Friday, 11 April 2014

சுந்தர காண்டம்1151 - 1175


பாடல்-1151:

அனுமன் சொல்லி முடித்ததும்
“இப்படியெல்லாம் சொன்னது ஒரு குரங்காம்!
இது நல்லது! நல்லது!” என்று
பெரும் சிரிப்பு ச்¢ரித்தான்
ஆம்!
வெற்றியைத் தவிர வேறு அறியாத இராவணன்.

பாடல்-1152:

“குரங்காகிய சுக்ரீவன் சொன்னது இருக்கட்டும்
மனிதனாகிய இராம இலக்குவன் வெற்றி இருக்கட்டும்
அடேய்!
தூதாக புகுந்து வந்த நீ
அரக்கர்களை எதற்கு அழித்தாய்?
அதைச் சொல்” என்றான் இராவணன்.


பாடல்-1153:

பதில் புறப்பட்டது
“இராவணனாகிய உன்னை எனக்குக் காட்டுவார் இல்லை
அதனால்
நறுமண அசோகவனம் அழித்தேன்
அதனால் என்னைக் கொல்ல வந்தவர்களை வீழ்த்தினேன்
பின்பு உன்னை
மென்மையோடு அடக்கத்தோடு வந்தது ஏன் எனில்
உன்னைக் காணவேண்டும் எண்ணத்தினால்தான்!”

பாடல்-1154:

அனுமன் சொன்ன அடுத்தகணம்
மின்னும் வாள் போன்ற பற்கள் கொண்ட இராவணன்
நெருப்பு போல் பெருங்கோபமுடன்
சினம் வீங்கினான்
“கொல்லுங்கள் இதை !” என்றான்
கொல்லும்படை சூழ்ந்த போது
“நில்லுங்கள்” எனத் தடுத்தான் நீதியுடைய விபீஷணன் !

பாடல்-1155:

எழுந்து  நிற்கின்ற அண்ணலை
சினமுடன் நிற்கின்ற அரக்கனை
நீண்ட கைகளால் வணங்கினான் விபீஷணன்
“மூண்ட கோபம் முறையல்ல
அறிய வேண்டும் உண்மையை” என
மெல்ல
மெதுவாக விளம்புகின்றான் விபீஷணன்


பாடல்-1156:

“வேதங்களில் வல்லவனே ..
எத்தகுதியும் பெற்றவனே ..
மூன்று உலகமும் ஆதி காலத்தில்
அறநெறி மூலம் படைத்த அந்தணன் பிரம்மனின்
ஆற்றல் மரபில் வந்தவன் நீ
ஆன்ற தவநெறி உணர்ந்தவன் நீ
இந்திரன் கூட 
உனக்குப் பணி செய்யும் அளவு
உயர்ந்து விட்ட இறைவன் நீ !
“தூது இயம்ப வந்தேன்” என்ற சொன்ன பிறகும்
அனுமனைக் கொல்வாயோ!”

பாடல்-1157:

“பூலோகம் முழுதும் பார்
அண்ட கோளத்தின் உள்ளேயும் பார்
பொய் தீர்ந்த வேதங்கள் இயங்கும்
வேறு  வேறான இடங்களில் உள்ள
மற்ற மற்ற வேந்தர்களையும் பார்
மாதர்களைக் கொன்றிருக்கலாம்
தூதர்களைக் கொன்றார்கள் யாராவது உண்டா? யோசி !”


பாடல்-1158:

“தூதன் என்பவன் யார்?
பகை கொண்ட நாட்டுக்கே வருவார்கள்
தன்னை அனுப்பியவர்கள் பகர்ந்த
செய்திகளைக் கூறுவார்கள்
அது கேட்டு
பிறர் தரும் ஏற்படும் கோபம் அடக்கிக்கொள்வார்கள்
உண்மை விளம்பவேண்டும் என்ற விரதம் கொண்டவர்கள்
நேர்மையான அறிவுத் தொழில் செய்கிறவர்கள்
அவர்களை அழிப்பது
நகைப்புக்கு உச்சமாகும்
நல்குலமே பழி சுமக்கும் ! அறிவாயா நீ ?”

பாடல்-1159:

“உலகங்களைக் காக்கும் இராவணனே
உன் பகைவர் ஏவியதால் வந்தவனைக்
கொல்லுதல்  என்பது
மட்டமான செயல்
மூன்று தலைகள் உடைய சூலம் ஏந்திய ஈசன்
திருமால், பிரம்மன் மட்டுமல்ல
நம் ஆக்கம் கண்டு பொறுக்காத தேவர்களும்
எள்ளி நகையாடுவார்கள்.


பாடல்-1160:

“இளையவள் சூர்ப்பனகையைக் கொல்லாமல்
இராம இலக்குவ வீரர்கள் 
இரு செவிகளை மூக்கினை அறுத்தார்கள்
“இங்கு நடந்ததை அங்கு சொல்” என அனுப்பினார்கள்
இராவணா! யோசி!
அனுமன் உயிரை நீ எடுத்து விட்டால்
இங்கு இவன் கண்டதை
அங்கு சொல்லாமல் தடுத்தவன் ஆகிறாய்” என்று
பொருந்துமாறு கூறினான் விபீஷணன்.

பாடல்-1161:

இராவணன் இதயம் கட்டுப்பட்டது
நல் வார்த்தைகள் பேசியது
“நம்பிக்கைக்கு உரியவனே ! நல்ல நீதி கூறினாய்
அனுமன்  குற்றம் செய்தவன் தான்
ஆனாலும் நாம் கொல்வது குற்றமே”
என்ற இராவணன் மேலும் கூறினான்
“அனுமனே நீ விரைந்து ஓடிச்செல்
இராம இலக்குவனிடம் இங்கு நடந்ததைக் கூறு”

மேலும்  கூறுகிறான்
“இந்த வானரத்தின் வாலை
அடியோடு அழியும்படி சுட்டெரித்து
நகரைச் சுற்றி வரச் செய்க
பிறகு எல்லை கடக்க அனுமதியுங்கள்”
“பலே ! பலே !” என குதித்தது அரசவை
ஆரவாரம் செய்தது
நடக்கப்போவது அறியாமல்!

பாடல்-1162:


அமரர்களையும்  போரில் வென்ற
இந்திரஜித் கூறுகிறான்:-
“பிரம்மாஸ்திரம் பிணித்த ஒருவரை
தீயிடல் கூடாது ..
சிறந்த கயிறுகளால் கட்டுவோம்.. “ என்று
ஆணையிட்டுக் கொண்டே
பிரம்மாஸ்திரத்திலிருந்து அனுமனை மீட்டான்.
‘ஏ' என்ற எழுத்து உச்சரிப்பதற்குள்
அரக்கர்கள்
பருமனான கயிற்றால்
அனுமனைக் கட்டி இழுத்தார்கள்.

பாடல்: 1163

அனுமனைக் கட்டுவதற்காக
தேவைப்பட்ட கயிறுகளால்
தங்கள் கயிறுகளை இழந்தவை பட்டியல் இதோ !
“வீடுகளின் ஊஞ்சல்கள்!
தேர்கள்!
பந்தியில் கட்டப்பட்ட குதிரைகள்
போர் யானைகள்!”

பாடல்: 1164

“இவை மட்டுமா?
இராவணன்  திக்கு விஜயம் செய்தபோது
கொண்டு வந்த கயிறுகளும் தேவைப்பட்டன
தேவர்களிடமிருந்து 
வலியப் பறித்தவையும் தேவைப்பட்டன
அசுரர்களிடமிருந்து பெற்ற கயிறுகளும் தேவைப்பட்டன
கண்ணில் கண்ட கயிறுகள் எல்லாம் கொண்டு
அனுமனைக் கட்டினர்
தப்பித்தவைகள் பட்டியலில்
பெண்களின் தாலிக்கயிறுகள் மட்டும் இருந்தன!


பாடல்: 1165


“கடவுள் படையாகிய
பிரம்மாஸ்திரம் எனும் அறத்தின் ஆணையை
அனுமன் நான் மீறிவிட்டேன்”  என ஆகாமல்
பகைவர்களே இப்போது விடுவித்தார்கள்
என்னைக் கட்டிய
இவர்களது வெற்றியை
நான் வெல்வதற்கான வாய்ப்புதான்
எனது வாலினை இப்போது இவர்கள் கொளுத்தும் செயல் !
‘ இந்த ஊரைச் சுடுக ' என்று மறைமுகமாய்
எனக்கு சொல்லாமல் சொன்ன செயல் !”
அரக்கர்கள் நடுவில் இருந்து
நினைத்ததைச் செய்ய
நேரம் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான்
எதற்கும் கவலையில்லாத அனுமன் !


பாடல்: 1166

பிடித்திருந்த  கயிறுகளை அறுக்க
வலிமையில்லாதவன் போல உடல் வாடி
பொறுமையாக இருந்தான்
கொடிய அரக்கர்கள் அங்கும் இங்கும்
அலைக்கழித்தார்கள்  அப்போதும்

விரைவு காட்டவில்லை  ஐயன் !
மெய்ஞான வித்தை காட்டவில்லை
அறிந்தும்
அறியாதவன் போலவே  காட்டிக் கொண்டவன்
அஞ்ஞானம் எனும் பொய்யை
மெய்போல் ஏற்று 
நடிக்கின்ற யோகி போன்ற  அனுமன் போகின்றான்.


பாடல்: 1167

இராவண வேந்தனின்  அரண்மனை  வாசலை
விரைவாகக் கடக்கும்படி
அனுமனை இழுத்துக் கொண்டு சென்றனர்
பொறுமையில்லாத அரக்கர்கள் - 
அனுமனின் நீண்ட வால் முழுதும்  துணி சுற்றினர்
முழுவதையும் எண்ணெயில் நெய்யில் தோய்த்தனர்
காந்தும் கடும் தீயினால்  கொளுத்தி விட்டு
அண்டம் கலங்கும்படியாக
சந்தோஷப்பட்டார்கள்.


பாடல்: 1168

பலப்பல கயிறுகள் சேர்த்தயிற்று
அழியாத வலிமை கொண்ட கயிற்றினால்
அனுமனைக் கட்டியாயிற்று
இரண்டு பிரிவாய் நின்ற
இலட்சம் பேர் பற்றிக் கொண்டார்கள்
காவலுக்கு வருகிறவர்களோ
கடல் போல விரிந்திருந்தார்கள்
திசை எல்லை வரை  பரவியிருந்தார்கள்
வேடிக்கை பாத்தவர்கள்  அளவு எவ்வளவு  என
எண்ணிக்கை கூட  
சொல்ல இயலாது.

பாடல்: 1169

தெருவில் வாசல் முழுதும் நின்று
வேடிக்கை பார்க்கிறவர்கள்  சத்தமாய்ச் சொல்லினர் :-
“இலங்கை நகர் அழித்த குரங்கு
காவல் கொண்ட அசோகவனம் அழித்த குரங்கு
அக்க குமாரர்களையே அழித்த குரங்கு
சீதையோடு பேசி
மானிடர் வலிமைத் திறம் அறிவித்த குரங்கிற்கு
உற்ற கதியைக் காண  வாருங்கள் ! வாருங்கள் !!”

பாடல்: 1170

அரக்கர்கள்  மகிழ்ச்சியினால்
ஆர்ப்பரித்தார்கள் - 
அண்டத்துக்கு அப்புறமும் கேட்பதும் போல !
அங்கு மட்டுமல்ல
இங்கும் முரசு ஒலித்தனர்
இடிமுரசு போல  குரல் எழுப்பினார்கள்
அனுமனை அதட்டினார்கள்
அனுமனை எல்லா பக்கமும் வேடிக்கை பார்த்தார்கள்
ஓடிச் சென்று  ஜானகிக்கும் சொன்னார்கள்
அவளும் உயிர் துடித்தாள்
உடல் வேர்த்தாள் விம்மினாள்
விழுந்தாள்
பெருமூச்சு விட்டாள்.


பாடல்: 1171

சீதையின் கோரிக்கை இதுதான்
“நெருப்பு தேவனே பார்!
எவ்வுயிர்க்கும் தாய் போல் கருணை கொண்ட
வாயுவின் துணையே!
பெருமை குணமிலா நாய்களாம் அரக்கர்கள்
அனுமனை நலிவு செய்யக் கண்டும் நீ
அருள மாட்டாயோ?
உலகுக்கு எடுத்துக்காட்டான நெருப்பே
உனக்குத் தெரியும்
கற்பினில் நான் தூயவள் என்றால் நெருப்பே
அனுமனைச் சுடாதே!”என்றாள்.

பாடல்: 1172

வெண்மைப் பற்களும்
மெல்லிய நகையும் மிக்க சீதை
இவ்வாறு சொன்னபோது
ஒளி மிக்க அக்னிதேவன் உள்ளம் அஞ்சிற்று
அனுமனின் மயிர்க்கால்கள் குளிர்ந்தன
தளிர்த்தன
வெப்பம் குளிர்ச்சியாயிற்று!
அனுமனின் வாய் முதல் எலும்பு வரை
வெம்மை தண்¢ந்தது
குளிர்ச்சி உண்டானது.!

பாடல்: 1173

சீதை வாக்குக்கு அடங்கியது நெருப்பு
கட்டுப்பட்டது நெருப்பு
அனுமன் உடலில் மட்டுமா குளிர்ந்தது?
கடலில் உள்ள
வடவா முக அக்னியும் குளிர்ந்துவிட்டது.
முனிவர்கள் காக்கும் மூன்று அக்னிகள்
(காருக பத்யம் -ஆசுவனீயம் - தட்சண அக்னி)
முப்புரம் எரித்த விரிசடை சிவனின்
நெற்றிக்கண் அக்னியே குளிர்ந்துவிட்டது.

பாடல்: 1174

அண்டம் கடந்து
சத்திய லோகத்தில் வாழும்
பிரம்மனின் கைகளில் உள்ள நெருப்பும் குளிர்ந்தது.
பிரம்மனின்
வேள்வி அக்னி குண்டங்கள் குளிர்ந்தன.
மேகங்களில் உள்ள இடிகள் குளிர்ந்தன.
வெற்றியும் வெப்பமும் மிக்க
சூரியமண்டலம் குளிர்ந்தது.
இருள் விழுங்கும்
அழிவற்ற சூரியன் குளிர்ந்தான்.
மீளமுடியாத
நரகமும் குளிர்ந்தது!

பாடல்: 1175

மலையளவு  கொண்ட தனது வால் பக்கம்
வெப்பமான தீ சுடாமல் குளிர்வது
நினைவால் நோக்கினான் அனுமன்
இதன் காரணம்-
ஜனகனின் மகள் கொண்ட கற்பின் வலிமை
என்று பெரும் களிப்பு ஆனான்
அன்பின் தொடர் அறுகாத அனுமன்.


--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment