நான் ஒளவை பேசுகிறேன் தொடர் முடிவு
**************************************************
பாடல்:26
**************
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையோன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
*****
மனிதர்களே!
நாடு பெரிது. உண்மைதான்.
நாடாளும் மன்னன் பெரியவன். உண்மைதான்.
அதிகாரம் உண்டு. ஆள்படை உண்டு. சட்டம் இயற்ற முடியும்.
ஆயிரக்கணக்கான மக்கள் மன்னனை ,மதித்து வணங்குவர். இதனால் அந்த மன்னன் மாசில்லாமல் ( குற்றமில்லாமல்) கற்றவனை விட சிறப்புடையவன் என்று சொல்ல முடியுமா? முடியாது.
மாசில்லாமல் கற்றவனே மன்னவனை விட சிறந்தவன். ஏன்?
மன்னனுக்கு அவன் ஆளும் தேசம் மட்டுமே மதிப்பு தரும்.
கற்றவனுக்கோ செல்லும் இடமெல்லாம் சிறப்பு.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
************************************************************************************************ ************************************************************************************
பாடல்: 27
கல்லா மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய்கூற்றம்; கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
************
மனிதர்களே.
வாழ்வின் கடைக்காலத்தில் வருபவர் மட்டுமே எமன் அல்ல.
கூற்றம் என்றால் எமன். அவன் அழிப்பான், முடிவுக்கு கொண்டு வருபவன். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் குறிப்பிடும்படியாக மூன்று எமன்கள் உண்டு.
எமன்:1
கல்லாத மனிதர்களுக்கு - கல்வி அறிவில்லாதவர்களுக்கு - நல்ல நூல்களைக் கற்று உணர்ந்தவர் வாக்கு , எமனைப் போல துன்பம் தரும்.ஆதலால் நீதி நெறிப்படி வாழாத மாந்தர்க்கு நீதியே ( அறம்) எமனாகும்.
எமன் :2
மென்மையான வாழை மரத்துக்கு, அது ஈன்ற வாழைக்குலையே எமனாகும்.
எமன்: 3
இல்லறத்தின் நல்ல குணங்களைப் கடைப்பிடிக்காத பெண் அந்தக் குடும்பத்திற்கு எமன்.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
***************************************************************************************************************************************************************************
பாடல்: 28
சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று.
********
மனிதர்களே.
சந்தன மரம் காட்டில் எங்கோ இருக்கும். அதனைப் பார்க்காதவர்கள் பலர் இருக்கலாம். அது ஒரு மெல்லிய கட்டையாக தேய்ந்து சிறிய துண்டாக கடைசி மிச்சத்தில் இருக்கும்போதும் அதன் வாசம் அது மரமாக இருந்தபோது எந்த அளவு இருந்ததோ அதே அளவு இருக்குமே தவிர; தன் தேய்மானம் அளவுக்கு தன் வாசத்தைக் குறைத்துக் கொள்ளாது அல்லவா?
பூமியை ஆண்ட மன்னர் வாழ்வு நிலை சரிந்து பொருளாதார சூழல் மங்கியபோதும் அவர்கள் தனது தருமத்தையோ நல்ல செயல்களையோ குறைத்துக்கொள்ள மாட்டார்கள். ஏன்? அவர்கள் கொடை உள்ளம் விரிந்துள்ளது.
ஆகவே கொடுப்பதற்கு மனம் இருப்பதே முக்கியம். தனம் இரண்டாம் பட்சம்.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
*** *************************************************************************************************************
பாடல்: 29
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை
ஆம்போ(து) அவளோடும் ஆகும் ; அவள் பிரிந்து
போம்போ(து) அவளோடும் போம்.
***
மனிதர்களே
தனலஷ்மியும் மூதேவியும் வந்தார்கள். தங்களில் யார் அழகு என்றனர். கடவுள் சொன்னாராம்: “தனம் தரும் லஷ்மி நீ வரும்போது அழகு! மூதேவியே நீ செல்லும்போது அழகு!”
ஒருவனுக்கு அவனது பூர்வ புண்ணியத்தின் பயனாய் திருமகளின் அருளால் செல்வம் சேரும்.
அந்த நேரத்தில் செல்வம் மட்டுமல்ல, இனிய சுற்றத்தார் அமைகின்றனர். அவர்கள் மருவ இனியவர்கள்.
சுற்றத்தார் மட்டுமல்ல, மேலான செல்வம் சேரும். ( வான் பொருள்)
செல்வம் மட்டுமா? நல்ல அழகிய உருவம் ஏற்படும் ( personality)
அழகிய உருவம் மட்டுமா? உயர் குடி பிறப்பு ( குலம்) அமையும்.
திருமகள் நீங்கிப் போகும்போது அவளுடன் எல்லாமும் அவனைவிட்டு நீங்கிவிடும்.
ஆவதும் போவதும் லஷ்மி தேவி அருளாலே.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
****************************************************************************************************************************
பாடல்:30
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
***
மனிதர்களே!
அறிவு என்பதற்கும் அறிவுடையோர் என்பதற்கும் நீங்கள் நினைக்கும் அர்த்தம் என்ன?
நல்ல பல்கலைக் கழகத்தில் டிகிரி குவிப்பது; உயர் வேலையில் அமர்வது; சம்பாதிப்பது; வசதி வாகனங்களில் செல்வது ; செல்போன் இன்ஸ்டாவில் இருப்பது என்று நினைக்கிறீர்கள்.
அது அர்த்தம் அல்ல. அல்லவே அல்ல.
அறிவுடையோர் செய்யும் செயல் ஒன்றே ஒன்றுதான்.
சாகும் வரையில் தனக்கு ஒருவர் தீய செயல்களைச் செய்துகொண்டே இருந்தாலும் அவர்களை தங்களால் இயன்றவரையில் அறிவுள்ளோர் காப்பாற்றுவார்கள். இதுவே அறிவுடையோர் செயல்.
ஒதுங்கிப் போவது அறிவு அல்ல. தீமையால் அழியும் அவர்களைக் கண்டும் காணாமல் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போவது அறிவுள்ளோர் செயல் அல்ல. அது சுயநலம்.
சாலையில் இருபது முப்பது வருடமாக பெயர் தெரியாத அகல விரிந்த அழகிய நிழல் பரப்பும் அந்த மரத்தினை கிளை கிளையாக துண்ண்டு துண்டாக அரிவாளை வைத்து ஒருவர் வெட்டிக்கொண்டிருந்தார்.
மதியம் ஒருமணி ஆகிவிட்டது. நல்ல வெய்யில். இன்னும் இரண்டு மூன்று கிளைகள் மட்டுமே பாக்கி. அப்போதும் அந்த மரம் தன்னை வெட்டுகிறவர் மீது குளிர் நிழலைத் தந்து அவரைக் காப்பாற்றிக் கொண்டுதான் இருந்தது.
அறிவுடைய அந்த மரம் கடைசி வரை நிழல் தருவது போலவே, நல்ல மனிதர்கள் நடந்து கொள்வார்களே தவிர தீமை செய்கிறான் என்பதற்காக ஒதுங்குவதோ ஒதுக்குவதோ உதவி நிறுத்துவதோ செய்ய மாட்டார்கள்.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
**** *****************************************************************************************************************************
No comments:
Post a Comment