Saturday, 17 May 2014

சுந்தர காண்டம் 1201 - 1298









பாடல்-1201:

மலர்கள் கரிந்தன
பொறியாகின சிதறின
இலைகள் கரிந்தன
சிறு கிளைகள் சாம்பலாகின
பருத்த வேர்களும் கரிந்து
சோலைகள் முழுதும் கரியானதே!
அனுமன் சினம் சரியானதே!

பாடல்-1202:

மேல்நோக்கி எழும் கனல் பிழம்புகள்
மேகங்களை மூழ்கடித்து
வானத்தின் அமராவதி நகர்  வெப்பமாகி
உருகி ஊற்ற ஆரம்பித்து
இடைவிடாமல் தாரைகள் வழியும் காட்சி
பொன் வேர்கள்
விண்ணிலிருந்து
மண்ணில் இறங்குவது போலிருந்தது.

பாடல்-1203:

அடர் நெருப்பின் சுடர் உயர்கிறது
வெண் சந்திர ஒளிக்கதிர் மண்டலத்தையே
உருக்குகிறது
சந்திரன் உருகியது அமுதம் சிந்தியது
தீப்பற்றியதால் இறந்த அரக்கர்கள்
சிலருக்கு உயிர் வருகிறது.

பாடல்-1204:

வானைப் பற்றுவதற்காக
நிமிர்ந்து எழுந்த கனல்
வானில் செல்லும் கார்மேகத்தை எரித்து
கருப்பாக்கியதால்
சூரியனைச் சுற்றிலும் கரிகளாக தெரிந்தன
கரிகளுக்கு நடுவே இடப்பட்ட தங்ககட்டி போல
தெரிகின்றான் சூரியன்!

பாடல்-1205:

குதிரைகளைக் கட்டியிருக்கும் கயிறு
முதலில் எரிந்தது
தாவும் நெருப்பு சும்மா இருக்குமா
கயிறு கட்டிய முளைகளை எரித்தது
குதிரையின் பெரிய மயிர்கள்
கால் குளம்புகள்
அழகிய நிறம் மிக்க உடல்
அனைத்தையும் எரித்தது .

பாடல்-1206:

எமனையே தூக்கி விழுங்கும்
ஆற்றலுடைய அரக்கர்கள்
தீயிலிருந்து தப்ப முயலும்போது
தீப்பிழம்பின் நுனி
துரத்தித் துரத்தி வளைப்பதால்
மயக்கமடைந்தனர்
நெருப்புக்கு இரையாகினர்.

பாடல்-1207:

பசிய பொன் அணிகலனும்
கடல் போல் பரந்த அல்குலும் கொண்ட
அரக்க மகளிர் இடுப்பில் இருந்த பட்டாடை
தீப்பிடித்து எரிந்தது
மேலாடைக்கு தாவியது
நறுமணமிகு கூந்தல் எரிந்தது.

பாடல்-1208:

 “செந்நிற இலவம் மலர்களில்
முத்து இருக்கின்றது” என நம்ப வைக்கும் அரக்கமகளிரும்
அரக்க ஆடவரும்
நிலவு போன்ற தமது வெள்ளை ஆடைகளில்
காமநெருப்பும்
அசல் நெருப்பும்
ஒரே நேரத்தில் பற்றிடக் கண்டனர் அலறினர்
இன்பம் ததும்பும் கலவியின் கரை காணமுடியாமல்
நெருப்பு அணைத்துக்கொண்டதால் -
கடலில் சென்று பாய்ந்து விழுந்தனர்
இரண்டும் அணையட்டுமென!

பாடல்-1209:

பஞ்சாரம் எனும் கூட்டிலிருந்த
பசுமை நிறக்கிளிகள் வெந்தன
பதைத்துப் போனார்கள்
அரக்க மகளிர் கண்ணீர் அருவி
முலை முகட்டில் விழுந்து வழிந்தது
யானை போன்ற தனது கணவர்களை
வீர சொர்க்கத்துக்கே சென்று காணும் ஆசையால்
புகையில் மறைந்து இறந்தார்கள் -
மேகத்தில் மறையும் மின்னல் போல.

பாடல்-1210:

மலை போன்ற மாளிகைகளில் பரவிய தீயினால்
அரக்க மகளிர் வெளியேறுகிறார்கள்
பொன்நகை ஒளி வீசிட
வானத்திடையே நடக்கும்போது
புகை படர்வினால்
திரை மறைவுப் பாவை போலாகி 
ஒளி குன்றி
கருப்பு நிறமாகவே ஆகி விட்டார்கள்.

1211
நந்தவனங்கள் எரிவதும்
சந்தன மரங்கள் எரிவதும்
குற்றமற்ற பலப்பல மரங்கள்
வாசனை சூழ எரிவதும்
ஊழியின் இறுதிக்காலத்தில் தோன்றும்
‘கால அக்னி'
மீன்வளங்களை அழித்து
கடலை வற்றச்செய்வது போலிருந்தது.

1212
மின்னல் பரவியது போல எரிகின்ற
கொழும்சுடர் எருப்பு
உலகம் முழுதும் விழுங்குவது மட்டுமல்ல-
நினைவு தாண்டிய பல உலகங்களின்
திசைகள் தாண்டியும் விரிபவை!
நெருப்பு பற்றி  எரிந்த மரங்கள்
நெருப்பு பற்றாமலே
நெருப்பின் ஒளியுடன் ஒளிரும்
கற்பக மரங்கள் போல நின்றிருந்தன.

பாடல்- 1213:

தாம் பருகிய நீரை
மேகக்கூட்டங்கள்
பெரிய மலைச் சிகரங்களில் பெய்தன
மீண்டும் நீரை முகக்க
பூளைப் பூ போல
வெண் நிறமாய் புறப்பட்டபோது
இலங்கை நகரிலிருந்து புறப்பட்ட கொடிய புகை
வழிமறித்தது!
செல்லும் வழி தெரியாமல்
முகில் கூட்டங்கள் அலைகின்றன.

பாடல்-1214:

மிகுதியான வெப்பம் மிகுந்த
புகையும் கரியும் கூட்டணி வைத்துக்கொண்டு
பல வேலைகள் செய்தன! ஆம்!
வெள்ளியங்கிரி மலை நிறமிழந்து
மற்ற மலைகள் போலானது
அன்னங்கள்
காக்கைகளாயின
பாற்கடல்
கருங்கடல் ஆயிற்று
திசை யானைகள்
வழக்கமான யானைகள் போலாயின.

பாடல்-1215:

கருகவும் உதிரவும் வைக்கின்ற
கொடிய நெருப்பு
உடல்களைப் பற்றியதால்
தோல் உரிந்து
ஓடிச்சென்று
கடல் நீரில் ஒளிகிறார்கள்
அரக்க ஆடவர்கள்
அரக்க மகளிர் சிவப்பு நிற தலைமயிர் மட்டும்
கடலின் மேல்புறம் தெரிவது -
கடல் நீரே
நெருப்பினால் வெந்தது போல
செந்நிறமாகத் தெரிகிறது!

பாடல்-1216:

இடுப்பிலே ஒரு குழந்தை
கையில் பிடித்தநிலையில் ஒரு குழந்தை
இன்னொரு குழந்தை
அழுதபடி
தானே நடந்து வர
கூந்தலில்
சுறுசுறு  என
பற்றிக் கொள்ளும் நெருப்புடன்
தமது வீடுகளை விட்டு ஓடி வந்து
கடலில் விழுகின்றனர்
கதறும் அரக்கியர்கள்.

பாடல்-1217:

ஆயுதக் கிடங்கில் இருந்த
வேல் கூட்டமும்
எறி ஈட்டியும்
விறகாகி எரிந்தன
எஃகுப் பகுதிகள் எல்லாம் உருகின
அவை
படைக்கலத் திரட்சி என்ற நிலை மாறி
எஃகு உருண்டை என்ற நிலைக்கு வருவது
உயர்நிலை நாடும் ஞானிகள்
தமது
பழைய நிலைக்குத் திரும்புவது போல உள்ளது!

பாடல்-1218:

முகபடாம் அணிந்த கொடிய யானைகள்
உடம்பில் நெருப்புடன் எரியும்போது
அகன்ற செவிகளை அசையாமல் நிறுத்தின
முறுக்கிய வால்கள்
முதுகில் படிய
துதிக்கைகளை தூக்கியபடி
பிளிறி ஓடும்போது
பாரம் மிகுந்த பூட்டுகள் சிதறுகின்றன!
கழுத்தின் கயிறுகள் சிதறுகின்றன!
கட்டியிருந்த தூண்கள் சிதறுகின்றன!

பாடல்-1219:

அடைக்கலமே இல்லாதவர்கள்
அருளில்லாத வஞ்சகர்களையே
சரண்புகுவது போல
வெப்பம் மிகு புகைப்பரப்புக்கு
அஞ்சிய பறவை இனங்கள்
இருள் நிறைந்த கரும்கடலில் விழுந்தன
மீண்டும் எழுந்து பறக்கமுடியாமல்
மருட்சி கொண்ட மீன் இனங்களால்
தின்னப்பட்டு இறந்தன.

பாடல்-1220:

உயர்ந்து ஓங்கிய தீ
நீர்நிலைகளை வற்றச் செய்தது
நெடிய நிலம் தடவியது
மரங்களைத் தழலாக்கியது
மேருமலையையும் பற்றிக் கொண்டு எரிக்கின்ற
ஊழிக்கால நெருப்பு போல
இலங்கை முற்றும் தின்றது
இராவணன் அரண்மனையில் புகுந்தது
உயர்தீ ! உயரும் தீ ! உயர உயர உயரும் தீ
!

பாடல்-1221:

இராவணன் மாளிகையில்
தேவமகளிர் மறுகிப் போனார்கள்
கந்தர்வ மகளிர் கலங்கிப் போனார்கள்
திக்கு அறியாமல்தவித்தார்கள்
அனைவரும் போனார்கள்
சுற்றிலும்
ஓடி ஓடித் திரிந்தார்கள்
தேவர்கள் தலைநகரை
இராவணன் கைப்பற்றிய அந்த நாள் போல
இன்று
இராவணன் மாளிகை நிலைகுலைந்தது.

பாடல்-1222:

ஒரு அரண்மனையில் எவ்வளவோ இருக்கும்
கஸ்தூரி வாசனை கலவை
கற்பக மரம் பூக்களின் மாலை
இன்னும் பலப்பல
எல்லாமும் எரிந்து புகைந்தன
புகையின் குளிர்ச்சி
மேகங்களின்  கூட்டம் போலாகிவிட்டது
எட்டுத் திசையும் சென்றது
தேவமகளிர் கூந்தலை
வாசனை தடவிச் சென்றது.

பாடல்-1223:

எங்கும் சூழ்ந்தது வெண் நெருப்பின் சுடர்
யாரும் தொடர முடியாத
யாரும் அணுக முடியாத
கடலளவு சினம் மிக்க
ஆண்மை மிகு இராவணன் அரண்மனையின்
ஏழு மாடங்களும் வெந்து எரிந்தன
பிரளய காலத்தின் கடைசி காலத்தீ
ஏழு உலகங்களை உண்பது போல
அக்காட்சி இருந்தது.

பாடல்-1224:
குற்றம் நீங்கிய
மலை போலிருந்த
பொன்னால் ஆக்கப்பட்ட
ஏழுமாட அரண்மனை
எதிர்க்க முடியாத நெருப்பின் முன்
மண்டியிட்டு அழிந்து உருகியது
உருகிவிட்ட அரண்மனையின் உயரம்
வட திசை மட்டுமல்ல
தெற்குத் திசையிலும் மேருமலை என
தங்கத்தில் ஜொலித்தது.


பாடல்-1225:

அப்போது
இராவணன் தனது உரிமை மாதர்களுடன்
புஷ்ப விமானத்தில் ஏறித் தப்பித்தான்
மற்ற அரக்கர்கள்  தம் ஆற்றலால்
நினைக்கும் நேரத்தில்
அங்கிருந்து தப்பினர்
இலங்கை என்ற இடத்திற்கு மட்டும்
தப்பிக்கும் ஆற்றல் இல்லை என்பதால்
மலை மேல்  அங்கே வெந்தது!

பாடல்-1226:

தீப்பட்டு எரிகின்ற மற்ற அரக்கர்களை
எதிரே பார்த்தான் இராவணன்! கேட்கின்றான்
“கீழும் மேலுமாக அடுக்கிய
பதினான்கு உலகங்களும் எரிந்திட
ஊழியின் இறுதிக்காலம்  வந்துவிட்டதோ!
வேறு காரணம் உண்டோ?
தீயில் இலங்கை வேகக் காரணம் என்ன?”

பாடல்-1227:

செல்வமும் இழந்து
சுற்றமும் இழந்து
கரங்கள் கூப்பிக் கொண்டே
அரக்கர்கள் சொல்கின்றனர்
“அரசனே
கடல் அலையை விட நீண்ட
அக்குரங்கின் வாலில் இட்ட நெருப்பினால்
அக்குரங்கு சுட்டது இது!”
கேட்ட இராவணன் கொதித்தான் நெருப்பை விட!



பாடல்-1228:

“அற்பத் தொழில் செய்யும்
குரங்கின் வலிமையால் இலங்கை வெந்து நின்றது
நெருப்பு தின்று ஏப்பம் விட்டது என்கிறீரே...
தேவர்கள் சிரிப்பார்களே...
நன்றாயிருக்கிறது
மிக நன்றாயிருக்கிறது நமது போர் வலிமை!”
இராவணன் கோபத்தில் உக்கிரமாய்ச் சிரிக்கின்றான்.

பாடல்-1229:

தேவர்களை வென்ற இராவணன் சொல்கிறான்
“இலங்கையைத் தின்ற அக்னி தேவனை
தேடுங்கள் ... கொண்டு வாருங்கள்”

பாடல்-1230:

கோபம்
உலகில்
எவ்வளவு இருக்கிறதோ
அவ்வளவு கோபமும் கொண்ட இராவணன்
“அழிவு செய்த குரங்கை
தப்புவதற்கு முன்பாகக் கொண்டு வருக” என்றான்.

பாடல்-1231:

தொலைவாகவும்
அருகிலும் நின்ற வீரர்கள்
சிட்டாய் விரைந்தார்கள்
செய்கிறோம் என்றார்கள்
அடுத்த நொடி கூட ஆகவில்லை
தேரில் ஏறிச் சென்றார்கள்

பாடல்-1232:

அவர்களுடன்
அளவில்லாத வில் வீரர்கள்
மிக்க பதவி வகித்தவர்கள்
தேரின் பின்னே ஓடினார்கள் கோபமுடன்!

பாடல்-1233:

தும்பைப்பூ மாலை அணிந்த
ஏழு வீரர்கள்
கடல் போல் பொங்கி
சேனைகளைச் சரி செய்து
புறப்பட்டார்கள் போருக்கு.


பாடல்-1234
அனுமனை
வானில் தேடினார்கள்
கடலைச் சுற்றியுள்ள
இலங்கைத்தீவு முழுதும் தேடினார்கள்
வெற்றி!
அண்ணல் அனுமனை அருகில்
தமது கண்ணால் கண்டனர்.

பாடல்-1235:

பிடியுங்கள் பிடியுங்கள் என்றனர்
அடியுங்கள் அடியுங்கள் என்றனர்
முற்றிலும் கோபமுடன் வளைத்தார்கள்
முற்றிப்போன கோபமுடன் பிடித்தார்கள்
கற்று உணர்ந்த மாருதி புரிந்து கொண்டான்.

பாடல்- 1236:

கருமேகங்கள் போல
வஞ்சகர்கள் எதிர்பட்டனர்
கால்களாலும்  கைகளாலும் வேல்களாலும்
அனுமனை வளைத்தார்கள்!
வெம்மை நெருப்பு வாய்கொண்டு
அனுமனும் வளைத்தான் அவர்களை!

பாடல்- 1237:
எல்லாத்திசைகளிலும் உள்ள அரக்கர்களை
வாலினால் வளைத்தான்
மரத்தை பறித்து அடித்தான்
கோபமான அரக்கர்கள்
முதலில் ஆயுதங்களையும்
பிறகு
ஆயுளையும் இழந்தார்கள்!

பாடல்-1238:

மாருதி அடிக்க அடிக்க
துன்புற்ற அரக்கர்கள் உடம்பிலிருந்து
இரத்தம் பெருகியது
நிலம் சேறானதுமட்டுமா?
இலங்கையை எரித்த சிவந்த நெருப்பு
தணியச் செய்வதற்கு
இந்த இரத்த ஆறுதான் பயன்பட்டது!

பாடல்-1239:

போரில் இறந்தவர்கள் தவிர
போரில் தோன்றிய வீரமாகிய
ஆண் சிங்கங்கள் போரிட்டன அனுமனுடன்
கலைகளைக் கற்ற அனுமன்
காற்றின் மைந்தன் அனுமன்
எமனை விட மூன்று மடங்கு
அதிக வலிமையுடன் கொன்றிட்டான் அவர்களை!

பாடல்-1240:
கருமேக உடம்புடன்
வலிய பாதங்களும் தோள்களும் கொண்ட
அரக்க வீரர்கள் ஐம்பதினாயிரம் பேர் இறந்தார்கள்
இறக்காதவர்கள்
கடல் மேல் மிதந்தார்கள்.

பாடல்-1241:

அனுமன்
நெருப்பு கொண்ட வாலை
கடலில் தோய்த்தான்
கடல் நீர் கொதித்தது
கடலில் குதித்தவர்களும் இறந்தார்கள்
அதிலும் தப்பிய வீரர்கள்
தமது உயிரைக் காப்பது இழிவு என்பதால்
அனுமனுடன் போரிட முற்பட்டார்கள்

பாடல்-1242:

தேர் வீரர்கள்
வில் வலிமை காட்டிப் போரிட்டனர்
அவர்களையும் அனுமன் தாக்கினான்
அடிபட்டு இறந்தார்கள்.

பாடல்-1243:

பூமியை விட்டு
வானிலே சென்ற வித்யாதரர்கள்
“அனுமன் கொளுத்திய நெருப்பு
வட்டமுலை உடைய திருமகள் சீதை வாழும்
பறவைகள் வாழும்  சோலையின்
உட்புறமும் சுடவில்லை
வெளிப்புறமும் சுடவில்லை” என்றனர்.

பாடல்-1244:

அதனைக் கேட்ட
வெவ்விய வீரன் அனுமன் வியந்தான்
“தீவினையிலிருந்து தப்பினேன்!” என
மேலே எழும்பினான் உயர்ந்தான்
அசோகவனச் சீதையின்
திருவடிகள் பணிந்தான்.

பாடல்-1245:

அனுமனைப் பார்த்தனள் ஜானகி
பார்த்ததும் எரியும் மேனி குளிர்ந்தாள்
போர்த்தொழிலில் வல்ல மாருதி சொன்னான்
“வார்த்தைகள் ஏன்! வந்தனம்!” என்றனன்!

பாடல்-1246:

தெளிந்த அனுமன் புறப்பட்டான்
“கள்ள மன அரக்கர்கள் பார்த்தால்
இழிவாய்ப் பேசுவார்கள்
பிடித்துக் கொள்வார்கள்” என்று
ஒளி பொருந்திய அக்னிதேவனும் ஒளிந்தான்.

(இலங்கை எரியூட்டுப் படலம் முற்றிற்று)

திருவடி தொழுத படலம்

பாடல்-1247:

“விரைவில் இலங்கை நீங்குவேன்” என
நினைத்த அதே  கணம் அனுமன்
மலைச்சிகரம் அடைந்தான் சூரியன் போல!
நீண்டு உயர்ந்து வீங்கினான்
திரி விக்ரமனாய்!
வான் வழியே விரைந்து பறந்தான்
இராமபிரான் திருவடி வணங்கி!
திருவடி தொழுதார் எதைத்தான் அடையமாட்டார்!

பாடல்-1248:

துதிக்கை யானை போன்ற அனுமன்
“மைந்நாகம்” எனும் மலை அடைந்து
செய்தி உணர்த்தினான்
ஒரே கணம் கூட இல்லை!
மலைகளைப் பெயர்த்து எடுக்கும் வீரர்கள்
தனது வரவை எதிர்பார்த்து
கண்கள் பூத்துப்போன  மகேந்திரமலையில்
சென்று குதித்தான்!
குதித்துச் சென்றான்!

பாடல்-1249:

கூட்டிலிருக்கும் பறவைக் குஞ்சுகள்
தாய்ப்பறவை வரவுக்கு
மகிழ்ந்து கூத்தாடுவது போல்
அதுவரை
அனுமன் நிலைக்கு புலம்பிய அங்கதன் மட்டுமல்ல
அத்தனை வீரர்களும்
“சீதையை கண்டுபிடிக்கும் பணி முற்றுபெற்றது” என
மகிழ்வில் பூத்தார்கள்.

பாடல்-1250:

அனுமனைக் கண்ட மகிழ்வில் வானரர்கள்
சிலர் அழுதனர்
ச்¢லர் ஆரவாரித்தனர்
சிலர் தொழுதனர்
சிலர் துள்ளிக் குதித்தனர்
சிலர் அள்ளி விழுங்குவது போல் மொய்த்தனர்
சிலர் தழுவினர்
சிலர் அனுமனைத் தலையில் சுமந்தனர்.

பாடல்-1251:

“அண்ணலே! அனுமனே!
உன் பெருமை ஒளி முகம்
சீதையை நீ கண்டு விட்டாய் என்கிறது
தேன் இருக்கிறது
கிழங்கு இருக்கிறது
காய்களும் முயன்று தேடி வைத்துள்ளோம்
மெலிவு தீர்க! களைப்பு தீர இளைப்பாறுக” என
தனக்கு வைத்திருந்த உணவையும் இலையையும்
வரிசை வரிசையாகத் தந்தனர்.

பாடல்-1252:

புண்கள் புண்கள் புண்கள்
அனுமனின் கால்களில் மார்பில்!
தோளில் தலைகளில் பெரும் கைகளில்!
வாள்களாலும் வேல்களாலும்
மழை போல் சொரிந்த அம்புகளாலும்
அனுமன் உடல் பிளந்து
உண்டான புண்களின் எண்ணிக்கை எத்தனை ?
உலகில் இதுவரை கழிந்த நாட்களின்
எண்ணிக்கை எத்தனையோ அத்தனை!
பார்த்துப் பார்த்து உயிர் சிந்துவது போல வருந்தி
பெருமூச்சு விடுகின்றனர் வானரர்கள்!

பாடல்-1253:
அனுமன் என்ன செய்கிறான்?
வாலியின்மகன் அங்கதனை முதலில் வணங்கினான்
கரடிகளின் அரசன் ஜாம்பவானை வணங்கினான்
கடமைப்படி
வணங்க வேண்டியோரை எல்லாம் வணங்கினான்
“ஞாலநாயகன் தேவி சீதை
இங்குள்ளவர்களுக்கெல்லாம் நன்மை நடக்கும்! ” என்ற
வாழ்த்துச் செய்தி அறிவித்தான்.

பாடல்-1254:

அந்த ஒரு வார்த்தை கேட்கவே
உயிர் வைத்திருந்தது போன்ற மகிழ்ச்சி பொங்க
கரங்கள் கூப்பி எழுந்தனர்
வணங்கி கைகள்குவித்தனர்
உவகை பொங்கிட
நெஞ்சு விம்மினர் அத்தனைபேரும்!
மிகுந்த வலிமையாளனே
“இங்கிருந்து சென்றது முதல்
இப்போது வந்ததுவரை சொல்வீர்” எனக் கேட்டனர்
வாயு மைந்தன் சொல்வான்:

பாடல்-1255:

ஆண்மைத்திறம் மிக்க அனுமன்
எதைக் கூற வேண்டும் என அறிந்தவன்!
எதை கூற வேண்டாம் என்பதும் அறிந்தவன்!
அதனால்
சீதைதேவி உள்ளத்தின் அருந்தவச்சிறப்பினை
அமையுமாறு அழகுறச் சொன்னான்
அவள் அணிந்த
சூளாமணி பெற்றதும் சொன்னான்
நீண்ட வாள் அரக்கரோடு
நிகழ்ந்த போரினைச் சொல்லவில்லை
நெருப்பைச் சிந்தி இலங்கையிலிருந்து
வெற்றியுடன் மீண்டதைச் சொல்லவில்லை!

பாடல்-1256:

“அனுமனே
மகாவல்லவனே
நீ ஏதும் சொல்லாதபோதும்
நீ நிகழ்த்திய போரினை
உன் மேனிப் புண்களே சொல்லி விட்டன!
அப்போரில் நீ வென்றதை
நீ திரும்பி வந்ததால் அறிந்து விட்டோம்
இலங்கையில்
நீ இட்ட தீயை
ஓங்கும் புகை மண்டலம் ஓதியதால் அறிந்தோம்
கருத இயலாத புகழுடையவள் சீதாதேவி என்பது
உன்னுடன் மீண்டு வராமையால் தெரிந்தோம்
தெரிவதற்கு நீ தந்த செய்திகள் இவை!
இனி என்ன செய்யலாம் ?” என்றார்கள் வானரர்கள்.

பாடல்-1257:

“யாரும்
இனி வேறு ஒன்று நினைக்க ஒன்றுமில்லை
இராமசேவகன்
சீதாதேவியைக் கண்ட செய்தி
விரைவில் செப்பி
அண்ணல் இராமபிரான் உள்ளத்து
அருந்துயரம் ஆற்றுவதே
நமக்கு அறிவுடமை” என்று வானரர்கள்
பொருக்கென எழுந்து போனார்கள்!

பாடல்-1258:

அனுமனிடம் வானரர்கள் மேலும் சொல்லினர்
அக்குரல் - 
நன்றி மறவாத உத்தமக் கூட்டத்தின் குரலாக ஒலிக்கின்றது
“சாவதிலிருந்து எம்மை காத்திட்ட வீரா!
சீதை தேவியை மீட்பதாக
நாம் குறித்த நாள் மிகவும் கடந்து
நமது சேனை முழுதும் வருந்தி வருந்தி
விரைவாகச் செல்லும் ஆற்றல் இழந்துள்ளது
தலைமகன் இராமனின் மெலிவு தீர
நீ முன்னே செல்க!முதலில் செல்க!”
அனுமன் அச்சேனை முன்பு
“நன்று” என்று சொல்லிச் சென்றான் .

பாடல்-1259:

மூன்று தலைகள் உடைய சூலம் ஏந்திய சிவபெருமானும்
“செய்து முடிக்க அரும்பணி !பெரும்பணி !” என
வியக்கத்தக்க வித்தகன் அனுமன் ஆவான்!
தூது சென்று மீண்டதும்
இறுதியாய் விளைந்த பயனும்
யாம் அறிந்த அனைத்தும் சொன்னோம்
ஆழியான் இராமபிரானிடம் மன ஒட்டம்  குறித்து
எழுத்து இரதம் திருப்புகிறோம் .

பாடல்-1260:

துன்பம் உற்ற போது
தேற்றுதற்கு ஒரு இதயம் வேண்டும்
பிரசிரவண மலையிலே
இராமபிரான் சோர்ந்து சோர்ந்து போகும்போது
சூரியன் புதல்வன் சுக்ரீவன்
தனது சிறந்த சொற்களால் சீரிய சொற்களால் உயிர்ப்பித்தான்
அதனால்
மிகப்பல ஆயிரம் உயிர்கள்
தனது உடைமை எனப் பெற்றான் இராமபிரான்!

பாடல்-1261:

திண்மை மிகு அனுமனை
திறமை மிகு அனுமனை நினைக்கும் சிந்தையானாக
இருக்கின்ற இராமபிரான்
“உயிரோடுதான் இருக்கிறான்” எனும் அளவில்தான் இருந்தான்
ஏனெனில்
நெடிய மூன்று திசைகளிலும் சென்ற வானரவீரர்கள்
காணவில்லை சீதையை எனும் உரையால்!
காணவில்லை என்ற ஒற்றைச் சொல்லால்
 இராம  உள்ளத்தின் உயிர் வறண்டது.

பாடல்-1262:

ஆரியன் இராமன்
அருந்துயர்க் கடலுள் ஆழ்பவன் ஆனான்
சூரியன் புதல்வன் சுக்ரீவனை நோக்கி
“நாம் துவங்கிய செயல் சிறந்தது அல்ல
நமது செயல்
தீர்க்க முடியாத பழியோடு
வலிய பழியோடு முடிந்ததாகும்! ” என்றான்.

பாடல்-1263:

சீதாதேவியை மீட்க நாம் குறித்த நாட்கள்
யானையிலிருந்து எறும்பு அளவுக்கு
குறைந்து குறைந்து குன்றி விட்டன
தெற்கு திசை நோக்கி
நறுமணம் மிகு கரும் கூந்தல் ஜானகியை நாடி
தேடிச் சென்ற அனுமனும் வரவில்லை
“மாண்டு விட்டார்களோ..?
வேறு அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும்
வீரனே கூறுக?”” என்றான் சுக்ரீவனிடம்.

பாடல்-1264:

ஆமாம்.. ஆமாம்.. சீதை மாண்டிருப்பாள்
“அவள் மாண்டதை எப்படிச் சொல்வது?”என்பதால்
சொல்வதை விடவும் இறப்போம் என
பெரும் துன்பமோடு இறந்தார்களோ
அல்லது
தேடுகிறவர்கள்
இன்னமும் அலைந்து அலைந்து திரிகின்றார்களோ.

பாடல்-1265:

அரக்கரைக் கண்டிருப்பார்கள்
கறுவும் கோபமுடன் பெரும் போர் வந்திருக்கும்
தொடங்கிய போரில்
வஞ்சகர்கள் மாயையால் என்னவர்கள் அனைவரும்
விண்ணுலகம் போய் சேர்ந்தார்களோ!
அல்லது
தப்பவியலாத  நெடும் சிறைக்குள்
சங்கிலியோடு உள்ளார்களோ....


பாடல்-1266:

“குறிப்பிட்ட நாளுக்குள் மீட்டு
சீதையுடன் செல்ல முடியாத நாம்
எதற்கு அங்கு செல்ல வேண்டும்” என அஞ்சி
இன்பமும் துன்பமும் இல்லாத தவநிலைக்கு சென்று
அயர்ந்துவிட்டார்களோ!
வேறு என்னதான் அவர்களுக்கு நடந்தது?
விளம்புவாய் சுக்ரீவா!” என்றான்
மானுடம் போதித்த வள்ளல்பிரான்.

பாடல்-1267:

சூரியன் திடீரென
தென் திசைக்கு வந்தது போல அனுமன்
அப்போது இராமபிரான் இருப்பிடம் பிரசன்னம் ஆனான்
“யாசிக்கும் கரங்களுக்கு
பொன் மழை பொழியும் பெருவீரன் இராமபிரானே...” என
அன்புறு சிந்தையோடு
அனுமனை அமைய நோக்கினான்.

பாடல்-1268:

இராமபிரானை எய்திவிட்டான் அனுமன்
ஏந்தல் இராமபிரானின் திருவடியைத் தொழவில்லை
தாமரையிலிருந்து நீங்கிய திருமகளாம் சீதை
இருந்த திசை நோக்கி
தலை மேல் கரம் குவித்து
நிலத்தில் வீழ்ந்து இறைஞ்சி வணங்கினான்.

பாடல்-1269:

எதையும் குறிப்பினால் உணரும்
கொள்கையான் இராமபிரான்
திறம் மிகு அனுமன் செயலினை
நன்கு நோக்கினான் அதே நொடியில்
“வண்டு உறையும் கூந்தலாள் சீதையும் நலம்
அவள் கற்பும் நலம்” என அறிந்து கொண்டான்.

பாடல்-1270:

அனுமன் காட்டிய குறிப்பே
சீதையின்
நிலைகாட்டும் அளவுக் கருவி ஆனது
ஓங்கிய உயர்வினால்
அங்கு நடந்தது உய்த்து உணர்ந்தான்
இராமபிரான் தோள்கள் மகிழ்வால் பருத்தன
மலர்க்கண்கள் ஆனந்தக்கண்ணீரில் விம்மின
மிகப் பெரும் துயரம் நீங்கியது
சீதையிடம் கொண்ட காதலோ நீண்டது.

பாடல்-1271:

“கண்டேன்! கற்பினுக்கு அணிகலன் சீதையை!
கண்களால் கண்டேன்
தெளிந்து சுருளும் அலைகடல் சூழ்ந்த
இலங்கையின் தென் திசை நகரில் கண்டேன்
இனி சந்தேகம் வேண்டாம்!
துறந்து விடுங்கள்
இதுவரை அனுபவித்த துயரமும் வேண்டாம்”
என்றான் அனுமன்

பாடல்-1272:

“ஐயா ! ஐயனே!
உன் பெரும் தேவி  -
உன்னைப் பெற்ற தசரதன் மருமகள் எனும்
வாய்மைக்கு மட்டுமல்ல
மிதிலை அரசன் ஜனகன் மகள் எனும் பண்புக்கும்
தகுந்த சிறப்பு கொண்டவள் எனத் திகழ்கிறாள்
என் பெரும் தெய்வம் ஐயா!
இன்னமும் கேளுங்கள்” என்றான் அனுமன்.

பாடல்-1273:

பொன்னை ஒத்தது பொன் தவிர வேறில்லை
பொறுமையில் தனக்கு ஒப்பவர் இல்லை என
சீதை தலை சிறந்தாள்
இராமா! உம்மைத் தவிர
உமக்கு ஒப்பானார் இல்லை என
தன்னையே உனக்குத் தந்தாள்
அடிமைத் தொழிலில் என்னைத் தவிர
எனக்கு ஒப்பு யாருமில்லை என
எனக்கும் சிறப்பு ஈந்தாள் ஐயா.

பாடல்-1274:

எம்மோய்!
எப்படிப் புகழ்வேன் சீதாதேவியை!
உன் குலத்தை உன் புகழ் அளவு ஆக்கினாள்
தன் குலத்தை தன்னால் சிறப்பாக்கினாள்
இராவணன் குலத்தை எமனுக்கு ஆக்கி
வானவர் குலம் வாழ வைத்தாள்
என் குலத்தை எவரும் புகழ வைத்தாள்
வேறு செய்ய இனி என்ன இருக்கிறது!

பாடல்-1275:

பெரும் வில்லினை தோளில் ஏந்தி ஏந்தி
தடம் பதித்த தோள் உடைய வீரா!
“திரிகூடமலை மேலிருக்கும் இலங்கையில்
நல்ல பெரும் தவம் செய்யும் நங்கை கண்டேன்”
என்று சொல்லமாட்டேன்!
உயர்ந்த பொறுமை ஒன்றும்
உயர் குடிப்பிறப்பு என்ற ஒன்றும்
பெரும் பொறுமை என்பதும்
ஒன்று சேர்ந்து
களிநடம் புரியக் கண்டேன்!

பாடல்-1276:

இராமபிரானே
“நீவீர் சீதையைப் பிரிந்து இருந்தீர்”
என்பது பொருத்தமற்ற சொல்லாகும்!
ஏன் தெரியுமா
நீவீர் சீதையின் கண்களில் உள்ளீர்
நீரே கருத்திலும் இருக்கின்றீர்
நீரே அவள் எண்ணமாக உள்ளீர்
சீதையின் கொங்கைக் சுவடுகள் மீது
ஓயாமல் மன்மதன்
எய்த அம்புகள் தொளைத்து ஏற்பட்ட
ஆறாத புண்ணிலும் நீவீர் இருக்கின்றீர்.

பாடல்-1277:

“ஐய!
தவம் செய்த தவமாகிய சீதை
கடல் நடுவே இருக்கும் இலங்கை நகரின் ஒருபுறம்
ஒளிமயமான வானளாவிய கற்பகச் சோலையின் உள்ளே
உன் தம்பி இலக்குவன் அமைத்த
புல்லினால் அமைத்த பர்ணசாலையில் வீற்றிருந்தாள்”

பாடல்-1278:

உலகைப் படைத்த
தாமரை மலர்வாழ் பிரம்மன்
இராவணனுக்கு இட்டான்
“உன்னை வ்¢ரும்பாத ஒருத்தியை
நீ தீண்டினால்
எண்ணவே முடியாத அளவு சிதறி இறப்பாய்”
என்ற மொழியை எண்ணி
வான் உயர் கற்பு மிக்க சீதையின்
புண்ணியமேனி தீண்டாமலே இராவணன்
மண்ணோடு பெயர்த்து
எடுத்துக் கொண்டு போனான் சீதாதேவியை!

பாடல்-1279:

“சீதையை இராவணன் தீண்டவில்லை” எனும்
வாய்மையை உணர்வாய் இராமனே
பிரம்மன் படைத்த அண்ட கோளம் வெடிக்கவில்லை!
கடல்கள் கரை நோக்கி ஏறி அழிக்கவில்லை!
சூரிய சந்திரச் சுடர்கள் கீழே விழவில்லை!
வேத விதிகள் மாளவில்லை!

பாடல்-1280:

கற்பு நங்கை சோகத்தாள் சீதை
உன்னைப் பிரிந்து
வான தேவர்களும் தொழும் பெருமை அடைந்தாள்
அவர்களும் சிறப்பு பெற்றனர்
உமை அம்மை -
தற்போது சீதாதேவியின் பெருமையால்
இடபாகம் நீங்கி
சிவனின் தலையில் உள்ளாள் !
திருமகளோ -
திருமாலின் மார்பு நீங்கி
திருமுடி மேல் ஏறிக் கொண்டாள்!

பாடல்-1281:

இலங்கை முழுதும் தேடினேன்
இராவணன் அரண்மணையில் தேடினேன்
பொன்னால் ஆன குழை அணிந்த பெண்கள் எல்லாம்
பொதுவாக நோக்கியபடியே வந்தேன்
அசைந்தாடும்  அசோகவனம் குளிர்சோலை புகுந்தேன்
அலைந்து கலங்கும் அலைகளுடன்
கண்ணீர் வழிய
கண்ணீர்க்கடலாக சீதை கண்டேன்.

பாடல்-1282

பேய்களின் கூட்டமும் அஞ்சிட
அரக்கியர் கூட்டம்
சீதையை நெருக்கிச்சூழ்ந்திருந்தது
உன்பால் கொண்ட நேயமே
அவள் அச்சத்தை அன்று நீக்கிய ஒரே கேடயம்!
இரக்கம் என்ற ஒன்று
ஏந்திழை வடிவம் எய்தியதோ எனும்படி
கொடுமை மிக்க சிறையுள்
உத்தமி சிக்கியிருந்தாள்! அம்மா!

பாடல்-1283

“ஐயனே!
சீதாதேவியை வணங்குவதற்கு
பொருத்தமான நேரத்தை நோக்கி இருந்தேன்
அப்போது
வேல் ஏந்திய இலங்கை வேந்தன் வந்தான்
சீதாதேவியிடம் கெஞ்சினான் காதலுக்காக!
கடும்சொற்கள் கூறி சீறினாள் சீதை!
அதுகேட்டு அவளைக் கொல்ல முயன்றான் இராவணான்!”

பாடல்-1284

ஐயனே!
அப்போது சீதாதேவியைக் காப்பாற்றியது
சீதையின் கற்பு ஆற்றல்
உனது அருள் ஆற்றல்
தூய நல் அறத்தின் ஆற்றல்
அதனால்
ஒன்றும் செய்ய முடியாத இராவணான்
அரக்கியர்களிடம்
“நீங்கள் புத்தி கூறுங்கள்” என வெளியேறினான்
அரக்கியர் அனைவரும்
என் மந்திர ஆற்றலால் உறங்கிப்போயினர்.


பாடல்-1285

அந்த ஒரு கணத்தில்
தனது அரிய உயிரை துறப்பதாக முடிவெடுத்து
ஒரு கொடியை
மரக்கிளையில் இறுக்கமாகச் சுற்றி
தன் மணிக்கழுத்தில் சார்த்திக்கொண்ட
அந்த வினாடியில்
நாயேனாகிய நான்
சீதாதேவியின் பொன்னடிகள் வணங்கி
நின்திருப்பெயர் புகன்றேன்.

பாடல்-1286:

மேகமழை போல கண்ணீர்
மெல்லிய கொங்கைகளில் வழிய
மழைக்கண் நீராள் சொன்னாள்:
“உன் செயல்
வஞ்சக அரக்கரின் மாயச்செயலோ.. என
எனது மனதில் சந்தேகம் வந்தாலும்
நான் இறக்கும் நொடியில்
அஞ்சன வண்ணத்தான் திரு நாமம் உரைத்தாய்
மரணத்தை துறக்கச் செய்தாய்”
என உவகையோடு சொன்னாள்.


பாடல்-1287:

“என் தந்தை போன்றவனே” என்று
பேசத் துவங்கிய சீதை
“நான் சொன்ன அடையாளங்களை
அறிவினால் ஆராய்ந்து தெரிந்து
சிந்தையில் வஞ்சம் இல்லை என முடிவு செய்து
உனது வண்ண மோதிரத்தை உற்றுக் கண்டாள்
மரணகாலத்தில் உயிர் தந்த மருந்து போன்றது” என்றாள்.

பாடல்-1288:

“செல்வனே!
ஒரே கணத்தில் இரண்டு அதிசயங்கள் கண்டேன்
ஒளி வீசும் மணிகள் பதித்த மோதிரத்தை
அழகிய முலைத்தடத்தில் வைத்ததும்
விரகம் எனும் பெரும் தீயினால் அது வெந்து உருகியது
அடுத்த கணமே உருகிய மோதிரம்
குளிர்ந்து ஒன்றாகி சேர்ந்து
மீண்டும் அடுத்த கணம் மோதிரமாகியது  !
எப்படி இத்தனை குளிர்ச்சி என யோசித்தேன்
இராமனின் மோதிரம் பட்ட மகிழ்ச்சி தந்த குளிர்ச்சி!

பாடல்-1289:

வாங்கினாள் கணையாழியை
அடடா இது வஞ்சகர் ஊரில் கிட்டியதே என நினைத்தாள்
அதனால்
மழைக்கண்ணீரால்
ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தாள் ஏங்கினாள்
மேனி வியந்தாள் வீங்கினாள் விம்மினாள்
கண் இமைக்காமல்
மோதிரமே பார்த்து வியந்தாள்
பெருமூச்சு விட்டாள் ஆனால் ஏதும் சொல்லவில்லை.

பாடல்-1290:

மன்னா!
சீதையிடம் பேச்சே வரவில்லை
போன உயிர் திரும்பியது போல
பெருமூச்சு கூட
நீண்ட நேரம் சென்றே வந்தது மன்னா!
நடந்ததை எடுத்துச் சொன்னபிறகுதான் மூச்சு வந்தது !
மீட்க
காலதாமதம் ஆனமைக்கு
இருக்குமிடம் அறியாமையே காரணம் என
விளக்கிய பிறகுதான் மூச்சு வந்தது!
இராமபிரானாகிய உன் வருத்தங்கள்
சொன்னபிறகுதான் சீதையிடம் மூச்சு வந்தது !

பாடல்-1291:

இராமா   உன் நிலைமைகள்
நிகழ்ந்த விதமாக சொன்னதும் கேட்டுக் கொண்டாள்
அங்கே  உள்ள நிலைமைகளை
அடியேன் அறியுமாறு சொன்னாள்
“ஒரு மாதம் உயிரோடு இருப்பேன்
அதன் பின் இறப்பது உண்மை” என
உன் மலரடி
தன் தலைமீது வைத்துக் கொண்டாள்.

பாடல்-1292:

“தன் ஆடையில்
முடித்து வைத்திருந்த சூளாமணி எடுத்து
இரத்தினங்களுக்கெல்லாம் சிகரம் போன்ற சூளாமணி எடுத்து
எனது கைத்தலத்தில் அளித்தாள்
வித்தகா!
உன் தாமரைக் கண்களால் காண்க!” என
வேதங்கள் வாழும் காலமெல்லாம்
புகழோடு ஓங்கி நிற்கும் அனுமன் கொடுத்தான்.

பாடல்-1293:

மெல்ல மெல்ல
பையப் பைய
உள்ளே காமம் பரிணமித்து
உயர்ந்து பொங்கி
உடல் தளர்ந்து வெதும்பி
மெலிவான நிலையிலிருந்து விடுபட்டான் இராமன்!
இராமபிரான் கரங்களில்
சூளாமணி பெறும் காட்சி
திருமண வேள்வித்தீயின் முன்பு
தொட்டுப்பார்த்த
அழகிய சீதையின் திருக்கரம் போலவே இருந்தது!

பாடல்-1294:

இராமனின் உரோமங்கள் பொடித்தன
சிலிர்த்தன
கண்ணீர் பொங்கியது
மார்பும் தோளும் துடித்தன
வியர்வைத் துளிகள் உண்டாயின
அழகிய மணிவாய் மடிப்புற்றது
உயிர் வந்தது! போனது!
உடம்பு பூரித்தது
என்ன!
இராமனின் அந்தத் தன்மை புரிந்து சொல்ல
யார் இருக்கிறார்கள்!

பாடல்-1295:

அப்போது
சூரியன் மகன் சுக்ரீவன்
“ஐயனே! கேள்!
சீதை நம்மால் காண எளியவள் ஆகிவிட்டாள்” என்றதும்
இராமன் சொன்னான் நேர்த்தியாக தனது அவசரத்தை!
“இன்னும் இங்கே நின்று
காலம் தாழ்த்துகிறாய் போலும்”
தூண்  போன்ற தோள்களுடன் சுக்ரீவன் புறப்பட்டு
ஆணை இட்டான் படைகளுக்கு!

பாடல்-1296:

“ஏ!” எனும் நேரத்துள்
கொடிய சேனைகள் போரிடக் கிளம்புக!
என்றான் சுக்ரீவன்
முரசு ஒலி அறைந்தனர் வள்ளுவர்!
எழுபது சேனை வானர வெள்ளம் புறப்பட்டது!
பாய்கின்ற கடல்
கடலை விட்டு வெளியே வந்தது போல
தென் திசை நோக்கி பாய்ந்தது படை!

பாடல்-1297:

வானர வீரர்கள் அனைவரும்
திரிகூட மலை மீதுள்ள இலங்கை பற்றி
கரிய நிற அரக்கர்களின் காவல் வலிமை பற்றி
அரண் பற்றி
அனுமன் விளக்கிச் சொல்ல சொல்ல
வழி சொல்லச் சொல்ல
எளிதாகக் கடந்தார்கள்! இலங்கை நெருங்கினார்கள்!

பாடல்-1298:

நீண்ட வழி செல்கின்றான் இராமபிரான்!
அறப்பயணம் செல்கின்றான் இராமபிரான்
வானர வீரசேனையுடன்
குரங்கினத்துக் கோமான் சுக்ரீவனுடன்
இலக்குவனுடன்
பெரிய சோலைகள் கொண்ட
மலை வழியிலே பகல் இரவாக பதினொரு நாட்கள்!
தெற்குத் திசையில் கடல் கண்டார்கள்!

(திருவடி தொழுத படலம் முற்றிற்று)

சுந்தர காண்டம் நிறைவு பெற்றது.
















 






No comments:

Post a Comment