Saturday, 25 July 2026

தொலையாவழி - 1

 நமது சொல்குற்றம் x தொலையாவழி

*********************************************

நண்பர்களே. நாம் பயணிக்கிறோம் இவ்வுலகில். சிலர் தவறுகளைப்பார்த்து நாம் அவர்கள் முதுகு பின்னே சிரிக்கிறோம். அது எளிதாக இருக்கிறது.

ரத்தத்துளிகள் தேனாக நினைத்துக்கொண்டு முட்களை மென்று தின்னும் ஒட்டகம் போல மேலும் மேலும் பலர் தவறுகள் செய்கின்றார்கள். அவர்களையும் நாம் பார்க்கிறோம்.

சிலர் முதுகில் வாழ்வில் அவர்கள் பட்ட அடிகள் விளாறல் விளாறலாக பதிந்து இருப்பதைக்காட்டுகின்றார்கள். ஏளனம் செய்வதை இழிவு படுத்தப்படுவதை விருது போல ஏற்றுக்கொண்டு முன்னேறுபவர்கள் இருக்கிறார்கள். அதனை வித்தை என்று நாம் சொல்ல வேண்டாம். பழிக்க வேண்டாம்.

ஏன் இவ்வாறு எழுதுகிறேன்? ஒவ்வொருவரையும் தொலையாவழி என்ற ஒன்று அழைக்கப் போகிறது. வழி என்பதற்கு அர்த்தம் தெரியும். வழி என்றால் பாதை, பாதை என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையும். ஆனால் இந்த வழி அப்படி அல்ல. நடக்க நடக்க நடக்க விரிந்துகொண்டே இருக்கப் போகிறது. 

தொலைதூரம் நீநீநீ..ண்ட இவ்வழியில் நாம் பயணம் செய்தே தீர வேண்டும் என்பதே இயற்கையின் கட்டளை. எண்ணம் சொல் செயல்களால் நாம் மாசில்லாமல் வாழ்ந்தால் அதன் கடன்களை அடைத்துவிட்டால் நமக்கு பிறப்பு இருக்கப் போவதில்லை. பிறப்பு இல்லாமல் போவதால் இறப்பு என்ற தொலையாவழியும் நமக்கு நேரப் போவதில்லை. 

பிறரை இழிவாக நினைப்பது குற்றம். தவறு. யாருக்கும் தெரியாமல் நினைத்தாலும் தொலையா வழி அதனை கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது.

எது எப்படியோ.

ஒன்று நிச்சயம். தருமம் என்ற அரூபத்தின் கண்களால் உலக மனிதர்கள் எப்போதும் எக்கணமும் கவனிக்கப் படுகிறார்கள். தருமம் செய்யாதவர்கள் தொலையாவழிக்கு விரைந்து அனுப்பப் படுகிறார்கள்.


இல்லாதவர்களுக்கும் பசியால் வாடுவோருக்கும் வறியவர்க்கும் நம்மால் இயன்ற சிறிய அளவேனும் பசி போக்குவது  நம்மால் இயலும்தானே. ஏழைக்கு இரண்டு இட்லி பார்சல் வாங்கித் தருவதாகவும் அது அமையலாம். அதைச் செய்யலாமே.  அதுதான் பாதை. ஏனோ நாம் பயணம் துவங்குவதேயில்லை.

*** 


No comments:

Post a Comment