அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (14) - 12.12.25
*******************************************************************************************
பகவான் பாடல்: 13
*********************************
ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனையார் அறிவார் அருணாசலா.
ஓம் என்று சொல்லிச் சொல்லி உள்ளே ஒன்று புலப்படுகிறது. ஓங்காரம் எனப்து ஒவ்வொருவர் உள்ளேயும் ஒலிக்கிறது.
“உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா!” என்பது மாணிக்கவாசகர் அருளிய சிவபுராண வரி.
அதனை அறியும் தேடல் எதுவும் இல்லை. ஆனால் உனக்கு ஒப்பாகவோ உன்னைவிட உயர்வாகவோ யாரும் இல்லை என்பது என் அறிவுக்குப் புரிகிறது. அப்படிப்பட்ட உன்னை முழுதாக அறிந்தவர் எவருமில்லை அருணாசலா என்கிறார் பகவான்.
அபிராமி அந்தாதி: 46
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே
உன் விருப்பத்துகுரியவை எவை எனத் தெரிந்தும் மறதியாலும் அவசரத்தாலும் ஊழ்வினையாலும் அவற்றை நான் செய்யவில்லை. அதனால் நீ என்னை வெறுத்துவிடாதே. பொறுத்துக்கொள். அது பெரியோருக்குப் புதிதல்ல.
ஓங்காரப் பொருளே ஒப்புயர்வு இல்லாதவனே உன்னை யார் அறிவார் அருணாசலா. நான் உன்னை அறியாதவன் என்று என்னை வெறுத்துவிடாதே என வேண்டுவதே பகவான் வரிகள்.
உயிர் நண்பர்கள் “என்னைத் தப்பா நினைச்சுடாதே” என்று சொல்லிப் பிரிவார்கள். அதாவது உணர்வில் பிரிதல் என்ற ஒன்றை நிகழ்த்தினாலும் “என்னைத் தப்பாக நினைக்காதே” என்ற வேண்டுதலில் குறியாக இருப்பார்கள். ஓங்காரப் பொருளை அறியாத தவறு அது.
***
No comments:
Post a Comment