Wednesday, 11 February 2015

பங்கு


           அந்தக் கோபத்திற்கு நிகரான கோபம் தேன்தமிழ் நெஞ்சில் உருவானதே இல்லை. அப்பாவின் உடலை அப்படியே வெட்டி எறிய வேணும் போல் ஆத்திரம் கிளர்ந்தது. கண்ணாடிப்பெட்டியின் கிடக்கும் உள் கனலும் வெப்பத்தில் அப்பா உடம்பு இருந்தது.
          அரசியல்வாதிகள்  வரிசை நீண்டுகொண்டுதான் இருக்கிறது.இரண்டரை அடி ரோஜாமாலை முதல் பத்தடிக்கும் தாண்டியது வரை மாலைகள் அப்பா காலடியில் வைத்துவிட்டு,இறுக மூடிய கண்களையே சில விநாடிகள் பார்த்து”நீங்களா கண் மூடினீர்கள்” என்ற மாதிரி உற்றுப்பார்த்துவிட்டு நகரும் கூட்டம் தேன் தமிழனுக்கு போரடித்தது. அலுப்பாக இருந்தது.
         இந்த வேஷதாரிகளால்தான் ஆசிரியராக ஒரு பள்ளியில் பென்ஷனோடு நிம்மதியாயிருக்க வேண்டியவர்,இப்படி தெருத்தெருவாய் கொடிபிடிக்க ஆரம்பித்து ஒன்றியச் செயலரில் ஆரம்பித்து மாவட்டச்செயலர் வரை ஆரம்பிக்கும்போதுஅடங்கிப்போனார்.
        அரசியல்,குற்றவாளிகள் பதுங்குகுழி. நிமிர்ந்து இந்தச் சமூகத்தில் கால் ஊன்றி ஒரு துறையில் ஜெயிக்க முடியாதவர்கள் மாறுவேடத்தில் நுழைகிற கொல்லைப்புறவாசலே அரசியல்.
        “ஐயா..அநியாயமா போயிட்டீங்களே!”
        சாமந்திப்பூ சேவல் கொண்டைப்பூ சம்பங்கிப்பூ கலந்து பின்னிய பூ மாலையுடன் அப்பாவின் கால்மாட்டின் மேலிருந்த கண்ணாடி பாகத்தில் தலை வைத்து கண்ணீர் ஒழுக கண நேரம் கலங்கும் பெரியவர் யாரோ.
         கசங்கி நண் செருகி உடைந்து வழியும் துளிகள்.தோள் துண்டால் வாய் விம்மலை அடைக்கும் துண்டு.
        “உங்கப்பா மாதிரி பார்க்க முடியாது தம்பீ..”
        “போய்யா பெரிசு!என்னம்மோ சொல்லாதது சொல்ல வந்திட்டே.அவுரு கட்சியைவுட்டு விலகினாலும் தனியாளா அன்னிக்கு அரெஸ்ட் ஆனப்போ வந்து பாத்தியா? வந்திருந்தா உன்னை மதிச்சிருக்கலாம்”
           இப்படியெல்லாம் சொல்லி, அடக்கி விரட்டலாம்தான்.தேன் தமிழனுக்கு வார்த்தை எழும்பாமல் அமிலக்கட்டிகளால் சொற்கள் உள்ளே குமுறின. ஏன் அப்பா!கண்களை திறந்திருந்தபோது வாய் வார்த்தைகளால் கொட்டி கொட்டி எடுத்தீர்கள்.
       கண்களை மூடி நேற்றிரவு தூக்கத்தோடு போய் சேர்ந்தீர்கள்.இப்போது கலக்கிய அரசியல்குட்டையின் நாற்றம் பிடித்த சீக்காளிகள் வந்தனம் செய்வதை சகிக்க முடியவில்லை.போதாக்குறைக்கு என்னை வேறு அரசியலுக்கு இருக்க கடைசி ஆசை என்று மாவட்டப் பிரதிநிதிகளிடம் கூறி வந்திருக்கிறீர்கள்.
           துண்டு சுருட்டி வாயில் பந்து போல் அடைத்துக்கொண்டு அழுதிட்ட பெரியவர் நகர்ந்துவிட்டார். இப்போது நாற்பது வயசு தாண்டிய ஆறுமுகம் வருவது தெரிகிறது.
           “அப்பாவுக்கு இப்படி ஆயிருச்சே தம்பீ தேன்தமிழா!”
           “இவனுக்கு நான் தம்பியாம்..ஹேர்டை அடித்து அடித்து கலங்கி போன சுருட்டைத்தலை. நேற்று இரவு குடியில் நனைந்த வீச்சம் படிந்த பேச்சு.
          “சரி போங்க.. போங்க! ஆக வேண்டியதைப் பார்ப்போம்”
          ஆறுதல் காட்டப்படவேண்டிய தேன்தமிழனே, வந்தவர்களை அடுத்த மனநிலைக்கு நகர்த்தவும் வேண்டியிருந்தது. ஆனால் அதுவும் தப்பாகவே புரிந்துகொள்ளப்பட்டது.
         “கல் மனசு தம்பீ உங்களுக்கு ”என்று திட்டுவதுபோல சொல்ல வந்த ஆறுமுகம், “அப்பா மாதிரி இரும்பு நெஞ்சு தம்பீ” என்று மாற்றிப்பேசினார். நகர்ந்தான். அதிர்ந்து பேசமாட்டார் அப்பா.உரத்து சிரிக்க மாட்டார். வெற்றிலையுடன் புகையிலை கலந்து உண்டு மென்ற பற்கள் தாவாங்கட்டைக்குள் இப்போது அடங்கிக் கிடக்கின்றன.
           “உன் தோள்ல என் கட்சித்துண்டு எப்பவும் கிடக்கணும்யா தேனு”கடைசிப்பேச்சாக சொன்னது.
கார்கில் போரில் செத்தவரோ இவுரு! தேசியக்கொடி போர்த்தி பீரங்கி குண்டு முழக்கிதான் அடக்கம் பண்ணணுமோ. செத்ததுதான் செத்தான் .கடைசி ஆசை சொல்லாம சாவுற தகப்பனுக்கு நான் பொறந்திருக்க கூடாதா.
           தேன் தமிழன் நெஞ்சு முணுமுணுத்தது.
            அவ்வளவு கோபம். அவ்வளவும். விளைநிலங்களை விற்று ரைஸ்மில் கட்டினார். அறுபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து கட்சி மண்டப நிதிக்கு உதவினார். அம்மாவின் நகைகளை ஒவ்வொன்றாய் அடகு வைத்து அந்த அணி இந்த அணி என்று பார்ட்டி வைத்தே ஒழித்தார். தாலிக் கொடிக்கு வைத்திருந்த ஐந்து பவுன் சங்கிலியை வறட்சி நிவாரண நிதி சேகரிப்பு என்று உண்டியல் குலுக்கும் போது கழற்றித் தரச் சொன்ன போது அம்மா திராவகமாய் மாறினாள்.
           “ நம்ம பையன் பொண்ணு  எல்லாம் அனாதை ஆக்கணும்னு முடிவே பண்ணிட்டீங்களா. மூத்தவனை பி.இ. சேர்த்தீங்க. காலேஜ்ல சேர்ந்த ஒரே வருசம்... படிக்கிற நேரமா பாத்து மாவட்ட இளைஞரணில பொறுப்பு கொடுத்தீங்க... சரி... ! இப்பவே பையன் அஞ்சு சப்ஜெக்ட்ல காலி.... ”
          “ இப்ப என்னடீ பண்ணணும்கிற... ”
        “ என் தாலிய அறுக்காதீங்கன்றேன். நம்ம தேன்தமிழ் படிப்புக்கு விஷம் வைச்சுராதீங்கனு கேட்டுக்றேன்..”
            கடைசியில் அம்மா பேச்சு தோற்றது. நகை போய்விட்டது. டிகிரி படிப்பு பாதியில் நின்றது. டிகிரி காபி ஆற்றும் வேலையாவது கிட்டுமா என்ற நிலை வந்தது. எவரிடம் போய் வேலை கேட்டாலும் , “ ஓ ! ஐந்தாம் உட்கிளை மாவட்ட பிரதிநிதி பையனப்பா நீ... உங்கப்பா செல்வாக்குல முதலமைச்சரையே கூப்ட்டு பேசலாம்... நீ எங்ககிட்டே  சாதாரண வேலை பாத்தா நாளைக்கு தலைமைக் கழகத்துக்கு பதில் சொல்லணுமா இல்லியா... ” என்று நாசுக்காக பட்டுப் புடவை தூசு போல விலக்கி விட்டார்கள்.
அது ஒரு விதத்தில் துரத்தல் தான்.
                  தேன் தமிழன் எல்லாவற்றையும்  மீறி அங்கே இங்கே கடன் வாங்கி தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசுக் கடை போட்டான் கிழக்குத் தேரடித் தெருவில்.  பிறகு அதில் வந்த லாபத்தை எடுத்து, ரியல் எஸ்டேட் பார்ட்னர் ஆகி, நஷ்டத்தோடு பழி பாவமும் சேர்ந்தது.. ஆம்.
                   பார்ட்னர் வஞ்சனையும்  சதியும் இவன் மேல் விழுந்தன. இனிமேல் அப்பாவின் பெயர் கூறிய  எந்த நபரிடம் ஒட்டோ உறவோ பங்குதார நட்போ கூடவே கூடாது என்று  ஞானம் கற்றுத் தேர்ந்த போது அம்மாவுக்கு இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பு என்று அப்பல்லோவில் சீட்டு எழுதிக் கொடுத்தார்கள்.
   “ இரவல் தந்தவன் கேட்கின்றான்
                    அதை-
                    இல்லையென்றால் அவன் விடுவானா? ”
டி.எம்.எஸ். குரலில் கண்ணதாசன் பாட்டு மூளைக்குள் யாரோ பாடினார்கள். எவ்வளவு துக்கத்திலும் மூன்றாம் ஆள் ஒருவர் உள் மனசிலிருந்து  பார்த்துக் கூறுவது கேட்கும்.
போன மாசம் தான், அம்மாவின் கொள்ளியை வாரிப் போட்டான். தப்பாமல் மூன்றாம் மாதம் அப்பா ! அம்மாவுக்கு சடங்கு சாங்கியம் செய்த போது  அழுதவர்கள் மிகக் குறைவே. அன்று அப்பா மிக இயல்பாக மரண தத்துவம் பேசினார். மூன்றாம் நபர் போல வாசலில் ஒருவராக மர பெஞ்சில் அமர்ந்தார். கூப்பிட்ட போது மட்டுமே அம்மாவின் சடலம் அருகே வந்து நின்றார். பார்த்தவர்கள் கசந்து போனார்கள்.  “ இப்படி இருப்பானோ ஒரு மனுஷன்... பெண்டாட்டி செத்துக் கிடக்றா.. பொட்டு தண்ணீ வுடலியே.. ”
                   வசவுகளை விமர்சனங்களை என்னமோ விருது போல ஏற்ற முகத்துடன் அன்று இருந்தார். அப்படிப்பட்ட அப்பாவின் முகம் இன்று தீயில் வேகட்டும். பொசுங்கட்டும். மனசு சபித்தது.
                   என்னென்னமோ முன்னும் பின்னுமாய் பயணித்து  துக்கமும் வஞ்சமும் கலந்து புகைந்த நெஞ்சு , வாசலில் குவிந்த மொத்த கூட்டமும் ஏதோ பரபரத்தது போல் தெரிந்தது. தேன் தமிழனும் வாசல் பக்கம் பார்த்தான்.
                  அடிஷனல் டெப்டி கமிஷனர் ஆஃப் போலீஸ் ஜீப் என்று எழுதியிருந்தது.
                 வந்தவர் இந்தவருடம் பதவியில் இல்லை. நாராயண நாகராஜன் தான். ஆனால் அவர் போன வருடம் வரை, அப்பாவின் சந்திப்புப் பட்டியலில் கட்டாயம் இடம் பிடித்தவர். இவரிடம் என்ன பேசுவதோ. அப்பா என்னவிதமான கருத்துகளைப்பேசி என்ன அபிப்ராயம் ஏற்படுத்தி வைத்திருக்கிறாரோ. இவரிடம் என்ன பேசி அனுப்புவது. குழம்பினான்.
               சாவு வீட்டிற்கு வந்தவர்களின் பதவி வாடையும் ஒரு சுமை தான்.  தேன் தமிழா. உன் தலைவிதி இப்டி நாறிப் போச்சேடா. உங்கப்பன் இன்னும் எத்தனை பேர்ட்ட என்னென்ன மாதிரி சம்பந்தம் வச்சிருந்தானோ. அடுத்தது மார்க்கெட் போன நடிகை கூட, எவளாச்சும் மாலையோட வர்லாம்....
              வந்தவர் நேராக உள் கூடத்துக்குச் சென்று இரு கால்களும் கோர்க்கப் பட்ட நிலையில் வெண் வேட்டி போர்த்திய மார்பின்  குறுக்கே இரு கைகளும் பிணைக்கப் பட்டு திருநீறு சார்த்திய உடம்பாக கண்ணாடி பெட்டியின் உள்ளே கிடக்கும்  அப்பாவை ஒரு நொடி துல்லியமாக கண் மூடித் தொழுதார்.
              “ பூசுவதும் வெண்ணீறு
                பூண்பதுவும் பூங்கரவம்
                 ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ ”
உரத்த குரலில் மாணிக்க வாசகரின் தேவாரம் பாடி விட்டு தலை குனிந்து வணங்கினார். தேன்தமிழன் தோளில் கை வைத்து ஆதூரமாய் கூட்டம் தாண்டி அவனைத் தள்ளிக் கொண்டு சென்றார்.
            “ உங்கப்பனை மாதிரி அரசியல்வாதிங்க நாட்டுல கம்மி தம்பி. நான் ரிடையர் ஆனப்றம் கூட என்னை மதிச்சு பேசுனவங்கள்ல அவர் ஒருத்தர்.  நிறைய பேரு தன் பையன் வேலை. பொண்ணு கல்யாணம்னு  சுயநலமான கோரிக்கையோட கட்சியில இருப்பாங்க. இப்படீ ஒரு வளர்ந்த பையன் அவுருக்கு இருக்றதே இப்பதான் தம்பீ தெரியுது..  போன வருசம் பரமத்தி வேலூர் பாலத்துக்கிட்டே இந்தப் பக்கம் ஆயிரம் பேர்! அந்தப் பக்கம் மூவாயிரம் பேர்! கருப்புக் கொடி காட்ற போராட்டம்! கடைசி நிமிஷம் லா அன்ட் ஆர்டர் பிராப்ளம் வராமெ எப்டி தடுத்தேன் தெரியுமா? கட்சிக்கொடியோட நின்ன  உங்கப்பாகிட்டே அமைதியா கலைஞ்சு போக சொன்னேன்.
             லத்தி சார்ஜ் இல்லாமெ, பெட்போல் குண்டு வெடிக்காம உயிர் இழப்பு வராமல் நின்னிடுச்சி. இல்லேன்னா கலெக்டர் ஆர்டர்ல பையர் ஓப்பன் பண்ணி இருப்போம் தம்பீ....!  எத்தனை உயிர்களெக் காப்பாத்தியிருக்கார் உங்கப்பா.... அவரு பையன் நீ...! உனக்கா எடுத்து சொல்ணும்...”
             “...”
              “அரசியல் நல்லது.... ஆனால் அரசியல்வாதி கெட்டவனுக... இந்த இழிச் சொல்லை  மாத்திக் காட்ட உன் பங்கு என்ன தம்பீ...! ”
     தேன்தமிழன் எதுவும் சொல்லாமல் அப்பாவின் காலடிக் கட்டை விரல் மேலிருந்து மெல்லச்சரிந்த ஒற்றை ரோஜாவை முதன்முதலாக மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தான்.
                                     
 
                                    ***********
 
  
இலக்கியப்பீடம் பிப்ரவரி -2015 இதழில் வெளியான பரிசுப் பெற்ற சிறுகதை.

No comments:

Post a Comment