அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (5) 3.12.25
பகவான் ரமணர் பாடல் : 4
ஆருக்கா (க) எனை ஆண்டனை!? அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாசலா .
யாருக்காக என்னை வந்து ஆண்டாய் அருணாசலா? அதுவும் நான் நினைக்காதபோதே என்னை ஆட்கொண்டு ஆளவும் ஆரம்பித்தாய். இப்போது என்னை அகற்றிவிட்டால் அகிலம் பழிக்கும் என்பதை மாணிக்க வாசகப் பெருமான் -
“நான் தனக்கு அன்பின்மை நானும் தானும் அறிவோம்
தான் என்னை ஆட்கொண்டது எல்லோரும் அறிவார் “ என்று திருக்கோத்தும்பி பகுதியில் தன்னை ஆட்கொண்ட விதம் பாடுவார். இவ்வாறு தனது ஆத்மா என்பது ஈசனே என்ற அனுபவம் அடைய வேண்டும். அதுவே முடிவு. அதுவே அத்வைதம். அப்படி இல்லாவிட்டால், ஈசனிடமிருந்து அனுபவத்தை அனுபவிப்பவர் தானாகவும் அனுபவம் கொடுப்பவர் ஒருவராகவும் நினைத்தால் மரணம் என்பது, விடைபெறும் தருணம் என்பது மனக்கவலை மிக்கதாகிவிடும்; அதனால் அபிராமி அந்தாதி (பாடல் : 89)பாடுகின்றது இம்முறையில்:
“உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும்போது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே”. ஆம். உடம்பில் பிறக்கும் கணத்தில் உயிர் செருகப்பட்டது. அது விலகும் வரை மனம் இருக்கும். நினைவுக்கு ஆதி என்பதே சிவசக்தி நிலையாகும்.
அதனை அடையும் நிலைக்கு செல்ல விடாமல், மனமாக தன்னைக் காட்டிக்கொள்ளும் உயிரின் போக்கு சிந்திக்கத் தக்கது.
****
No comments:
Post a Comment