பாடல்: 21
*****************
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் அவ் இல்
புலிகிடந்த தூறுஆய் விடும்.
மனிதர்களே!
வாழ்வில் மனிதன் உயர, மனைவியின் பங்கு மிக முக்கியம்.
“இல்லாள்” என்பவள் எதையும் இல்லை என்று சொல்லாதவள் ஆகி, உயர் பண்புகள் கொண்டவளாக அமைந்துவிட்டால் ;அந்த மனிதனின் வாழ்வில் இல்லாததே இல்லை. ஆம். எல்லாம் இருக்கிறது என்று அர்த்தம்.
ஒருவேளை அப்படி அமையாமல் கணவனை எதிர்த்து எதிர்த்து கடுமையான சொற்களைப் பேசுபவளாகவும் அமைந்துவிட்டால் ?
அந்த மனிதனுடைய வீட்டை வீடு என்று நான் சொல்ல மாட்டேன். புலிதங்கும் புதர் என்றுதான் கூறுவேன்.
ஏனெனில் புலியின் புதருக்குள் குடியிருக்கும் ஒருவன், புலியால் எந்தக் கணமும் வீழ்த்தப் படலாம்.
மனைவி என்பவள் எதிர்த்து எதிர்த்துப் பேசுவது, புலியின் தாக்குதல் போல் ஒரு மனிதனுக்குத் துன்பமாகும்.
தாக்கிப் பேசிவிட்டு, புலி புதருக்குள் செல்லும். மீண்டும் தாக்கிட எழுந்து வரும். இதுவே புலி கிடந்த தூறு .
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
*********************************************** ****************************************************
பாடல்: 22
எழுதியவாறே காண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா(று) ஆமோ கருமம் ? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.
**
மனிதர்களே
நீங்கள் நினைக்கிறீர்கள். நினைத்து ஒரு செயல் நடக்கவும்; அச்செயல் நடக்காமல் போகவும் நீங்கள் செய்யும் செயல்களே காரணம் என்று.
அப்படி அல்ல. உங்களுக்கு பிரம்மன் எழுதியதே நடக்கிறது.
உங்கள் மட நெஞ்சுக்கு நினைவூட்டிச் சொல்லுங்கள், நினைத்தது எல்லாம் நடப்பதில்லை என்றும் அதற்காக வருந்திப் பயனில்லை என்றும் சொல்லிக் கொடுங்கள்.
முன்பிறப்பில் செய்த பாவ புண்ணியமே இந்தப்பிறவியில் நமக்கு அமைகிறது.
நினைத்த எல்லாம் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழேயே போய் நின்று கொண்டு கேட்டாலும் முன்பிறப்பு விதியால் கசப்பு மிகுந்த எட்டிக்காய்தான் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதுதான் கிடைக்கும். அதுதான் அவன் விதி.
எழுதிய விதியை யாரால் மாற்ற முடியும்?
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
***************************************************************************************************************************
பாடல்:23
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - வில்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.
மனிதர்களே!
வாழ்வில் அடிக்கடி சந்திக்கிறோம் கோபம் என்ற உணர்ச்சியை.
ஆனால் கோபப்பட்டு முடித்த உடன், சிந்திப்பீர்களா எப்படிப்பட்ட கோபம் வந்தது என்று.
கோபப்பட மட்டும்தான் தெரியும், அதற்குப்பிறகு எதிராளி கோபம் கொண்டு இன்னும் பெரிதாவதுதான் தெரியும் என்கிறீர்களா.
என் மூதுரையைக் கேளுங்கள்.
மூன்று வகை கோப வகை உண்டு.
கல் கோபம், தங்கக் கோபம், நீர்கோபம்.
அவை என்ன? சொல்கிறேன்.
தீயவர்கள், மூடர்கள் கொள்ளும் கடும் கோபம் கல் பிளந்தது போல மீண்டும் ஒட்ட முடியாத பிரிவை உண்டாக்கும். இணைப்புக்கு சாத்தியமில்லாத கோபம் , கல் கோபம்.
சமமான, சற்று உயர்ந்த (நடுத்தரமானவர்களின் கோபம்) கோபம், பொன்னில் ஏற்பட்ட பிளவு போன்றது. தானாக இணையாவிட்டாலும் அதனை உருக்கி மீண்டும் இணைக்க வாய்ப்பு உள்ளது என்பதுபோல சிலர் முயற்சியால் அவர்கள் இணைவார்கள். இது தங்கக் கோபம்.
நீர்க்கோபம் என்றால் என்ன? பெரிய வில்லில் அம்பைப் பொருத்தி குளத்து நீரில் அல்லது நீர் நிலையில் அந்த நீர் கிழிவது போல அம்பு விடுங்கள். என்ன ஆகிறது? நீரில் உண்டாகும் அப்பிளவு சற்று நேரம் கூட நீடிப்பதில்லை. பிறர் நல்லகுணங்களைப் போற்றி வாழும் பெருமை மிக்க சான்றோர் மனம் கொள்ளும் கோபம் உடனே மாறிவிடும் தன்மை கொண்டது. இதுவே நீர்க் கோபம்.
செய்ந்நன்றி அதிகாரத்தில் (குறள்:109 ல் இல்லறவியல்) ஒரு குறள் இவ்வாறு பேசுகிறது:
கொன்றன்ன இன்னாசெய்யினும் அவர் செய்த ஒன்று
நன்று உள்ளக்கெடும்.
முன்பு ஒருவர் நன்மை செய்தார். இப்போது கொன்றது போன்ற தீமையைச் செய்கிறார்.இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்துப்பார்த்தாலும் போதும். அந்த நிமிடமே அவர் செய்த துன்பம் மறைந்துவிடும்.
நீர்க்கோப நிலைக்கு அதாவது அவ்வப்போது கோபம் மறக்கும் நிலைக்கு நம் மனதை நாம் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
*** ****************************************************************************************************************************************
பாடல்:24
நல்தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்புஇல்லா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உசுக்கும் பிணம்.
மனிதர்களே!
முதுகாடு என்றால் சுடுகாடு. அங்கு ஒரு காகம் கண்டேன். அது பிணத்தைக் கொத்திக்கொண்டிருந்தது ஆவலாக. அது ஏன் அப்படிச் செய்கிறது? ஏன் அது வேறு இடத்திற்குப் பறந்து செல்லவில்லை? என்று தோன்றியது.
அப்போது அந்த வழியில் குடி போதை கொண்ட முரடர்கள் இருவர் நெருங்கி தோள் மேல் கை போட்டு நடந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டேன். அவர்கள் ஏன் நெருங்கிப் பழகிக் கொள்கிறார்கள்? என்று யோசிக்கத் தோன்றியது.
மூர்க்கத்தன்மை ( முட்டாள்தன்மை) உடையவர் அதேபோன்ற ஒருவரைத்தான் விரும்புவார்கள் ( முகப்பர்) என்பது புரிந்தது. உயிருள்ளவர்களை சிநேகிதம் கொள்வதைவிட்டு விட்டு பிணம் உசுக்கும் ( விரும்பும்) காகம் போன்றதே அந்த இரண்டு மூடர்கள் நட்பு என்பதை விட என்ன சொல்ல முடியும்?
யோசித்துக்கொண்டே வந்தேன்.
தாமரைக்குளம் ஒன்று அழகிய தோற்றத்தில் இருக்க அங்கே ஒரு அன்னப்பறவை வந்து சேர்ந்ததும் அவை இரண்டும் நட்பு பாராட்டிப் பழகுவதைக் கண்டேன்.
பல நூல்கள் கற்றவரை அதேபோல கல்வி கற்றவர்களே விரும்புவார்கள் என்பதும் புலப்பட்டது.
இருளால் ஒளியை விரும்ப முடியாது. இருள் இருளையே நட்பு கொள்ளும். ரர்க்கரும் கற்றவரும் நட்பு கொள்ள இயலாது. நேர்ந்தாலும் நிலைக்காது.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
**************************************************************************************************************************
பாடல்:25
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம்கரந்து உறையும்
அஞ்சாப் புறம்கிடக்கும் நீர்ப்பாம்பு- நெஞ்சில்
கரவு உடையார் தம்மைக் கரப்பர்; கரவார்
கரவு இலா நெஞ்சத்தவர்.
மனிதர்களே!
இரண்டுவகை நெஞ்சங்கள் காண்கிறேன்.
தன் உள்ளத்தை வெளிப்படுத்தாமல் ( கரவு - மறைத்தல் )வாழும் நெஞ்சம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? விஷம் உள்ள பாம்பு தன்னிடம் விஷம் இருப்பதை மறைத்துக்கொள்ள தன்னைச் சுற்றி புற்று அமைத்துக்கொள்கிறது போல விஷயத்தை மறைத்துவைக்கிறவர்கள்.
இன்னொரு வகை நெஞ்சமோ எல்லா நேரமும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு வகை நெஞ்சம். கரவா ( மறைக்காத) நெஞ்சம்.
தன்னிடம் விஷம் இல்லாத தண்ணீர்ப்பாம்பு தண்ணீரின் மேல்பகுதியில் உலவிக்கொண்டிருப்பது போல அவர்கள் வெளிப்படையாகவே நடந்துகொள்வார்கள்.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
**************************************************************************************************************************
No comments:
Post a Comment