Thursday, 13 August 2026

அப்பா என்றால் ஆயிரம் வானம்-அப்பா குறித்த கவிதைகள்

அப்பா என்றால் ஆயிரம் வானம்-அப்பா குறித்த கவிதைகள் - பா. சத்திய மோகன் - ஒரு பார்வை - பொன். குமார்

அப்பாக்கள் குறித்து
கவிதைகளைக் கண்டால் வாசிப்பது பழக்கம். வாசிப்பதுடன் நின்று விடாமல் அக்கவிதைகளைத் தொகுத்து ஒரு கட்டுரையாகவும் எழுதப்பட்டது. அக்கட்டுரையின் தலைப்பு அப்பா என்பது வெறும் சொல் அல்ல. இக்கட்டுரையின் ஒரு பிரதியை எழுத்தாளர் பா. சத்திய மோகன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அக்கட்டுரையை வாசித்த எழுத்தாளர் பா. சத்தியமோகன்
கடிதம் மூலம் தன் கருத்தைத் தெரிவித்தார். அக்கடிதம்..
பா. சத்தியமோகன் 26.12. 2014
அன்பு குமார் அவர்களுக்கு..
'அப்பா என்பது வெறும் சொல் அல்ல விமர்சனத்தில் நன்றாக செய்திருக்கிறீர். நல்ல முயற்சி.
'அடிக்கடி அறிவுரைப்பதே
அப்பா வழக்கம்
என்ற வரி அழகு.
சிரத்தையுடன் அனுப்பியமைக்கு அன்பும் நன்றியும்.
அன்பன்
பா. சத்தியமோகன்
எழுத்தாளர் பா. சத்திய மோகன் தன் அப்பா இறப்பிற்குப் பின் முகநூலில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதன் தலைப்பு அப்பா என்றொரு சூரியன். இதுவொரு நீண்ட கவிதை.
சு.பார்த்தசாரதி
தோற்றம் 15.5. 1931
மறைவு 30.10. 2015 என எழுதாதீர்
அப்பா இனிமேல்தான் வாழப்போகிறார்
என்று தொடங்குகிறது.
திருச்சி ஓயாமாரி இடுகாட்டில் உன் தாய்க்கு
என்னை பட்டினத்தார் தாய்ப்பாடல் பாடச்சொன்னாய்
உனக்கு
மிக மிக அண்மையாய்
நீ
முணுமுணுக்கும் பாட்டை
இடுகாட்டின் கணங்களில்
நீயே ஒலிபரப்பிக் கொண்டதுபோல்
என்னே அதிசயம்
வெட்டியானின் செல் வழியே
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
சீர்காழி குரல் கேட்டாய்
நான் உடனே
வெட்டியான் செல் எண் வாங்கி
என் போனில் அழைத்து
மீண்டும் அப்பாடலை
அப்பா உன்னை
மீண்டும் கேட்பிக்கச் செய்தேன்
நெடு விழிகள் கரைந்து ஒழுக
இடுகாட்டுச்செடிகள் நனைய வட்ட நீர்ப் பானை உடைந்து
நவம் நவமாய் தந்த அப்பா
கணம் கணமாய் கலைந்து போனார்
பிரபஞ்சமானார்
என முடிகிறது. இக்கவிதை குறித்து நெடுக அப்பாவை நினைவுக் கூர்ந்துள்ளார், அப்பா மீதான தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்,அப்பாவின் பண்புகளைக் கூறியுள்ளார். அப்பா ஓர் இசைப்ரியர் என்பதையும் காட்டியுள்ளார், அப்பாவிற்கு இறப்பில்லை இனிமேல்தான் வாழப்போகிறார் என்கிறார் என்று கருத்து எழுதியிருந்தேன். இதனுடன் அப்பா என்பது வெறும் சொல் அல்ல என்னும் கட்டுரையை விரிவாக்கி ஒரு தொகுப்பாக கொண்டுவர முடிவு செய்து ஒரு பதிப்பகம் மூலம் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் நிறைவேறவில்லை.
எழுத்தாளர் பா. சத்திய மோகன் மேற்படி கவிதையையும் இணைத்து அப்பாக்கள் குறித்த கவிதைகள் அடங்கிய தொகுப்பாக அப்பா என்றால் ஆயிரம் வானம் என்னும் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார்.
அன்றும் இன்றும் அப்பாக்கள் கைவசம் இருப்பதெல்லாம்
அடிகளும் கிள்ளும் உணர்ச்சியும்தான் போல
என்று அப்பாக்கள் கைவசம் இருப்பவை கவிதையில் எழுதியுள்ளார். அடிகளும் கிள்ளுகளும் என்பது அப்பாக்கள் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அக்கறையும் பாசமுமாகும். பிள்ளைகள் நன்றாக வளர வேண்டுமென்றே அப்பாக்கள் அடிப்பார்கள். கிள்ளுவார்கள். அதன் மறுபுறத்தையும் பார்க்க வேண்டும்.
சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்த உறவினர் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதை நினைவு கூர்ந்து கவிதையின் இறுதியில்
சென்னை மட்டும் இருக்கிறது
அப்பாதான் இல்லை
என்று வருத்தப்படுகிறார். அப்பா இதிலும் போதி மரம் என்கிறார். அப்பாக்களின் அறிவுரையில் எப்போதுமே நன்மை இருக்கும். பிள்ளைகளுக்கு நல்லதையே அப்பாக்கள் அறிவுரைப்பார்கள்.
அப்பாக்களுக்கு எப்போதுமே ஒரு பழக்கம் இருக்கும். எதை வாங்கினாலும் ஒரே கடையிலேயே வாங்குவர். ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடையில் வாங்குவர்.
பழகிய கடை என்றால்
மாசக் கடைசி கடன் சொல்ல வசதியென்று
அதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறியுள்ளார். அப்பாக்கள் பொருளாதார ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அடகு வைத்த அம்மாவின் நகையை மீட்க முடியாமல் சிதம்பரம் காசு கடை தெருவில் அலைந்ததையும் தெரிவித்துள்ளார்.
அப்பாக்களுக்கு இரத்தல் பிடிக்காது. இரப்பவர்களைக் கண்டாலும் அப்பாக்கள் விரட்டிடுவர். அதனால் அப்பா ஒரு தமிழ் ஆசிரியர் மட்டுமல்ல அப்பா உழைப்பின் ஆசிரியர் என்றும் போற்றியுள்ளார். உழைப்பவர்களைக் கண்டாலே பிடிக்கும் என்பதாலும் உழைப்பதே உயர்ந்த பண்பு என்பதாலும்
உழை உழை என்றார் அப்பா
என்கிறார்.
அப்பா எப்போது எதை செய்ய வேண்டுமென இலட்சியத்துடன் இருந்தார். அதன்படியே செய்தார். அப்படியே வாழ்ந்து காட்டினார். அப்பாவின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்கிறார்.
அப்பா நீங்கள் பிள்ளைகளுக்கு இறந்த புத்தகம் அல்ல
திறந்த புத்தகம்
என அப்பா ஓர் திறந்த புத்தகம் கவிதையில் அப்பாவை எடுத்துக் காட்டியுள்ளார்.
பிள்ளைகளை மெச்சுவதில் அப்பாவிற்கு இணை எவருமில்லை. கவிஞர் பா. சத்திய மோகன் கவிதையை இயக்குநர் பாலச்சந்தர் பயன்படுத்தியதற்காக கவிஞரின் அப்பா ஊர் ஊராக மகிழ்ந்ததாக அப்பாவுடன் ஓடிய நாக்கு கவிதையில் தெரிவித்துள்ளார். பிள்ளையை மெச்சிய அப்பாவை மெச்சியுள்ளார்.
அன்புள்ள மகனே
ஊரப்பாக்கத்தில்
அப்பா நான் இறந்துவிட்டேன் 30.9.2015-ல்
இனி கடிதம் வராதுநீ எழுதிக்கொண்டிரு
என்னும் அப்பாவின் கடைசிக் கடிதம் நெகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி கடிதம் எழுதும் அப்பா இறந்து விட்டதால் அப்பா எழுதியதாக கவிஞரே ஒரு கடிதம் எழுதிக் கொள்கிறார். இனி அப்பாவிடம் இருந்து கடிதம் வராது என்பதால் அப்பா போல் ஒரு கடிதம் எழுதி தனக்குத்தானே ஆறுதல் கொள்கிறார். கடித மனசுவும் கவிஞர் மனசுவைக் காட்டியது.
அப்பாவும் நானும் கவிதையில் அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் உள்ள முரண்பாட்டை பேசியுள்ளார். இருவரின் செயல்பாடு வேறு என்றாலும் இலக்கு ஒன்றாகவே இருந்துள்ளது என்கிறார். கழிவு நீர் பாய்ச்சினாலும் சுத்த நீர் பாய்ச்சினாலும் செடிகள் பூப்பூக்கவே செய்யும் என்கிறார்.
அப்பா இறந்த தேதி செப்டம்பர் முப்பது. இறந்த தேதி அன்று மட்டும் சிலர் அப்பாவை நினைப்பர். ஒரு கடமையாகவே காரியம் செய்வர். ஆனால் கவிஞருக்கு இறந்த நாளில் மட்டுமல்ல எல்லா நாள்களிலுமே அப்பாவின் நினைவு வருகிறது என்கிறார். கவிஞர் எப்போதும் அப்பா நினைவாகவே இருந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.
அப்பாவைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்றொரு கவிதையில் அப்பாவிற்கு வயதாக வயதாக அப்பாவைப் பற்றி ஒவ்வொரு வயதிலும் என்ன நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார். அறிவாளியாக ஆரம்பத்தில் தெரிந்த அப்பா காலம் கடக்க கடக்க அறிவில்லாதவராகவும் தெரிகிறார் என்கிறார். பிள்ளைகளுக்கு வயதாக வயதாக அப்பாக்களின் பேச்சு எடுபடாது. கவிதையின் இறுதியில்
நமக்கு ஐம்பத்து ஐந்து வயது
அப்போ இப்போது போட்டோவில் மட்டுமே
என்றெழுதி இதயத்தை கனக்கச் செய்துள்ளார். வயதாக வயதாக அப்பாக்கள் மரணமடைந்து விடுகிறார்கள் என்னும் வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார்.
தூங்குவதற்குப் பாடல் சொல்லும் போது
அப்பாவின் வடிவம் அம்மா
காலை எழுப்பும் போது
அப்பாவின் வடிவம் சூரியன்
சாப்பாடு ஊட்டும் போது
அப்பா வடிவம் அன்பு
பள்ளி சென்று விட்டு வரும் போது
அப்பா வடிவம் எதிர்பார்ப்பு
தலை துவட்டித் துண்டால் வீசும் போது
அப்பா வடிவம் அக்கறை
திகுதிகுவென வடலூர் இடுகாட்டில் தீயாய் நீ
நின்று எரிந்தபோது
அப்பா உன் வடிவம் இந்த உலகு
என அப்பா வடிவம் என்னும் கவிதையில் அப்பாவின் பல வடிவங்களைக் காட்டியுள்ளார். ஒவ்வொரு முறை பணிவிடைச் செய்யும் போதும் அப்பாவின் வடிவம் அன்பின் வடிவமாக அக்கறையின் வடிவமாக உள்ளது. இடுகாட்டில் தீயாய் எரியும் போது உலகின் வடிவமாகவே அப்பா தெரிகிறார் என்கிறார். அப்பாவே உலகம் என்கிறார்.
இன்றைய பிள்ளைகள் நாளைய அப்பாக்கள். அப்பாக்களுடன் வளரும் பிள்ளைகள் வளர வளர, வயதாக வயதாக அப்பாக்களாகி விடுகின்றனர். பிள்ளைகள் முழு அப்பாக்களாகும் போது அப்பாக்கள் இருப்பதில்லை.
முழுதும் அப்பாவாகவே நான் ஆகிவிட்டால்
அப்பாவை எப்படிப் பார்க்க முடியும் எதிரே?
என அப்பாவை பார்க்கும் ஆசையில் எழுதியுள்ளார். அப்பாக்கள் இல்லாத போதே பிள்ளைகள் முழு அப்பாக்கள் ஆகிறார்கள் என்பதும் உண்மை.
அப்பா விட்டுச் சென்றவை ஆயிரம் இருக்கலாம். விட்டுச் சென்றவையில் அப்பாவிற்கு பிடித்தமானது அனேகம் இருக்கலாம். எனினும் கவிஞர் பா. சத்திய மோகன் அப்பா விட்டுச் சென்றவை கவிதையில்
வாழ்நாளைக் கரைத்துக் கொடுத்து
உரமேற்றி எம்மை மரம்போல்
செழிக்க வைத்து
உரம் போல் உருவின்றிக் கரைந்த
அப்பா
என்னை விட்டுச் சென்றாரே
என்று எழுதி தன்னை விட்டுச் சென்றாரே என்கிறார். அப்பா விட்டுச் சென்றவையில் உயிருள்ளவர் கவிஞர். மற்றவை அஃறிணைகள். உயர்திணை என்பதால் அப்பாவை உயர்த்தி பேசியுள்ளார்.
அப்பா உனக்கு ஆயிரம் வார்த்தைகள் என்றொரு கவிதையில் அதிகமான வார்த்தைகள் கொண்ட ஒரு நீள் கவிதை. அப்பாவிற்காக எழுதியுள்ளார். ஆனால்
நானேதான் நீ ஆயிடு
என்னும் அப்பா கூறும் மூன்று வார்த்தைகளே போதும் என்கிறார். அப்பாவாக ஆகச் சொல்கிறது கவிதை.
எல்லோரும் கடைசியில் ஒரு நாள் இறக்க வேண்டியதுதான்
ஆனால்
அப்பா இறப்பை மருத்துவம் சொன்னாலும் சத்தியமாய் நம்பேன்
என அப்பா என்றொரு சூரியன் தலைப்பில் எழுதிய செய்கிற மாதிரி அப்பா இறந்ததாக மருத்துவம் சொன்னாலும் மனம் ஏற்காது என்கிறார். வானத்திரல் சூரியன் இருப்பது போல அப்பாவும் இருப்பார் என்று நம்புகிறார். நம்பச் செய்கிறார்.
மின்சாதனங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்காகவே எர்த் ஒயர் (
வழங்கப்படுகிறது. மின் கசிவு ஏற்படும் போது அதிகப்படியான மின்சாரத்தை பூமிக்குள் செலுத்தி மின்சார அதிர்ச்சி மற்றும் தீ விபத்துகளில் இருந்து இது மக்களைப் பாதுகாக்கிறது. அப்பாக்களும் earth wire ஆக இருந்து பிள்ளைகளைக் காக்கிறார்கள் என்று வருவிக்க உற்ற அப்பா கவிதையில் எழுதியுள்ளார்.
ஓ எல்லா அப்பாவும் அப்படி ஓர் எர்த் ஒயர் தான்
எம்மைத் தனியே விடினும்
எர்த்துக்குத் திரும்பும்
இரகசிய எர்த் அவர்
அன்பு கசியும் சிதம்பர இரகசியம் அவர்
என அப்பா இரகசியமாக இருந்து எப்போதும் பாதுகாப்பவர் என்று தெரிவித்துள்ளார்.
அப்பாக்கள் எழுதிய கவிதைகள் பிள்ளைகள். பிள்ளைகள் வாசிக்க வேண்டிய காவியங்கள் அப்பாக்கள். கவிஞர் பா. சத்தியமோகனோ
என் அப்பாவே ஓயாமல் எழுதியும் குறிப்பெடுத்தும் வைப்பாயே
உலகில் நீ எழுதிய சிறுகுறிப்பன்றோ நானும்
என தன்னை அப்பா எழுதிய சிறு குறிப்பு என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். சிறு குறிப்பு அல்ல சிறந்த குறிப்பு கவிஞர். அப்பாவின் அறுவடை என இன்னொரு கவிதையில் தெரிவித்துள்ளார்.
அப்பா பார்த்தசாரதியின் இறப்பு கவிஞரான மகன் பா. சத்திய மோகனை அதிகமாகவும் அழுத்தமாகவும் பாதித்துள்ளது. அதன் விளைவாகவே கவிதைகளை எழுதி துக்கத்தை வெளிப்படுத்துகிறார். அப்பா இப்போதான் போகிறார் என்னும் கவிதையில்
அப்பா இப்போது அப்பா இல்லை
அப்பா இப்போ மெல்லிசாக
இதோ இந்த கவிதையைத் தந்து விட்டு
போய்க்கொண்டிருக்கிறார்
என ஒரு கவிதையை எழுதியுள்ளார். அப்பா ஒரு கவிதையை தந்துவிட்டு போய்க் கொண்டிருக்கிறார் என்கிறார். அப்பா ஒரு கவிதையை அல்ல ஒரு தொகுப்பையே தரச் செய்துள்ளார். அப்பா எங்கும் போகவில்லை. கவிதைகளில் கவிதைகளாகவே இருந்து கொண்டிருக்கிறார்.
மாணிக்கவாசகர் சிவபெருமானின் தீவிர பக்தராகவும் சமயக் குரவர் நால்வரில் ஒருவராகவும் அறியப்படும் தமிழ் முனிவர் ஆவார். இவர் சிவபெருமானை நேரில் கண்டு திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றினார். இவரது பக்திக்கு மெச்சிய சிவபெருமானே நேரில் வந்து திருவாசகத்தை தன் திருக்கரங்களால் எழுதியதாக வரலாறு கூறுகிறது. மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான உறவானது குரு-சீடன், அடியன்-இறைவன் மற்றும் ஆத்மார்த்தமான பக்தி என்ற பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டது. இவர் சிவபெருமானின் திருவடிகளை தன் தலைமீது ஏற்று அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற ஆன்மீக நிலையை அடைந்தவர் ஆவார். சிவனை மாணிக்கவாசகர் அப்பாவாகவே ஏற்றுக் கொண்டார். இதனால் கவிஞர் பா. சத்தியமோகன்
மாணிக்கவாசகருக்கு அப்பா சிவன்
அவரவர்க்கு
அவரவர் அப்பா சிவன்
என்று அப்பா அன்புச் சிவன் கவிதையில் எழுதியுள்ளார். அவரவர்க்கு அவரவர் அப்பா சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. சிவனே ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியபணிகளின் கர்த்தா ஆவார்.
அப்பா ஞாபகம் எப்போதும் இருந்தாலும் மகன்கள் அப்பாக்கள் ஆகும்போது அப்பா ஞாபகம் நிச்சயம் வரும். அப்பா ஞாபகம் கவிதையில்
நீர்பாட்டில், பேரீச்சை தந்து அன்பு விடை பெற்றேன்
காரின் பக்கவாட்டு சன்னல் வழியே
கைகுலுக்க
மகன் கைகள் தொட்டு
பிரியாமல் பிரிந்து
பார்க்காமல் பார்த்தபோது
அன்று என் கைகள் தொட்டு
அனுப்பிப் பிரிந்த அப்பா ஞாபகம் சில்லிடுகிறது
என்று எழுதி மகனை வழியனுப்பும் போது அப்பா ஞாபகம் சில்லிடுகிறது என்று அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். மகன்கள் அப்பாக்களாகும் தருணத்திலேயே மகன்களுக்கு அப்பாக்களின் ஞாபகம் வரும் என்பது உண்மை.
தபால் எழுதினால் அதற்கு முகவரி எழுதுவாரா
தூங்கும் போது நெற்றியில் சிறு முத்தம் தருவாரா
என்றெல்லாம் எழுதி அப்பா இல்லை பட்டியலில் என்னும் கவிதையின் இறுதியில்
இப்படி இல்லாவிடினும்
அப்பா மீண்டு(ம்) வருவாரா
என ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. எதிர்பார்த்தபடியெல்லாம் இல்லாவிடினும் அப்பா மீண்டும் வந்தால் போதும் என்று எண்ணுகிறார். எதிர்பார்க்கிறார். அப்பா கவிஞரிடம் பழகிய விதம், காட்டிய அன்பு அவரை அவ்வாறு எதிர்பார்க்கச் செய்கிறது.
மகன்களுக்கு அப்பாவின் கண்ணாடி ஆரம்பத்தில் பிடிக்காது. கண்ணாடி என்றால் பார்வை. அப்பாக்களின் பார்வை பிள்ளைகளின் பார்வையில் தவறாகவே இருக்கும். ஆனால் காலப்போக்கில் மகன்கள் அப்பாக்களின் கண்ணாடியையே அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் மகனுக்கும் அப்பாவின் பார்வை வந்துவிடுகிறது.
.
இப்போது கழற்றமுடியாத அப்பாவின் கண்ணாடியின்
பிரதி ஒன்றை
என் முகம் தரித்தது கண்டு
அப்பட்டமாகத் திகைக்கிறான் மகன்
அது எவ்வாறு எப்போது என் முகத்தில் ஏறியது
என்ற தகவலற்று
றுகிறது
அக்கண்ணாடி வழியே ஏகுமென் காலவழி
என அப்பா கழற்றாத கண்ணாடியில் தெரிவித்துள்ளார். அப்பாவின் கண்ணாடியே காலப்போக்கில் தனக்கு சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அப்பா என்றே அழைப்பேன்
அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது
30.9.2016ல்
உணவை விடவும் பேசுவதே இன்பம் அவருக்கு
சிறு குழந்தைகளிடம் கூட நட்புடன் இருப்பார்
வாய் சதா சொற்களோடு விளையாடும்
உலகத்து உயிர்கள் மீது அன்பு அதிகம்
அவர் தூங்கும் நேரம் குறைவு
எழுதிக் கொண்டே இருப்பார்
உடற்பயிற்சி செய்வார்
ஆசிரியர் பணியில் இருந்தவர்
அவர் இப்போதும் பேசுவது போலவே
உள்ளார் புகைப்படத்தில்
அவர் பேசிய அக்கறை வார்த்தைகள்
காற்றில் அன்புடன் கலந்திருக்கிறது
ஆம்
சற்று உன்னித்து கேட்டால்
அவர் பேச்சு கேட்கிறது
பதில்கள் அற்று கண்ணீரோடு நான்
பிறவா மகளாக
என்பது தொகுப்பின் நிறைவுக் கவிதை. நெஞ்சில் நிறைந்த கவிதை. கவிதையின் தலைப்பு மாமனார் என்ற மனிதர். எழுதியவர் லாவாண்யா சத்தியமோகன். கவிஞர் பா. சத்திய மோகனின் மனைவி. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் போது கவிஞர் மனைவி பாடுவதில் என்ன வியப்பு. மாமனாரை அப்பாவாக வியந்து எழுதியதே வியப்பு. மாமனார் என்பதை விட மனிதர் என்றே போற்றியுள்ளார்.
பா. சத்திய மோகன் ஒரு கவிஞர் என்பதை விட ஓர் எழுத்தாளருமாவார். கவிதைகள், கதைகள் உள்பட பல படைப்புகளைத் தந்தவர். பா. சத்திய மோகனுக்கு எழுத்து இயல்பாகவே கைகூடி வரும். அப்பாவைப் பற்றி எழுதும் போது பா. சத்திய மோகனின் எழுத்து இன்னும் அதிகமான கவித்துவத்துடன் வெளிப்பட்டுள்ளது. அப்பாவின் இறப்பு கவிஞரை எந்தளவிற்கு பாதித்துள்ளது என்பதைக் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அப்பாவின் அன்பை, அப்பாவின் பாசத்தை, அப்பாவின் அக்கறையை, அப்பாவின் ஆளுமையை, அப்பாவின் செயலை என அப்பாவிடம் கண்டு வியந்ததை எல்லாம் கவிதைகளாக்கித் தந்துள்ளார். கவிஞர் பா. சத்திய மோகனின் அப்பாவைப் பற்றிய கவிதைகளை வாசிக்கும் போது அவரவர் அப்பாவை பொருத்திப் பார்க்கச் செய்கின்றன. அப்பாக்கள் உண்மையிலேயே ஆச்சரியத்திற்குரியவர்கள். அப்பாக்களின் அன்பு ஆழமானது. அழுத்தமானது. வெளியில் தெரியாது. வெளிக்காட்டவும் தெரியாது. வெளிக்காட்டவும் மாட்டார்கள். கவிஞர் பா. சத்தியமோகனின் கவிதைகள் மூலம் அதைக் கண்டு உணர்த்தியுள்ளார். அப்பா எழுதிய ஒரு சிறு குறிப்பு நான் என கவிஞர் ஒரு கவிதையில் எழுதியுள்ளார். ஆனால் கவிஞர் அப்பா குறித்து எழுதிய ஒரு சிறுகாவியமே அப்பா என்றால் ஆயிரம் வானம் என்னுமித் தொகுப்பு. ஆயிரம் வானம் என்பது ஒரு பாயிரம் மட்டுமே. இன்னும் அப்பாவைப் பற்றி எழுதுவார். வானத்திலிருந்து அப்பா பார்த்த சாரதி கவிஞர் பா. சத்திய மோகனை வாழ்த்திக்கொண்டே இருப்பார். ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பார். நாமும் வாழ்த்துவோம்.
அப்பா என்றால் ஆயிரம் வானம்
அப்பா என்றால் ஆயிரம் அம்மா.
வெளியீடு
Pustaka 7418555884
கவிஞர் பா. சத்திய மோகன் 9698009614
பொன். குமார் 9003344742






No comments:

Post a Comment