நீரின்றி அமையாது உலகு
*********************************
அன்றிலிருந்து இந்த வினாடி வரைக்கும் நீரின் அருமை உணர வைக்க நம் முன்னோர் பாடுபட்டனர். கரிகால் சோழன் காவிரி ஆற்று நீர் தேக்கியதால் பாசனப் பரப்பு அதிகமானது. விளை நிலங்கள் நெல்மூட்டைகள் குவியல் குவியலாக விளைந்தன. அறுவடையாகி விளைந்த நெல் கட்டுகளில் இருந்து நெல் மணிகளை உதிர்க்க மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போரடித்த சோழ நாடு என்று தமிழகத்தின் பெருமை பகன்ற காலம் ஒன்று இருந்தது.
சொட்டு நீர்ப்பாசனம் என்று நீர்ச் சிக்கனம் போதிக்கும் காலமும் வந்தது. குடிநீர் பாட்டில்களில் தஞ்சம் புகுந்தது. காய்ந்த ஏரி, குளங்களில் வீடுகள் நிரம்பியதால், மழைக்காலத்தில் வெள்ளகாலத்தில் வீடுகள் மிதக்க ஆரம்பிக்கின்றன.
Water management துறையைச் சார்ந்த ஒன்றுதான், வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்புத் தொட்டி வைத்தல் திட்டம்.
விவசாயம் சார்ந்த படிப்புகளை , கால் நடை குறித்த கல்வியினை அலட்சியம் செய்கிறோம். தொடர்ந்து அலட்சியம் செய்துவிட்டு, நம் இளைய தலைமுறை வெறும் காற்றில் இட்லி சுட்டு உண்ணப் போகிறதா? தானியங்கள் விளைவதில் அக்கறை ஒவ்வொரு மனிதனின் மறைமுகப் பொறுப்பல்லவா? எல்லோருமே பொறியியல் படிப்பு படித்தாலும் படிக்கும்போது ஏற்படும் பசிக்கு விவசாயம் வேண்டும். உற்பத்தி வேண்டும்.ஒரு ஐந்து வருடங்களுக்கு பொறியியல் படிப்பை நிறுத்தி,விவசாய விஞ்ஞானம் பெருக்குவோம்.
புங்க மரம் ஆக்ஸிஜன் சேகரம் அதிகம் செய்யும். பல் வேறுபட்ட நிறைய விதைகளை ஒரே உருண்டையாகப் பிசைந்து பேருந்தின் ஜன்னல் வழியாக வீசிக்கொண்டே வரும் நண்பர்களை நான் அறிவேன்.
அந்த விதைகள் எங்கோ விழுந்து எவ்வாறேனும் முளைக்கும் என ஏங்கும் விதைப்பாளர்களுக்காக -
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று எழுதிய அவ்வையார் தமிழுக்காக -
இந்த தமிழ் நிலத்தை ரசாயன மாசு படாத குடிநீர் வேண்டும் என்று பாடுபடும் இயற்கை ஆர்வலர்களுக்காக -
அறம் செய்ய விரும்பும் பனை மரங்களின் வேரிலிருந்து வானிலிருந்து பொழிந்துகொண்டிருக்கிறது மழை.
மழை பொழிக. மழை புராணம் பெருகுக. மனமெலாம் நனைக.
No comments:
Post a Comment