பாடல்-1176:
இலங்கை நகர் முழுதும்
அனுமன்சீதையை தேடினான்
அறிவினால் உணர முடியவில்லை
ஆனால்
அரக்கர்கள்
அனுமனை
இலங்கை முழுதும் இழுத்துச்சென்று
காட்டியபோது அனுமனால் காண முடிந்தது-
பொறிகள் முன்னே செல்ல
அதன்பின் செல்லும் அறிவுபோல.
பாடல் -1177
முழுவதும்
எல்லாமும் பார்த்தான்
ஊர் முற்று பெறும் பகுதி கடந்தது.
தப்பிச்செல்லும் தருணமிது என எண்ணிணான்
உடனே-
தன்னை வலிமையாகப் பற்றியிருக்கும்
இரண்டு லட்சம் தோள்களை
தன்னனோடு இழுத்துக்கொண்டு பறந்தான்
கயிறுகள்-
வானிலிருந்து தூண்கள் போல் தொங்கின
அரக்கர் கூட்டங்கள் கீழே விழுந்தன.
பாடல் -1178
கீழே விழுந்த
ஒரு லட்சம் அரக்கர்கள் உயிர் இழந்தனர்
தனது உடலை
வலிமையாகக் கட்டியிருக்கும் கயிற்றுடன்
பறந்திடும் அனுமன்
பாம்புக்கூட்டம் சூழ
பறந்திடும் கருடன் போல் உள்ளான்.
பாடல் -1179
“முன்பு
சிவபெருமான்
பகைவர்களின் முப்புரம் எரித்த தொழில் வெட்கப்படும்படி
பெரும் தீ மூட்டுவேன்
அரக்கர்களின் மாளிகைகள் எரிந்திட
நெருப்பு மூட்டுவேன்” என
ஐயன் அனுமன் எண்ணும்போது
தன் மன்னன் இராமனை வாழ்த்தி
பொன்மயமான இலங்கை மீது
போர் வாளாகிய
போர் வாலினை
நெருப்புடன் போகவிட்டான்!
அக்கினிக்குஞ்சொன்று செய்தான்!
தத்தரிகிட தித்தோம் !
பாடல் -1180
அனுமனது வாலின் தீ
இலங்கையின் பரப்பு முழுதும்
விரைவாக தீய்த்தது
பரவுகின்ற தீயின் வேகமும் திறமும்
மேரு மலையை வில்லாக்கி
செந்நிற சிவபெருமானின் தோள் வலிமை
எய்திட்ட அம்பு போல பவழ நிறத்தில் இருந்தது
பாடல் -1181
விஸ்வகர்மன் எனப்படும்
சிற்ப நூலில் வல்ல தேவதச்சன்
வருந்தி வருந்தி
தனது கைகளால்
பொன்னாலும், வெள்ளியாலும் செய்த
அழகிய மாளிகைகள் தோறும் நெருப்புடன்
முற்றம் முற்றமாக தாவிச்சென்றான் அனுமன்
ஊழியின் இறுதிக்காலத்தில்
மலைமேல் விழும் இடிகள் போல
காளை போல இருந்தான்
வாலில் ஒளிரும் நெருப்பு அனுமன்.
பாடல் -1182
கறுத்த உருவ அரக்கர்கள்
இத்தனை வருடமாய்
நெய் சொரியும் வேள்விகளை நிறுத்தியதால்
பசியுடன் இருந்த நெருப்பு தேவன்
அனுமன் வாலை அன்புடன் பற்றிக்கொண்டானோ!
ஆலம் உண்ட சிவன்
அனைத்தும் அழித்து அனுமனுக்கு ஊட்டி விட்டானோ!
ஊழிக்கால வேள்வி நெருப்பில்
உலகமே ஆகுதியாக இடப்பட்டு
உண்டு வளரும் நெருப்பு போல
இலங்கை நகர் முழுதும்
நெருப்பால் தின்றான் அனுமன்.
இலங்கை எரியூட்டும் படலம்
பாடல்: 1183
அனுமனது வாலின் தீ
கொடிகளில் பற்றியது
மேலும் பலவற்றை எரித்தது!
நீண்ட தூண்களைத் தடவியது
நெடியச் சுவர்களை
வாலினால் முழுதும் சுற்றியது!
சுற்றிய சுவர்களொடு
வீடுகளை முற்றிலும் அழித்தது.
பாடல்-1184:
அனுமன் வால் தீ
வாசலில் தீயானது
வாசல் தீ
மாளிகைகளை மொய்த்தது
நிலை கெட்டனர் நகர மக்கள்
ஊஞ்சல் போல
முன்னும் பின்னும் ஓடினார்கள்
தப்பி ஓடிட வழி தெரியவில்லை
வருத்தத்தின் ஒலியும் வலியும் புறப்பட்டன!
பாடல்-1185:
இரத்தின ஒளி மாளிகைகள்
செந்நிறத் தீ ஒளி பெற்றன
அதனால்
தீப்பற்றிய இடம் து?
தீப்பிடிகாத இடம் எது? என
அறிய முடியாமல்
வளையல் அணிந்த வணிதையர்கள்
அலமந்து போனார்கள்!
பாடல்-1186:
தேன்மலர்க்காடுகள் முழுதும்
நெருப்பு மொய்த்தது
நெடுந்தூரம் வரை புகை பரவியதால்
மயில்சாயல் மங்கையர்களுக்கு
எந்த திசையில் செல்வதெனப் புரியவில்லை
வாய்விட்டுப் புலம்பினார்கள்.
பாடல்-1187:
அரக்க மகளிருக்கும் ஆடவர்களுக்கும்
தலைமுடி நிறமும் நெருப்பு நிறமும்
ஒன்றாகவே இருப்பதால்
தீப்பிடித்த இடம் எது
தீப்பற்றாத இடம் எது உணராதவர் ஆயினர்
கூச்சலிட்டார்கள்
நடுவர் தலையில் ஒருவர் நீர் சொரிந்தனர்.
பாடல்-1188:
நெருப்பின் பாய்ச்சலும் விரைவும்
மாயையை எரித்து
சான்றோர் அடையும் ஞானம் போலிருந்தது
அரக்கர்களின் வீட்டிலிருந்த நெருப்புகள் எல்லாமும்
இராவணன் சொல்லிய சொல்லுக்காகப்
புறப்பட்டு வெளியே வந்தது போலிருந்தன.
பாடல்-1189:
வாமன வடிவத்தில்
குறுகிய குறட்பா போல சிறிதென
அடி எடுத்து வைத்து
உலகெலாம் அளக்க விரிந்து
“இன்னொரு உலகம் கொடு” என எழுந்து
உயரும் திருமால் போல
பறந்து உயர்ந்தது தீ!
பாடல்-1190:
நீலநிற யானைகள் யாவும்
நெருப்பு பற்றியதால்
உடல் வெந்து
தோல் நீங்கி
மதமயக்கமும் கொடும்கோபமும் கொண்டு
வெள்ளை யானைகள் ஆகின.
பாடல்-1191:
வெப்பமான புகை
தீயோடு சூழ்ந்திருப்பது போல் காணப்படுவதால்
மேகங்கள் ஏமாந்து
ஆறுகளில் விழுகின்றன எருமை போல!
அன்னபறவை போல
பெண்களும்
கடலோரம் ஒதுங்குகின்றனர்.
பாடல்-1192:
பொடித்து
பொடிப்பொடியாக எழுந்தது பெரும் பொறி!
இடியின் வம்சமோ என
நெருப்புப் பொறிகள் வெடித்து வீழ்கின்றன
எல்லா இடமும் வெடித்து விழுவதால்
கடல் கொதித்து அதனால்
மீன்கூட்டங்கள் உயிர் சோர்ந்தன!
பாடல்-1193:
எதையும் பருகும் நெருப்பு
உள் வாங்கிடப் புகுந்து புகுந்து எரிகிறது
மாளிகைகளில் உள்ள
பொன் பொருள்கள் உருகி ஓடி
கடலில் நடுவே புகும் போது
கெட்டிப்பட்டு
நெடிய
பொன் தண்டாகத் திரண்டு விட்டது.
பாடல்-1194:
மலை போன்ற மாளிகைகள் என்ன!
வரிசையாக நிற்கும் சோலைகள் என்ன!
நகரத்தின் தரை முழுதும் தங்கமாயிருந்தது என்ன!
எல்லாம் நெருப்புபட்டு உருகின வெந்தன
சாபமொழி போல!
பாடல்-1195:
நெருப்பின்
புகை படிந்து படிந்து
கல் கற்றை போல படிந்து
தேவலோகம் இருட்டானது
உயர உயரமான தேர்கள்
மணிகள் பதித்த சக்கரங்கள்
எல்லாமும் எரிந்து
ஒரே தொகுதியாகத் திரண்டன.
பாடல்-1196:
தீயவர்களின் இடத்திற்கு சென்றால்
தீயவர்கள் அங்கே இல்லையென்றாலும்
தீமை செய்யவே இயலும் என்பது போல
அரக்கர்களின் மதுச்சாலையில்
புகுந்த நெருப்பு
அங்குள்ள மதுவை அருந்திய நெருப்பு
தீங்கு செய்தது.
பாடல்-1197:
இலங்கையைத் தழுவும் நெருப்பு
கடலை உலை நீர்போல் கொதிக்க வைத்தது
கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்கள்
குழுவாய்ச் சென்று
குளிர் மேகத்தையும்
கொதிக்க வைத்ததே!
பாடல்-1198:
நிலத்தின் வெப்பம்
“பேய்த்தேர்” எனப்படும்
கானல் நீரை உண்டாக்கியது
தம் உடலைக் குளிர்விக்க
காட்டாறு எனக்கருதி
வானம் வழி ஓடும் அரக்கமகளிர்
அதில் குதித்தார்கள்!
பாடல்-1199:
தேன் மலர்ச் சோலை
தீயில் விழுந்தது அறியாமல்
தேன்மலர்களில்
எப்போதும்போல்
தேன் அருந்தும் வண்டுகள் ஏமாந்து
பரவிச் சென்ற நெருப்புச் சுடர்களை
“ஓகோ! பெரிய தாமரைக்காடு”
என நினைத்துக் கொண்டன.
பாடல்-1200:
வில் புருவம் கொண்ட மகளிர்
வீட்டிலேயே இருக்க முடிவு செய்தனர்
“நமக்கு ஒரு பொறுப்புத்தான் உண்டு
நம் உயிர் நாயகரான அரக்கர்கள்
இறந்து போய்விட்டனர்
தீப்பற்றிய பிறகு
வெளியில் செல்லக் கூடாது”
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment