான்முகன் பிரம்மன்
உனக்கு உள்ளத்தில் அருள் வைத்தான்
உடலில்
இடை வைக்கவில்லையே!


பாடல்-436:

கழிகின்ற உனது ஒவ்வொரு நாள்
இளமையும் மீண்டும் வராது
சிறுகச் சிறுகத் தேயும் அழியும்
விரும்பும் நாட்கள்
வீணே கழிந்தால்
இன்ப வாழ்வு எப்படி வாழ்வது?
 இடரில் உழல்கிறாயோ?
அதில் ஆழ்ந்து போனாயோ?

பாடல்-437:

உன் குழைந்த முகம்
சிறிது கோணினால் அதனால்
என் உயிர் இழவு அடைந்தாலும் அடையட்டும்
உன்னிடம் பழகிட நிலையாக உள்ள
பண்புக்கும் காமத்திற்கும்  அழகிற்கும் சமமாக
என்னை விட்டால் யாரும் இல்லையே

பாடல்-438:

சனகர் குலத்தில் பிறந்த உன்னிடம்
பெண்மை இருக்கிறது  அழகு இருக்கிறது
பிறழாத மனத்திண்மை இருக்கிறது ஆனால்
கருணையும்
கருணை படர்ந்த கொடை உள்ளமும்
இல்லை போலிருக்கிறது

பாடல்-439:

கிளி போன்ற சீதையே
இராமனை நான் கொன்றபோது
அவன் அலறிய மெய்க்குரல் கேட்டும்
“அவன் இருக்கின்றான்” என நம்பி
இராமனைக் காண காத்திருக்கிறாயா?
நல் அறத்தின் பயனை அனுபவிக்க
காலமே உதவும் போது இகழலாமோ? இது சரியா?

பாடல்-440:

சீதையே இதுவும் கேள்
என் உயிர் போனால்
என் அனைத்து செல்வமும் அழியும்
“உன் ஒப்பற்ற வருகையால் தான்
என் செல்வம் அழிந்தது” எனும் பெரும்பழி
தேடிக் கொள்வாயோ!

பாடல்-441:

என்னை மட்டும் நீ அடைந்தால் உன்னை
தேவர்கள் வணங்குவர்
தேவிகளும் கை தொழுவர்
மூன்று உலகங்களும்
உன் சிவந்த பாதம் வணங்கும்
நீயோ விலக்குகின்றாய்
உன்னை விட பேதை வேறு யார்!

பாடல்-442:

“தனது இருகரமும் தலை மேலே கூப்பி
மூன்று உலகங்களும் வென்றேன்
ஆனால் நான் உன் அடிமை
என் அடிமைத் தன்மையை ஏற்று அருள்க”
மாதரசி சீதையை
மண்ணில் விழுந்து வணங்கியே விட்டான்
பழி வருமே என எண்ணாத இராவணன்.

பாடல்-443:

சீதையால்
இராவணன் சொற்கள் பொறுக்க முடியவில்லை
நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய காம சொற்களால்
காதுகள் தீய்ந்தன உள்ளம் திரிந்தது
கண்கள் இரண்டிலும் குருதி வந்தது
உயிர்க்கும் பெண்மையுடன்
சீதை பேசத் துவங்கினாள்.
தன் உயிர் போகும் அச்சம் அவளுக்கில்லை.

பாடல்-444:

மல்யுத்தத்தில் எதிரியைக் கொல்லும்
திரண்ட தோள்கள் கொண்ட
வஞ்சகன் இராவணனுக்கு
கூறினாள் இவ்வார்த்தைகளை:
“ஏ ! துரும்பே!
இல்லற மாதர்களுக்கு
உன் கொடுஞ்சொற்கள் பொருத்தமல்ல
என் கற்பு
கல் போன்று உறுதியானது
என் நெஞ்சும் அப்படியே
உலகில் கற்பை விட உறுதியானது இல்லை”

பாடல்-445:

அறிவற்றவனே
என் இராமனின் அம்பு
மேருமலை துளைக்கும்
வானம் கிழிக்கும் மறுபுறம் போகும்
பதினான்கு உலகங்கள் அழிக்கும்
இதை அறிந்தும்
உன் பத்து சிரங்கள் சிதற விடப்போகிறாயா ?

பாடல்-446:

இராமன் அம்புக்கு அஞ்சியதால் தானே
இராமன் இல்லாத நேரம் வந்தாய்?
வஞ்சனை மான்  ஏவினாய்?
உன் வடிவம் மறைத்து துறவி வேடத்தில் வந்தாய்?
உன் குலத்திற்கே -
நஞ்சு போன்ற எனது இராமன் வரும் போது
உன் கண்கள் என்னை பார்க்குமா?
நீ உயிர் பிழைக்க ஒரே வழிதான் உள்ளது
என்னை இராமனிடம் கொண்டு விடு”



பாடல்-447:

எனைக் கவர்ந்து வந்த போது
சடாயுவால் தாக்கப்பட்டு
சட்டென பூமியில் விழுந்தவனே
பத்து தலைகளும் இருபது தோள்களும்
வித்தக வில்லாளன்
இராமனுக்கு பொருத்தமான இலக்கு!
உனக்கு
வில்லாளன் இலக்கு தாங்கிட
சக்தி இருக்கிறது போலும்!

பாடல்-448:

இராவணா! நீ தோற்றுக் கொண்டே வருகிறாய்
என்னைக் கவர்ந்து வந்த நாள்
நீ ஜடாயு என்ற பறவையிடம் தோற்றாய்
துள்ளும் கங்கை நீர் பெற்ற சிவனின் வாளால்
ஜடாயுவைக் கொன்றாய்
அன்று அந்த வாள் இல்லையெனில் இறந்திருப்பாய்
உனது நோன்பு உனது வாழ்நாள் உனது வரங்கள்
எல்லாமும் எமனிடமிருந்து
காத்துக் கொள்ளத்தான் உதவும்
இராமனிடமிருந்து தப்பமுடியாது நீ!


பாடல்-449:

இராவணா!
நீ அறிவாயா ....
சிவபிரானிடம் நீ பெற்ற சந்திரகாசம் எனும் வாள் மட்டுமல்ல
உனது நீண்ட ஆயுள் உனது வலிமை உனது வரங்கள் 
பிரமன் அளித்த வார்த்தையின் சிறப்புகள்
யாவுமே இராமன் வில் அம்பினால் சிதையும்
இது சத்தியம்
விளக்கின் முன்னே இருள் நிற்காது என்பது போல!

பாடல்-450:

இராவணா!
கயிலை மலையை நீ எடுத்தாய்
சிவபெருமான் கால் விரலால் மிதிபட்டாய்
திரிபுரங்கள் எரித்திட
சிவபெருமான் வில்லாகப் பயன்படுத்திய மேருமலை
என் கணவன் வலிமை தாங்காமல்
முறிந்து வீழ்ந்த ஒலியை நீ கேட்கவில்லை போலும்!
அதிசயம் !

-அனுமனோடு மீட்போம்


Wednesday, 18 September 2013

மகாகவி பாரதி வகுத்த வாழ்வு சூத்திரம்



அன்றாடம்
கடமைகள் புரியவேண்டும் என்பது
அனைவரும் அறிவோம்
“கடன்+ மை” என்பதே கடமையாகிறது
என்னென்ன கடன்கள் தீர்க்க வேண்டும்?
நான்கு என்றான் நமது மகாகவி:-
1.தன்னைக்கட்டுதல்
2.பிறர் துயர் தீர்த்தல்
3.பிறர் நலம் வேண்டுதல்
4. உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இதனால் என்ன பயன்கள் கிடைக்கும்
அதையும் எழுதினார் மகாகவி:
தன்னைக் கட்டுதலால் “அறம்” தோன்றும்.
பிறர் துயர் தீர்ப்பதால் “பொருள்”  பெறலாம்
பிறர் நலம் வேண்டலால் “இன்பம்” வரும்
உலகு காக்கும் சக்தி போற்றலால் “வீடு பேறு” வாய்க்கும்
மகாகவி பாரதி வகுத்த பாதை-
11.9.2013ல் நினைவு நாளில்
புதுப்பித்துக் கொள்வோமா சிந்தையில்?


Friday, 13 September 2013

தங்கும் கூடுதான் சிக்கல்




வேப்பமரக்கிளைகளை
அடர்த்தி அதிகமாகியதற்காக
மின்சாரக் கம்பியில் மோதாமல் தடுக்க
ஆள் வைத்து அரிவாளால் வெட்டும்போது
அதிலிருந்து இறந்து போய்விட்ட
ஒற்றை தவிட்டுக்குருவிக்குஞ்சுக்காக
மனம் வருந்துகிறான் மகன்
இறப்பு தாங்கமுடியாதுதான்
ஆனால்  ஒன்று
மீதம் இரண்டு குஞ்சுகள் கூட்டில்
உயிருடன் இருப்பதோ...
அதன் தாய் உயிருடன் இருப்பதோ
மற்ற மற்ற குருவிக்கூட்டங்கள்
உயிருடன் பறப்பதோ
அதன் ஒலிக்கூட்டம் கேட்பதோ
நமக்குள் பதிவதில்லை
எது கண்முன் இறந்ததோ
அதன் பதிவு உலுக்குகிறது நம்மை
மகனுக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் சொல்லிவைத்தார் திருவள்ளுவர்
“இந்த உயிருக்கு நிரந்தரமான
தங்கும் கூடு இல்லை என்றுதான்
பறந்துவிடுகிறது”

Thursday, 12 September 2013

சுந்தர காண்டம் 401- 425



பாடல்-401:
நற்குடிப்பிறப்பின் இலக்கணமும்
பெண்மை என்பதும் தவம் செய்து
சீதையை அடைந்து உயர்ந்தன!
நாணமும் தவமும் தாம் உயர்வதற்கு ஒரு வழி இதுவென
சீதை அடைந்து உயர்ந்துவிட்டன!
நங்கை சீதை
தன் கணவனையே நினைத்து நினைத்து
தவம் செய்யும் முறைகளைக் காண
இராமபிரான் கமலக்கண்கள் மட்டும்
தவம் செய்யவில்லை போலும்!

பாடல்-402:

மிக எளிதில் கோபப்படும் அரக்கிகள் வசமிருந்து
தன்னைத் தவிர துணையிலாத
இனியவள் சீதை தப்பிட எது உதவியது?
தனிமை - பெண்மை - கற்புத்தவம்
மூன்றும் தான்
அவளைக் காத்த துணைகளாகும்
அறத்தின் மாண்பு
பெண் குலத்தினைக் காக்கட்டும்!

பாடல்-403:

சீதையைத் தருமம் காத்ததோ!
ஜனக மன்னன் நல்வினைகள் காத்தனவோ!
கற்பு காவல் காத்ததோ!
அருமையே! அருமையே!
யார்தான் இதனைச் செய்ய முடியும்!
அந்த மன ஒருமை -  
மிகச்சிறிய என்னால் உரைக்க இயலுமா?


பாடல்-404:

தேவர்களே இரவும் பகலும்
பணி செய்யும் அளவுக்கு
செல்வ வளமுள்ள இராவணன் கோட்டையில்
கற்பு தவறா நிலையில்
வேறு எவராலேனும் முடியுமா!
இனி எந்தத் துன்பமும் இல்லை
வெல்லுமோ தீவினை அறத்தை?
மெய்மை வெல்லப்பட முடியாதது!

பாடல்-405:

அழகிய பெரிய மரத்தின்
இலைகள் நிறைந்த கிளை அமர்ந்து
அசோகவனத்தில்
 நினைத்துக் கொண்டிருக்கும்போது
 இராவணன் தோன்றினான்!

(காட்சிப் படலம் முற்றிற்று)

நிந்தனைப் படலம்

பாடல்-406:

இராவணன் - 
சோலைக்குள் வருகை வியப்பானது
உயரமான உச்சி உடைய சிகரங்கள்
ஒரே இடத்தில் சேர்வது போல வந்தான்
மாணிக்கம் பதித்த மகரக்குழைகளுடன்
அசைகின்ற இருபது தோள்களுடன் வந்தான்
பத்து தலையில் பத்து மகுடங்களும்
இளவெயில் வீசுவதாக ஜொலித்ததால்
நள்ளிரவு
நண்பகலாகும்படி நடந்து வந்தான் இராவணன்.

பாடல்-407:


இராவணன் வருகை மற்றவர்கள் இல்லாமலா!
உடைவாளை எடுத்துக் கொண்டு தொடர்கிறாள் ஊர்வசி!
வெற்றிலைப்பாக்குடன் தொடர்வது மேனகை
அவன் செருப்பு தாங்குவது திலோஹ்தம்மை
பக்கமெல்லாம் சூழ்ந்து வருவது தேவமகளிர்
மலை போன்ற திசை யானைகளின்
புள்ளிகள் உடைய துதிக்கையின் மூக்கில் -
மாலை மணம் - சந்தன மணம் -கற்பூர மணம்
மூன்றின் மணமும் மோதுகின்றன


பாடல்-408:

நெய் விளக்குகள் ஏந்தி
மகளிர் எட்டு வரிசையாக கைகளில் ஏந்தி வருகின்றனர்
மங்கையர் அணிகலன்கள் ஒளி
இருள் முழுதும் உண்ணுகின்றது
பாதச் சிலம்புகள் ஒலிக்க
சதங்கைகளும் மேகலையும் ஒலிக்க
வெண்ணிற அன்னப்பறவைக் கூட்டம் என
மகளிர் சூழ இராவணன் வருகின்றான்.

பாடல்-409:

இராவணன் வருகின்ற நடை
இந்திரனுக்கும் தேவர்களுக்கும்
கவலை மூட்டிற்று
“தன் ஆசைக்கு இணங்கா சீதையிடம்
கோபம் கொண்டு
தூக்கம்  கலைந்தவன் இவன்
மதிபோன்ற முகம் உடைய சீதை இருக்கும் சோலை வரைக்கும்
இராவணன் சினம் நீளுமோ?
வேறு யாரிடம் போகுமோ?”


பாடல்-410:

அதோ! இராவணன் அழகிய பட்டு மேலாடை
நீலநிறக்குன்றிலிருந்து
மிக ஆழம் நோக்கி இறங்கும் அருவி போலுள்ளது
கழுத்து மாலைகள் இடையே உள்ள பேரொளி
சூரியனின் இள ஒளி போல உள்ளது
கருமேகம் கிழித்து
அதனிடை அசையும் மின்னல் போல
இராவணனின் மார்புப் பூணூல்.

பாடல்-411:

இருபது  தோள்களிலும்
சுறாமீன்களின் வடிவில்
வாகுவலயங்கள்!
அதில்
வைரங்களின் பேரொளிகள் நட்சத்திரங்களையும் பழிக்கின்றன
இரு  கால்களிலும் பொன்கழல்களது ஒளி
நிலம் தடவிச் செல்கிறது
சுற்றத்தாரின் புன் சிரிப்பு
வெண்ணிலவு ஒளி போல
இராவணனின் மீது விழுவதால்
தனது முகத்தாமரை மலர வருகிறான் இராவணன்.




பாடல்-412:

கருநிறத்து மலை நடுவே
இளம் வெய்யில் போல்
இராவணன் தரித்த ஆடை இருந்தது
இருபது விரல்களிலும் பொன் மோதிரம்
அதில் வீசும் நவமணிகற்களின் மின் ஒளி
அது
கற்பகச் சோலை அழகுக்குச் சமம்.

பாடல்-413:

“சன்ன வீரம்” என்கிற பொன் மாலை
வெற்றி மாலை
அதில் பதித்த முத்துக்கள்
ஊழிக்காலத்தில் தனித்து நின்ற
மேருமலையில் தோன்றும் கிரங்கள்
நட்சத்திரங்கள் போல் மின்னுகின்றன
உதயகிரியில் பன்னிரு சூரியர்களில் இருவரை நீக்கி
பத்து சூரியர்கள் ஒன்று கூடியது போல்
வருகிறான் இராவணன்.

பாடல்-414:

இராவணன் வலிமையால்தான்
திசை யானைகளின்
இரு தந்தங்களும் முறிந்து அவமானமுடன் உள்ளன.
மயிலின் பாதம் போல்
மூன்று பாதங்களாகப் பிரிந்த
மதப்பெருக்கு கொண்ட
திசை யானைகள்  அஞ்சும்படி
இராவணன் நடந்து வருகிறான்.

பாடல்-415:

பெரிய மலையைச் சுற்றி
மயில்கள் கூட்டம் வருவது போல
இராவணனைச் சுற்றிலும்
குங்குமக் கொவ்வை கொண்ட பெண்கள் கூட்டம்
கொவ்வைக்கனி செவ்வாய் கொண்ட பெண்கள் கூட்டம்
குயிலைத் தோற்கடிக்கும் குரல் கொண்ட பெண்களுடன் 
இராவணன் வருகிறான்.

பாடல்-416:

மேல்புறம் செயற்கைத் துளைகளும்
உட்புறம் இயற்கைத் துளைகளும் கொண்ட
வேய்ங்குழல் இசையோடு
இளம் பெண்டிர் வாய்ப்பாடலோடு
 கின்னரர் எழுப்பும் யாழ் இசையோடு
சில்லரிப்பாண்டில் எனும் கருவி இசையோடு
முழவு இசை கலந்து விண்ணில் பரவும் படி
இராவணன் வருகை நிகழ்கிறது
புற்றில் நஞ்சு கக்கிடும் பாம்புகளும்
அமுதம் சொரியும்படி
இசை கேட்கும் சூழலில் வருகிறான் இராவணன்.

பாடல்-417:

இராவணன் வருகையின் போது
பூமணம் வீசும் நான்கு தெருக்கள் கூடிய சதுக்கத்தில்
பெண்கள் வரிசையாக நின்று
வெண்சாமரம் ஆலவட்டம் ஏந்தி
கருமேகம் கண்ட மயிலின் களிப்போடு
நடந்து வந்து வரவேற்றனர்
அப்பெண்கள் சும்மாவா! என்ன அழகு!
மின்னல் இடை ...
சிவந்த வாய் ...
குவிந்த முலை ...
பருத்த மூங்கிலின் தோள் ,...
தேர்த்தட்டு போன்ற அல்குல்


பாடல்-418:

இராவணன் வருகைக்கு
அழகிய பெண்களின் நடனமும் உண்டு
இசை இலக்கணப்படி அரம்பையர்கள் இசைக்க
தந்திரி எனும் யாழினை
ஏழுவகை இசை எழுப்ப
விரல்களால் வாசிக்க
நடனமாடுகிறார்கள் அழகிய பெண்கள்
குறடு எனும் தோல்கருவியில்
குறுந்தடியால் எழுப்பும் ஒலியுடன் இராவணன் வருகிறான்.
பாடல்களின் பண் இசை
இத்தனை கருவிகளுடன் பொருந்திட
அழகிய பெண்களின் நடனம் கலக்க
வருகின்றான் இராவணன்.

பாடல்-419:

இராவணன் வருகையைச் சுற்றி
இத்தனை இன்பநிலைகள் இருப்பினும்
மனதில் துன்ப நிலைதான்.
எதனால்?
இராவணன் மார்பில் மன்மதனின் கூர் அம்புகள் துளைத்து
நெருப்பு பறக்கிறது புண்கள் வலிப்பதால்!
வெந்த புண்ணில் வேல் போல
சந்திரனின் குளிர் கதிர்கள்பாய்வதால் !
மலர்களில் வாரிய தேன் துளிகளை 
தென்றல் எடுத்து
இராவணன் மீது தெளிப்பதால்!
உருக்கிய செம்பு உலோகத்தின் துளிகள் போல்
உடலெல்லாம் சுடுவதால்!

பாடல்-420:

இராவணன் வருகையின் போது
காமனின் தாக்குதல் மட்டுமல்ல
அவனது தோளிலும் மார்பிலும்
அழகிய பெண்களின் பார்வைகளும் தாக்குகின்றன
எப்படிப்பட்ட பெண்கள் அவர்கள்?
நூலிழை அளவு இடை கூட இல்லையே
முறிந்துவிடுமே என
வர்ணிக்கத் தக்க பெண்கள்!
சுருங்காத அழகிய முலைகள்
இரண்டு செப்புக்குடங்கள் 
அவற்றை மறைக்கும் மேலாடைகள்!
தாமரைக் கண்கள் - 
செவிகளில் அணிந்த குண்டலங்கள் வரை நீண்டிருக்கின்றன
அக்கண்கள் சாய்ந்து சாய்ந்து
புன்னகையுடன் பார்க்கின்றன!
செவ்வரி படர்ந்த கடைக்கண் பார்வைகள்!
இத்தனையும் தாங்கி  இராவணன் வருகிறான்.


பாடல் -421:

இராவணன் பின்னே வந்தவை எவை?
சோலைக்கூட்டம் போன்ற கற்பக மரம்
சங்க நிதி போன்ற நவநிதிகள்
மாலையும் சந்தனமும் கலந்த கலவை
அணிகலன்கள் மெல்லிய ஆடைகள் மணிகள்
இது மட்டுமா?
வெண்ணிற பால்கடலின் அலைகள்
கருநிற மலைமேல் பரவியது போல
வெண் சாமரைகள் வீசப்பட
இராவணன் வருகின்றான்
அதுமட்டுமா?
அவன் தலைக்கு மேல் உள்ள சந்திரக்குடை
கடலிருந்து மேலெழும்
கறையில்லாத சந்திரன் போலுள்ளது.

பாடல்-422:

இராவணன் நடை சாதாரணமல்ல!
அவன் நடையின்போது - 
விரிந்த கடலினை அகழி எனப் பெற்றுள்ள
திரிகூட மலை மீது அமைந்த இலங்கை நகரம்
கீழே அழுந்துகிறது!
கடலில் சுருளும் அலைகள்
கரை கடந்து எத்திசையும் பாய்கின்றது
விஷப்பற்களும் திறந்த வாயும் கொண்ட ஆதிசேஷன்
இராவணன் நடை பாரம் சுமக்க இயலாமல்
தலை தடுமாறினான்
கடலையே ஆடையாகக் கொண்ட நிலமங்கை
முதுகு சுளுக்கு அடைந்தாள்!

பாடல்-423:

இராவணனைச் சுற்றிலும் அரக்கியர்கள்
பக்கபலமாக நடந்து வருகிறார்கள்
தாடகை எனும் அரக்கியை விட பலசாலிகள்
பெரும் மலைகளைத் தாங்கும் கைகள்
பகைவரைக் கொல்லும் போர் முகங்கள்
அவர்கள் கரங்களில் எத்தனை வகை ஆயுதங்கள்!
கேடகம் -மழு -இரும்பு உலக்கை -
அங்குசம் - கப்பணம் -கிடுகு
பொன் போல மின்னும் வாள்
வேல் -வில் - வச்சிராயுதம்!

பாடல்-424:

அசோக வனத்தின் மரங்கள் என்ன சாதாரணமா!
தளிர் -அரும்பு -மலர்- கிளை - இலை
வேர் -அடிமரம் -அத்தனையும் பொன்! பொன்!
அது ஒரு பொன் சோலைதான் ஆனால் அத்தனையும்
திருமகள் சீதை உமிழும் பெருமூச்சினால்
கண்ணீர் கலந்த மூச்சினால்
கரிந்து எரிந்து போய்விட்டன.
இதெல்லாம் அறிந்திருந்தும்
இராவணன் வருகின்றான் கீதை நோக்கி!
இல்லாமல் போகப் போகின்ற இராவணன்
பல தலைகள் கொண்ட பாம்பு
தன் ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்தது போல
வருகின்றான் இராவணன்!

பாடல்-425:

இத்தனை விதமான ஆற்றல் மிக்க இராவணன் வந்தான்
அஞ்சனை மகன் அனுமன்
இராவணன் செயலை ஆராய்ந்தான்
ஒரு கணம் யோசித்தான்:-
“இவன் வினை என்ன?
இவன் செயல் என்ன?
இவன் வினையின் பயன் என்ன?
இன்னும் சில நொடிகளில் தெரியும்”
 இராமப்பிரானின் பெரும் பெயர் நெஞ்சில் ஓதினான்
கொஞ்சம் தள்ளி மறைந்து கொண்டான்
எந்தச் சிக்கலும் மறைய
 மறை புகழ் இராமநாமம் போதும் என
எண்ணுகின்றான் அனுமன்.

-அனுமனோடு மீட்போம்.

Saturday, 7 September 2013

இப்படி ஒரு வழி



அன்பு கிட்டாத வலி தாங்கிட
வெளியே காண்டாமிருகத் தோலுடன் இரு
உள்ளே - 
அன்புச் சுளையுடன் இனிப்பாக இரு
மனித பலாப்பழமாக.

ஒழிவில் ஒடுக்கம்


     

 “ பால் நிரம்பிய கடலில் வாழ்கிறோம் ” என
அறியாத மீன் என்ன செய்யும்?
அக்கடலில் உள்ள ஜந்துக்களைப் புசிக்கும்!
நடுப்பக்கம்- கீழ்ப்பக்கம்-மேல்பக்கம்
எப்பக்கமும் நிறைந்த பரிபூரண சிவத்தை
அறியாத ஆத்மா என்ன செய்யும்?
மாயாமலமாகிய விஷயமே தேடும்!
நாமும் அது போல் இருக்கிறோம்-
பால் கடல்மீன்!

Thursday, 5 September 2013

இரட்டைமாட்டுவண்டி



இரட்டை மாட்டுவண்டிதான் கணவனும் மனைவியும்!
ஒருவர் தோள் பாரம் தாங்கமுடியாமல் ஒருவர் மீது
ரகசியமாகவும் மெல்லமாகவும் மாற்றப் பார்ப்போம்
ஒரு மாட்டுக்குப்  புரியும் ஒரு மாட்டுக்கு வலிக்கும்
இரண்டு மாடுகளுக்கு மட்டுமல்ல
மாட்டுவண்டியும் உணர வாய்ப்பில்லை - 
பூமிதான் பாரம் தாங்குகிறதென்ற உண்மை!

Wednesday, 4 September 2013

சுந்தர காண்டம் 376-400

பாடல்-376:

“மங்கையரின் மங்கலத்தாலிகள்
பிறர் அறுக்காமல்
தாமே அறுந்து அவர்தம் கொங்கைகள் மீது வீழ்ந்தன
தீயசகுனங்கள் இவை மட்டுமா?
இன்னும் அதிசயம் கேள்..!”

பாடல்-377:

மயனின் மகள் மண்டோதரி
அவளே இராவணன் மனனவி
அவள் கூந்தல் அவிழ்ந்து பிரிய
அதில் விளக்கின் தீ பற்றிட
சுறு சுறு என எரிந்தது
இதுவே “இன்னல் வரும்” என்பதற்கு
தகுந்த காரணம் என்றாள் திரிசடை.

பாடல்-378:

“வேறொன்று கூறுவேன் கேள்” என்று
திரிசடை பேசத் தொடர்ந்தாள்:-
“இன்று இங்கே ஒரு கனவு கண்டேன்
வலிமையான இரண்டு ஆண்சிங்கங்கள்
மலையில் வாழும்
புலிக்கூட்டத்தை தமது
துணையாக்கி கூட்டி வருகின்றன”

பாடல்-379:

புலிக்கூட்டங்கள்
காட்டில் நுழைகின்றன
மதம் பிடித்த யானைகளைக் கொல்கின்றன
காட்டில் இருந்த மயில் - 
புறப்பட்டது
சிங்கங்களின் நகரம் நோக்கி!

பாடல்-380:

மென் சொல் சீதையே இதுவும் கேள்
ஆயிரம் திருவிளக்குகளின் அழகு ஒளி உடைய
பெரிய விளக்கை ஏந்திய திருமகள்
இராவணன் அரண்மனை நீங்கிவிடுகிறாள்
விபீடணன் அரண்மனை அடைகிறாள்.

பாடல்-381:

“திருமகள்
விபீடணன் அரண்மனையுள்
புகுந்த நேரத்தில் எழுப்பிவிட்டாய்
முற்றுப்பெறவில்லை அக்கனவு!”
திரிசடை சொன்னதும்
“அக்கனவின் மீதி சொல்ல
இன்னமும் துயில்க”
என இரு கை கூப்பினாள் சீதை.

பாடல்-382:

இந்த நேரத்தில் அண்ணல் இராமன் ஏவி
கொடிய காளை போன்ற
போர் வீரனும் தூதனும் ஆகிய அனுமன் அங்கு வந்தான்
மெல்லிடை சீதை இருக்கை நோக்கினான்.

பாடல்-383:

அதே நேரத்தில்
சீதை சுற்றியிருந்த அரக்கியர்கள்
தூக்கம் தெளிந்தனர்
 “நன்மை ஏதும் தராத இந்தத் தூக்கம்
கெடுத்து விட்டதே..” என எல்லாப்பக்கமும் எழுந்து நின்றனர்
வேல்-
மழு-
வளைந்த தடி-
சூலத்துடன்!

பாடல்-384:

அந்த அரக்கிகளுக்கு -
வாய் -
முகத்தில் இல்லை! வயிற்றில்  இருந்தது
கண்கள்-
நெற்றிப்பரப்பில் இருந்தன
யானைகளும் யாளிகளும் பேய்களும்
உறங்குகின்ற மலைக்குகை போன்ற
ஆழமான வாய் இருந்தது!

பாடல்-385:

பத்து கைகள்!
இருபது தலைகள்!
இரண்டே கைகள்!
அஞ்சும் தோற்றம்
பார்த்தால் சிரிப்பு வரும் வேஷத்தில் இருப்பர்
பெருமலை போல -
பல முலைகள் கொண்டவர்கள்.

பாடல்-386:

அந்த அரக்கிகள்
சூலம் - வாள்-  சக்கரம்
அங்குசம் -  இரும்பு உலக்கை
எமன் போன்ற வேல் -  
கப்பணம்
ஆகிய கருவிகள் பயின்றவர்கள்
கறுப்பு மேனி -  
நஞ்சு மாறுவேடம் இட்டது போன்ற
தோற்றத்தில் இருக்கும்
மழுவேந்திய சிவபெருமானுக்கும்
சவால் விடும் தன்மையர்!

பாடல்-387:

அந்த அரக்கிகளுக்கு
முதுகில் தான் முகமே இருக்கும்!
யானை - குதிரை - புலி - கரடி
யாளி - பேய் - சிங்கம்
இவையே அந்த முகங்கள்!
மூன்று கண்கள்
புகை எழும் வாய்!
தீமை தரும் தொழில்!

பாடல்-388:

அந்த அரக்கிகளின் மனதில்
அளவிட முடியாத வலிமை!
கண்களால்   -   
அளவிட முடியாத தோற்றம்!
பெண்கள் எனும் பெயரில் உலவும் எமன்கள்! 

பாடல்-389:

அழகன் தேவியாம் சீதை
வார்த்தை வராமல் அவிந்து
தீப் போன்ற அரக்கியர்கள்
முகம் பார்த்து வாடியதை கண்டான் அனுமன்
ஓய்வெடுக்க முடியாமல்
உயர்ந்த மரக்கிளையில் காத்திருந்தான்!

பாடல்-390:

இருப்பதோ பலப்பல அரக்கியர்கள்
கையில்லாத வேல்கள்
கூட்டம் கூடியிருக்கிறார்கள்
நெருங்கி இருக்கிறார்கள்
தூக்கம் கலைந்து தெளிந்து விட்டார்கள்
என்ன காரணம் என
அவர்கள் நடுவே நோக்கினான்
உச்சி மரத்தின் மீதிருந்த அனுமன்.

பாடல்-391:

இராமனின் நிறம் -  
தனிப்பட்டது!
ஒப்பற்ற கருமேகத்தின் நிறம்
அப்படிப்பட்ட கருமேக நிற இராமனுடன்
அவனுக்கென்றே உருவான சீதையை 
கண்டு தரிசித்த அனுமனின் கண்கள்
இன்று -  
கருமேகக்கூட்டம் போன்ற அரக்கிகள் நடுவே
ஒளிவிடும் மின்னல் போன்ற  சீதையைக் காண்கின்றன.

பாடல்-392:

ஆனால் இவள் சீதை தானா என்ற ஐயம்!
சீதையாகத்தான் இருக்கவேண்டும்,
ஏனெனில் இவள் -  
கடக்க இயலாத அரக்கியர்களின்
காவல் சுற்று வடத்தில் உள்ளாள் இவள் சீதைதான்
சீதையே தான்
கடல் துணை கொண்ட நெடிய கண்கள்
அக்கண்களில் கண்ணீர் குளம்
அதன் அன்னப்பறவை இவள் ... !

பாடல்-393:

அவ்வளவு தான்!
அடுத்த கணம் உற்சாகங்கள் உண்டவனாகி
ஆடினான் பாடினான்
அங்கும் இங்கும் ஓடினான்
“அறம் அழியவில்லை
நானும் இனி இறக்கமாட்டேன்
தேடிய சீதை கண்டுவிட்டேன்
இவள் சீதைதான்” என்று கூத்தாடினான்.

பாடல்-394:

மகிழ்ச்சி மிக்க பெரும் உற்சாக வெள்ளம்
அலை புரண்டடிக்க
தனக்குள் அனுமன் பலவும் கூறிக்கொண்டான்
“கமலக்கண் இராமபிரான் வருணித்த
அரும் உருவினாள் சீதையின்
அனைத்து இலக்கணங்களும் பொருந்துகின்றன
கள்ளம் மிக்க வாள் அரக்கன் இராவணன்
இராமனின் உடலில் உறையும் உயிராம் சீதையை
ஒளித்து வைத்தது வியப்புதான்!”

பாடல்-395:

இராமபிரான் வேறு யாருமல்ல
பாம்பணை நீங்கிய திருமாலே!
சீதாப்பிராட்டி வேறு யாருமல்ல-
செந்தாமரைச் செல்வியாம் லஷ்மியே!
இராவணன் செய்த பிழை வேறல்ல -  
தன் உயிரை இராமபிரான் வழியே
களைந்து கொள்ளும் ஏற்பாடே!.

பாடல்-396:

அழுக்கேறிய கூந்தலுடன்
சீதை கண்டதும்
அனுமன் மனம் அழுதது இவள் இப்போது
மாசு படிந்த மாணிக்கம்
சூரியக்கதிர்களால் ஒளியிழந்த நிலவு
எனினும்
கற்பின் திண்மைக்கு பழியில்லை
தன்னையே காக்கும் காவலுக்கும் பழியில்லை
ஆம்! அறம் அழிவதில்லை!

பாடல்-397:

இப்போது  எனக்குள் சீதையைப் புகழும் சொற்கள் ஊறுகின்றன
எவரைப் பாராட்டுவேன்
எதனைப்  பாராட்டுவேன்
வீரக்கழல் அணிந்த இராமபிரான் தோள்களையா!
மங்கையர் திலகமாம் சீதை உள்ளத்தையா!
கொடை குணம் மிக்க ஜனகனின் குலத்தையா!

பாடல்-398:
அனுமனாம் எனக்குள் பலகுரல்கள் கேட்கின்றன
அதை உமக்குக் கூறுகிறேன்
“தேவர்கள் பிழை செய்யவில்லை என்று தெரிகிறது
வேதியர்களும் அப்படித்தான்
அறமும் அழியவில்லை
இனி என் இராமனால் எல்லாம் முடியும்
என் அடிமைத் தன்மையும் பிழையற்றது”

பாடல்-399:

ஒப்பிலாத சீதையின் நிறையாம் கற்பு நிலை
சிறிதளவு குலைந்தாலும்
ஆழியான் இராமபிரான் சினத்தால்
ஊழியாம் அழிவு வரும் என நினைத்தேன்
எல்லையில்லா நாட்கள் வாழட்டும் உலகம்!

பாடல்-400:

நற்குலப்பெண்களின்
மன உறுதி என்பதே தவமாகும்
சொல்லுக்கு அடங்காத சிறப்பாகும்
நெருப்பில் நின்றும்
நீரில் மூழ்கியும்
உண்பதும் அருந்துவதும் நீக்கியும்
நோன்பு செய்வோரைக்கூட ஒப்பிட இயலாது!

--அனுமனோடு மீட்போம்.

Tuesday, 3 September 2013

வரகுணபாண்டியன்



இப்படி ஒரு அன்பா என வியக்க வைத்த மன்னா
உனக்குத்தான் எத்தனை அன்பு
திருவிடைமருதூர் வாழ்
பெருநலமுலை நாயகி உடனுறை மகாலிங்கேஸ்வரர் மீது !

அன்று ஒரு நாள்
கோயிலில் விழுந்த வேப்பம் பழங்களை
சிவலிங்கங்களாக எண்ணி அம்மரங்களுக்கு கூரை எழுப்பினாய்

அக்கோயில் வளாகத்தில் கிடந்த மண்டை ஓடு ஒன்றைக்கண்டு
அது செய்த புண்ணியம் என்னவோ என அதுபோலவே
இறப்புக்கு பின் ஆக வேண்டும் என சிவம் தொழுதாய் அழுதாய்

பேரழகியை மணந்த அதே இரவில் அவளை
சிவனுக்கே சமர்ப்பிக்க நடு இரவில் சந்நிதி தட்டித் திறந்து
பெருமானே இவள் உன் சொத்து என்று ஒப்படைத்தாய்
அவள் கரம் தவிர அனைத்தும் சிவலிங்கத்துள் மூழ்கிட
“என் கரம் பட்டதால்தானே அவள் கரம் மட்டும் ஏற்க மறுத்தாய்” என
குழந்தை போல் பதறினாய் உருகினாய்

குளத்துத் தவளைகள்
அர அர அர அர ஒலிபக்தி எழுப்பியதாய் உணர்ந்து
தவளைகளுக்கு பொன் காசுகள் தண்ணீரில் வீசினாய்

அதுமட்டுமா
காட்டு நரிகள் ஊளையிடும் ஒலி
சிவனைத் துதிப்பதாக மனம் கசிந்து அந்நரிகளுக்கு
பொன் ஆபரணமும் ஆடைகளும் அணிவித்து அழகுபார்த்தாய்

அடடா
உன்னைபோல் உண்மை பக்தி கொள்ளுமோ நாயொத்த என் வாழ்வு
உன் இதயம்போல்
அடியேனுக்கு ஒரு கணமேனும் இதயம் துடிக்குமோ
அதுவும் வாய்க்குமோ பேதையேன் அறியேனே