முல்லா கதைகள்:12
*********************
ஆபத்தும் பிரார்த்தனையும்
********************
ஒரு சமயம் முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கப்பல் திசை தவறி எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. கப்பலில் உள்ள எல்லோரும் உணவும் நீரும் தீர்ந்து விட்டதால் பசியாலும் தாகத்தாலும் இறக்கும் நிலையை அடைந்தனர்.
கப்பலில் உள்ள பிரயாணிகளெல்லோரும் முழந்தாளிட்டு இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டனர். கப்பலை ஏதேனும் ஒரு நாட்டில் சேர்த்துத் தங்கள் உயிரைக் காப்பாற்றினால் தாங்கள் செலுத்தும் காணிக்கைகளையும் செய்யப் போகும் தரும செயல்களையும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பயம் அதிகரிக்க அதிகரிக்க பட்டியலும் நீண்டுக் கொண்டே போனது.
ஒரு பிரயாணி “என் சொத்து எல்லாவற்றையும் ஏழைகளுக்கே தந்து விடுகிறேன்” என்றும் சொன்னார்.
உடனே முல்லா அவர்களைப் பார்த்து “பிரயாணிகளே! சுயபுத்தியுடன் பிரார்த்தனைகளைச் செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் உயிர் பிழைக்கவே மாட்டோம் என்ற நம்பிக்கையில்தான் நிறைய தான தருமங்கள் செய்வதாகக் கூறுகிறீர்கள். அதோ கிழக்குத் திக்கில் ஒரு தீவு தெரிகிறது” என்று சொன்னார்.
அவ்வளவு தான்! தாங்கள் செய்யப் போகும் பிரார்த்தனைகளைப் பற்றி கூறிய பிரயாணிகள் எல்லோரும் தங்கள் வாயை மூடிக் கொண்டனர்.
***
No comments:
Post a Comment