நல்வழி
கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும்பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
அழகிய ஆனை முகம் கொண்ட பெருமானே. தூய மாணிக்க மணி போன்றவனே.ஆனைமுகப் பெருமானே எனக்கு இயல் தமிழைக் கொடு. இசைத்தமிழைக் கொடு. நாடகத்தமிழைக் கொடு. நான் உனக்கு பாலும், தெளிந்த தேனும், வெல்லப்பாகும் , பருப்பும் கலந்து உனக்கு நான் படைக்கிறேன்.
தன்னிடம் இருக்கும் தமிழைத் தருவதற்குக் காத்திருக்கும் விநாயகப் பெருமானை ஒளவை வழிபட்ட நல் வழியின் முதல் பாடலால், நாமும் தினமும் பிள்ளையாரை வழிபடுவது நம் கடமை ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நம் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம் .
*********************************************************************************************************************************************
பாடல்:1
புண்ணியம் ஆம் பாவம்போம் போனநாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்- எண்ணுங்கால்
ஈதுஒழிய வேறுஇல்லை எச்சமயத்தார் சொல்லும்
தீது ஒழிய நன்மை செயல்.
மனிதர்களே!
நன்மையா?( புண்ணியம்) உடனே ஓடிப் போய் செய்யுங்கள். நல்ல வார்த்தையா? உடனே பேசுங்கள். ஆம். அதுவே செய்ய வேண்டியது. பாவமா? பாவமான செயலா? எண்ணமா? வார்த்தையா?போம்! என்று விரட்டுங்கள். அவை போக வேண்டியன. விலக்க வேண்டியன.
மண்ணில் ( இந்த உலகில்) பிறந்தவருக்கு வைத்த பொருள் ( தேடி வைத்த பொருள்) என்ன தெரியுமா? போன நாள் ( போன பிறவியில் ) செய்த புண்ணிய பாவங்கள் மட்டுமே.புண்ணியமோ பாவமோ அவை நம் கணக்கில் உள்ளன. அவையே நம்மை இயக்குகின்றன.
ஆராய்ந்து பார்த்தால் ( எண்ணுங்கால்) இதைதவிர வேறொன்றுமில்லை.
எந்த சமயத்தைச் சேர்ந்தவரும் அறிவுறுத்துவது ஒன்றேதான்.
அது என்ன? தீமை ஒழிய வேண்டுமானால் நன்மை செய்யுங்கள் என்பதே.
ஆம். தீமை நம்மைவிட்டு தானே விலகுவதில்லை. நன்மை செய்தால்தான் விலகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நம் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>***
பாடல் :2
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
மனிதர்களே! நீதியின் (அறம்) விதிகளை ஆராய்ந்து பார்த்தால் என்ன தெரிகிறது? நிச்சயம் ஒன்று தெரிய வரும்.
அது என்னவென சொல்லப் போனால், ( சாற்றுங்கால்: சொல்லப் போனால்) இவ்வுலகில் இரண்டு சாதிகள் மட்டுமே இருக்கின்றன என்பது தெரிய வரும். வேறு எதுவும் இல்லை.
ஆச்சரியப்படுகிறீர்களா? எத்தனை கோடி சாதிகள் பிரிவுகள் இருந்தால் என்ன? எல்லோரையும் உலக மக்கள் பிரிவினர் அனைவரையும் இரண்டே பிரிவில் அடங்கிவிடுவர்.
ஆம். அந்த இரண்டி சாதி இவைதான்:- உயர்ந்த சாதி ; தாழ்ந்த சாதி
உய்ர்ந்த சாதிக்காரர்கள் யார்? எளியவருக்கு கொடுத்து உதவுவோர் உயர்ந்த சாதி. எளியவருக்கு எதுவும் கொடுக்காதவர் தாழ்ந்த சாதி. இதுவே உண்மையும் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நம் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம்.
*************************************************************************************************************************************
பாடல்: 3
இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இது அன்றே
இடும்பொய்யை மெய்யென்று இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
மனிதர்களே!
உடம்பு பற்றி என்னென்னவோ நினைக்கிறீர்கள். நிரந்தரம் என்று நினைத்துள்ளீர்கள். உணவு, ஆடை, அணிகலன் என எப்போதும் உடம்பையே நினைத்துள்ளீர்கள்.
நான் சொல்கிறேன் கேளுங்கள். உடம்பு என்பது பை.
துன்பங்களை எல்லாம் போட்டு வைக்கும் பையாகும். Carry Bag. இந்தப்பையை இடும்பை என அழைப்பீர்களாக.
ஆம். இடும்பை என்றால் துன்பம். துன்பத்தை இடும் - பை -தான் இந்த உடம்பு என அறிந்துகொள்ளுங்கள்.
உணவை இட்டு வைக்கும் இந்த பொய்யான உடம்பை உண்மை என்று ( மெய் என்று) நினைக்காதீர்கள்.
எளியவருக்கு கொடுத்து உதவும் குணம் உங்களிடம் உண்டானால், முன்வினை ( ஊழில்) முற்பிறப்பு பாவங்கள் தரும் தீமைகள் எல்லாம் விலகிவிடும்.
முற்பிறப்பு வினை நீங்கிய நிலையில் விடுபடும் அவரை ( விண்டாரை) மோட்ச வீடு ( முக்தி) வரவேற்கும்.
ஆகவே முக்தி பெறுவதற்கு வழி என்னவெனில் ஏதுமற்ற எளியோருக்கு உதவுதலே ஆகும்.
துன்பத்தை இட்டு வைக்கும் இந்த Carry Bag மூலமாக வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்து மோட்சம் ஆகிய ஈசன் திருவடிப் பேறு பெறலாமே. வீசி எறியப்பட்ப் போகும் இந்தத் துன்பப் பையினால் அடையும் பயன் இல்லாதொருக்கு உதவுதல் ஒன்றே.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நம் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம்.
***************************************************************************************************************************************************************
பாடல்:4
எண்ணி ஒருகருமம் யார்க்கும் செய்யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.
மனிதர்களே!
நீங்கள் நினைக்கிறீர்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து நீங்களே முடித்துவிட்டதாக. அது நடக்காதபோது மனதால் துடிக்கிறீர்கள். என்ன முயற்சி செய்தும் நடக்கவில்லையே என்று.
சில காலம் செல்கின்றது. அப்போது நீங்கள் நினைத்த காரியம் நடக்கின்றது. அப்போது ஆச்சர்யம் அடைகின்றீர்கள். நான் முயற்சி செய்தேன் அதன் பலன் இப்போது கிடைத்தது என்று சொல்வீர்கள்.மகிழ்வீர்கள். உண்மையில் நடந்தது என்ன?
உண்மையில் அந்த காரியம் ஈடேற ( நடந்திட) ஊழ்வினைப் புண்ணியம் இருந்தால் அது நடக்கிறது. நிறைவேறுகிறது.
அவ்வாறு இல்லையெனில், கண்பார்வை இல்லாதவன் மாங்காயைப் பறிக்க தன் ஊன்றுகோலை எறிந்தது போல முயற்சிகள் வீணாகப் போகின்றது. அதுவரையில் அந்த முயற்சிகள் வீணாகி நிறைவேறாமல் போகும். புண்ணிய பலம் கூடி, கை கூட வேண்டிய நேரத்தில் தான் அந்த செயல் கைகூடும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் நல் வழி ஆக்கிட சிந்திப்போம். உயர்வோம்.
**************************************************************************************************************************************************
பாடல்: 5
வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
மனிதர்களே!
உங்கள் வருத்தம் எப்போதும் உங்களைத் துரத்துகிறது. நிறைவேறாத ஆசைகள் இன்று வருத்த முடிச்சுகளாய் உள்ளன. அவை எது சார்ந்தவையாக இருந்தாலும் சரி.
அதிலிருந்து தப்பிக்க மூச்சு இரைக்க இரைக்க ஓடுகிறீர்கள். வருத்தம் தவிர்க்க வேண்டும், துன்பம் தவிர்க்க வேண்டும் என்று முயற்சி செய்த படியே இருக்கிறீர்கள். அது உங்கள் மன வீட்டின் வாசல்படியிலேயே விரட்டி அடித்தும் பழகிய நாய்க்குட்டி போல வாலைக் குழைத்து உட்கார்ந்திருக்கிறது.
மீண்டும் வருத்தம், ஓர் அடர்ந்த புகையாக உங்களை சட்டெனக் கவ்விக் கொள்கிறது.
நான் நடக்க வேண்டும் என்று விரும்பிய விஷயங்கள் வருத்தப்பட்டும் நடக்கவில்லையே வருந்தி வருந்தி அழைத்தேனே அவை நடக்கவில்லையே என்று நினைக்கிறீர்கள். நடக்காத அந்த விஷயங்களைப் போங்கள் போய்விடுங்கள் என்கிறீர்கள். அவை போவதில்லை.
வரகூடாதது வரப் போவதில்லை. வந்து சேர்வதை நிறுத்த முடிவதில்லை என்ற உண்மையை அறிய மறுக்கிறீர்கள்.
இருக்கும் வருத்த எண்ணங்களால் நெஞ்சம் நீள நீள அப்படி இருந்தேனே இப்படி இருந்தேனே என நெடுந்தூரம் நினைத்துப் புண் ஆகிறீர்கள். புண்பட்ட நெஞ்சோடு இருந்து ஒரு நாள் இறந்தும் போகிறீர்கள். இதைச் செய்யாத மனிதன் ஒருவரும் இல்லை.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் எச்சரிக்கை மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**************************************************************************************************************************************************************
பாடல் : 6
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா(து) குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறினால் என்(ன)
உடலோடு வாழும் உயிர்க்கு.
மனிதர்களே!
அவன் அப்படி ஓஹோ என இருக்கிறானே இவன் இப்படி நாலு பேர் போற்ற பணம் புகழ் சுற்றம் பதவி சுற்றுலா ப்ரமோஷன் வீடு ப்ளாட் என்று சந்தோஷமாய் இருக்கிறானே; அவன் அந்தப்பெண்ணை நினைத்ததுபோல் திருமணம் செய்து கொண்டானே; அவன் நினைத்தபடி அந்த வேலைக்கே போய்விட்டானே என மற்றவர்கள் அதிக சுகத்தில் இருப்பதாகவும் அதிக புகழுடன் இருப்பதாகவும் நினைக்கிறீர்கள்.
ஏற்கெனவே உள்ள சுகத்தைத் தவிர ஒரு மனிதருக்கு இன்னொருவர் சுகமும் கூடுதலாகச் சேர்த்து யாருக்கும் கிடைப்பதில்லை என்பதைத் தெளிவாக மறக்காமல் அறிந்து கொள்ளுங்கள்.
வெள்ள நீர் நிரம்பியுள்ள கடலின் வழியே பயணம் சென்றாலும் கரையில் உள்ள தம் ஊருக்கே மீண்டும் அடைந்த போது, சென்ற நெடும் பயணத்தால் பயன் என்பது என்ன? நீங்கள் சொல்லுங்கள். ஒன்றுமில்லை அல்லவா?
அதுபோல் இந்தக் குவலயத்தில் ( உலகில்) உடலுடன் கூடி வாழும் மனித உயிருக்கு, வெளி இன்பங்களால் ஒரு பயனுமில்லை.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் எச்சரிக்கை மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
****************************************************************************************************************************************************************************
பாடல்:7
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலின் ஆம்;கமல நீர்போல்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.
மனிதர்களே!
நீங்கள் உங்கள் உடம்பைப் பற்றி பேசாத நாள் கிடையாது. பராமரிக்க செய்து கொண்டே இருக்கும் முயற்சிகளோ தீராது. இது போதாதென்று இந்த உடம்பையே “நான்” என்று நினைக்கவும் ஆரம்பித்துவிட்டீர்கள்.
உங்கள் உடம்பு; என் உடம்பு; பெண் உடம்பு; ஆண் உடம்பு ;மிருக உடம்பு என அத்தனை உடம்புகளையும் எல்லா வகையாலும் நினைத்துப் பாருங்கள்.
எந்தப் பட்டினால் என்ன உடை உடுத்தினாலும்; குளிருக்கும் வெல்லிலுக்கும் காப்பாற்றினாலும் ; என்ன சத்தான உணவு போஷாக்கு அளித்தாலும்; இந்த உடம்பு கொடிய புழுக்கள் மலிந்த நோய்களுக்கு இடமான தாழ்ந்த குடிசை போன்றது என்பதை மறுக்க முடியுமா?
நான் சொல்கிறேன் இவ்வுடம்பு என்பது : “பொல்லாப் புழுமலி நோய் புன் குரம்பை”
குரம்பை என்பது குடிசை எனப் பொருள் படும்.
ஆகவே இதனைப் புரிந்த நல்லோர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தாமரை இலையின் தண்ணீர் போல் உடல் மீது பற்றில்லாமல் வழ்வார்கள். பிறரிடம் உடம்பு பற்றி பெருமையாகப் பேசவும் மாட்டார்கள்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் எச்சரிக்கை மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*****************************************************************************************************************************************************
பாடல்:8
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணூம் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.
மனிதர்களே!
பணம் தேடுவதற்காக உங்கள் முயற்சிகள் பலவாக உள்ளது. சரியாக சாப்பிடாமல் தூங்காமல் ஓயாமல் பணம் பணம் என்று அலைந்து தேடுகிறீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு எண்ணிக்கையே வைக்க முடியாத அளவுக்கு காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை பணம் தேடுகிறீர்கள். சிலர் உறக்கத்திலும் பணம் தேடுகிறார்கள்.
உங்கள் ஒளவை நான் ஒன்று சொல்கிறேன். முன் செய்த வினை ( ஊழ்வினை) என்ற ஒன்றை மறக்காதீர்கள். அந்த வினையின்படியே உங்களுக்கு செல்வம் சேரும். அது இல்லையென்றால் பணம் சேராது.
உலகத்தவரே! நீங்கள் தேட வேண்டியது மரியாதை என்ற ஒன்றே ஆகும்
“தேட்டம் மரியாதை காணும்”
நன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள் நீங்கள் பாய்ந்து பாய்ந்து தேடிய பணம் நிற்கப் போவதில்லை. நிலையில்லாத செல்வம் உங்களுடன் வரப்போவதில்லை. ஆதலால் நிலைத்த மரியாதை ஒன்றையே தேடுங்கள்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் எச்சரிக்கை மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
******************************************************************************************************************************************************
பாடல்:9
ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.
மனிதர்களே.
நதியை கவனியுங்கள். அந்த நதி என்ன செய்தது? தனது வாழ்நாளெல்லாம் மக்கள், கால் நடைகள் குளிக்க வாழ என பல முனை உதவிகளைச் செய்து வந்தது.
கால மாற்றத்தால் கொடிய கோடை வந்தது. நீரில்லை. சுடுகின்றது மணல் உங்கள் காலடிகளை. நீர் கிடைக்காது என்று ஏமாற்றத்துடன் திரும்பிப் போக நினைத்தீர்கள்.
“இங்கே வாருங்கள் என்னை நோண்டுங்கள் தோண்டுங்கள் நீர் வாரிப் பருகுங்கள்” என்று அந்த நதி உங்களுக்கு நீர் தருகிறது அல்லவா?
நல்ல குடியில் சிறந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை எய்தினாலும் இல்லை என்று சொல்ல அவர்களுக்கு மனம் வருவதில்லை. வராது.
தன்னால் இயன்ற உதவியை, தாங்கள் இருக்கும் வரை செய்வார்கள், அந்த நதியின் ஊற்று நீர் போல.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் உணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*** *******************************************************************************************************************************************************************
பாடல்:10
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கு அது வழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென்று இட்டு உண்டு இரும்.
மனிதர்களே.
நீங்கள் இந்த மிகப்பெரிய ( மா) நிலத்தில் பிறந்த ஆறறிவு மக்கள். உங்கள் தாயோ தந்தையோ நண்பரோ சுற்றமோ குழந்தையோ உங்களைவிட்டு இறந்து போகிறார்கள்.அழுகிறீர்கள். ஒரு நாள் , இரண்டு நாள், ஒரு வாரம், பல வாரம், கடைசியில் அந்த ஆண்டே முடிந்து விடுகிறது. அழுதுகொண்டே இருக்கிறார்.அவர் கண்கள் வறண்டன.
அவரிடம் ஒளவையாகிய நான் போனேன்.
இந்த வருஷம் மட்டுமல்ல அடுத்த வருஷமும் அழுதாலும் அல்லது இன்னும் பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர்கள் திரும்பவும் வரப் போவது இல்லை. அப்படி இருக்க ஏன் அழுகை? எதற்கு அழுகை?
நமக்கும் அதுதான் வழி. நாமும் அவர்கள் சென்ற இடத்திற்கு போகும் வரையிலும்நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது என இருந்துவிடாதீர்கள். ஒன்றுமில்லை என விரக்தி அடையாமல் வாழுகின்ற உங்கள் காலத்தில் பிச்சையிடுங்கள். தருமம் செய்யுங்கள். பிறகு உண்ணுங்கள்.
தருமம் செய்த பின் உண்டு மகிழ்ச்சியாக இருங்கள்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*******************************************************************************************************************************************************************************
No comments:
Post a Comment