பாடல்:13
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய் அம் புவியதன்மேல்.
மனிதர்களே.
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் அழகிய உண்மையான இந்த உலகில் ( அம்:- அழகிய)நன்றாக வாழ்பவரை யாரால் அழிக்க முடியும்? யாராலும் முடியாது. அவர் கெடுப்பார், இவர் கெடுக்கிறார், இவர் என் முதுகு பின்னே பொறாமைப்பட்டு பின்னுக்கு இழுக்கிறார் என்பதெல்லாம் உங்களை ஒன்றும் செய்ய முடியாது என அறியுங்கள். இன்றைய தேதியில் நீங்கள் நன்றாக நிச்சயம் வாழ நீங்களே காரணம்.
இன்னொன்று சொல்கிறேன். நன்றாக வாழ்வாரை எப்படித் தடுக்க முடியாதோ அதுபோல் ; சாகவேண்டியவரை யாரால் தவிர்க்க முடியும்? யாராலும் முடியாது. அவரது விதி நாட்கள் தாண்டி அவரை வாழ வைக்க எந்த மருத்துவராலும் இயலாது.
மூன்றாவதாக ஒன்று சொல்கிறேன். எப்போதும் பிச்சை எடுத்தே வாழ வேண்டிய விதி இருந்தால் யாரால் விலக்க முடியும்? அதுவும் இயலாது.
அழகிய பூமி இது. உண்மையான உலகம் இது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வின் நிலை பற்றிய அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
No comments:
Post a Comment