Sunday, 28 December 2014

அவரும் நானும்

“மனிதனின் அழகான படைப்பு கடவுள் என்றால் கடவுளின் அழகான படைப்பு மரணம்” என்று விஜய் டி,வி.வழியே இயக்குநர் சிகரம் பாலசந்தர் குறித்து நினைவு பகிர்ந்தார் -கண்ணீரை அடக்கிக்கொண்டு - ஆனால் வார்த்தைகள் தடுமாறாமல் பேசிய யூகி.சேது அவர்கள் .நாளை நாம் சாம்பலாவோம் என அவரிடும் திருநீறு அவருக்கு காலத்தை வீணாக்கக் கூடாது என்ற சிந்தனை தந்தது. அதனால் உழைப்பினால் கலையினால் அவர் தனது வாழ்வை சிற்பமாக்கிக் கொண்டார் எனப் பகிர்ந்தார். மட்டுமல்ல - “ஒவ்வொருவருக்குமே KB சார் பற்றிப் பேச அரைமணி நேரமாவது செய்தி இருக்கும்” என்றார். எவ்வளவு ஆழமான சொற்கள்! அடியேனுக்கும் இருக்கிறது.
1995ல் அடியேனின் “போய்ச்சேராக் கடிதம்” எனும் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது என்பது யாருக்கும் தெரியாது ஒரு இருபது பேரைத் தவிர. ஆனால் திரையுலக பிரம்மாவாகிய KB சார், “ப்ரேமி “ என்ற தொலைக்காட்சித் தொடர் இயக்கியபோது “ஜேம்ஸ் ஐயர்” கதாபாத்திரத்தில் கவிதைகள் பேசி தொப்பி எல்லாம் போட்டுக்கொண்டு அசத்துவார். விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.“உன் கவிதை புத்தகமும் அனுப்பி வை” என்றார் அடியேனின் அப்பா. அனுப்பிவிட்டு மறந்தும் போனேன்.
             நெய்வேலியில் இரண்டாம் தெர்மலில் டூட்டி பார்க்கும்போது ஒரு அன்பர் “பிரேமியில் உங்கள் கவிதை!” என்றார். பிரமித்தே போனேன். நமது கவிதையை நாம் பார்க்க  முடியவில்லையே என்று ஏங்கி ஒரு கடிதமும் எழுதினேன். தெருவில் நடந்துபோகும் சாதாரண மனிதனை உலக அழகி முத்தமிட்டதுபோல் அடியேனின் மகிழ்ச்சி என எழுதியிருந்தேன். அதற்கு ஒரு கடிதம் போட்டிருந்தார். அதில் உள்ள நேர்மையும் நன்றி உணர்வும் படித்தாலே எவருக்கும் புரியும். மேன் மக்கள் மேன் மக்களே!
பேரன்புமிக்க சத்தியமோகன் அவர்களுக்கு,
தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
“போய்ச் சேராக் கடிதம்” வந்து சேர்ந்தது.
1. மரம் விழுந்தால்
                 வேர் தெரியும்
                 மனிதன் உடல் விழுந்தால்
                “பேர்” தெரியும்!
2       குனிந்து நடந்தேன்
          கூன் என்றார்கள்
           நிமிர்ந்து நடந்தேன்
           திமிர் என்கிறார்கள்!

இந்த இரண்டு கவிதைகளையும் தான் “பிரேமி” டி.வி தொடரில் ஜேம்ஸ் ஐயர் வாயிலாக உபயோகப் படுத்திக் கொண்டேன்.
இவற்றை எழுதியது “சத்தியமோகன்” என்றும் “வாசுகி” பாத்திரம் வழியாகத் தெரிவித்திருக்கிறேன்.

நன்றியுடன்
கே.பாலசந்தர்.
சென்னை.

அத்தனை ஆயிரம் மனிதர்கள் கண்ணீர் விட - கண்ணாடிப்பெட்டிக்குள் அசையாத உடம்புடன் - பட்டையாய் விபூதியுடன் - அதே கருப்பு கண்ணாடி ப்ரேமுடன் - பெசண்ட் நகர் மின்சார சுடுகாட்டுக்குள் - KBசார் உடலை கொண்டுவரும்போது - டி.வி.நோக்கி என் மனைவி-  “நீங்க எழுதின கவிதைக்கு இலக்கணமா ஆயிட்டாருங்க” என்றாள் . ஆம்!
“மரம் விழுந்தால் வேர் தெரியும்
மனிதன் உடல் விழுந்தால் பேர் தெரியும்!”

No comments:

Post a Comment