Saturday, 13 December 2025

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (16) - 14.12.25 

****************************************************************************************


பகவான் பாடல் : 15

*************************


கண்ணுக்கு கண்ணாய்க் கண் இன்றிக் காண்; உனைக்

காணுவதுயார் அருணாசலா.

கண்கள் இருந்தாலும் உடலில் உயிர் எனும் ஆத்மா இல்லாதபோது காணமுடிவதில்லை. அப்படியெனில் கண்ணுக்கு கண்ணாய் கண்டது யார்? ஆத்மா தான். அக நோக்குதான்.

முகத்திலே கண் கொண்டு  காண்கின்ற மூடர்காள்

அகத்திலே கண் கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைக் 

கூறுமாறென்றால் எங்கணே?

மகளுக்கு ஒரு தாய் தனது கணவனுடன் நிகழ்ந்த சுகத்தை எப்படி விவரிக்க முடியாதோ அதுபோல அகத்தில் கண் கொண்டு ஈசனுடன் நேரும் அனுபவம் எனும் திருமூலர் பாடலோடு ஒப்பு நோக்கத் தக்கது.

அபிராமி அந்தாதி : பாடல் 50

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு 

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி  என்று

ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே


மேற்கண்ட பாடலில் அம்மையின் 11 திருநாமங்கள் கூறப்பட்டு மனம் இன்புறும் நிலை பாடப் படுகின்றது. ஜீவாத்மாவுக்குத் தெரியாமல் பரமாத்மா இல்லை என்ற அத்வைத நிலை தோன்றிய பின் பகவான் இரமணர் கேட்கும் இவ்வினா, கண்ணுக்கு கண்ணாய் கண் இன்றிக் காணுவது ஏக நிலைப்பட்ட ஆத்மாதான் என உணர்த்தவே ஆகும்.


                                                                            ( ஈசனால் சிந்திப்போம்)  


No comments:

Post a Comment