Friday, 14 October 2016

பாடகி ஜானகியாரிடம் வேண்டல்
சில மாதம் முன்பு வந்த அறிவிப்பு என்றாலும்
ஏங்குகின்றேன் உள் மனத்தே சரஸ்வதி பூஜை தினத்தில்
கவிதைக் குரல் ஜானகி பெண்ணரசி
பாடுவதை விட்டு விலகி ஓய்வெடுக்கப் போவதாக
அறிவிப்பை எண்ணி கலங்குறும் உள் மனது
பக்திப் பாடல் நதிகளில் காவியம் படைத்த குரல்
சிறு குழந்தை குரலிலும் பாடிய ஜானகி
பின்னணிப் பாடகி அன்று முன் அணிப் பாடகி
வயது முதிர்வோ  தளர்வோ சலிப்போ
விருப்ப ஓய்வோ பாரத ரத்னா திருப்பி அளித்த
எண்ணக் குமுறலோ
எதுவாயினும் சரியம்மா
எமக்காக மீண்டும் பாடுக
எதுவாயினும் உமது குரலால் அஃது சங்கீதமாகும்.
எமக்கு அமுதம் வேண்டும் அம்மா.

Friday, 7 October 2016

நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்களின் புதிய அவதாரம்

ஓம்

“இலக்கியம் பேசும் இலக்கியம்” நூல்
(வள்ளலார் பதிப்பகம்,எண்:2,சேதுராம பிளை காலனி, திருச்சி-20
அலை:- 9443188894)
          அன்று என் ஐந்து வயது  முதல் இன்று எனக்கு 53 வரை  - எந்த  இரத்த சம்பந்த உறவுமில்லாமல் - என்னால் “சத்திமாமா” என அழைக்கப்படுபவர் பேராசிரியர் சத்தியசீலன் ஐயா அவர்கள். அவரது இலக்கிய வித்தகமோ ஆளுமையோ முழுதும் அறிந்துகொண்டு அவரைப் பின் தொடர்ந்தவன் அல்லன் நான் . பிறகு ?
           சு.பார்த்தசாரதி என்ற அன்பு வடிவம் சத்தியசீலன் எனும் அன்பு நண்பனின் பெயரில் பாதியை எனக்கு வைத்தது. சத்திய மோகன் ஆனேன். அத்தோடு விட்டதா? தன்னைப்போலவே தன் நண்பனை, தன் மகனும் நேசிக்க எண்ணி அவரது கூட்டங்களுக்கெல்லாம் விரல் பிடித்து என்னை  அழைத்துச் சென்றது. இலக்கியம் புரியுமோ இல்லையோ அவர் கூட்டத்திற்கு போகும் சின்னஞ்சிறு சிறுவன் எனக்கு ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும். ஆம். அவர்  தன் மீது போர்த்திய பொன்னாடையை எனக்கு அன்போடு போர்த்துவார். சிரித்து மகிழ்வார். மில்க் பிக்கீஸ் தருவார். அந்த காலங்கள்! நீங்காத தமிழ் வளம் கொண்ட சத்தியசீலனின் வழக்காடு மன்றங்களின் பித்தன் ஆனேன். அவர் கரங்கள் தொட்ட முகூர்த்தம் இன்று நானுமோர் கவிச்சிறகு.
        தமிழ் தமிழ் தமிழ் .. ! ஆஹா.. அவரோடு பித்துகொள்ள தமிழ் மட்டுமல்ல - ஒழுக்கம் எனும் பண்பை சீலத்தை எவரும் உணர முடியும். தமிழ்ப்பாடல்களை மனனம் செய்வதில் இன்றும் அவர் ஒரு இளைஞர். அவரை வேட்டி கட்டிய ஒளவையார் என்றால் அதில் ஒரு எழுத்தும் மிகையாகாது.
           என் தந்தை பார்த்தசாரதி, தன்னைப்பற்றியும் சத்தியசீலன் ஐயா அவர்களையும் மிக உண்மையான செய்திகளை எனக்குள் விதைத்தபடியே இருந்தார். அவரது மரணபரியந்தம் வரை சத்தியசீலன் மீதான காதல் ஓங்கிய படியே இருந்தது. அவர் தங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பை விவரிக்கும்போது டிக்ஷனரியை முதன் முதலில் தொகுத்த இருவரின் பெயர்களை சுட்டுவது வழக்கம். “தினம் சத்தி 30 பக்கம் படிக்காம தூங்கவே போமாட்டான்” உட்பட ஏராளமானவை. விரித்தால் அதுவோர் தனி நூலாகும்.
            பேராசிரியர் சத்தியசீலன் ஐயாவுக்கு திருமணம் என்று கேள்வியுற்று அதன் பிறகே என் தந்தை 32 வயதில் திருமணம் செய்துகொண்டார். நட்புக்காக தியாகம். நட்புக்காக உறுதி. நட்பின் வழிபாட்டுத் தலங்களாகவே இருவரும் திகழ்ந்தனர். குறைகளை “வாடா போடா” என்று சொல்லிச் செல்லும் பாங்கில்  கேட்பவர்களுக்கு அவர்கள் அண்ணன் தம்பியாகவே தோன்றுவர். காவிரி நதியில் இருவரும் குளிக்கும்போது கரையில் சிறுவன் நான் அவர்கள் பேசும் இலக்கியம் கேட்பதுண்டு. “அந்த இடத்தில் எப்படி அந்த அழகிய செய்தியை சொல்லி நெகிழ்த்தினாய்  சத்தி!” என்று அப்பா உருகுவார். எனக்கு ஒன்றும் புரியாது அப்போது! விடிய விடிய பேசுவார்கள் அப்படி பேசுவார்கள்!
          நிற்க.
          விபத்தினாலும் மூப்பினாலும் கையினால் எழுத முடியாத  84 வயது சத்தியசீலன் ஐயா அவர்கள், இந்நூலை வாயினால் சொல்லியே எழுதியது அவர் மன் வலிமை.
 இந்த தன் வரலாற்று நூல் 216 தலைப்புகளில் 383 பக்கங்களில்,மிளிர்கிறது. தொகுப்பு முழுதும் தன்னை “அவன் அவன்” என்றே விளிப்பது கவியரசு கண்ணதாசனின் ஆற்றொழுக்கு  நடைக்கு ஒப்பாக அழகு சேர்க்கிறது.
      பேராசிரியர் ஐயா இயற்றிய இந்த நூல் குறைந்த பட்சம் ஆறு விருதுகளாவது பெற்று தமிழர் இதயங்களில் நிலை நிற்கப்போவது உறுதி. ஏனெனில் இந்த செய்திகளை ஒருவர் தன் வாழ்வில் ஆழ்ந்து போய் விட்டால் எழுத முடியாது. முழுகிப்போனால் எழுத முடியாது. ஐயா முழுகியிருப்பார். ஆனால் “விதியே வா! அடுத்தது என்ன ! இதோ என் தோள்கள்!” என்று துன்பத்திலும் இன்பத்திலும் அவர் வாழ்க்கைக் கடல் முத்துக்களை எடுத்து  கோர்த்திருப்பதை இந்த நூல் பறை சாற்றுகின்றது.
84x365= 30660 நாட்களிலும் அவர் இலக்கியமாகவே வாழ்ந்தார் என்று இந்த நூலைப் படிக்காமல் தொட்டுப்பார்ப்பவர்கள் கூட உணரலாம். தமிழ் இலக்கிய அன்பு மின்சார நூல்.
         வாழ்க்கைத்தளம், ஆன்மீகத்தளம்,பயணகாவியம், இலக்கிய தளம், அரசியல் நட்பு, நட்பு பந்தங்கள் என ஒவ்வொன்றிலும் சிறகு விரித்துள்ளார்.
பேராசிரியர் அறிவொளி ஐயா அவருக்கு ஆன்மீகத்தூண். சமயத்தலைவர்கள் எல்லோரது நெஞ்சிலும் ஐயாவுக்கு இடம் உண்டு. உடல் வலிமை, உள்ள வலிமை இரண்டிலும் வள்ளல் பெருமான் ஆசிகளை நிறைய நிறைய பெற்றுள்ளார் என் அன்பான சத்திமாமா. இந்த இலக்கிய வாழ்வில் நங்கூரம் பாய்ச்சி இந்த அளவிற்கு நிற்பதற்கு அம்மையார் தனபாக்கியம், அவரின் பெரும் பாக்கியம் என்பேன்.
     “ மோகன் இதற்கு திறன் ஆய்வு எழுது” என்றீர்கள், நேரில். சூரியனது ஒளியை கயிறு அளக்காது. பச்சைக்குழந்தைக்கு தந்தையின் கருணை சொல்லில் அகப்படுமோ.
முதல் எழுபது பக்கங்கள் படித்தேன். ஒரு படி தேன்! இன்னும் சொல்லச் சொல்ல பல சம்பவங்கள்  அப்பா நேரில் சொன்னதை நினைவு  செய்கின்றது. நான் நேரில் பார்ப்பது போலவும் இருக்கின்றது. (நல்ல உதாரணம்:-கோலி சோடா எப்படி?- பக்கம் 251)
      மகாத்மா “சத்திய சோதனை” எழுதினார். வாழ்வில் சோதனை மேல் சோதனை வரும்போதும் இலக்கியம் அரும்பும் தத்துவ தரிசனத்தில் தன் சிந்தனை விளைச்சலில் தீராத தாகத்தோடு தனது தாகத்தையும் தணித்துக்கொண்டு- தடுமாறும் சமூகம் வாழ- worked examples ஆக- வாழ்வுக்கான தீர்வுகளையும் - தைரியமுடன் - சோதித்துப்பார்த்த - ஆண்மையே- சத்திய (சீல )சோதனை “இலக்கியம் பேசும் இலக்கியம்” என்று உறுதியாய்ச் சொல்ல முடியும்.
      இலக்கிய அரும்புகளுக்கு வழிகாட்டி. வாங்கிப்படிப்போம்.
      தமிழர்களுக்கோ என்றும் திசை காட்டி ! அவர் வாழிய ! அவர் தம் புகழ் வாழிய!  


                                         ***********Thursday, 25 August 2016

கவிஞனின் தேகம் (கவிஞர் ஞானக்கூத்தன் நினைவுகள்)


                                            ஒரு சாலை விபத்து 22.8.2016. கோமா ஸ்டேஜ் சென்றார்  . நல்லவிதமாக சிதை மூட்டப்பட்டார். 
அலுவலக வேலைகளால் மாலை நேரம்தான் இறந்தவர் வீட்டுக்கு என்னால் போக முடிந்தது.  
இடுகாட்டுக் காரியங்கள் முடிவுற்று- அலம்பிவிட்ட வீட்டில்- இறந்து மூணு மணி நேரம் ஆன வீட்டில்- 
மெல்லத் தேங்கி நின்ற - ஆனால் - மீண்டும்  மனமில்லாமல் இயல்புக்குத் திரும்பத் தயாராகிற வீட்டில் துக்கம் விசாரிக்கிறபோது- அங்கே திரும்பிக்கொண்டிருந்த - 
மெல்ல நுழைய முற்பட்ட அமைதி- என்னைக்கண்டதும் நண்பரின் சொந்தக்காரர் முகத்தில் சட்டென மீண்டும் கப்பியதை உணர்ந்தேன். 
             ஆம். துயரங்கள் நேரமாக நேரமாக அதிகமாகவும் செய்யலாம். 
“பேசும் புதிய சக்தி “ இதழில் எஸ்.சங்கர நாராயணன் கட்டுரை படித்தபோதும் ஞானக்கூத்தன் நினைவில் நிகழ்ந்தார்.
          இறந்தவர் மீது படிந்த நெருப்பு அவர்கள் இல்லாதபோதும் சுடுகிறது.
 இது சாதாரண மனிதர்கள் இறப்பில் ஒரு தளத்திலும் - கவிஞர்கள் இறக்கும்போது மலையளவு அதிகமாகவும் தோன்ற எது காரணம்? கவிஞர்கள் நம் வீட்டுக்கு சம்பாதித்துப்போட்டார்களா? கூடவே இருந்தார்களா? அவர் வீட்டுக்கு அருகிலேயே வசித்தோமா? ஏதுமில்லை.
அவர்கள் விட்டுச்சென்ற சொல்லால் நாம் தூண்டப்படுகிறோம். கவிஞனின் உடம்பு சொற்களால் ஆனது. 
எலும்புகள் கொண்ட  ரத்தமல்ல. கவிஞர்கள் இறந்தபிறகு புகழ் ஜனனம் எனும் கண்ணதாசன் வாக்கு மெய்யே. வாழை வீழ்ந்தபிறகு அடி வாழை தோன்றுவதுபோல என்றும் உவமித்திருப்பார் கவியரசர்.
                   கணையாழி என்ற இலக்கிய பத்திரிகையில் “போய்ச்சேராக்கடிதம்” (1993)என்ற  கவிதை வெளியாகியிருக்க அதை எழுதிய மகிழ்ச்சி பொங்க மாதாமாதம் கணையாழி இலக்கிய வட்டம் என்ற கூட்டம் ஆழ்வார்பேட்டையில் நேராகவே செல்லும் மகிழ்ச்சியோ இன்னும் அலாதி. சுஜாதா தலைமை. கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் போன்ற ஜாம்பவான்கள். 
முகம் தெரியாத முத்தான இலக்கியவாதிகள். கேட்டு கேட்டு அறிமுகம் செய்து கொள்வேன் - புது மருமகள் புதிய உறவினர்களை அறிய முற்படும் படபடப்போடு. 
ஏனெனில் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்ற ஆசை. அதை அல்ப ஆசை என்பதற்கில்லை. அது ஒரு மகத்தான துடிப்பு அப்போது.
                      எப்போதுமே கூட்டம் முடிந்த பின் நடக்கிற சிறு விவாத கூட்டம் உடனே கலைய முடியாமல் ஒரு மழை சொட்டு செடியில் நின்று வழிவதுபோல் சொட்டு தேங்கி நிற்கும்.
 அப்படி ஒரு சிறு வளைவில் கூட்ட அறையின் வழிநடையில்அழுத்தமான கண்ணாடியோடு வேறு ஒருவரின் கவிதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர்.
 எனக்கும் ஆசையாக இருந்தது. ஏனெனில் அடங்கிய குரல். ஆனால் தெளிவும் தொலை நோக்கும். 
அவர் பெயர் அறியும் ஆசையை விட அவர் ஏதாவது சிலாகித்தால் நன்றாயிருக்குமே என்று மனதார ஆசைப்பட்டேன்.
                      அவர் என் கவிதையை வாங்கிப்பார்த்தார். “போய்ச்சேராக்கடிதம் “அவரிடம் சென்றது. சம்பிரதாயமாக நல்லாருக்கு என்று சொன்னதுபோலிருந்தது. 
ஆனால் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை வேறு ஒரு கவிதை வர்ணித்து சொன்னபோது புரிந்து கொண்டேன். கவிதைக்கு விவரங்களும் உவமையும் வர்ணிப்பும் முக்யம் . 
குறிப்பாக சூழல்.ஆம். அவர் சொன்ன ஒரு கவிதையில், 
ஏதோ ஒரு சூழலில் ஆட்டு மாமிசம் தொங்கும் கடையில் ஒரு அந்தணர் எதிலும் பட்டுவிடாமல் நுழைகிறார். அவர் எச்சரிக்கையை வர்ணித்தார் ஞானக்கூத்தன். 
சட்டென அந்தணர் முதுகில் ஒரு பெரிய ஆட்டின் உடல் மோதி விடுகிறது என்று சொல்லிவிட்டு முகத்தைபார்த்தார் ஞானக்கூத்தன். 
சட்டென எதுவோ முதுகில் இடித்த உணர்வு.  “அதுதான் கவிதை” என நிறுத்தினார்.
                      வருஷங்கள் ஓடின. மூன்றாம் கவிதைத்தொகுப்புக்கு அடியேனின் “மீன்கள் கடிக்கும் மரம்” தொகுப்புக்கு முன்னுரை கேட்டேன்.
எந்த தயக்கமும் இல்லாமல் வாரி வழங்கிய கவிமனம்அவருடையது. எஸ்.சங்கர நாராயணன் கூறியதைபோல இளைஞைர்கள் மீது முழு நம்பிக்கை. 
“அப்பாமுகம் “ கவிதையை ஆஸ்திரிய கவிஞரை நினைவு படுத்தியதாக கம்பீரமாக மனமார எழுதிக்கொடுத்தார்.  
           அவர் எழுதின முன்னுரை பெற்றுக்கொள்ள திருவல்லிக்கேணியில் அவர்  வீட்டுக்குச்சென்ற போது சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து அவர் எழுதும் அழகைக் கண்டேன். 
வேஷ்டி மடித்துக்கட்டின பளீரென்ற ஆரோக்கிய நிறம். என்ன செய்கிறோம் என்ற தெளிவு மிக்க நடை. கால் பதிய அழுத்தி நடந்து வந்தார்.
        “நெய்வேலியில் வேலையா? என்னை மாதிரியெல்லாம் பண்ணாத. லீவு போட்டு எழுதுவேன்” தனக்கும் எனக்குமாக அண்ணனின் ஆதூரத்தோடு சொன்னவருக்கு முன்னுரை சன்மானமாக ஏதேனும் தர எண்ணி எதுவும் தோன்றாமல் வரும்போது ஒரு கடையில் வாங்கிய ரெனால்டு பேனாவை அளித்தேன். வெள்ளை உடம்பும் நீல மூடியுமாக இருந்ததை வாங்கி முதன் முதலாக பேனாவைப் பார்ப்பவர் போல அடியிலிருந்து நுனி வரை பார்த்தார். என்ன ஒரு பார்வை! எவ்வளவு அர்த்தம்!
                        அதுவே கவியின் பார்வை.  அதற்குப்பிறகு விழுப்புரத்தில் பழமலையோடு ஓட்டலில் ஒருமுறை சந்திப்பு. 
ஞானக்கூத்தன் கவிஞர்களில் மகுடம். அவருக்கு இப்போது பிறப்பு ஆரம்பம். ஆம். கவிஞனின் உடம்பு சொற்களில் ஆனது. 
                        நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் 
                         மலையினும் மாணப்பெரிது
           அழகிய சிங்கர் நவீன விருட்சம் வெளியீட்டில் “பென்சில் படங்கள்” போல எழுத இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். வாழிய கவிஞர்கள் ஆத்மா.ஓம்.
                         

                            

Friday, 29 July 2016

கீரை விற்ற மேரி பாட்டி
ஒருவர் இறந்து போவது என்பது எதிர்பார்ப்பல்ல
இறந்த பின் நிகழும் அதிர்ச்சி
மனதின் ஓர் ஏற்பாடல்ல
வடலூரில் கூட்டுரோடு ரவுண்டானா பெரியார் சிலைக்கு
கீழே அமர்ந்திருந்த கருப்பு மேனி இனி இல்லை
அந்த  வதங்கல் முதுமைக்காரி இனி இல்லை
மழையோ பனியோ வெயிலோ
பிற்பகலோ எக்கணமும் எவரையோ நம்பிக்கொண்டு
எத்திசையிலிருந்தும் ஓர் அன்பர் வாங்குவர் என்று
நம்பிக்கை மீது நம்பிக்கை வைத்த அவள் இனி இல்லை
குனிந்த அண்டங்காக்கை என தன் மீதே தலை தொங்கும்
கார்பன் என் கசங்கிய கோடுகள் கொண்ட முகம் இனி இல்லை
ஒரே ஒரு தடவை புடவையும்
பிறிதொரு நாளில் ஒரு வேளை பார்சல் சாப்பாடும்
பிறிதொரு மழை இரவில்  குடைக்கு கீழே
குளிரோடு நடுங்கியவள் உள்ளங்கை சுடச்சுட வாங்கித்தந்த டீயும்
உறிஞ்சிய மேரி பாட்டி இனி காணக் கிடைக்கமாட்டாள்
இறந்து போனாள் என்றது 29.7.16 ப்ளக்ஸ் போர்டு.
சாக்கு போர்த்திய பொன்னாங்கண்ணி கீரைகள்
தார்ச்சாலையில் சிதறி வாடிக் கொண்டிருந்தன .


Tuesday, 19 July 2016

சுயநலம்


பட்டாம்பூச்சியின் மரண ஊர்வலத்தில்
கலந்து கொண்ட  எறும்புகள்
இரவு உணவுக்கு கவலையில்லை என்று
தம்முள் கிசுகிசுத்து வரிசை கலைந்தன.

அத்தனையும் போச்! அத்தனையும் ஆயா ஹை !
அன்னை கிராமம் நகரம்
உறவினர் நட்பினர் சொந்த பந்தம்
தொலை தூரம் மாமன் மச்சான்
அனைவரையும் இழந்து
பக்கென இதயம் நின்று
பேச முடியாத ஊமைத்தனம் ஆகி
சித்தம் பேதலித்தும் வெளியே காட்டாமல்
உள்ளே குமுறும் போது
அத்தனை பேரும் திரும்பக் கிடைக்கின்றனர்
மறந்த செல்போன் பத்து நிமிடம் தாமதித்து  கிட்டும் போது.மாட்டேன் என்றால் மாட்டுவேன்
இனி கவிதை எழுத மாட்டேன் என
ஒரு கவிதை எழுதி விட்டேன்
இனி அனுப்ப மாட்டேன் என்றே
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
படிக்க மாட்டேன் என்பவர்கள் படிப்பார்கள்
என்றோ எங்கோ எவர்க்கோ
இரு செவியில் விதையாகி ஒரு நொடியில்  கனியாகி
நினைவில் கலந்து மணம் வீசும்
இனி என் கவிதை.