Tuesday, 9 December 2025

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (11) - 9.12.25

**************************************************************************


ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க

இது உனக்கு அழகோ அருணாசலா.


உறக்கம் ஏன்? இன்னும் என்னை நீ ஆட்கொளவில்லையே? என்று “உறக்கம்” எனும் குற்றச்சாட்டு ஈசனுக்கல்ல. பக்தன் தான் உறங்கிவிடுகிறான் புலன் இன்பங்களில் இழுபட்டு. இது ஈசனுக்கும் தெரியுமே!  ஈசா என்னை அவ்வாறு கைவிடல் அழகோ என்ற உரிமை பகவானின் வரிகள் சுட்டுகின்றன.


அபிராமி அந்தாதி - 61

“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து 

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்

நின்னை பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறுபெற்றேன்

தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கச்சியே.


தனக்கு அருளப்பட்டதை பக்தனால் புரிந்துகொள்ளமுடிகிறது என்பதை அபிராமி பட்டர் “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக” என்றார். 

பகவான் இரமணர் “எனைப் பிறர் இழுக்க” என்ற சொல்லுடன் “நாயேனையும்” என்ற பதம் ஒப்பிட்டு நோக்கத் தக்கது. 

ஆம். உலகியலில் நாய் - நாயேன் என்ற சொல் , புலன்களால் ஆட்பட்ட நிலை பேசுகின்றது. 

அபிராமி பட்டர் “நாயேன் “ என்ற சொல்லால் தன்னைத் தாழ்த்திக்கொள்வது உலகினர் தமது நிலை உணரவே ஆகும். வக்கீல் ஒருவர் வாதிடும்போது தம் கட்சிக்காரர் குற்றத்தை தான் செய்ததாகவே வாதாடுவார் என்பது போன்றது.


No comments:

Post a Comment