ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
மனிதர்களே.
உலகில் கண் இல்லாத மனிதர்களைப் பார்க்க முடியும். செவிகள் இல்லாத மனிதர்கள் இருப்பார்கள். மூக்கு, வாய், கைகள், கால்கள் இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயிறு இல்லாத மனிதர்கள் உலகில் இருப்பதே இல்லை.
இடும்பை ( துன்பம்) கூர் ( மிகுந்த) என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது. காலம் தள்ளுவதே கஷ்டமாயிருக்கிறது.
வயிறே உன்னிடம் என்ன கேட்டேன்? ஒரு நாள் சாப்பாட்டை ஒழி ( விட்டுவிடு) என்றேன். நீ கேட்கவில்லை. பசிக்கிறது என்கிறாய்.
சரி.
இரண்டு நாட்களுக்கு சேர்த்து உணவு ஏற்றுக்கொள் ( ஏலாய்) என்றேன். அதையும் கேட்க மறுக்கிறாய்.
ஒரு ஒரு நாளாக ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு வேளையாக உனக்கு உணவு செலுத்த வேண்டி யிருக்கிறது.
வயிறே ! ஒரு நாளும் நீ என் நோவு அறியாய். பசியினால் நான் அடையும் கஷ்டம் ( நோவு) நீ அறிந்து கொள்ளாத ஒன்று.
உணவு கொடுத்தும் திருப்தி இல்லை. உணவு கொடுக்காவிடினும் திருப்தி இல்லை. எப்படிப்பட்ட இம்சை!
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் வயிறு பற்றிய அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
No comments:
Post a Comment