Monday, 28 September 2026

ரோபாட் காலமா? கைத்துணிகளின் காலமா?

 ரோபாட் காலமா? கைத்துணிகளின் காலமா?  


மேற்காசியப் போரினால் ஈரானை வீழ்த்தத் துடிக்கும் போரினால், அமைதிப் பூங்காவான இந்தியாவின் வளர்ச்சிக்கு சமையல் எரிவாயு உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் நமது சமையல் கட்டு வரைக்கும் வந்துள்ளது. 

அது கூட பரவாயில்லை. 

“இன்னும் பத்தாண்டுகளில் மனிதனை ரோபாட்டுகள் வென்றுவிடும்” என்கிறார் எலான் மாஸ்க். அவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். இது தவிர சீனாவும் ரோபோட்டுகளை போர்ச் சூழலில் மட்டுமல்ல சாப்பாடு விநியோகமான ஸ்விக்கி ஆட்கள் சேவையிலும் பயன் படுத்த முயற்சி செய்கிறது.

நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  இளைஞர்களுக்கு  ஏ.ஐ. தொழில்நுட்பமே எதிர்காலம் எனும் பேச்சில் நாம் கவனம் கொள்ளும் போது, சாமான்ய மக்கள் மிரண்டுபோய் யோசிக்கிறார்கள்.

தள்ளுவண்டியில் சட்டை புடவைகளை இஸ்திரி போடுபவர் ஒரு ரோபோவுடன் போட்டி போட்டு சலவை செய்யும் பலம் உள்ளவரா? காய்கறி விற்பவர்? கிடையவே கிடையாது.

மக்கள் தொகை பெருகியதால் சமூகத்தின் பல தட்டுகளில் ரோபோவை நுழைக்க முற்படும் விஞ்ஞான அவசரம் வந்துவிட்டது. ஏற்கெனவே வாஷிங் மெஷின் வந்தபின்பு கையால் துவைப்பதை மறந்து, கைத்துணிகளின் காலத்தைத் தவறவிட்டோம்.

செல்போன் வந்தபின்பு பத்து எண்களை நினைவு ஆற்றல் கொள்வதையும் தவறவிட்டவர்கள்தானே நாம்? 

கவிதை உணர்வுகளிலும் ரோபோட்டுகள் நுழைய வாய்ப்பு உள்ளது. ஒன்றுமட்டும் உறுதி. எந்த ஒரு காலத்திலும் ரோபோட்டுகளை விட மனித அறிவே மேம்பட்டுத் திகழும். முழுக்க முழுக்க ஒரு ரோபோட்டினால் ஒரு செல்போனால் நமது எல்லாக் காரியத்தையும் கவனிக்க முடியும் என்ற நிலைக்கு வந்தோம் என்றால் நமது அழிவு அந்த வினாடியே ஆரம்பம் என்று பொருள்.

ஏன்? முழுக்க முழுக்க விஞ்ஞான ரோபோக்கள் கட்டுப்பாடு ஏற்பட்டால், மனிதாபிமானம் கேள்விக்குறியாகும் என்றார் மகாத்மா.

ஆம்.மனிதாபிமானமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம். 

நமது மனித சமூகத்தின் பதில் என்னவாக இருக்கப் போகிறது?

வெல்லப் போவது கைத்துணிகளின் காலமா?  ரோபோட்டுகளின் காலமா?

அனைவருக்கும் சிந்தனாசக்தி ஏற்பட்டு ஞானம் ஏற்பட அன்னை லலிதாம்பிகை அருள் செய்க. விஞ்ஞானத்தை மனசாட்சியும் அன்பும் கட்டுக்குள் வைக்கட்டும்.


அன்பிலே வாழ்த்திலே

பா.சத்தியமோகன்


No comments:

Post a Comment