Tuesday, 16 December 2025

 சந்த்யாவந்தனம் தொடர் எண்: (17) 14.12.25 

******************************************************

தினமும் மூன்று வேளையும் சந்த்யாவந்தனம் செய்து வாழ்வாங்கு வாழ முக்கியமான 07 பகுதிகள் இவை. செய்முறைகளை பிறகு பார்க்க இருக்கிறோம். இப்போது 07 படிக்கட்டுகள் போன்ற நிலைகளை அறிவோம்.

1.  ஆசமனம் .

2. ப்ராணயாமம்: 

யாமம் என்ற சொல்லுக்கு ஒழுங்கு என்று அர்த்தம். பிராணன் எனும் மூச்சை ஒழுங்கு செய்தல் . இதன் மூலம் நமது மனம் ஒரு நிலைபாட்டுக்கு வருகிறது . இதனில் மூன்று பகுதிகள் உள்ளன. மூச்சை இழுத்தல்; மூச்சை உள் அடக்குதல்: மூச்சை வெளியிடல் என்பன அந்த மூன்று பகுதிகள். 

இது யோகாசனப் பயிற்சியும் ஆகும். இதனால் நமது நுரையீரல், இருதயம்,நாடித் துடிப்பு ஆகியவை சீராக இயங்க ஆரம்பிக்கின்றன.


3. மார்ஜ்ஜனம்:-

 ஆசமனம் , ப்ராணயாமம் பகுதிக்குப் பிறகு வருகின்ற மார்ஜ்ஜனம் பகுதி என்பது மந்திரங்களை உச்சரித்து நீரை ( ஜலத்தை) தலை மேல் தெளித்துக்கொள்வது (  ப்ரோஷணம்).

4. அகமர்ஷணம் : பகலும் இரவும் செய்யும் பாவங்கள் தீர்வதற்கு அகமர்ஷணம் உதவுகின்றது. வலது உள்ளங்கையை , பசுவின் காது போல குவித்துக்கொள்கிறோம். மந்திரங்கள் சொல்கிறோம். பிறகு அந்த ஜலம் ( நீர்) உண்கிறோம்.

5. அர்க்யம்: சூர்ய பகவானை நினைத்து ஜலத்தால் வழிபாடு செய்வதே அர்க்யம் ஆகும். இருகைகளையும் சேர்த்து, நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சூர்யனுக்கு சமர்ப்பணம் செய்வதே அர்க்யம் ஆகும்.

சூர்ய உதயத்தின்போதும், அஸ்தமனத்தின் போதும் காயத்ரி மந்திரத்துடன் அர்க்யம் விடுபவன் எல்லாவித சுகங்களும் அடைவான் தைத்ரீய ஆரண்யகர் கூறுகிறார்.

6. ஜபம்: எவன் ஒருவன் திட மனதுடனும், ஒன்றுபட்ட சிந்தனையுடனும் காயத்ரி மந்திரத்தை 64,108,1008 என்ற எண்ணிக்கையில் ஜபிக்கிறானோ அவன் தேஜஸ் பெறுகிறான். ஞானம், தெளிந்த அறிவு ஆகியவற்றை அளவில்லாமல் பெறுகிறான் என்பதில் ஐயமில்லை.

7. உபஸ்தானம்: குவித்த கைகளுடன் நின்று கொண்டு சூர்ய பகவானை பிரார்த்னை செய்வதே உபஸ்தானம் எனப்படும். அனைத்து ஜீவராசிகளின் வாழ்வுக்கு ஆதாரமான சூரியனை வழிபடுவது முக்கியம். வருணன் பருவ காலங்களின் ஆதாரம். எனவே காலையில் சூரியனையும் ; மாலையில் வருணனையும் பல்வேறு மந்திரங்கள் உச்சரித்து ஆராதிக்க வேண்டும்.

                                                    ( ஈசனால் தொடர்வோம்)


No comments:

Post a Comment