அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (17) - 16.12.25
**************************************************************************************
பகவான் பாடல்: 16
***************************
காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்
கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா.
காந்தம் இரும்பைக் கவர்கிறது. இரும்பைத் தன்பால் அது வைத்துக்கொள்கிறது. கவர்ந்துவிட்டபின் இரும்புக்கு பிரிவதற்கு வாய்ப்பில்லை. அருணாசலனே அது போல் என்னுடன் இருப்பாய் என்ற வரிகள் சிவபுராணத்தில் “ ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே” என்ற வரியுடன் ஒப்பன.
அபிராமி அந்தாதி / பாடல்:83 :
விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே.
அபிராமியை பூசித்து பூசித்து காந்தம் கவர்ந்த பின், பக்தன் நிலை அபிராமி அந்தாதியில் சொல்லப்படுகிறது. தேவர்கள் எல்லோரும் இவர்களை வணங்குவர். இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதம் ஏற்கும். பகீரதி எனும் கங்கையில் ஆடுவர். வலிமை பெறுவர் தேவர்களைப் போல. இந்திரனின் கையில் உள்ள வஜ்ராயுதம் (குலிசம்)பெறுவர். கேட்பதெல்லாம் கொடுப்பது சிந்தாமணி. கற்பகத் தரு உள்ளிட்ட அனைத்தும் பெறுவர்.
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment