Tuesday, 9 July 2013

சுந்தர காண்டம்

பாடல் -201:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் வேறன்ன  கண்டான்?
செம்மையான பளிங்கு மேடையில் இருந்த
அரக்கியரின் வேல் போன்ற  கண்கள்
கணவரைப் பிரிந்து அதனால்
வளர்ந்த காமப்பயிருக்கு
நீர்ப் பாய்ச்சுகின்றன
எப்படி இதனை அறிய முடிந்தது?
அவர்”கள்”
“கள்”அருந்தியபோது
விழிகள் செந்நிறமானதால்!

பாடல்-202:

சீதையைத் தேடும் பணியில்
அனுமன் இன்னொன்றும் கண்டான்
அரக்க மாதர்களின் கருப்பு கண்கள்
அரக்கர்களுடைய கண்கள்போல் சிவப்பாயின
தூதுளைச் செடியின் பழத்தை வென்றன
அவர்கள் செந்நிற வாய்கள்!
அவர்கள் மாறி மாறி
கள் குடிப்பது
காதல் என்னும் கள் குடிப்பது போல உள்ளது



பாடல்-203:

சீதை தேடும் அனுமன் தனது பணியில்
இன்னொன்றும் கண்டான்
அரக்க மகளிர்
கற்பக மரம் பெற்றிருந்தனர்
கேட்டதெல்லாம் தரும் மரம் அது!
அதனிடம் -  
செம்பஞ்சுக்குழம்பு பெற்று
பாதத்தில் பூசிக்கொண்டனர்
மணம் மிக்க சந்தனக்குழம்பு பெற்று
மேனியில் பூசிக்கொண்டனர்
மை பெற்று -  
வாள் விழிகளுக்கு இட்குக்கொண்டனர்
தக்க அணிகலன்கள் ஆபரணங்கள் -  
தக்க இடங்களுக்கு !

பாடல்-204:

சீதை தேடும் பணியில் அனுமன்
இன்னொன்றும் கண்டான்
புலியைக் கொல்லும் வலிமை மிகு அரக்கரின் மைந்தர்கள்
செய்து விட்டனர் ஏதோ ஒரு குற்றம்!
அதனால் அரக்க மகளிர் மனம் நலிந்து
அமுது ஊறும் வாய்¢னால் பெருமூச்சு விட்டனர்
இடை -  
மின்னல் என துவண்டது
சிலம்புகள் - 
புலம்பி ஒலித்தன
காலால் உதைப்பட்டனர் அரக்க மைந்தர்கள்
மெய் சிலிர்ப்பு உற்றனர்.

பாடல்-205:

சீதை தேடும் பணியில் அனுமன்
இன்னொன்றும் கண்டான்
ஆகாயத்திற்கு வடிவமில்லை
அரக்க மகளிர் இடையும் அப்படித்தான்
இருக்கிறதா  இல்லையா தெரியாது!
அவர்கள் “கள்” உண்டனர்
கண்கள் சிவந்தன
வாய் வெண்மையானது
கண்ணும் வாயும் துடித்தது
புருவங்களும் வளைந்து துடித்தன
வியர்வைத் துளிகள் அரும்பின
கள் பானையில் -  
அவர்களுக்கு தங்கள் மதிமுகம்
புதுமுகமாகத் தெரிந்தது
அது -  
கணவன் கண்டுகொண்ட இன்னொருத்தி முகமோ! என
கணவனிடம் கோபித்தனர்!





பாடல்-206:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் இன்னும் என்ன கண்டான்?
அரக்கர்கள் -  
வேல்விழி கொண்ட  அரகியர்களின்
குமுதவாய்த் தேனைப்பருகி
மயங்கிக் கொண்டிருந்தனர்
வெண் பற்களுக்கிடையே சுரக்கின்ற அந்தத் தேன் - 
கரும்பு ஆலையில் இல்லை
மலைச்சாரல் குகையில் இல்லை
மிலேச்சர் இல்லத்தில் இல்லை
தூய பாற்கடலிலும் இல்லை !

பாடல்-207:

சீதையைத் தேடிச் செல்லும் அனுமன்
இன்னும் என்ன கண்டான்?
அழகிய கணவர்கள் பிரிந்து
அதனால் பெருகிய காமத்தீயால்
முலை மீது பூசிய சந்தனம்தீய்ந்து போனது
அது மட்டுமல்ல
அவர்கள் தமது
முகம் என்ற தாமரை மலரை
கைகள் என்ற மலரால்
தாங்கிக் கொண்டு பெருமூச்சு விடுவதைக் கண்டான் !


பாடல்-208:

சீதையைத் தேடும் பாதையில்
இது மட்டுமா கண்டான்?
ஆயுதங்களில் தேர்ந்த கணவர் மீது
காதல் அதிகம் கொண்டவர் பிரிவைக் கண்டான்
அதனால் அரக்க மகளிர் -   
மலர் மஞ்சத்தில் உயிரில்லா உடல் போல
சாய்ந்து கிடந்தனர்
பெரும் துன்பம் தரும் காதலோ விடவில்லை
வைத்த விழி எடுக்காமல்
வாசலையே நோக்கியபோது
தூது சென்ற மகளிர் வர
போன உயிரைத் திரும்பப் பெற்று
மகிழ்ச்சியால் துடித்ததைக் கண்டான் அனுமன் !

பாடல்-209:

சீதையைத் தேடும் பாதையில்
வேறென்ன கண்டான்?
கூந்தலையும் செவ்வாயும் உடைய தேவமகளிர்
தாளமிட்டு மங்கலப்பாடல்கள் பாடினர்
சங்கு வளை
சிலம்பு
மேகலை
பாதரசம்
ஆகிய அணிகலன்களின் ஒலிகள் தாழ்ந்து போகுமாறு
பலவகை முரசுகள் முழங்கின
அந்தச் சூழலில்
இல்லத்தில் உறையும் தெய்வத்தை வணங்கி
மலரினால் அர்ச்சனை செய்யும்
அரக்க மகளிரைக் கண்டான்!

பாடல்-210:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் வேறென்ன கண்டான்?
அரக்கியர் அணிகலன்களின் ஒளி
வில் போல இருந்ததை!
வாள் போல இருளோடு போரிட்டதை!
வேல் விழிகாளால் இளைஞர் நெஞ்சம் துளைக்கப்பட்டதை!
சங்கு பேரிகை கருவிகள்
மேகம் போல ஆரவாரித்ததை!
மங்கலச் சடங்குகள் செய்யும் அரக்கியர்
மேகங்களைத்தொடரும் மயில் போல நடந்ததை!

பாடல்-211:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் வேறென்ன கண்டான்?
பள்ளி அறையில் ஊடல் நீங்கிய பின்
புணர்ச்சி எனும் போருக்கு
சம்மதித்த நெஞ்சமுடன்
மெள்ள இமை திறந்ததைக் கண்டான்
கள்ளம் கொண்ட வாள் எனும் நெடுங்கண் தனது
 வாள் உறையைத் கழற்றுவது போல
 இருந்ததைக் கண்டான்!

பாடல்-212:

சீதையைத் தேடும்பாதையில்
அனுமன் வேறென்ன கண்டான்?
அரக்க மகளிர் -
தம் கணவரோடு ஊடல் கொண்டபோது
புத்தி- மனம் - சித்தம் - அகங்காரம் என்கிறநான்கும்
கணவரோடு சென்றதால்
மின்னல் இடை துவண்டது
அன்னப்பேடை போல நடந்து
தானும் தன் உயிருமாக
அறைக்குள் புகுந்து
கதவு மூடிக்கொள்வதைக் கண்டான்!

பாடல்-213:

சீதையைத் தேடும் பாதையில்
அனுமன் வேறென்ன கண்டான்?
ஆணும் பெண்ணும் இரட்டையராய் நின்று
கின்னரர் கீதம் பாடி வாழ்த்த
மேகம் கிழிக்கும் மின்னல் போல
முத்து விமானத்தில் மகளிர் சூழ
பொன் நகரின் வீதியில் பவனி வந்து
கணவர் வீடு எனும் புதுமனையில்
புகுகின்ற அரக்க மகளிரைக் கண்டான்!


பாடல்-214:

அனுமன் வேறென்ன கண்டான்?
மேக ஒலி எழுப்பும் முரசு ஒலியோடு
தேவர்கள் வாழ்த்துரையோடு
முனி பத்தினிகள் பாடும் பாடலோடு
தேவமங்கையர் பல்லாண்டு பாட
மணி மாலைகளும் குழைகளும் மின்னிட
புதுமணப்பெண் கோலத்தில்
அரக்கமாதர்கள் செல்வதைக் கண்டான் !

பாடல்-215:

அனுமன் வேறென்ன கண்டான்?
இயக்கியர்- 
அரக்கியர்- 
நாகமங்கையர்  -  
கறையற்ற நிலவு முகம் கொண்ட
வித்தியாதரப் பெண்கள்
இவர்கள் மட்டுமல்ல
மலைபோல படுத்துறங்கும் கும்பகர்ணன்!

பாடல்-216:

கும்பகர்ணன் உறங்கும் மண்டபம்
ஏழு யோசனை அகலம்!
இந்திரன்  முடி சூடும் மண்டபம் போல்
மாசில்லாதது
எட்டுத் திசைகளின் இருளையும்
அழிக்கும் ஆற்றல் பெற்றது!

பாடல்-217:

அந்த மண்டபத்தின் நடுவே
படுத்துறங்கும் கும்பகர்ணன்
ஒரு ஆதிசேடன் போல!
ஒரு கடல் போல!
இருளின் தொகுதி போல!

பாடல்-218:

நினைக்கக் கூடாத பாவங்களுக்கு
மூன்று வகை கதிகள் உண்டு
மந்தகதி - மத்தியகதி - துரிதகதி
கும்பகர்ணன் தன் தொகுதியாம்
மந்தகதி எடுத்துக் கொண்டான்
மகரந்தப் பொடி சிந்தும் கற்பகவனத்தில் - 
இனிய இளந்தென்றல் தன்னைத் தழுவ
உறங்குகின்றான் கும்பகர்ணன்!

பாடல்-219:

மண்டபத் தூண்களில்
சந்திர காந்த கற்கள்
தேவமகளிர் மதிமுகம் கண்டு
இனிய நீரைச் சொரிந்தன
அந்நீர்த்துளிகள் -   
கும்பகர்ணன் முகத்தில் விழ விழ
இன்னும் இன்னும் உறங்குகிறான்  !

பாடல்-220:

கும்பகர்ணனின் மூச்சு
வேகப்புயலுக்கு சமம்
அது வாசல்பக்கம் இருந்த அனுமனை
நகரவிடாமல் நிறுத்தியது
கும்பகர்ணன் மூச்சு இழுத்தபோது
அனுமன் அவன்
மூச்சருகே இழுக்கப்பட்டான்
மூக்கினுள்  செல்லக் கூசினான்
விதிர் விதிர்த்து விட்டது!
விலகிக் குதித்தான் அனுமன்
கும்பகர்ணன் மூச்சுக்காற்று இழுப்புவிசை தாண்டி!

பாடல்-221:

புழுதிக்கூட்டம் ஏற்பட்டது
கும்பகர்ணன் மூச்சினால்!
வானம் தொட்டது அது
மீண்டும் - 
அவன் மூக்கினில் நுழைந்தது மூச்சினால்!
ஊழிக்கால முடிவில்
உலகங்கள் அனைத்தையும் அழிக்கும் ஊழிக்காற்று
செயல்புரியும் முன்பாக இப்போது
கும்பகர்ணன் மூச்சில்
குடியிருக்கிறதோ!

பாடல்-222:

கும்பகர்ணனுக்கு
உயிர்ப்பு மிக்க முகம் தான்
ஆனால் உறங்குகிறான்
சிரிப்பற்ற முகத்தில்
கோரைப்பற்கள்  தெரிகின்றன
அவை - 
“சந்திரனைப் பகைவன் என நினைத்து
இரண்டு  கூறுகளாகப் பிரித்து
இரண்டு பக்க வாயிலும்
உண்கிறான் போலிருக்கிறது ”
என நினைக்க வைக்கும்.

பாடல்-223:

கும்பகர்ணன் ஏழப்போவதில்லை
ஏன்?
தடை செய்யும் மந்திரத்தால்
கட்டுப் பட்ட நாகம் போன்ற தூக்கம்!
ஊழிக்காலத்தை எதிர்பார்க்கும் கடல்
இருந்த இடத்திலேயே
அசையாமலிப்பது போன்ற தூக்கம்!

பாடல்-224:

மும்மூர்த்திகளில் ஒருவன் என
நினைக்கத்தக்க அனுமன்
கும்பகர்ணன் குறித்து என்ன நினைத்தான்?
நற்குணமற்ற அரக்கர் அரசனோ
இராவணனோ என நினைத்தான்
உடனே-  
காக்கும் கண்கள் கொண்ட அனுமன்
கனல் கண்கள் கொண்டன கோபத்தினால்!

பாடல்-225:

கோபித்த  அனுமன் - 
அருகில் சென்று பார்த்தான்
இவனுக்கு பத்து தலைகள் இல்லை
மலைகள் ஒத்த இருபது தோள்கள் இல்லை
ஆகவே
இவன் இராவணன் இல்லை என எண்ணினான்
ஆம்! வேகமாய் எழுந்த
கோபம் எனும் வடவைத்தீ
அறிவு எனும் கடல்நீரால் அணைந்தது!


         -அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment