Wednesday, 10 December 2025

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (13) - 11.12.25 / மகாகவி பாரதி பிறந்த நாள் 

************************************************************************************************************************

பகவான் பாடல்: 12

************************

ஒருவனாம் உன்னை ஒளித்து எவர் வருவார்

உன் சூதே இது அருணாசலா


முந்தைய பாடலில் 11 ல் ஐம்புலக்கள்வராக வந்தனரே அப்போது அகத்தில் நீ இல்லையோ என்று கேள்விகேட்டார். இவ்வரிகளில் அப்படி வந்தவர்கள் வேறு யாருமல்ல, உன்னைத் தவிர இவ்வுலகில் எவர் வர முடியும் என்கிறார். அப்படி என்னை நினைக்க வைத்தது உன் சூது என்றும் சொல்கிறார். துணியில் சாயம் ஏற்றுகிறவனுக்கு பச்சை நிறம் கேட்போருக்கு பச்சை தருகிறான். சிவப்பு ஆரஞ்சு எதுவேண்டுமோ அதனைத் தோய்த்து தருகிறான். உண்மையில் சாயம் தோய்ப்பவனுக்கு இது பற்றி எந்த அபிப்ராயமும் இல்லை என்பது இராமகிருஷ்ண பரமஹம்சர் வாக்கு.

அபிராமி அந்தாதி - பாடல் 10 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்

ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து

அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே.

“அபிராமி அந்தாதி” தமது அனுபவ உரை விளக்கத்தில் அ.அறிவொளி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“சிவன் அவதாரமாக பிறப்பதில்லை. இதனால் “பிறவா யாக்கைப் பெரியோன்” என சிலப்பதிகாரம் கூறும். ஆனால் சக்தி பல அவதாரங்கள் எடுப்பதுண்டு. காமாட்சி, மீனாட்சி, பார்வதி என பல பெயர்களில் அவதாரம் ஆவதும்; அபிராமி, துர்கை,லலிதா, அங்காள பரமேஸ்வரி, காளி, மாரி என பல வடிவுகளில் சில காரணங்களால் உருவம் ஏற்பதும் உண்டு.

மீனாட்சி, பார்வதி முதலியோர் பிறந்தார்கள். மற்றவர்கள் தோன்றினர் என்க. தோன்றியவர்களுக்குப் பெற்றோர் இல்லை எனவும் அறிக. இதை அறிவிக்கவே இமயத்து அன்றும் பிறந்தவளே என்றார் . தாயின் கரு வழியாகப் பிறக்காவிட்டாலும் சிறு குழந்தையாகத் தோன்றி வளர்வதும் ஒருவகைப் பிறப்பே ஆகும்”

பிறப்பது, தோன்றுவது , கருத வைப்பது , மறைவது, பின்னர் தோன்ற வைப்பது என எல்லாம் அவள் அருள் நிலைகளே ஆதலால் “உன்னை ஒளித்து எவர் வருவார்” என பகவான் அருளியது அனைத்தும் அம்மை அப்பனே எனக் கருதியே ஆகும்.


                                                                               ( ஈசனால் தொடர்வோம்)


No comments:

Post a Comment