Thursday, 25 December 2025

பாடல் : 18 - 20

 பாடல் : 18

*************** 

சீரியர் கெட்டாலும் சீரியர் சீரியரே

அல்லாதார் கெட்டாலும் அல்லாதார்- அல்லாதார்

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என் ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால்.


மனிதர்களே

சீர் என்றால் பெருமை. பெருமையுடையவர்கள் தாழும்காலத்திலும் பெருமையுடையவர்களாகத்தான் இருப்பார்கள்.

மேன்மக்கள் செல்வத்தில் தாழ்ந்துபோனாலும் பெருமையில் உயர்ந்தவராகவே கருதப்படுவார்கள். அவர்களால் சமூகத்துக்குப் பயன் இருக்கும்.

ஆனால், கீழோர்கள் செல்வத்தில் தாழ்ந்து போனால் தாழ்ந்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள். பிறருக்குப் பயன் பட மாட்டார்கள். 

உதாரணம் சொல்கிறேன். 

பொன் குடம் உடைந்தால் அதுவும் பொன்தானே? விலை உயர்ந்ததுதானே?

ஆனால் , மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்தால், அதற்கு முன்பு என்ன மதிப்பு ? அதைக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. யாருக்கும் பயனில்லை.

ஆகவே, தாழும் காலத்திலும் பெருமை குறையாமல் வாழ முடிவது மேன்மக்களுக்கு சாத்தியம். 

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



*** 


பாடல் : 19 

*************

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நால் நாழி - தோழீ

நிதியும் கணவனும் நேர்படினும் தம் தம்

விதியின் பயனே பயன்.

*****

 மனிதர்களே!

சிந்தித்துப் பாருங்கள். 

அழகான பெரிய கடலில் ஒரு நாழியால் ( படி போன்ற அளவை) முகந்து ஆழமாக அமுக்கி எடுத்தாலும் அது ஒரு நாழி நீர்தான் கொள்ளுமே தவிர, நாலு நாழி நீரைக் கொள்ளாது அல்லவா?

ஒரு பெண்ணுக்கு நல்ல செல்வமும் நல்ல கணவனும் அமைந்தாலும் கூட, அந்தப்பெண்ணுக்கு அவள் விதிப்படி (முற்பிறப்பு பாவ புண்ணியங்கள்) பொறுத்தே கிடைக்கவேண்டிய பயன்  கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.

தம் தம் விதியின் பயனே பயன் என்பதை மீறி வாழ்பவர் எவருமில்லை. முற்பிறப்பு பாவ புண்ணியம் தொடரும் என்பதை உணர்ந்தாக வேண்டும்.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.


**


பாடல் : 20   

***********

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா

உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு.

*********

மனிதர்களே!

ஒரு உண்மை தெரியுமா?

நீங்கள் நினைக்கிறீர்கள். நமக்கு ஒரு அவசரமென்றால் ஆபத்தென்றால் உடன்பிறந்தவர்கள்தான் உதவுவார்கள். சுற்றத்தார்தான் உதவுவார்கள் என்று. அது  தவறு. 

வியாதிகூடத்தான் நாம் பிறக்கும்போதே உடம்புடன் பிறக்கிறது. அது  கொல்வதைத் தவிர நமக்கு வேறு உதவி எதுவும் செய்வதில்லை அல்லவா?

   உடன் பிறக்காவிட்டாலும் எங்கோ தொலைவில் உள்ள பெரிய மலையின் மருந்து உடல் நோயைத் தீர்க்கிறது என்பதை சற்று நினைத்துப் பாருங்கள். 

அப்படிப்பட்ட மனிதர்களும் , நமக்கு உதவி செய்ய  உலகில் இருக்கிறார்கள்.

நம்புங்கள். இது உண்மை.

ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.



***

No comments:

Post a Comment