Tuesday, 9 December 2025

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (12) - 10.12.25

***********************************************************************************

ரமணர் பாடல்: 11

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது

அகத்தில் நீ இல்லையோ அருணாசலா 

பகவான் இரமணர் கேட்கும் கேள்வி அவருடையது அல்ல. ஆன்ம விழிப்பு பெறாத மானுட குல விடுதலைக்கானது. அவர் அருணாசலப் பெருமானை வினவுகிறார். ஒருவரல்ல இருவரல்ல ஐந்து கள்வர்கள் என் அகத்தினில் புகுந்தனர். கொள்ளையிட்டனர். இது எவ்வாறு நிகழ முடியும்? நீ அக்கணத்தில் என் அகத்தில் இல்லாமல் போனதாக நான் எண்ணமுடியுமா? என்று கேட்பது உண்மையில் நம் மனம் விழிப்படையாமல் புலன் வழியே செல்லுதல் எனும் குற்றம் சுட்டுவதற்கே ஆகும்.

“ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 

இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளி” என்று ஒளவை அருளினார் விநாயகர் அகவலில்.

ஐம்புலன் அடங்க ஈசன் கருணை கேட்டாள் ஒளவை. 


அபிராமி அந்தாதி: பாடல்: 51 

அரணம் பொருள் என்று அருள் ஒன்றில்லாத அரக்கர் தங்கள்

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே

சரணம் சரணம் என் நின்ற நாயகி தன் அடியார்

மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே .

எது பாதுகாக்கும் அரணோ அதை நம்பாமல், எது உலகியலோ அதை நம்பிய மூன்று அரக்கர்கள் பொன் கோட்டை, வெள்ளி கோட்டை, இரும்பு கோட்டை என்ற மூன்றால் போர் புரிந்து ஈசனால் அழிந்தனர். ( வித்யுன்மாலி, தாரகாட்சன்,வாணன்) அவர்கள் ஏன் முரணாக எண்ணினர்? முரணாக எண்ணி ஏன் அழிபட வேண்டும்? மாயைதான் காரணம். 

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இல்லையோ அருணாசலா என்ற கேள்வியால் மாயைக்கு இடம் கொடுத்த மானுடம் விழிப்பு பெறவில்லை ; பாதுகாக்கும் அரணாகிய பெம்மானை (சிவனை) சரணம் என நம்பவில்லை.என்பதும் அறியலாம்.

***

                                                             ( ஈசனால் தொடர்வோம்)

No comments:

Post a Comment