Tuesday, 28 May 2013

பாடல்-86:

மாண்டாள் அரக்கி -  
வாயிலிருந்து வயிறு வரை கிழித்தான் அனுமன்
மேருமலை
தனக்கு கீழே இருக்கும்படி
உயரம் சென்று
நினைக்கும் வேகமும் தாண்டிய வேகமுடன்
சூரியப் பாதை வழியில் போனான்.

பாடல்-87:

“இத்தனை பெரியது கடல்” என்று
சொன்னதைக் காட்டிலும்
கடல் பெரிதாய் இருக்கிறது
அளவிட முடியாத வானப்பரப்பில் -
இது போல் துன்பம் எது நேர்ந்தாலும்
கவலையுறக் கூடாது என உணர்ந்தான் அனுமன்
இலங்கை அடைய வேண்டும் இடையூறு தீரும்”
என உணர்ந்தான் அனுமன்.

பாடல்-88:

துன்பங்கள் கடுமையானவை
நடுநடுவில் வருகின்றன
காரணம் அரக்கர்களே!
அரக்க குணமே அரக்க வடிவம்
அரக்க குணம் எவை?
துன்பமே தராதது அறம் என்பதை
நினைக்காதவர்கள் அரக்கர்கள்!
துன்பம் தீர வேண்டுமே
இலங்கை ஏற வேண்டுமே
என்ன வழி உள்ளது?
எங்கு உள்ளது?
“இராம” என்றால் எல்லாம் மாறும்
அதற்கு மாற்று
பிறிதில்லை என உறுதியானான் அனுமன்.
ஆம் - 
இராம இராம எனில் எல்லாம் மாறும்

பாடல்-89:

வான் வழியில்
தேலோகம் கண்டான்
கற்பகமரம் கண்டான்
தேன் ஊறும் தெய்வத்தன்மை கொண்டிருந்தது
வான்வழியே மேலும் பறந்தான்
இலங்கை நகரின் மதிலில் தங்கினான்
பொற்கலசம் கண்டான்
அந்நகர் காண இயலவில்லை
ஒதுங்கி நின்று
அங்கிருந்து பசும்சுடர் வீசும்
சோலைகள் உடைய
பவளமலை மீது பாய்ந்தான்

பாடல்-90:

பவளமலை குலுங்கியது
அனுமன் பாய்ச்சலால் தள்ளாடியது
மலையின் நிலை இப்போது எப்படியிருக்கிறது - 
மழையும் வாடைக்காற்றும் வீசும்போது
தடைபெற்ற மரக்கலக்கப்பல்
தன்னிடம் உள்ள பொருட்களை
தள்ளாடி சிந்துமே
அதுபோல் உள்ளது.

பாடல்-91:

அடேயப்பா!
பவள மலை -  
பூமிக்கும் வானுக்கும் நடுவே
ஊன்றப்பட்டது போலும் உயரம்!
தேவலோகம் எனும் மங்கை
தன் அழகை
தானே பார்க்கும் கண்ணாடி போல்
இலங்கை தெரிகிறது

பாடல்-92:

நல் நகரமாம் இலங்கை நோக்கினான்
தாமரைக் கைகளை மடக்கி
தன் இடுப்பில் வைத்துக் கொண்டு
“இந்நகரை பிற நகருடன் ஒப்பிடல்
அழகுமல்ல - சரியுமல்ல!
அண்டங்களையும் ஆளக்கூடிய
இராவணன் வாழ்கிறான் இலங்கையில் என்பதே
பொன்னகரம் என்பதை விட
பெருமை வரக்காரணம்” என எண்ணினான்,.

பாடல்-93:

“தேவலோகத்தை வ்¢ட
இலங்கையே சிறந்த அழகு
விரும்பியதை விரும்பி உடன் பெறுகின்ற
சுகபோக இலங்கை இது!
சொர்க்கம் என்பது அருமறையில் மட்டுமல்ல
இலங்கையிலும் உள்ளது!”
என எண்ணினான் அனுமான்.

பாடல்-94:

“இலங்கையின்
உட்புற அளவு எழுநூறு யோசனை என்பார்கள்!
மூன்று உலகின் சிறந்த பொருட்களும்
இலங்கையில் கிடைக்கும்!
ஞானம் ஆராய்ந்தவருக்கும்
இலங்கையில் காணும்
காணத்தக்க காட்சிகள்
ஒரு அளவின் வசப்பட வாய்ப்பில்லையே!
இவ்வளவு வளமா!” என அதிசயம் கொண்டான் அனுமன்!
(கடல் தாவு படலம் நிறைவு பெற்றது)

ஊர் தேடு படலம்




பாடல்-95:

பொன்னைக் கொண்டு இழைத்தார்களோ!
அதில்- 
மணியைப் பதித்தார்களோ!
இலங்கை நகர் மாடங்களை
மின்னலால் செய்தார்களோ!
எதைக் கொண்டு செய்தார்களோ!
நிலவைத் தொடுமளவு
அறிவினால் அறியமுடியா அளவு உள்ளதே
இலங்கையின் அழகு!

பாடல் - 96 : 

தேவலோக மாடங்கள் சிறியன-
நாகலோக மாடங்களும் சிறியன-
இலங்கை மாநகர் மாடங்கள் முன்னால்!

வானத்தை
பயப்பட வைத்து
மகா மேரு மலையை
அசைத்துப் பார்த்த பெருங்காற்று
இலங்கையுள் நுழையும்போதுமட்டும்
தென்றலாகி விடுகிறதே!


பாடல் - 97 : 

அந்த மாடங்களை
அழகு படுத்தியது எப்படி நடந்திருக்கும்?
பாகு போன்ற இன்சொல் பணிப்பெண்கள்
கார்மேக பின்னல்களை
துடைப்பமாக்கி
மாடங்களில் படிந்த
வாசனைப் பொருட்களை பெருக்கியிருப்பார்கள்
ஆகாய கங்கை நீரை
தமது அழகிய கைகளால்
அள்ளித் தெளித்திருப்பார்கள்
அதனால்தான் இத்தனை அழகு!

பாடல் - 98 : 

இலங்கையில்  அரக்கிகள் கூட அழகுதான்!
செம்பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்கள்
அதில் பாடல் எழுப்பும்  சதங்கைகள்
அரக்கியரின் பாதங்கள்
செந்தாமரை மலருக்கு ஒப்புமை!
முன்பு அரக்கியர் மேனி
மேகக் கருநிறமுடன் இருந்தது
இப்போதோ-
பவள விரல்களின்
சிவப்பான ஒளியால்
அந்த மேகங்கள்
ஆபரணம் அணிந்த கூந்தலுக்கு
இணையாகி விட்டன!

பாடல் - 99 : 

கஸ்தூரி வாசனை வீசுகின்ற
கற்பக மலர்களில் அமர்வதால்-
வண்டுகளுக்கும் வாசனை வந்தது
வண்டுகளின் வாயில்-
கற்பக மலர்களின் தேன் வடிகிறது
எனினும்
வண்டின் குணம் தாவுதல் என்பதால்
செங்கழுநீர் பூக்களில் அமர்கின்றன
இப்படிப்பட்ட
பூக்கள் கொண்ட ஆகாய கங்கை
நிலா முற்றத்தில் பாய்கிறது!

பாடல் - 100 : 

மாளிகையும் அழகு
மாளிகையில் வாழும் மகளிரும் அழகு
அங்குள்ள மங்கையர்கள்
வளர்க்கும் கிளிகளுக்கு
மழலை கற்றுத் தந்தபோது
புல்லாங்குழல் தோற்றது வீணை தோற்றது
யாழ் தோற்றது ! அது மட்டுமா?
மாளிகையைச் சுற்றியிருந்த சுவர்கள்
அதில் பதிந்த பெரிய மணிகள்
அவற்றில் மங்கையரின் நிழல்கள்
பிரதிபிம்பம் ஏது? அசல் ஏது?
துணிந்து காண முடியாத நிலையில்
அந்த மாளிகையின் அழகு வாழ்கிறது!

                        


                                            --தொடரும்







Wednesday, 22 May 2013

பாடல்-56:

அனுமனே!
நீதி நெறி நின்றவனே!
“கார்மேக வண்ணன் இராமனின் பணி செய்ய
வாயுதேவன் மகன் வரும்போது
நீ அவன் அருகே செல்க!
இளைப்பாறி விட்டு செல்ல அது உதவும்
இவ்வாறு என்னை இச்செயலில் தூண்டியது
கடலே அகும்! நான் அல்ல ”
என்று விளக்கமாய் சொல்லியது மலை.

பாடல்-57:

“ பொன் மாலை மார்பனே
அனுமனே
உன்னை இளைப்பாறச் சொல்லி கேட்கிறவன்
நல் தாயைவிடவும் நல்லவன் என நினை
இப்போதே தங்கு! இளைப்பாறு
விருந்தை ஏற்றுக் கொள்
என் வீட்டுக்கு வந்த நண்பன் நீ
நண்பர் என்பவர்
வீட்டில் தங்கிச் செல்வதை விட
எனக்கு உதவி வேறு உண்டோ!”
என்று அன்பு பேசியது மைந்நாக மலை.


பாடல் - 58 :

மைந்நாகன் உரைத்த உரை கேட்டான்
“ இவன் துன்பம் தர மாட்டான் ”
என்று அனுமன் நினைத்தான்
தாமரை மலர் முகம் மலர
ஒளி முகம் மலர
அளவுடன் சிரித்தான் அனுமன்
செல்ல வேண்டிய திசையில்
மேலும் செல்ல நினைத்து
அந்தத் திசையே நோக்கினான்
மைந்நாக மலையின்
பொன் சிகரம் அருகே கண்டான்

பாடல் - 59 :

குறிக்கோளுடன்
சிகரம் தொட நினைப்பவருக்கு
எதிரிகள் மட்டுமல்ல-
அன்பும் இடைமறிக்கும் போலும்!

அனுமனின்
அழகிய மறுப்பு இப்படி அமைந்தது:-

“ மைந்நாக மலையே....
உன்னிடம் இளைப்பாறாமல் செல்வதால்
வருத்தப்பட மாட்டேன்
அதற்கு-
என் துணை இராமனின் அன்புதான்!
என் ஆசை
நிறைவுறும்  வரையில் எதுவும் உண்ணப் போவதில்லை

நின் அன்பை
என் மேல் செலுத்திய போதே
உன்னிடம் தங்கி இருந்துவிட்டேன்
விருந்து நுகர்ந்து விட்டேன்
இதற்கு மேல்-
இனி-
நீ தரப் போவது என்ன உண்டு! ”
அன்புக்கு
அன்பு மழையே கொட்டினான் அனுமன்

பாடல் - 60 :

மைந்நாக மலையே கேள்:-
“ ஆசை தீர அளிப்பவர்களில்
முதல் வள்ளல்கள்
இடை வள்ளல்கள்
கடை வள்ளல்கள் உண்டு
அவர்கள் பண்பே அன்புதான்

உடலுக்கு எலும்பைவிட
வலிமை தருவது வேறில்லை
அது போல
உயிரின் குணங்களில்
அன்பைத் தவிர-
சிறந்த பொருள் யாரால் தர முடியும்? ”

பாடல் - 61 :

“ இப்போதே செல்வேன்
திரிகூட மலையில் அமைந்த
இலங்கை அடைவேன்
இராமன் இட்ட பணி முடித்து
என் ஆற்றலினால்
மீண்டு வந்தால்
மீண்டும் வந்தால்
உனது விருந்தை ஏற்பேன் ” என்றான்

மைந்நாக மலையின்
கண்களுக்கு காண முடியாமல்
அனுமன் முன்னேறினான்

பாடல் - 62 :

வேகமான பயணத்தின் போது
காண்பன யாவும் ஒன்றாகவே தெரியும்
சூரியனை
சந்திரனை
தேவர்கள் தங்கிய விமானங்களை
அனுமனின் வேகம்
ஒன்றாக  இணையாத பொருட்களையும்
ஒன்றிணைக்கும் ஊழிக்காற்று போல
அனுமன் காணப்பட்டான்!



பாடல் - 63 :

“ அனுமன் -
குழந்தைப் பருவத்திலேயே
கால்களைப் பரப்பி நடக்க
சூரியனாகிய என் தேர் மேல் குதித்தான்

இப்போதோ -      
கடல் மீதே உயர்ந்து செல்கிறானே
யார் மேல் பாயவோ! ” என
சூரியன் வியந்தான்.....

பாடல் - 64 :

அனுமனின் பற்கள்-
வாளுக்கு ஒப்பான வெண்மை உடையது
அனுமன் உடலோ-
வானையே நிரப்பிவிட்டது
அனுமன் வாலோ-
ராகு கிரகம் போன்று சூரியனையே மறைக்கிறது
அனுமன் உடல்-
பகல்- இரவு எனும் இருபகுதி கொண்ட
நாள் போல் உள்ளது
அதனால்
பூமியின் மேல் பகுதி முழுதும் ஒளி
பூமியின் கீழ்ப்பகுதி இருள்!



பாடல் - 65 :

ஒருவனின் வலிமை வெளிப்பட
அவனைத் துன்பம் தாக்க வேண்டும்
மூன்று உலகங்களிலும்
அரக்கர்கள் தரும் துன்பத்தை அழித்திட
முழுதாக உடன்பட்டு வந்தவன் அனுமன்

அனுமனது வலிமையை உணர்த்திட
தூய சிந்தை கொண்ட  சுரசை என்பவளை அழைத்தனர்
“நீ அரக்கியாக மாறு
அனுமனுக்கு துன்பம் கொடு ” என
தேவர்கள் விண்ணப்பித்தனர்

பாடல் - 66 :

சுரசை-
பிளவுபட்ட வாயுடன் அரக்கியாக மாறினாள்
அனுமனை உண்ணும் ஆசையுடன்
“ ஆணவக் குரங்கே
கொடிய எமனுக்கும் அச்சம் தருபவனே
எனக்கு ஏற்ற உணவு நீ ” என்று
வானத்தை தலையில் முட்டும்படி
உயர்ந்து நின்றாள்


பாடல் - 67 :

“ வன்மை மிகு அனுமனே
தீயாகிய என் பசிப்பிணி தீர்க்க
வளைந்த பற்களையுடைய என் வாயில் புகு
இது தவிர-
மாற்றுப்பாதை உனக்கில்லை ” என்கிறாள்

பாடல் - 68 :

அனுமனுக்கு சீற்றம் வரவில்லை
நட்புணர்வு வந்தது!
“ பெண்ணாகிய நீ பசிபிணியால் துன்புற்றாய்
தேவர் தலைவன் இராமனின் பணி நிறைந்தபின்
நீ என் உடம்பை உண்ணலாம்
அப்போது நான் உடன்படுகிறேன் ” என்றான்
தியாகசீலன் அனுமன்

பாடல் - 69 :
“ ஏழு உலகங்களும் காணும்போதே
உனைக் கொன்று
உன் உடல் தின்று பசி தீர்வேன் இது ஆணை ”
சுரசை சொன்னதும்-
வலிமை குவிந்த அனுமன் சொன்னான்:
“ கோரமான
உன் பெரிய வாயின் வழியே செல்வேன்
வல்லமை இருந்தால் தின்றுகொள் ” என்றான்.


பாடல் - 70 :

அண்டம் பெரிது
பல அண்டங்கள் சேர்ந்தாலும்
சுரசையின் வாயுள்
சென்று வரும் அளவு விரிந்தது வாய்!
அத்தனை அகலமாக
தொண்டை விக்காத அளவு விரிந்து
அனுமனை முழுதாக உண்ணக் காத்திருந்தாள்
எல்லாத் திசைகளிலும் விரிந்து
அனுமனை உண்ணக் காத்திருந்தாள்
ஆனால் - 
எல்லாத் திசைகளிலும் விரிந்த
சுரசை வாய் சிறிதாகும்படி
அனுமன்-
வான் வளர வளர்ந்தான்


பாடல் - 71 :

நீண்டு
உயர்ந்த அனுமன்
சுரசைக்கு உணவு என அவள் கருதும்படி
சிறிதாகச் சுருங்கினான்
ஒருமுறை அவள் சுவாசிக்கும் முன்
சட்டென வெளியே வந்துவிட்டான்!
“ ஆஹா! இந்த அனுமன் எம்மைக் காப்பான் ” என்று
 மலர்களைத் தூவி வாழ்த்தினர்
தேவர்கள் மகிழ்ந்து!

பாடல் - 72 :

மின்னல் ஒத்த வலிமை உடைய
சுரசை
தனது பெருத்த உடல் நீங்கி
சுயவடிவுடன்
அனுமனுக்கு
தாயைவிடவும் அன்பு தாழ வாழ்த்து சொல்கிறாள்:
“ அனுமனே! இனி உன்னால் ஆகாதது எது! ”

பொன்மேனி அனுமன்
அவளது ஆசிகளை
அணிந்து புனைந்து பறந்தான்
இலட்சியம் உள்ளவனுக்கு
புகழ்ச் சொல் கேட்கவும் நேரமில்லை!

பாடல் - 73 :

எத்தனை சாதனை இது!
மகிழ்ந்தது இயற்கை
விருந்து செய்தது தென்றல்
கீதம் இசைத்தனர் கின்னரர்கள்
பாடலுக்கு ஆடினர் தேவமகளிர்
பிராணிகளும் புகழ்ந்தன
வேதங்கள் ஓதினர் அந்தணர்கள்


பாடல் - 74 :

கடமை வீரன் அனுமன்
பாராட்டுகளை ஏற்கவும் நேரம் தராமல்
பறக்கின்றான்
எனினும் வாடைக்காற்று  விடவில்லை!
அனுமனின் செந்தாமரை  மலர் முகத்து வியர்வையை
மந்தார மலர்களின் மணம் வீசும்
வாடைக் காற்று தூவியது
வித்தியாதரர்கள் தத்தம் உலகிலிருந்து
கொண்டு வந்த
காந்தாரப் பண்  எனும் தேனை
அனுமன் செஞ்செவி பருகியது.
எனினும் பறப்பதை நிறுத்தவில்லை!

பாடல் - 75 :

அப்போது இன்னொரு துன்பத்தின் திறப்பு விழா!
கருங்கடல்
இன்னொரு கருங்கடலைப் பெற்றது போல்
ஆலகால விஷம் ஒத்த
அங்கார தாரை
“ இப்போது  என்னைக் கடப்பது யார்? ” என
எழுந்து நின்றாள்


பாடல் -76:

முன்பு-  
திருமாலுடன் போரிட
கடலின் மீது நடந்த
மது- கைடவன் எனும் இரண்டு அரக்கர்களை
ஒத்திருந்தாள் அங்கார தாரை!

காத தூரம் வரை அறிகின்ற கண்களுடன்
காலில் உள்ள சிலம்பொலி
கடல் போல் ஒலித்திட
கேள்வி கேட்கிறாள் அங்கார தாரை!


பாடல் -77:

அங்கார தாரையின் கோரைப் பற்கள்
அனுமனை குறைத்து மதிக்கும்
குறை மதியால்
குறை மதியான
பிறை மதி போல் வளைந்து ஒளி விட்டன

சிவபெருமான்
யானை உரித்து தோலாடை தரித்தது போல்
அவளது உடை!

தாமரையில் தோன்றிய  பிரம்மன்
உலகுக்கு அமைத்த உறை போல
அவள் வாய்!

பாடல் -78 :

அலை நெடுங்கடலின் நீர்
அங்கார தாரை கால்களைக் கழுவியது
அவளது தலையோ
வான் உச்சி முட்டிற்று
பகைத் திறம் ஆராய்ந்தான் அனுமன்
“ அறத்தை மட்டுமல்ல
அருளையும் விழுங்கியவள் இவள்”
என அறிந்தான்

பாடல் - 79 :

பெரிய பூமியிலும் வழி இல்லை
நீண்ட பூமியிலும் வழி இல்லை
அந்த அரக்கியின் வாயில்
செல்வதே கதி என ஆனது
அதற்கு அனுமன் மிகவும் வருந்தினான்

ஆழமான குகை போன்ற வயிற்றை
பிளந்து செல்ல நினைத்தான்
அவளை நெருங்கி
கூறிய வார்த்தைகள் இவை:-


பாடல் - 80 :

“ நிழலைக்கூட
பற்றி இழுக்கும் வரம் பெற்றாய்
அதனால் என்னை இழுத்து விட்டாய்
வெகு உயரத்தில் தகுந்த வேகமுடன்
ஓய்வில்லாமல் செல்வதைக் கண்டும்
என் செயலின் அவசரம் உணரவில்லை நீ
உன் வாயினால்
வான வழியும் அடைத்து விட்டாய்
நீ யார்?
இங்கு எதற்கு நிற்கிறாய்? ”

பாடல் - 81 :

“ என்னைப் பெண் என எள்தாய் நினைக்கும் நினைவை
விட்டு விடு அனுமா!
என் அருகில் வந்தால்-
தேவர்களும் உயிர் இழப்பது உறுதி
எமனே வந்தாலும் சரி-
என் கண்ணில் பட்ட உயிர்களை உண்ணும்
ஆசையை போக்க இயலாது ”
என்றாள் அங்கார தாரை

பாடல் - 82 :

கூறி முடித்த அரக்கி
அனுமனை உண்ண வாய் திறந்தாள்
அனுமனும் புகுந்தான்
அறம் அரற்றியது!
இனி
“அனுமன் அவ்வளவுதான்” என்று
தேவர்களும் நலிந்து மெலிந்தனர்
கண் இமைக்கும் நேரம் தான்!
நரசிங்கம் தூணிலிருந்து வந்ததுபோல
அவள் வயிற்றைக் கிழித்து
அனுமன் பிறந்தான்!

பாடல்-83:

கள் குடித்து குடித்து
அந்த மணம் நிரம்பிய
கள்வாய் அரக்கி அவளது
வயிற்றுக்குடல்களை
நீண்ட கைகளில் சுற்றிக் கொண்டு
வானில் பறக்கிற அனுமன்
இப்போது -  
முள் நிரம்பிய மலைக்குகையுள் நுழைந்து
அங்குள்ள பாம்புகளைக் கொத்தி
வானில்
பறக்கும் கழுகு போன்று உள்ளான்.

பாடல்-84:

இறவா வரம் பெற்ற தலைவர்களில்
திலகம் போன்றவள்
அரக்கியின் குடல்களை
சுற்றிக் கொண்டு
நீண்ட வாலுடன் வானம் செல்லும்
காற்றாடிக்கு உவமை ஆனாள்!

பாடல்-85:

ஆர்த்தார்கள் வானவர்கள்
அழுதார்கள் அரக்கர்கள்
மலர்மாரி  பெய்தான் பிரம்மன்
வியந்தார் சிவபெருமான்
ஆசிகள் அளித்தனர் முனிவர்களின் தலைவர்கள்.

                                     

                                            --தொடரும்




















Monday, 20 May 2013

பாடல்- 33:

சிலிர்த்துப்புறப்பட்டான் அனுமன்
அனுமனது வாலும் புறப்பட்டது!

இராமனின்  கருணை அறமும்
அனுமனைத் தொடரும் அல்லவா
அதுபோல் -
அனுமன் வால் தொடர்கிறது

அதுமட்டுமா
“இழி தொழில் அரக்கர்கள்
பார்க்க நேரலாம்” என
ஒளிந்து ஒளிந்து
வானில் செல்கிறது வால் -    
எமனது பாசக்கயிறு போல்!

பாடல்-34 :

அன்று -  
மேருமலைலைச் சுற்றியிருந்தது
ஆதிசேஷன்!
திருமால் ஆணையினால்
கருடன் வந்து சேர்ந்ததும்
தளர்ச்சி அடைந்தது ஆதிசேஷன்!

மலையை இறுக்கிப் பிடித்து
ஆதிசேஷன்
தளர்ச்சி செய்தது போல
அனுமனது வால் இப்போது உள்ளது!

பாடல்-35:
அனுமனின்
மலைத்தோள்களாம் வெற்றித் தோள்கள் பறக்கும்போது
உண்டான காற்று வீசி
தேவர்கள் செல்லும் விமானங்களில் மோதியது
தமக்குள் மோதிக்கொண்ட விமானங்கள்
உடைந்து கடலில் வீழ்ந்தன .

பாடல்-36:
கடல் தாவும் அனுமனின் வேகம்
வச்சிராயுதம் தாங்கிய
இந்திரனையே கவலை அடைய வைத்தது

அதிகரிக்கும் அனுமனின் வேகம்-  
இலங்கையும் தாண்டுமே என எண்ணி
இலங்கைக்கு அப்பாலுள்ள நாடுகள்
விலகி ஓடின.

பாடல்-37:
பல யோசனை தூரம் நீளமுடைய
அனுமனின் உடம்பு உற்பத்தி செய்த காற்று
திசை முழுதும் பரவிய கடலை
கலங்க வைத்தது
மீன்கள் இறந்தன
திமிங்கலத்தையே உண்ணும் திமிங்கிலகிலங்கள்
இறந்தன செத்து மிதந்தன.

பாடல்-38:
அனுமனின் கைகள்
வேகம் தந்தன
தளராமல் நிமிர்ந்துள்ளன
அனுமனின் கைகளை
அனுமனின் கைகளோடுதான் ஒப்பிட வேண்டும்.

அந்தக் கைகள் எப்படி உள்ளன?
அருங்குண வள்ளல் இராமன்
உயிர்த்தம்பி இலக்குவன்
அனுமனுக்கு இருபுறமும்
முன்னே செல்வது போல் உள்ளன!

பாடல்-39:
கிழக்குத்திசையை தாங்கி நிற்கும்
ஐராவதம் எனும் யானை
பாற்கடல் கடைந்தபோது உண்டானது போல
மைந்நாகம் எனும் மலை
வானைத் தொடுவது போல
அப்போது -
கடலின் நடுவே உண்டானது
அனுமனின் பாதையை மறித்தது!

பாடல்-40:
செம்பொன் மயமான ஆயிரம் சிகரங்கள்
மின்னிட வந்தது மைந்நாக மலை!
ஓயாத அருவித் தொகுதிகளை
மேலாடை என அணிந்திருந்தது மைந்நாகமலை!
திருமாலே- 
இராவணன் போன்ற தீயோரைத் தீர்க்க
மீன்கள் நிறைந்த கடலிலிருந்து எழுந்ததுபோல
மறித்து நின்றது மைந்நாகமலை!

பாடல்-41:
ஞானநூல்களின் கருத்துகளை அறிந்து கற்காமல்
ஐம்புலன் காட்சிகளில் மூழ்கியோரை
முதலில் தாங்கிய பூமாதேவி
பிறகு -  
வலிதாளாமல் விலகியதால்
கடலில் மூழ்கிப் போனாள்

ஆமை வடிவம் தாங்கி
கூர்ம அவதாரம் கொண்டு
பூமியைத் தாங்கினான் திருமால்

அப்போது- 
மந்தரமலை மீண்டும்
மலையாக உயர்ந்ததே
அது போல் நிற்கிறது
மைந்நாகமலை.





பாடல்-42:

மைந்நாக மலையின்
வளர்ச்சியும் அதிகமே

கடலைக் கிழித்து
பாதாள லோகம் வரை பறந்து
அமுதம் கவர்ந்து மீண்டும் அங்கிருந்து
அழகிய நிறமுடன் கருடன் மேலெழுந்து விரைவு போல்
மைந்நாகமலை வானைத்தொட வளர்கிறது!

பாடல்-43:
திருமாலே-   
எல்லா உலகமும் படைப்பவன்
அழிப்பவனும் அவனே
ஒருவராலும் உணர முடியாதவன் அவனே
அவனது அருளாலே
நெடுநீரிலே
மூன்று உலகங்களும் தோன்றின
பிரம்மனும் தோன்றினான்

பிரம்மனைப் பெற்ற
பொன்மயமான அண்டம் போல
மைந்நாக மலை வளர்ந்தது
வானைத் தொட்டது!


பாடல்-44:
திருமால் படைத்த நீரினுள்
பிரம்மன் மூழ்கித் தவம் இருந்தான்
“இந்நீரில் என்னைப்படைந்த
என் தந்தையாகிய திருமாலை
நான் காணாமல்
என் பணி தொடங்கமாட்டேன்”
என்று தன் தவம் முடித்து
நீரிலிருந்து பிரம்மன் எழுந்தது போல்
மைந்நாக மலை
வானைத் தொட எழுந்தது!

பாடல்-45:
இலக்குமியின் மலர்மாலையால்
இந்திரன் பவனி வந்தான்
அப்போது நேர்ந்தது தீயசெயல்

பொறுக்க முடியாமல் சபித்தார் துர்வாசர்
அதனால் எல்லாமும் கடலில் மூழ்கி மறைந்தன

மீட்பதற்கு திருமால் முயற்சித்தார்
அசுரர்களும் தேவர்களும் கடைந்த
திருபாற்கடலிலிருந்து
எழுந்த சந்திரன் போல
மைந்நாக மலை -  
வானைத் தொட எழுந்தது


பாடல்-46:
செம்பொன் பொருந்திய சிகரங்கள்- 
ஒருபுறம் குங்குமப்பூ போல் உள்ளன
ஒருபுறம் பவளக்கொடி சுற்றியுள்ளன
ஒருபுறம் நீலநிறமாய் உள்ளன
பெண் துணையுடன் தூங்கிய சுறாமீன்கள்
பக்கம் கலைந்து
பெருமூச்சுடன் உலவும்படி
மைந்நாக மலை வளர்கிறது

பாடல்-47:
வளைந்த கர்ப்பம் முதிர்ந்த முத்துச்சிப்பிகள்
ஒலித்தன.
அடர்த்தியான பாசிகள்
வானைச் சூழ்ந்த மேகங்கள் போலத் திகழ்ந்தன
பளிங்குப் பாறைகளில்
பெரிய முத்துக்களைப் பிரசவிக்கும் சங்கு
அழகிய நட்சத்திரங்கள் சூழ்ந்த
நிலவின் பெருமையை
பரிகாசம் செய்யும்படி
மைந்நாக மலை
வானைத் தொட வளர்கிறது.

பாடல்-48:
ஒன்றல்ல
இரண்டல்ல
ஆயிரமல்ல
பல்லாயிர மணிவகைகள்
பக்கமெல்லாம் கைகள் போலத் தோன்றியதால்
கடலில் முத்துக் குளிப்பவன்போல்
வளரும் மைந்நாக மலை தெரிகிறது.

பாடல்-49:
எள்ளை அருவித் தொகுதிஅள்
அனுமனுக்கு உதவுவதுபோல
வானிலிருந்து ஆடும் கொடிகளாய் விழுகின்றன
மைந்நாகமலை உயர உயர
மலைச்சுனையில் வாழும்
பனை மீன்களும்
திமில் எனும் மீன்களும்
துள்ள ஆரம்பிக்கின்றன.

பாடல்-50:
மனிதனுக்குள்
உட்பகைகள் பாம்பு போன்றன
பகை செய்கின்ற உள் பாம்புகள் ஐந்து!
காமம்-குரோதம்-லோபம் மோகம் மதம்-மாச்சர்யம்

இவை மட்டுமல்ல- 
வீழ்த்தும் மூன்று குற்றங்களும் உண்டு!
ஆணவம்-கன்மம்-மாயை

இவை யாவும் அழியவேண்டும் என்ற
ஞானம் வந்தபின் -  
ஞானிகளுக்குச் சந்தேகம் தெளியும் நிமிடம் போல
நச்சுப்பாம்புகள்
மலை நீரின் அடி ஆழம் விட்டு வெளியேறின
இப்போதும் -  
மைந்நாகமலை வளர்கிறது வளர்கிறது !

பாடல்-51:
கண்ணாடிப்பரப்பு
எத்தனை வழுவழுப்பானது!
அதில் - 
ஒரு உளுந்து உருண்டு முடிப்பதற்கு
எத்தனை நேரம் ஆகிவிடும்! 
அத்தனை குறுகிய கால நொடிகளுக்குள்
வளர்ந்து உயர்ந்துவிட்டதே
மைந்நாக மலை!

அயராத மனமுடைய அண்ணல் அனுமனே
“இது என்னவோ!”
என அயர்ந்தான் மலை கண்டு!

பாடல்-52:

துன்பங்கள் மலைபோல் மறித்தாலும்
உடனே நாம் செயல்படக்கூடாது
அதன் உச்சி வரை வளரக் காணவேண்டும்
நிதானித்து
அதன் பின்னரே புரட்டித் தள்ள வேண்டும்.

ஊக்கமுடையவன் ஒடுங்குவது
முட்டுவதற்காக போர்க்கடா
பின்வாங்குவதற்கு சமம்!
அனுமனும் இப்போது அப்படித்தான்

கடல்மேல் பரந்து வளர்ந்த மலை
நமக்கு “தீமை” என எண்ணவில்லையாம்
“நன்மைதராது” என்று தீர்மானித்தானாம்
நன்மையே விரும்பும் உள்ளம் எப்படி எதிர்மறை எண்ணும்?
சிகரத்தை மேல்கீழாகப் புரட்டித்தள்ளினான்!
ஆகாயத்தில் உயர்ந்தான்!

பாடல்-53:
கடலுக்குள் இத்தனை வருடங்கள்
ஒளிந்து கிடந்த மலை
அனுமனின் புரட்டுதலால் வருந்தி
தன் உயரம் குறைத்தது
உள்ளம் நொந்தது

நீங்காத அன்பு கொண்டு - 
சிறு மானிட வடிவம் கொண்ட்து
அனுமன் செல்லும் உயரமும் உயர்ந்தது
“என் ஐயனே கேள்” என்று கெஞ்சியது

பாடல்-54:
“ஐயனே! எனைப் பகைவன் என எண்ணாதீர்
இந்திரன் வீசிய வச்சிராயுதம்
அனைத்து மலைகளின் சிறகுகளையும் வெட்டியது
அப்போது -  
வாயுதேவன் எனைக் காக்க
கடல் ஆழத்துள் வைத்துக் காத்தான்” என்றது

பாடல்-55:
மைந்நாக மலை பேசப்பேச
அனுமன் ஆச்சரியம் ஆனான்
பாசமோடு பேசிற்று அந்த மலை

“மலையாகிய என் உயர்வு
உன் உயர்ந்த தோளைவிட குறைவே!
நீ வாயுதேவனின் அன்புப்புதல்வன்
என்னால் உனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை
உன்னால் எனக்கு ஆக வேண்டியது ஒன்று உண்டு” என்றது

“பொன் மயமான சிகரத்தில்
சிறிது ஓய்வெடு! பிறகு கிளம்பலாமே!
அப்படிச்செய்தால்
உன்னால் உயர்வு பெறுவேன்” என்றும் பணிந்து கேட்டது!


                                 --தொடரும்



Friday, 17 May 2013

பாடல்-24:

“உச்சை சிரவம்” எனும் வெள்ளைக்குதிரை!
கூரிய வச்சிராயுதம்!
இரண்டும்  கொண்ட தேவேந்திரனாலும்
கண்களால் காண முடியா வேகம்!

பூமியும் கடலும்
அனுமனின் கால்களின் கீழே அடங்கும்படி
அண்டம் கடந்த வேகம்

எப்படியிருக்கிறதெனில் -
இலங்கை நோக்கிய
தனித்துவமான
புஷ்பக விமானம் போல உள்ளது !

பாடல்-25:
 
அனுமனின் விரைவு பயணம் கண்டு
தேவர்கள் துதித்தனர்
வேத முனிவர் வியந்து வாழ்த்தினர்
மண் உலகினர் வணங்கினர்
அனுமனது மனதிலோ -  
அறச்சீற்றம் இருந்தது

“அரக்கர் தலைவன் இராவணனை
இன்னமும் அமுக்க வேண்டும்”
என்று கயிலாய மலை
சிவபெருமானை விட்டுப் புறப்பட்டது போன்ற மனநிலையே
இப்போது அனுமன் மனநிலை.

பாடல்-26 :

அனுமன் -
ஒரு பிரம்மச்சாரி

அனுமன் -
பிரம்மனை விடவும் அறிவில் மிக்கான்


அனுமன் -
உலகுக்கு அச்சாக நிற்கும்
அறம் தழைக்கச் செய்பவன்

அத்தகைய அனுமன்  எனும் மேருமலை
நீண்ட நாளாய்ப் பிரிந்துள்ள
மகன் என்னும்
திரிகூட மலையை
சந்திக்க விரைவது போல உள்ளதே!

பாடல் -27 :
தந்தைக்கு ஒத்த வேகம்
தனயனுக்கு வருவதில்லை ஒத்திருப்பதில்லை
அனுமனோ
தன் தந்தை வாயுதேவனுக்கே சமம் ஆனான்.

ஆம்- அனுமன் வேகத்தால்
நட்சத்திரங்கள் உதிர்ந்தன
மேகம் கிழிந்தது!
கடல் பொங்கிற்று
வானம் குழைந்தது
திசைகள் வெடித்தன
மேருமலை நடுங்கியது.





பாடல் - 28 :

எவன் ஒருவனுக்கு
தனது தவப்பயன் தீர்கிறதோ
அவன் அழிவான் !
இதற்கு நிரூபணம் இராவணனே !
அவன் அழிவைத் தடுக்க -
இருபது கரங்களலும்  இயலாது
பத்துத் தலைகளாலும் இயலாது
இதற்கு அறிகுறி ஒன்று நடக்கிறது
அன்று
கிழக்கில் எழுந்து சூரியன் மேற்கில் மறையவில்லை
அனுமன் என்ற சூரியன் -
வடக்கில் உதித்தது !
ஆம்!
தெற்கில் உள்ள இலங்கை நோக்கி செல்கிறது !

பாடல் - 29 :

அரண்டு மிரண்ட
பாவத் தொழில் புரியும் அரக்கர்களுக்கு
இலங்கை நகர் விட்டு
வெளியேற முடியவில்லை
தனியே வாழவும் முடியவில்லை
இராமனே துணை என்றனர்
இராமனின் கரங்களில் உள்ள அறச்சக்கரமாகிய
அனுமனைக் கண்டனர்.


பாடல் -  30 :
அனுமனின் உடல் -
முழு நிலவாகி
இருளை அழித்தது

மகா மேரு மலையும்
வெட்கப்படும்படி பறக்கிறான் அனுமன்

பெருந்தீ -
கடல் சூழ்ந்த உலகம் முழுதையும் அழிக்கின்ற
யுகத்தின் முடிவு நாளில்
வட திசையில் தோன்றும் பவுர்ணமி நிலவு ஒத்துள்ளான் அனுமன்

பாடல் - 31 :

சக்ரதாரியான திருமாலுக்கு
தன் வலிமை முழுதும் காட்டியதில்லை கருடன்
எனினும்
தேவர்களுக்கு புரிய வைக்க
அசுரர் குடல்கள் சரித்தான் ஒருநாள்
மலைகளைப் பொடி செய்து
ஏழு கடல்களையும் நிலைகுலையச் செய்தான்  ஒருநாள்

அடடா! அனுமனின் பலம் -
இப்போது பெரிய திருவடியான
கருடனையும் ஒத்திருக்கிறது



பாடல் - 32 :

தேவர்களின் உலகையே
திருமால் -
அன்று
காலினால் அளந்தான்

வான்முகடும்
ஏழு உலகங்களும் அஞ்சிட 
அனுமன் கடக்கிறான்
“எமனது பாசக்கயிறு போல்
அனுமனது வால் அளக்கிறது”
என்று தேவர்கள் திகைத்தனர்.

                         --தொடரும்.





Tuesday, 14 May 2013

பாடல்-13:

காலூன்றிய அனுமனால்
இத்தனை விளைவுகள் கண்டனர்
தேவர்களும் முனிவர்களும்
மூவுலகச் சான்றோர்களும் விரைந்து மொய்த்தனர்
மலர்க்கொத்து
மணம் வீசும் பொடிகள் மணிகள் தூவினர்
“வித்தகனே சென்று வருக” என்றனர்
விரைந்தான் அனுமன் -  
விரைவு வேறு அனுமன் வேறல்ல எனப்படும் அனுமன்!

பாடல்-14:

அனுமனின் துணைவர்கள்
அப்போது ஒரு வார்த்தை சொல்லினர்:-
“மலை போன்ற வெற்றித் தோள் உனக்கு
வெற்றி மாலை உனக்கே உனக்கு
எனினும்
அகத்தியர் தாண்டிய கடல்
நம் வலிமைக்கு மிகவும் எளிய கடல் என இகழாமல்
கருத்துடன் பயணம் புரிக”
மனதை ஒருமைப்படுத்தி
ஒப்புக் கொண்டான் அனுமன் எனும் சத்தியசீலன்!

பாடல்-15:

“அனுமனின் மிகப் பெரும் உருவம்
இலங்கைக்கும் அப்பால் செல்லும்”
விண்ணவர் கணிப்பும் வியப்பும் இப்படி!

கடல் தாண்ட முடிவு செய்து
முன்புறம் சாய்ந்து
கால்களை அழுத்த
அனுமன் திருவடியால்
மகேந்திரமலை அழுந்திப் போனது
பூமியும் அழுந்தியது

பாடல்-16:

வாலை உயர்த்தி
வலிமையான கால்கள் மடக்கி
மார்பை குறுக்கி
பெருமையான தோள்கள் பொங்கிட
தோள்கள் பூரிக்க
கழுத்தினைச் சுருக்கிக் கொண்டான்
காற்றின் விரைவைக் கொண்ட கைகள் நீட்டினான்
அனுமனின் தலை பிரம்மலோகம் அளாவியது
மற்றவர் கண்கள்  காண முடியா உயரத்தில்
இப்போது 
வேகமுடன் தாவுகிறான் அனுமன்.

பாடல்-17:

அனுமனின் அந்த எழுச்சி
பெரிய மரங்களை
வான் நோக்கி எழுப்பியது
ஓங்கிய மலைப்பாறைகளை பறக்கவிடுகின்றது
வெல்லும் வேழங்களை எழுப்பியது
“இராம நாயகன்  பணி இது” என எண்ணி -
அனுமனுடன் அவையும் பறப்பது போல
வானில் படர்ந்தன!

பாடல்-18:

“வாழ்வில் ஒருவர் உயரும் வேகமும் எழுச்சியும்கண்டு
நாமும் அவருடன் சேர்ந்து உயர்ந்துவிடலாம்”
எனும் நினைப்பு தவறு என்பதை
உணர்த்துவது போல
அனுமன் தாவிச் செல்லும் வேகமுடன்
உயரே புறப்பட்டு எழுந்த
பாறைகள் - பச்சை மரங்கள்- பசுக்கள்-   
பல்வகை உயிர்கள்
அனைத்தும் தெற்குத் திசை சென்று
உயர்ந்தன ஆனால் அவை குறிக்கோள் இல்லாமையால்
கடலில் வீழ்ந்தன!

பாடல்-19:
எண்ணவியலா எண்ணிக்கையில்
அனுமனுடன் எழுந்த பாறைகள்
பச்சை மரங்கள்
பலவகை உயிர்கள்
ஒரே நேரத்தில் கடலில் விழுந்து
அதனால் -   
தூர்ந்து விட்டது கடல்!
அப்போது எழுந்த கடலின் அலைகள்
வேதங்கள் போன்ற இராமன்
சீற்றம் கொள்வதற்கு
முந்தைய நிலை போலிருந்தன!
முன் அறிவிப்பு!

பாடல்-20:

அனுமன் செல்லும் வேகத்தால்
கடல் கிழிறது
அதனால்
நாகர்கள் வாழும் பாதாள உலகமே தெரிகிறது
நாக மாணிக்கங்கள் மின்னின
“நாகங்களில் சிறந்த நாகலோகம் காணும் தவம் செய்தேன்”
என கருதிக் கொண்டான் அனுமன்.

பாடல்-21:


கடலில் வாழும் நாகர்கள்
கருடர்களின் மிகப்பெரிய சிறகுகள் மட்டுமே
கடலைப் பிளக்கும் என  அறிந்திருந்தனர்
இப்போது - 
அனுமனின் வலிமை கண்டு
கருடர்களே  கலங்கிப் போனார்கள்
“இனி நாம் பிழைப்பது உறுதியில்லை” என ஓடினர்.

பாடல்-22:
அனுமனின் தாவுதல் -  
ஊழிக்காற்றின் வேகத்தோடு மோதியதால்
கடலில் உண்டான அலைகள்
அனுமனுக்கு முன்னரே பயணித்து இலங்கையில் மோதின
கடலில் துள்ளிய மீன்களும் முதலைகளும்
சுறாமீன்களும் அடங்கின
வேதனையில் தத்தளித்தன.

பாடல்-23:
இந்த  உலகை
எட்டுத்திசைகளிலும் தாங்கும் எட்டு யானைகள்
அனுமனின் வேகம் கண்டு நடுங்கின
உலகின் பொருட்கள் நடுங்கின
அதுமட்டுமல்ல -  
இராமதூதனின்  வேகம் இப்போது அதிகரிக்கிறது
ஆதிசேஷனோடு முன்பு போர் செய்தபோது
மேருமலையின் மூன்று சிகரங்கள் ஒடிந்தன
அப்போது திரிகூட மலை பறந்து சென்று
தென்கடலில் விழுந்தது
அந்த மலையின் வேகத்திற்கு சமம் -
தற்போது அனுமனின் வேகம்!

                 
                                                               --தொடரும்

Thursday, 9 May 2013

பாடல்-9 :

அனுமனின் பாத பலத்தால் - 
மலையின்  உச்சியில்
மகா அழுத்தம்!
அங்குள்ள சுனைநீர்ப் பெருக்குகள் மிதிபட்டன
காவிக்கற்களில் மோதி சிவப்பானது சுனைநீர்
சிவப்பு சந்தனக் கட்டைகளாலும் சிவப்பானது.
குங்குமப்பூக்களும் மகரந்தப்பூக்களும் சிவப்பு
குலிகம் சிவப்பு
எல்லாம் கலந்து சுனை நீரும் சிவப்பு
மகேந்திரமலையின் வயிறு கிழிந்து
இரத்தம் சொரிகிறதுபோல் உள்ளதே!

பாடல்-10:
அனுமன் -   
மிதிபட்டு மிதிபட்டு
கலங்கிய மலை
இப்போது- 
அனுமனின் குதிப்பினால்
அன்று பாற்கடல்கலக்கிய மத்துபோல் சுழல்கிறது.

பாடல்-11:

மகேந்திரமலை - 
இப்போது
வெடித்தே விட்டது.
மயில் போன்ற அழகிய மனைவிகள்
தத்தம் கணவராகிய தேவர்களைத் தழுவும் காட்சி
இராவணன் கயிலை மலை தூக்கிட
அஞ்சிய பார்வதி தழுவிய சிவபெருமானுக்கு நிகர்த்தது!

பாடல்-12:
தேவமகளிர்
முதலில் - 
கணவரிடம் ஊடல் கொண்டது
மது அருந்திய மயக்கத்தாலும்
கணவர் செய்த பிழையாலும்.
இப்போது -  
தேவமகளிர் அச்சம் அடையக் காரணம் - 
மலையில் ஏற்படும் அதிர்ச்சியால்!

அதிர்ச்சியும் பயமும் அவர்களை
தத்தம் கணவரைத் தழுவிக் கொண்டே
வானம் செல்ல வைத்தன

செல்லும்போது அந்த மென்மனங்கள் நினைத்துக் கொண்டன -  
“மலையிலேயே பைங்கிளிகளை விட்டுவிட்டோமே!”

Tuesday, 7 May 2013

பாடல் -7:

போர்க்களத்தில்
கால்கள் வெட்டப்பட இருக்கும் நிலையில்
அதிலிருந்து தப்பி ஓடும் வீரர்கள் போல்
வானை நோக்கி ஓடினர் -  
மலையில் வசித்த வித்யாதர அரசர்களும் !
கேடயமும் வாளும் சுமந்த பூச்சி போல் ஆனார்கள்!

பாடல்-8:

மலை மட்டுமா அழுத்தப் பெற்றது?
நட்சத்திரங்களும் சூரியனும் அழுந்தின
சந்திரனும் மேகங்களும் பூமியில் அழுத்தப்பட்டன
மலையின் மேல் -
மலை போல் அனுமன் நிற்கும் காட்சி அடடா!
மலை எனும் பாய்மரக்கப்பலை
கடல் வெள்ளத்தில்
அனுமன் செலுத்துவது போல் காட்சியளிக்கிறது.

Monday, 6 May 2013


பாடல் 5 :

மெல்லிய
பெண்யானைகள் அஞ்சி ஓடின
வால் உயர்த்தி ஓடி வந்து
களிறுகளின்
மேகநிற உடம்பை இறுகத் தழுவின
காதலால் அல்ல பயத்தினால்!

ஆண் யானை என்றாலும்
களிறு என்ற பெயர் கொண்டாலும்
பயம் வரும்போது-
ஆண் என்ன! பெண் என்ன!
செவிகளை அசைத்து அசைத்து
முதுகுப்பக்கம் அடித்து அடித்து
காற்றைக் கிளப்பும் களிறுகள்
பயம் தீராமல்-
அங்கிருந்த மரங்களை
துதிக்கையால் இறுகப்பற்றின! சுற்றின!

பாடல் 6:

ஒளி வீசும் மகேந்திர மலை உச்சியில்
தீப்பொறி பறக்கிறதே!
ஆம்! அனுமன் களிப்பும் குதிப்பும்!

சிகரம் பொடியாகிறதே...
ஆம்
சிகரத்துக்கே இப்போது
முதுகு பிளக்கும் வலி!
சிறிய குட்டிகளை
கண்கள் திறக்காத குட்டிகளை
உடம்பில் முடி முளைக்காத குட்டிகளை
புலி இனங்கள்
கவ்விக்கொண்டு ஓடுகின்றன.

                              (06/05/2013)

Saturday, 4 May 2013

பாடல்:3

அழிவில்லாதவன் அனுமன்
மகேந்திர மலையில் குதிக்கிறான்
என்ன ஆயிற்று!
நீல நிற மலை அது நொறுங்கியது
மலை அடிவாரத்திலிருந்த  விஷப்பல் பாம்புகள்
குடல் அமுக்கப்பட்டவன் வாயிலிருந்து
வெளிவருவதுபோல வெளியேறி ஓடின!



பாடல் - 4
 மலையின் அடிவார குகையில்
உறங்கிய சிங்கங்கள்
அனுமன் குதிப்பால் இரத்தம் கக்கி
குகை உள்ளேயே இறந்தன

பறவைகளெல்லாம்
என்ன செய்தி என்று அறியாமல் அலறின
உலகம் அழியும்போது பொங்கும் கடல் ஒலியும் தாண்டி
அந்த சத்தம் கேட்டது

பறவைகள் பறந்தன
பயந்து பயந்து பறந்தன
வானத்தின் பரப்பு முழுதும் பறவைகளே நிரம்பின
வான் பறவை என்பது மாறி
பறவை வானம் ஆயிற்று!

சுந்தரகாண்டம்

ஓம் சிவாயநம. சிவசக்தியே துணை. மக்கள் இப்போது கஷ்டத்தில் இருக்கிறார்கள். வெயிலின் சுமையை தாங்கிக்கொண்டு இயல்பான வாழ்க்கை வாழ வேண்டி உள்ளது.
முக்கியமான உறவுகளிடம் கூட தமது அந்தரங்கத்தை சொல்லி அழவோ தேறிக்கொள்ளவோ பேச்சு இல்லாமல் போனது. இந்த மோசம் நிகழ, பொருளாதார தேவைகள் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் பொருள் சம்பாத்யம் ஒரு எல்லை தான். மீண்டும் நாம் நமது மன வட்டத்துக்குள் வந்து கோழிபோல் அடைந்துகொள்வோம். ஆறுதல் தேடுவோம். மன நிலை முடக்கம் ஏற்படுமுன், நாம் ஏற்படுத்தி வைத்த சொந்த பந்தங்கள் நம் குறைதாங்குமா என்ற ஏக்கம் வரும். அதில் மிகமிக முக்கியமானது
திருமண உறவே. வாலிபம் தாண்டிய வாழ்வில், நிலைத்த வருமானமும் அமைந்து ஆனால் ஆணுக்கு ஒரு பெண் தோழமை இல்லாமலும், பெண்ணுக்கு வேறு சில பல
சிக்கல்களால் ஆணின் அண்மை கிட்டாமல் திருமணம் தள்ளிப்போகிறது. ஒரே உண்மையின் இரு பாகங்களாகவே எனக்கு ஆணும் பெண்ணும் தோன்றுகிறார்கள். இப்படிப்பட்ட கஷ்டத்தில் இருக்கும் யுவன் யுவதிகளுக்காகவே கம்பன் எழுதிய இராமயணத்தில் சுந்தரகாண்டம் என்கிற வலிமையான பகுதியை புதுக்கவிதை ஆக்குகிறேன். நிச்சயம் நல்ல வரன் அமையும். என் பிரார்த்னை இதுவே. ஒரு நல்ல சமூகம் அமைய எங்கோ வாழும் ஒரு நல்ல கம்பீரமான ஆணும் கம்பீரமான பெண்ணும் ஒன்று சேர அனுமன் பட்ட பயணத்தை மகா கவி கம்பரின் அழகு தமிழ் சுந்தரகாண்டம் பேசுகிறது. வாருங்கள். என்னோடு வாருங்கள். ஓம்சக்தி.  
_____________ 

கடவுள் வாழ்த்து

காண்பது -
மாலையா ?பாம்பா? என்று
மனதிற்கு திரிபு தருகிறது பிறவி
மயங்க வைத்து உண்மை மறைப்பது  பிறவி

பஞ்சபூதங்களின் சேர்க்கை
இந்தப் பிறவி

வேறுபாடுகளையே காண்பது
இந்தப் பிறவி

இப்பிறவியால் வீங்கிபோய் விட்டேன் ஐயா
எந்தவினையும்
உனது வில்லினைக் கண்டால் கலங்கும் ஐயா
வேதங்களின் எல்லையே உமக்கு வணக்கம்!

______________ 


கடல் தாவு படலம்


1.

மகேந்திர மலை மீது  நிற்கிறான் அனுமன்
தேடுகிறான்
சிந்தனைக் குதிரை தேடுகிறது இலங்கையை
நிற்பதோ மகேந்திர மலை உச்சியில்
இது இலங்கை அல்ல
தீர்மானிக்கிறான்
மயில் போன்ற சீதை இங்கே இல்லை-
பயணம் தொடர்கிறது

தேடுகிறவர்களின் சிகரம் அனுமனே!
எது வேண்டும் என்பதையே
சிந்திக்க வல்ல அனுமனால் மட்டுமே முடிகிறது
வேண்டாம் இந்த மலை என விலக்கிட!



                                                                      -தொடரும்